Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் 10,000 சுகப்பிரசவம் செய்த 'சூப்பர் செவிலியர்' - பிரமிக்க வைக்கும் கதீஜா பீவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
செவிலியர், குழந்தை, பிரசவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மழலையின் சிரிப்பொலியைக் கேட்பதற்குத்தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கதீஜா பீவிக்கு, பிறந்த சிசுவின் முதல் அழுகுரலைக் கேட்பதில்தான் அதீத ஆர்வம்.

கடந்த 33 ஆண்டுகளாக விழுப்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு செவிலியராக பணியாற்றி வரும் கதீஜா பீவி, தனது பணிக்காலத்தில் 10,000க்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களை வெற்றிகரமாகக் கையாண்டவர்.

அவரது 33 ஆண்டு காலப் பணிவாழ்வில், தன்னிடம் வந்த தாய்மார்களுக்கு உரிய சிகிச்சை அளித்த கதீஜா, ஒரு பேறுகால இறப்புகூட ஏற்படாமல், 10,000க்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களைக் கையாண்டார் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்துகிறார்.

கைராசி செவிலியர்

செவிலியர், குழந்தை, பிரசவம்
 
படக்குறிப்பு,

1986இல் செவிலியர் பயிற்சி படிப்பில் தனது வகுப்பு தோழிகளுடன் கதீஜா(நிற்பவர்கள் வரிசையில் கடைசி நபர் இடதுபுறம்)

ஐந்து அடி உயரம், வெள்ளை நிறச் சேலை, சாம்பல் நிற ப்ளவுஸ், கண்ணாடி அணிந்த சிறிய முகம், அந்த முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி. எளிமையான தோற்றத்தில் உள்ள இந்தப் பெண்மணிதான் விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களால் சுகப்பிரசவத்திற்கான கைராசி செவிலியராக அறியப்படுகிறார்.

1990இல் ஏழு மாத கர்ப்பிணியாக விழுப்புரம் மாவட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு செவிலியர் பணிக்குச் சேர்ந்தவர் கதீஜா பீவி. அதே சுகாதார நிலையத்தில் அடுத்த மாதம், தனது 60ஆவது வயதில் ஓய்வு பெறவுள்ளார்.

''நான் வேலைக்குச் சேர்ந்த நேரத்தில், நானே கர்ப்பிணியாக இருந்தேன். ஆனாலும் பிரசவம் பார்த்தேன். எனக்குக் குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் மீண்டும் பணிக்கு வந்துவிட்டேன். செவிலியர் பயிற்சி முடித்திருந்தேன். இருந்தபோதும், பணிக்குச் சேர்ந்த சில நாட்களில், நானே குழந்தை பெற்றெடுத்த அனுபவம் பெற்றிருந்ததால் அது எனக்கு மேலும் கைகொடுத்தது.

பல தாய்மார்களுக்கு, பிரசவத்தின்போது, அரவணைப்புடன் பேசுவது, நம்பிக்கை கொடுப்பதுதான் அவர்களுக்கான சிறந்த மருந்து என்று உணர்ந்திருந்தேன். அதனால், என்னிடம் வந்த எல்லா தாய்மார்களுக்கும் குழந்தை பிறக்கும் நேரத்தில் ஏற்படும் தவிப்புகளைப் புரிந்துகொண்டு பணியாற்றினேன்,'' என்கிறார் கதீஜா பீவி.

அவருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும் சுகப்பிரசவத்தில்தான் பிறந்தன. கதீஜா பணியில் சேர்வதற்கு முன்னதாக, ஆரம்ப சுகாதர நிலையத்தில் இரண்டு தாய்மார்கள் பிரசவத்தின்போது இறந்த சம்பவங்கள் நடந்திருந்தன. அதனால், தன்னிடம் வரும் எந்தக் கர்ப்பிணிக்கும் ஆபத்தான மரணம் ஏற்படக்கூடாது, பேறுகால மரணம் தனது பணியில் நடைபெறக்கூடாது, தன்னைப் போல எல்லோருக்கும் சுகப்பிரசவம் நடைபெறவேண்டும் என்ற வலுவான எண்ணம் அவரிடம் குடிகொண்டிருந்தது.

''30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரசவம் பார்த்திருந்தாலும், ஒவ்வொரு பிரசவம் நடக்கும்போதும் எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது, தாய்-சேய் ஆரோக்கியமான நிலையில் இருக்கவேண்டும் என்ற உறுதியான வேண்டுதல் என் மனதில் இருக்கும். அதனால், ஒவ்வொரு நாளும் நான் பணிக்குச் சேர்ந்த முதல் நாள் என்ற எண்ணம் மனதில் இருக்கும்,'' என்கிறார் அவர்.

வலியால் துடிக்கும் அல்லது அசௌகரியமாக உணரும் (இருக்கும்) கர்ப்பிணியைப் பார்த்து, சோதனைகள் மூலம், சுகப்பிரசவத்திற்கு வாய்ப்புள்ளதா இல்லையா என்று கண்டறிந்து, அறுவை சிகிச்சை தேவையெனில் உடனே விழுப்புரம் மாவட்ட மருத்துவமனைக்கு அவசரம் கருதி அனுப்பியும் வைக்கிறார்.

''எனக்குள் ஓர் உணர்வு ஏற்படுகிறது. சுகப்பிரசவத்திற்கான வாய்ப்பு உள்ளது என நம்பிக்கையுடன் நான் கையாண்ட 10,000க்கும் மேற்பட்ட எல்லா பிரசவங்களும் வெற்றிகரமாக நடைபெற்றன. சிலருக்கு சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தால், உடனே அவர்களைத் தாமதமின்றி அனுப்பிவிடுவேன்,'' எனத் தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

ஒரே நாளில் 8 பிரசவம்

செவிலியர், குழந்தை, பிரசவம்
 
படக்குறிப்பு,

சுகாதாரத்துறை அதிகாரிகளின் பாராட்டை பெறும் கதீஜா

கதீஜா பீவியின் தாயார் ஜுலைகா கிராமப்புற சுகாதார செவிலியராகப் பணியாற்றிவர் என்பதால், சிறுவயது முதல் செவிலியர் வேலை குறித்த ஆர்வம் கதீஜாவிடம் இருந்தது. 1990களில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் பரபரப்பான இடமாக ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது என்று நினைவு கூருகிறார் கதீஜா.

30 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு செவிலியராகப் பணியாற்றும் கதீஜா, தனது பணிக்காலத்தில் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் 35 பிரசவங்கள் வரையும், குறைந்தபட்சம் ஐந்து பிரசவங்கள் வரையும் பார்த்துள்ளார். பணியில் நிகழ்ந்த மறக்கமுடியாத அனுபவங்கள் பல இருந்தாலும் ஒரே நாளில் எட்டு பெண்மணிகளுக்குப் பிரசவம் பார்த்தது உணர்வுபூர்வமான நாளாக அவருக்கு அமைந்துவிட்டது.

''2000ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 8ஆம் தேதி. அன்று பெண்கள் தினம். பலரும் வாழ்த்துச் சொன்னார்கள். ஆனால் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாக அந்த நாள் அமையும் என்று நினைக்கவில்லை.

எப்போதும் போல காலை 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். காலையில் நான் வந்த நேரத்தில், இரண்டு பெண்மணிகள் வலியுடன் படுத்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பிரசவம் முடிந்ததும், மற்றோர் அலறல் கேட்டது. அதுபோல அன்று தொடர்ச்சியாக எட்டு பிரசவங்கள். எனக்குத் துணையாக ஒரு தூய்மைப் பணியாளர் இருந்தார். அன்று முழுவதும் எட்டு பெண்களுக்கு அடுத்தடுத்து பிரசவம் பார்த்தேன். எட்டு குழந்தைகளின் அழுகுரல்கள் கேட்டன. எங்கள் சுகாதார நிலையத்தில் அன்று அதிக கூட்டம். ஆனால் எட்டு பேருக்குமே சுகப்பிரசவமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி,'' எனப் பெருமூச்சுடன் நினைவு கூர்கிறார் கதீஜா.

எட்டு குடும்பத்தினரும் நன்றி சொன்னது, கண்ணீருடன் இருந்த தாய்மார்கள், நிறைவான மனதுடன் குழந்தைகளுக்குப் பாலூட்டியது, இவற்றையெல்லாம் பார்த்தபோது, கதீஜாவுக்கு மிகப் பெரிய சாதனை செய்த உணர்வு ஏற்பட்டது.

''நான் செவிலியர் பயிற்சிக்குச் சென்றபோது பலரும் என் அம்மாவை விமர்சித்தார்கள். ஆனால் இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் நான் சிறப்பாகப் பணியாற்றியதைக் கேள்விப்பட்ட உறவினர்கள் பலரும் பாராட்டினார்கள்,'' என்கிறார்.

தனது பணிச்சூழல் காரணமாக, சுகாதார நிலையத்திற்கு அருகில் உள்ள வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார். தனது பணி ஓய்வுக்குப் பின்னர் கூட, வேறு இடங்களுக்குச் செல்வதில் அவருக்கு மனமில்லை.

''சில நேரம் தூக்கத்தில்கூட, குழந்தை பிறந்தவுடன் அழும் அந்த அழுகுரல் எனக்குக் கேட்கும். திடுக்கென விழித்திருக்கிறேன். பிறந்தவுடன் குழந்தைகள் அழவேண்டும், அந்த அழுகுரல் வெளியில் வந்தால்தான் அந்தக் குழந்தை சரியான மூச்சுவிடுகிறது என்று அர்த்தம்.

அந்த அழுகுரல் எனக்குப் பிடிக்கும். வலியுடன் வரும் எண்ணற்ற தாய்மார்கள், குழந்தை பிறப்பின்போது, வீறிட்டு அழுவார்கள், கத்துவார்கள், குழந்தை பிறந்ததும், அதன் அழுகுரல் கேட்டதும் கண்ணீருடன் புன்னகைப்பார்கள். அது ஒரு புல்லரிக்கும் அனுபவம். அதுவே என் பணியாகிப்போனது எனக்குக் கிடைத்த வரம்,'' என்கிறார்.

50 இரட்டைக் குழந்தைகள்

செவிலியர், குழந்தை, பிரசவம்
 
படக்குறிப்பு,

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் செவிலியர் கதீஜாவை பாராட்டி சுதந்திர தின அணிவகுப்பின் போது சான்றிதழ்களை வழங்கினார்

இதுவரை 50க்கும் மேற்பட்ட இரட்டைக் குழந்தைகள் மற்றும் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த பிரசவங்களைக் கையாண்ட அனுபவத்தைப் பெற்றுள்ளார் கதீஜா. ட்ரிப்லெட்ஸ் என்று சொல்லப்படும் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த நாள் ஆச்சரியங்கள் நிறைந்த நாளாக அவருக்கு அமைந்தது.

1990களின் தொடக்கத்தில் வயிற்றில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் காட்டும் ஸ்கேன் கருவி ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லாத நேரம். அதனால், வலியுடன் வந்த கர்ப்பிணிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்ற அனுமானத்தில் இருந்திருக்கிறார் கதீஜா.

முதல் குழந்தை பிறந்த பின்னர், ஒரு சில நிமிடங்களில் மீண்டும் வலி வந்து இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. இரண்டு குழந்தைகளைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் அந்தப் பெண்மணி தனக்கு வலி வருவதாகக் கூறியதும், கதீஜாவுக்குப் பதட்டம் ஏற்பட்டது.

இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பவதும் சிரமம். பயம், குழப்பம் ஒருசேர இருந்தாலும், மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணின் கைகளைப் பிடித்துக்கொண்டு, தலையைத் தடவிக்கொடுத்திருக்கிறார்.

மற்றொரு குழந்தை வெளியேறவே, ட்ரிப்லெட்ஸ் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள் என்று புரிந்தது.

எப்படி சாத்தியமாகிறது சுகப்பிரசவம்?

செவிலியர், குழந்தை, பிரசவம்
 
படக்குறிப்பு,

குடும்பத்தினருடன் செவிலியர் கதீஜா பீவி

சுகப்பிரசவத்தின்போது, தாயின் மன உறுதி மிகவும் முக்கியம் என்கிறார் கதீஜா.

''வலி மிகவும் மோசமாக இருக்கும். ஆனால் பிரசவிக்கும் தாய் யாரிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அந்த நபர் உடன் இருப்பது அவசியம். ஒரு பிரசவத்தில், ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்த பின்னர், வலியுடன் படுத்திருந்தார், அவருக்குச் சிறிய தையல் போட வேண்டியிருந்தது

தன்னுடைய சித்தப்பா வரவேண்டும் என்றார். அவர் வந்த பின்னர்தான் அந்தப் பெண்ணுக்குத் தையல் போட முடிந்தது. தற்போது பல ஆண்கள் தங்களது மனைவி பிரசவிக்கும்போது உடன் இருக்க விரும்புகிறார்கள். நம் சமூகத்தில் பெரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சாட்சி இது,'' என்கிறார் அவர்.

இரண்டு தலைமுறைப் பெண்களுக்குப் பிரசவம் பார்த்த அனுபவமும் கதீஜாவுக்கு உண்டு. 21 வயதான விஜயலட்சுமி பிறந்தபோது அவரை முதலில் கையில் ஏந்தியது கதீஜாதான். விஜயலட்சுமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கதீஜாவின் உதவியுடன் சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

''என் அம்மா சுமதி கர்ப்பகாலத்தில் பல சிரமங்களைச் சந்தித்தார். ஆனால் பிரசவ அறையில், கதீஜா அம்மா கனிவாகப் பேசி, நம்பிக்கை தந்ததால், என்னைத் தைரியமாகப் பெற்றுடுத்ததாக அம்மா அடிக்கடி கூறுவார். அதனால், பலரும் தனியார் மருத்துவமனையைப் பரிந்துரை செய்தபோதும், நான் கதீஜா அம்மாவைத் தேடி வந்தேன். எனக்கும் சுகப்பிரசவம் நடந்ததில் அளப்பரிய மகிழ்ச்சி,'' என்கிறார் இளம்தாய் விஜயலட்சுமி.

முதல் பிரசவம் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெற்றால், இரண்டாம் பிரசவமும் அறுவை சிகிச்சையாக நடைபெறும் என்ற கற்பிதம் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் பல பெண்களுக்கு அறுவை சிகிச்சையின்றி இரண்டாம் பிரசவம் சுகப்பிரசவமாக நடைபெற கதீஜா உதவியிருக்கிறார்.

''அறுவை சிகிச்சை இன்று பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. பல பெண்கள் பிரசவத்தின்போது இறந்துபோனதை என் அம்மா சொல்லியிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில், அறுவை சிகிச்சைகள் அதிகமாகிவிட்டது என்பதையும் மறுக்கமுடியாது.

அறுவைசிகிச்சை என்றால் முன்னர் பயப்படுவார்கள். தற்காலத்தில், பலர் சுகப்பிரசவத்திற்கு அஞ்சுகிறார்கள். ஒரு சில குடும்பங்களில், பெற்றோர்கள், எங்கள் மகள் வலி தாங்கமாட்டாள், அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்று முன்பே முடிவு செய்துவிடுகிறார்கள். ஆனால் சுகப்பிரசவம் என்பது ஒவ்வொரு தாய்க்கும் ஒரு பெருங்கனவு,'' எனக் கால மாற்றத்தை விவரிக்கிறார்.

முதலமைச்சர் வழங்கிய விருது

செவிலியர், குழந்தை, பிரசவம்
 
படக்குறிப்பு,

தடுப்பூசி முகாம் பணியில் கதீஜா

கதீஜாவின் மகள் ஜெயபாரதி பெங்களூருவில் கணினி மென்பொருள்துறையில் பணியாற்றுகிறார். மகன் பொன்மணிசாஸ்தா துபாயில் மெக்கானிகல் துறையில் வேலை செய்கிறார். ஆனால் விழுப்புரத்தில் வசிப்பதுதான் அவருக்குப் பிடித்திருக்கிறது.

கணவர் செல்வராஜ் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தபோது, மகன், மகளின் எதிர்காலம் கருதி மேலும் தனது பணியில் கவனம் செலுத்தியதாகக் கூறுகிறார் கதீஜா.

''ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வியும் வேலையும், அதிலும் தனக்குப் பிடித்தமான வேலையில் இயங்குவதும் அவசியம். என் குடும்பத்தினர் எனக்குப் பக்கபலமாக இருந்ததால்தான், நான் சாதித்தேன். என் மனதிற்கு நெருக்கமான வேலையைச் செய்தேன்,'' என்கிறார் அவர்.

சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கதீஜா பீவியின் சேவையைப் பாராட்டி விருது வழங்கினார்.

கதீஜாவின் மருமகள் மோனிஷா பேசும்போது, ''ஏழை தாய்மார்கள் பலருக்கும் கனிவுடன் அக்கறையுடன் பல ஆண்டுகளாக என் அத்தை செய்த சேவைக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. பணிஓய்வுக்கு பின்னர், தனது பேரக் குழந்தைகளுடன் நேரம் செலவிடவேண்டும் என நாங்கள் கேட்டிருக்கிறோம்.

அவரது வேலையில் எப்போதும் அவர் பொறுப்புடன் இருப்பார். இரவு 1 மணி, 3 மணிக்குக் கூடக் கிளம்புவார். இனிமேல் பேரக்குழந்தைகளுடன் விளையாடி அவர்களது சிரிப்பொலி சூழ அவர் இருக்கவேண்டும்,'' என்கிறார் மோனிஷா.

https://www.bbc.com/tamil/articles/cxe7xpprrkjo

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது

10,000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பிரசவங்களை மேற்பார்வையிட்டதற்காக, இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் கதீஜா பீபி என்ற 60 வயதான செவிலியர் ஒருவருக்கே  இந்த அரச விருது வழங்கப்பட்டுள்ளது. 

தனது 33 ஆண்டுகால செவிலியர் வாழ்க்கையில் அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

ஒரு குழந்தை கூட இறக்கவில்லை

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், தமது மேற்பார்வையில் பிரசவித்த  குழந்தைகளில் ஒரு குழந்தை கூட இறக்கவில்லை என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும், இதை தனது தொழிலில் சிறப்பம்சமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனும் உறுதி செய்துள்ளார்.

இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது | Royal Award For Indian Female Nurse

கதீஜா 1990 இல் வேலை செய்ய ஆரம்பித்தபோது கர்ப்பமாக இருந்துள்ளார். எனினும் ஏனைய பெண்களுக்கு உதவி செய்தமையை அவர் நினைவுக்கூருவதாகவும் கதீஜாவின் உத்வேகம் என்பது அவரது அம்மா ஸூலைகாவிடம் இருந்து கிடைத்த ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது தாயாரும் கிராம செவிலியராக இருந்துள்ளார்.

மருத்துவமனையின் வாசனை பழகிவிட்டது

சிறுவயதில் ஊசிகளை வைத்து விளையாடுவேன், மருத்துவமனையின் வாசனை எனக்கு மிகவும் பழகி விட்டது எனவும் கூறியுள்ளார்.

இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது | Royal Award For Indian Female Nurse

செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்தியாவின் சுகாதார அமைப்புக்கு இன்றியமையாதவர்கள், ஆனால் அதிக தேவை மற்றும் குறைந்த வளங்கள் காரணமாக அது சவால்களை எதிர்கொள்கின்றது.

https://tamilwin.com/article/royal-award-for-indian-female-nurse-1688205657

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.