Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இடதுசாரிகளும் பௌத்த மயமாக்கலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இடதுசாரிகளும் பௌத்த மயமாக்கலும்

 

-தென் அமெரிக்க நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை மீட்சி பெறச் செய்யும் முயற்சியில் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டிய தேவையிருந்தது. இதனாலேயே அங்கு இடதுசாரிகள் தொடர் வெற்றிகளைக் கண்டு வருகின்றனர். ஆனால் இலங்கை இடதுசாரிகள்  வெறுமனே சோசலிச சமத்துவம் என்ற கோசத்தை மாத்திரம் முன்வைக்கின்றன.

-அ.நிக்ஸன்-

உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அடுத்தடுத்து ஆட்சியை அமைத்து வருகின்றன.

ஆனால் இடதுசாரி என்பதன் உண்மையான அடிப்படை மற்றும் இடதுசாரி என்பதற்குரிய சரியான உள் நோக்கங்களைத் தற்கால இடதுசாரிகள் குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் ஆட்சி அமைத்து வரும் இடதுசாரிகள் கொணட்டிருப்பதாகக் கூற முடியாது. இந்த இடதுசாரிகள் தத்தமது நாடுகளின் தேசியச் சிந்தனைகளை அடிப்படையாகவும், வலதுசாரிகள் போன்று வர்த்தக நலன்களை மையமாகவும் கொண்டிருக்கின்றன.

இருந்தாலும் தென் அமெரிக்காவில் இடதுசாரிகளின் எழுச்சியை சாதாரண அரசியலாகக் கணிக்க முடியாது.

டொனால்ட் ட்ரம் அமெரிக்கத் தேசியவாதத்தை அடிப்படையாக் கொண்டு பதவிக்கு வந்தவர் என்றும் அதனால் இடதுசாரிகளும் அவ்வாறான தேசியக் கண்ணோட்டத்தில் மேலும் சிந்தித்தால் இடதுசாரி மற்றும் பொது உடமைக் கொள்கை என்ற அடிப்படையில் ஆபத்தான அரசியல் சிந்தனைகள் உலக அளவில் உருவாகி விடும் என்றும் அமெரிக்க வலதுசாரிகள் மத்தியில்  ஒரு வகை பதற்றம் உண்டு.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் ரசிய உக்ரெயன் போர்ச் சூழலில் இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு உயர்வடைந்து வருவதாக மேற்குலக ஊடகங்களில் வரும் விமர்சனங்களை அவதானித்தால் புரியும்.

பெப்ரவரி மாதம் ஈக்குவடோரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு மற்றும் உள்ளூராட்சித்  தேர்தல்களில் இடதுசாரிக் கட்சியான குடிமக்கள் புரட்சிகரக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்கள் கோரும் எட்டு அம்சத் தீர்மானங்கள் மீது பொது வாக்கெடுப்பும் நடைபெற்றது.

இந்தத் தேர்தல்களில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான குடிமக்கள் புரட்சிகரக் கட்சி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பாதுகாப்பை முன்னிறுத்துவது என்பது உள்ளிட்ட எட்டுக் கேள்விகளை மக்களிடம் சமர்ப்பித்து வலதுசாரி அரசு முன் வைத்தது. உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களோடு அதன் மீது பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

spacer.png

எட்டு கேள்விகளுக்கும் எதிராக மக்கள் வாக்களித் திருக்கிறார்கள். வலதுசாரி அரசு முன்வைத்த எந்தத்திருத்தத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆளுங்கட்சிக்கு பலமான இடங்கள் என்று கருதப்பட்டவற்றிலும் இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஈக்குவடோர் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகள் முழுமையாக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று மேற்கு மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் கூறுகின்றன. அஞ்சுகின்றன.

அதேபோன்று மற்றுமொரு தென் அமெரிக்க நாடான பிரேசில் கடந்த ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த வெற்றி பிரேசிலின் வெற்றியாக மாத்திரம் உலக நாடுகளால் அவதானிக்கப்படவில்லை. சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சில ஆண்டுகள் சரிவை சந்தித்து வந்த இடதுசாரிகளுக்குத் தென் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம் உலக அளவில் இடதுசாரிகளுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில் அங்குள்ள இடதுசாரி கட்சிகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களினால் வெற்றியைப் பெறமுடிந்தது. வலதுசாரி அரசாங்கத்தை மக்கள் நிராகரித்து, இடதுசாரி தலைவர்களிடம் ஆட்சி அதிகாரத்தைக் கையளித்திருக்கின்றனர்.

2019 இல் மேலும் சில தென் அமெரிக்க நாடுகளான கியூபாவில் மைக்கேல் டியாஸ் கேணல், ஆா்ஜெண்டீனாவில் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பொலிவியாவில் 2020 இல் லுயிஸ் வெற்றி பெற்றார். 2021 இல் ஹோண்டிரஸ்ஸில் கேஸ்ட்ரோவும், நிகராகுவாவில் டேனியலும், பெருவில் பெட்ரோவும், சிலியில் கேப்ரியலும் வெற்றி பெற்றனர்.

இவ்வாறு படிப்படியாகத் தென் அமெரிக்கா இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றனர். தென் அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிபதிகளாகத் வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் தொழிலாள வர்க்கப் பின்னணியைக் கொண்டவர்கள்.

2000 ஆம் ஆண்டு பின்லேடன் உள்ளிட்ட இஸ்லாமியக் குழுக்களின் தாக்குதல்கள் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்ததால் தேசியவாத கொள்கைகள் மூலம் வலதுசாரி தலைவர்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தனர்.

இந்தத் தேசியவாதச் செல்வாக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் தீவிரமடைந்தன. இதனால், இன விடுதலை வேண்டிப் போராடிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் உள்ளிட்ட விடுதலை இயக்கங்களையும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தன.

ஆனால் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் 2001 இல் விடுதலைப் புலிகள் ஒருதலைப் பட்ச போர் நிறுதத்தத்தை அறிவித்துப் பின்னர் 2002 நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சையும் ஆரம்பித்தனர்.

இருந்தாலும் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டது. வலதுசாரித்  தலைவர்கள் தங்கள் நாடுகளின் தேசியவாதக் கொள்கைகளை வலுப்படுத்தப் போரடிய விடுதலை இயக்கங்களின் அரசியல் கோரிக்கைகளையும் பயங்கரவாதமாகச் சித்தரித்து இலங்கை போன்ற உள்ளக மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நாடுகளின் அரசுகளின் இனவாத முகங்களுக்கு ஜனநாயகச் சாயம் பூசினர்.

spacer.png

இவ்வாறு தேசியவாதம் என்ற போர்வைக்குள் நின்று கொண்டு செயற்பட்ட காரணிகளினாலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வலதுசாரி தலைவர்கள்,  2010 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் பொருளாதார வளர்ச்சியைத்   தவறிவிட்டனர். இது குறித்து அமொிக்கப் பொக்ஸ் தொலைக்காட்சி சமீபத்தில் விமர்சன நிகழ்ச்ச்சி ஒன்றை நடத்தியிருந்தது.

பொருளாதாரத்தை வலுப்படுத்த செல்வந்தர்களுக்கு ஆதரவாக வலதுசாரி அரசாங்கங்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இப் பின்னணியில்தான்  வலதுசாரிகளின் தேசியவாத கொள்கைகள் மக்களிடம் வலுவிழந்தன.

ரசிய – உக்ரெயன் போரச் சூழலில், பணவீக்கம், வறுமை போன்றவை தற்போது உலகளவில் பெரும் பிரச்சினையாக அவதானிக்கப்படுகின்றது. உலகில் பண வீக்கம் குறித்து சர்வதேச நாணய நிதியம் சென்ற வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 2010 இல் இருந்து 2022 வரையான  பொருளாதார வீழ்ச்சிகளை இந்த அறிக்கை சுட்டிக்காடடியுள்ளது.

இந்த நிலையில், வறுமையை நிச்சயம் ஒழிப்போம் என்ற தொனியில்; இடதுசாரிகள் தென் அமெரிக்க நாடுகளில் ஆட்சிகளைக் கைப்பற்றி வருகின்றமை அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தாக்கத்தைச் செலுத்தலாம்.

ரசிய – உக்ரெய்ன் போரினால் உலகம் முழுவதும் பொருளாதாரச் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மீட்டெடுப்பதற்கான தீவிரமான முயற்சி இடதுசாரி தலைவர்களுக்கு அவசியமாகின்றது என்ற கருத்து தற்போது உலக அளவில் பேச ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை மீட்சி பெறச் செய்யும் முயற்சியிலும் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டிய தேவையிருந்தது. இதனாலேயே அங்கு இடதுசாரிகள் தொடர் வெற்றிகளைக் கண்டு வருகின்றனர்.

ஆனால் இடதுசாரிகளின் இந்த வெற்றி தென் அமெரிக்காவுடன் நிற்கப் போகிறதா அல்லது உலகம் முழுவதும் பரவப் போகிறதா என்பதைத் தற்போதைக்குக் கூற முடியாது.

இடதுசாரிகள் தென் அமெரிக்க நாடுகளில் அடைந்துவரும் வெற்றி தேசியவாத நலனை முன்வைக்கும் கட்சிகளுக்குத் தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் இலங்கைத்தீவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தித் தற்போது ஓய்ந்திருக்கும் இடதுசாரிகள் மீண்டும் ஒன்றினைந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்குரிய வாய்ப்புகள் இல்லை.

ஏனெனில் இலங்கைத்தீவின் இடதுசாரிச் செயற்பாடுகள் என்பது வலதுசாரிகள் கையாளுகின்ற சிங்கள இனவாத உத்தியை ஒத்தது.

பொருளாதார நெருக்கடி அதன் மூலமான வறுமை, இனச் சமத்துவமற்ற தன்மை, தொழிலாளர் பிரச்சினைகள் போன்றவற்றை இலங்கை இடதுசாரிகள் கையில் எடுத்துக் கடந்த சில மாதங்களாகப் போராடினர். பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவுடன் தொழிற் சங்கங்களையும் இணைந்துப் போராட்டம் நடத்தியிருந்தனர்.

ஆனால் இலங்கைத்தீவில் எழுபது வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இன நெருக்கடிக்குரிய அரசியல் தீர்வாக அவர்களிடம் உறுதியான திட்டம் இல்லை. வெறுமனே சோசலிச சமத்துவம் என்ற கோசத்தை மாத்திரம் முன்வைக்கின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் அதிகாரங்களைப் பங்கிட வேண்டும் என்பதில் இந்த இடதுசாரிகளுக்கு உட்னபாடுகள் இல்லை. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற அங்கீகாரத்தை நிராகரித்து ”இலங்கையர்கள்” என்ற பொது அடையாளத்துடன் சோசலிச சமத்துவம் என்பதை மாத்திரமே இடதுசாரிகள் முன்னிலைப்படுத்துகின்றனர்.

இதன் பின்னணில் இந்த இடதுசாரிகளினால் நடத்தப்படும் போராட்டங்கள் தென் அமெரிக்காவில் ஏற்படுத்திய மாற்றங்களைப் போன்று இலங்கைத்தீவிலும் இடதுசாரிகளால் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையாண்ட சில உத்திகளினால் தற்போது இடதுசாரிகள் நடத்திய தொடர் போராட்டமும் ஓய்வடைந்துள்ளது. அல்லது நிறுத்தப்பட்டுள்ளது எனலாம்.

வேறு காரணங்களை முன்வைத்து இடதுசாரிகள் மீண்டும் ரணிலுக்கு எதிராகப் போராடினாலும், அந்தப் போராட்டங்களின் மூலம் எதிர்த்தரப்பில் உள்ள வலதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்புகளே அதிகம்.

அப்படி எதிர்க்கட்சிகள் குறிப்பாக சஜித் அணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் அந்த ஆட்சியில் போராட்டம் நடத்திய இடதுசாரிகள் பங்களிப்புச் செய்யும் நிலை வரலாம்.

இலங்கைத்தீவின் வரலாற்றில் இடதுசாரிகள் வலதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு ஏதே ஒருவகையில் ஒத்துழைப்புச் செய்து பின்னர் அந்த ஆட்சியில் பங்கெடுத்துமுள்ளனர்.

உதாரணமாகத் தம்மை இடதுசாரி என்று கூறும் ஜே.வி.பி சந்திரிகாவின் ஆட்சியில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தது.

2009 வரை போருக்கு ஒத்துழைத்து ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை முற்றாக நீக்கம் செய்யும் நோக்கில் ஜே.வி.பியுடன் இணைந்து ஏனைய இடதுசாரிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. தீவிர இடதுசாரியான வாசுதேவ நாணயக்கார மகிந்த  அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்துப் போருக்கு ஒத்துழைத்திருந்தார்.

இப் பின்புலத்திலேதான், ரணிலுக்கு எதிராக இந்த இடதுசாரிகள் கடந்த சில மாதங்களாக நடத்திய போராட்டங்களில் வடக்குக் கிழக்குத் தாயக மக்கள் பெருமளவில் பங்கெடுக்கவில்லை.

சிங்கள இடதுசாரிகள் உண்மையான மாற்றுக் கொள்கை குறிப்பாக இலங்கை ஒற்றையாட்சி என்ற அரச கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தால் தமிழ்த்தரப்பு ஒன்றினைந்து போராடக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.

வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக இராணுவ ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் விகாரைகள், புத்தா் சிலைகள், தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களைத் திட்டமிட்டு அழிக்கும் செயல் எனத் தொிந்தும், சிங்கள இடதுசாரிகள் இதுவரையும் அதற்கு எதிராகப் போராட முன்வரவில்லை.

ரணிலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இடதுசாரிகள், கொழும்பை மையப்படுத்திய பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரி கடந்த மாதம் யாழ்ப்பாணம். மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்கச் சென்று உரையாடியிருந்தனர்.

அப்போது தமது தரப்பு நியாயத்தைக் குறிப்பாக எழுபது வருட அரசியல் விடுதலைப் போராட்டம் பற்றி யாழ் பல்கலைக்கழக, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர்.

தமிழ்த்தேசியக் கட்சிகளும் எடுத்தக் கூறியிருந்தன. ஆனாலும் இன்றுவரை பௌத்த மயமாக்கலுக்கு எதிராகக் குரல் கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. ஏனெனில் இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் அதிகார மாற்றங்களைச் செய்யவோ, தமிழர்கள் தேசிய இனம் என்பதை அங்கீகரிப்பதிலோ அவர்களுக்கு உடன்பாடு இல்லை.

 

http://www.samakalam.com/சிங்கள-இடதுசாரிகளும்-பௌத/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.