Jump to content

கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது? புதிய ஆய்வுகள் கூறுவது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது? புதிய ஆய்வுகள் கூறுவது என்ன?

கோவிட்-19 மூலம் எது?

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விக்டோரியா கில் மற்றும் ரோலண்ட் பீஸ்
  • பதவி,பிபிசி நியூஸ் மற்றும் பிபிசி வேர்ல்ட் சர்வீஸ்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவிட்-19 நோய்த் தொற்றுக்குக் காரணமான வைரஸ் முதன் முதலில் மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பதற்கான "சிறந்த சான்றுகள்" கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.

நூறாண்டுகளில் மிகவும் சிக்கலான, அதிக அளவில் அரசியலாக்கப்பட்ட மோசமான தொற்றுநோய்க்கான காரணத்தை தேடுவதில் சமீபத்திய அறிவியல் திருப்பம் இது. கொரோனா தொற்றுக்கான மூலம் குறித்த ஆய்வு நிரூபிக்கப்படாத அல்லது முழுமையாக நிராகரிக்கப்படாத பல போட்டி கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது.

சமீபத்திய ஆய்வுகள் ஒரு குறிப்பிட்ட விலங்கை வைரஸ் தொற்றுக்கான மூலமாக சுட்டிக்காட்டுகின்றன. வூகான் சந்தையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆய்வு. கொரோனா பரவலுக்கான ஆதார சுருதியாக தொடக்கம் முதலே அந்த சந்தை சுட்டப்படுகிறது.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில், கோவிட்-19 ஒரு மர்ம நோயாகவே இருந்தபோது, சந்தையில் இருந்து மாதிரிகளை சீன நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC) எடுத்தன. அந்த மாதிரிகளில் உள்ள மரபணு தகவல்கள் சமீபத்தில் சுருக்கமாக, பொதுவில் வெளியிடப்பட்டன. ஆராய்ச்சியாளர்கள் குழு அவற்றை டிகோட் செய்த போது, ரக்கூன் நாய்களே சாத்தியமான "இடைநிலை ஹோஸ்ட்" என்று சுட்டிக்காட்டியது. அதில் இருந்தே கோவிட்-19 மக்களுக்கு பரவியுள்ளது.

 

சந்தையில் SARS CoV-2 பாதிப்பு கண்டறியப்பட்ட எச்சில் மாதிரிகள் எடுக்கப்பட்ட அதே இடத்தில், இறைச்சிக்காக உயிருடன் விற்கப்படும் ரக்கூன் நாய்களின் டி.என்.ஏ., கண்டுபிடிக்கப்பட்டதே இந்த ஆய்வின் முக்கிய அம்சம் என்று மார்ச் 20-ம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

சந்தை நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு விற்பனைக்கு வந்த விலங்குகள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதால் கொரோனா பரவலின் தோற்றம் குறித்த தேடல் இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. உறுதியான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. முக்கியமான இந்த தரவுகளை வெளியிட 3 ஆண்டுகளாக தாமதப்படுத்தியது ஒரு 'மோசடி' என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிகாரிகளிடையே ஆய்வகக் கசிவுக் கோட்பாடு வலுப்பெறுகிறது என்பதற்கான சமிக்ஞைகளுக்கு மத்தியில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தோன்றியது என்பது போன்ற கருத்துகளை சீன அரசாங்கம் கடுமையாக மறுக்கிறது. ஆனால் அமெரிக்க எரிசக்தித் துறையைப் போலவே அந்நாட்டு புலனாய்வுத் துறையும் (FBI) அதுவே உண்மையாக இருக்கக் கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு கிட்டத்தட்ட வந்துவிட்டது போல் தெரிகிறது.

அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளும், முகமைகளும் கொரோனா பரவலின் தோற்றம் எது என்ற மர்மத்தை ஆராய்ந்து மாறுபட்ட முடிவுகளை எடுத்தன. "இந்த ஆய்வுகளை தடுக்க மற்றும் குழப்பமடைய சீனா முயற்சிக்கிறது" என்று மார்ச் ஒன்றாம் தேதி எப்.பி.ஐ. இயக்குநர் குற்றம் சாட்டினார். இப்போதைய சூழலில் ஆய்வக கசிவு கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு எப்.பி.ஐ. வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், எப்.பி.ஐ. தனது கண்டுபிடிப்புகளை பகிரங்கப்படுத்தவில்லை என்பது சில விஞ்ஞானிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.

கோவிட் நோயின் தோற்றம் குறித்து ஆராயும் பணியில் மூன்றாண்டுகளாக ஈடுபட்டுள்ள சில விஞ்ஞானிகளிடம் பிபிசி பேசியது. கொரோனா பரவலின் தோற்றம் குறித்த சீனா மற்றும் மேற்குலகின் கருத்து வேறுபாடு மர்மத்தை தீர்ப்பதற்கான அறிவியல் பூர்வமான முயற்சிகளை பாதிக்கும் சூழலில், இந்த புதிய ஆய்வு அந்த மர்மத்தை புரிந்து கொள்வதற்கு மிக நெருக்கமாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

கோவிட்-19 மூலம் எது?

பட மூலாதாரம்,PA

புதிய ஆய்வு எதைக் காட்டுகிறது?

சந்தையில் கிடைத்த எச்சில் மாதிரிகளின் முழு மரபணு வரிசைகளையும் பாரிஸில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர் புளோரன்ஸ் டிபார்ரே கண்டறிந்தார். பிபிசி வேர்ல்ட் சர்வீஸின் சயின்ஸ் இன் ஆக்ஷன் பிரிவிடம் பேசிய அவர், இந்தத் தரவு இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்ததில் இருந்து தான் "ஆவேசமாக" இருந்ததாகக் கூறினார்.

GISAID எனப்படும் மரபணு தரவுத்தளத்தில் குறியீடுகளைக் கண்டுபிடித்து பதிவிறக்கம் செய்த பின்னர், விஞ்ஞானிகள் இந்த வகையான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அவரும் அவரது சகாக்களும் வைரஸ் இருக்கும் அதே இடங்களில் காணப்படும் மாதிரிகளுடன் எந்த இனங்கள் பொருந்துகின்றன என்பதைக் கண்டறியத் தொடங்கினர். "எங்கள் திரைகளில் முடிவுகள் தோன்றுவதை நாங்கள் பார்த்தோம், அது: ரக்கூன் நாய், ரக்கூன் நாய், ரக்கூன் நாய், ரக்கூன் நாய்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

"எனவே நாங்கள் விலங்குகளையும் வைரஸையும் ஒன்றாக கண்டுபிடித்தோம்," என்று டாக்டர் டிபார் விளக்கினார். "விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை இது நிரூபிக்கவில்லை, ஆனால் இது நாம் பார்த்தவற்றின் மிகவும் நம்பத்தகுந்த விளக்கம்." என்று அவர் கூறினார்.

 

ஆய்வில் ஈடுபட்டுள்ள சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எடி ஹோம்ஸின் கூற்றுப்படி, இது வைரஸின் விலங்கு மூலாதாரம் பற்றிய "நாம் பெறும் சிறந்த சான்று" ஆகும்.

"மனிதர்களுக்கு கோவிட்-19 தொற்று பரவுவதற்கு முந்தைய அந்த இடைநிலை விலங்கை கண்டுபிடிக்கவில்லை. அது போய்விட்டது" என்று பிபிசியிடம் பேராசிரியர் ஹோம்ஸ் கூறினார்.

"ஆனால் மரபணு தரவு இந்த மூலாதாரத்தை கண்டுபிடித்தது அசாதாரணமானது. மேலும் அது எந்த இனங்கள் இருந்தன என்பதை மட்டும் கூறவில்லை, ஆனால் அவை சந்தையில் எங்கு இருந்தன என்பதையும் இது நமக்கு சொல்கிறது" என்று பேராசிரியர் ஹோம்ஸ் கூறினார்.

கோவிட்-19 மூலம் எது?

பட மூலாதாரம்,WOROBEY ET AL

கோவிட்-19 மூலத்தைக் அறிய விஞ்ஞானிகள் என்ன செய்யலாம்?

தற்போது கிடைத்துள்ள புதிய தரவுகள் கோவிட்-19 மூலத்தைப் பற்றிய மேலும் ஆய்வுக்கு கூடுதல் வழிகளை வழங்கக்கூடும், ஆனால் அந்த தடங்களைப் பின்தொடர்வது சிக்கலானதாக இருக்கும்.

ரோட்டர்டாமில் உள்ள ஈராஸ்மஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மரியன் கூப்மன்ஸ், 2020 இல் வுஹானுக்குச் சென்ற உலக சுகாதார அமைப்பின் புலனாய்வுக் குழுவில் அங்கம் வகித்தார். புதிய பகுப்பாய்வு "குறிப்பிட்ட கடைகளில் அவற்றின் இருப்பைக் காட்டுகிறது. எனவே அங்கு விற்கப்பட்ட விலங்குகள் எங்கிருந்து வந்தன என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்" என்று அவர் விளக்கினார்.

"நிச்சயமாக, அது சட்டவிரோத விற்பனையின் ஒரு பகுதியாக இருந்தால், நீங்கள் அதை கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் கேள்வி." என்று அவர் மேலும் கூறினார்.

வர்த்தக நோக்கில் இந்த விலங்குகள் வளர்க்கப்படும் பண்ணைகளில் அதற்கான உயிரியல் சான்றுகள் இன்னும் இருக்கலாம். அந்த பண்ணைகளில் SARS Cov-2 நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டும் ஆன்டிபாடிகளுடன் விலங்குகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க முடிந்தால், அது மற்றொரு வழியை தரக்கூடும். இந்த மரபணு தகவல்கள் நம்முடைய தேடல்களை இன்னும் குறுகிய இடத்தை நோக்கி நகர்த்தலாம்.

ஆனால் ஒரு விலங்கில் வைரஸைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்கிறார் பேராசிரியர் ஹோம்ஸ்.

கொரோனா பரவலின் தோற்றம் குறித்த கேள்விக்கு ஆய்வறிக்கை பதிலளிக்கிறதா?

இது உறுதியான ஆதாரம் அல்ல. அது நம்மிடம் இல்லாத ஒன்று.

அந்த ஆதாரத்தைத் தேடுவதே பெரிதும் அரசியல்மயமாக்கப்பட்டு அடிக்கடி நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிட்டது. இந்த வைரஸ் காட்டு விலங்குகளில் தோன்றி சந்தையில் மனிதர்களுக்கும் பரவுகிறது என்ற கோட்பாட்டிற்கு இது வலுவூட்டுகிறது. மற்றொரு கோட்பாடு, வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியிலிருந்து வைரஸின் சாத்தியமான "ஆய்வக கசிவு" ஏற்பட்டிருக்கலாம் என்பதன் மீது கவனம் செலுத்துகிறது.

அமெரிக்க எரிசக்தித் துறையின் உளவுத்துறை மதிப்பீடு மற்றும் கோவிட்-19 தோற்றம் பற்றிய குடியரசுக் கட்சி தலைமையிலான விசாரணைக்குப் பிறகு சில வாரங்கள் கழித்து எப்.பி.ஐ. தலையீட்டிற்குப் பிறகு இந்த கோட்பாடு மீண்டும் தலைப்புச் செய்திகளில் அடிபட்டது.

பிபிசி சயின்ஸ் இன் ஆக்ஷன் நேர்காணலில், பேராசிரியர் ஹோம்ஸ், வுஹானில் கோவிட் நோய்த்தொற்றின் ஆரம்ப நிலைகள் பற்றிய முந்தைய ஆய்வை சுட்டிக்காட்டினார். "சந்தையைச் சுற்றி கோவிட்-19 பரவல் தொடங்கியது," என்று அவர் கூறினார்.

"இது 30 கிமீ தொலைவில் உள்ள ஆய்வகத்தைச் சுற்றி தொடங்கவில்லை. மேலும் ஆய்வகத்தைச் சுற்றி எந்த ஆரம்ப நிகழ்வுகளையும் காட்டும் ஒரு தரவு கூட இல்லை." என்று அவர் கூறினார்.

இந்த மதிப்புமிக்க தரவை வெளியிடுவதில் பல ஆண்டுகள் தாமதமானது, நோய் கட்டுப்பாட்டுக்கான சீன மையம் (CDC) மீது விரக்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

"தரவு மூன்று ஆண்டுகள் பழமையானது - இது பகல் வெளிச்சத்தைக் காண இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது ஒரு முழுமையான மோசடி" என்று பேராசிரியர் ஹோம்ஸ் கூறினார்.

கோவிட்-19 மூலம் எது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஜனவரியில் GISAID மரபணு தரவுத்தளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அது கவனிக்கப்படாமல் அங்கேயே விடப்பட்டது. CDC யிலிருந்து சீன ஆராய்ச்சியாளர்கள் தயாரித்த தரவுகளின் அடிப்படையில் ஒரு ஆய்வுக் கட்டுரைக்கான ஆதாரங்களை வழங்குவதற்காக இது செய்யப்பட்டது என்று கருதப்படுகிறது. (அத்தகைய பின்னணித் தரவைப் பகிர்வது அறிவியல் வெளியீட்டிற்குத் தேவையாகக் கருதப்படுகிறது).

ஆனால் அந்தத் தகவலை மற்றவர்கள் பார்த்ததாக சீன ஆராய்ச்சியாளர்கள் அறிந்த சிறிது நேரத்திலேயே அது மீண்டும் மறைக்கப்பட்டது.

மார்ச் 17 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கோவிட்-19 பரவலின் தோற்றம் பற்றி அறிவுதை நோக்கி நம்மை நகர்த்துவதில் "ஒவ்வொரு தரவுகளும்" முக்கியம் என்று கூறினார். "மேலும் கோவிட்-19 இன் தோற்றம் பற்றிய ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும்." என்று அவர் வலியுறுத்தினார்.

"நாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு, முழுக்கமுழுக்க அறிவியல் பாதைக்குத் திரும்ப வேண்டும்" என்று பேராசிரியர் ஹோம்ஸ் கூறினார்.

"மனிதர்கள் வனவிலங்குகளிலிருந்து வைரஸ்களைப் பெறுகிறார்கள் - இது நமது முழு பரிணாம வரலாற்றிலும் உண்மை. நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், இந்த வனவிலங்குகளிலிருந்து நம்மைப் பிரித்து, சிறந்த கண்காணிப்பைக் கொண்டிருப்பதுதான்." என்று அவர் மேலும் கூறினார்.

"ஏனென்றால் இது மீண்டும் நடக்கும்." என்பது ராசிரியர் ஹோம்ஸின் கருத்து.

https://www.bbc.com/tamil/articles/cl5x1v1jnego

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.