Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 01

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் மிகச்சில! அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வழித்தடத்தில் விட்டுச்சென்ற செய்திகள் சிந்தனைக்குரியன. 

75 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாற்றின் பெரும்பகுதியை, இனமுரண்பாடு நிறைத்திருப்பது தற்செயலானதல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையிலேயே இனமுரண்பாட்டுக்கான வித்துகள் இருந்தன. 

மகாவம்சம் என்ற புனைவு வரலாறாகக் கருக்கொண்டதும், அதன் வழிப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையும் இதன் தொடக்கப் புள்ளிகள். 19ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதிகளில் ‘கொச்சிக்கடை கலவரம்’ எனப்படும் பௌத்த-கத்தோலிக்க மோதலும் 1915இல் நடந்தேறிய சிங்கள (பௌத்த) - முஸ்லிம் கலவரங்களும் இலங்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மைத் தேசியவாதம் சகிப்புத் தன்மையற்றது என்பதையும் இனத்தை விட மதம், அரசியலில் முக்கிய பங்கு வகித்ததை நாம் உணரலாம். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இலங்கை தேசிய காங்கிரஸில் ஏற்பட்ட முரண்பாடுகள், சுதந்திர இலங்கையில் பன்மைத்துவ சமத்துவ சமூகம் என்பது சவால் நிறைந்தது என்பதைக் காட்டி நின்றது. 

சுதந்திர இலங்கையின் முதலாவது அபிவிருத்தித் திட்டங்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மையப்படுத்தி இருந்தன. மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பு, ஜனநாயகப் படுகொலையின் தொடக்கத்துக்குக் கட்டியம் கூறியது. 

இந்தப் பின்புலங்களில், சுதந்திரமடைந்து 35 ஆண்டுகளின் பின்னர், 1983 இல் நடந்தேறிய இனக்கலவரம், இலங்கையை முழுமையாகத் திருப்பிப்போட்டது.  ‘ஆடிக்கலவரம்’, ‘ஜூலைக் கலவரம்’ எனப் பலவாறு இது அழைக்கப்படுகிறது. இந்தக் கொடுநிகழ்வை, ‘கலவரம்’ என்று சுட்டுவதே தவறானது. ஆனால், வரலாற்றில் அது அவ்வாறு தான் அழைக்கப்பட்டு, பொதுப்புத்தி மனநிலையில் ஒரு கலவரவமாகவே நிலைபெற்றுள்ளது. 

இதன் பின்னாலுள்ள அரசியலும் வரலாறும் கவனிப்புக்கு உள்ளாகவில்லை. இக்கொடூரம் நடந்தேறி இவ்வாண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 40 ஆண்டுகால வரலாற்றை இணைக்கின்ற ஒரு பொது இழை, இனமுரண்பாடு ஆகும். 

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் இனமுரண்பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கவியலாது. 

இன்றைய நெருக்கடியை, வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை என்ற ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முடியாது. ஆனால், அதை அவ்வாறு பார்க்கவே அரசாங்கமும் அதிகாரவர்க்கமும் விரும்புகிறது. கதையாடல்கள் அதன் வழிப்பட்டே அமைக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் தேசியவாத எழுச்சியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், வர்க்கப் பரிமாணத்தையும் ஒடுக்கப்பட்டோரின் பார்வையில் வரலாறு சொல்லப்படாமையையும் அவதானிக்கலாம். இது தற்செயலானதல்ல; வரலாறு என்பது வெறுமனே நிகழ்வுகளின் பதிவு அல்ல. அதில் எது பதியப்படுகிறது, எது விடுபடுகிறது, எது திரித்தோ மாற்றியோ எழுதப்படுகிறது என்பன எல்லாம் அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையவை. 

நமக்குச் சொல்லப்படுகிறவை உண்மைகளா, பொய்களா என்பது ஒரு புறமிருக்க, அவை ஏன் குறிப்பிட்ட விதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்தும் சொல்லப்பட்டு வருகின்றன என்றும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். 

எழுதப்பட்ட வரலாறு குறிப்பிட்ட சில வர்க்க நலன்களால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளது. சமூக விடுதலைக்கான போராட்டம் தவிர்க்க முடியாமலே வரலாற்றையும் விடுவிக்கிற ஒரு போராட்டமாகவும் அமைய நேருகிறது. 

நாம் விரும்புகிற மனித சமத்துவமுள்ள ஒரு சமூகத்தை அடைய வேண்டுமாயின், சமூக மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்தன? அந்த மாற்றங்களின் பின்னாலிருந்த இயங்கு சக்திகள் எவை? அவற்றை இயலுமாக்கிய சூழ்நிலைகள் எவை என்ற உண்மைகளின் அடிப்படைக் கூறுகளை, எழுதப்பட்ட வரலாற்றுக்குள் இருந்து வடிகட்டி எடுக்க வேண்டிய தேவை நமக்குள்ளது. வரலாற்றுத் திரிப்பும் மறைப்பும் நலன்களைப் பேணும் முக்கிய கருவிகளாக உள்ளன. 

இனங்களுக்கு இடையிலான பகைமையாக வரலாறு சித்திரிக்கப்படுகிற போது, உண்மையாகவே சமூக முரண்பாடுகளின் வேராக இருந்து வந்துள்ள அடிப்படையான சமூகப் பிரிவுகள், அதாவது சமூக ஏற்றத்தாழ்வுகளை அடையாளப்படுத்துகிற பிரிவுகள் மறைக்கப்படுகின்றன. இந்தப் பின்புலத்திலேயே இத்தொடர் 1983இல் நடந்தேறிய திட்டமிட்ட வெறிச்செயலின் பின்னணி, அதை சாத்தியமாக்கிய காரணிகள், அது ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றை நோக்க விளைகிறது. 

எல்லாவற்றிலும் மேலாக, இலங்கையர்களாக நாம் இந்தக் கொடுஞ்செயலில் இருந்து கற்றுக் கொள்ளாத பாடங்கள் எவை? சிறுபான்மைச் சமூகங்கள் இன்னமும் மோசமான குறுந்தேசியவாத அரசியலின் வழிப்பட்டு சீரழிவதற்கான அடிப்படைகள் எவை? ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் மேலும் ஒடுக்கப்படுவதையும் அதற்கு சிறுபான்மைத் தேசியவாதங்களின் முக்கியமான பங்கு யாது ஆகிய கேள்விகளையும் ஆழ நோக்க விளைகிறது. 

சமூகத்தில் ஆழ வேரூன்றிய பண்பாட்டு வேர்களைக் களைவதில் நேரடியாகக் குறுக்கிடுவதால் வரக்கூடிய எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டே இலங்கையின் கொலனிய நிர்வாகம் பௌத்த, சைவ மறுமலர்ச்சி இயக்கங்களுக்குத் தடையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. 

கொலனியத்தைத் தூக்கி எறியாமல், சமூக அடையாளங்களையும் நலன்களையும் வற்புறுத்துகிற நோக்கிலேயே பௌத்த, சைவ, இஸ்லாமிய மீளெழுச்சிகள் நிகழ்ந்தன. இவற்றிடையே குறிப்பிடத் தக்க ஒற்றுமைகள் இருப்பினும் முக்கியமான வேறுபாடுகளும் இருந்தன. இது பேசப்பட வேண்டியதொன்று. 

அதைப்போலவே, இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதி வரை சிங்களவரிடையே சாதி அடிப்படையிலான அரசியல் போட்டி இருந்த போதும், தமிழ்-சிங்களவர் என்ற அடிப்படையிலான முரண்பாடு முன்னணிக்கு வரவில்லை. இனத்தை விட, மதம் அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. சாதியும் மதமும் மொழியை விட முக்கியமான அடையாளங்களாகச் செயற்பட்டன. 

தமிழர் - சிங்களவர் என்ற மொழிவழி வேறுபாட்டின் அடிப்படையில் அரசியல் விருத்தி பெறாமைக்கான காரணம், எந்த விதமான பண்பாட்டு ஒற்றுமைகளையும் விட மேலாக, அந்த இரு அடையாளங்களுக்கும் உட்பட்ட மேட்டுக் குடிகளுக்கும் ஓரளவு வசதி படைத்த பகுதியினருக்கும் இடையே போட்டிக்குரியதாகப் பொதுவாக எதுவுமே இல்லாமை என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிங்கள கொவிகம, தமிழ் வேளாள மேட்டுக் குடிகளிடையே வலுவான நல்லுறவு இருந்தது. இது இன்றுவரை பேசப்படாமல் தவிர்க்கப்படுகின்ற ஒன்று! 

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் தேசிய அரசியல் உருவாக்கத்தில் பங்களிக்கக் கூடியவர்களாகத் தமிழரும் சிங்களவருமே முன்னிலையில் நின்றனர். எனினும் வர்க்கமும் சாதியும் அவர்களிடையில் இருந்த உறவைத் தீர்மானித்தன என்பதை,  கொலனிய ஆட்சியின் கீழான சீர்திருத்தங்களின் பின்னர் தெளிவாகவே காண இயலுமாயிற்று. 

கொலனிய ஆட்சியின் கீழ் கொலனிய எசமானர்களின் தயவில் ஆட்சி அதிகாரங்களில் சிறியதொரு பங்கு பெற்ற சில குடும்பங்கள், தொடர்ந்தும் ஆதிக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கையை விரிவுபடுத்துகிற சூழ்நிலை ஏற்பட்ட போது, அவ்விரிவாக்கத்தில் சாதியும் வர்க்கமும் முக்கிய பங்கு வகித்தன. 

ஏன் அவை முன்னின்றன? அதற்கான காரணம் என்ன? இது எவ்வாறு இலங்கை இனமுரண்பாட்டில் சாதாரண உழைக்கும் மக்களைப் பாதித்தது என்ற வினா விரிவான ஆய்வுக்கு உட்பட்டதில்லை.

இவற்றைத் தவிர்த்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையையோ அதைப் புதிய திசைவழிக்கு இட்டுச்சென்ற 1983 வன்செயல்களையோ நோக்கவியலாது. இவ்வன்செயல்கள் தவிர்த்திருக்கக் கூடியவை; ஆனால், அதை அரசாங்கம் விரும்பவில்லை. 

இந்நிகழ்வு, இலங்கையின் அயலுறவுகளில் பாரிய மாற்றங்களை உண்டுபண்ணியது. மேற்குலகக் கவனம், தமிழர்களுக்கு ஆதரவானது என்ற மாயை வலுப்பட்டதன் கொடிய விளைவுகளை, முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஆயுதப்போராட்டம் தெட்டத் தெளிவாகக் காட்டியது. 

ஆனால், இன்று அந்தக் கொடிய நினைவுகளின் 14 ஆண்டுகளின் பின்னரும் மேற்குலகின் மீதான மாயை இன்னும் வலுவாகவுள்ளது; இது வருந்தத்தக்கது. தமிழ்ச் சமூகம், இந்த கையறு நிலைக்கு ஏன் வந்தது? இதற்கு வெறுமனே சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத அகங்காரம் மட்டுமே காரணமா? 

இது கவனமாகவும், பொறுப்புணர்வுடன், சுயவிமர்சனத்துடனும் தமிழ்ச் சமூகம் கேட்கவேண்டிய கேள்வி. இக்கேள்வியை அமைதியாகக் கடந்துபோவது, கொல்லப்பட்ட மக்களுக்கும் விடுதலைக்காக உயிர்நீர்த்தோருக்கும் இழைக்கும் அநீதி. 

சிங்கள-பௌத்த பேரினவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்? இதில் நமது தலைமைகளின் பங்கென்ன? இன்னமும் தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு என்று புதிய கதைகளோடு தொடரப்போகிறோமா?

 உடல்களின் மீது அரசியல் செய்வது புதிதல்ல. அதைத் தொடக்கி வைத்ததும் 1983 தான். நாம் கற்காத பாடங்களையே கடந்த 40 ஆண்டுகால வரலாறு காட்டி நிற்கிறது என்பதே பெருந்துயர். 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கை-இனமுரண்பாட்டின்-திருப்புமுனை/91-317786

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருநாள் செய்த வினை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 02:

தமிழ் மக்கள் மீதான இனவன்முறை, 1983இல் நடந்தேறியபோது அதை ஒரு தனித்த நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. அது நீண்டகாலமாகத் தொடர்ந்துவந்த நெருக்கடிகளின் விளைவாக, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்செயல் ஆகும். 

இந்த இனவன்முறையை வரன்முறையாக ஆராய்வதற்கான சூழல் என்றுமே இருந்ததில்லை. தமிழ்த் தேசியவாத உணர்ச்சிகர அரசியலின் முக்கிய புள்ளியான இந்நிகழ்வு, விசாரணைக்கோ விமர்சனத்துக்கோ உரியதாக என்றுமே இருந்ததில்லை. 

இதை ஒரே நாளில் நிகழ்ந்த வன்செயலாகக் காண்பது எல்லோருக்கும் வசதியானது. ஒருபுறம் இதைத் தற்செயலானது என்று சிங்களத் தேசியவாதம் கட்டமைக்கையில், அதற்கெதிராக ஒரு குறுந்தேசிய பார்வையுடன் தமிழ்த் தேசியவாதம் நோக்கியது.

“கடவுள் தான் இனித் தமிழரைக் காப்பாற்ற வேண்டும்” என்ற கையறுநிலை அறிவிப்போடு சேடம் இழுத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய தலைமைகளுக்கு, ‘ஆபத்பாண்டவன்’ போல நிகழ்ந்ததே இந்த வன்செயல். 

இலங்கை இனப்பிரச்சினையின் இரண்டு வரலாற்று நிகழ்வின் நடுகற்களாக 1956இல் தனிச்சிங்களச் சட்டமும் 1983 இனவன்முறையும் தமிழ்த் தேசியவாதத்தால் தொடர்ந்தும் சொல்லப்பட்டன; இன்றும் சொல்லப்படுகின்றன. ஆனால், இதன் தொடக்கங்கள் அதற்கு மிகவும் முந்தியன. ஆனால், அவை பேசப்படுவதில்லை. ஏனெனில் பழக்கப்பட்ட கதைகளும் கதையாடல்களும் பழைய புண்ணைச் சொறிவது போல சுகமானவை.  

கறுப்பு ஜூலையை விளங்க வேண்டுமாயின், இனமுரண்பாட்டின் தொடக்கங்களை விளங்கிக் கொள்வது அடிப்படையானது. அதைத் தவிர்த்துவிட்டு, ஒரு முழுமையான பார்வையை நாம் வந்தடைய முடியாது. இனமுரண்பாட்டின் அறிகுறிகள் 19ஆம் நூற்றாண்டிலேயே தென்பட்டன. இதை விளங்கிக் கொள்ள, 19ஆம் நூற்றாண்டின் இரண்டு அம்சங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். முதலாவது, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே சிங்களப் பேரினவாதம், யாரை யாருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்று அறிந்திருந்தது. அது ஒரு சிறுபான்மையினரை, இன்னொன்றுக்கு எதிராகப் பயன்படுத்த இயலும் என்பதில் உறுதியாகவிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகள் இதற்கு சான்றாகின்றன. 

இரண்டாவது, இந்தியத் துணைக் கண்டத்தில் பிரித்தானியக் கொலனியாதிக்கத்துக்கு எதிராக வீறுகொண்ட போராட்டங்கள், 19ஆம் நூற்றாண்டு எங்கும் நடைபெற்றன. 1857இல் நடந்த ‘சிப்பாய் கலகம்’ இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 

இலங்கையில் நிலைமைகள் மிகவும் வேறுபட்டதாக இருந்தன. பிரித்தானியர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் சிலர் இருந்தபோதும், அடிப்படையில் கொலனி ஆதிக்கவாதிகளுடனான சமரசமே மையமாக இருந்தது. ஆனால், அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியோர், தேசியவாத நோக்கங்களுக்காகக் கொண்டாடப்படுகிறார். அதனூடு கொலனி ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு வலுவான போராட்டம், இலங்கையில் நடந்தது என்ற கட்டுக்கதை நிலைபெற்றுள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல! 

1815இல் கண்டி இராச்சியம் வீழ்ந்ததும், முழு நாடும் பிரித்தானியர் வசமானது. அதைத் தொடர்ந்த தோட்டப் பயிர்ச் செய்கையின் வளர்ச்சியும் அதன் வெற்றியும் பொருளாதார ரீதியான வளமான ஒன்றாக இலங்கையை மாற்றியது. இம்மாற்றம் சமூகரீதியாகவும் பிரதிபலித்தது. ஒருபுறம் தேயிலை, இறப்பர் தோட்டங்களின் பெருக்கம் மலையகத்தில் இருந்த உள்ளூர் விவசாயிகளைப் பாதித்தது. அது ஒரு கிளர்ச்சியாக வளரா வண்ணம், உள்ளூர் நிலவுடமையாளர்கள் பார்த்துக் கொண்டனர். இந்திய அனுபங்கள், கொலனியாதிக்கவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருந்தது. பொருளாதார விருத்தியும் ஏற்றுமதி பொருளாதாரத்தின் வலிமையும் பொருளாதாரம் சார் மத்தியதர வர்க்கம் ஒன்று உருவாக வழிவகுத்தது. 

இதேவேளை, கிறிஸ்தவ மத நிறுவனங்களின் வருகை, மதஞ்சார் இடைநிலை வர்க்கம் ஒன்று உருவாகப் பங்களித்தது. இவை இரண்டும் இணைந்ததாக பிரித்தானியர்களுக்குச் சேவகம் செய்கின்ற கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்ற அல்லது அம்மதத்துடன் தொடர்புடையவர்களே அதிகாரப் படிநிலையில் மேலாதிக்கம் அடையத் தொடங்கினார்கள். இவர்களே காலப்போக்கில் இலங்கை அரசியலின் முக்கிய தலைமைகளாக உருவெடுத்தார்கள். 

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சட்ட நிர்ணய சபைக்கு அதிகார பூர்வமற்ற உறுப்பினர்களாக இலங்கையர் நியமிக்கப்பட்டனர். இவை பிரித்தானிய கொலனியாதிக்கத்தின் ‘நன்மதிப்பை’ப் பெற்றோருக்கே வழங்கப்பட்டது. இப்பதவிகள் உயர்வர்க்க சிங்கள கொவிகம, தமிழ் வேளாள, பறங்கிய மேட்டுக்குடியினருக்கே கிடைத்தன. முஸ்லிம்கள் எவருக்கும் வழங்கப்படவில்லை. 

இப்பதவிக்கு சிங்களவர்களிடையே போட்டி நிலவியது. கொவிகம மேட்டுக்குடிகளுடன் சிறுபான்மையினராக இருந்த கராவே சமூகத்தினர் போட்டியிட்டனர். பண வசதி படைத்த வணிகர்களும் புதிய முதலாளிமாரும் மட்டுமன்றி கல்வித் தகுதி பெற்றோரையும் கராவே சமூகம் கூடுதலாகக் கொண்டிருந்தமையால் இப்போட்டி நிலவியது. 

ஆனால், பிரித்தானியருடன் கொவிகம மேட்டுக்குடியினர் செல்வாக்குடையவராக இருந்தனர். இதனால் கராவே சமூகத்தினரால் பதவிகளைப் பெற முடியவில்லை. இவ்விரு சமூகத்தினரும் பிரித்தானிய கொலனியாதிக்கவாதிகளுடன் இசைந்து பதவிகளைப் பெற முயன்றார்களே தவிர, கொலனியாதிக்கத்தை எதிர்க்கவில்லை.      
அதேவேளை தமிழரிடையே தனிப்பட்ட முறையில் போட்டி நிலவியது. அது சாதி அடிப்படையிலான போட்டியாக இருக்கவில்லை. மாறாக, வெள்ளாள உயர்குடியினிடையோன போட்டியாக இருந்தது. இவர்கள் எல்லோரும் பிரித்தானிய கொலனியாதிக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தனர். உயர்வர்க்க உறவு இனத்துவத்தைத் தாண்டி, இவர்களை இணைத்தது. 

சனத்தொகையில் மிகக்குறைவான இந்த உயர்வர்க்கத்தினர் பிரித்தானிய கொலனியாதிக்கத்தை தமக்கு வாய்ப்பானதாகக் கருதினர். சர்வசன வாக்குரிமையை எதிர்த்ததையும் முழுமையான சுதந்திரத்தை மறுத்ததையும் இதன் வழிப்பட்டே விளங்கிக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவ மதத்தின் வருகை, இலங்கையின் மத அரசியலில் முக்கிய திருப்புமுனையானது. கிறிஸ்தவத்தின் பரவுகையால் அச்சமடைந்த பௌத்தமும் சைவமும், கிறிஸ்தவத்துக்கு எதிரான தத்தமது மத மீளெழுச்சியை நோக்கி நகர்ந்தன. இவ்வாறு முனைப்படைந்த பௌத்த மீளெழுச்சியை பேராசிரியர் கணநாத் ஒபசேகர ‘புரட்டஸ்தாந்து பௌத்தம்’ என்று குறிக்கிறார். 

இந்த மீளெழுச்சிக்கு குறிப்பிட்ட மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், இம்மீளெழுச்சி கொலனியாதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தவில்லை. எனவே, அது கொலனியாதிக்கவாதிகளால் அனுமதிக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் இலங்கையின் சுதேசிய அரசியல் செல்நெறியின் மையமாக இனத்துவம் இருக்கவில்லை. மாறாக, சாதிய சமய அடிப்படையிலேயே அவை அமைந்தன. சமூகத்தில் அதிகாரத்தில் இருந்தோரும் அதிகாரத்துக்காகப் போட்டியிட்டோரும் மேட்டுக்குடியினராவார். அவர்களுக்கு மக்களின் ஆதரவு தேவைப்பட்டது. அந்த ஆதரவைத் திரட்டுவதற்கு, இனத்துவத்தை விட சாதி, சமய அடையாளங்களை முன்னிறுத்துவது பயனுள்ளது என்பதை அவர்கள் தெரிந்திருந்தனர். 

எனவே, அக்காலப்பகுதியில் தமிழர்-சிங்களவர் என்ற இனத்துவ வேறுபாடானது அரசியல் ரீதியாக வளர்ச்சி அடையவில்லை. தமிழ், சிங்கள மேட்டுக்குடியினரிடையே போட்டிக்குரியதாக எதுவும் இருக்கவில்லை. அதேவேளை, தம் உயர்குடி நலன்களைப் பாதுகாக்க வேண்டிய பொதுத்தேவை இருவருக்கும் இருந்தது. 

இதனால், சிங்கள கொவிகம, தமிழ் வேளாள மேட்டுக் குடிகளிடையே மிகவும் வலுவான நல்லுறவு இருந்தது. ஆனால், துரதிர்ஸ்டவசமாக இதே வகைப்பட்ட ஒற்றுமை, வர்க்கத்தாலும் சாதியாலும் தாழ்த்தப்பட்ட தமிழ் - சிங்கள மக்களிடையே உருவாகவில்லை. 

அதற்கான வாய்ப்புகள் இருபதாம் நூற்றாண்டில் துளிர்விடத் தொடங்கிய வேளை, இனத்துவம் முன்னிலைக்கு வந்திருந்தது. அது, இனத்துவத்தின் பேரால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணையாமலும் தொடர்ந்தும் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படுவதற்கும் வழிசெய்து, மேட்டுக்குடிகளின் நலன்களைக் காத்தது. 

ஒடுக்கப்பட்ட மக்கள் இனரீதியாகப் பிளவுற்றமையின் விளைவுகளை 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே காணக் கிடைத்தது. 1893இல் நடைபெற்ற அச்சுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், இலங்கையில் இடம்பெற்ற முதலாவது வேலை நிறுத்தமாகும். இவ்வேலை நிறுத்தம் ஆறே நாளில் தோற்கடிக்கப்பட்டது. 

இது இரண்டு விடயங்களை உறுதியாகச் சொன்னது. முதலாவது, மேட்டுக்குடியினரின் ஒற்றுமை வர்க்க நலன் சார்ந்தது, அதேயளவு பரந்துபட்ட ஒற்றுமை, ஒடுக்கப்பட்ட மக்களிடையே இல்லை. இரண்டாவது, இந்தியா போன்று ஒரு வீரம்மிக்க விடுதலைப் போராட்டத்துக்கான வாய்ப்புகள் இலங்கையில் இல்லை. 

19ஆம் நூற்றாண்டெங்கும் மேட்டுக்குடிகள் இடையேயான ஒற்றுமை, அதிகாரமும் வர்க்கமும் சார்ந்தாகவும் சாதிய மத அடிப்படையிலானதாகவும் இருந்தது. இக்காலப் பகுதியில் எழுச்சி பெற்று வந்த நிலவுடைமை முதலாளி வர்க்கம், தனது நலன்களைப் பேணுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தது. இதற்கு கொலனியாதிக்கத்துடனான நெருக்கம், தவிர்க்க இயலாததாக இருந்தது. 

மேட்டுக்குடிகளின் நெருக்கத்துக்கான போட்டியில் சாதி முக்கிய பங்கு வகித்தது. தென்னாசிய நிலவுடைமைச் சமுதாயத்தின் ஒரு முக்கியமான கூறாக இருந்து வந்த சாதி, தேசிய உணர்வின் விருத்திக்கும் தடையாகவே இருந்தது. 

சுதந்திரத்துக்கு முந்தைய தேசிய அரசியலில் சாதியின் பங்கு முக்கியமானது. பல வகைகளில் இனத்துவ உறவுகள் முரண்பாடானமையில் அதற்கும் பங்குண்டு.        
https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முன்பு-ஒருநாள்-செய்த-வினை/91-318287

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனமுரண்பாட்டின் தோற்றுவாயில் சாதியம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர்-03: 

இலங்கையின் இனமுரண்பாட்டைப் புதிய தளத்துக்கு நகர்த்தியதில் கறுப்பு ஜூலை வன்முறைகளுக்கு முக்கிய பங்குண்டு. இதைச் சரிவர விளங்க, இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் போராகவும் மாறிய வரலாற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும். 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை என்பது, மூன்று தசாப்தகாலம் நீடித்த ஒரு போர் என்ற குறுகிய பார்வையின் வழி வெளிப்படுகிறது. இவ்வுரையாடல்கள், பிரச்சினையையும் அதன் வரலாற்றையும் பற்றிய அகச்சார்பான விளக்கங்களாலும் குறுகிய குறிக்கோள்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளன. 

இனமுரண்பாட்டின் வேர்கள், அகச்சார்பான விளக்கங்களைக் கொண்டவை. இதற்குச் சிங்களப் பெருந்தேசியவாதமும் தமிழரின் குறுந்தேசியவாத நிலைப்பாடுகளும் பெரும் பங்களித்துள்ளன. இந்த விளக்கங்கள், இனக்குழுக்களினதும் தேசிய இனங்களினதும் அடையாளங்களின் உருவாக்கத்தில் சாதி, பிரதேசம், வர்க்கம் என்பனவற்றின் பங்களிப்பை, அடையாளம் காணுவதில் கவனம் குவிக்கத் தவறியுள்ளன. 

இலங்கையின் கொலனியாதிக்க கால அரசியல் வரலாற்றில், சாதி தவிர்க்கவியலாத பங்காற்றியுள்ளது. 1505 ஆம் ஆண்டு முதல் இலங்கை பகுதி பகுதியாக கொலனியாதிக்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டாலும், கண்டி இராச்சியம் 1815 வரை நிலைத்தது. இது, சிங்களவரிடையே கண்டி இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நிலவுடைமைத் தன்மை வாய்ந்த சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் சாதிய அடுக்குகள் இறுக்கமடைவதற்கும் வழிவகுத்தன. 

‘கோவிகம’ மேட்டுக்குடி சாதியினர் கொலனியாதிக்கத்துடன் நெருக்கமான உறவை வைத்திருந்தமையால், அவர்களால் பொருளாதார ரீதியில் மேல்நிலையில் இருக்க முடிந்தது. சாராயக் குத்தகை மூலம் பெருஞ்செல்வந்தர்களாக மாறிய ‘கராவ’ சமுகத்தினர் கல்வி, வியாபாரம் ஆகிய துறைகளில் தம்மை ஈடுபடுத்தி, வலிய அரசியல் சக்தியாக மாறினர். 

ஓல்லாந்தர் காலத்தில் செல்வாக்கு உள்ளவர்களாக இருந்து ‘சரிந்த சலாகம’ சாதி, கள்ளிறக்கும் தொழிலுடன் தம்மைத் தொடர்புபடுத்திய ‘துராவ’ சாதி ஆகியவற்றின் உயர் வர்க்கத்தினர் கல்வியறிவிலும் சிறுவணிகத்திலும் ஈடுபட்டு மேநிலையாக்கமடைந்தனர். இம்மூன்று சாதியினரும் ‘கொவிகம’ மேட்டுக்குடியினருடன் அரசியல் ரீதியாக போட்டியிட்டனர். இவர்களிடையே கடும் போட்டி நிலவியது. 

இவர்களுக்கிடையிலான அரசியல் போட்டி 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதி வரைத் தொடர்ந்தது. இந்த அரசியல் போட்டி இனத்துவ முரண்பாடு முழுமையாகத் தன்னை வெளிக்காட்டுவதைத் தாமதப்படுத்தியது. அதற்குக் காரணங்கள் பல உள்ளன. 

முதன்மையானது,  சிங்கள - தமிழ் உயர் சாதியினருக்கு இடையிலான நெருக்கம். அரசியல் ரீதியாக மிகுந்த செல்வாக்கும் கொலனியாதிக்கத்தின் நம்பிக்கைக்குரிய சேவகர்களாக இருந்த ‘கொவிகம’ மேட்டுக்குடியினருக்கும் யாழ். மைய ‘வேளாள’ மேட்டுக்குடியினருக்கும் இடையிலான நல்லுறவு, உயர்சாதிய உயர்வர்க்க உறவால் உருவாகி நிலைபெற்றது. 

இருபதாம் நூற்றாண்டின் முதற்கால் நூற்றாண்டுவரை சிங்களவர்-தமிழர் என்ற முரண்பாடு மேலெழாமைக்குச் இன்னும் சில காரணிகள் இருந்தன. இலங்கை விவசாய மையப் பொருளாதாரமாக இருந்தபோது, இரு சமூகங்களுக்கு இடையிலான விவசாயப் போட்டி இருக்கவில்லை. இருவரது பிரதேசங்களும் வேறு வேறானவையாக இருந்தன. விவசாய நிலத்துக்கான போட்டி இருக்கவில்லை. 

அதேவேளை, வர்த்தகத்தில் தமிழர்கள் எவ்வகையிலும் சிங்கள வணிகர்களுக்குப் போட்டியாக இருக்கவில்லை. அரசாங்க உத்தியோகத்தைப் பொறுத்தவரையில், சிங்களவர்களுக்குப் பெரும் நாட்டம் இருக்கவில்லை. தமிழரும் பறங்கியரும் ஆங்கிலம் கற்று, அரசாங்கப் பணிகளை நாடியளவு சிங்களவர்கள் நாடவில்லை. 

அதேவேளை, பணி வெற்றிடங்களுக்குப் பெருமளவு போட்டி இருக்கவில்லை. படித்த தமிழர்கள் பலர், வேறு பிரித்தானியக் கொலனிகளுக்கு வேலை தேடிச் சென்றார்கள். முதலாம் உலகப் போர் அதைத் தொடர்ந்த பொருளாதார மந்தநிலை என்பவற்றால் காலப்போக்கில் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைந்தன. இதனால், தமிழர்கள் இலங்கையில் அதிகளவான அரச உத்தியோகங்களை நாடினர். அப்போது தமிழர்களுக்கும் பறங்கியருக்கும் இடையே போட்டி நிலவியது. 

இந்தப் போட்டி என்பது, இவ்விரு சமூகங்களுக்கு இடையிலான போட்டியல்ல. மாறாக, இரு சமூகங்களிலும் உயர்குடியில் இருந்த கற்றோருக்கு இடையிலான போட்டியாகும். கல்விக்கும் சாதிக்கும் இடையிலான உறவு குறித்து, இவ்விடத்தில் இரண்டு விடயங்களை மனங்கொள்வது முக்கியம்.

வடக்கில் தமிழரிடையே வேளாளரது ஆதிக்கம், வெறுமனே நிலத்தின் மீதான ஆதிக்கமாக மட்டும் இருக்கவில்லை. சாதிப் படிநிலையின் அடிப்படையிலும், அதற்கும் மேலாக, பொருள் வசதியின் அடிப்படையில் சாதிப் பிரிவு ஒவ்வொன்றுக்குள்ளும், கல்வி, உத்தியோக வாய்ப்புகளை மறுக்கும் அதிகாரத்தையும் பேணி வந்தது. இதனால் தமிழ்ச் சமூகங்களில் கல்வி வாய்ப்புகள் வேளாள உயர்குடி அல்லாதோருக்கு மறுக்கப்பட்டன.

இந்த மறுப்பு, பல வடிவங்களில் நிகழ்ந்தது. வேளாள உயர்குடி மனோபாவம் சமூகத்தில் இருந்த ஏனையோரை பல்வேறு அடிப்படைகளில் வேறுபட்டவர்களாக நோக்கியது. வடபுலத்தில் வாழ்ந்து வந்த ரோமன் கத்தோலிக்கர்கள், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் மத அடிப்படையில் ‘நம்மவர் அல்ல’ என அறியப்பட்டனர். 

நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் வாழும் மட்டக்களப்பு தமிழர்கள், மேற்குக் கரையோர தமிழர்கள் ஆகியோர் புவியியல் அடிப்படையில் ‘மற்றவர்கள்’ எனப்பட்டனர். ஆழ்ந்து நோக்கின், இதன் அடிப்படையாக சாதியே இருந்தது. அதிகாரமும் கல்வி வாய்ப்புகளும் ஒருங்கே பெற்றிருந்த சைவ வேளாளர்கள், அதை ஏனைய சமூகங்களுக்கு மறுப்பதை தொடர்ச்சியாக உறுதி செய்து வந்ததார்கள். 

சிங்கள சமூகத்தில் பிரதான ஆதிக்க சாதிக்களுக்கு வெளியே இருந்த சாதியினர் ஒடுக்குமுறைக்கு ஆளாகினார்கள். கண்டி இராச்சியத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்த ‘பத்கம’ போன்ற சமூகங்கள், சுதந்திரத்துக்குப் பின்பும் அதே படிநிலையிலேயே இருந்தனர். 

அதைப்போலவே இருந்த ‘வகுபம்புர’ சமூகத்தினரும் சிறுவணிகத்தின் உதவியுடன் சிறிது மேல்நிலையை அடைந்தனர். இவ்வாறு முன்னேற்றமடைந்த சமூத்தினருக்கு கல்வி, உயர்தொழில் வாய்ப்புகளை சிங்கள உயர்குடியினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்த விடயத்தில், சிங்கள - தமிழ் சாதிய ஒடுக்குமுறை, ஒரே வகைப்பட்டதாக இருந்தாலும் முக்கியமானதொரு வேறுபாடு இருந்தது. 

சிங்களவர்களிடையே ‘சாதித்தடிப்பு’ மிகவும் அதிகமாக இருந்த கண்டிய சிங்களப் பகுதிகளில் கூட, யாழ். குடாநாட்டில் நடைமுறையில் இருந்தளவு மிகக் கொடுமையான தீண்டாமைகளோ, பாகுபாடுகளோ நிலவவில்லை.      

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தச் சாதிய வேறுபாடுகள் தமிழ் - சிங்கள சமூகங்களுக்கு உள்ளும் சமூகங்களுக்கு இடையிலும் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கத் தொடங்கின. ஒருபுறம் சமூகங்களுக்குள் முரண்பாடுகள் வலுத்தன. 

சாதிய அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள், கல்வியின் உதவியுடனும் வணிகத்தின் உதவியுடனும் மெதுவாக சமூகப் படிநிலைகளில் மேலேறத் தொடங்கினர். இது அதிகாரத்தில் இருந்த உயர்சாதிய மேட்டுக்குடிகளுக்கு சவாலானது. 

வடபுலத்தில் கிறிஸ்தவ மிசனரிகளின் வருகை யாழ். சமூக அசைவியக்கத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. கல்வியும் மருத்துவமும் உயர்சாதியினருக்கு என்ற நிலையில், மாற்றம் ஏற்படத் தொடங்கியது. 

இதேவேளை, 1896இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுருட்டுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், வடபுலத்தில் அதிகாரத்துக்கு எதிரான முதலாவது ஒருங்கிணைந்த குரலாக ஒலித்தது. சிங்கள சமூகத்தில் கல்விக்கான வாய்ப்புகள் திறந்தன. பௌத்த மீளெழுச்சியை சாத்தியப்படுத்த, சாதியம் கடந்த இயக்கத்தின் தேவை உணரப்பட்டது. அதேவேளை, பிரித்தானிய கொலனிய ஆட்சியில் தங்களுக்கான அதிகாரப் போட்டி நிலவியது.  சாதி அடிப்படையிலும் கண்டிச் சிங்களவர் - கரையோரச் சிங்களவர் என்ற அடிப்படையிலும் சிங்களவர்கள் தங்களுக்குள் முரண்பட்டனர். 

மறுபுறம், இரு சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தோற்றம் பெறத் தொடங்கின.  அதிகாரத்துக்கான போட்டி அடுத்த கட்டத்தை அடைந்த நிலையில், சிங்கள - தமிழ் உயர்குடி வர்க்கத்தினரிடையே மறைமுகமான ஒரு போட்டி நிலவியது. இந்தப் போட்டி அரசியல் அதிகாரம் பற்றியதாக இருந்தது. 

இவ்விருவகைப்பட்ட நெருக்கடிகளும் உயர்சாதி மேட்டுக்குடிகளை நெருக்கடிக்குள் தள்ளின. இந்நெருக்கடிகளை தத்தமது சமூகங்களுக்குள் தீர்த்துக் கொள்வதற்கும் தமது மேநிலையாக்கத்தைக் தக்கவைத்துக் கொள்ளவும் சிங்கள-தமிழ் உயர்குடிகள் புதிய வழிகளைத் தேடினர். தத்தமது இனக்குழுக்களின் முழுமையான ஆதரவைத் திரட்டுவது அவசியம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 

இந்தப் பின்புலத்தில் இனத்துவ மையப்பட்ட தேசியவாதம் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், தத்தமது அக முரண்பாடுகளைக் கையாள்வதற்கு மதமே பொருத்தமான கருவி என்று அவர்கள் கருதினர். 

யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மிசனரிகளின் வருகை மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்த நிலையில், கிறிஸ்தவத்திற்கு எதிரான சைவசமய மீளெழுச்சியை தங்களது ஆயுதமாக்கினர். சிங்கள சமூகத்தில் சாதியம் கடந்த பௌத்தத்தை நோக்கிய நகர்வைத் தடுக்கும் வகையில், பௌத்த சமய மீளெழுச்சியை சிங்கள உயர்குடியினர் கையக்கப்படுத்தினர். அதிகாரத்தைத் தக்கவைக்கும் எதிர்ப்புகளை அடக்கும் வழிமுறையாக மதம் பயன்படுத்தப்பட்டது.  
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனமுரண்பாட்டின்-தோற்றுவாயில்-சாதியம்/91-318682

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமூக அசைவியக்கத்தில் மதமும் முரண்பாடுகளும்

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 04:

இலங்கை அரசியலில் மதத்துக்கு முக்கிய பங்குண்டு. அரசியலமைப்பின் வழி, பௌத்தத்துக்கு பிரதான இடம் வழங்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, மதம் முக்கியமான ஒன்றாகிவிட்டது. 

19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில், மத அடையாளம் பிற அடையாளங்களை மேவி, முன்னிலைக்கு வரத் தொடங்கியது. சிங்கள அடையாளம் என்பது, அடிப்படையில் மொழி ரீதியானது. ஆனால், இவ்வடையாளம் மெதுமெதுவாக சிங்கள - பௌத்த அடையாளமாக மாறத் தொடங்கியது. அதற்கு கிறிஸ்தவத்தின் செல்வாக்கும் கிறிஸ்தவ மிசனரிகளின் வருகையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின. 

இலங்கையில் கொலனியாதிக்கம், மெதுமெதுவாக பல்வேறு சமூக மாற்றங்களுக்குப் பங்களித்தது. குறிப்பாக, மதம் சார்ந்த மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை. 

கிறிஸ்தவ மதத்தின் வருகையும் மிசனரிகளின் வருகையும் மதமாற்றத்தையும் கிறிஸ்தவ நிறுவனமயமாக்கலையும் சாத்தியமாக்கின. அதேவேளை, சில விதிவிலக்குகளையும் நோக்குதல் வேண்டும். 

குறிப்பாக, சிங்கள சமூகத்தில் இருக்கின்ற ‘கராவே’, ‘சலாகம’ எனும் இரண்டு சாதியினரும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தென்இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பது நிறுவப்பட்டுள்ளது. 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தாரால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட ‘சலாகம’ சமூகத்தினர், சிங்களத்தை மொழியாகவும் பௌத்தத்தை மதமாகவும் ஏற்றனர். இவ்வாறு, ஏனைய பல சிங்கள, தமிழ் சமூகங்களிலும் பல அயல் குடியமர்வுகள், கொலனியாதிக்கத்தின் விளைவால் நிகழ்ந்துள்ளன; இவை பேசப்படுவதில்லை. 

கண்டி இராச்சியம் கைப்பற்றப்படும்வரை, கொலனியாதிக்கம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் மிகவும் அழுத்தத்துடன் செயற்பட்டது. இது, இடைநிலைச் சாதிகளை உருவாக்கப் பங்களித்தது பற்றி இத்தொடரின் முன் அத்தியாயங்களில் பார்த்தோம். 

கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய பின்னர், அதை இலகுவாக ஆட்சிசெய்வதற்கு பௌத்த பீடங்களின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால், பௌத்த மதத்துக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டன. 

அதேவேளை, மதத்தை மையமாகக் கொண்டு, சமூக முரண்பாடுகள் தோற்றம் பெறத் தொடங்கின. இதை அவதானித்த பிரித்தானிய கொலனி நிர்வாகம், மதம் என்ற விடயத்தில் நெகிழ்வுப் போக்குடன் செயற்பட முடிவு செய்தது. இது, பௌத்தம், சைவம் என்பவற்றின் மறுமலர்ச்சிக்கு வாய்ப்பானது. 

அதேவேளை, இந்த மறுமலர்ச்சியை முன்னெடுத்தவர்களிடம் இருந்த கொலனிய எதிர்ப்பு, கொலனியாதிக்கத்தை இலங்கையில் இருந்து வெளியேற்றுவது என்ற திசைவழியில் வளரவில்லை என்பதையும் பிரித்தானிய கொலனிய நிர்வாகம் நன்கறிந்திருந்தது. 

பிரித்தானிய கொலனியாதிக்க காலத்தில், தமிழ்நாட்டில் தமிழ் அடையாளம், தனித்துவம் பற்றிய அக்கறைக்கும் எழுச்சிக்கும் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு போப் போன்ற பல ஐரோப்பியர்கள் முக்கிய பங்காற்றினார்கள், அவ்வகைப்பட்டே, இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு அமெரிக்கரான கென்றி ஒல்க்கொட்டும் ரஷ்யரான ஹெலீனா பிளவாட்ஸ்கி அம்மையாரும் பிரதான பாத்திரத்தை வகித்தார்கள். 

image_0668764505.jpg

கென்றி ஒல்க்கொட்டும் வண. ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரோவும்

கிறிஸ்தவ மிசனரிகளின் செயற்பாடுகளில், கல்விக் கூடங்கள் அமைக்கப்பட்டமை சைவ, பௌத்த அடையாள அரசியலுக்கு மிகப்பெரிய சவாலானது. குறிப்பாக, சாதி ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் சைவ, பௌத்த மதங்களுக்கு முக்கிய பங்கிருந்தது. 

குறிப்பாக, 1824இல் உடுவிலில் ஆரம்பிக்கப்பட்ட விடுதியுடன் கூடிய பெண்கள் பாடசாலை, சமூகத்தில் நிலவிவந்த பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான முக்கியமான எதிர்வினையாக இருந்தது. உடுவில் மகளிர் கல்லூரி, ஆசியாவின் முதலாவது விடுதியுடன் கூடிய பெண்கள் பாடசாலை என்ற பெருமையைப் பெற்றது.  

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மிசனரிகள் மிகவும் முக்கியமான சமூகப் பணியைச் செய்தார்கள். இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, யாழ். குடாநாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் மிஷனரிகள், அங்கு செல்வாக்கு பெற்றிருந்ததால், தீவின் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான முதல் அமெரிக்க மிஷனரி, வணக்கத்துக்குரிய சாமுவேல் நியூவெல், 1813இல் மொரிஷியஸ் செல்லும் வழியில் தற்செயலாக காலியை வந்தடைந்தார். 

கிறிஸ்தவ மிஷனரிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள சாதிய அமைப்பை ‘இறைவழியில் இல்லை’ என்ற அடிப்படையில் நிராகரித்தனர். அச்சு இயந்திரம், புகைப்படக் கருவி, கட்டடக்கலை, தையல் இயந்திரம் ஆகிய தொழிற்புரட்சி இயந்திரங்கள் மிசனரிகளின் துணையால் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவில் அறிமுகமாகின. 

மிஷனரிகள், தமிழ்ப் பண்பாட்டுக்கும் சமூகத்துக்கும் வெவ்வேறு வழிகளில் பங்களித்தனர். வணக்கத்துக்குரிய மிரோன் வின்ஸ்லோ தமிழ்-ஆங்கில அகராதியை முதன்முதல் விரிவான முறையில் வெளியிட்டார். மானிப்பாய் மிஷன் மருத்துவமனையின் ஸ்தாபகரான டொக்டர் சாமுவேல் கிரீன், சுமார் 4,500 பக்கங்கள் கொண்ட ஆங்கில மருத்துவத்தின் முக்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.

கிறிஸ்தவ மிசனரிகள் மதத்தைப் பரப்பும் முக்கிய கருவியாக பாடசாலைளைப் பயன்படுத்தினார்கள். சாதிய ரீதியாக ஓரளவு நெகிழ்வுத் தன்மையோடு நடந்துகொண்டார்கள். இதனால் கல்வி ரீதியான முற்போக்கான சமூகத்துக்கான வாய்ப்புகள் உருவாகின.

இந்நிலையிலேயே, இதற்கு எதிர்வினையாக கல்வி நிலையங்களை உருவாக்குவதே, எமது மதத்தைக் காப்பதற்கான வழி என சைவ, பௌத்த மதநம்பிக்கையாளர்கள் நினைத்தார்கள். 

முன்னோடியாக, 1849இல் ஆறுமுக நாவலர் ஒரு சைவப் பாடசாலையை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். ஆனால், இதில் சாதிரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக,  கிறிஸ்தவத்துக்கு எதிரான பௌத்த மறுமலர்ச்சியின் செயற்பாடுகள் 1860களில் பௌத்த கல்வி நிலையங்களை உருவாக்குவதுடன் தொடங்கின. இதில், இன்று பல்கலைக்கழகங்களாக விரிவடைந்துள்ள வித்யோதய மற்றும் வித்தியாலங்கார பிரிவேனாக்கள் முதன்மையானவை. 

முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் எகிப்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்த அரபி பாஷா ஆவர். இவர், இலங்கையில் இருந்த 18 ஆண்டுகளில் (1883-1901) முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்கு முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சைவ, பௌத்த, இஸ்லாமிய மறுமலர்ச்சியை இலங்கையில் இருந்த பிரித்தானிய நிர்வாகம் சகித்துக் கொண்டது. ஏனெனில், இவை எதுவும் கொலனியாதிக்கத்தை அகற்றும் நோக்குடையதாக இருக்கவில்லை. 

மாறாக, தங்கள் மதச் சுதந்திரத்தையும் தத்தம் சமூகத்தில் தங்கள் உயர்நிலையை உறுதிப்படுத்துவதையும் மட்டுமே நோக்காகக் கொண்டிருந்தன. பெளத்த மறுமலர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் டேவிட் ஹேவாவித்தான என்ற இயற்பெயரைக் கொண்டவரும் கிறிஸ்தவ மிசனரிகளில் கல்வி கற்றவருமான அநகாரிக தர்மபால. இவர், கென்றி ஒல்க்கொட், பிளவாட்ஸ்கி அம்மையார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இறையியல் சங்கத்தில் உறுப்பினராகி, அவர்களால் வழிநடத்தப்பட்டார். காலப்போக்கில் அவர்களுடன் முரண்பட்டு, 1891இல் மகாபோதி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். 1893இல் சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்திய சிக்காகோ மாநாட்டில், அநகாரிக தர்மபால ‘கீழைத்தேய பௌத்தம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். 

image_83ea38be45.jpg

1893இல் சிக்காகோ மாநாட்டில், அநகாரிக தர்மபால கலந்துகொண்டிருந்தபோது... (இடது பக்கத்தில் வௌ்ளை உடையுடன் அநகாரிக அமர்ந்திருக்கின்றார்)

இலங்கையில் பௌத்தம் தொடர்பில் நன்கறியப்பட்ட ஒரு செயற்பாட்டாளராக அநகாரிக தர்மபால அறியப்பட்டபோதும், அவரால் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. சாதிய ரீதியாகப்  பிளவுற்றிருந்த சிங்கள-பௌத்த சமூகம் கண்டிச் சிங்களவர் - கரையோரச் சிங்களவர் என்றும் பிரிவுற்றிருந்தனர். 

கண்டி-கரையோர வேறுபாடு, சிங்கள சமூகத்தில் ஆழ வேரூன்றி இருந்தது. குறிப்பாக கரையோரம் போத்துகேயரின் காலம் தொட்டே கொலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. 1815இலே கண்டி கொலனியாதிக்கத்துக்கு உட்பட்டது. 

இந்த வேறுபாட்டின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு ஓர் உதாரணத்தைத் தருவது பொருத்தம். இலங்கையின் முதன்முறையாக சமஷ்டி என்ற எண்ணக்கருவை முன்மொழிந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, 1929இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “கண்டி, கரையோரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சிங்களவர்களுக்குத் தனித்தனியான அரசும், தமிழர்களுக்கு தனியான அரசும் சமஷ்டி அடிப்படையில் பகிரப்பட வேண்டும்” என்று கோரினார். 

சிங்கள சமூகத்தின் உள்முரண்பாடுகள் வெளிப்பட்ட இன்னொரு நிகழ்வு, 1895இல் அநகாரிக தர்மபாலவால் உருவாக்கப்பட்ட மதுவிலக்கு இயக்கமாகும். மக்களிடையே ஏற்பட்ட மதுவிலக்கு இயக்கக் கிளர்ச்சிகள், கொலனிய ஆட்சிக்கு எதிரானவை ஆகவும் சமூக நீதிக்கானவை ஆகவும் அமையவில்லை. 

மாறாக அவை, சிங்கள - பௌத்த கண்ணோட்டத்தில் மதத்தை மையப்படுத்திய ஓர் அரசியலை முன்னெடுத்தன. இவை இறுதியில் அநகாரிக தர்மபால முன்னெடுத்த சிங்கள - பௌத்த சிந்தனையை மட்டுமன்றி தர்மபாலவையும் நிராகரித்தது.  

இங்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, சிங்கள பேரினவாதத்தை அநகாரிக தர்மபாலவின் மரபு என்று அடையாளப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இரண்டாவது, சிங்கள - பௌத்தம் என்ற இனவாத அரசியல் போக்கின் தொடக்கப்புள்ளியாகவும் அடிப்படையாகவும் அநகாரிக தர்மபால இருக்கிறார் என்பது உறுதியானது. 

அவரது, ‘பௌத்த துவேசம்’ கிறிஸ்தவர்களுடன் நிற்கவில்லை. அதேயளவு துவேசத்தை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகவும் கக்கினார். இதன் முதல் துணை விளைவு கொச்சிக்கடை கலவரம் ஆகும்.    

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சமூக-அசைவியக்கத்தில்-மதமும்-முரண்பாடுகளும்/91-319306

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலவரப்படுத்தும் கலவரங்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 05

தமிழர்களின் மீது 1983இல் நடந்தேறிய இனவன்முறை, இலங்கை இனமுரண்பாட்டின் வரலாற்றில் முக்கியமானதொரு புள்ளி. 

இன்றுவரை அந்நிகழ்வு கலவரம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் அது 1983 riots, Anti-Tamil riots, ethnic riots  என்றவாறான பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. ஆய்வாளர்கள், வரலாற்றாசியர்கள், ஊடகத்துறையினர் என அனைவரும் இதை ஒரு கலவரம் என்றே அழைக்கிறார்கள். தமிழில் கூட, ‘83 கலவரம்’, ‘ஆடிக்கலவரம்’, ‘ஜூலைக் கலவரம்’ என்றே சொல்லப்படுகிறது. இது உண்மையில் தவறானது. 

1983இல் நடைபெற்றது தற்செயலான நிகழ்வு அல்ல. எழுந்தமானமாக மக்கள் கலவரத்தில் ஈடுபட்ட நிகழ்வல்ல. மாறாக, அது மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று. அது குறித்த விரிவான விடயங்களை இத்தொடரில் இனிவரும் பகுதிகளில் நோக்கலாம். 

கலவரம் என்கிற போது, திட்டமிடப்படாத, மக்களின் தன்னெழுச்சியான, அரசின் வகிபாகம் இல்லாத செயல் என்று பொருள் தரும். இந்தக் கதையாடலையே ஜே.ஆரும் அரசில் இருந்த மற்றையோரும் சிங்களக் கடும்போக்காளர்களும் விரும்பினர். ஏனெனில், இது அரசின் பொறுப்புக்கூற வேண்டிய தன்மையைக் குறைக்கிறது. அரசு, மக்கள் மீது பழியைப் போட்டு, தனது கைகளைக் கழுவிக் கொள்ள இது வாய்ப்பானது. துரதிர்ஷ்டவசமாக இந்தத் தீயநோக்கத்துக்கு நாம் பலியானோம்; இன்னும் பலியாகின்றோம். 

இதை உண்மையில் ஆங்கிலத்தில் Anti-Tamil pogrom  என்று அழைப்பதே சரியானது. இச்சொல்லாடலே இந்நிகழ்வுக்கான சரியான பொருளைத் தரவல்லது. Pogrom என்பது ஓர் இனக்குழு மீதான திட்டமிட்ட வன்முறையும் படுகொலைகளையும் குறிக்கும். வரலாற்றின் வழி நின்று நிகழ்வுகளைக் குறிக்கும் போது, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது நல்லதொரு சான்று. 

இலங்கையின், 1983 ஜூலை வன்செயலுக்கு முன்னர், அதற்கொரு நீண்ட வரலாறு உண்டு. குறிப்பாக 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகள், இலங்கையின் இருபதாம் நூற்றாண்டும் குறிப்பான இனத்துவ உறவுகளின் எதிர்காலமும் எப்படி இருக்கப் போகின்றது என்பதைக் காட்டி நின்றன. 

குறிப்பாக, இக்காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரங்கள் முக்கியமானவை. ஆனால், இவை கவனம் பெறவில்லை. 1815இல் கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சியோடு இலங்கை முழுமையாகப் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் போன பின்னர், 1818 ஊவா-வெல்லச கலகமும் 1848இல் இடம்பெற்ற மாத்தளைக் கலகமும் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளன. இவை இரண்டும் கிளர்ச்சிகளாகவும் எழுச்சிகளாகவும் கொள்ளப்படுகின்றன. 

ஆனால், 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்கள் குறித்துக் கவனம் கொள்ளப்படவில்லை. 1883இல் கொச்சிக்கடையில் இடம்பெற்ற பௌத்த-கத்தோலிக்க முரண்பாட்டின் விளைவான கலவரம் குறித்த சில குறிப்புகளுக்கு வெளியே, இலங்கையின் கலவரங்கள் குறித்த விரிவான குறிப்புகளோ, ஆய்வுகளோ இல்லை. 

1983 வன்செயல்களுக்கு ஒரு தொடக்கமும் தொடர்ச்சியும் இருக்கிறது. 1815இல் கண்டியின் வீழ்ச்சியின் எதிர்வினையாக பிரித்தானிய கொலனியாதிக்கத்துக்கு எதிராக 1818, 1848ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், 1915இல் முல்லிம்களுக்கு எதிரான கலவரம் எவ்வாறு சாத்தியமானது? பிரித்தானியரை எதிர்க்கும் மனநிலை இல்லாமலாகி, இலங்கையருக்கு உள்ளேயே முரண்படும் நிலை எவ்வாறு ஏற்பட்டது? இவை, இன்றுவரை இலங்கையின் இனமுரண்பாட்டை நோக்குவோர் ஆழமாகப் பார்க்கத் தவறியவையாகும்.

1818, 1848 கிளர்ச்சிகள் இன்றும் இலங்கை வரலாற்றின் தேசப்பற்றின் உச்ச நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்படுகின்றன. சிங்கள-பௌத்த உணர்வைத் தூண்டும் விதமாகவே, இந்தக் கிளர்ச்சிகள் பற்றிய கதைகள் தொடர்ந்து சொல்லப்படுகின்றன.

1818ஆம் ஆண்டு கிளர்ச்சியை ஆழ்ந்து நோக்கினால், அது மக்களின் முழுமையான ஆதரவுடன் நடைபெற்ற கிளர்ச்சியல்ல. மாறாக, 1815 கண்டிய மன்னனைக் காட்டிக்கொடுத்து, பிரத்தானிய கொலனியாதிக்கவாதிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், கண்டியின் ஆட்சியைக் கைப்பற்ற எண்ணியிருந்த பிரதானிகளின் எதிர்பார்ப்பில், கண்டிய உடன்படிக்கை மண்ணை போட்டது.

அந்தப் பிரதானிகளது செல்வாக்கு, மெதுமெதுவாக பிரித்தானியர் ஆட்சியில் தளரத் தொடங்கியது. பல பிரித்தானிய நடைமுறைகள் வர்க்க ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் வழக்கில் இருந்தவற்றை மாற்றத் தொடங்கியது. இதனால் ஒரு சமூக மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இது பிரதானிகளுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. 

அவர்கள் தங்களுக்கு கீழே உள்ள மக்களைத் திரட்டியே, இந்தக் கிளர்ச்சியை நடத்தினர். அதேவேளை, இந்தக் கலவரத்துக்கு உடனடிக் காரணமாகவும் மக்களைத் திரட்ட வாய்ப்பாகவும் அமைந்த நிகழ்வொன்று முக்கியமானது. 

1817 செப்டெம்பரில் பிரித்தானியர், ஹாஜி மரிக்கார் ட்ரவலா என்ற இஸ்லாமியரை வெலச பகுதிக்கு பிரதம அதிகாரியாக (முகாந்திரம்) நியமித்தனர். இப்பதவி கண்டிய பிரதானிகளுக்கு வழங்கப்படுவது. இந்நிலையில், இப்பதவியை ஓர் இஸ்லாமியருக்கு பிரித்தானியர் வழங்கி, பௌத்தத்தையும் சிங்களவர்களையும் அவமதித்து விட்டார்கள் என்ற கருத்து மக்களிடையே பரப்பப்பட்டு, இதன்வழியும் கிளர்ச்சிக்கு ஆதரவு திரட்டப்பட்டது. 

இந்தச் செய்தி முக்கியமானது. கண்டிய பிரதானிகளே இலங்கை முழுமையாக பிரித்தானியர் ஆட்சிக்கு உட்பட்ட பின்னர், தம்நலனுக்காக இனத்துவ வேறுபாடுகளைத் தோற்றுவித்தார்கள். இந்த விதைதான் 1983இல் விருட்சமாகி நின்றது. 

அதைப்போலவே, 1848ஆம் ஆண்டு கிளர்ச்சியானது, விவசாயிகளின் கிளர்ச்சியாக இருந்த போதும், இதில் நடைபெற்ற இரண்டு விடயங்கள் முக்கியமானவை. 

முதலாவது, 26 ஜூலை 1848இல் தம்புள்ள விகாரையில் தலைமைப் பிக்குவால், கொங்கலகொட பண்டா மன்னராக முடிசூடப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் பண்டா, “உண்மையான பௌத்தனாக என்னுடன் நிற்கப் போகிறீர்களா, அல்லது கிறிஸ்தவ பிரித்தானியர்களுடன் நிற்கப் போகிறீர்களா” என்று கேட்டதாகக் குறிப்புகள் உண்டு. 

இரண்டாவது, கிளர்ச்சி தோல்வியடைந்து பண்டா ஒளிந்திருந்த போது, அவனைத் தேடிக் கண்டுபிடித்தவர்கள் பிரித்தானியரிடம் கடமையாற்றிய மலாயப் படையணியாகும். எனவே சிங்களத் தேசியவாத எழுத்துகள், 1848 கிளர்ச்சிக்கு எதிராக, முஸ்லிம்கள் வேலை செய்தார்கள் என்றவொரு கதையாடலையும் பரப்பி வந்திருக்கின்றன. 

இதன் பின்னர், 1850களுக்குப் பிறகு 1915 வரை நடைபெற்ற கலவரங்கள் குறித்து இலங்கை வரலாறு கவனம் கொள்ளாதது தற்செயலானதல்ல. 

1866ஆம் ஆண்டு இலங்கையில் தானியக் கலவரம் ஒன்று நிகழ்ந்தது. இது குறித்து மிகவும் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. அரிசிப் பற்றாக்குறையின் காரணமாக இந்தக் கலவரம் நிகழ்ந்தது. அக்காலப்பகுதியில் இலங்கைக்குத் தேவையான அரிசி தென்னிந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 1866ஆம் ஆண்டு விளைச்சல் பாதிப்படைந்ததால் அரிசியின் விலை பலமடங்கு அதிகரித்தது. 

இந்நிலையில் 1866 ஒக்டோபர் 23ஆம் திகதி, கொழும்பின் செட்டியார் தெருவில் இருந்த அரிசிக் கடைகள் தாக்கப்பட்டன. இந்தக் கடைகள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்குச் சொந்தமானவை. அவர்களே இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து, மொத்த விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் திட்டமிட்டு விலையை ஏற்றுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, செட்டியார் தெருவில் இருந்த கடைகள் சூறையாடப்பட்டன. கடைகளில் இருந்த ஏனைய பொருட்களான பணம், நகை உள்ளிட்ட அனைத்தும் களவாடப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் இருந்த முஸ்லிம்களின் கடைகளும் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. சிங்களவர்கள் ஊர்ப் பகுதிகளில் இருந்தும் வந்து கொள்ளையிட்டனர். மறுநாள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் முஸ்லிம்களும் இணைந்து, இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கினார்கள். இதனால் கலவரம் கொழும்பில் கட்டுக்குள் வந்தது. 

ஆனால், சில நாள்களின் பின்னர், கடுவெல பகுதியில் முஸ்லிம்களின் அரிசிக் கடைகள், சிங்களவர்களால் சூறையாடப்பட்டன. இந்தக் கலவரம் இலங்கை வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களில் ஒன்றாகும்.

1870இல் மருதானையில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு கலவரம் இடம்பெற்றது. காதல் விவகாரம் கலவரமாகி, 1867இல் மருதானையில் உருவாக்கப்பட்ட பொலிஸ் தலைமை அலுவலகம், முஸ்லிம்களால் தாக்கப்படுமளவுக்கு நிலைமை மோசமடைந்தது. 

இதற்குக் காரணமான தனிநபர்களில் ஒருவர் சிங்களவர்; கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர். மற்றையவர் முஸ்லிமாக மதம் மாறிய தமிழர். இந்தக் கலவரத்தின் தொடர்ச்சியாகவே, இலங்கையில் 1870இல் குற்றப்புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டது. 

இதற்கு அடுத்தாக, 1883இல் மட்டக்களப்பில் ஒரு கலவரம் நடைபெற்றது. அங்குள்ள மீனவ சமூகத்துக்கும் கள்ளிறக்கும் சமூகத்துக்கும் இடையிலான சாதிச் சண்டை கலவரமானது. இதையும் இதே ஆண்டு நிகழ்ந்த கொச்சிக்கடைக் கலவரத்தையும் அடுத்த வாரம் நோக்குவோம்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கலவரப்படுத்தும்-கலவரங்கள்/91-319646

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (1883-1983)

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கறுப்பு ஜூலையின் நாற்பதாண்டுகளின் பின்னர் 06:

கறுப்பு ஜூலை இடம்பெறுவதற்கு சரியாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைத் தீவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தே, இந்தக் கட்டுரை நோக்குகிறது. 1883ஆம் ஆண்டு, இலங்கையில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. 

ஒன்று, கிழக்குக் கடற்கரையோரமும் இன்னொன்று மேற்குக் கடற்கரையை அண்டியும் அரங்கேறின. இவ்விரு நிகழ்வுகளும் 19ஆம் நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களில், இலங்கையின் முக்கியமான சமூக நெருக்கடிகள் குறித்த ஒரு சித்திரத்தைத் தருகின்றன. 

1883ஆம் ஆண்டு மட்டக்களப்பில், மீனவச் சமூகத்துக்கும் கள்ளிறக்கும் சமூகத்துக்கும் இடையிலான முரண்பாடு, சாதிச் சண்டையாக முற்றி, கலவரமாக உருவெடுத்தது. இது குறித்த விரிவான குறிப்புகளை ஏ.சி டெப் எழுதிய ‘சிலோன் பொலிஸின் வரலாறு’ என்ற நூல் தருகிறது. 

அக்குறிப்புகளின்படி, மட்டக்களப்பிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில், மீனவ சாதியினருக்கும் கள் இறக்குபவர்களுக்கும் இடையில், சாதிப் பிரச்சினை கலவரமானது. தங்களது உயர்சாதிக்கு ஒப்பாக, சாதி ரீதியில் குறைந்தவராகக் கருதப்பட்ட கள்ளிறக்கும் சாதியினர் உடைகளை அணியத் தொடங்கியதை, மீனவ சாதியினரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால் இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பாகத் தொடங்கி மோதல், கத்திச் சண்டையாகியது. 

இத்தகவலை அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து, பலரைக் கைது செய்தனர். இருந்தபோதும் மீனவ சமூகத்தினர் ஒன்று திரண்டு, கள்ளிறக்கும் சமூகத்தினரின் வீடுகளைத் தாக்கினர். வீடுகள் சூறையாடப்பட்டன; பல வீடுகள் எரிக்கப்பட்டன.

தங்களுடைய தகுதிக்கு ஒத்துப்போகவில்லை என்று உயர்சாதி அண்டை வீட்டுக்காரர்கள் கருதும் பாணியில், கள் இறக்குபவர்கள் உடை அணியத் தொடங்கியதை அடுத்து, கத்திகளுடன் கூடிய சண்டையாக தொடங்கியது. இதைத் தடுத்து நிறுத்திய பொலிஸார், பலரை கைது செய்தனர். 

பின்னர், மீனவர்கள் மீண்டும் திரண்டு வந்து, காவலில் இருந்த அவர்களைத் தாக்கியவர்களின் வீடுகளை தாக்கினர். அடுத்த நாளும், அவர்கள் ஒன்றுகூடி வீதிகளில் ஊர்வலம் நடத்தினர். ஆனால், எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் துர்நடத்தை கொண்டவர்கள், வீடுகளை சூறையாடுவதற்கும் எரிப்பதற்கும் வாய்ப்பைப் பயன்படுத்தினர். 

கொலனியாதிக்க காலத்திலும் சாதிய ஆதிக்கம் மேலோங்கிய சமூகமாகவே இலங்கையும் குறிப்பாகத்  தமிழ்ச் சமூகமும் இருந்தது என்பதை, இந்நிகழ்வு தெளிவாகக் காட்டுகின்றது. இனமுரண்பாடுகள் கூர்மையடைவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே, அகமுரண்பாடுகள் தீவிரமானதாகவே இலங்கையின் இனத்துவக் குழுக்கள் இருந்தன என்பதற்கான பல சான்றுகளில், மட்டக்களப்புக் கலவரம் ஓர் உதாரணம் மட்டுமே! 

1870களின் இறுதிப் பகுதிகளில், பௌத்த மறுமலர்ச்சி என்பது கிறிஸ்தவத்தை எதிர்ப்பதை நோக்காகக் கொண்டும் ‘சுதேசி’கள் என்ற கருத்தாக்கத்தோடும் விருத்தி பெற்றது. கிறிஸ்தவ வீடுகளுக்கு பக்கத்தில் ‘பிரித்’ ஓதும் நிகழ்வுகளை, புத்தபிக்குகள் தொடர்ச்சியாகச் செய்து வந்தனர். இதற்கெதிராக, நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட போதும், அதை மதியாது ‘பிரித்’ ஓதும் நிகழ்வுகள் நடந்தன. இதன் மூலம், ‘பௌத்தர்களே தேசப்பற்றாளர்கள்’ என்ற ஓர் எண்ணக்கரு பரவலாக்கப்பட்டது.

1881ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களை எரிச்சலூட்டும் நடவடிக்கையாக, பௌத்த ஊர்வலங்கள் தொடர்ச்சியாக ஒழுங்கு செய்யப்பட்டன. இது குறித்துப் புகார்கள் அளிக்கப்பட்ட போதும், கொலனி நிர்வாகம் பௌத்தர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பாமையால், நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. 

இது ஒருபுறம், பௌத்தர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. மறுபுறம், நிர்வாகத்தின் பாராமுகம் காரணமாக எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்ற முடிவை கிறிஸ்தவர்கள் எடுத்தார்கள். 

கொச்சிக்கடையில் (கொட்டாஞ்சேனை) புனித லூசியா தேவாலயம் 1779இல் கட்டப்பட்டது. இதற்கு மிக அண்மையிலேயே, பௌத்த விகாரை 1832இல் உருவாக்கப்பட்டது. இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாகச் செயற்பட ஆரம்பித்தன. 

1843இல் ‘மிகெட்டுவத்த உன்னான்சே’ என்று அழைக்கப்பட்ட மொஹொட்டிவத்தே குணானந்தா தேரர் இதன் விகாராதிபதியானார். இவர், மக்களைக் கவரும் பேச்சாளராகவும் மதக்குரோதத்தை கக்குவதன் மூலம் வெறுப்புணர்வைத் தூண்டுபவராகவும் இருந்தார். இதனால் ‘பௌத்த மதத்தின் காவலன்’ போல தன்னைக் காட்டிக்கொண்டார். 

கொச்சிக்கடைக் கலவரத்தை அடுத்து, இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சமர்பித்த அறிக்கையில், இவர் குறித்த ஒரு தகவல் முக்கியமானது. 
இவர், அமரபுர நிக்காயாவைச் சேர்ந்தவர். அமரபுர நிக்காய 1803ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்துக்கும் சிங்கள சாதியமைப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் நோக்கலாம். 

குணானந்தா தேரர், பௌத்த துறவியாகி பின்னர் காவியுடையைக் களைந்தவர். சாதாரண மனிதனாக வாழ்ந்துவிட்டு, பின்னர் மீண்டும் துறவறம் பூண்டவர். இதனால், இவர் தனக்கான அங்கிகாரத்துக்காக அதிதீவிர நிலைப்பாடுகளை எடுத்தார். விவாதங்களில் இவரது கீழ்த்தரமான மொழிப் பிரயோகங்களை, பிற மதத்தினர் மட்டுமன்றி இவரோடு நின்ற சகாக்களே கண்டித்துள்ளனர். ஆனால், இவருக்கு மக்களின் ஆதரவு இருந்தது. 

விகாராதிபதியான உடனேயே தனது செல்வாக்கை விரிவுபடுத்த, குறித்த விகாரையைப் விரிவுபடுத்தி, புனித லூசியா தேவாலயத்தை விடப் பெரியதாகவும் பிரம்மாண்டமானதாகவும் உருவாக்க விளைந்தார். பௌத்த தத்துவங்களை விட, பெரிய விகாரைகளை அமைப்பதும் விகாரைகளுக்கான காணிகளை வாங்குவதும் என இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சி என்பது, புத்தரது போதனைகளுக்கு அன்றி, லௌகீய விடயங்களை முக்கியப்படுத்தியது. இதனாலேயே, இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியை ‘புரட்டஸ்தாந்துப் பௌத்தம்’ என்று பேராசிரியர் கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகிறார்.    

தனது விகாரையைப் புதுப்பித்த குணானந்தா தேரர், அதை ஒரு திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டார். அதன்படி, ஏழு வாரங்கள் நீடிக்கும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டன. ஒவ்வொரு நாளும் ‘பிரித்’ ஓதுவது, 500 பிக்குகளை ஊர்வலமாக அழைத்து வருவது எனப் பல நிகழ்வுகள் இதில் அடங்கின. 

இதன் இறுதிநாளாக மார்ச் 31ஆம் திகதி மிகப்பெரிய பெரகரவுடன் நிறைவு செய்வது என்று முடிவாக, இதற்கான அனுமதியை கொலனிய நிர்வாகத்திடம் ஜனவரி மாதம் கோரப்பட்டது. 

பெப்ரவரி மாதம் நகரில் சின்னம்மை வேகமாகப் பரவுவதாக பிரதம மருத்துவ அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து நிகழ்வுகள் எதையும் நடத்த வேண்டாம் என அரசாங்கம் விகாராதிபதியிடம் சொல்லியது. குணானந்தா தேரர், மார்ச் 31 வரை எதுவித நிகழ்வுகளையும் நடத்துவதில்லை என பிரித்தானிய நிர்வாகத்திடம் உறுதியளித்தார். 

நகரில் சின்னம்மை பரவவில்லை. இது பௌத்தத்துக்கு எதிரான கிறிஸ்தவர்களின் திட்டமிட்ட சதி என்ற கட்டுக்கதையை மக்களிடம் பரப்பினார். திருவிழாவுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டார். விகாரைக்கான அன்பளிப்புகளையும் பெரகரவுக்கான பொருட்களையும் பக்தர்கள் தர வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் துண்டுப்பிரசுரங்கள், கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் விநியோகிக்கப்பட்டன. 

ஆனால், இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதற்கான அனுமதி பெறப்படாத நிலையிலேயே இவை நடந்தன. பெப்ரவரி மாத நடுப்பகுதி முதல், விகாரைக்குத் தினமும் பொருட்களைக் கொண்டு வரத் தொடங்கினார்கள். இந்நிகழ்வுகள், பௌத்தம் அரசுக்கும் அரசாங்கத்துக்கும் அப்பாற்பட்டதாக, உயர்வானதாக, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மேலானதாக தன்னைக் கட்டமைத்துக் கொண்ட வரலாற்றின் பகுதியாக நோக்கப்பட வேண்டும். 

தினமும் தேவாலயத்தைத் தாண்டி, பெருந்தொனியில் ‘பிரித்’ ஓதியபடியும் வாத்தியங்கள் முழங்கியபடியும் ஊர்வலங்கள் சென்றன; கிறிஸ்தவர்களை எரிச்சலடைய வைத்தன. இவை தங்களது புனித பாஸ்கு காலத்திலும் நடக்குமோ என்று அவர்கள் கவலை அடைந்தனர். குணானந்தா தேரர், கிறிஸ்தவர்களின் புனித பாஸ்கு தினங்களில் மிகப்பெரிய ஊர்வலங்களைத் திட்டமிட்டார்.  

மார்ச் மாதம் ஆறாம் திகதி, புனித லூசியா தேவாலயத்த்தின் மதகுருக்களில் ஒருவரான அருட்தந்தை மாசிலாமணி அடிகளார், பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பினார். ஆண்டுதோறும் தாங்கள் குருத்தோலை ஞாயிறு, பெரிய வெள்ளி, ஈஸ்டர் தினங்களில் ஊர்வலம் செல்வது வழக்கம். இம்முறை பௌத்தர்களும் அதே நாள்களில் ஊர்வலங்களைத் திட்டமிடுவதால், மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டார். 
முதலில் அனுமதி கோருபவர்களுக்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்படும் என பதில் அனுப்பப்பட்டது. 

மறுநாள், அருட்தந்தை மாசிலாமணி அடிகளார், ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். இக்காலப்பகுதியில், கொச்சிக்கடைப் பகுதியில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களாக இருந்தனர். 

கொச்சிக்கடையில் மத முரண்பாடு பிரதானமானதாக இருந்தபோதும், இதற்கு ஓர் இனத்துவ அடையாளம் பின்புலத்தில் இருந்தது. இது சிங்கள-பௌத்த எதிர் தமிழ்-கிறிஸ்தவர் என்ற பரிமாணத்தையும் கொண்டிருந்தது.  
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒரு-நூற்றாண்டுக்கு-முன்னர்-1883-1983/91-319840

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.