Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீட் தேர்வு: ஆளுநரிடம் கேள்வி கேட்டவருக்கு மிரட்டலா? என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,RAJ BHAVAN

 
படக்குறிப்பு,

தமிழ் நாடு ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 13 ஆகஸ்ட் 2023

தமிழ் நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் ‘தின்க் டூ டேர்’ (Think to Dare)தொடரின் ஒரு பகுதியாக நேற்று(ஆகஸ்ட் 12) நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என ஆளுநர் கூறினார்.

அப்போது, மாணவர்கள் யாரும் கேள்வி கேட்க முன்வராதபோது, சேலத்தை சேர்ந்த அம்மாசையப்பன் என்பவர் கேள்வி கேட்டார். “நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கொடுப்பீர்கள் ?” என கேட்டார் அம்மாசையப்பன்.

அதற்குத் தான் ஒரு போதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க மாட்டேன் எனக்கூறியுள்ளார்.

 

என்ன சொன்னார் ஆளுநர் ?

என்ன சொன்னார் ஆளுநர் ?

பட மூலாதாரம்,RAJ BHAVAN

 
படக்குறிப்பு,

எந்த பயிற்சியும் இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார்

இந்த மசோதா குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது ஒத்திசைவு பட்டியல் (Concurrent List) விவகாரமாக இருப்பதால், குடியரசு தலைவரே அதன் மீதான முடிவை எடுக்கக் கூடியவராகவும் இருக்கிறார்.

அதே சமயம், நானாக இருந்தால், நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன். அறிவில் பிரகாசமான நமது மகள் அறிவுசார் குறைபாடு கொண்டவர்களாக உணர்வதை நான் விரும்பவில்லை.

திறமையாகவும், புத்திசாலித்தனமாகவும் தேர்வை எழுதி சிறந்தவர்களாக அவர்கள் விளங்க விரும்புகிறேன்,” என பதிலளித்துள்ளார்.

மேலும், நீட் பயிற்சி நிலையங்களில் பயிற்சி அவசியமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், நீட் தேர்வுக்கு பயிற்சி தேவை என்பது கட்டுக்கதை என்றும் எந்த பயிற்சியும் இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ ‘நீட் இல்லாத போது நாங்கள் நன்றாக விளங்கினோம்’ என்ற தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முன், மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே இருந்தது.

2016–17ல், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த எண்ணிக்கை குறைந்தது. பின்னர், 7.5% இடஒதுக்கீடுக்கான அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதன் மூலம் நலிந்த பிரிவைச் சேர்ந்த அரசு பள்ளிகளின் தகுதியான மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க வாய்ப்பு அமைந்தது. இந்த காரணங்களால் அந்த எண்ணிக்கை 600-ஐ தாண்டியது.

நீட் தேர்வுக்கு முன், இது மிகவும் வணிகமயமாக்கப்பட்டது. அதை வலுவான மற்றும் சக்திவாய்ந்த கூட்டம் கட்டுப்படுத்தியது. இந்த கூட்டம் தான், அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று கூச்சலிட்டு மக்களை தவறாக வழிநடத்தியது.

முந்தைய ஆண்டுகளில் இத்தகைய தற்கொலை செய்திகள் பற்றி நான் கேள்விப்படவில்லை. இதற்கு முன், அசம்பாவிதம் நடந்தபோதெல்லாம், நீட் தேர்வுடன் அந்த மரணம் இணைக்கப்பட்டது. அந்தக் கூட்டம், தங்கள் சொந்த நலன்களுக்காக அப்பாவி மாணவர்களின் தற்கொலையை கொச்சைப்படுத்தியது.

நீட் தேர்வு அறிமுகத்தால், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக வழங்கப்பட்டு வந்த ஊழல் குறைந்துள்ளது. நீட் தேர்வு மூலம் ஏழை மாணவர்கள் நல்ல மருத்துவ கல்லூரியில் சேர முடியும். நீட் தேர்வுக்கு முன்பு முழுக்க முழுக்க ஊழல் மலிந்திருந்தது.

இந்தப் பொய்ப் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நமது மாணவர்கள்தான். அரசு பள்ளிகளில் இருந்து வரும் ஏழை மற்றும் சிறந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு முறை நீதி வழங்கியுள்ளது,” என பதிலளித்துள்ளார்.

 

கேள்வி கேட்ட பெற்றோருக்கு என்ன நடந்தது ?

ஆளுநரிடம் கேள்வி கேட்ட பெற்றோர்

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

நிகழ்ச்சிக்கு வந்திருந்த தனியார் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தன்னை இழிவாக பேசியதாக கூறினார் அம்மாசையப்பன்

இதுகுறித்து ஆளுநரிடம் கேள்வி கேட்ட சேலத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை அம்மாசையப்பன் பிபிசியிடம் பேசினார்.

அப்போது, அவர் ஆளுநர் மாளிகைக்கு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தனியார் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தன்னை இழிவாக பேசியதாகவும், அவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் டாக்டருக்கு படிக்க வைக்கிறீர்கள் என கேட்டதாகவும் கூறினார் அம்மாசையப்பன்.

ஆளுநர் மாளிகையில் இருந்த அதிகாரிகள் கூட ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அங்கு வந்திருந்த ஏதோ ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தினர்தான் என்னை சுற்றிவளைத்துக் கொண்டனர். ‘அவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் உங்க பசங்கள டாக்டருக்கு படிக்க வைக்கிறீங்க ?’, ஆளுநரிடம் கேள்வி கேட்கற அளவுக்கு தைரியமா ?’ என்றெல்லாம் என்னைக் கேட்டார்கள்,” என்றார் அம்மாசையப்பன்.

தொடர்ந்து பேசிய அவர்,“ஆளுநரிடம் இப்படி கேட்க வேண்டும் என்ற எந்த திட்டமிடேலா உள்நோக்கமோ கிடையாது. நான் என் மகளை அழைத்ததால் உடன் சென்றிருந்தேன்.

அங்கு மாணவர்களைத் தான் ஆளுநர் கேள்வி கேட்க சொன்னார். இரண்டு நிமிடத்திற்கு மேலாக யாரும் கேட்காததால், நான் எழுந்து கேள்வி கேட்கலாமா என கேட்டேன். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகு தான் கேள்வி கேட்டேன்,” என்றார்.

 

நீட் பயிற்சிக்கு எவ்வளவு செலவு செய்தார் அம்மாசையப்பன் ?

நீட் பயிற்சிக்கு எவ்வளவு செலவு செய்தார் அம்மாசையப்பன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மேலும், கல்விக் கட்டணத்தைத் தவிர நீட் பயிற்சிக்காக இதர செலவீனங்களும் அதிகரிக்கும் எனறார் அம்மாசையப்பன்.

தொடர்ந்து தனது மகளுக்கு நீட் பயிற்சிக்காக செலவு செய்தது குறித்து பேசிய அவர், “இப்போதெல்லாம் தனியாக பயிற்சி நிறுவனங்களுக்குப் போக வேண்டியதில்லை. பள்ளியிலேயே இந்த போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்கும் நிறுவனத்தினர் இணைந்து கொள்கின்றனர். அதனால், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சரிசரியாக ஆண்டுக்கு ரூ 2.60 லட்சம் செலவானது. நான் மத்திய அரசுப்பணியில் இருப்பதால், என்னால் செலவு செய்ய முடிந்தது, ஆனால், எல்லோருக்கும் செலவு செய்யும திறன் இருக்காது. அந்த ஆதங்கத்தில் தான் கேட்டேன்,” என்றார்.

மேலும், கல்விக் கட்டணத்தைத் தவிர நீட் பயிற்சிக்காக இதர செலவினங்களும் அதிகரிக்கும் எனறார் அம்மாசையப்பன்.

பன்னிரண்டாம் வகுப்புக்கு ரூ 2.6 லட்சம் கட்டணம் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இது நீட் பயிற்சிக்கும், சராசரி கல்விக்கும் சேர்ந்து செலுத்தும் கட்டணம். இதைத் தவிர, இதற்காக வாங்கும் புத்தகங்கள் செலவு, அது ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகும்.

நான் சொல்லும் இந்த ரூ 2.6 லட்சம் கட்டணம், கடந்த ஆண்டுக்கட்டணம். இந்த ஆண்டு என்னுடைய மகள் உட்பட சில மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால், கட்டணத்தை மேலும் உயர்த்தியுள்ளனர்,” என்றார்.

தான் கேள்வி கேட்ட தருணம் குறித்து விளக்கிய அவர், “நான் விரக்தியிலோ, என் மகளால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்கிற விரக்தியிலோ அந்த கேள்வியை கேட்கவில்லை.

அனைத்து தடைகளையும் தகர்த்து, திறமையை நிரூபித்துவிட்டுதான் அங்கு சென்றேன். கேள்வி கேட்டேன். அதுவும், என்னால் முடிந்தது என்பதால் செலவு செய்துவிட்டேன், பணம் செலவு செய்ய முடியாதவர்களின் மருத்துவர் கனவு என்ன ஆகும் என்ற ஆதங்கத்தில் கேட்டேன்,” என்றார்.

 

ஆளுநர் சொல்வது உண்மையா ?

ஆளுநர் சொல்வது உண்மையா ?

பட மூலாதாரம்,TNDIPR

 
படக்குறிப்பு,

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழ் நாடு அரசு அமைத்திருந்தது.

மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டதற்கு தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால், அதன் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழ் நாடு அரசு அமைத்திருந்தது. அந்தக்குழு தனது அறிக்கையையும் 2021 ஆம் ஆண்டு சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில், நீட் வந்த பிறகு தான் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவப் படிப்புகளில் சேரவதாக ஆளுநர் கூறியதில் உண்மையில்லை என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய நீதிபதி ஏ.கே. ராஜன், “தமிழ் நாடு அரசு சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் ஒதுக்கீடு கொடுத்ததால் தான் தற்போது அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் படிக்கிறார்கள். இல்லாவிட்டால், மாணவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டும். இந்த 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முன் எத்தனை மாணவர்கள் படித்தார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்,” என்றார் ராஜன்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கைப்படி, நீட் தேர்வு இல்லாத 2014-15ல் விண்ணப்பித்திருந்த 1,798 அரசுப் பள்ளி மாணவர்களில் 38 பேரும், 2015-2016ல் விண்ணப்பித்திருந்த 1641 பேரில் 36 பேரும், 2016-17ல் விண்ணப்பித்திருந்த 1173 பேரில் 34 பேரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

ஆனால், நீட் அறிமுகப்படுத்தியதற்கு பிறகு 2017-18ல் விண்ணப்பித்திருந்த 474 அரசுப் பள்ளி மாணவர்களில் மூன்று பேருக்கும், 2018-19ல் விண்ணப்பித்திருந்த 415 பேரில் ஐந்து பேரும், 2019-20ல் விண்ணப்பித்திருந்த 350 பேரில் ஆறு பேரும், 2020-21ல் விண்ணப்பித்திருந்த 306 பேரில் 10 பேரும் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

2020-21ல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய பின்னர், விண்ணப்பித்திருந்த 965 பேரில் 336 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வு மாணவர்களை பின்நோக்கி இழுத்துச் செல்வதாகக் கூறுகிறார் நீதிபதி ஏ.கே. ராஜன். “அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயர் கல்வி பயில்வதற்காக பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து வருகிறார்கள். ஆனால், அதே காலக்கட்டத்தில் தான் நாம் நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்றும், அது வரும் ஆண்டுகளில் தொடர்ந்து கடினமான போட்டித் தேர்வாக மாறும் என்றும் கூறினார் ஓய்வு பெற்ற நீதிபதி.

யார் சொல்வதைப் போலும் நீட் தேர்வு வரும் ஆண்டுகளில் எளிமையாக்கப்படாது. எளிமையாக்கப்பட்டால், பயிற்சி நிறுவனங்களுக்கு யாரும் செல்ல மாட்டார்களே. அதனால், அது எப்போதும் நடக்காத ஒன்று,” என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன்.

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதகமான சூழல் உள்ளதா ?

கல்வியாளர் உமா என்ன சொல்கிறார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நீட் தேர்விற்கு பிறகு மாணவர்கள் மத்தியில் இருந்த இடைவெளி அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் உமா.

அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைவதாக ஆளுநர் கூறியுள்ள நிலையில், அதனை முற்றிலுமாக மறுக்கிறார் கல்வி செயற்பாட்டாளரும், அரசுப்பள்ளியில் 21 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியருமான சு.உமாமகேஷ்வரி.

அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களே இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் நீட் தேர்வுக்காகவே படித்தவர்களாகத்தான் உள்ளனர்.

அவர்களும், கட்டணம் செலுத்தி பயிற்சி மையங்களில் படித்துதான் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அப்படியான சூழல் அமைவதில்லை,” என்றார் உமா மகேஷ்வரி.

மேலும், நீட் தேர்விற்கு பிறகு மாணவர்கள் மத்தியில் இருந்த இடைவெளி அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் உமா.

“முன்பெல்லாம், அரசுப் பள்ளி என்றால், அனைத்து அரசுப் பள்ளிகளும் ஒன்று தான். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புகளிலும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளிலும் தான் இடைவெளி இருக்கும். ஆனால், அரசுப் பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பும் பயிற்சியும் ஒன்றாக இருந்தது.

தற்போது நீட் தேர்வுக்கு பிறகு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் உள்ளிட்ட திறன்களின் அடிப்படையில், மொத்த மாணவர்களில் ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து, அவர்களை மாதிரி பள்ளியில் அனுமதித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தருகிறது.

இந்த வாய்ப்புகள் தேர்வு செய்யப்படாத மாணவர்களுக்கு கிடைக்காது. தற்போது, ஒரே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையிலேயே இடைவெளியை உருவாக்குகிறது,” என்றார் உமா.

மேலும், ஒப்பீட்டளவில் தனியார் பள்ளிகளை மேலானவையாக பார்க்கத் துவங்கியிருக்கம் மக்கள், வரும் காலங்களில், பயிற்சி மையங்களை அப்படி பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள் என்கிறார் உமா.

நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் கூட, தங்கள் பொருட்களை அடமானம் வைத்துக்கூட தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேரக்கத்தான் விரும்புகின்றனர். இது, தனியார் பள்ளியின் மீது இருந்த மதிப்பால் நடந்தது.

தற்போது, பள்ளிப் படிப்பைத் தாண்டி பயிற்சி வகுப்பு மூலமாகவே கல்வி என்பதை வேலை வாய்ப்பு, திறன் வளர்ப்பு என பார்க்கத் துவங்கிவிட்டதால், எதிர்காலத்தில் மக்கள் பள்ளிப் படிப்பையே உதாசீனம் செய்யலாம்,” என்கிறார் அவர்.

 

"ஆளுநர் பேசியது சரி": முன்னாள் துணை வேந்தர்

இதுகுறித்து கல்வியாளரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பாலகுருசாமியிடம் பேசிய போது, ஆளுநர் பேசிய அனைத்தும் சரியானது என்றார்.

“ஒரு தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியுள்ளது என்பதற்காக அந்த தேர்வையே ரத்து செய்ய வேண்டும் எனச் சொல்வதை ஏற்க முடியாது.

மத்திய அரசு நடத்தும், யூபிஎஸ்இ தேர்வுக்கும், மாநில அரசின் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கும் கூடத்தான் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. அதற்காக, அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விட முடியுமா. இந்த வாதம் அர்த்தமற்றது,”என்றார்.

மேலும், நீட் தேர்வால் மருத்துவத்துறையில் மாணவர்களுக்கு அதிக நன்மை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“முன்பெல்லாம் நம் மாநில மாணவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று படிப்பதற்கு சில சிக்கல்கள் இருந்தன. ஆனால், தற்போது, நீட் வந்துள்ளதால், ஒரு தேர்வு மதிப்பைக் கொண்டு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம்.

எந்த படிப்பாக இருந்தாலும், தகுதியை நிர்ணயிக்க ஒரு தேர்வு வேண்டும், அது மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வாக உள்ளது,” என்றார்.

ஆளுநரின் பேச்சு குறித்து பேசியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் விவகாரத்தில் ஆளுநரின் பேச்சு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போன்றது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டுமே தவிர மக்கள் கொள்கைக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசக்கூடாது,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c4nlnj2l057o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.