Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீளாச் செலவு வழுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீளாச் செலவு வழுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வும்

என்.கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக, அதாவது மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் பிடுங்கப்படாதவாறான முழுமையான அமல்ப்படுத்தல் வேண்டும் என்ற ரீதியில், முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முன்மொழிவு செய்துள்ளார். இந்தச் செய்திக்கு, பலவாறான எதிர்வினைகள் தமிழர்களிடம் எழுந்துள்ளன.  அதில் மேவி நிற்கும் எதிர்வினை, 13ஆம் திருத்தத்துக்காகவா, தமிழர்கள் இத்தனையை இழந்தார்கள் என்ற உணர்ச்சிவசப்பட்ட நிலையாகும். 

உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு அப்பால், பகுத்தறிந்து சிந்திப்பதுதான் அறிவார்ந்த செயலாகும். அதற்காக உணர்ச்சி வசப்படுதலே பிழை என்று அர்த்தமல்ல. உணர்ச்சிகள் இயல்பானவை. ஆனால், அன்றாட வாழ்வில் கூட, நாம் உணர்ச்சிகள் காட்டும் வழியிலேயே பயணிப்பதில்லையே! ஆனால், 13ஆம் திருத்தத்துக்காகவே தமிழர்கள் இத்தனையை இழந்தோம் என்ற உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினையில், உணர்வு சார்ந்த நியாயங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 

எதுவித திட்டங்களோ, அரசியல் நேர்மையோ இல்லாமல் இயலாமையின் வௌிப்பாடான உணர்வெழுச்சிப் பகட்டாரவாரமாக ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ கொண்டுவரப்பட்டு, அது சாத்தியமென ‘தளபதி’களால் மக்கள் நம்பவைக்கப்பட்டு, இளைஞர்கள் ஆயுதமெடுத்து, இன்று ஓர் இனம் நான்கு தசாப்தங்களைத் தொலைத்துவிட்டு, நிர்க்கதியாக நிற்கிறது என்று சொன்னால், அந்த நான்கு தசாப்தகால இழப்பிற்கு ஏதாவது நியாயம் வேண்டாமா என்ற சிந்தனையில், உணர்வுரீதியான நியாயங்கள் இல்லாமல் இல்லை.

‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ நமக்கானதொரு விடிவொன்றைத் தரும்; அதை  அடைந்துவிட முடியும் என்று நம்பவைக்கப்பட்ட எத்தனை இளைஞர்கள், தமது உயிரை தமது இனத்துக்காக ஆகுதியாக்கி இருக்கிறார்கள். அவர்களது தியாகத்துக்கு ஏதாவது நியாயம் வேண்டாமா என்ற சிந்தனையில், உணர்வுரீதியான நியாயங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், கடந்ததை எண்ணி, நிகழ்வதையும் நிகழப்போவதையும் மறந்துவிட முடியுமா என்பது, உணர்வுகளைத் தாண்டி அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய விடயம்.

மேற்சொன்ன இழப்புகளைப் பற்றியும், 13ஆம் திருத்தத்துக்காகவா தமிழர்கள் இத்தனையை இழந்தார்கள் என்ற கேள்வியைப் பற்றியும் யோசிக்கையில், பொருளியலில் பேசப்படும் ‘மீளாச் செலவு’ பற்றி சிந்திக்க வேண்டியதாகிறது. 

பேராசிரியர் கொலின் ட்ரூறி, மீளாச் செலவுகளை ‘கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவால் உருவாக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எந்த முடிவாலும் மாற்ற முடியாத செலவுகள்’ என்று வரையறுக்கிறார்.

பொருளியலில் மீளாச் செலவு என்பது ஏற்கெனவே ஏற்பட்டுள்ள மற்றும் திரும்பப் பெற முடியாத செலவைச் சுட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மீளாச் செலவு என்பது கடந்த காலத்தில் செலுத்தப்பட்ட தொகையாகும். இது எதிர்காலம் பற்றிய முடிவுகளுக்கு இனிப் பொருந்தாது. 

ஆனால், இது பகுத்தறிந்து யோசித்தால் மட்டும்தான் புலப்படும். இதனால்தான் பொதுவில் மக்கள் இந்த மீளாச்செலவை எதிர்கால முடிவுகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளும் தன்மையை நாம் அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது. இதனை மீளாச் செலவு வழு (sunk cost fallacy) என்று  குறிப்பிடுவார்கள்.

மீளாச் செலவு வழு என்றால், ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்ட வளங்கள், மீட்க முடியாதவை மற்றும் வீணடிக்கப்படக்கூடாது என்ற நம்பிக்கையில் இருந்து இந்த வழு எழுகிறது. இது பகுத்தறிவற்ற முடிவெடுக்க வழிவகுக்கிறது. 

இதற்கு ஓர் எளிமையான உதாரணம், ஒருவரோடு பத்துவருடம் வாழ்ந்துவிட்டோம் என்ற காரணத்துக்காகவே, ஒரு மோசமான உறவைத் தொடர்வது. இந்த உறவை விட்டுவிட்டால், கடந்த பத்து வருடங்கள் இந்த உறவுக்காக செலவளித்த காலம் வீணாகிவிடும் என்ற சிந்தனை. 

ஆனால், பகுத்தறிந்து யோசித்துப் பார்த்தால், செலவான பத்து வருடம் செலவானதுதான்; அதனை மீட்டெடுக்க முடியாது. பத்து வருடம் வீணாகிட்டது என்பதற்காக, இன்னொரு பத்து வருடத்தையோ, இருபது வருடத்தையோ வீணடிப்பது என்பது எவ்வளவு அபத்தமானது. இதுதான் மீளாச் செலவு வழு. இந்த மீளாச் செலவு வழு என்பது, பொருளியலில் மட்டுமல்ல, நாம் எமது அன்றாட வாழ்விலும் விடும் பெருந்தவறாகும். அரசியலிலும் நாம் அதனையே செய்து கொண்டிருக்கிறோம்.  

இன்றைக்கு தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல் ரீதியாகப் பாடுபடுவதை விட்டுவிட்டு, 30 வருடங்கள், ஒரு நோக்கத்துக்காக நிறைய இழந்திருக்கிறோம். அந்த இழப்புகளும் தியாகங்களும் வீணாகிவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக அரசியல் செய்வது என்பது வழுவானது; பகுத்தறிவுக்கு முரணாணது.

இனப்பிரச்சினை பற்றிப் பேசும்போது, மீளாச் செலவு வழுவானது, இனப்பிரச்சினையை நிலைநிறுத்துவதற்கும் மேலும் தீவிரப்படுத்துவதற்கும் கணிசமான பங்கை வகிக்க கூடியதொன்றாக அமைகிறது. இன மோதல்கள் பெரும்பாலும் வரலாற்றுக் குறைகள், ஆழமான வேரூன்றிய பகைமைகள் மற்றும் இரு தரப்பிலும் உள்ள உரிமை பறிபட்ட பாதிக்கப்பட்ட நிலை ஆகியவற்றிலிருந்து எழுகின்றன. 

இத்தகைய இன முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர், தமது அரசியல் அடைவுகளுக்காக கணிசமானவற்றை முதலீடு செய்திருக்கலாம். அதாவது இழந்த உயிர்கள், உட்கட்டமைப்பு இழப்பு, மற்றும் அவர்களின் காரணத்துக்கான உணர்ச்சிபூர்வமான இணைப்புகள் போன்ற உறுதியான மற்றும் அருவமான நிறைய விடயங்கள் தமது அரசியல் அடைவுகளுக்காகத்  தியாகம் செய்யப்பட்டிருக்கலாம். 

மீளாச் செலவு வழு என்பது முரண்பாடான தரப்பினரை தொடர்ந்து சண்டையிட அல்லது நல்லிணக்க முயற்சிகளை எதிர்க்க வழிவகுப்பதாக அமையும். ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே மோதலில் உயிர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க வளங்களை இழந்துள்ளனர். மோதலை கைவிடுவது அல்லது சமரசம் செய்வது அவர்களின் கடந்த கால தியாகங்களை அர்த்தமற்றதாக்கும் என்று அவர்கள் நம்பலாம்.  

இன மோதல்களில் ஈடுபட்டுள்ள கட்சிகள் மீளாச் செலவு வழுவின் காரணமாக தமது இறுதி நோக்கத்தைத் தவிர்ந்த வேறு சமரசத்தை எதிர்க்கலாம். சலுகைகள் அல்லது சமரசங்களை ஏற்றுக்கொள்வது தோல்வியை ஒப்புக்கொள்வது அல்லது முந்தைய இழப்புகளை வீணடிப்பது என்பதாக அவர்கள் உணரலாம். இதனால் அமைதியான தீர்மானங்களுக்கான சாத்தியக்கூறுகள் தடைபடும். 

மீளாச் செலவு வழு என்பது மோதலுடன் உணர்ச்சிப்பூர்வமான பற்றை உருவாக்கி, இழப்புகளிலிருந்து பெறப்பட்ட அடையாளம் மற்றும் அந்த இழப்புகளுக்கு காரணமான நோக்கத்தின் உணர்வை ஆழமாக்குகிறது. இந்த உணர்வுபூர்வமான பற்று, விட்டுக்கொடுப்புகளுக்கு அல்லது சமரசம் தொடர்பிலான ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

இந்த இடத்தில், தமிழ் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘மீளாச் செலவு வழு’ தமிழ் மக்களுக்கு மட்டும் உரியதல்ல. சிங்கள மக்களும் இதே மனநிலையில் இருக்கிறார்கள். எமது இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து தமது உயிரையும் உடலையும் தியாகம் செய்து யுத்தத்தை வென்றது, தமிழ் மக்களுக்கு சமஷ்டியை வழங்கத்தானா என்று அவர்களும் ‘மீளாச் செலவு வழு’ மனநிலையில் சிந்திக்கலாம். இருதரப்பும் இப்படிச் சிந்தித்தால், தீர்வு என்பது ஒருபோதும் வராது.அரசியல்வாதிகள் தொடர்ந்தும் அரசியல் செய்து கொண்டிருக்கலாம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி யோசிக்க வேண்டுமானால், இரு தரப்பும் நிறைய விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராக வேண்டும். பிரச்சினையில் ஈடுபட்டுள்ள தரப்புகள், தங்கள் இலக்குகள் மற்றும் நோக்கங்களை விமர்சன ரீதியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

கடந்த கால முதலீடுகளின் அடிப்படையில் மட்டுமே, இலக்குகளைத் தொடர்வதன் பகுத்தறிவற்ற தன்மையை ஏற்றுக்கொள்வது, மற்றும் எதிர்காலத்துக்கான சாத்தியமான பலன்களில் கவனம் செலுத்துவது என்பன முக்கியமானவை. 

மேலும், மீளாச் செலவு வழுவைத் தவிர்க்க பிரச்சினையை தொடர்வதற்கான சந்தர்ப்பச் செலவுகளை கருத்தில் எடுப்பது ஒரு பயனுள்ள உத்தியாக இருக்கும். மோதல்கள் இல்லாத நிலையில் உணரக்கூடிய வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான வளங்கள் வீணடிக்கப்பட்டமை, இழந்த உயிர்கள் மற்றும் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்து கட்சிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். 

இனியும் அப்படியான அழிவு வேண்டுமா என்பதை இருதரப்பும் யோசிக்க வேண்டும். நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் முரண்பட்ட குழுக்களிடையே உறவுகளை வளர்ப்பது, மீளாச் செலவு வழுவுடன் தொடர்புடைய உணர்ச்சிகரமான பற்றை எதிர்கொள்ள உதவும். 

பரஸ்பர புரிதல், பச்சாத்தாபம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், கட்சிகள் படிப்படியாக நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட முடியும். சாவதற்கு இளைஞர்களை உசுப்பேத்த முடியுமென்றால், அவர்களை சிறப்பாக வாழ்வதற்கு உசுப்பேத்த அரசியல்கட்சிகளால் முடியும். அதனை அவர்கள் செய்வார்களா என்பதுதான் கேள்வி.

கடந்த கால முதலீடுகள் எதிர்கால முடிவுகளைத் தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தை மறுப்பதன் மூலம், முரண்பட்ட தரப்பினர் பகிரப்பட்ட நலன்கள், நீண்ட கால நன்மைகள் மற்றும் நிலையான தீர்வுகளை நோக்கி தங்கள் கவனத்தை மாற்ற முடியும்.

இல்லை, நாம் மீளாச் செலவு வழுவோடுதான் வாழ்வோம் என்று ஓர் இனம் எண்ணுமேயானால், அவ்வினத்தை இறைவனால்கூட உய்விக்க முடியாது.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீளாச்-செலவு-வழுவும்-இனப்பிரச்சினைக்கான-தீர்வும்/91-319648

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.