Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொராக்கோவில் பாரிய பூகம்பம் -300 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

09 SEP, 2023 | 09:25 AM
image
 

மொராக்கோவை நேற்றிரவு தாக்கிய பாரிய பூகம்பத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் மொராக்கோவை தாக்கிய மிகப்பாரிய பூகம்பத்தினால் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

நள்ளிரவில் மொராக்கோவின் உயரமான அட்லஸ் மலைப்பகுதியை பூகம்பம் தாக்கியுள்ளது( 6.8)

மராகெச் என்ற நகரமே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது 296 பேர் உயிரிழந்துள்ளனர் 156 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

F5jga9bWoAAzWnL.jpg

தொடர்ச்சியான சிறிய அதிர்வுகள் காணப்படலாம் என மொராக்கோவின் விமானப்படை எச்சரித்துள்ளது.

சேதமடைந்த கட்டிடங்களையும்    மக்கள் அச்சத்துடன் வீதிகளுக்கு தப்பியோடுவதையும் சிலர் புகைமண்டலத்திற்கு நடுவில் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/164153

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொராக்கோ நிலநடுக்கம்: 800-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு - நள்ளிரவில் நடந்தது என்ன?

மொராக்கோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 செப்டெம்பர் 2023, 04:34 GMT
புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 820 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மரக்கேஷ் மற்றும் தெற்கில் பல பகுதிகளில் மக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 
மொராக்கோவில் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

மீட்புப் பணிகள் ஏன் கடினம்?

நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அட்லஸ் மலைத்தொடரில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு செல்வதில் பெரும் சிரமம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக பழைய கட்டடங்களால் ஆன கிராமங்களுக்கு மீட்புப் படையினர் செல்ல சில நாட்கள் ஆகலாம்.

மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

மொராக்கோ கடற்கரையில் உள்ள கேனரி தீவுகள் மற்றும் அதன் கிழக்கு அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள மக்கள் கூட நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறுகிறார்கள்.

அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மராகேஷின் தெருக்களில் தப்பிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கின்றன.

நகரின் பழமையான சுவர்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மொராக்கோவில் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

ட்விட்டர் சமூக ஊடகத்தில் நிலநடுக்கம் தொடர்பாக உறுதிப்படுத்தாத வீடியோ கிளிப்புகள் காணப்படுகின்றன. அதில், சேதமடைந்த கட்டிடங்கள், கட்டிடங்கள் குலுங்குவது, இடிபாடுகளுடன் கூடிய தெருக்கள் இடம்பெற்றுள்ளன. மக்கள் அச்சத்துடன் ஓடி வருவது, சிலர் கட்டிடங்கள் இடிந்ததால் எழுந்த புழுதிக்கு மத்தியில் நடப்பது போன்ற வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எனினும் இவை எந்த பகுதியில் எடுக்கப்பட்டவை என்பதை பிபிசி உறுதிப்படுத்தவில்லை.

மராகேஷில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துவிட்டன என்று அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

மொராக்கோவில் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AL OULA TV/HANDOUT VIA REUTERS

நிலநடுக்கம் காரணம் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

"நாங்கள் மிகவும் கடுமையான நடுக்கத்தை உணர்ந்தோம். நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் இருந்தனர். குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர், பெற்றோர்கள் கலக்கமடைந்தனர்" என்று அப்தெல்ஹாக் எல் அம்ரானி என்பவர் AFP செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட 10 நிமிடங்களில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடலோர நகரங்களான ரபாட், காசா பிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது

மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தலைவர்கள் இரங்கல்

மொராக்கோ நிலநலடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இந்தியப் பிரதமர் மோதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மொரோக்கோவில் ஏராளமானோர் இறந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c80y92lwykyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு - இரவிரவாக வீதிகளில் தங்கியிருந்த மக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரிலிருந்து வெளியேறுகின்றனர்

Published By: RAJEEBAN

10 SEP, 2023 | 11:43 AM
image

சிஎன்என்

புழுதி படியத்தொடங்கியதும்  அச்சநிலை மேலெழுந்தது.

மராகெச்சின் பழைய நகரில் பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள காயங்கள் உயிரிழப்புகள் பாதிப்புகள்  தெரியவரத் தொடங்கியதும் கதறல்கள் ஆரம்பமாகின.

morraco.jpg

சில நிமிடங்களிற்கு முன்னரே மொராக்கோவின் அந்த நகரம்பாரிய பூகம்பம் தாக்கியிருந்தது.

எப்போதும் மக்கள் நிரம்பி வழியும் ஜெம்மா எல்னா சதுக்கத்தில் திரண்டிருந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த பூகம்பம் தாக்கியது.

ஏனைய பலர் நிலம் மிகவேகமாக அதிரத்தொடங்கியவேளை உறக்கத்திலிருந்தனர்.

பூகம்பம் காரணமாக கட்டிடங்கள் தரைமட்டமானதில் ஆயிரத்திற்கும்அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

என்ன நடக்கின்றது என்பதை தங்களால் ஆரம்பத்தில் உணரமுடியவில்லை என சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ள சிலர் தொடர்ந்து ஏற்பட்ட சிறிய அதிர்வுகள் காரணமாகவும்  கட்டிடங்கள் இடிந்து விழுந்ததன் காரணமாகவும் பின்னர் என்ன நடக்கின்றது என்பதை தங்களால் உணரமுடிந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த இயற்கை அனர்த்தத்தின் அளவு தெரியதொடங்கியதும் பலர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து உயர்ந்த கட்டிடங்கள் மின்சாரகோபுரங்கள் இல்லாத திறந்த வெளிகளை நோக்கி நகரத்தொடங்கினர்.

தரைமட்டமான வீடுகளில்இருந்து படுகாயமடைந்தவர்கள் ஸ்டிரெச்சர்களில் கொண்டு செல்லப்பட்டனர்.

சில இடங்களில் அவர்களின் கதறல்கள் புறக்கணிக்கப்பட்டன - அம்புலன்ஸ் பணியாளர்கள் ஒரு முதிய பெண்ணின் அலறலை புறக்கணித்தனர்.

தங்களை சுற்றி காணப்படும் காட்சிகளால் கடும் குழப்பத்தில்காணப்பட்ட அம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கான போதிய இடம் அம்புலன்சில் இல்லை என்தெரிவித்தனர்.

பூகம்பத்திலிருந்து உயிர்தப்பிய பலர் அதிகாலை வரை வீதிகளில் தங்கியிருந்தனர்.

moroco2.jpg

வீடுகள் அழிக்கப்பட்டதாலும் மற்றுமொரு பூகம்பம் குறித்த வதந்திகளாலும் மக்கள் வீதிகளிலேயே பொழுதை கழிக்க தீர்மானித்ததால் தற்காலிக கட்டில்கள் உருவாக்கப்பட்டன.

இரண்டாவது நாள் காலையிலும் பலர் அங்கு காணப்பட்டனர்.

நகரின் பூங்காக்கள் பிளாசாக்கள் வாகனதரிப்பிடங்கள் சோகமான அவசர முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஏனையவர்கள் நகரிலிருந்து வெளியேற தீர்மனித்தனர் குடும்பங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கார்கள் மோட்டார் சைக்கிள்கள் ஏன் குதிரை வண்டிகளில் கூட வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

moro1.jpg

அவர்கள் மொராக்கோவின் கரையோர நகரங்களான ரபாட் அல்லது கசபலன்சாவிற்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.

அவர்கள் மிகமோசமாக சேதமடைந்துள்ள வரலாற்று நகரத்தை விட்டு செல்கின்றனர்.

சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் மராக்கேச்சின் மெதினாவும்நகர சுவர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பூகம்ப அதிர்வை நூற்றாண்டுகால கட்டிடங்களால் தாங்க முடியவில்லை.

https://www.virakesari.lk/article/164227

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல்கள்.

15 வருடங்களுக்கு முன்னர் மராக்கேச்சின் சுற்றுப்புறக் கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். இங்கு அதிகமான வீடுகள் மண்ணால் கட்டப்பட்டவை. விரைவில் மீளமைத்துக் கொள்ளலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொராக்கோ - பூகம்பத்தினால் 2000 பேர் உயிரிழப்பு - அட்லஸ் மலையின் உச்சியில் உள்ள கிராமங்களில் பலர் இன்னமும் இடிபாடுகளிற்குள்

Published By: RAJEEBAN

10 SEP, 2023 | 02:28 PM
image
 

மொராக்கோ ஆறு தசாப்த காலத்தில் சந்தித்துள்ள பாரிய பூகம்பத்தில் உயிர்தப்பியவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மரகெச்சில் உள்ள மலைகளிற்கு அருகில் உள்ள கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளதுடன் 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உயிர் தப்பியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைள் தீவிரமாக இடம்பெறுகின்றன.

வெள்ளிக்கிழமை இரவு பூகம்பம் தாக்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவும் பெருமளவு பொதுமக்கள் வீதிகளில் உறங்கியுள்ளனர்.

UIJyaOt4.jpg

இதேவேளை அட்லஸ் மலையின் மிக உயரமான பகுதிகளில் உள்ள கிராமங்களை சென்றடைவதில் மீட்பு பணியாளர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

மலைப்பாறை துண்டுகள் வீழ்ந்து வீதிகளை மூடியுள்ளதால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இடிபாடுகளிற்கு கீழ் இன்னமும் பலர் சிக்குண்டுள்ளனர் மக்கள் தங்கள் பெற்றோர்களை தேடுகின்றனர் என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல வீதிகள் மூடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மௌலாய் பிரஹீம் என்ற இடத்தில் சேறுநிரம்பிய கால்பந்தாட்ட மைதானத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன இரவில் வீதிகளில் தங்கியிருந்த பொதுமக்கள் அவற்றில் வசிக்க தொடங்கியுள்ளனர்.

2012 பேர் உயிரிழந்துள்ளனர் 2059 பேர் காயமடைந்துள்ளனர் அவர்களில் 1404 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என மொராக்கோ தெரிவித்துள்ளது.

moraco_44.jpg

மொராக்கோ மூன்று நாள் துக்கதினம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நாடாளாவிய ரீதியில் மசூதிகளில் உயிரிழந்தவர்களிற்காக தொழுகைகளில் ஈடுபடுமாறு மன்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

300000 த்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/164245

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொராக்கோ நிலநடுக்கம்: கிராம மக்கள்தொகையில் பாதிப்பேர் மரணம்; மீதிப்பேரை காணவில்லை

மொராக்கோ  நிலநடுக்கம்
 
படக்குறிப்பு,

மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள கொடுமையான பாதிப்புகளின் ஒரு சாட்சியாக திகழ்கிறது தஃபேகாக்டே கிராமம்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நிக் பீக்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 11 செப்டெம்பர் 2023

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் அவர்கள் இருப்பிடத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

சுமார் 20 நிமிடங்கள் இடைவெளியில் இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் மொராக்கோ நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை தலைக்கீழாக புரட்டிப் போட்டுள்ளது.

 

பேரழிவின் சாட்சியான கிராமம்

மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள கொடுமையான பாதிப்புகளின் ஒரு சாட்சியாக திகழ்கிறது தஃபேகாக்டே கிராமம்.

நிலநடுக்கதால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே நாங்கள் நடந்து சென்றபோதுதான், இதில் சிக்கியவர்கள் யாரும் காயமின்றி தப்பித்திருக்க முடியாது என்பதை எங்களால் உணர முடிந்தது என்றனர் இந்த இயற்கை பேரிடரில் தப்பி உயிர்பிழைத்த கிராம மக்கள்.

“காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஒருவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம்” என்கின்றனர் தஃபேகாக்டே கிராம மக்கள்.

காணாமல் போன கிராமவாசிகள்

“இங்கு வசித்துவந்த கிராமவாசிகள் 200 பேரில் 90 பேர் இறந்துவிட்டனர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. பலர் காணாமல் போய் உள்ளனர். தங்களை காப்பாற்றி கொள்ள அவர்களுக்கு நேரமில்லாததால் அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை” என்று இடிபாடுகளுக்கு இடையே நடந்து சென்றபடி கூறுகிறார் ஹசன் என்ற கிராமவாசி.

தனது மாமா இன்னும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருப்பதாக கூறும் ஹசன், அவர் உயிருடன் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை இல்லை எனவும் கூறுகிறார்.

நிலநடுக்கத்தின் விளைவாக குடியிருப்புகளின் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்ற நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் இங்கு இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

அத்துடன், மீட்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற வெளிநபர்களும் இங்கு வரவில்லை எனவும் ஹசன் வேதனை தெரிவிக்கிறார்.

“குடியிருப்புகளை இழந்து தவித்துவரும் எங்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், அரசின் உதவிகள் எங்களுக்கு மிகவும் தாமதமாகவே கிடைத்து வருகிறது” என்றும் வேதனை தெரிவிக்கிறார் ஹசன்.

இதுபோன்ற இக்கட்டான சூழலில், மொராக்கோ அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் உதவியை அவசியம் பெற வேண்டும். ஆனால் அரசின் சுயகௌரவம் அதை தடுக்கிறது என்றும் அவர் ஆதங்கப்படுகிறார்.

 
மொராக்கோ  நிலநடுக்கம்
 
படக்குறிப்பு,

நிலநடுக்கத்தில் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை இழந்த அப்து ரஹ்மான் (இடது)

மனைவி, பிள்ளைகளை இழந்த கிராமவாசி

இப்படி தஃபேகாக்டே கிராமத்தில் ஒருபுறம் வேதனையும், ஆதங்கமும் நிறைந்திருக்க, மறுபுறம் கிராமவாசிகள் அனைவரும் ஒரு நபரை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தனர்.

அவரது பெயர் அப்து ரஹ்மான். நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததில் தனது மனைவி மற்றும் ஆண் குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு தவித்து தரும் ரஹ்மானுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர் கிராம மக்கள்.

ஆனால் அவர்களின் ஆறுதல் வார்த்தைகளில் சமாதானம் அடையாதவராக இருந்தார் ரஹ்மான்.

“அங்கு தான் எங்கள் வீடு இருந்தது. தற்போது அது கட்டட இடிபாடுகளின் ஒரு பகுதியாக (குப்பையாக) மாறிவிட்டது,” என்று தான் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த வீட்டை கண்ணீர் மல்க சுட்டிக்காட்டினார் அவர்.

“பூகம்பத்தில் எங்கள் வீடு இடிந்து அனைத்தும் போய்விட்ட பிறகு தற்போது என்னிடம் எஞ்சியிருப்பது வெள்ளை நிறப் போர்வைகளும், சில மரப்பொருட்களும்தான்” என்று வேதனையுடன் கூறுகிறார் ரஹ்மான்.

நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தி அறிந்தபோது தான் பெட்ரோல் பங்கில் வழக்கம்போல் பணியில் இருந்ததாக கூறும் ரஹ்மான், மூன்று கிலோமீட்டர் (1.9 மைல்கள்) தொலைவில் இருந்த தனது வீட்டுக்கு ஓடி வந்ததாக கூறுகிறார்.

“வீட்டை அடைந்தபோது, எல்லாம் இடிந்து விழுந்திருந்தன. மனைவி, பிள்ளைகளை காணவில்லை. பதற்றத்துடன் என் பிள்ளைகளை பேர் சொல்லி கதறினேன். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நேற்று தான் அவர்களின் சடலத்தை புதைத்தோம்,” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் அப்து ரஹ்மான்.

“நாங்கள் அவர்களை கண்டெடுத்தபோது, எனது பிள்ளைகள் மூன்று பேரும் ஒருவர் மீது ஒருவர் உறங்கிய நிலையில் இருந்தனர். இரவு தூங்கியிருந்த நிலையிலேயே அவர்களை நிலநடுக்கம் பலிகொண்டு விட்டது” என்று கவலை தோய்ந்த முகத்துடன் அவர் கூறுகிறார்.

 
மொராக்கோ நிலநடுக்கம்
 
படக்குறிப்பு,

நிலநடுக்கத்தில் தனது 10 வயது பெண் குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் பெண்

சோகம் நிரம்பியிருக்கும் முகாம்

தாஃபேகாக்டே கிராமத்தை வெளியுலகத்துடன் இணைக்கும் வளைந்த மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கூடாரத்தில் டஜன் கணக்கான குடும்பத்தினர் ஒன்றாக வீற்றிருக்கின்றனர்.

அந்த முகாமின் ஒவ்வொரு திசையில் இருந்தும், தங்களது உறவுகளை இழந்து தவிக்கும் பொதுமக்களின் அழுகுரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து கலீஃபா எனும் 10 வயது சிறுமியின் உடல் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதையறிந்ததும் முகாமில் இருந்த அவரது குடும்பத்தினர கதறி அழுதனர்.

இதை கண்டு தங்களது உறவுகளை இழந்து தவிக்கும் பிற குடும்பத்தினரும் கண்ணீர்விட்டு கதறவே, அந்த இடம் முழுவதும் சோகம் சூழ்ந்ததாக மாறி உள்ளது.

மொராக்கோவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்படுத்தி உள்ள பெரும்பாதிப்பை அட்லஸ் மலைப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு கிராமங்களில் காண முடிகிறது.

இந்த மலைக்கிராமங்களில் வாழும் பாரம்பரிய சமூக மக்கள் நவீன உலகின் அழுத்தங்களுக்கு ஆளாகாமல் வாழ்ந்து வரலாம். ஆனால். சர்வதேச சமூகத்திடம் இருந்து அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டியதே அவர்களின் தற்போதைய உடனடி தேவையாக உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cd14592jjkeo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொராக்கோ: நிலநடுக்கத்தை முன்னதாகவே நம்மால் ஏன் கணிக்க முடியவில்லை?

நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்களை முன்கூட்டியே வெளியேற்றுவது உயிர் இழப்புகளை தவிர்க்க உதவும்.

12 செப்டெம்பர் 2023

மொராக்கோவில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இம்மாதிரியான் நிலநடுக்கங்களை முன்கூட்டியே ஏன் கணிக்க முடியவில்லை?

நிலநடுக்கத்தை தடுக்கும் அல்லது அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைத் தடுக்கும் வீடுகள் மற்றும் கட்டடங்களைக் கட்டுவது தான் நாம் உயிர் மற்றும் பொருள் சேதங்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த உத்தியாக இருக்கும்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்களை முன்கூட்டியே வெளியேற்றுவதும் உயிர் இழப்புகளை தவிர்க்க உதவும்.

இருப்பினும், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்களை விரைவாக வெளியேற்றுதல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதவை. ஏனெனில், நிலநடுக்கத்தை சில நிமிடங்களுக்கு முன்பு தான் கணிக்க முடியுமே தவிர, முன்னதாகவே கணிக்க இயலாது.

 

நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று விஞ்ஞானிகளால் சொல்ல முடியாதது ஏன்?

நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

நடைமுறையில் சொல்ல வேண்டும் என்றால், நிலநடுக்கம் என்பது முற்றிலும் கணிக்க முடியாத ஒன்று என்கிறார் லக்கெட்.

பெரும்பாலான நிலநடுக்கங்கள் பூமியின் மேல் பகுதியில் திடீரென வெளிப்படும் அழுத்தத்தால் ஏற்படுகின்றன.

டெக்டோனிக் இயக்கங்களின் காரணமாக இந்த பதற்றம் படிப்படியாக உருவாகிறது. பெரும்பாலும் இது புவியியல் ரீதியாக பாதிப்பில் உள்ள பகுதியில் நடைபெறுவதாகக் விளக்குகிறது பிரிட்டனின் புவியியல் சங்கம்.

“ஆனால் அது எப்போது நிகழும் என்று கணிக்க இயலாது. ஏனெனில், பூமியில் மேற்பகுதியில் ஏற்படும் அழுத்தத்தின் தன்மை வெளிப்படும் விதம் நமக்கு தெரியாது," என பிரிட்டிஷ் புவியியல் ஆய்வின் நில அதிர்வு நிபுணர் ரிச்சர்ட் லக்கெட் பிபிசி முண்டோ சேவையிடம் விளக்கினார்.

"பெரிய அழுத்தங்களால் பதற்றம் உருவாகிறது என்பதை நாங்கள் அறிவோம், அவை எங்கு ஏற்படகிறது என்றும் எங்களுக்குத் தெரியும், ஆனால் அந்த அழுத்தத்தின் வெளிப்பாடு எப்போது இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது," என்கிறார் ரிச்சர்ட்.

 

அதாவது குறைந்தபட்சமாக அதி தீவிரமான நிலநடுக்கம் எங்கு நிகழக்கூடும் என்பதை மட்டும்தான் வல்லுநர்களால் அறிய முடியும் என்கிறார் லக்கெட். “இதுவும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களின் அளவைப் பொருத்தே கூற முடிகிறது,” என தெளிவுபடுத்துகிறார் லக்கெட்.

அதிதீவிர நிலநடுக்கம் எங்கு ஏற்படும் என அறிய முடிந்தாலும், ஏற்பட இருக்கும் நிலநடுக்கத்தின் தீவிரத்தை கணிக்க இவை உதவாது என்கிறார் லக்கெட்.

“ஏனேனில், பூமிக்கு அடியில் ஏற்படும் அழுத்தங்களை தொடர்ச்சியான சிறிய நிலநடுக்கங்களாகவும் வெளிப்படுத்தலாம் அல்லது ஒரு பெரிய நிலநடுக்கமாகவும் வெளிப்படுத்தலாம். அதனை உறுதிப்படுத்த முடியாது,” என்கிறார் அவர்.

 

நம்மை எச்சரிக்கக்கூடிய விலங்குகள்

நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நிலநடுக்கங்களுக்கும் வானிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை

மேலும், காலநிலை மாற்றம் அல்லது விலங்குகளின் நடத்தை போன்ற வேறு அறிகுறிகள் நிலநடுக்கத்தை கணிக்க உதவுமா?

"நிலநடுக்கங்களுக்கும் வானிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. காலநிலை மாற்றத்துடனும் நிச்சயமாக எந்த தொடர்பும் இல்லை. இவை இரண்டுமே முற்றிலும் வேறுபட்டவை." என தெளிவுபடுத்துகிறார் விஞ்ஞானி லக்கெட்.

ஆனால், விலங்குகளின் நடந்து கொள்ளும் விதம் மிகவும் சுவாரஸ்யமானது என்கிறார் அவர்.

“நிலநடுக்கம் வருவதற்கு முன் சில விலங்குகள் எப்படி வித்தியாசமாக நடந்துகொள்கின்றன என்பதைப்பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. பொதுவாக நாய்கள் அதிகமாக குரைக்கின்றன அல்லது விலங்குகளின் சத்தம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால், அதிக தூரத்தில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் போது, அது பூமியில் பல்வேறு அலைகளை உண்டாக்குகிறது. முதல் அலைகள் மிகச் சிறியவை, அவை எந்தத் தீங்கும் செய்யாது.

அதனால், பல சமயங்களில் நாம் அவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், விலங்குகளால் அவற்றை உணர முடிகிறது, அவை அதனை கவனிக்கின்றன" என்கிறார் லக்கெட்.

 
நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விலங்குகளால் உணர முடிந்தாலும், அதனை வைத்துக்கொண்டு நம்மால் பூகம்பத்தை முன்னதாக கணிக்க முடியாது.

"விலங்குகள் இந்த அதிர்வுகளை உணர்கின்றன. ஆனால், அவை உணரும்போது, நிலநடுக்கம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. அதனால், நிகழ்வதற்கு முன்னதாக கணிக்க இயலாது ஒன்று," என்கின்றனர் நிபுணர்கள்.

“விலங்குகள் சற்று முன்னதாகவே நமக்கு ஏற்பட உள்ள ஆபத்தை எச்சரிக்கின்றன. அந்த நேரம் என்பது நிலநடுக்கம் ஏற்படும்போது வரும் சிறிய மற்றும் பெரிய அலைகளுக்கு இடையில் ஏற்படும் சிறிய இடைநிறுத்தத்தைப் பொறுத்தது. அதே பாணியில்தான் நிலநடுக்கம் குறித்து குறைந்த நேரத்திற்கு முன் எச்சரிக்கும் அபாய ஒலி எழுப்பும் இயந்திரங்களும் செயல்படுகின்றன. ஆனால், இந்த சாதனங்கள் விலங்குகளைவிட அதிக உணர்வுத்திறன் கொண்டவை,” என்கிறார் லக்கெட்.

சுருங்கச் சொன்னால், பூகம்பங்களை முன்னறிவிப்பது இப்போது மட்டுமின்றி, எப்போதும் சாத்தியமில்லை என நிபுணர்கள் நம்புகிறார்கள்.

"என்ன மாதிரியான நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கண்டறிவதற்கான வழிகளை செம்மைப்படுத்துவது மட்டுமே இப்போதைக்கு முடியும்,” என்கிறார்கள் நிபுணர்கள்.

https://www.bbc.com/tamil/articles/clezzx7e2z7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொராக்கோ பூகம்பம் - தனது 32 மாணவர்களை இழந்த ஆசிரியை

Published By: RAJEEBAN

16 SEP, 2023 | 10:53 AM
image
 

மொராக்கோவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள பூகம்பத்தில் ஆசிரியை ஒருவர் தனது மாணவர்கள் 32 பேரை இழந்துள்ளார்.

இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது

மொராக்கோவை தாக்கிய பூகம்பம் குறித்து கேள்வி எழுப்பியவேளை மொராக்கோ ஆசிரியை உடனடியாக தனது மாணவர்களை பற்றியே பதில் சொல்கின்றார்

_131100521_70f957ad-a4fd-48d0-be9c-21886

பூகம்பம் தாக்கியவேளை அவர் மரகேசில் இருந்தார்,ஆனால் அவரது மாணவர்கள் பலர் வசித்த அடசீல் கிராமம் பூகம்பம் மையம்கொண்டிருந்த பகுதியில் காணப்பட்டது.

அராபிய பிரென்ஞ் மொழியை கற்பிக்கும் ஆசிரியை தற்போது தனது பாடசாலைக்கு வந்து தனது மாணவர்களை தேடுகின்றார்.

தனது 32 மாணவர்கள் - ஆறு முதல் 12வயது உயிரிழந்துள்ளமை அவருக்கு தெரியவந்துள்ளது.

நான் அந்த கிராமத்திற்கு சென்று எனது குழந்தைகள் குறித்து கேட்டேன் சொமாய எங்கே யூசுவ் எங்கே அவன் எங்கே அவள் எங்கே என கேட்டேன் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என பதில் வந்தது என அவர் தெரிவித்தார்.

நான் எனது வகுப்பின் மாணவர் பதிவேட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராக அழைப்பதை நினைத்துப்பார்த்தேன் என அவர் குறிப்பிட்டார்

செப்டம்பர் 8 ம் திகதி மொராக்கோவை தாக்கிய பூகம்பத்தினால் கொல்லப்பட்ட 3000க்கும் அதிகமானவர்களில் அந்த மாணவர்களும் உள்ளனர்.

மொராக்கோவின் தென்பகுதியில் உள்ள மராகேஸ் என்ற நகரமே மோசமாக பாதிக்கப்பட்டு;ள்ளது அடசீல் அந்த பகுதியில் உள்ள கிராமம்.

ஆறுவயது கட்ஜாவிற்கு என்ன நடந்தது என தான் கேள்விபட்டதாக ஆசிரியை எல்படல் தெரிவித்தார்.

அந்த சிறுமியின் உடலை தந்தை தாய் மற்றும் இரு சகோதரிகளின் உடல்களிற்கு மத்தியில் மீட்டதாக மீட்புபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

_131103798_ccf8b17b-2279-4035-a5a7-3e3e5

அவர்கள் அனைவரும் தங்கள் கட்டிலில் காணப்பட்டனர் – அவர்கள் அனைவரும் அந்த பாடசாலை மாணவர்கள்.

கதிஜா எனக்கு மிகவும்பிடித்த சிறுமி அவள் சிறந்தவள் உற்சாகமானவள் பாடுவதில் ஆர்வம் கொண்டவள் எனது வீட்டிற்கு வருவாள் அவளிற்கு கற்பிப்பதும் அவளுடன் பேசுவதும் எனக்கு பிடிக்கும் என்கின்றார் அந்த ஆசிரியை .

தனது மாணவர்களை அந்த ஆசிரியை தேவதைகள் கற்றலில் ஆர்வம் உள்ளவர்கள் என வர்ணித்துள்ளார்.

வறுமை வாழ்க்கை செலவு அதிகரிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட போதிலும் பெற்றோரும் மாணவர்களும் பாடசாலைக்கு செல்வதே வாழ்க்கையின் மிகமுக்கியமான விடயம் என கருதினார்கள் என அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.

எங்கள் இறுதி வகுப்பு பூகம்பம் தாக்குவதற்கு ஐந்து மணித்தியாலத்திற்கு முன்னர் நடந்தது நாங்கள் மொராக்கோவின் தேசிய கீதத்தை கற்றுக்கொண்டிருந்தோம் திங்கட்கிழமை அதிகாலை பாடசாலையின் முன்பாக பாடஎண்ணியிருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான குரலில் கதைத்தாலும் அந்த ஆசிரியை கடும் மனஉளைச்சலில் சிக்குண்டுள்ளார், தனது பாடசாலை மாணவர்களிற்கு என்ன நடந்தது என்பதை உணரமுடியாத நிலையில் காணப்படுகின்றார்.

என்னால் உறங்கமுடியவில்லை நான் இன்னமும் அதிர்ச்சியில் உள்ளேன் மக்கள் நான் அதிஸ்டசாலி என்கின்றனர் ஆனால்  நான்  எப்படி தொடர்ந்து வாழ்வது  என்ற கேள்வியில் சிக்குண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/164697

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.