Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு - தமிழக முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 SEP, 2023 | 12:24 PM
image
 

இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும்இ அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165263

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'என் கணவர் இறக்கவில்லை, உடல் உறுப்பு தானம் மூலம் 6 பேர் உருவத்தில் வாழ்வார்'

'என் கணவர் இறக்கவில்லை, உடல் உறுப்பு தானம் மூலம் 6 பேர் உருவத்தில் வாழ்வார்'
கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 29 செப்டெம்பர் 2023, 13:44 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் குடும்ப உறுப்பினரின் அனுமதி பெற்று தேவையான நபர்களுக்குத் தானம் வழங்கப்படும்.

அப்போது உடல் உறுப்பு தானம் செய்த நபரின் உடலுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் உயரதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்வர்.

ஆனால், தேனி மாவட்டம் சின்னமனூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த வருவாய் ஆய்வாளர் வடிவேல் என்பவரின் வீட்டிற்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், எம்.எல்.ஏக்கள், அரசுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்து குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றனர்.

அரசு ஊழியர் உடல் உறுப்புகள் தானம் செய்ததால் அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படவில்லை. சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பால் இந்த அரசு மரியாதை அவருக்குக் கிடைத்துள்ளது. என்ன நடந்தது?

 

தேனி அரசு ஊழியருக்கு என்ன நிகழ்ந்தது?

உடல் உறுப்புகள் தானம்

பட மூலாதாரம்,THENI PRO

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(43). இவருக்கு திருமணம் முடிந்து 10 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக வடிவேல் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல தனது பணிகளை முடித்துவிட்டு கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, குறுக்கே மாடு வந்ததில் நிலை தடுமாறிக் கீழே விழுந்துள்ளார்.

ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், அதன் பெல்டை சரியாக அணியாததால் ஹெல்மெட் கீழே விழுந்துள்ளது. இதனால் வடிவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வடிவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

மூளைச் சாவு அடைந்த அரசு ஊழியர்

உடல் உறுப்பு தானம்

மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் செப்டம்பர் 24 அன்று அவரது மூளை செயலிழந்து மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகள் நல்ல செயல்பாட்டில் இருப்பதால் அதை தானமாக வழங்கினால் பலரது உயிர் காக்கப்படும் என குடும்பத்தினரிடம் விளக்கிக் கூறியுள்ளனர்.

இதையடுத்து வடிவேலுவின் மனைவி பட்டுலெட்சுமி, தாய் அன்ன பாக்கியம் மற்றும் தந்தை தனசேகரபாண்டியன் ஆகியோர் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

பின்பு, அவரது கண்கள், சிறுநீரகம், தோல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனை, அரசு ராஜாஜி மருத்துவமனைகளில் உடல் உறுப்புக்காக காத்திருந்த நபர்களுக்கு பொருத்த அனுப்பி வைக்கப்பட்டது.

 

அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

உடல் உறுப்பு தானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி புஷ்பாஞ்சலி, அசோகன் என்ற மருத்துவத் தம்பதியினர் இவர்களது இளம் வயது மகன் ஹிதயேந்திரன் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கி தமிழ்நாட்டில் முதல் உறுப்பு தானத்தை துவங்கி வைத்தனர்.

அன்று முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மாநில உடல் உறுப்பு தானம் செய்யும் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாநில உடல் உறுப்பு தானம் செய்யும் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், இனி வரும் காலங்களில் உடல் உறுப்புகள் தானம் செய்யும் நபருக்கு அவரின் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலுவின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அரசின் சார்பாக வடிவேலுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.

 

அரசு மரியாதையால் நெகிழ்ச்சி அடைந்த உறவினர்கள்

உடல் உறுப்புகள் தானம்

வருவாய் ஆய்வாளர் வடிவேல் நேர்மையான ஊழியராகப் பணியாற்றியவர், மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வேலை பார்த்துக்கொண்டே தொலைதூரக் கல்வியை முடித்தார். பின்பு போட்டித் தேர்வுகளை எழுதி அதில் வெற்றி பெற்று பின் அரசு வேலையில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி சீராக முன்னேற்றம் அடைந்து வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு இப்படியான ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது உறவினர்கள் மற்றும் நண்பர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருந்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் உடல் உறுப்பு தானம் செய்ததற்காக அரசு சார்பு மரியாதை அளிக்கப்பட்டதை கண்டு மனைவி, தாய், தந்தை, உறவினர்கள் உடன் பணியாற்றிய அதிகாரிகளின் நண்பர்கள் என அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

அக்கம்பக்கத்தில் இருக்கும் மக்கள், நண்பர்கள் என அனைவரும் நேரில் வந்து மாலை அணிவித்து தங்களின் அன்பையும் மரியாதையையும் செலுத்திச் சென்றனர்.

'மறு உருவத்தில் வாழ்வார்'

உடல் உறுப்பு தானம்
படக்குறிப்பு,

உயிரிழந்த வருவாய்த்துறை ஊழியர் வடிவேல்

"எனது கணவருக்கு இப்படி நடக்கும் எனக் கனவிலும் நினைக்கவில்லை, சாலை விபத்தில் சிக்கித் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டுக் கொண்டு வர எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், மூளைச்சாவை சரி செய்யவே முடியவில்லை. சில நொடிப் பொழுதில் எல்லாமே மாறிவிட்டது," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் வடிவேலுவின் மனைவி லெட்சுமி.

"எனது கணவர் இறக்கவில்லை ஆறேழு நபர்களின் மூலமாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அதற்காகத்தான் கணவரின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுக்க முன் வந்தேன்," என்கிறார் அவர்.

தமிழ்நாடு அரசு உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்தது தெரியாது என்றும் அவர் கூறினார். "இந்த அளவுக்கு எனது கணவர் உடல் உறுப்பு தானம் செய்ததைப் பெருமைப்படுத்துவார்கள் என்று எண்ணிப் பார்க்கவில்லை. இதைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். எனது கணவர் ராஜ மரியாதையுடன் சரித்திரம் படைத்து விட்டுச் செல்கிறார்.

உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் ஆறு ஏழு பேரின் வாழ்க்கையைக் காப்பாற்றலாம். எனது கணவரின் இரு உறுப்புகள் ஒன்று 17 வயது இளைஞருக்கும், மற்றொன்று 20 வயது இளைஞருக்கும் பொருத்தப்பட்டது என மருத்துவமனையில் சொன்னார்கள். அவர்களின் வழியாக எனது கணவரும் இந்த உலகில் இன்னமும் பல ஆண்டுகள் வாழ்வார் என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்," என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

'பதவி உயர்வு கிடைக்க இருந்தது'

உடல் உறுப்பு தானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வடிவேலுவின் உறவினர் விஜயலட்சுமி பிபிசி தமிழுடன் பேசினார்.

"மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையில் முன்னேறினார். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் வீட்டைக் கட்டினார். இன்னும் வீட்டின் பணிகள்கூட முழுமையாக முடியவில்லை," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், " எனது தம்பி வடிவேல் அனைத்து விஷயத்திலும் எங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பான். அவனை நாங்கள் எங்களது குழந்தைக்கு முன்னுதாரணமாகச் சொல்லி வளர்த்து வந்தோம். தாசில்தாராக பதவி உயர்வு பட்டியலில் பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருந்த நேரத்தில் இப்படி மீளாத் துயரில் எங்களை விட்டுச் சென்று விட்டான்.

தற்போதும் உடல் உறுப்புகள் தானம் செய்து முன்னுதாரணமாக இருக்கிறான். ஏற்கெனவே எனது பெரியப்பா ஒருவரது உடல் இறப்பிற்குப் பின் அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இனி நாங்கள் அனைவரும் உடல் உறுப்பை தானமாக வழங்க உறுதிமொழி எடுக்கப் போகிறோம்," என்றார்.

அரசு சார்பில் மரியாதை செய்தது தனது மகனுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது என்று கண்ணீர் மல்கப் பேசினார் வடிவேலுவின் தாய் அன்னபாக்கியம்.

வடிவேலுவின் அப்பாவுக்கு கண் பார்வை மிகவும் குறைவு. தனது மகன் வீட்டுக் கடன் வாங்கித்தான் வீடு கட்டி முடித்ததாகவும் அரசாங்கம் தங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்றும் மகனைப் பிரிந்த சோகத்தில் இருந்த அன்னபாக்கியம் தெரிவித்தார்.

வடிவேலுவின் குழந்தைகள் இருவரும் தந்தை இறந்ததுகூடத் தெரியாமல் ஓரமாக விளையாடிக் கொண்டு இருந்ததைக் கண்ட பலரது நெஞ்சத்தில் துக்கம் அடைத்தது. சிலர் குழந்தைகளைப் பக்கத்தில் அழைத்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

 

உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பது எப்படி?

உடல் உறுப்பு தானம்

பட மூலாதாரம்,GAGANDEEP SINGH BEDI

உடல் தானம் செய்ய விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் அல்லது கண்காணிப்பாளர், முதன்மை மருத்துவ அலுவலரைச் சந்தித்து தகவல்களைக் கேட்டு அறிந்து கொள்ளலாம் என்று கூறினார் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி.

மேலும், "மூளைச் சாவு அடைந்த நபர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகளை வழங்குவோர்களுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது.

இனிவரும் காலங்களில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் ஆட்சியர் அல்லது அரசு சார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று அரசு சார்பில் மரியாதை செய்வர். தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு செய்ய உத்தரவு வழங்கப்பட்டு இருக்கிறது," என்று விளக்கினார்.

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னோடி

"உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தொடர்ச்சியாக உடல் உறுப்புகள் தானம் பெறுவதில் மத்திய அரசின் பாராட்டுகளையும் விருதையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பெற்று வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர்.

இந்த ஆண்டில் தற்போது வரை 600க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். ஆனால் உடல் உறுப்பு தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

 
உடல் உறுப்பு தானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர், சிறுநீரகம் பெற முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். 750க்கும் மேற்பட்டோருக்கு இதயம், 600 பேருக்கு கல்லீரல் தேவை இருக்கிறது. ஒருவர் தமது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால் 20 பேரின் உயிர் காப்பாற்றபடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன்தொடர்ச்சியாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது," என்றும் ககந்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

கண் தானம் செய்பவர்களுக்கும் அரசு மரியாதை கிடைக்குமா?

தற்போது மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், "கண் தானம் செய்பவர்களுக்கும் அரசு மரியாதை அளிக்க வேண்டும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் மத்தியில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து முழுமையான விளக்கம் இந்த வார இறுதியில் அறிக்கையாக அரசின் சார்பில் வெளியிடப்படும்," எனத் தெரிவித்தார்.

ஒருவரது உடல் உறுப்புகள் 20 நபர்களை வாழ வைக்கும். மூளைச் சாவடைந்த நபரின் குடும்பத்தினர் அந்தக் கடினமான சூழ்நிலை தங்களது நெருங்கிய உறவுகளின் உடல் உறுப்பை மற்றவர்களுக்கு தானமாகக் கொடுத்து காப்பாற்ற முன் வருபவர்களுக்கு அந்த முடிவை கெளரவப்படுத்தும் விதமாக அரசு மரியாதை செய்வது ஒரு நல்ல தொடக்கம். இனிவரும் நாட்களில் உடல் உறுப்பு தானம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் ககந்தீப் சிங் பேடி கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c28vkzweyxeo

தமிழக அரசின் இந்த தீர்மானத்தால் இன்னும் பலர் உறுப்புத் தானம் செய்ய முன்வந்து பலரை வாழ வைப்பர். நல்லதொரு தீர்மானம். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.