Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத்பாபு மறைவு: "தமிழில் அதிக படங்களில் நடித்தாலும் விருதைகளை குவிக்காத நடிகர்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சரத்பாபு
 
படக்குறிப்பு,

சரத்பாபு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் கடந்த 50 வருடங்களாக நடித்து வந்த மூத்த நடிகர் சரத் பாபு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.

தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்பட உலகில் அவர் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார்.

ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பல வாரங்களாக சரத் பாபு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் முழுவதும் செப்சிஸ் மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்சிஸ் என்பது நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உடல் சேதமடையும் போது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுக்கு எதிர்வினையாற்றும் ஒரு அபாயகர மருத்துவ நிலை ஆகும்.

திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரத்பாபுவின் உடலை சென்னைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

சரத்பாபுவின் வீடு சென்னை தியாகராயா நகரில் உள்ளது. அவரது குடும்பத்தினர் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஹைராதாபாதில் தங்கி சரத் பாபுவின் உடல்நிலையை கவனித்து வந்ததால், அவரது சென்னை வீடு பூட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சரத் பாபுவின் உடலை சென்னை கொண்டு வந்து இறுதி நிகழ்வை நடத்தும் ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். சென்னை வீட்டை தூய்மைப்படுத்தி இறுதி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய நேரம் ஆகும் என்பதால், வேறு ஏதேனும் பொது இடத்தில் உடலை வைத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்வது குறித்து அவரது குடும்பத்தினர் பரிசீலித்து வருவதாக சரத்பாபு குடும்பத்துக்கு நெருக்கமான நடிகை சுஹாசினி தெரிவித்தார்.

வதந்தியை உண்மையாக்கிய மரணம்

சரத்பாபு

சரத் பாபு செப்சிஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், அடுத்த சில தினங்களில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிறகு அவர் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இந்த வதந்தியை உண்மை என நம்பி தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் பல ஊடகங்கள் சரத்பாபு இறந்து விட்டார் என்ற தகவலை வெளியிட்டன.

திரைப்பிரபலங்கள் பலரும் சரத்பாபுவுக்கு இரங்கல் தெரிவித்து விட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் தலையிட்டு "சமூக ஊடகங்களிலும் சில ஊடகங்களிலும் சரத்பாபுவின் உடல்நிலை பற்றி வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை. அவரது உடல்நிலை தேறி வருகிறது," என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் சரத்பாபு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 3ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஐஏஜி மருத்துவமனையில் சரத்பாபு இறந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தாவிட்டாலும், சரத் பாபு குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள பல நடிகர்களும் நேரடியாக நிலைமையை அறிந்து ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினர்.

இந்திய தென் மாநில மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய படங்களில் சரத்பாபு நடித்திருந்தாலும் அவர் அதிகமாக நடித்த படங்கள் தமிழ் மொழியில்தான்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி, ரஜினிகாந்த், கமல் ஆகியோருடன் இணை நாயகனாகவும் (செகண்ட் ஹீரோ) சமீபத்தில் தயாரிக்கப்பட்டு வரும் வசந்தமுல்லை தமிழ் திரைப்படம் வரை சுமார் இருநூறு படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

1973ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு படமான ராமராஜ்ஜியம் தான் சரத்பாபுவுக்கு திரையுலகில் அறிமுகத்தைக் கொடுத்தது. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அமையாவிட்டாலும் அவரது தந்தை நடத்தி வந்த ஹோட்டல் தொழிலை கவனித்து வந்தார் சரத்.

ஆனால், அவரது திரையுலக கனவு அவரை விட்டுச் செல்லாததால், 1976இல் ராஜா என்ற படத்தில் வழக்கறிஞர் ராமு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்துக்கு பிறகு சரத்பாபுவுக்கு அவரது திரையுலகில் ஏறுமுகம் காணப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டில் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் அவர் நடிக்கத் தொடங்கினார்.

சரத்பாபு

அந்த வகையில் சரத்பாபுவுக்கு தமிழில் அறிமுகம் கொடுத்தவர் மறைந்த இயக்குநர் கே. பாலசந்தர். 1977இல் கே.பி இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட 'பட்டினப்பிரவேசம்' என்ற திரைப்பட சரத்பாபுவின் நடிப்புத்திறமைக்கு சான்று கூறியது.

இதைத்தொடர்ந்து நிழல் நிஜமாகிறது என்ற தமது அடுத்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு இணையான இரண்டாம் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தார் சரத்.

முன்னதாக, சரத்பாபுவை ஹைதராபாதில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்த கே.பாலசந்தர், அங்கேயே அவரை வைத்து ஃபோட்டோ ஷூட் நடத்தி தமது புதிய படத்துக்கு தேர்வு செய்தார்.

திரை வாழ்வுக்கு வந்த அடுத்த ஆண்டிலேயே சரத்பாபுவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன. அதன் விளைவாக 1978ஆம் ஆண்டில் மட்டும் அவர் ஒரு தெலுங்கு படத்திலும் ஏழு தமிழ் படங்களிலும் நடித்தார். அதில் குறிப்பிடத்தக்க படங்கள் நிழல் நிஜமாகிறது, உயிருள்ளவரை, முள்ளும் மலரும்.

இதில் முள்ளும் மலரும் படத்தை இயக்கிய மகேந்திரன் அந்த படத்தை 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடச் செய்தார். இத்தனைக்கும் இதுதான் இயக்குநர் மகேந்திரனின் முதல் படமும் கூட. அதிலும் உமாசந்திரனின் நாவலை படமாக்கிய முன்முயற்சியை அவர் திரையுலகில் தொடங்கி வைத்த தருணம் அது.

திரையுலகில் இந்த படம், அந்தக்காலத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் படமாக கருதப்பட்டது. நடிகர் ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருதையும் சிறந்த படத்துக்கான விருதையும் முள்ளும் மலரும் பெற்றுக் கொடுத்தது. நடிகர் ரஜினியின் வாழ்விலும் இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த படம், ஆதரவற்ற குடும்பத்தில் அண்ணன், தங்கைகளாக நடிகர் ரஜினியும் நடிகை ஷோபாவும் காளி, வள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ரஜினியின் மேலதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்பாபுவுடன் காளி எப்போதும் மோதிக் கொள்ளும் வகையில் படம் அமைந்திருக்கும். இந்த படத்தில் சரத்பாபு பாடுவது போல அமைந்திருக்கும் 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் உன் மீது மோதுதம்மா' என்ற பாடல் தான் சரத் பாபுவை தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் இன்றும் அவரை நீங்காத நாயகராக வைத்திருக்கிறது.

இளையராஜாவின் இசை, இயல்பான காட்சி அமைப்பு, கதாபாத்திரத்துடன் ஒன்றிய சரத்பாபுவின் நடிப்பு போன்றவை இந்த படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தன. ஆரம்பத்தில் இரு கதாநாயகர்கள் உள்ள படங்களில் மட்டுமே நடிக் ஒப்பந்தம் ஆன சரத்பாபு, அடுத்தடுத்த படங்களில் தனி நாயகராகவும் நடிக்கத் தொடங்கினார்.

ரஜினி சரத்பாபு

ரஜினியுடன் 1992இல் நடித்த அண்ணாமலை, 1995இல் முத்து போன்றவை சரத்பாபு இணைய நாயகனாக நடித்த படங்களில் முத்தாய்ப்பானவை. இதன் பிறகு அவருடன் நடித்த முன்னணி கதாநாயகர்களான கமல், ரஜினி போன்றோர் தொடர்ந்து கதாநாயகர்களாகவே வலம் வர, சரத்பாபு, கதாநாயகர் நிலையில் இருந்து தந்தை வேடம், நண்பர், அதிகாரி போன்ற கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் திரையுலக வாழ்வை விட்டு நீங்க முடியாதவராக விளங்கிய சரத்பாபு, சமீபத்தில் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் வெளிவந்த நடிகர் ஆர்யா நடித்த வசந்த முல்லை, தெலுங்கு படமான மல்லி பெல்லி ஆகியவற்றில் கூட துணை நடிகராக நடித்திருந்தார்.

சரத்பாபு, வெள்ளித்திரையில் துவண்ட காலங்களில் அவருக்கு கைகொடுத்தது தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடர்கள், 1980களின் கடைசியில் சிலந்தி வலை, நரேந்திரனின் விநோத வழக்கு, 1990களில் பெண், இவளா என் மனைவி, எத்தனை மனிதர்கள், 2003இல் ராஜ் டிவியில் ஒளிபரப்பான ரெக்கை கட்டிய மனசு, 2013இல் சன் டிவியில் ஒளிபரப்பான ராஜகுமாரி போன்ற நெடுந்தொடர்கள் சரத்பாபுவை சின்னத்திரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன.

சரத்பாபுவின் திரை பயணத்தில் அவருக்கு 2017ஆம் ஆண்டில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, தெலுங்கு திரையுலகில் சிறந்த துணை நடிகருக்கான விருது 1987, 1988, 1989ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/c0xdl6625xyo

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளித் திரையிலும் சின்னத் திரையிலும் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்தவர்.......!

ஆழ்ந்த இரங்கல்கள்.......!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். நூல்வேலியில் சரிதாவுடன் நடித்திருப்பார். அருமையான படம். சிறந்த நடிகர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரத்பாபு: "கடைசிவரை பார்க்க முடியாமல் போனதே" - உருகும் குஷ்பு, சத்யராஜ்

சதய்ராஜ் குஷ்பு
 
படக்குறிப்பு,

குஷ்பூ, சத்யராஜ்

21 நிமிடங்களுக்கு முன்னர்

தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகரான சரத் பாபு, நேற்று மதியம் 1.32 மணிக்கு காலமான நிலையில், இன்று அவரது உடலுக்கு இன்று நடிகர் ரஜினி காந்த், சூர்யா, கார்த்தி, பாக்யராஜ், பார்த்திபன், சுஹாசினி, சரத் குமார் உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், பொதுமக்களும் சென்னையில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த நடிகர் சரத் பாபு 1973ஆம் ஆண்டில் ராமராஜ்ஜியம் எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் தடம் பதித்தார். இயக்குநர் பாலச்சந்தர் நடிகர் சரத் பாபுவை பட்டினப் பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முள்ளும் மலரும், சலங்கை ஒலி, அண்ணாமலை, முத்து உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

திரையுலகினர் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வரும் வேளையில், நடிகை குஷ்பூ சரத் பாபுவின் மறைவினைப் பற்றியும், அவரது நினைவலைகளையும் பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்டார்.

“ நானும், நடிகர் சரத் பாபுவும் “சின்ன கிருஷ்ணடு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் 1986இல் ஒன்றாக நடித்தோம். சரத் பாபு எனக்கு உற்ற துணையாகவும் ஒரு மூத்த சகோதரனாகவும் தான் படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொண்டார். அவர் என்னுடன் இருப்பது பாதுகாப்பான உணர்வைத் தரும். மிகவும் நல்ல மனிதர். எவருடைய மனது புண்படும்படியோ பிறரை காயம்படுத்தும் விதத்திலோ அவர் நடந்து கொள்ள மாட்டார். நான் அவரிடம் இப்போது நெருக்கமாக இல்லாவிட்டாலும் எனது உடல்நலனை பேணக்கூடியவராக எப்போதும் இருந்தார் என்பதை நான் அறிவேன். மயில் சாமி, மனோபாலா, இப்போது சரத் பாபு என மூத்த நடிகர்கள் ஒவ்வொருவராக மண்ணை விட்டு செல்கிறார்கள். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவதொரு நாளில் இவ்வுலகை விட்டு செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் அனைவரும் இத்தனை சீக்கிரமாக பிரிவார்கள் என நினைக்கும் போது தான் மனது வலிக்கிறது,”என்று குஷ்பு கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

மேலும் அவர், "நான் எனது அரசியல் பணிகள் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் சரத் பாபு மறைவுச் செய்தியை கேட்டபோது உடனடியாக அவரை பார்க்க என்னால் செல்ல முடியவில்லை. இன்று மாலையில் அவரது வீட்டிற்கு சென்றேன். ஆனால் அதற்குள் அவரது உடல் இறுதி சடங்குகள் முடிந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்று கூறி உருக்கமாக தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

நடிகர் சத்யராஜ் மறைந்த நடிகர் சரத் பாபு பற்றி பேசும்போது, “சிவாஜி ஃபிலிம்ஸின் தயாரிப்பில் “சந்திப்பு” என்ற திரைப்படத்தில், சிவாஜி, பிரபு, சரத் பாபு அனைவரும் இணைந்து நடித்த நாட்களை மறக்க முடியாது. சரத் பாபு என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது அவரது அதிர்ந்து பேசாத பண்பு தான். நானும், சரத் பாபுவும் நடிக்க வந்த காலகட்டம் அது. சரத் பாபுவின் உடல் வாகு, நிறம், முடி என அனைத்தையும் பார்த்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன். நான் அவரை எப்போதும் இந்தி நடிகர் தர்மேந்திராவுடன் ஒப்பிட்டு, தமிழ் சினிமாவின் தர்மேந்திரா சரத் பாபு என அழைப்பேன்,” என்றார்.

சரத் பாபுவுடன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றையும் சத்யராஜ் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

'சந்திப்பு' திரைப்படத்தில் சிவாஜி, பிரபு, சரத் பாபு உள்ளிட்டோர் கதைப்படி நல்லவர்களாகவும், நான் கெட்டவனாக, வில்லனாக நடித்தேன். சரத் பாபு பொதுவாகவே தனது படங்களில் நடனமாட மாட்டர். ஆனால், அந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்பு சரத்பாபு நடனமாடுவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது அவரிடம், நான் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, என்னைப் பார்த்தீர்களா கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வில்லனாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் நடனமாடி துன்பப்படுகிறீர்கள் என கிண்டலாக பேசினேன்,” என்றார்.

"சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் தகவல் வருவதற்கு முன்பே நான் வேரொரு படப்பிடிப்பிற்காக மும்பை சென்று கொண்டிருந்தேன். அதனால் அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரது மறைவுச் செய்தியால் அதிர்ச்சியடைந்து போய் இருக்கிறேன்,” என்றார் சத்யராஜ்.

https://www.bbc.com/tamil/articles/c9rxvd3v60lo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.