Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை, மருத்துவமனை, குழந்தை, கை அகற்றம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 ஜூலை 2023

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வேறொரு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் கை அகற்றப்பட்டது சர்ச்சையானது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயதுக் குழந்தை முகமது தஹீர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அந்தக் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுள்ளது. தவறான சிகிச்சையின் காரணமாக குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விவகாரத்தில் கவனக் குறைவான சிகிச்சையின் விளைவாகவே குழந்தையின் கை அகற்றப்பட்டிருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பான விசாரணைக்குழு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குழந்தையின் பெற்றோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய குழந்தையின் தாய் அஜிஸா, “ராஜீவ் காந்தி மருத்துவமனையின் மருத்துவர்களும் செவிலியர்களும்தான் தன் மகனின் கை அகற்றப்பட்டதற்குக் காரணம்” என்று குற்றம் சாட்டினார்.

 

மருத்துவ அறிக்கையில் மாறுபட்ட தகவல் இருப்பதாக தாய் குற்றச்சாட்டு

 

இந்த மருத்துவ அறிக்கையின் முதல் பக்கத்திலேயே “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், என்னுடன் இருந்த யாரையுமே அவர்கள் விசாரிக்கவில்லை. இந்த விசாரணை அறிக்கையில் உள்ள தகவல்கள் நேர்மாறாக உள்ளன,” என்று குற்றம் சாட்டினார்.

“என் மகனுக்கு இதயக் கோளாறு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், நான் இப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்துதான் வருகிறேன்.

எக்கோ, ஈசிஜி என அனைத்து பரிசோதனைகளிலும் என் மகனின் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன. அப்படியென்றால் இந்த மருத்துவ அறிக்கை ஏன் இப்படிச் சொல்கிறது?” என்று கேள்வியெழுப்பினார்.

மருத்துவர்கள் குழந்தையை ஆரம்பத்திலேயே கவனிக்கவில்லையா?

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்து பார்வையிட்ட நாளன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், “ஜுலை 1ஆம் தேதி, சனிக்கிழமையன்று காலையில்தான் என் மகனின் கை நிறமாக மாறியதாகவும், பிறகு அழுகிப் போனதாகவும், அன்றைய காலையில் இரண்டு மணிநேர இடைவெளியில்தான் அனைத்துமே நடந்தன" என்று கூறியதாக அஜிஸா கூறுகிறார்.

ஆனால் இந்த மருத்துவ அறிக்கையில், “29ஆம் தேதி வியாழக்கிழமையன்று என் மகனின் கை சிவப்பு நிறமாக மாறியதாக செவிலியர்களிடம் பல முறை முறையிட்டேன், ஆனால் யாரும் கவனிக்கவில்லை. அன்று மருத்துவர்கள் அங்கு இருக்கவில்லை. அதுதான் இந்த அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. அன்றைய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர், செவிலியர், மருத்துவர் என அனைவரும் ஜூலை 1ஆம் தேதிதான் அனைத்தும் நடந்தது என்று சொன்னது பொய் என்பது இதன்மூலம் நிரூபணமாகிவிட்டது,” என்றார் குழந்தையின் தாய் அஜிஸா.

மேலும், “முதுநிலை மருத்துவ மாணவர் அன்று இரவு குழந்தையை பரிசோதனை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படிச் செய்திருந்தால், அன்றே என் குழந்தையின் கையை காப்பாற்றியிருக்கலாமே! சனிக்கிழமை காலையில் என் குழந்தைக்கு கை அழுகிப்போன பிறகுதான் மருத்துவர்களே வந்தார்கள். அன்று யாருமே நடவடிக்கை எடுக்காததுதான் இதற்குக் காரணம்.

என் குழந்தை கை வலியால் அழுதபோது செவிலியர்களிடம் சொன்னேன். ஆனால், யாரும் அதைப் பொருட்படுத்தவே இல்லை,” என்று தெரிவித்தார்.

 
குழந்தையின் தாய்
 
படக்குறிப்பு,

“தன் மகனின் கை பிரச்னையை, அவனுக்கு இருக்கும் தலை தொடர்பான பிரச்னையோடு சேர்த்து மூடப் பார்க்கிறார்கள்,” என்று குற்றம் சாட்டுகிறார் குழந்தையின் தாய்

குழந்தைக்கு நுண்கிருமி பாதிப்பு இருந்ததை முன்பே கூறவில்லையா?

“கடந்த 26ஆம் தேதியன்று இரவு என் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்து, குழந்தையின் தலையிலிருந்து எடுத்த நீரை பரிசோதனைக்காக மறுநாள் அனுப்பியுள்ளார்கள். அதன் பரிசோதனை முடிவுகள் 28ஆம் தேதி வந்துவிட்டது என்றும் அதில் சூடோமோனாஸ் என்ற நுண்கிருமி இருப்பதும் கண்டறியப்பட்டுவிட்டதாக மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆனால், தங்களிடம் அன்றே அதைப் பற்றி ஏன் சொல்லவில்லை என்று கேள்வியெழுப்பிய குழந்தையின் தாய், இந்த நுண்கிருமி பற்றிய விவரம் தங்களுக்கு 3ஆம் தேதி வரை தெரியாது என்றும் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, இன்றுதான் தன்னிடம் இந்த பரிசோதனை அறிக்கை வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியதாகக் கூறும் அவர், “இது உண்மையெனில், 28ஆம் தேதியே அந்த முடிவுகள் வந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது பொய்” என்றும் குற்றம் சாட்டினார்.

அறிக்கையில், “என் மகனுக்கு ஏற்பட்ட கை பிரச்னையை, அவனுக்கு இருக்கும் தலை தொடர்பான பிரச்னையோடு சேர்த்து மூடப் பார்க்கிறார்கள்,” என்று குற்றம் சாட்டும் அவர், 29ஆம் தேதியே தன் குழந்தைக்கு மருத்துவர்கள் போட்ட ஊசியால் கை சிவப்பாகிறது என்று கூறியும் யாரும் கவனிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். மேலும், இதுகுறித்து அன்று நான் சொன்னதை அமைச்சர் காதில் வாங்கவே இல்லை என்றும் கூறினார்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, “25ஆம் தேதியன்று என் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தது முதல் அங்கிருந்து வெளியேறியது வரையிலான டிஸ்சார்ஜ் சம்மரியையும் விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கை அனைத்தையும் எங்களிடம் தரவேண்டும் என்று மருத்துவமனை டீனிடம் மனு கொடுக்கப் போகிறோம்,” என்றார்.

மேலும், “இந்தப் பிரச்னை முதல்வர் காதுக்குச் சென்றதா என்பதே தெரியவில்லை. பெற்ற தாயின் அவல நிலையைக் கண்டு முதல்வர்தான் என்னைத் தேடி வர வேண்டும். பொது மக்களின் குறைகளைத் தீர்க்கத்தான் அரசாங்கம். பொது மக்கள் எப்படி அரசைத் தேடிப் போக முடியும்?

என் குழந்தைக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும். இதில் விசாரணை நடத்தி எடுக்கப்படும் நடவடிக்கை மூலம் இனி இத்தகைய தவறு நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இன்று என் குழந்தைக்கு நடந்ததுபோல் இனி எந்தக் குழந்தைக்கும் நடக்கக்கூடாது,” என்றும் தெரிவித்தார் அஜிஸா.

 
கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய்
 
படக்குறிப்பு,

"இந்தப் பிரச்னை முதல்வர் காதுக்குச் சென்றதா என்பதே தெரியவில்லை. பெற்ற தாயின் அவல நிலையைக் கண்டு முதல்வர்தான் என்னைத் தேடி வர வேண்டும்," என்கிறார் அஜிஸா.

மருத்துவ அறிக்கை என்ன சொல்கிறது?

இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைத்த 3 மருத்துவர்களைக் கொண்ட விசாரணைக்குழு அறிக்கை, "குறைப் பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தை எடை குறைவாக இருந்ததுடன், இதயத்தில் ASD எனும் ஓட்டையுடனும், மூளை மண்டலத்தில் நீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு தலை வீக்கத்துடனும் அவதியுற்றதாக" கூறுகிறது.

இதற்காக அந்தக் குழந்தை 5 மாதமாக இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளை மண்டலத்தில் இருந்து வயிற்றுப் பகுதிக்கு பொருத்தப்பட்ட நுண்ணிய குழாய், ஆசன வாய் வழியே வெளியேற தலைப்பட்டதால், சுமார் ஓராண்டு கழித்து தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் அந்த நுண்ணிய குழாய் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருந்த குழந்தைக்கு மூளையில் நுண்கிருமித் தொற்று இருந்ததாகவும், ரத்த நாள அடைப்பால் கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறும் அந்த அறிக்கை, Venflon ஊசி தமனியில் போடப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

விவகாரத்தின் பின்னணி என்ன?

தஸ்தகீர் - அஜிஸா தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை ஒன்று பிறந்தது. 40 வாரங்களில் பிறப்பதற்குப் பதிலாக 32 வாரங்களிலேயே பிறந்த அந்தக் குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் தலை அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. சராசரியாக 37 செ.மீ. இருக்க வேண்டிய தலையின் சுற்றளவு 61 செ.மீ. அளவுக்கு அதிகரித்தது.

இதனால், கடந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அந்தக் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதன் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் அந்தக் குழந்தை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

அங்கு, தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற தலையிலிருந்து வயிற்றுக்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டது. தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு பெற்றோர் வீடு திரும்பினர்.

குழந்தைக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்பட்டதால், பெற்றோர் ராமநாதபுரத்திற்குத் திரும்பாமல், சென்னையிலேயே தங்கிவிட்டனர்.

 
சென்னை, மருத்துவமனை, குழந்தை, கை அகற்றம்

பட மூலாதாரம்,TN GOVERNMENT

 
படக்குறிப்பு,

குழந்தை மே 29ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழாய் பொருத்தப்பட்டது

இந்த நிலையில், கடந்த வாரம் குழந்தைக்குப் பொருத்தப்பட்ட குழாய், குழந்தையின் ஆசனவாய் வழியாக வெளியேறிவிட்டது. இதையடுத்து குழந்தை மே 29ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழாய் பொருத்தப்பட்டது.

இதற்குப் பிறகு குழந்தைக்கு மருந்தும் திரவ உணவும் ஏற்றுவதற்காக அதன் வலது கையில் பொறுத்தப்பட்ட ஊசியின் காரணமாக, கை அழுக ஆரம்பித்தாகவும் செவிலியர்கள் அலட்சியமாக ஊசியை பொருத்தியதாலேயே இந்த நிலை ஏற்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய குழந்தையின் தந்தை தஸ்தகீர், "வியாழக்கிழமையன்று (மே 29) அந்த ஊசி பொருத்தப்பட்ட பிறகு குழந்தை ரொம்பவும் அழ ஆரம்பித்தது. அது வலியால் அழுகிறது என பெற்ற தாய்க்குத் தெரியாதா?

இதனால், என் மனைவி திரும்பத் திரும்ப செவிலியர்களிடம் சென்று குழந்தை வலியால் அழுவதாகக் கூறினார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதனால், நான்காவது முறையாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றே காட்டினாள். அப்போது, இந்த ஊசியை அகற்றிவிட்டால் குழந்தைக்கு எப்படி மருந்தைச் செலுத்துவது என்று கேட்டார்கள். பிறகு, என் மனைவி வலியுறுத்தியதால் ஊசியை அகற்றினார்கள்.

பிறகு குழந்தையின் கை கொஞ்சம் கொஞ்சமாக கருக்க ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை காலையில் வந்த மருத்துவரிடம் அதைச் சொன்னோம். அவர் ஒரு மருந்தை வாங்கித் தேய்க்கச் சொன்னார். அதைத் தேய்த்தோம். பிறகு யாரும் வரவில்லை. சனிக்கிழமையன்று விரல் நுனியில் தோல் உரிய ஆரம்பித்துவிட்டது. அப்போது வந்த மருத்துவர்களிடம் அதைக் காட்டினோம்.

பிறகு 11 மணிக்கு மேல் குழந்தையை ஸ்கேன் செய்தார்கள். அந்த ஸ்கேன் முடிவுகளைப் பார்த்த பிறகு, குழந்தையின் கையில் ரத்த ஓட்டம் இல்லாமல் போய்விட்டது. அதனால் கையை எடுக்க வேண்டும் என்றார்கள். இது முழுக்க முழுக்க செவிலியர்களின் தவறால்தான் ஏற்பட்டது," என்று குற்றம் சாட்டினார்.

தற்போது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுள்ளது.

 
சென்னை, மருத்துவமனை, குழந்தை, கை அகற்றம்
 
படக்குறிப்பு,

குழந்தை எழும்பூர் மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கே குழந்தைக்கு 'வென்ட்ரிகிளோ பெரிடோனியல் ஷன்ட்' (ventriculoperitoneal shunt) பொருத்தப்பட்டது.

அரசு மருத்துவமனை தரப்பு சொல்வது என்ன?

ஆனால், குழந்தைக்கு ஏற்பட்டுள்ள குறைபாடே குழந்தையின் கையில் ஏற்பட்ட பிரச்னைக்குக் காரணம் என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணி ராஜன். இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் அவர் பேசினார்.

"குழந்தை 32 வாரங்களிலேயே பிறந்துவிட்டதால் கடந்த ஆண்டு இங்கு குழந்தை வந்தபோதே பல பிரச்னைகள் இருந்தன. அந்த குழந்தையைச் சோதித்தபோது தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அது உறைந்திருந்தது. அதனால், தலையில் இருந்த 'வென்ட்ரிகிளை' அடைத்துக்கொண்டதால், நீர் செல்வது (Cerebrospinal fluid) செல்வது தடைபட்டிருந்தது."

"இதையடுத்து, குழந்தை எழும்பூர் மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கே குழந்தைக்கு 'வென்ட்ரிகிளோ பெரிடோனியல் ஷன்ட்' (ventriculoperitoneal shunt) பொருத்தப்பட்டது. அந்த சிகிச்சையின்போதே குழந்தைக்கு இதய முடக்கம் ஏற்பட்டது. பிறகு, தீவிர சிகிச்சை மூலம் குழந்தை உயிர்ப்பிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாதம் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு குழந்தை வீட்டிற்குச் சென்றது."

"ஒரு வாரத்திற்கு முன்பாக, குழந்தைக்குப் பொறுத்தப்பட்டிருந்த 'ஷண்ட்' வெளியேறிவிட்டது. இதையடுத்து குழந்தை மே 29ஆம் தேதி மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டது. மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டு, அன்று இரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் ஷண்ட் பொருத்தப்பட்டது. குழந்தை முன்கூட்டியே பிறந்ததால், அந்தக் குழந்தையின் ரத்தத்தின் திரவ நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.

Hyperviscosity என்ற நிலை ஏற்பட்டு, ரத்த ஓட்டம் மெதுவாக இருந்தது. வியாழக்கிழமையன்று தோலில் நிற மாற்றம் ஏற்பட்ட பிறகு ரத்தம் குழாய்களில் உறைந்திருக்கலாம் எனக் கருதி அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன."

 

"கையின் நிறம் மாறியது ஏன் என்பதை அறிய ஒன்றாம் தேதியன்று டாப்லார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது அறியப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதி அகற்றப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்பதால், அடுத்த நாள் நண்பகல் அறுவை சிகிச்சை மூலம் கை அகற்றப்பட்டது," என்று தெரிவித்தார்.

வியாழக்கிழமை காலை ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட நிலையில், பிற்பகலில் வலி இருப்பதாகச் சொன்னதால், அந்த ஊசி அகற்றப்பட்டதாகவும் வெள்ளிக் கிழமையன்று வலி, வீக்கத்திற்காக மருந்து அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்த தேரணி ராஜன், சனிக்கிழமையன்று குழந்தையின் விரல் நுனி கறுத்திருப்பது குறித்து மருத்துவமனையின் ரத்தவியல் மருத்துவர்தான் பார்த்து தெரிவித்ததாகக் கூறினார்.

ஊசியை அகற்றி இரு நாட்களுக்குப் பிறகே இது நடந்ததாகவும் அதற்குப் பிறகு டாப்ளர் ஸ்கேன் செய்யப்பட்டு, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கை அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், குழந்தையின் தந்தையான தஸ்தகீர் அதை மறுக்கிறார். "குழந்தையின் கையைப் பார்த்து மருத்துவர்கள் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். அது தவறான தகவல். நாங்கள்தான் குழந்தையின் விரல் நுனி கறுத்துப் போய் தோல் உறிவதைக் கண்டுபிடித்து, மருத்துவர்களிடம் சொன்னோம்," என்கிறார் அவர்.

 
சென்னை, மருத்துவமனை, குழந்தை, கை அகற்றம்

பட மூலாதாரம்,MA SUBRAMANIAN FACEBOOK PAGE

 
படக்குறிப்பு,

அலட்சியம் ஏதும் நடந்திருக்கிறதா என்பதை அறிய உயர்மட்ட மருத்துவர்கள் குழு ஒன்றை அமைக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் பெற்றோருக்கு சந்தேகம் இருந்தால், தனியார் மருத்துவர்களை அழைத்து வந்துகூட சோதித்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

தற்போது, இந்த விவகாரத்தில் அலட்சியம் ஏதும் நடந்திருக்கிறதா என்பதை அறிய உயர்மட்ட மருத்துவர்கள் குழு ஒன்றை அமைக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன்படி, ரத்த நாள சிகிச்சைத் துறையின் இயக்குநர், பொது மருத்துவத் துறையிலிருந்து ஒரு இயக்குநர், குழந்தைகளுக்கான குருதித் துறையின் மூத்த மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

 

"வலது கையின் முன்பகுதி கருஞ்சிவப்பாக மாறிவிட்டது"

தமிழ்நாடு அரசு நியமித்த விசாரணைக் குழு முன்பாக குழந்தையின் பெற்றோர் நேற்று ஆஜராயினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தையின் தாய் அஜிஸா, விசாரணையில் நடந்தது என்ன என்று விளக்கம் அளித்தார்.

குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்துப் பேசிய அவர், " 29ஆம் தேதி வியாழக்கிழமையன்று தான் என் குழந்தைக்கு அந்த ஊசியைப் போட்டார்கள். அதற்கு முன்பு வரை குழந்தை நன்றாகவே இருந்தது. ஊசி போட்டதற்குப் பிறகே குழந்தைக்கு பிரச்னை வந்தது. அன்றும், அதற்கு மறுநாளும் இரண்டு நாட்கள் குழந்தை அழுவது குறித்து அங்கிருந்த செவிலியர்களிடம் நான் முறையிட்டேன். என்னுடைய வற்புறுத்தலால்தான், குழந்தைக்கு கையில் இருந்த ஊசியை எடுத்தார்கள்.

குழந்தையின் வலது கை விரல் முதல் மணிக்கட்டு வரை கருஞ்சிவப்பு நிறத்தில் மாறிவிட்டிருந்தது. அந்த அளவுக்கு அவர்கள் அலட்சியமாக இருந்தார்கள். நான் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் செவி கொடுத்துக் கேட்கவில்லை. உங்க பையனுக்கு லைன் நன்றாகவே இருக்கிறது. ஏன் எடுக்கச் சொல்கிறீர்கள்? இன்று எடுத்துவிட்டால் நாளை எப்படி மருந்து போடுவீர்கள் என்று கேட்டார்கள்.

பரவாயில்லை, மருத்துவரிடம் நான் பேசி வேறு மருந்து வாங்கிக் கொள்கிறேன், நீங்கள் இப்போது அதை எடுத்துவிடுங்கள் என்று நான் கூறினேன். அதுவரை லைன் நன்றாக இருப்பதாகக் கூறியவர்கள், பின்னர் அருகில் இருந்த பயிற்சி செவிலியரிடம், லைனை எடுத்துவிடு? லைன் வீங்கிவிட்டது? என்று சொல்லிவிடலாம் என்றார்.

அங்கிருந்த செவிலியர், மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் என் குழந்தை வலது கையை இழந்திருக்கிறது. இதைத்தான் நான் ஆரம்பம் முதல் சொல்லி வருகிறேன். நான் முதலில் கூறியபோதே செவிலியர்கள் அதைச் செய்திருந்தால் என் குழந்தைக்கு இந்த நிலைமை வந்திருக்காது. என் குழந்தைக்கு வந்த இந்த நிலைமை இனிமேல் வேறு யாருக்குமே வரக் கூடாது என்பதற்காகவே நான் இவ்வளவு தூரம் போராடுகிறேன்." என்று கூறினார்.

சென்னை, மருத்துவமனை, குழந்தை, கை அகற்றம்
 
படக்குறிப்பு,

அஜிஸா, பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய்

மருத்துவர்களை காப்பாற்றும் வகையில் அமைச்சர் பேசியதாக குற்றச்சாட்டு

மேலும் தொடர்ந்த குழந்தையின் தாய் அஜிஸா, "நேற்று என்னை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்னுடைய குழந்தையை பல முறை குறை மாத குழந்தை என்றே குறிப்பிட்டார்.

அத்துடன், குழந்தை பல குறைபாடுகளுடனே இருந்ததாக அவர் கூறினார். எந்தவொரு தாயிடமும் அவர் குழந்தையை குறை மாத குழந்தை என்று கூறக் கூடாது. அதை அவர் விரும்ப மாட்டடார். ஆனால் அமைச்சர் அதைப் பல முறை கூறினார்.

குறை மாத குழந்தை குறைபாடுகளே இல்லாமல் இருக்கக் கூடாதா? இன்று எவ்வளவோ குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்து நன்றாக இல்லையா?

என் குழந்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தக் குறையும் இல்லாமல் நன்றாகவே இருந்தது. ஆனால், இந்த ஊசி போட்ட பின்னரே பிரச்னை தொடங்கியது. என் குழந்தையின் தலை சுற்றளவு 61 செ.மீ. என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பேட்டியில் கூறினார்.

ஆனால், இன்று நான் அளந்து பார்த்த போது 53 செ.மீ. தான் இருந்தது. யார் அளித்த தகவலின் பேரில் அமைச்சர் அவ்வாறு கூறினார்? அரசு மருத்துவர்கள், செவிலியர்களை காப்பாற்றும் நோக்கிலேயே நடந்து கொள்கிறார்கள்." என்று குற்றம்சாட்டினார்.

 

மருத்துவர்கள் குழு விசாரணை அறிக்கை வெளியீடு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட உயர் மருத்துவர்களைக் கெண்ட குழுவின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தையின் பெற்றோர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்கள், துறைசார்ந்த செவிலியர்கள் உ மற்றும் குழந்தையின் சிகிச்சையில் சம்பந்தப்பட்ட இதரத் துறை மருத்துவர்களும் விசாரிக்கப் பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

5 மாத குழந்தையாக இருக்கும் போதே அறுவை சிகிச்சை

கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய்

 

விசாரணையில் தெரிய வந்தவையாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

"முகம்மது மஹீர் (1 1/2 வயது) குழந்தை குறைப்பிரசவத்தில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை. தற்போது தீவிர எடை குறைவுடனும், இருதயத்தில் ASD என்று சொல்லக் கூடிய ஓட்டையுடனும் தலையில் ஏற்பட்ட இரத்தக்கசிவின் காரணமாக Hydrocephalous என்று சொல்லப்படும் மூளை மண்டலத்தில் உள்ள நீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு தலைவீக்கம் ஏற்பட்டு அவதியுற்று வந்தது.

5 மாதக் குழந்தையாக இருக்கும் போது, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் V-P shunt என்று சொல்லப்படும் ஓர் அறுவை சிகிச்சை மூளை மண்டலத்திலிருந்து வயிற்றுப் பகுதிக்கு ஒரு நுண்ணிய குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குழந்தைக்கு cardiac arrest ஏற்பட்டு தீவிர சிகிச்சை மூலம் குணமானது.

V-P shunt குழாய் குழந்தையின் ஆசனவாய் வழியாக வெளியேறத் தலைப்பட்டதால் குழந்தை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜூன் 25-ம் தேதி மாலை 03.58 மணிக்கு அனுமதிக்கப்பட்டது. உடனே இருதயவியல் மருத்துவர் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சையில் குழந்தைக்கு ஆபத்துகள் நேரலாம் என்று குழந்தையின் பெற்றோரிடம் ஆலோசனை வழங்கினர்.

பெற்றோரிடம் சம்மதம் பெற்று. அன்று இரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புதிய V-P shunt குழாய் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்தபின். குழந்தை தொடர் கண்காணிப்பில் இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்தபின் குழந்தைக்கு வாய் வழியாக உணவு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் நரம்பு வழியாக Antibiotic, Anticonvulsant மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூளையில் நுண்கிருமித் தொற்று - ரத்த நாள அடைப்பு

மேலும் தொடரும் அந்த அறிக்கையில், "CSF திரவம் மற்றும் Shunt Tube நுண்கிருமி ஆராய்ச்சிக்காக ஜூன் 26ஆம் தேதியன்று அனுப்பப்பட்டுள்ளது. ஜூன் 28ஆம் தேதியன்று CSF திரவத்தில் Pseudomonas எனும் நுண் கிருமி இருப்பது அறிய வந்துள்ளது. இதனால் இந்த குழந்தைக்கு மூளைத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 29ஆம் தேதி குழந்தையின் வலதுகையில் சிவப்பு நிறம் மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தாய் அதனை பணியிலிருந்த செவிலியருக்குத் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ மாணவரும் அன்று இரவு குழந்தையை பரிசோதனை செய்துள்ளார்.

ஜூன் 30ஆம் தேதி உதவி மருத்துவர் மற்றும் பேராசிரியர் குழந்தையைப் பரிசோதனைசெய்து Thrombophlebitis (சிரை நாளங்களின் அழற்சி) என்று முடிவு செய்து அதற்கான சிகிச்சையை அளித்துள்ளார்கள்.

ஜூலை ஒன்றாம் தேதி நிற மாற்றம் அதிகரித்து, கை அசைவு குறைந்துவிட்டதால் மருத்துவர் பரிசோதனை செய்து இரத்த ஓட்டத்தில் குறைவு என்பதை உணர்ந்து, இரத்தநாளப் பிரிவு மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெற்றுள்ளனர்.

Doppler பரிசோதனை மூலம் இரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இரத்தநாள அடைப்பினால் கையின் தசைககள் முற்றிலும் செயலிழந்து விட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வலதுகையை காப்பாற்றுவது கடினம் மற்றும் உடனடியாக அதை அகற்றாவிட்டால் உயிர் பாதிப்பு ஏற்படும் என்பதால் அன்று மாலையே குழந்தை எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, செயலிழந்த அகற்றப்பட்டுள்ளது. " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆய்வின் முக்கிய குறிப்புகள்

கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய்
 
படக்குறிப்பு,

"குழந்தை அனுதிக்கப்பட்ட உடனேயே கால தாமதமின்றி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" என மருத்துவர்கள் குழு தங்களது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவர்கள் குழு தங்களது விசாரணையில் தெரியவந்துள்ள முக்கிய குறிப்புகளாக சிலவற்றை எடுத்துரைத்துள்ளது. அவை பின்வருமாறு...

  • குழந்தை அனுதிக்கப்பட்ட உடனேயே கால தாமதமின்றி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
  • Venflon ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர்களின் வாக்குமூலம் மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலம் மூலமாக உறுதி செய்யப்படுகிறது.
  • மருந்து கசிவினால் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.
  • குழந்தையின் வலது கையில் வலிமற்றும் நிற மாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதனை செய்து உள்ளனர்.
  • குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார்.
  • இரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை.
  • Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று இரத்த நாளத்தை பாதித்ததால் இந்த குழந்தைக்கு வலது கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு (Arterial Thrombosis) ஏற்பட்டு உயிரை காப்பாற்றும் முயற்சியில் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cn0k3dyxnv5o

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை மரணம் - யார் தவறு?

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு
6 ஆகஸ்ட் 2023, 12:23 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கடந்த மாதம் கை அகற்றப்பட்ட நிலையில், தற்போது அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் தாயார் அஜிஸா,

“மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடைய அலட்சியத்தின் காரணமாகத்தான் எனது குழந்தையின் கை அழுகி பின் அகற்றப்பட்டது. கை அகற்றப்பட்டதற்கு நீதி வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தேன். ஆனால் அதற்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. ஒரு வாரமாக குழந்தைக்கு சுயநினைவே இல்லை. ஐசியூவில் இருந்த மூன்று நாட்களில் அவனுக்கு மூளை வேலை செய்யவில்லை” என கூறினார்.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

அரசு மருத்துவமனை விளக்கம்

இந்நிலையில், குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை விளக்கம் அளித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "குறை பிரசவத்தின் பிறந்த குழந்தைக்கு மூளையில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தையின் தலை அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. எனவே, தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற குழாய் பொருத்தப்பட்டது. குழந்தைக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடும் இருந்தது.

குழந்தைக்குப் பொருத்தப்பட்ட குழாய் வெளியேறியதால் மே 25ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே மாற்று குழாய் பொருத்தப்பட்டது. குழந்தையில் வலது கை அழுகிய நிலையில், உயிரை காப்பாற்றும் பொருட்டு கடந்த ஜூலை 2ஆம் தேதி குழந்தையின் கை அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து, குழந்தை தீவிர சிகிச்சை நிபுணர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர், வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தக்கசிவு நிபுணர், வாத நோய் நிபுணர், இருதயநோய் நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர், மரபியல் நிபுணர் மற்றும் கதிரியக்க நிபுணர் ஆகியோர் அடங்கிய பல்துறை மருத்துவர் குழுவால் குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிக அளவு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இருந்தபோதிலும், குழந்தைக்கு தொடர்ந்து தொற்று இருந்தது. ரிவிஷன் ஷன்ட், செயற்கை சுவாசம் போன்றவைக்கு சிகிச்சை குழுவினர் பரிந்துரை அளித்தபோதும் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். மருத்துவ குழுவினரால் தீவிரமாக கண்காணித்தபோதும் ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிகாலை 5.42 மணிக்கு குழந்தை உயிரிழந்துவிட்டது` என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷன்ட் தொற்று, குறைப்பிரசவம், வைட்டமின் டி குறைபாடு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, ஹைப்போ தைராய்டிசம் உள்ளிட்டவை காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

பின்னணி என்ன?

தஸ்தகீர் - அஜிஸா தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை ஒன்று பிறந்தது. 40 வாரங்களில் பிறப்பதற்குப் பதிலாக 32 வாரங்களிலேயே பிறந்த அந்தக் குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் தலை அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. சராசரியாக 37 செ.மீ. இருக்க வேண்டிய தலையின் சுற்றளவு 61 செ.மீ. அளவுக்கு அதிகரித்தது.

இதனால், கடந்த ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அந்தக் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதன் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் அந்தக் குழந்தை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

அங்கு, தலையில் இருக்கும் நீரை வெளியேற்ற தலையிலிருந்து வயிற்றுக்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டது. தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு பெற்றோர் வீடு திரும்பினர்.

குழந்தைக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்பட்டதால், பெற்றோர் ராமநாதபுரத்திற்குத் திரும்பாமல், சென்னையிலேயே தங்கிவிட்டனர்.

இந்த நிலையில், குழந்தைக்குப் பொருத்தப்பட்ட குழாய், குழந்தையின் ஆசனவாய் வழியாக வெளியேறிவிட்டது. இதையடுத்து குழந்தை மே 29ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குழாய் பொருத்தப்பட்டது.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

இதற்குப் பிறகு குழந்தைக்கு மருந்தும் திரவ உணவும் ஏற்றுவதற்காக அதன் வலது கையில் பொறுத்தப்பட்ட ஊசியின் காரணமாக, கை அழுக ஆரம்பித்ததாகவும் செவிலியர்கள் அலட்சியமாக ஊசியை பொருத்தியதாலேயே இந்த நிலை ஏற்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய குழந்தையின் தந்தை தஸ்தகீர், "வியாழக்கிழமையன்று (மே 29) அந்த ஊசி பொருத்தப்பட்ட பிறகு குழந்தை ரொம்பவும் அழ ஆரம்பித்தது. அது வலியால் அழுகிறது என பெற்ற தாய்க்குத் தெரியாதா?

இதனால், என் மனைவி திரும்பத் திரும்ப செவிலியர்களிடம் சென்று குழந்தை வலியால் அழுவதாகக் கூறினார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதனால், நான்காவது முறையாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றே காட்டினாள். அப்போது, இந்த ஊசியை அகற்றிவிட்டால் குழந்தைக்கு எப்படி மருந்தைச் செலுத்துவது என்று கேட்டார்கள். பிறகு, என் மனைவி வலியுறுத்தியதால் ஊசியை அகற்றினார்கள்.

பிறகு குழந்தையின் கை கொஞ்சம் கொஞ்சமாக கருக்க ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை காலையில் வந்த மருத்துவரிடம் அதைச் சொன்னோம். அவர் ஒரு மருந்தை வாங்கித் தேய்க்கச் சொன்னார். அதைத் தேய்த்தோம். பிறகு யாரும் வரவில்லை. சனிக்கிழமையன்று விரல் நுனியில் தோல் உரிய ஆரம்பித்துவிட்டது. அப்போது வந்த மருத்துவர்களிடம் அதைக் காட்டினோம்.

பிறகு 11 மணிக்கு மேல் குழந்தையை ஸ்கேன் செய்தார்கள். அந்த ஸ்கேன் முடிவுகளைப் பார்த்த பிறகு, குழந்தையின் கையில் ரத்த ஓட்டம் இல்லாமல் போய்விட்டது. அதனால் கையை எடுக்க வேண்டும் என்றார்கள். இது முழுக்க முழுக்க செவிலியர்களின் தவறால்தான் ஏற்பட்டது," என்று குற்றம் சாட்டினார்.

இதை தொடர்ந்து குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது. மருத்துவர்களின் தவறால்தான் தனது குழந்தையின் கை பறிபோனதாக தாயார் அஜிஸா புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து , மருத்துவத்துறை சார்பில், சிகிச்சையில் தவறு நடந்திருக்கிறதா என்பதை விசாரணை செய்ய மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு
 
படக்குறிப்பு,

குழந்தையுடன் தாய் அஜிஸா

இந்த குழு வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 29ஆம் தேதி குழந்தையின் வலதுகையில் சிவப்பு நிறம் மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தாய் அதனை பணியிலிருந்த செவிலியருக்குத் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ மாணவரும் அன்று இரவு குழந்தையை பரிசோதனை செய்துள்ளார்.

ஜூன் 30ஆம் தேதி உதவி மருத்துவர் மற்றும் பேராசிரியர் குழந்தையைப் பரிசோதனைசெய்து Thrombophlebitis (சிரை நாளங்களின் அழற்சி) என்று முடிவு செய்து அதற்கான சிகிச்சையை அளித்துள்ளார்கள்.

ஜூலை ஒன்றாம் தேதி நிற மாற்றம் அதிகரித்து, கை அசைவு குறைந்துவிட்டதால் மருத்துவர் பரிசோதனை செய்து இரத்த ஓட்டத்தில் குறைவு என்பதை உணர்ந்து, இரத்தநாளப் பிரிவு மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெற்றுள்ளனர்.

Doppler பரிசோதனை மூலம் இரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இரத்தநாள அடைப்பினால் கையின் தசைககள் முற்றிலும் செயலிழந்து விட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வலதுகையை காப்பாற்றுவது கடினம் மற்றும் உடனடியாக அதை அகற்றாவிட்டால் உயிர் பாதிப்பு ஏற்படும் என்பதால் அன்று மாலையே குழந்தை எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, செயலிழந்த கை அகற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/clj5x85kr23o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.