Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதறிப்போன ஒரு மக்கள் கூட்டம் ? – நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிதறிப்போன ஒரு மக்கள் கூட்டம் ? – நிலாந்தன்.

adminJuly 9, 2023
Dispersed-Crowds-.jpg?fit=735%2C416&ssl=

காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு பகுதியினர் அதற்கு வேறுவிதமாக வியாக்கியானம் தருகிறார்கள். கோவில்களில் காசைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் ஊரில் தனது முதன்மையை நிலைநாட்டும் நோக்கத்தையும் கொண்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.  ஒரு காலம் நீருக்கு கஷ்டப்பட்ட கிராமத்தில் இருந்து பொருளாதார மற்றும் போர்க் காரணங்களுக்காக  ஊரை விட்டுப்போன மக்கள் இப்பொழுது அதே ஊரில் கற்பனை செய்ய முடியாத ஒரு தொகையைச் செலவழித்து ஒரு கோவிலைப் புனரமைப்பது என்பது, தங்களால் முடியும் என்பதனைச் சாதித்துக்காட்டும் ஒரு நிகழ்வாக ஏன் எடுக்கக் கூடாது என்றும் கேட்கப்படுகிறது.

அதில் உண்மை உண்டு. புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாங்கள் தேடிய செல்வத்தை எப்படி ஊரில் செலவழிப்பது என்பதை குறித்து பொருத்தமான அபிவிருத்தி திட்டங்கள் இல்லாத வெற்றிடத்தில்தான் கோவில்களில் முதலீடு செய்யும் ஒரு நிலைமை ஏற்படுகின்றது. கோவில்களை புனரமைப்பது என்பது அவர்களுடைய மத நம்பிக்கை சார்ந்த விடயம். ஆனால் ஊரின் பெருமையை வெளி உலகத்திற்கு காட்டுவது என்பது அதுவும் ஊர் என்பது ஊருக்கு வெளியே வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் சிதறிப்போயிருக்கும் ஒரு பின்னணியில், ஊருக்கு வெளியே இருக்கும் ஊரவர்களுக்கு தமது முதன்மையை, பெருமையை நிலைநாட்டுவது என்று பார்க்கும் பொழுது, அங்கே ஊரைக் கட்டியெழுப்புவதா அல்லது குறிப்பிட்ட கொடையாளி தன்னுடைய பெயரை கட்டியெழுப்புவதா என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பழைய மாணவர் சங்கங்களைப் போலவே ஊர்ச் சங்கங்கள் உண்டு. இச்சங்கங்கள் பல ஓரளவுக்கு ஊரைக் கட்டியெழுப்புகின்றன. ஆனால் அதனை ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற மையப்புள்ளியில் இருந்து சிந்தித்துச் செய்வதாகத் தெரியவில்லை. ஏனெனில் தமிழ்க் கட்சிகளை போலவே ஊர் சங்கங்களுக்கிடையிலும் ஐக்கியம் இல்லை. ஒரே ஊருக்கு வெவ்வேறு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வேறு வேறு சங்கங்கள் உண்டு. அவற்றுக்கு இடையில் ஐக்கியம் இல்லை. புலம் பெயர்ந்த தரப்பில் உள்ள கொடையாளிகள் அல்லது சங்கங்கள் ஊருக்கு தாங்கள் செய்யும் நற்காரியங்களுக்குரிய பாராட்டுக்கள் தங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று சிந்திப்பதும் ஒரு காரணம். அதில் ஒர் ஈகோ உண்டு. ஆனால் அந்த ஈகோவை பொசிட்டிவ்வான விதத்தில் பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கலாம். அதை யார் செய்வது?  ஊர்ச் சங்கங்களை ஏதோ ஒரு பொது நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யார் ஒன்றாக்குவது?

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலானவர்கள் ஊர் நினைவுகளை ஊறுகாய் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒருவிதத்தில் ஊர்களையும் ஆங்காங்கே ஊறுகாய் போட்டு வைத்திருக்கிறார்கள். இவ்வாறு தாம் ஊரை விட்டுப்பிரிந்த காலத்தையும், ஊர் பற்றிய தமது நினைவுகளையும் ஊறுகாய் போட்டு வைத்திருக்கும் ஒரு சமூகத்தின் ஊர்ப் பற்று என்பது ஒரு தேச நிர்மாணத்தைப் பொறுத்தவரை அடிப்படையான ஒர் ஆக்க சக்தி. ஆனால் அதை ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் திரட்டப்பட்ட சக்தியாக மாற்றுவதற்கு தேச நிர்மாணம் என்ற அடிப்படையில் ஒரு பொதுவான வேலைத் திட்டம் இருக்க வேண்டும். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக அவ்வாறான வேலைத்திட்டங்கள் எவையும் கிடையாது. ஒரு மையத்தில் இருந்து முடிவெடுத்து ஒரு மையத்திலிருந்து காசை திரட்டி அதை ஆக்கபூர்வமான பொருத்தமான வழிகளில் தேச நிர்மானத்தை நோக்கி முதலீடு செய்வதற்கு தமிழ்மக்கள் மத்தியில் இப்பொழுது ஒன்றிணைந்த மையங்கள் கிடையாது. மாறாக சிதறிப்போன சிறு மையங்கள்தான் உண்டு. நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தனது வாக்கு வங்கியை எப்படிக் கட்டியெழுப்பலாம் என்று சிந்திக்கின்றதோ அப்படித்தான். எனவே காற்றுவழிக் கிராமங்களில் கோவில்களைப் புனரமைக்கும் செயற்பாடுகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால், தமிழர்கள் தேவைகளையும் வளங்களையும் பொருத்தமான விதங்களில் இணைக்க முடியாத ஒரு மக்களாக, ஒரு மையத்திலிருந்து திட்டமிட முடியாத மக்களாகக் காணப்படுகிறார்கள் என்பதைத்தான்.

இதனைக் கோவில்களை புனரமைக்கும் விடயத்தில் மட்டுமல்ல, ஐநாவை அணுகுவது; இந்தியாவை அணுகுவது; அமெரிக்காவை அணுகுவது; ஐரோப்பாவை அணுகுவது ; உலகப் பொது நிறுவனங்களான பன்னாட்டு நாணய நிதியம், உலகவங்கி போன்றவற்றை அணுகுவது; போன்ற எல்லா விடயங்களிலுமே தொகுத்துக் காணலாம். தமிழ் மக்கள் ஒரு மையம் இல்லாத மக்களாகவும்; மையத்தில் இருந்து முடிவெடுக்காத மக்களாகவும் காணப்படுகிறார்கள். இதற்கு ஆகப்பிந்திய அண்மைய உதாரணங்களை இங்கே சுட்டிக்காட்டலாம்.

முதலாவதாக, உலகத்தமிழர் பேரவை என்று புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு அண்மையில் அமெரிக்கப் பிரதானிகளைச் சந்தித்தது. அச்சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்கப் பிரதானிகளை வைத்து பார்த்தால், அது ஒரு பெறுமதியான சந்திப்பு. ஜெனிவாக் கூட்டத்தொடரை முன்னிட்டு நடந்த அச் சந்திப்பானது புலம்பெயர்ந்த தமிழர்களை அமெரிக்கா ஏதோ ஒரு நோக்கத்தோடு கையாள விரும்புகிறது என்ற செய்தியை துலக்கமான விதங்களில் வெளிப்படுத்தியது.

இரண்டாவது, பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழக அமைப்பாளர் அண்ணாமலையை லண்டனுக்கு அழைத்தமை. பிரித்தானியத் தமிழர் பேரவை அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதனை அவர்கள் உறவுப் பாலம் என்று அழைத்தார்கள். அது தொடர்பில் முக்கியமாக இரண்டு விமர்சனங்கள் எழுந்தன. ஒன்று பாரதிய ஜனதாவின் இந்துத்துவா நிலைப்பாட்டை மேற்படி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பும் ஏற்றுக் கொள்கிறதா என்பது. இரண்டாவது பாரதிய ஜனதா பிரமுகர்கள் இப்பொழுதும் 13ஆவது திருத்தத்தைத்தான் ஒரு தீர்வாக முன்வைக்கிறார்கள் என்பது. அதாவது பாரதிய ஜனதாவை நெருங்கி செல்வதன்மூலம், ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என்பது. குறிப்பாக, பாரதிய ஜனதாவை இந்துத்துவா என்ற கொழுக்கி மூலம் கவர முயற்சிப்பதன் விளைவாக தாயகத்தில் எத்தனை இந்துக் கோவில்களைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது? அல்லது அடாத்தாகக் கட்டப்படும் எத்தனை விகாரைகளை அகற்ற முடிந்திருக்கிறது? என்றெல்லாம் அவர்கள் கேட்கிகிறார்கள்.

மூன்றாவது,  ஐரோப்பாவை மையமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் இயக்கம் என்று ஒர் அமைப்பு தொடர்ச்சியாக ஐநா விவகாரங்களில் ஈழத் தமிழர்கள் சார்பாக செயற்பட்டு வருகின்றது. கடந்த பல ஆண்டுகளைத் தொகுத்து பார்த்தால் ஐநாவில் ஈழத்தமிழர்களை அந்த அமைப்புத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதா என்ற ஒரு தோற்றம் உண்டாகக்கூடும். அந்த அமைப்பின் யூடியூப்பில் காணக்கிடைக்கும் காணொளிகளிலும் அதை உணரக்கூடியதாக உள்ளது.

நாலாவது, லண்டனை மையமாகக் கொண்ட மூன்று அரசியல் செயற்பாட்டாளர்கள் இந்தியாவைக் கையாள்வது என்று ஒரு நிகழ்ச்சி திட்டத்தை முன்வைத்து தொடர்ச்சியாக இந்தியாவில் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். இதுவரையிலும் மூன்று கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இக்கருத்தரங்குகளில் தாயகத்திலிருந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்குபற்றி வருகிறார்கள். இந்த அமைப்பும் பாரதிய ஜனதாவை நெருங்கிச் செல்வதன் மூலம் ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று சிந்திப்பதாக தெரிகிறது.

இப்பொழுது மேற்சொன்ன அனைத்தையும் தொகுத்துப் பார்க்கலாம். இந்தியாவை அணுகுவது; அமெரிக்காவை அணுகுவது; ஐரோப்பாவை அனுப்புவது; ஐநாவைக் கையாள்வது போன்ற அனைத்துமே வெளியுறவுச் செயற்பாடுகள்தான். அதாவது ஒரு வெளிவகாரக் கொள்கையை முன்வைத்து அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்கி அதன்மூலம் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள். வெளிவிவகாரம் எனப்படுவது ஒரு சக்தி மூலம் (Power source) ஏனைய சக்தி மூலங்களோடு இடையூடாடுவது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அப்படிப்பட்ட சக்தி மூலங்கள் கிடையாது. தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சிகள் உண்டு. மெய்யான சக்தி மூலங்கள் அவைதான். ஆனால் அக்கட்சிகளிடம் வெளியுறவுக் கட்டமைப்பு எதுவும் கிடையாது. அவ்வாறு தாயகத்திலிருந்து பொருத்தமான வெளியுறவு செயற்பாடுகளை முன்னெடுக்க தேவையான வெளியுறவு தரிசனங்களோ கட்டமைப்புகளோ இல்லாத வெற்றிடத்தில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் அல்லது தனிநபர்கள் அதை முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கிடையிலும் ஒன்றிணைப்பு இல்லை. அவர்கள் ஒரு வலு மையமாக இல்லை.

இது ஒரு தலைகீழ்நிலை. அதாவது வெளியுறவுச் செயற்பாடுகளை யார் முன்னெடுக்க வேண்டுமோ அவர்கள் அதைச் செய்யவில்லை. அதற்குரிய கட்டமைப்புகளும் அவர்களிடம் இல்லை. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் போதிய செல்வம் உண்டு; மொழியறிவு உண்டு; தொடர்புகளும் உண்டு. அதைவிட முக்கியமாக, அவ்வாறான வெளியுறவுச் செயற்பாடுகளை வெளிப்படையாக முன்னெடுக்க தேவையான சுதந்திரமான வெளியும் அங்கே உண்டு. எனவே தாயகத்தில் செய்யாமல் விடப்பட்டதை அவர்கள் செய்ய முயற்சிக்கிறார்கள்.

இதில் மேலும் ஓருதாரணத்தை இங்கே சுட்டிக்காட்டலாம். கனடாவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் எனப்படுவது ஒரு தனிநபர் பிரேரணைதான். அத்தனிநபர் பிரேரணையை முன்மொழிந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பின்னணியில் சில விரல்விட்டு எண்ணக்கூடிய கனேடியத் தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் காணப்படுகிறார்கள். நன்கு திட்டமிட்டு, தளராது, தொடர்ச்சியாக அவர்கள் உழைத்ததன் விளைவுதான் மேற்கண்ட தீர்மானம். அவ்வாறு தன்னை அர்ப்பணித்து செயல்படக்கூடிய ஆற்றலும் வளமும் பொருந்திய தமிழர்களும், அமைப்புகளும் உலகமெங்கும் உண்டு. ஆனால் அவர்களையெல்லாம் இணைப்பதற்கு ஒரு மையம் இல்லை. குறைந்தபட்சம் அவர்களைப் போன்றவர்கள் இடையூடாடுவதற்கு ஒரு மைய இடையூடாட்டத் தளங்கூட இல்லை. இதனால் திரட்டப்படாத தமிழ் உழைப்பும், வளங்களும் சிதறடிக்கப்படுகின்றன.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட காற்றுவழிக் கிராமங்களில் கோவில்கள் புனரமைக்கப்படுவதையும் மேற்கண்ட விளக்கத்தின் பின்னணியில் வைத்தே நோக்கவேண்டும்.

ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்பட்டால் ஊர்ப்பற்றையும் பிரதேசப் பற்றையும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பொதுவான நிகழ்ச்சிநிரலை நோக்கி ஆக்க சக்தியாகத் திரட்டலாம். அங்கு தனிநபர் பிம்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்ச்சி நிரல் பின்தள்ளப்பட்டுவிடும். தாயகத்தில் உள்ள தேவைகளையும் புலம்பெயர்ந்த தரப்பில் உள்ள வளங்களையும் ஒருங்கிணைப்பது போன்ற அனைத்துமே கடந்தவாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல, தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு மைய நிகழ்ச்சிநிரலின் பிரிக்கப்படமுடியாத பகுதிகள்தான். ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவை ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்பட வேண்டும். ஆனால் மையம் இல்லாத தமிழர்களோ தலைகீழாகச் செயற்படுகிறார்கள்.

ஒருபுறம் வெளியுறவுச் செயற்பாடுகள். இன்னொருபுறம் ஊரின் பெருமையை நிலைநாட்டும் செயற்பாடுகள். ஆற்றல்மிக்க, அர்ப்பணிப்புள்ள, வளம்மிகுந்த தனிநபர்களும் நிறுவனங்களும் ஒரு மையத்தில் ஒன்றிணைக்கப்படாமல் சிதறிப்போய் தனித்தனியாக செயற்படுகின்றார்கள்.

முதலாம் தலைமுறைப் புலம் பெயரிகளுக்குத்தான் தாயகத்தை பிரிந்த பிரிவேக்கம் உண்டு. இறந்த காலத்தை ஊறுகாய் போட்டு வைத்திருப்பவர்கள் அவர்கள்தான். தாயகத்தில் கோவில்களைப் புனரமைப்பதும் அவர்கள்தான். அவர்களுடைய பிள்ளைகள் அதைச்செய்யாது. ஏனென்றால் அந்தத் தலைமுறையிடம் பிரிவேக்கம் கிடையாது. எனவே முதலாம் தலைமுறைப் புலம்பெயரிகள் வயதாகி இறப்பதற்கு இடையில் ஊர்ப்பற்றை நாட்டுப் பற்றாக்கும் நோக்கத்தோடு தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற் திட்டங்களை வகுக்க வேண்டும். அதை ஒரு தொடர் செயற்பாடாக,பொறிமுறையாக நிறுவனமயப்படுத்தினால் அடுத்தடுத்த தலைமுறையும் அதில் முதலீடு செய்யும். தேசமும் பலமடையும்.

 

https://globaltamilnews.net/2023/192827/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.