Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிநீரில் இத்தனை வகையா? உடல்நலத்திற்கு சிறந்தது எது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடிநீரில் இத்தனை வகையா? உடல்நலத்திற்கு சிறந்தது எது?

water

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
  • பதவி,பிபிசி தெலுங்குக்காக
  • 7 டிசம்பர் 2022
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இயற்கையான குழாய் நீரை அருந்துவது நல்லதா அல்லது மினரல் குடிநீரை அருந்துவது நல்லதா என்பது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், மொத்தம் எத்தனை வகையான குடிநீர் உள்ளது, அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதில் எது உடல்நலத்திற்கு சிறந்தது என்பது குறித்து பார்ப்போம். இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகிறது. லட்சக்கணக்கான நீர் மூலக்கூறுகள் இணைந்து ஒரு துளி நீர் உருவாகிறது. பூமியில் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. அதில் 96.5 சதவிகிதம் கடல் நீராகும். ஒரு சதவிகிதம் மட்டுமே புவிப்பரப்பில் இருக்கும் நல்ல தண்ணீராகும். இதையே மனிதர்கள் பருகுவது உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் இல்லாமல் புவியில் மனிதர்களின் வாழ்க்கை சாத்தியமில்லை. உடலின் அனைத்து வளர்சிதை மாற்றகளும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் மிகவும் அத்தியாவசியம்.

மனிதனின் உடலானது 70 சதவிகிதம் தண்ணீரால் நிரம்பியுள்ளது.

இவை எல்லாவற்றையும் பொது அறிவியல் புத்தகங்களில் இருந்து நாம் ஏற்கெனவே படித்து அறிந்திருக்கிறோம்.

குடிநீரின் பண்புகள் என்னவாக இருக்கின்றன? அந்த குடிநீர் என்னவாக இருக்க வேண்டும்? தாதுக்கள் கொண்ட குடிநீரை வாங்கிக் குடிக்கும் அளவுக்கு அதில் என்ன சிறப்புகள் உள்ளன.? எந்த மாதிரியான குடிநீர் பாதுகாப்பானது? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை நாம் இப்போது பார்க்கலாம்.

 

எத்தனை வகையான தண்ணீர் உள்ளது?

எத்தனை வகையான தண்ணீர்

பிஎச் மதிப்பீடு 6.5 முதல் 7.5 வரை இருக்கும் எந்த ஒரு இயற்கையாக கிடைக்கும் தண்ணீரும் வழக்கமான தண்ணீர் என அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தண்ணீருக்கு எந்த ஒரு வண்ணமோ அல்லது சுவையோ இருக்காது. இதனை குடிப்பதற்காக பயன்படுத்த முடியும்.

சவ்வூடு பரவல் முறையைப் பயன்படுத்தி தண்ணீரில் இருக்கும் அசுத்தங்களை நீக்கி நீண்டகாலத்துக்கு கிடைக்கக் கூடிய குடிநீர்.

சில கூறுகள் மற்றும் தாதுக்கள் தண்ணீரில் சேர்க்கப்படும்போது அல்லது குறைக்கப்படும்போது அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர், காய்ச்சி வடிகட்டிய குடிநீர், தாதுக்கள் கொண்ட தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது.

அண்மையில் பிஎச் 8 முதல் 9 வரை உள்ள குடிநீர், கருப்பு தண்ணீர் என்ற பெயரில் சந்தைகளில் கிடைக்கின்றன என கரீம்நகர் சாதவாகனா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் வொட்டிராஜு நம்ரதா பிபிசியிடம் தெரிவித்தார்.

"வழக்கமாக தண்ணீரானது மலைகள், ஆறுகள், குளங்கள், கிணறுகள், போல்வெல் ஆகியவற்றில் இருந்து கிடைக்கின்றன. இந்த தண்ணீர் குளோரின் அல்லது ஓசோனைஸ் செய்யப்பட்டு பாதுகாப்பான குடிநீராக மாற்றப்படுகிறது. இதன் பின்னர் பொதுமக்களுக்கு குழாய்கள், தண்ணீர் தொட்டிகள் மூலம் அரசாங்கங்களால் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் தரமான குடிநீர் என்று அழைக்கப்படுகிறது.

 

குழாய்கள் மூலம் சேகரிக்கப்படும் இந்த குடிநீர் பின்னர், வீடுகளில் சவ்வூடு பரவல் முறை மேற்கொள்ளும் இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றன. இதன் மூலம் தண்ணீரில் இருந்து அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் தரமான தண்ணீர் கிடைக்கிறது. இந்த தண்ணீர் ஆர்.ஓ குடிநீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன. இவை பேக்கேஜ்டு வாட்டர் என்று அழைக்கப்படுகின்றன.

தவிர, தண்ணீரை சூடுபடுத்துவதன் மூலம் எதேனும் ஒரு வகையான உப்புகள், தாதுக்கள், கரிம உபபொருட்கள் ஆகியவை அகற்றப்படும்போது இந்த தண்ணீர் நீராவி வடிவில் பிடிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

இது காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் எந்த ஒரு கூறுகளையும் கொண்டிருப்பதில்லை. இந்த குடிநீரைக் குடிப்பதன் மூலம் உங்கள் தாகம் தணியும்.

ஆனால், உங்கள் உடலில் எந்த வித தாதுக்களும் சேராது. இதர கூறுகளுடன் இவை வினைபுரியாததால், இந்த தண்ணீரானது ஆய்வகங்கள், தொழிலகங்களில் உள்ள இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என பேராசிரியர் நம்ரதா விவரிக்கிறார்.

தாதுக்கள் கொண்ட தண்ணீர்

தாதுக்கள் கொண்ட தண்ணீர்

தண்ணீரில் தாதுக்கள் எதுவும் இல்லை எனில், அதனால் மனிதனின் உடலுக்கு எந்த ஒரு பலனும் இல்லை. தாதுக்கள் கொண்ட தண்ணீர் என்ற பெயரில் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை நாம் குடிக்கிறோம். தாதுக்கள் கொண்ட தண்ணீர் என்பது புவியின் உள்ளே அல்லது புவிப் பரப்பின் மேலே கிடைப்பதாக மட்டுமே இருக்கிறது.

இந்த தண்ணீர், சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாத்துக்களை கொண்டிருக்கின்றன.

மனித உடலுக்குத் தேவைப்படுவதை விடவும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அந்த தண்ணீரில் இந்த தாதுக்கள் இருக்கின்றன.

இந்த தண்ணீரை குடிக்கும்போது உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

எனவே, தாதுக்கள் கொண்ட தண்ணீரை நீங்கள் இந்திய தரநிலைகள் பணியகம்(Bureau of Indian Standards) வரையறுத்துள்ளபடி, உடலின் சமநிலையை உறுதி செய்யும் ஜீரனத்துக்கு போதுமான தாதுக்களை கொண்டிருப்பது அத்தியாவசியத் தேவையாகும்.

சில நிறுவனங்கள் கண்ணாடி பாட்டில்கள் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் தாதுக்கள் கொண்ட குடிநீரை விற்பனை செய்கின்றன.

பயணம் செல்லும்போது நம்மில் பலர் இந்த தண்ணீரை வாங்கிக் குடிக்கின்றோம். இந்த பாட்டில்களில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில் பட்டியலிடப்பட்டுள்ள தாதுக்கள், இந்திய தரநிலைகள் பணியகம் வரையறைக்குள் பொருந்திபோகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆனால், அந்த தண்ணீரில் கரைந்திருக்கும் மொத்த திடப்பொருள்கள் 500 மில்லி கிராமுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என பேராசிரியர் நம்ரதா கூறுகிறார்.

TDS என்பது என்ன?

TDS என்பது என்ன

தண்ணீரின் தரத்தை குறிப்பதற்கான இன்னொருமுறையாக TDS உள்ளது. தரமான தண்ணீர் என்பது, கரிம உப்பு, கால்சியம், பொட்டாஷியம், மேக்னீசியம், சோடியம், பைகார்பனேட், குளோரைட், சல்பைட்டுகள் மற்றும் குறைந்த அளவிலான கரிம பொருட்கள் ஆகியவை கொண்டதாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, காட்மியம், ஈயம், நிக்கல் ஆகிய உலோகங்கள் மிக குறைந்த அளவில் கரைந்துள்ளன. தண்ணீரில் கரைந்துள்ள இந்த உப பொருட்களின் மொத்த தொகையானது மொத்த கரைந்த திடப்பொருள்கள் என அழைக்கப்படுகின்றன.

இது லிட்டருக்கு 500 மில்லி கிராமுக்கு மேல் செல்லக்கூடாது. மேலும் இந்திய தரநிர்ணய துறை இதை 'லிட்டருக்கு 100 மில்லிகிராம் என்று குறைக்க வேண்டாம்' என்று முடிவு செய்துள்ளது.

நாம் குடிக்கும் தண்ணீரில் TDS என்பது 100 மில்லிகிராமுக்கும் கீழே இருந்தால் அந்த தண்ணீர் போதுமான தேவைப்படும் தாத்துக்களை கொண்டிருக்கவில்லை என்பது பொருளாகும்.

தவிர, TDS அளவானது 500 மில்லிகிராமுக்கு அதிகமாக இருந்தால், அந்த தண்ணீர் கடின நீர் என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் குடிப்பதற்கு உபயோகப்படாது.

குடிநீரில் TDS என்பது 100 மற்றும் 500 மில்லிகிராமுக்கும் இடையில் இருந்தால் எந்தவித பிரச்னையையும் உருவாக்காது என்பதால் இந்த குடிநீரைக் குடிக்கலாம். நாம் குடிக்கும் தண்ணீரில் எந்த அளவுக்கு TDS இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள சந்தையில் கிடைக்கும் TDS மீட்டர்களை வாங்கி பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம்.

தண்ணீரின் தரம் எவ்வாறு அளவிடப்படுகிறது?

தண்ணீரின் தரம்

தண்ணீரின் தரம் மற்றும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததுதானா என்பது குறித்து இந்திய தரநிலைகள் பணியகம்(பிஐஎஸ்) சில பரிசோதனைகளை செய்து தீர்மானிக்கும். இவை இந்திய தரநிலைகள் பணியகத்தின் குடிநீர் விவரக்குறிப்புகள்-10500 என்று அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் குடிநீரின் தரத்தை பரிசோதிக்கும் முறைகள் குறித்து பிபிசியிடம் பேசிய புத்தா ரவி பிரசாத், "சில பொருட்கள் , தனிமங்கள், தாதுக்கள் தண்ணீரில் இருக்கலாம் ஆனால் அவசியமில்லை," என்கிறார்.

தண்ணீரின் தரத்தை பரிசோதிக்கும் அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மூத்த தண்ணீர் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

"தண்ணீரின் தரத்தை உறுதி செய்ய 60 பரிசோதனைகள் வரை இருக்கின்றன. ரசாயன பரிசோதனை, அதே போல நுண்ணுயிரியல் சோதனைகள் ஆகியவை உள்ளன. பிஎச், TDS, மொத்த காரத்தன்மை, கடினத்தன்மை, உலோகங்கள் போன்றவை ரசாயன சோதனைகள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன... மொத்த கோலிஃபார்ம் மற்றும் இந்த கோலிஃபார்ம் போன்ற நுண்ணுயிரியல் சோதனைகள் தண்ணீரில் எச்சங்களாக உள்ள பாக்டீரியா, பூஞ்சை, பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள மேற்கொள்ளப்படுகிறது.

நீங்கள் முக்கிய சோதனைகளைப் பார்த்தால், pH 6.5 முதல் 7.5 வரை இருக்கலாம். மேலும் பை கார்பனைட்டுகள் லிட்டருக்கு 200மில்லிகிராம் , கால்சியம் லிட்டருக்கு 75மில்லிகிராம், மெக்னீசியம் லிட்டருக்கு 30மில்லிகிராம், நைட்ரேட் லிட்டருக்கு 45மில்லிகிராம், மொத்த ஆர்சனிக் லிட்டருக்கு 0.01மில்லிகிராம், காப்பர் லிட்டருக்கு 0.05மில்லிகிராம், குளோரைடுகள் லிட்டருக்கு 250மில்லிகிராம், சல்பேட்லிட்டருக்கு 200மில்லிகிராம், ஃபுளோரைட் லிட்டருக்கு 1 மில்லிகிராம், இரும்பு லிட்டருக்கு 0.3மில்லிகிராம், மெர்குரி லிட்டருக்கு 0.01மில்லிகிராம், ஜிங் லிட்டருக்கு 5மில்லிகிராம் என இருக்கலாம்,” என்கிறார் ரவி பிரசாத்.

தண்ணீரின் தரத்தில் வித்தியாசம் இருந்தால் என்ன நேரும்?

தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததா இல்லையா என்பதை தீர்மானிக்க பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தண்ணீரின் தரம் நன்றாக இல்லாவிட்டால், என நேரும் என்பது குறித்து ஆந்திரா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

"பிஐஎஸ் கூற்றின்படி, ஃபுளோரைடு 1க்கு அதிகமாக இருந்தால், பற்களில் புளோரோசிஸ் ஏற்படும். சோடியம் அதிக அளவு இருந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். வயல்களில் பயிர்களுக்கு அளிக்கப்படும் உரங்கள் மூலம் நைட்ரேட் (நைட்ரேட்) குடிநீருடன் உடலுக்குள் சென்றால் நைட்ரைட்டாக (நைட்ரேட்) மாறுகிறது.

இது ரத்தத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை குறைக்கிறது. அப்போது சுவாசக்கோளாறுகள், தலைச்சுற்றல் மற்றும் நீல கருவிழிகள் நேரிடும். இதற்கு 'ப்ளூ பேபி சிண்ட்ரோம்' என்று பெயராகும்.

அதிக அளவு ஆர்சனிக் சருமத்தில் வெள்ளை புள்ளிகளை ஏற்படுத்தும். குறைந்த கால்சியம் எலும்பு பிரச்னைகளை ஏற்படுத்தும். குறைந்த TDS கொண்ட தண்ணீர் குடிப்பது நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.

தண்ணீரின் சுவை நன்றாக இல்லையெனில், நிறம் மாறுபட்டால் தண்ணீரில் ஏதோ தவறாக உள்ளது என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். இவை குடிப்பதற்கு உகந்த தண்ணீர் அல்ல.

அரசு அல்லது அரசு அங்கீகரித்த ஆய்வகங்களில் உடனடியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் விவரித்தார்.

எந்த நீரையாவது கொதிக்க வைத்தால் அது புதிய நீராக மாறுமா?

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், காய்ச்சி வடிகட்டிய தண்ணீர், தாதுக்கள் கொண்ட தண்ணீர் என பல வகையான தண்ணீர் உள்ளது. அது என்னவென்று தெரியாத போது ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால், எடுக்க வேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஓய்வு பெற்ற பேராசிரியர் ரெட்டி விவரித்தார்.

“தரையில் மழைநீர் உயரமாக இருக்கும் போது காய்ச்சி வடிகட்டிய தண்ணீரைப் போல இருக்கும் , தரையை நெருங்கும்போது மாசுபாட்டைக் கொண்டு செல்கிறது.

கார்பன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்றவற்றால் காற்று மாசுபடுகிறது. இத்தகைய மாசுபாடு SPM (Suspended Particulate Matter) எனப்படும். தண்ணீர் மாசுபடுவதால் 250 வகையான நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

சவ்வூடு பரவல் முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும்போது, நுண்ணூட்ட சத்துகள் நீக்கப்படுகின்றன. மேலும் தண்ணீரைத் திரும்பத் திரும்ப வடிகட்டுவதும் நல்லதல்ல.

குளிரூட்டப்பட்ட தண்ணீரில் கூட, பாக்டீரியாக்கள் விரைவாக குவிந்துவிடும். தண்ணீர் நல்ல தண்ணீர்தானா என்று தெரியாத போது அதைக் காய்ச்சி குடிக்க வேண்டும் என்பது ஒரு நல்ல நடைமுறையாகும்.

"மேலும், அல்ட்ரா வயலட் லைட் ஃபில்டர்களைப் பயன்படுத்தி, துணியை மடித்து வடிகட்டுவதன் மூலம் தண்ணீரை எளிதில் சுத்திகரிக்க முடியும்" என்று யுஇபி ரெட்டி கூறினார்.

சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு கறுப்பு தண்ணீர்

கறுப்பு தண்ணீர்

பட மூலாதாரம்,EVOCUS

பல்வேறு வகையான குடிநீர் பற்றி குறிப்பிட்டதையும் விட கூடுதலாக, அண்மைகாலமாக கறுப்பு தண்ணீர் அல்லது அல்கலைன் (காரமான தண்ணீர் என அழைக்கப்படுகிறது)தண்ணீர் மிகவும் பிரபலம் ஆகி வருகிறது. இந்த தண்ணீரை பெரும்பாலும் கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் பயன்படுத்துகின்றனர்.

நல்ல தரமான இந்த தண்ணீரில் பிஎச் 7 ஆக இருக்கிறது. இதனிடையே விசாகப்பட்டினத்தை சேர்ந்த டயட் நிபுணர் சுனிதா, கருப்பு தண்ணீரின் பிஎச் என்பது 8 மற்றும் 9க்கு இடையே இருக்கலாம் என்றார்.

நாம் என்ன உண்கின்றோம் என்பது விஷயமில்லை. நமது உடலில் அமிலம் உற்பத்தியாகிறது. அதனை சமநிலைப்படுத்த, அதிக அல்கலைன் அடர்த்தி கொண்ட கருப்பு தண்ணீர் அதனை சமநிலைப்படுத்தும். அப்போது அந்த மனிதர் சுறுசுறுப்பாக இருப்பார்.

ஆனால், உடலுக்கு வேலை கொடுக்கும் பணிகளை செய்யாதவர்கள் கருப்பு தண்ணீர் குடித்தால் உடல் நல குறைபாடுகள் ஏற்படும். உடல் சுறுசுறுப்பாக இல்லாத நிலையில் கறுப்பு தண்ணீர் குடிக்கும்போது உடலில் அல்கலைன் அறிகுறிகள் தோன்றும். இந்த கறுப்பு தண்ணீரில் சில தாது உப்புகள் சேர்ந்திருக்கின்றன. எனவே கறுப்பு தண்ணீரை அதிகமாகக் குடிப்பது உடல் நலத்துக்கு நல்லதல்ல," என்கிறார் சுனிதா.

ஒவ்வோர் வீட்டுக்குமான குடிநீர்

உடலுக்கு முக்கியமான ஆற்றலை அளிக்கக் கூடிய நீரின் வளங்களின் இருப்பு என்பது நாட்டில் குறைவாக இருக்கின்றன. இருக்கும் தண்ணீரும் பாதுகாப்பற்ற வகையில் உள்ளது. இதனால், மத்திய அரசானது குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் அளிக்கும் வகையிலான சில திட்டங்கள், இயக்கங்களைக் கொண்டு வந்துள்ளது.

ஜல் ஜீவன் இயக்கம் என்பது பிரதமர் நரேந்திர மோதியால் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த இயக்கதின் வாயிலாக நாட்டின் கிராமங்களில் உள்ள ஒவ்வோர் குடும்பத்தினருக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக தலா 50 சதவிகிதப் பங்களிப்புடன் மத்திய , மாநில அரசுகள் இந்த திட்டத்தை அ மல்படுத்தி வருகின்றன. 2021ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி அம்ரித் (நகர்பகுதி) 2.0 என்ற இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. 2021-22-2025-26ஆம் ஆண்டுகளுக்கு இடையே 5 ஆண்டு காலகட்டத்துக்குள் நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் குடிநீர் வழங்கும்பணியை முழுமையாக நிறைவேற்றும் இலக்கை நோக்கமாக கொண்டிருக்கிறது.

நீர் இருப்பு குறைந்து வரும் நேரத்தில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நீர் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் மறுசுழற்சி மூலம் நல்ல தண்ணீர் வழங்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது்.

மறுபுறம், 2030 ஆம் ஆண்டில், நம் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை 50 சதவீதம் வரை இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c88k1drpv1do

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.