Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலாவத்துறை நகர்வு புலிகளுக்கு பின்னடைவா?

Featured Replies

-விதுரன்-

வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்னர் அங்கு தங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் படையினர் இறங்கியுள்ளனர். தாக்குதல் சமரை ஒருபுறம் தொடுத்தாலும் தற்காப்புச் சமர் குறித்தும் அவர்கள் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர்.

மன்னார் சிலாவத்துறையில் கடந்தவாரம் இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கையானது இதனை நன்கு தெளிவுபடுத்துகிறது. எதிரியை கொல்லைப்புறத்தில் வைத்துக் கொண்டு பெரும் படை நடவடிக்கைக்குச் செல்வது பேராபத்தென்பதை உணர்ந்தே, மிக நீண்ட காலத்தின் பின்னர் சிலாவத்துறை மற்றும் அதனையண்டிய பகுதிகளை படையினர் மீண்டும் கைப்பற்றினர்.

வடக்கை பொறுத்தவரை இன்று இரு பெரிய களமுனைகளுள்ளன. வன்னி மீதான படையெடுப்பு எப்படி அரசுக்கு முக்கியமோ அதேபோல் யாழ். குடாவை விடுவிப்பது விடுதலைப் புலிகளுக்கு மிகவும் முக்கியம். இவ்வாறானதொரு நிலையிலேயே வவுனியா - மன்னார் வீதியில் மடுவைக் கைப்பற்றிவிட வேண்டுமென அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

இதுவரை இப்பகுதியில் 13 முறை பாரிய தாக்குதல்களை படையினர் தொடுத்தும் ஒருவித பலனும் கிட்டாத நிலையில் வவுனியா - மன்னார் வீதியின் பாதுகாப்பு குறித்து படையினர் அக்கறை கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளதுடன் மன்னாரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா - மன்னார் வீதியின் வடக்கே பெரும்பாலான பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. வடக்கே படையினர் பாரிய படை நடவடிக்கையை ஆரம்பிப்பதாயின் வவுனியா - மன்னார் வீதியில் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளிலிருந்தே பெருமெடுப்பில் புறப்பட வேண்டும். மடுவை கைப்பற்றுவதற்காக வவுனியா - மன்னார் வீதியிலிருந்து புறப்பட்ட படையினரே இன்று வரை பலத்த அடிவாங்கி மடுவுக்கு நெருக்கமாகக் கூடச் செல்ல முடியாதுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் மத்தியில் விடுதலைப்புலிகளின் கவனம் மன்னார் பக்கம் திரும்பியுள்ளதாக அரசு கருதுகிறது. மன்னார் குடாவில் எண்ணெய் வளமிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இப்பிரதேசம் மீதான அக்கறையை அரசு அதிகரித்துள்ளது. மன்னார் குடாவில் எண்ணெய் அகழ்விற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டுகிறது. புதிதாக கைப்பற்றப்பட்ட சிலாவத்துறை மற்றும் முள்ளிக்குளத்தில் கடற்படை முகாம்களை அமைத்து எண்ணெய் தோண்டும் நடவடிக்கைக்கு பாதுகாப்பு வழங்கப்போவதாக தற்போது கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் மன்னார் மீதான புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை தவிர்க்க வேண்டுமென்பதுடன் மன்னாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு முயல்கிறது. மடுவை கைப்பற்ற அரச படைகள் முனைகையில் மன்னார் தீவுக்கான தொடர்பைத் துண்டித்து மன்னாரை தனிமைப்படுத்திவிட புலிகள் முயலக்கூடுமென்ற அச்சமும் அரசுக்குள்ளது.

மன்னார் பெருநிலப்பரப்பையும் மன்னார் தீவையும் தொடுக்கும் பாலத்தை புலிகள் கைப்பற்றிவிட்டால் நிலைமை தலைகீழாகிவிடும். இதனால், தள்ளாடியை அண்டிய பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனொரு கட்டமாகவே மன்னாருக்கு தெற்கே (வவுனியா - மன்னார் வீதிக்கும் தெற்கே) புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருந்த சிலாவத்துறை பகுதியை மீளக் கைப்பற்றும் நடவடிக்கையில் அரசு தீவிர அக்கறை காட்டியது.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை வவுனியா - மன்னார் வீதிக்கு வடக்கே ஒரு அங்குல நிலத்தைக்கூட இன்று விட்டுக்கொடுக்க தயாரில்லை. இந்த வீதிக்கு தெற்கே படையினர் வசமுள்ள பகுதிகளை கைப்பற்ற பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டமுமில்லை. ஆனால், வவுனியா - மன்னார் வீதியை விடுதலைப்புலிகள் கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டால், அதன் தென் பகுதியின் பாதுகாப்பு நிலைமை கேள்விக்குறியாகிவிடும்.

வவுனியா - மன்னார் வீதியின் தெற்கிலேயே சிலாவத்துறையுள்ளது. மன்னாருக்கு தென்கிழக்கே வில்பத்து காடு உள்ளது. மன்னாரிலிருந்து தெற்கு கரையோரமாக வங்காலை, பூவரசங்கண்டல், அரிப்பு, சிலாவத்துறையுள்ளது. அப்படியே தொடர்ந்து தென்பகுதி நோக்கிச் சென்றால் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டிக்கு செல்ல முடியும்.

மேற்குப் புறம் கடல் பகுதியைக் கொண்டது. மன்னார் -புத்தளம் கடற்பகுதியை கடற்புலிகளிடமிருந்து பாதுகாப்பதில் கடற்படையினர் தீவிர அக்கறை காட்டுகின்றனர். ஆனால், மன்னாரை அண்டிய கடல் பகுதி மிகவும் ஆழம் குறைந்ததென்பதால் கடற்படையினரின் பாரிய படகுகள் இப்பகுதிகளில் நடமாடுவதில்லை. சிறிய படகுகளையே கடற்படையினர் இங்கு பயன்படுத்துவர்.

1996 இல் வவுனியா - மன்னார் வீதியை கைப்பற்ற `எடிபல' என்ற பாரிய படை நடவடிக்கை இடம்பெற்றது. அதற்கு முன்னர் இந்த வீதிப் போக்குவரத்து படையினருக்கு பெரும் ஆபத்து நிறைந்ததாகவேயிருந்தது. அத்துடன், மன்னாரின் பாதுகாப்பு கருதி, வவுனியா - மன்னார் வீதிக்கு தெற்கே சிலாவத்துறை, கொண்டச்சி பகுதிகளில் படையினர் நிலைகொண்டிருந்தனர்.

1996 இல் எடிபல படை நடவடிக்கை மூலம் வவுனியா - மன்னார் வீதியை படையினர் தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததும் வீதியின் தெற்குப்புற பாதுகாப்பில் தளர்வேற்பட்டது. இதன் பின் 1996 இல், வவுனியா - கிளிநொச்சி வீதியை (ஏ-9) கைப்பற்ற `ஜெயசிக்குறு' படை நடவடிக்கையில் படையினர் இறங்கிய போது சிலாவத்துறை, கொண்டச்சி பகுதிகளிலிருந்து பெருமளவு படையினர் வாபஸ்பெற இப்பகுதிகளில் பெயரளவிலேயே சிறியளவில் இராணுவ முகாம்களிருந்தன.

அதன் பின் மேலும் படையினர் தேவைப்பட இங்குள்ள முகாம்கள் மூடப்பட்டு இப்பகுதிகளுக்கு அவர்கள் இடைக்கிடையே சென்று வருவதுடன் படையினரின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. வவுனியா- மன்னார் வீதியின் பாதுகாப்பு இறுக்கமாயிருந்ததால் இந்தப் பகுதிக்கென விஷேடமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்லையென படையினரும் அக்கறை காட்டவில்லை.

போர்நிறுத்த உடன்பாட்டின் பின்னர் இப் பகுதிகளுக்கு படையினர் சென்றுவருவது குறையவே சிலாவத்துறை, கொண்டச்சி மற்றும் அதனையண்டிய பகுதிகளில் புலிகளின் நடமாட்டங்கள் அதிகரித்தன. சிலாவத்துறை பகுதியில் கடற்புலிகளின் சிறிய தளமொன்றுமிருந்தது. ஆனாலும், கடற்புலிகள் இங்கு முகாம் அமைத்து நிலைகொள்ளவில்லை. அடிக்கடி இப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டமிருந்தாலும் படையினர் வருவதில்லையென்பதாலும் இது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் போன்றேயிருந்தது.

ஆனாலும், இது தங்களுக்கு சாதகமற்ற நிலப்பரப்பென்பதால் புலிகள் இங்கு முகாம் அமைத்தோ, போராளிகளை அமர்த்தியோ, கனரக ஆயுதங்களை நிறுத்தியோ, நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் வரை இதனைத் தங்களுக்குச் சாதகமாகவே பயன்படுத்த புலிகள் முனைந்தனர்.

மன்னாருக்கு வடக்கே தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல் தீவு பகுதியிலிருந்து தலைமன்னாரைச் சுற்றிவரும் கடற்புலிகள் தங்களது சிறியரக படகுகளை சிலாவத்துறையில் நிறுத்தி தங்கள் கடற் செயற்பாடுகளை மேற்கொண்டனர். கற்பிட்டி, புத்தளம் கடற்பரப்புகளில் கடற்படையினருடன் கடற்புலிகள் சமர்களில் ஈடுபட்ட போது சிலாவத்துறையிலிருந்தே புலிகள் செயற்படுவதாக படையினர் கூறிவந்தனர்.

அண்மைக் காலங்களில் குதிரைமலை, கற்பிட்டி மற்றும் பத்தலங்குண்டு கடற்பரப்புகளில் அடிக்கடி கடற்சமர்கள் ஏற்பட்டபோது, இது அப்பகுதி கடற்பரப்பில் பாரிய ஓட்டையை ஏற்படுத்திவிடலாமென கடற்படையினர் கருதினர். கொழும்பு நகரத்தின் மீதும் கொழும்புத் துறைமுகம் மீதும் தாக்குதல்களை நடத்த கடற்புலிகள் சிலாவத்துறை பகுதியிலிருந்தே வந்ததாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இது தென்பகுதியில் கற்பிட்டி முதல் கொழும்பு வரையான கரையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாயிருப்பதாக படையினர் கருதிய அதேநேரம் சிலாவத்துறையை அண்டிய பகுதிகளில் செயற்படும் புலிகளால் வவுனியா - மன்னார் வீதிப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலேற்படுமெனக் கருதினர்.

மன்னார் தீவு மீது மன்னாருக்கு வடக்கிலிருந்து புலிகள் பாரிய தாக்குதல் தொடுத்தால் மன்னாருக்கு தெற்கிலிருந்தும் புலிகள் கடல் வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்த இது வாய்ப்பாகிவிடுமென படைத்தரப்பு கருதியது.

அத்துடன், சிலாவத்துறையிலிருந்து இயங்கும் கடற்புலிகள் கற்பிட்டி, புத்தளம் மற்றும் கரையோரப் பகுதிகளிலிருந்து தடை செய்யப்பட்ட பெருமளவு பொருட்களை படகுகளிலும் ரோலர்களிலும் கடத்திச் செல்வதாகவும் படையினர் கூறிவந்தனர்.

அண்மைக் காலங்களில் கற்பிட்டி, பத்தலங்குண்டு, குதிரைமலைப் பகுதிகளில் ஆயுதங்களுடன் சென்ற கடற்புலிகளின் படகுகள் மற்றும் ரோலர்கள் அழிக்கப்பட்டதாக கூறிய போதெல்லாம், கடற்புலிகள் தென்பகுதியிலிருந்து சிலாவத்துறைக்கு, தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்ற போதே நடந்தவையெனவும் கூறப்படுகிறது.

இதனால், சிலாவத்துறையை கைப்பற்றி புலிகளதும் கடற்புலிகளதும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென கடற்படையினர் கூறிவந்த நிலையில் கடந்த வாரம், வவுனியா - மன்னார் வீதியிலுள்ள முருங்கன் படை முகாமிலிருந்து பாரிய படை நகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது. சிலாவத்துறையை கைப்பற்றும் இந்த நடவடிக்கையில் கடற்படையினரும் விமானப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடல்வழியாக கடற்படையினரை தரையிறக்கி திடீர் அதிரடியை மேற்கொள்வதென முதலில் திட்டமிடப்பட்ட போதும் பின்னர் அந்த முயற்சி கை விடப்பட்டதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், இராணுவ கமாண்டோ அணிகளை தாக்குதல் ஹெலிகொப்டர்களில் கொண்டு வந்து சிலாவத்துறை பகுதியில் தரையிறக்கி தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், புலிகள் திடீர் அதிரடித் தாக்குதல்களை நடத்தி படையினருக்கும் ஹெலிகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடலாமென்ற அச்சத்தால் இந்தத் திட்டமும் கைவிடப்பட, இறுதியில் முருங்கனிலிருந்து பாரிய படைநகர்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, வில்பத்தை அண்டிய கஜுவத்தை படை முகாமிலிருந்து உதவிகள் கிடைத்தன.

கடந்த சனிக்கிழமை காலை சிலாவத்துறை நோக்கி கவச வாகனங்கள் சகிதம் படையினர் பாரிய நகர்வை மேற்கொண்டனர். நண்பகலுக்குப் பின் அவர்கள் 13 கிலோ மீற்றர் தூரம் சென்று அரிப்பு பகுதிக்குள் நுழைந்தனர். அன்று மாலை மேலும் இரு கிலோமீற்றர் தூரம் நகர்ந்து சிலாவத்துறைக்குச் சென்றனர். எந்தவொரு பகுதியிலும் மோதல்கள் இடம்பெறவில்லை. எந்தவொரு இடத்திலும் புலிகள் தென்படவில்லையென படைத்தரப்பு தெரிவித்தது.

புலிகளின் முகாம்களோ, கனரக அல்லது சிறியரக ஆயுதங்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருசில இராணுவப் பொருட்களும் ஓரிரு மீன்பிடிப் படகுகளுமே படையினரால் கைப்பற்றப்பட்டன. படையினர் வருவதற்கு முன்னரே புலிகள் அங்கிருந்து விலகிவிட்டனர். பெருமளவு படையினரைக் கொண்டு வந்து தற்போது சிலாவத்துறை, அரிப்பு, கொண்டச்சி, முள்ளிக்குளம் பகுதிகளில் பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவு படையினர் இவற்றில் முடக்கப்பட்டுமுள்ளனர்.

கடற்புலிகளின் அச்சுறுத்தலை தவிர்க்க வேறு வழியின்றி பெருமளவு படையினர், தேவையற்றதொரு பிரதேசத்தில் முடக்கப்பட்டுள்ளனர். வடக்கில் இடம்பெற்ற இந்தப் படை நடவடிக்கையை அரசு பெரு வெற்றியாக பிரசாரம் செய்கிறது. கிழக்கை போல் வடக்கில் புலிகளை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாதெனக் கூறப்பட்டு வரும் நிலையில் வடக்கில் விடுதலைப்புலிகள் வசமிருந்து மிகப்பெரும், பகுதியை கைப்பற்றியுள்ளதுடன் சுமார் 6,000 மக்களையும் மீட்டுள்ளதாக அரசு வெற்றிப் பெருமிதமடைந்துள்ளது. ஆனால், இதன் உண்மை நிலையை படையினர் அறிவர்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை சிலாவத்துறையை கைவிட்டது அவர்களுக்கு பெரும் பின்னடைவல்ல. சிலாவத்துறையிலிருந்து அவர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது உண்மையே. என்றாலும், இதனை தக்கவைக்க அவர்களால் போரிட முடியாததொரு களநிலையே இங்குள்ளது. நாலாபுறமும் அரச படைகளுக்கு சாதகமானதொரு களநிலையில் அவர்கள் ஒரு துப்பாக்கி ரவையைக் கூட இந்த மோதலுக்காக பயன் படுத்தவில்லை.

தலைமன்னாரில் பாரிய கடற்படைத்தளமும் கற்பிட்டியில் கடற்படை முகாமும் குறுகிய தூரங்களிலிருந்த போதும் தங்கள் தளமோ, முகாம்களோ இல்லாத சிலாவத்துறை பகுதியிலிருந்து அவர்கள் முடிந்தவரை செயற்பட்டுள்ளனர். சிலாவத்துறையை கைப்பற்றியதன் மூலம் கற்பிட்டி, புத்தளம் மற்றும் கொழும்பின் கடல்வழிப் பாதுகாப்பை ஓரளவு உறுதிப்படுத்திவிட்டதாக அரசு கருதக்கூடும்.

அதேநேரம், இந்தியாவிலிருந்து கடல்வழியாக புலிகளுக்கு கிடைக்கும் உதவிகளை இந்தப் படை நடவடிக்கை எவ்விதத்திலும் பாதிக்காது. மன்னாருக்கு வடக்கே விடத்தல்தீவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கே தமிழகத்திலிருந்து புலிகளுக்கு கிடைக்கும் உதவிகள் வருவதாக படையினர் கூறுகின்றனர். இதனால், கடற்புலிகளது தமிழகத்துடனான தொடர்புகளை இந்தப் படை நடவடிக்கை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.

வடக்கில் கடற்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்தப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. தெற்கின் பாதுகாப்புக்காகவும் மன்னாரின் பாதுகாப்புக்காகவும் வவுனியா - மன்னார் வீதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே இந்தப் படை நடவடிக்கை இடம்பெற்றது. இதனால், படையினர் சில பலன்களைப் பெற்றாலும் புலிகளுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் புலிகளின் சிறு சிறு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக படையினர் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதுடன் பெருமளவு படையினரையும் இதற்காக முடக்க வேண்டியுள்ளது. இதனால், மேலும் மேலும் படையினரை பரவவிடுவதன் மூலம் ஆளணிப் பற்றாக்குறையை படையினர் எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்படுகிறது.

இந்த நிலையில் வடக்கில் பெரும் போருக்காக இரு தரப்பும் தயாராகவேயுள்ளன. தினமும், முன்னரங்க காவல் நிலைப் பகுதிகளில் பரவலாக மோதல்களும் ஷெல் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. வடக்கில் பருவமழை பொழியும் அறிகுறிகள் தென்படுகையில் பாரிய மோதல்கள் வெடிக்குமா அல்லது சிறு சிறு மோதல்களுடன் நாட்கள் கழியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

நன்றி-ஞாயிறு தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

சிலாவத்துறை, முள்ளிக்குளத்தில் புதிய இரு கடற்படை முகாம்கள்

[09 - September - 2007] [Font Size - A - A - A]

மன்னாருக்குத் தெற்கே சிலாவத்துறை மற்றும் முள்ளிக்குளம் பகுதியில் அடுத்த சில நாட்களில் புதிதாக இரு கடற்படை முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சிலாவத்துறையை நோக்கி பாரிய படை நடவடிக்கையொன்று இடம்பெற்றது. இதன்போது, அரிப்பு மற்றும் சிலாவத்துறையை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றிய படையினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முள்ளிக்குளத்தை கைப்பற்றினர்.

இந்த நிலையில் சிலாவத்துறை மற்றும் முள்ளிக்குளம் பகுதியில் அடுத்த சில தினங்களில் புதிய கடற்படை முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்கா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;

இவ்விரு பகுதிகளிலும் புதிய கடற்படை முகாம்களை அமைப்பதன் மூலம் மன்னாருக்கு தெற்கே கடற்பரப்பில் கடற்படையினர் தங்களது ஆதிக்கத்தை பலப்படுத்த முடியும்.

முன்னர் சிலாவத்துறை பகுதி புலிகளது ஆயுத மற்றும் போதைவஸ்து கடத்தல் நிலையாக இருந்தது. இந்தப் பகுதியில் புலிகளின் பிரசன்னமானது கொழும்பு நகரின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தலாயிருந்ததுடன் சிலாவத்துறையிலிருந்து தென்பகுதிக்கு ஆட்கள் மற்றும் ஆயுதங்களை அவர்கள் கடத்தி கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தனர்.

அத்துடன், கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாஸ்களை தவறாகப் பயன்படுத்தி கடற்படையினரைத் தாக்கவும் புலிகள் முயன்று வந்தனர்.

தற்போதைய நிலையில் சிலாவத்துறை மற்றும் முள்ளிக்குளத்தில் கடற்படை முகாம்களை அமைப்பதன் மூலம் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் தோண்டும் பணிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்.

இவ்வாறான பல்வேறு தேவைகளை இப்பகுதிகளில் அமைக்கப்படும் முகாம்கள் பூர்த்தி செய்யுமெனவும் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/9/9/i...s_page35766.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.