Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 24

உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல!  
ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான சிறந்த உதாரணமாகக் சொல்லப்படுவது 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை. 

இதேபோல, ஆபிரிக்காவெங்கும் அதிவலதுசாரித்துவத்தால் உந்தப்பட்டு, பல வன்முறைகளும் கொலைகளும் நடந்தேறியுள்ளன. ஆபிரிக்க சமூகங்களின் கட்டமைப்பு, சில வழிகளில் அதிவலதுசாரித்துவத்துக்கு வாய்ப்பானதாக உள்ளது. 

ஆபிரிக்கக் கண்டமானது, பல இனக்குழுக்களைக் கொண்டது. வளங்களைக் கொள்ளையடிக்கும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் ஆசைக்குப் பலியான ஆபிரிக்கா, 1883இல் கொலனித்துவவாதிகள் ஆபிரிக்காவை, தங்கள் இஷ்டப்படி பிரித்துக் கொண்டார்கள். இதனால் இனக்குழுக்கள் சிதறுண்டன. 

குறித்த நிலப்பரப்பில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் துண்டாடப்பட்டதால், சிறுபான்மையாயினர். இன்னொருபுறம், உருவாக்கப்பட்ட தேசஅரசின் விளைவால் சிறுபான்மை இனக்குழு பெரும்பான்மையானது. இவை இனத்துவ மோதல்களுக்கு அடிப்படையாக அமைந்தன.

1994ஆம் ஆண்டில், சிறிய கிழக்காபிரிக்க நாடான ருவாண்டா, மிகக் கொடூரமான இன மற்றும் அரசியல் வன்முறை அலைகளால் கிழிக்கப்பட்டது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில், பயிற்சி பெற்ற போராளிகளுடன் பணிபுரியும் ருவாண்டாவின்  ஆயுதப் படைகள், நாட்டின் 7.7 மில்லியன் மக்களில் ஒரு மில்லியன் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்தனர். 

வன்முறையின் முதன்மை இலக்கு சிறுபான்மை டுக்ஸி இனக்குழுவைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு, தேவாலயங்கள் மற்றும் பிற பொது கட்டடங்களில் பாதுகாப்புக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் வரன்முறையாக கொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்ட டுக்ஸி மக்களின் சரியான தொகையை துல்லியமாக கண்டறிய முடியாவிட்டாலும், நாட்டில் வாழும் டுக்ஸியினரில் குறைந்தது 80 சதவீதத்தினர் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தக் கொடூரமான இரத்தக்களரிக்குப் பிறகு, ருவாண்டாவின் கிறிஸ்தவ தேவாலயங்கள் இனப்படுகொலையை எதிர்க்கவோ தடுக்கவோ இல்லை என்றும் இவை வன்முறையில் தீவிரமாக உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது குறித்த விரிவான ஆய்வுகள், அதிர்ச்சிகரமான ஓர் உண்மையைச் சொல்லியது. 1994 இனப்படுகொலையை நோக்கித் தள்ளிய அரசியல் சீர்திருத்தத்துக்கு எதிரான மக்களின் அழுத்தங்களை உந்தித் தள்ளியதில், தேவாலயங்களின் பங்களிப்பு முக்கியமானது. அரசியல் சீர்திருத்தத்துக்கு எதிரான வேலைத்திட்டத்தில், தேவாலய பணியாளர்களும்  நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

உலக வரலாற்றில் மத நிறுவனங்கள் ஓர் இனப்படுகொலையில் ஈடுபடுவது விதிவிலக்கானது அல்ல. துருக்கியில் ஆர்மேனியர்கள், இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவில் யூதர்கள், பொஸ்னியாவில் முஸ்லிம்கள், இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள், லெபனானில் கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு முஸ்லிம் குழுக்களுக்கு இடையே நடந்த இனப்படுகொலை, வன்முறைகள் எனப் பல உதாரணங்கள் உண்டு. ஆனால், இவை அனைத்திலும் இருந்து ருவாண்டா வேறுபடுகிறது. 

இங்கு மதம், ஒரு சமூகக் குழுவை வரையறுக்க, குறிப்பாக அடையாளம் காட்டியாகச் செயற்படவில்லை. ருவாண்டாவில் உள்ள கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து தேவாலயங்கள் இரண்டுமே பல இனங்களைக் கொண்டவை.
மேலும், ருவாண்டாவில் இனப்படுகொலை ஒரு மதக் குழுவுக்குள்ளேயே நிகழ்ந்தது. பெரும்பாலான சமூகங்களில், ஒரே தேவாலய திருச்சபையின் உறுப்பினர்கள், தங்கள் சக உறுப்பினர்களைக் கொன்றனர். மேலும், பல சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் சொந்த போதகர் அல்லது பாதிரியாரைக் கொலை செய்தனர். இதைச் சாத்தியமாக்கியது எது என்ற வினா தொக்கி நிற்கிறது. 

ஆபிரிக்காவில் இனத்துவரீதியான உச்சபட்ச வெறுப்பரசியலே இவ்வாறான கொலைகளுக்கும் வன்முறைக்கும் வழிசெய்கிறது. லைபீரியாவின் உள்நாட்டுப் போரானது, மேற்கு ஆபிரிக்க துணைப் பகுதிக்குள், க்ரான்ஃமாண்டிங்கோ தலைமையிலான அரசாங்கத்துக்கும் ஜியோ-மனோ கிளர்ச்சியாளர்களுக்கு இடையேயான வெறுப்பு அரசியலால் உக்கிரமடைந்தது. 

இந்த வெறுப்பரசியல், அரசியல் உத்தியாகவும் தேர்தல் மூலோபாயமாகவும் உள்ளது. இதன் முக்கிய கருவியாக வெறுப்புமிழும் பேச்சு இருக்கிறது.

வெறுப்புமிழும் பேச்சு, தேர்தல் காலங்களில் மட்டும் வெளிப்படுவதில்லை, ஆனால், இக்காலங்களில் ஏற்கெனவே இருக்கும் பிளவுகளை அதிகப்படுத்தி, தப்பெண்ணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அதிவலதுசாரிகள் நன்கறிந்து இருக்கிறார்கள். இவ்வாறான பேச்சுகள் பொதுவாக, ஒரு குறிப்பிட்ட குழுவை, மற்றொன்றுக்கு எதிராக அணிதிரட்டுவது மற்றும் பிரிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே பிரசாரங்களை உருவாக்குகின்றன. 

வெறுக்கத்தக்க பேச்சு என்பது ஒரு குறிப்பிட்ட குழுவை இழிவுபடுத்தும் வெறுக்கத்தக்க பேச்சின் பயன்பாட்டை அடிக்கடி உள்ளடக்கியது. 

பெண்களை குறிவைக்கும் வெறுக்கத்தக்க பேச்சு, சில சமயங்களில் வெறுப்பூட்டும் பேச்சு சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும்; சில சமயங்களில் இல்லை. இருப்பினும் இது பெண்களை பொது பதவியை தேடுவதை தடுக்கும் ஒரு முக்கிய காரணியாகும். தேர்தல் பங்குதாரர்கள் (அமைச்சகங்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட) வெறுப்பூட்டும் பேச்சை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 

மேலும், இந்தப் பங்குதாரர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அமைதியை கட்டியெழுப்புவதில் வெறுப்பு பேச்சுகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்க முடியும். தேர்தல்களில், தேர்தல் பங்குதாரர்கள் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறந்த சட்டத்துக்கு வாதிட வேண்டும்; உள்ளடக்கிய உரையாடலுக்கான இடத்தை உருவாக்க வேண்டும். அறிவைப் பரப்புவதன் மூலம் வெறுப்பு பேச்சு தொடர்பான சமூக ஒருமித்த கருத்தை அடைவதே இறுதி இலக்கு.

ஆபிரிக்காவில் அரசியல் அதிகாரத்தின் எல்லையற்ற தன்மையானது தேர்தலில் வெல்வதற்காக எந்தவோர் ஆயுதத்தையும் பயன்படுத்த தயாராகவிருக்கும் மனநிலையை உருவாக்கியுள்ளது. இது ஒருமித்த மனப்பான்மையும் வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்துவதற்கு பங்களிக்கின்றன. 

இந்தப் பண்பை தென்னாசியச் சமூகங்களிலும் காணவியலும். ஆபிரிக்காவெங்கும் கொலனியாதிக்க விடுதலையைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்கள், முரண்பாடுகளுக்கு வழியமைத்து இன்றுவரை அவை பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. ஏற்கெனவே சவாலான இந்தச் சூழல், பிராந்தியத்தில் உள்ள அதிக வேலையின்மை மற்றும் வறுமையால் இன்னும் சிக்கலாக மாறியுள்ளது. 

தேர்தல் காலங்கள் குழுக்களுக்கு விரக்தியை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கின்றன. இதை அதிவலதுசாரி பயன்படுத்துகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால், உலகின் ஏனைய பகுதிகள் போல அதிவலது வெளியில் இல்லை; மாறாக, அரசியல் மையநீரோட்டத்தின் முக்கிய இடத்தில் உள்ளது. 

2016இல், காம்பியாவின் முன்னாள் ஜனாதிபதியான லுயாயலய, ஓர் அரசியல் பேரணியின் போது, மண்டிகாக்க இனக்குழுவினரை எதிரிகள் என்றும், வெளிநாட்டவர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர்களை அச்சுறுத்தினார். இதன் மற்றொரு பரிமாணம், 2020 அக்டோபரில் ஐவரி கோஸ்டில் டியோலாஸ் - அக்னிஸ் இடையேயான இன மோதல்களாகும். 

ஆபிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில், தென்னாப்பிரிக்கா அதிவலதுசாரி ஜனரஞ்சக இயக்கங்களுக்கு ஒரு கோட்டையாகக் கருதப்படுகிறது. நிறவெறி சகாப்தத்தின் போது, இனவிரோதங்களின் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுடன், நிறவெறிக்கு பிந்தைய ஜனநாயக அரசாங்கங்கள் இன்னும் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை வெல்லாத நிலையில் அதிவலது இன்னும் செல்வாக்குடன் திகழ்கிறது. 

தென்னாபிரிக்காவில் உள் இனப் பதட்டங்களைத் தவிர, வெளிநாட்டினருக்கு எதிராக, குறிப்பாக மற்ற ஆபிரிக்கர்களுக்கு எதிரான, பரவலாகப் பகைமைகள் உள்ளன. ‘ஒபரேஷன் டுடுலா’ (சுலு மொழியில்  தள்ளு) என்று பெயரிடப்பட்ட குழுவால் சோவெட்டோ மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் புலம்பெயர்ந்த வணிகர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இன்று தென்னாபிரிக்கா திருப்புமுனையில் நிற்கிறது. ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் ஊழலிலும் அதிகாரத் துஷ்பிரயோகத்திலும் சீரழிந்து நம்பிக்கை இழந்துள்ளது. இன்று மாற்றாக முன்வரும் புதிய சமூக சக்திகள் சர்வாதிகார ஜனரஞ்சகத்தின் வாய்ச்சண்டை வடிவங்களாகும். அவை தீவிர அதிவலதின் பக்கம் நிற்கின்றன.

ஆபிரிக்காவெங்கும் அதிவலது அரசியல் மையநீரோட்டத்தின் பகுதியானமையில் உயர்செல்வந்தக் குடிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கன. அவர்களே அதிவலதை ஊக்குவித்து செல்வமளித்து காக்கிறார்கள். இன்று ஆபிரிக்காவெங்கும் நிறைந்துள்ள வேலையின்மையும் வறுமையும் காலநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகளும் பாசிசம் உட்பட அதிவலது சர்வாதிகாரத்துக்கு இந்நாடுகள் திரும்புவதற்கான ஆபத்துள்ளது. 

குறிப்பாக ஆளும் உயரடுக்கு மக்களிடமிருந்து, தொலைவில் இருப்பதாகக் கருதப்பட்டு ஊழல் செய்யும்போது இந்த ஆபத்து எப்போதும் மோசமாகும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆபிரிக்காவின்-மைய-நீரோட்டத்தில்-அதிவலது/91-316706

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.