Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவி இல்லாமல் இரட்டைக் குழந்தைக்கு தந்தையான நபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வாடகைத் தாய்
 
படக்குறிப்பு,

தனது குழந்தைகளுடன் பிரித்தேஷ்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெய் சுக்லா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

அரசாங்க வேலை இருந்தால்தான் பெண் கொடுப்போம் என்று தற்போதும் ஒருசிலர் சொல்லிவருவதை நாம் கேட்டிருப்போம். அதுபோன்ற நிலைதான் பிரித்தேஷ் தவேக்கு ஏற்பட்டது. அரசாங்க வேலைக்கு செல்லும் யோகம் கிடைக்காததால் திருமணமும் அவருக்கு ஆகவில்லை.

ஆனாலும் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. எனவே, என்ன செய்யலாம் என்று யோசித்த அவருக்கு வாடகைத் தாய் முறை நினைவுக்கு வந்தது.

திருமணம் செய்துகொள்ளாமலேயே வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றுகொண்ட கடைசி ஒரு சில நபர்களில் பிரித்தேஷ் தவேவும் ஒருவர்.

தற்போது ஒரு மகனையும் மகளையும் அவர் வளர்த்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு வயது பூர்த்தியாகவுள்ளது. வாடகைத் தாய் முறை தொடர்பாக அரசின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அவர் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒருவேளை இந்த சட்டம் முன்பே அமலுக்கு வந்திருந்தால் அவரால் குழந்தையை பெற்றெடுத்திருக்க முடியாது.

வாடகைத் தாய்
 
படக்குறிப்பு,

பேரக்குழந்தைகளுடன் திவ்யானி தவே

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது ஏன்?

பிரித்தேஷுக்கு 37 வயதாகிறது, இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. பெண்களுடன் நன்றாக பழகியபோதும், அரசாங்க வேலை இல்லை என்பதால் அவர்கள் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டனர் என்று பிரித்தேஷ் தவே கூறுகிறார்.

பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்தும் அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அவர் பெரிய படிப்புகளை படிக்கவில்லை. 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். திருமணத்திற்கு பெண் கிடைக்காததற்கு தனது கல்வித் தகுதியும் காரணம் என்று அவர் கூறுகிறார்.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய பிரித்தேஷ் தவே “என்னுடைய சமூகத்தில் திருமணத்திற்குப் பெண்கள் கிடைக்காமல் பல ஆண்கள் உள்ளனர். ஏனெனில் பெற்றோர்கள் தங்கள் மகள்களை அரசு வேலையில் உள்ள இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கவே விரும்புகிறார்கள். எங்களிடம் நிலமும் சொத்தும் இருக்கிறது, ஆனால் அது அவர்களுக்கு முக்கியமில்லை. அவர்களுக்கு அரசு வேலை மட்டுமே முக்கியம்” என்றார்.

பிரத்தீஷின் தந்தை பானுசங்கர் தவே பேசும்போது, “எங்கள் சாதியில் 'சாடா' என்ற பழக்கம் உள்ளது. அதாவது பெண்ணை கொடுத்து பெண்ணை எடுப்பது. எவ்வளவு தேடியும் பிரித்தேஷுக்கு பெண் கிடைக்கவில்லை” என்றார்.

வாடகைத் தாய்
 
படக்குறிப்பு,

பேரக்குழந்தையை கொஞ்சி மகிழும் பானுசங்கர் தவே

பாவ்நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை பிரித்தேஷ் நடத்தி வருகிறார். இவரது பெற்றோர் சூரத்தில் வசித்து வருகின்றனர். இதனால், சூரத்துக்கும் பாவ்நகருக்கு அவர் அடிக்கடி பயணப்படுவது வழக்கம். சில நேரங்களில் தனிமையாக இருப்பதாக உணர்ந்த அவர், திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என்று விரும்பினார். அப்போது சிலர் அவருக்கு வாடகைத்தாய் முறை குறித்து கூறியுள்ளனர்.

"வாடகைத் தாய் மூலம் அப்பா ஆனதில் பெருமைப்படுகிறேன், மேலும் என்னை அதிர்ஷ்டசாலியாகவும் கருதுகிறேன், ஏனெனில் இப்போது புதிய சட்டத்தின்படி, என்னைப் போன்ற திருமணமாகாத ஆண், வாடகைத் தாய் மூலம் தந்தையாக முடியாது" என்கிறார் பிரித்தேஷ் தவே

அகமதாபாத்தைச் சேர்ந்த கருவுறுதல் பிரச்சனைகள் தொடர்பான நிபுணரும், பிரத்தேஷுக்கு வாடகைத் தாய் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கியவருமான டாக்டர் பார்த்தா பாவிசி இந்த விவகாரம் குறித்து பேசும்போது, "அவர் திருமணம் செய்து கொள்ள முடியாமல் வருந்துகிறார். அவர் ஒரு முழுமையான குடும்பத்தை விரும்பினார். அதனால்தான் அவர் தனது விருப்பத்துடன் என்னிடம் வந்தார்" என்கிறார்.

வாடகைத் தாய்
 
படக்குறிப்பு,

தைர் மற்றும் திவ்யா

இரட்டை குழந்தைகளின் தந்தை

தந்தையாக வேண்டும் என்ற தருணத்துக்காக அவர் காத்திருந்தார். வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அதனை பிரித்தேஷ் பார்த்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ அந்த இரண்டு குழந்தைகளும் என் உலகிற்கு வந்ததும், என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் பலவீனமாக இருந்ததால் இங்குபேட்டரில் வைக்கப்பட்டனர். முதன் முறையாக நான் அவர்களை என் கைகளில் தாங்கியது, அது என் வாழ்க்கையின் சிறந்த தருணம். என்னால் அதை விவரிக்க முடியாது” என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

டாக்டர் பார்த்தா பாவிசி கூறும்போது, “அப்போது ப்ரீத்தீஷைப் பார்த்ததும், உலகத்தின் அத்தனை சந்தோஷமும் அவருக்கு கிடைத்ததைப் போல உணர்ந்தேன். அவர் தந்தையாகிவிட்டதை நம்பவே முடியவில்லை போலத் தோன்றியது” என விவரித்தார்.

தாத்தா பாட்டி ஆனதில் பிரித்தேஷின் பெற்றோரான பானுசங்கர் தவே, திவ்யானி தவே ஆகியோர் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக பானுசங்கர் கூறும்போது, “குழந்தைகள் இல்லாமல் வீடு தனிமையாக இருந்தது. இப்போது வீடு முழுவதும் மகிழ்ச்சியின் ஒளி வீசியது போல் உள்ளது. இயற்கையின் அருளால் மகள், மகன் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.” என்றார்.

வாடகைத் தாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“இவர்கள் இருவரின் வருகையால் எங்களுக்கு விலைமதிப்பற்ற பொக்கிஷம் கிடைத்துள்ளது. பாட்டியாக வேண்டும் என்ற எனது ஆசையும் நிறைவேறியது. சகோதரனுக்கு சகோதரியும் சகோதரிக்கு சகோதரனும் கிடைத்துள்ளனர்”

பிரித்தேஷின் தாய் திவ்யானி தவே மகிழ்ச்சி பொங்க கூறினார்.

ஆண் குழந்தைக்கு தைர் என்றும் பெண் குழந்தைக்கு தியா என்றும் குடும்பத்தினர் பெயர் சூட்டியுள்ளனர்.

திருமணம் ஆகவில்லை என்பதில் வருத்தம் இல்லை

குழந்தைகள் பிறந்துள்ளதால், திருமணம் ஆகவில்லை என்பது குறித்த வருத்தம் தனக்கு இல்லை என்று பிரித்தேஷ் தெரிவித்தார்.

ஒருவேளை தான் விரும்பியதைப் போன்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வாரா என்று பிரித்தேஷிடம் கேட்டபோது, “தைர், திவ்யா என் வாழ்வில் வந்தபிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஒருவேளை திருமணம் செய்துகொண்டால் வருங்கால மனைவி குழந்தைகளை நல்ல முறையில் பார்த்துக் கொள்வாரா என்பது தெரியாது. எனவே, அவர்களை தன்னந்தனியாக பார்த்துகொள்வதே மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. என் குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் தற்போது என்னிடம் இருக்கிறது ” என பதிலளித்தார்.

பேரக்குழந்தைகளுடன் விளையாட வேண்டும் என்ற தங்களின் ஆசை நிறைவேறியதாக பானுசங்கர் தவே மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

“இவர்களை பார்த்துக்கொள்வதால் நேரம் செல்வதே தெரியவில்லை. ஆணோ, பெண்ணோ இருவருமே எங்களின் செல்லங்கள்தான்” என்று திவ்யானி தவே நம்மிடம் பெருமிதத்துடன் பேசினார்.

வாடகைத் தாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக சில நேரங்களில் பெண்களால் குழந்தை பெற்றுகொள்ள முடியாமல் போகிறது

வாடகைத் தாய் முறை என்றால் என்ன?

கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக சில நேரங்களில் பெண்களால் குழந்தை பெற்றுகொள்ள முடியாமல் போகிறது. ஒருசிலர் குழந்தை பெற்றுகொள்வதை தவிர்க்கின்றனர். அதுபோன்ற வேளைகளில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

இந்த முறையில், பெண்ணின் கருமுட்டை அவரது கணவரின் விந்தணு ஆகியவற்றை எடுத்து உருவாக்கப்படும் கருவை, வேறொரு பெண் சுமந்து குழந்தையாக பெற்றுக்கொடுப்பார்.

பிரித்தேஷ் விவகாரத்தில், “அவரது விந்தணுக்களும் வேறொரு பெண்ணின் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் ஐவிஎஃப் முறையில் கரு உண்டாக்கப்பட்டு வாடகைத்தாயின் கர்ப்ப பையில் செலுத்தப்பட்டது” என மருத்துவர் பார்த்தா பாவிசி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “குழந்தை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கருக்களை வைத்தோம். இரண்டுமே வளர்ச்சி பெற்று இரட்டையர்கள் பிறந்தனர்” என்றார்.

வாடகைத் தாய் முறையில் உள்ள வகைகள்

வாடகைத் தாய் முறையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, பாரம்பரிய வாடகைத் தாய் முறை மற்றொன்று கர்ப்பகால வாடகைத் தாய் முறை.

பாரம்பரிய வாடகைத் தாய் - இதில் தந்தை அல்லது தானம் செய்பவரின் விந்தணுக்கள் வாடகைத் தாயின் கருமுட்டையுடன் கலக்கப்படுகின்றன.

பின்னர் மருத்துவர் செயற்கை முறையில் விந்தணுவை நேரடியாக கருப்பை வாய், ஃபலோபியன் குழாய்கள் அல்லது வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்துகிறார். வாடகைத் தாயின் வயிற்றில் கரு உருவாகிறது, பின்னர் வாடகைத் தாய் அந்தக் கருவை ஒன்பது மாதங்கள் வயிற்றில் வைத்திருக்கிறார். இந்த முறையில், வாடகைத் தாய் குழந்தையின் உயிரியல் தாய் ஆவார்.

ஒருவேளை தந்தையின் விந்து பயன்படுத்தப்படவில்லை என்றால், தானம் அளிக்கும் வேறொரு ஆணின் விந்தணுவைப் பயன்படுத்தலாம். தானம் அளிப்பவரின் விந்தணு பயன்படுத்தப்பட்டிருந்தால், தந்தைக்கு மரபணு ரீதியாக குழந்தையுடம் தொடர்பு இல்லை.

கர்ப்பகால வாடகைத் தாய்- இந்த வாடகைத் தாய்க்கும் குழந்தைக்கும் மரபணு சம்பந்தம் இல்லை.

அதாவது, வாடகைத் தாயின் முட்டைகள் இந்த முறையில் பயன்படுத்தப்படுவதில்லை. அவர் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்கிறார். இந்த முறையில், வாடகைத் தாய் குழந்தையின் உயிரியல் தாய் அல்ல. கர்ப்பகால வாடகைத் தாய் முறையில் தந்தையின் விந்தணுவும் தாயின் கருமுட்டையும் கலந்து வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தப்படும்.

இதில் ஐவிஎஃப் முறையில் கரு உருவாக்கப்பட்டு வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தப்படுகிறது.

எனவே, பாரம்பரிய வாடகைத் தாய் முறையிலும் ஐவிஎஃப் பயன்படுத்தப்படுகிறது.

வாடகைத் தாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வாடகைத் தாய் முறையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, பாரம்பரிய வாடகைத் தாய் முறை மற்றொன்று கர்ப்பகால வாடகைத் தாய் முறை.

கர்ப்பகால வாடகைத் தாய் முறையை மேலும் இரு விதமாக பிரிக்கலாம்

அல்ட்ரூஸ்டிக் சரோகசி: இந்த முறையில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு வாடகைத் தாய் பணம் பெறுவதில்லை. வாடகைத் தாய் பெரும்பாலும் தம்பதியினரின் உறவினர்களாக இருப்பார்கள்.

கமர்சியல் சரோகசி: இந்த முறையில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு வாடகைத் தாய்க்கு பணம் வழங்கப்படும். மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி, இந்த முறை தடை செய்யப்பட்டுள்ளது.

திருமணமாகாத ஆண் ஏன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடியாது?

புதிய வாடகைத் தாய் சட்டத்தின்படி, வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 , திருமணமான தம்பதிகள் மட்டுமே வாடகைத் தாய் முறையை நாட முடியும்.

திருமணமாகாத எந்த நபரும் வாடகைத் தாய் முறையின் பலன்களைப் பெற முடியாது. தனியாக இருக்கும் பெண்கள் இந்த முறையில் குழந்தை பெற்றுகொள்ளலாம். ஆனால் அவர்கள் விவாகரத்து பெற்றவர்கள் அல்லது கைம்பெண்களாக இருக்க வேண்டும். அவர்களின் வயது 35 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தன் பாலின ஈர்ப்பாளர்கள் வாடகைத் தாய் முறையைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இப்படி இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகர் துஷார் கபூர் ஆகியோர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுகொண்டுள்ளனர்.

"இந்தச் சட்டத்தின் விதிமுறை மனிதனின் இனப்பெருக்க உரிமையை மீறுகிறது" என்கிறார் குஜராத்தின் ஆனந்த் நகரில் வாடகைத்தாய் கிளினிக் நடத்திவரும் மருத்துவர் நைனா பட்டேல்.

மருத்துவர் பார்த்தா பாவிசியும் இந்த விதிமுறைக்கு அதிருப்தியை வெளிப்படுத்தினார். “இன்று பல ஆண்கள் பார்த்தேஷ் போன்று விரும்பிய வாழ்க்கை துணை கிடைக்கவில்லை என்பதால் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கின்றனர். அவர்கள் தந்தையாக வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வது? இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே உள்ளனர். அப்படியிருக்கும்போது, ஆண்களின் தந்தையாகும் உணர்வுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.

தனித்து வாழும் ஆண்களும், தனித்து வாழும் பெண்களும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தடுக்கும் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வாடகைத் தாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

புதிய சட்டத்தின்படி குழந்தை இல்லாத தம்பதிகள் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடியும்.

புதிய சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

புதிய சட்டத்தின்படி குழந்தை இல்லாத தம்பதிகள் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடியும்.

அவர்களின் வயது 25 முதல் 50க்குள் இருக்க வேண்டும். அவர்களுக்கு குழந்தை இருக்கக் கூடாது. இதேபோல் எந்த குழந்தையையும் தத்தெடுத்திருக்கவும் கூடாது.

ஒரு பெண் கைம்பெண்ணாகவே அல்லது விவாகரத்து பெற்றவராகவோ மற்றும் அவரது வயது 35 முதல் 45 வயதுக்குள் இருந்தால் மட்டுமே வாடகைத் தாய் முறையை நாட முடியும்.

கைம்பெண் அல்லது விவாகரத்து பெற்ற பெண் ஆகியோர் வாடகைத் தாய்க்காக தனது முட்டைகளை தானம் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இருப்பினும், அவரது வயது 35 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் வாடகைத் தாய்க்காக அரசு சிறப்பு மருத்துவக் குழுவை அணுக வேண்டும். வாரியத்தின் ஒப்புதலுக்குப் பிறகுதான் வாடகைத் தாய் செயல்முறை தொடர முடியும்.

தம்பதியர் மற்றும் வாடகைத் தாய் தங்களின் தகுதிச் சான்றிதழைப் பெற்றவுடன், அவர்கள் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பத்தை (ART) அணுகலாம்.

வாடகைத்தாய் மற்றும் தம்பதி தங்களின் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும், அவர்களின் பயோமெட்ரிக் பதிவுகள் பதிவு செய்யப்படும். வரும் நாட்களில் ஏதேனும் கேள்விகள் எழுந்தால், இந்தப் பதிவின் மூலம் அவற்றைத் தீர்க்கலாம்.

சட்டத்தை மீறுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

குழந்தை பிறப்பதற்கு முன்பே தம்பதி இறந்துவிட்டால், குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு தம்பதியரால் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு இருக்கும். வாடகைத் தாய் குழந்தையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

வாடகைத் தாய்

பட மூலாதாரம்,WIKKIOFFICIAL INSTAGRAM

 
படக்குறிப்பு,

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் முறையில் கடந்த ஆண்டு இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர்.

வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்ற பிரபலங்கள்

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் வாடகைத் தாய் முறையில் கடந்த ஆண்டு இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன் என பெயர் சூட்டினர்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனாஸும் வாடகைத் தாய் மூலம் பெற்றோராகியுள்ளனர்.

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அவரது கணவர் ஜீன் குட்எனஃப் இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். ஷில்பா ஷெட்டி வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தைக்கு தாயானார்.

திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் வாடகைத் தாய் மூலம் திருமணம் ஆகாமலேயே இரட்டையர்களுக்கு தந்தையானார். முதலில் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்த சன்னி லியோன், பின்னர் வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.

ஷாருக்கான் மற்றும் கௌரி கான் இருவரும் 2013 இல் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cw816e2jg04o

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கடையில மெலிபன் விஸ்கட் வாங்கின மாதிரி சொல்லுறாங்க 🤔🤔 வாடகை தாய் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏதோ கடையில மெலிபன் விஸ்கட் வாங்கின மாதிரி சொல்லுறாங்க 🤔🤔 வாடகை தாய் 

இல்லை தனி, அந்த மனுசனும் திருமணம் செய்ய ஆர்வமாகத் தான் இருந்திருக்கிறார்! அரசு வேலையில்லை என்று புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

குழந்தை வேண்டும் என்பதற்காக வாடகைத் தாய் முறையை நாடியிருக்கிறார். இந்தியாவில் புதிய சட்டங்களின் படி திருமணமாகாமல் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதாம். சற்று முந்திவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

இல்லை தனி, அந்த மனுசனும் திருமணம் செய்ய ஆர்வமாகத் தான் இருந்திருக்கிறார்! அரசு வேலையில்லை என்று புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

குழந்தை வேண்டும் என்பதற்காக வாடகைத் தாய் முறையை நாடியிருக்கிறார். இந்தியாவில் புதிய சட்டங்களின் படி திருமணமாகாமல் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதாம். சற்று முந்திவிட்டார்.

ஆனால் வாடகை தாய் மூலம் பெற்றெடுக்கும் குழந்தைகள் மீது அதிக பாசம் இருக்குமா என்பது எனக்கு கேள்விக்குறிதான்  ஒரு தாய் கருவுற்று பிள்ளையை சுமந்து பெறுவதற்கும் வாடகைட்காயிடம் இருந்து குழந்தையை பெற்று வளப்பதற்கும் வேறுபாடு ஈர்ப்பு குறைவாக இருக்காதா என்ன??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் வாடகை தாய் மூலம் பெற்றெடுக்கும் குழந்தைகள் மீது அதிக பாசம் இருக்குமா என்பது எனக்கு கேள்விக்குறிதான்  ஒரு தாய் கருவுற்று பிள்ளையை சுமந்து பெறுவதற்கும் வாடகைட்காயிடம் இருந்து குழந்தையை பெற்று வளப்பதற்கும் வேறுபாடு ஈர்ப்பு குறைவாக இருக்காதா என்ன??

தந்தைக்கு தன் பிள்ளை என்று பாசம் குறையாது, ஆனால் தந்தையிடம் குழந்தை ஒப்படைக்கப்படுவதால் குழந்தை தாயின் பாசத்தை இழந்துவிடும். இதனால் தானோ திருமணமாகாதவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது தடை செய்யப்பட்டுவிட்டது.
தத்தெடுத்து வளர்க்கும் பெற்றோர் பாசமாகத் தானே வளர்க்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

தத்தெடுத்து வளர்க்கும் பெற்றோர் பாசமாகத் தானே வளர்க்கின்றனர்.

ஆரம்பம் நன்றாக இருக்குறது இடைபருவம் , பெரிய இடைவிலகலை நான் பார்த்திருக்கிறேன் 

எனது நண்பரின் மாமா பிள்ளை தத்தெடுக்க வளர்க்க அடுத்தடுத்து பிள்ளை பிறந்தது அவனது ராசியென இப்படும் சொல்லுவார் சொந்த பிள்ளையை விட அதிக பாசமாக வளர்க்கிறார் நீங்க சொன்ன மாதிரியும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.