Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொக்லைன் மூலம் நெல் பயிர்களை அழித்த என்.எல்.சி நிறுவனம் - உண்மையில் என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
என்.எல்.சி  சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
 
படக்குறிப்பு,

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் க
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

விருதாச்சலத்தில் இருந்து சேத்தியோதோப்பு வழியாக கத்தாழை கிராமத்திற்குச் சென்றோம். மதிய நேர உச்சி வெயில் ஏற்படுத்திய களைப்புக்கு நடுவே, நெற்பயிர்களின் முற்றிய கதிர்களுடைய பால் வாசம் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், அந்தப் பால் வாசம் வீசிய நெற்பயிர்களுக்கு நடுவே, நிலத்தை அழித்து வேலை செய்துகொண்டிருந்த இயந்திரங்களின் சத்தமும் அதிகமாகவே கேட்டது. கிராமத்தின் முகப்புப் பகுதியிலேயே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஊருக்குள்ளே செல்பவர்கள், வெளியே வருபவர்களை போலீசார் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அங்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

கடந்த புதன்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் அழிக்கப்பட்டது, விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கோ.ஆதனூர் ஆகிய கிராமங்களுக்கு பிபிசி தமிழ் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டது. அதன் முழு விவரங்களையும் இங்கு காண்போம்.

 

நசுங்கிக் கிடந்த நெற்பயிர்கள்

என்.எல்.சி  சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
 
படக்குறிப்பு,

பெரும்பாலான விவசாயிகள் இனி என்ன பேசியும் பயனேதும் இல்லையென்று சலித்துக்கொண்டே பேசியபடி அங்கு நடப்பதை, கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்

மேல் வளையமாதேவியில் நெல் வயல்களின் குறுக்கே அகன்ற சாலை உருவாக்கப்பட்டு அதில் கருப்பு நிற மண்ணுடன் வண்டல் மண் சேர்த்து குவிக்கப்பட்டிருந்தது.

அந்த மண் குவியலுக்கு நடுவில் நெற்பயிர்கள் நசுங்கிக் கிடந்தன. அருகிலேயே இயந்திரங்களின் உதவியுடன் பாலம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இயந்திரங்களுடைய சத்தத்தில் விவசாயிகளுடைய வேதனைக் குரல்கள் அடங்கிப் போயிருந்தன.

பெரும்பாலான விவசாயிகள் இனி என்ன பேசியும் பயனேதும் இல்லையென்று சலித்துக்கொண்டே பேசியபடி அங்கு நடப்பதை, கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

என்.எல்.சி நிறுவனத்துடைய இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணியின் ஓர் அங்கமாக வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்க வாய்க்கால் வெட்டும் பணி ஒன்றரை கி.மீ தொலைவுக்கு நடைபெற்று வருகிறது.

என்.எல்.சி  சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
 
படக்குறிப்பு,

“எங்களுக்கு விவசாயத்தை விட்டால் வேறு எந்தத் தொழிலும் தெரியாது," என்று கூறுகிறார் முத்தையன்.

இந்த நிலையில் சாத்தப்பாடி அருகே விவசாயிகள் பயன்படுத்திய பொதுப் பாதை வழியாக வடிகால் வாய்க்கால் வெட்டுவதற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பணி துவங்கப்பட்டது.

இந்த பாதையைத் துண்டித்துவிட்டால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே தற்காலிக பாதை அமைத்துவிட்டு இந்த பாதையை அகற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறி ஜேசிபி இயந்திரத்தை விவசாயிகள் சிறிதுநேரம் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்ததை நடத்தி தற்காலிக பாதை அமைத்து குழாய் பதிக்கபடும் என வாக்குறுதி அளித்த பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்?

மேல் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த முத்தையன் பிபிசியிடம் பேசும் போது, “எங்களுக்கு விவசாயத்தை விட்டால் வேறு எந்தத் தொழிலும் தெரியாது. என்எல்சி நிறுவனத்தார் எங்களிடம் நிலத்தை வாங்கிக் கொண்டது உண்மைதான்.

ஆனால் ஒரே அளவீடாக பணம் தராமல் மூன்று கட்டங்களாக நிலத்தை எடுத்துக்கொண்டு பணத்தைப் பிரித்து தந்துள்ளார்கள்.”

என்.எல்.சி  சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
 
படக்குறிப்பு,

தங்களுக்கான வாழ்வாதாரம் குறித்து எந்த உதவியும் செய்வதாக என்.எல்.சி. கூறவில்லை என்று கூறுகிறார் முத்தையன்.

கடந்த 2003ஆம் ஆண்டு முதலில் நிலம் எடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு 6 லட்சமும், அடுத்ததாக நிலம் எடுத்தவர்களுக்கு 15 லட்சமும், தற்போது 25 லட்சம் ரூபாயும் இழப்பீடாக என்.எல்.சி நிர்வாகத்தால் வழங்கியதாக முத்தையன் தெரிவித்தார்.

“இந்த வித்தியாசம் எங்களை அதிகமாகப் பாதித்துள்ளது. மேலும் எங்களுக்கான வாழ்வாதாரம் குறித்து எந்த உதவியும் செய்வதாக அவர்கள் கூறவில்லை. எங்களுக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. எங்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலை தந்தால் நன்றாக இருக்கும்," என்றார் அவர்.

"நன்கு முற்றிய பயிர்களை அவசர அவசரமாக அழித்து ஏன் கால்வாய் அமைக்க வேண்டும்? இன்னும் 15 நாள் கழித்து இந்தப் பணியை என்.எல்.சி நிர்வாகம் வேற்கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது," என விவசாயிகள் தெரிவித்தனர்.

நெல் பயிர்களை அழிப்பது கர்ப்பிணியை கொலை செய்வதற்கு சமம் - சுந்தரி

வளையமாதேவி கிராமத்தில் இருந்து கரிவெட்டி கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது மாடு மேய்த்துக் கொண்டிருந்த சுந்தரி நம்மிடம் பேசினார்.

என்.எல்.சி  சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
 
படக்குறிப்பு,

"பச்சை கட்டிய நெல்பயிரை அழிப்பது, பத்து மாத கர்ப்பிணியை கொலை செய்வதற்குச் சமம். என்.எல்.சி. ஏன் இப்படி செய்யவேண்டும்?" என்று கண்ணீர் மல்கக் கூறினார் சுந்தரி(வலது).

“எனக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக என்.எல்.சி நிர்வாகம் எங்களிடமிருந்து வாங்கிக் கொண்டது.

அப்போது எங்களுக்கு விவரம் தெரியாது. நான் படிக்கவில்லை. இப்போது மற்ற இடங்களுக்கு கூடுதலாக பணம் தருகிறார்கள். மேலும் எங்களுக்கு விவசாயம், கூலி வேலை மட்டும்தான் தெரியும். அதிலும் ஆடு, மாடு மேய்த்துதான் எங்கள் பிழைப்பை நடத்துகிறோம்.

திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 25க்கு மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை எடுத்து வந்து எங்களுக்குத் தெரியாமல் வயலில் தோண்டிவிட்டார்கள். எங்களுக்கு விடியற்காலையில்தான் விவரம் தெரிய வந்தது," என்று தன் வயலில் நடந்ததை விவரித்தார் சுந்தரி.

"பச்சை கட்டிய நெல்பயிரை அழிப்பது, பத்து மாத கர்ப்பிணியை கொலை செய்வதற்குச் சமம். என்.எல்.சி. ஏன் இப்படி செய்யவேண்டும்?" என்று கண்ணீர் மல்கக் கூறினார் சுந்தரி.

எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டு அதைத் தோண்டி விட்டதால் இனி வரும் நாட்களில் மாடு மேய்க்க சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்தவரும் மாடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருபவருமான தமிழ்மணி தெரிவித்தார்.

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
 
படக்குறிப்பு,

தன்னுடைய 20 ஏக்கர் நிலத்தை பத்து வருடங்களுக்கு முன்பு ஏக்கருக்கு 6 லட்சம் கொடுத்து என்.எல்.சி நிர்வாகம் வாங்கிக்கொண்டதாகக் கூறுகிறார் முதியவரான ராமலிங்கம்

முத்துகிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும் முதியவரான ராமலிங்கம், “என்னுடைய 20 ஏக்கர் நிலத்தை பத்து வருடங்களுக்கு முன்பு ஏக்கருக்கு 6 லட்சம் கொடுத்து என்.எல்.சி நிர்வாகம் வாங்கிக்கொண்டது. என்னுடைய வீட்டையும் நான் அப்போது கொடுத்துவிட்டேன்.

ஆனால் இப்போது சிலருக்கு 25 லட்சம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இதில், 70 வயதான் என்னால் இப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை,” என பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது?

வளையமாதேவி கிராமத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் இருந்த விவசாயியான ராஜகீர்த்தி பிபிசி தமிழிடம் பேசினார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் உதவியுடன் எங்கள் இடங்களை ஏக்கருக்கு 6 லட்சம் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.

ஒப்புக்கொள்ளாத நபர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. பணத்தை இப்போது வாங்காவிட்டால் நீதிமன்றத்தில் சென்று வழக்கு நடத்தி வாங்கவேண்டும் என மிரட்டினார்கள். அதனால்தான் என் நிலத்தை நான் கொடுத்தேன்,” என்கிறார் ராஜகீர்த்தி.

குறைந்த விலைக்கு நிலங்களைக் கொடுத்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என அவர் கோரிக்கையை முன்வைத்தார்.

அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனம்

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்

விவசாயிகள் எதிர்ப்பை மீறி என்எல்சி நிறுவனத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகக் கூறி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முழு இழப்பீடு வழங்காத நிலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் என்எல்சி நிறுவனம் தனது இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உறுதி செய்யவேண்டும் என்ற நிலையில் அதிமுக உறுதியாக இருக்கின்றது.

மேலும் மறு சீரமைப்பு, மறுகுடியமர்வு சட்டப்படி போதிய சம அளவிலான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று விரிவாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

வயல்களில் ராட்சத இயந்திரங்களை இறக்கி நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்எல்சி நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது.

 

கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பது என்பது குழந்தைகளை கருவில் கொள்வதற்கு இணையான கொடுமை. உள்ளூர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும். அனைத்தையும் இழந்து விட்டு கொதித்து நிற்கும் விவசாயிகள் வெகுண்டு எழுந்து போராடும் நிலையையும் அதனால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படக்கூடிய நிலையும் தமிழக அரசும், என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி விடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் .

என்.எல்.சி நிர்வாகத்தின் நடவடிக்கை எதிர்த்து பாமக சார்பாக கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

என்எல்சிக்காக விலை நிலங்களை தமிழக அரசு கையகப் படுத்துவது கண்டிக்கத்தக்கது. என்எல்சி நிர்வாகத்திடம் மத்திய அரசு பேசி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற துணை நிற்க வேண்டும் என்று தாமாக தலைவர் ஜி .கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டிடிவி தினகரன் வெளியீட்டுள்ள அறிக்கையில் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்களுக்காக விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேளாண்மை தொழிலுக்கு பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்திற்கான விரிவாக்க பணிகளை உடனே கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அழிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு என்ன பதில்?

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி தொடர்பாக செய்தியாளரிடம் பேசியபோது, "தற்போது கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே என்.எல்.சி நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி 2006 முதல் 2013இல் முடிவடைந்து விட்டது. அந்த நிலங்களுக்கான தொகை அப்போது விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் இழப்பிற்காக நிச்சயமாக இழுப்பீடு வழங்கப்படும் அதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் 10 ஆண்டுகளாக விவசாயிகள் கருணை அடிப்படையில் அந்த இடத்தில் என்எல்சி நிர்வாகத்தால் பயிர் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே பணிகள் தொடங்கவுள்ள நிலையில் அதற்குத் தேவையான இடங்களில் மட்டுமே தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.

மேலும் பயிர் இழப்பீடு குறித்து விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று 266 ஹெக்டேருக்கு தற்போது கூடுதலாக இழுப்பீடு வழங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, அது விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியர் இருந்தபோதே டிசம்பர் மாதத்தில் விவசாயிகளிடம் பயிர் செய்யவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது விவசாயிகள் அனைவருக்கும் தெரியும். எனவே பணிகள் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு வேண்டும் என்றும் கூறினார்.

என்.எல்.சி. தரப்பின் விளக்கம்

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்

தற்போது பரமனாறு மாற்றுப்பாதை பணி நடந்து கொண்டிருக்கிறது என்றும் அது 10 மீட்டர் அகலம் 900 மீட்டர் நீள அளவுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறுவதாகவும் தெரிவித்தார் பிபிசி தமிழிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய என்.எல்.சி. நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் அப்துல் காதர் கூறினார்.

மேலும், "இதனால் மற்ற இடங்களுக்குப் பாதிப்பு இல்லை. நிர்வாகம் கையகப்படுத்திய இழப்பீடு வழங்கிய இடங்களில்தான் பணிகள் நடைபெறுகின்றது.

இது விவசாயிகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. இடங்களில் மட்டுமே பணிகள் நடைபெறுகிறது," என்றும் கூறி முடித்துக் கொண்டார்.

கடலூர் மாவட்டத்தில் தீவிர போலீஸ் பாதுகாப்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கிராமத்தை அடுத்துள்ள வளையமாதேவி, கற்றாழை, கறிவெட்டி, மேல் வலையமாதேவி, ஆதனூர் மும்முடி சோழகன், சாத்தப்பாடி உள்ளிட்ட கிராம விவசாய நிலங்கள் என்.எல்.சி நிறுவன விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டது 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழுப்பிடும் கொடுக்கப்பட்டுவிட்டது.

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்

இந்நிலையில் கையகப்படுத்திய நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெல் தற்பொழுது கதிர் பருவத்தில் நன்கு வளர்ந்துள்ளது. இந்த நேரத்தில் என்எல்சி நிறுவனம் நேற்று முன்தினம் திடீரென்று விரிவாக்கப் பணியைத் தொடங்கியது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 25க்கும் மேற்பட்ட மண்வெட்டும் பொக்லைன் இயந்திரங்களுடன் புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணியும் தொடங்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து சேத்தியாதோப்பு, விருதாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சும் நடைபெற்றது. இதில் 17 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இந்நிலையில் விழுப்புரம் டிஐஜி ஜியா உல்ஹக் தலைமையில் விழுப்புரம் எஸ்.பி.கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ், கடலூர் எஸ்பி ராஜாராம் மற்றும் ஆயிரம் போலீசாருடன் சேத்தியாதோப்பு பகுதியில் முகாமிட்டுள்ளனர். பிரச்னையுள்ள பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் வீட்டினுள் முடங்கியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cv2ndq8vly5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல் பயிர்களை அழித்த என்.எல்.சி; கண்ணீர்விட்ட நீதிபதி - வழக்கு விசாரணையில் என்ன நடந்தது?

நெய்வேலியில் ராமதாஸ் கைது; வன்முறையில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் - போலீஸ் துப்பாக்கிச்சூடு
 
படக்குறிப்பு,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை மேற்கொண்டு வருகிறது

28 ஜூலை 2023, 09:40 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நெய்வேலியில் என்.எல்.சி.,க்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு மாலை விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், இன்று என்.எல்.சி. தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாக நீதிபதி தண்டபாணி வேதனை தெரிவித்தார்.

என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று கடலூரில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாமக தொண்டர்கள் சிலர் வஜ்ரா வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து பாமகவினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதற்கிடையே அங்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி புறப்பட்டு சென்றார். "போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்; 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்," என்றார் அவர்.

என்ன நடந்தது ?

நெய்வேலியில் ராமதாஸ் கைது; வன்முறையில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் - போலீஸ் துப்பாக்கிச்சூடு
 
படக்குறிப்பு,

என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர், வளையமாதேவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்கனவே கையகப்படுத்திய விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறது. அங்கு பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பணி விரிவாக நடைபெற்று வருகிறது.

தற்போது அங்கு முற்றிய நெற்பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு அதிமுக,பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று (ஜுலை 28) முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மண்ணையும் மனிதனையும் காப்பாற்றும் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

நெய்வேலியில் ராமதாஸ் கைது; வன்முறையில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் - போலீஸ் துப்பாக்கிச்சூடு
 
படக்குறிப்பு,

முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்

நெய்வேலி என்.எல்.சி. நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பேசிய அன்புமணி, “300 கிராமங்களில் 300 கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் போடப்பட்டது. ஆனால் தற்போது காவல் துறையை ஏவி பொக்லைன் இயந்திரம் வைத்து நிலத்தை கையகப்படுத்தி வருகின்றனர். இன்றைய போராட்டத்தால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது மண்ணையும் மனிதனையும் காப்பாற்றும் போராட்டம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நிலக்கரியை எரித்து மக்களின் உடல்நிலையை பாதிக்க காரணம் என்.எல்.சி தான். மூன்று தலைமுறைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நாளை தொடங்கப்பட்டால் ஒட்டுமொத்த மாவட்டமும் கூடி சாலை மறியல் போரட்டம் நடத்தப்படும்” என எச்சரித்தார்.

இந்த முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்

நெய்வேலியில் ராமதாஸ் கைது; வன்முறையில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் - போலீஸ் துப்பாக்கிச்சூடு
 
படக்குறிப்பு,

இந்த கலவரத்தில் நான்கு போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன.

அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை எறிந்தனர். அவர்களை விரட்ட போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இந்த கலவரத்தில் போலீசார் ஒருவரின் மண்டை கல்வீச்சில் காயம் அடைந்தது. அதேபோல் நான்கு போலீஸ் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

தொடர்ந்து, போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். முன்னதாக முற்றுகை போராட்டம் நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

என்.எல்.சி.-யில் பா.ம.க. தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டதை அடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தது. என்.எல்.சி. நுழைவுவாயிலில் வன்முறை நடத்த இடத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு செய்தார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். அன்புமணி ராமதாஸ் அவர்கள் கைது கண்டித்து உளுந்தூர்பேட்டை, திருப்பத்தூர் பகுதியில் பாமகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

நெய்வேலியில் ராமதாஸ் கைது; வன்முறையில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் - போலீஸ் துப்பாக்கிச்சூடு

 
படக்குறிப்பு,

போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் - வருந்திய நீதிபதி

புல்டோசர்கள் கொண்டு அழிக்கப்படும் விளைநிலங்கள்
 
படக்குறிப்பு,

பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்க்கும்போது கண்ணீர் வந்ததாக நீதிபதி வேதனை தெரிவித்தார்

நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

என்.எல்.சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, என்.எல்.சி நிறுவனம் மற்றும் அங்கு பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அழிக்கப்படும் விளை நிலங்கள்
 
படக்குறிப்பு,

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதைக் காண முடியவில்லை என்றார் நீதிபதி

மேலும், இதுதொடர்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.

வழக்கு விசாரணையின்போது, பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்க்கும்போது கண்ணீர் வந்ததாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதைக் காண சகிக்கவில்லை என்றும், நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c2egly0pervo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.