Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வி எனும் மோசடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

swiggy.jpg

கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்கிறார்கள். சரி. உயர்வு என்றால் என்ன? உயர்ந்த வாழ்க்கைத்தரம், சமூக மரியாதை. இரண்டும் பணத்தினால் கிடைப்பன. எனில் கல்வி நம்மை உயர்த்தும் எனும் போது கல்வியினால் நாம் நிறைய பணத்தைப் பெறலாம் எனக் கூறுகிறார்கள் எனப் புரிந்துகொள்கிறேன். இப்போது நான் கேட்க விரும்பும் கேள்வி எந்த விதமான கல்வி பணத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பது. 

எண்பது, தொண்ணூறுகள் வரை அரசு வேலை, அதன் பிறகு தனியாரில் ஐ.டி வேலை, வெளிநாட்டு வாழ்க்கை. இதன் நடுவே சொற்பம் பேருக்கு மருத்துவ, ஐ.ஏ.எஸ் வேலைகள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது - பணம் அதன் மதிப்பை இழந்துவிட்டது. நான் என் முதல் வேலையில் பெற்ற சம்பளத்திலிருந்து 25 மடங்கு அதிகப் பணத்தை தம் முதல் சம்பளமாக என் மாணவர்கள் வாங்குகிறார்கள். ஆனால் அப்பணத்தை வைத்து அவர்களால் சேமிக்கவோ அவசர மருத்துவ செலவுகளை சமாளிக்கவோ முடிவதில்லை. ஒருவருடைய சம்பளத்தில் முன்பு ஒரு மத்திய வர்க்க குடும்பமே நன்றாக வாழ முடிந்தது. குழந்தைகளைப் படிக்க வைப்பதில் இருந்து மருத்துவ செலவு, வீடு கட்டுவது, சேமிப்பது எல்லாம் சாத்தியமானது. இன்று இருவர் சம்பாதித்தாலே விழி பிதுங்குகிறது. ஏனென்றால் இன்று நாம் உச்சா போனால் கூட அதைப் பிடித்து அளந்து இவ்வளவு மில்லிக்கு இவ்வளவு வரி என அரசு பிடுங்குகிறது. கக்கா போனால் அதையும் கிராமுக்கு இவ்வளவு ஜி.எஸ்.டி என எடைக்கு எடை வரி போடுகிறது. வாடகை கன்னா பின்னாவென எகிற, வங்கியில் சேமிப்புத் தொகைக்கான வட்டி வெகுவாக குறைந்துவிட்டது. பண வீக்கம் எங்கோ எகிறுகிறது. மக்களுக்கு நிலத்திலோ வங்கியிலோ சேமிக்கும் நம்பிக்கை போனதால் தங்கத்தில் பணத்தைப் போடப்பார்க்க அரசு அதைத் தடுக்க வழிபார்க்கிறது. எல்லாரும் பங்குச்சந்தை பின்னால் ஓடுகிறார்கள். சரியாகப் புரியாமல் முதலீடு பண்ணுகிறவர்கள் ஒருவேளை இச்சந்தை சரியும் நிலை ஏற்பட்டால் எங்கு போவார்கள்? கடுமையாக உழைத்துப் படித்து வேலைக்குப் போய் அங்கும் மாடு மாதிரி உழைக்கும் பலர் வெளியே பார்க்க பளபளப்பாக இருக்கிறார்கள். ஆனால் போய் விசாரித்தால் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள். 

உழைப்பை எடுத்துக் கொள்வோம். இணையம் பரவலாகி திறன்பேசி வரும் வரை, மடிக்கணினிகளில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வரை நாம் உழைப்பது அளவாக நியாயமாக இருந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் ‘எங்கெங்கு காணினும் உழைப்படா’ என புற்றுநோய் போல உழைப்பு சுரண்டல் பரவிப்பரவி இப்போது நள்ளிரவு ஒருமணிக்கு கூட ஏதாவது ஒரு மின்னஞ்சல் வேலைத் தொடர்பாக வர நாம் அரக்க பரக்க விழித்து அதற்கு பதிலிடவும், அவ்வேலையை செய்துமுடிக்கவும் தலைப்படும் அளவுக்கு ஜோம்பிகளாக மாற்றப்பட்டிருக்கிறோம். ஓய்வே இல்லாமல் 20 மணிநேரம் நம்மையே அறியாமல் வேலை பார்க்கிறோம், ஆனால் சம்பளம் மட்டும் அதே 8 மணிநேரத்திற்குத் தான்.

 எவ்வளவு வேலை பார்த்தாலும் கையிருப்பு பணம் போதாமல் போய்விடுமோ, தெருவுக்கு வந்துவிடுவோமோ எனும் அச்சம் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இன்று பட்டப்படிப்பு முடித்த எத்தனையோ பேர்கள் ஸ்விக்கியில் டெலிவரி பாயாக இருக்கிறார்கள். 50% பேர் பொறியியல் படித்தவர்கள் என்றொரு சேதியை அண்மையில் படித்தேன். பொறியியல் படிக்க முடியாத எத்தனையோ பட்டதாரிகள் உளர். அவர்களுடைய நிலைமை?

 வெளிநாட்டை எடுத்துக்கொண்டால் இங்கிலாந்து போன்ற சில மேற்கத்திய தேசங்களிலும் மத்திய வர்க்க வாழ்க்கை இவ்வாறுதான் உள்ளதென சொல்கிறார்கள். கனடாவுக்கு புலம்பெயர்ந்து வேலை வாங்கி செல்வோர் வாடகைக்கு வீடு கிடைக்காமல், நோய்க்கு மருத்துவர் இல்லாமல், எந்த அடிப்படை வசதியும் இன்றி அலைவதாக, அப்படி வாடகைக்கு வீடு கிடைத்தாலும் சம்பளத்தில் 50% அதற்கே போய்விடுவதாகவும் கேள்விப்பட்டேன். ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே படித்து நல்ல வசதியாக இருக்கிறார்கள். அதுவும் கொரோனாவுக்குப் பிறகு உழைப்பு சுரண்டல், வரியின் பெயரிலான பணத்திருட்டு, உழைக்கும் நேரம் கடுமையாக அதிகரித்துவிட்டது. வேலை நீக்க பயம் ஒரு கத்தியைப் போல எல்லார் தலைமேலும் தொங்க அதைக் காட்டியே இரட்டிப்பு நேரம் நம்மை வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். என்ன விசித்திரம் என்றால் பாதி வேலை நேரம் நேரடியானதாகவும், மிச்ச நேரம் மாயமாகவும் உள்ளது. அது ஏற்படுத்தும் பதற்றம், நெருக்கடியால் உடல், மனநோய்கள் அதிகரிக்க, அந்த அவதிகளைக் கடப்பதற்காக அதிகமாக குடித்து, புகைப்பிடித்து, முறைகேடான உறவுகளில் ஈடுபட்டு, இணையத்தில் சூதாடி, உறக்கம் ஒழிந்து இளமையிலேயே வயோதிகம் பெற்று சீரழிகிறோம். இதை எப்படி முன்னேற்றம் என்பது?

 நாம் தமிழகத்தில் தொடர்ந்து படிப்பின் மகத்துவத்தைக் கொண்டாடிக் கொண்டே இருக்கிறோம், ஆனால் அதன் இன்னொரு இருண்ட பக்கத்தைப் பற்றி பேச மாட்டோம் என்கிறோம். கல்வி ஒரு சம்பாதிக்கும் மார்க்கமாக இன்றொரு பெரிய மோசடியாகி விட்டது என்பதே உண்மை.

அதற்கு காரணம் கல்வி அல்ல, பொருளாதார அமைப்புதான். கடுமையாக உழைப்பவர்களுக்கு ஓய்வு நேரம், சேமிப்பு, எதிர்கால பாதுகாப்பு, மனநிம்மதியை அளிக்க வேண்டியது ஒரு சமூகத்தின், அரசின் கடமை. முக்கியமாக மாத ஊதியத்தில் 40% மேல் செலவு செய்யத் தேவையிராத வேலையே நல்ல வேலை. (அப்போதே சேமிக்கும் பணத்தை வைத்து சொத்து, வீடு, அடுத்த தலைமுறைக்கான முதலீடு எனப் பண்ணி முன்னேற முடியும்.) அதுவே ஆரோக்கியமான பொருளாதாரம். ஆனால் நாம் சீனாவைப் போல அடிமை தேசமாக மாறிக்கொண்டிருக்கிறோம். எந்த அடிப்படைத் தேவையையும் உத்தரவாதம் செய்யாத ஒரு அரசின் கீழ் வாழும் நாம் கல்வி கல் என குழந்தைகளை பிடிவாதமாகத் தள்ளிவிடுவது அடிமைக்கப்பலுக்கு விலைக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு சமம். இதன் பொருள் யாரும் படிக்காதீர்கள் என்பதல்ல. நம் நிலைமை ஏன் இப்படி இருக்கிறது எனக் கேளுங்கள் என்கிறேன். அதற்குப் பதிலாக சினிமா பேட்டிகளையும் குக் வித் கோமாளியையும் பார்த்து கெக்கேபிக்கேவென சிரித்து கவனம் திருப்புகிறோம் என்கிறேன். நியாயமாக நமக்கு கோபம் வர வேண்டும், ஆனால் இன்று இம்மாதிரி திசைதிருப்பும் சூழ்ச்சிகள் நம்மை சுரணையற்றவர்களாக மாற்றுகின்றன.

 இன்று ஏழைகளின் நிலை இன்னும் மோசம் - முன்பு ஏழைகளால் சமாளித்து வாழ முடிந்தது. இன்று அவர்கள் மேலும் மேலும் நசுக்கப்படுகிறார்கள்.

இவ்வளவு படித்து ஸ்விக்கியில் வண்டி ஓட்டாமல் படிக்காமலே ஓட்டலாமே என்பதே என் கேள்வி.  படிப்பிற்கு மதிப்பு குறைந்துவிட்டே போகிறது எனில் அது ஏன்?

 நாம் படிப்பை வழிபடுவதை சற்று நிறுத்தி விட்டு இந்த பொருளாதார அமைப்பைப் பற்றி சிந்தித்து அதைக் கேள்வி கேட்க வேண்டும். 

Posted 2 hours ago by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2023/10/blog-post_9.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம் கல்வியமைப்பின் பிரச்சினை

மெக்காலே கல்விக்கொள்கையைப் பற்றி சீமானும் பேராசிரியர் கருணானந்தனும் பேசும் இருவேறு காணொளிகளைப் பார்த்தேன். மெக்காலே கல்வி முறையால் பயன்கள் இருந்தது என கருணானந்தன் சொல்வது வெள்ளையர் ஆட்சியால் பயனிருந்தது என்பதன் நீட்சியாகத் தான் உள்ளது. என்ன பிரச்சினையென்றால் வெள்ளையரோ மெக்காலேயோ நம்மை முன்னேற்றும் நோக்கில் எதையும் செய்யவில்லை, பிராயிலர் கோழிக்கு தீனி போட்டு வளர்ப்பதைப் போல நம்மை வளர்த்தார்கள் என்பதே. அதை விட முக்கியமாக யாரும் மெக்காலேவை அவரது காலனிய நோக்கங்களுக்காக குறிப்பாக விமர்சிப்பதில்லை. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக நாம் அதே மெக்காலே கல்விமுறையைத் தான் பின்பற்றுகிறோம் என்பதே விமர்சனம். விமர்சனம் மெக்காலே மீதல்ல இதுவரையிலான அரசுகளும் அவை கொண்டு வந்த கல்விக்கொள்கைகள் மீதே. மெக்காலே என்பது வெறும் பெயர் தான். இதுவரையில் தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் குமாஸ்தா, மூளை உழைப்பு சுரண்டல் வேலைகளில் ஈடுபடவே மக்களுக்கு பயிற்சிகொடுத்தோம், சுயமாக எதையும் கண்டுபிடிக்க, உருவாக்க, சிந்திக்க, தொழில் செய்ய மக்களுக்கு பயிற்சி அளிக்க முயலவில்லை என்பதே குற்றச்சாட்டு. 

முதலீட்டியத்திற்கு விளக்குப்பிடிப்பதற்கு கல்விக்கொள்கையை அமைப்பதைச் சொன்னால், தாராளவாத கொள்கைகளை விமர்சித்தால் உடனே பேச்சை வளைத்தொடிக்கும் நோக்கில் விமர்சிப்பவகள் அனைவரும் பழமைவாதிகள், சாதிய ஆதரவாளர்கள், மதவாதிகள் என அடிமடியில் கைவைப்பார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும், சாதி, மதத் தாக்குதலால் அல்ல.
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துவது நாம் யாராவது தாராளவாத முதலீட்டிய அமைப்புகளை விமர்சித்தால்  நம் ஊரில் பெரிய முற்போக்காளர்களாகத் தெரிபவர்கள் முதலில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நம்மை அடிக்க வருவார்கள் என்பதுதான். 

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சமூக, வரலாற்றுச் சூழல் உண்டு, ஒன்றை இன்னொன்றுடன் முரட்டுத்தனமாக ஒப்பிடலாகாது என அறிவேன். இருந்தாலும் ஒரு பொதுவான ஒப்பீட்டைப் பண்ணிப் பார்ப்போம். ஐரோப்பிய நாடுகளில் கல்விக்காக குழந்தைகளை எந்தளவுக்கு உழைக்க வைக்கிறார்கள், நம் ஊரில் எவ்வளவு வதைக்கிறார்கள் எனப் பாருங்கள். என்னுடைய நண்பர் ஒருவர் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு போய் சில வாரங்கள் இருந்துவந்த பின்னர் அவரிடம் கேட்டேன் அங்கு ஒரு வகுப்பில் எத்தனை மாணவர்கள், ஒருநாள் எவ்வளவு வகுப்புகள் நடக்கின்றன என்று. அவர் சொன்னார் வகுப்புகள் நடந்துகொண்டே இருக்கும், மாணவர்கள் தம் விருப்பம் போல தேர்வு பண்ணி வந்து போவார்கள், நாள் முழுக்க கல்லூரியில் இருப்பதில்லை என்று. மிச்ச நேரத்தை அவர்கள் வாசிக்கவும் ஆய்வு பண்ணவும் செலவிடுகிறார்கள். சிறுவயது முதலே அவர்களை அப்படிப் பழக்குகிறார்கள். நம் குழந்தைகளை பிறந்து விழுந்ததில் இருந்தே ஒரு நிமிடம் கூட நாம் ஓய்வாக இருக்க அனுமதிப்பதில்லை. கல்லூரியில் கூட 9-5 இடைவிடாமல் வகுப்புகள் நடக்கின்றன. அது முடிந்ததும் இரவு 10 மணிவரை இடுபணிகள். அது முடிந்தது வேலையில் சேர்ந்ததும் காலை 9 முதல் இரவு 9 வரை வேலை. யோசிக்க ஒரு நிமிடத்தைக் கூட கொடுப்பதில்லை. 

இப்படியே நாம் பழக்குவதால் இந்த பிள்ளைகளுக்கு நேரத்தைக் கொடுத்தாலும் அவர்களுக்கு அதை உபயோகமாக செலவிடவோ, சுயக்கட்டுப்பாட்டுடன் தாமாக வேலை செய்யவோ இயல்வதில்லை. பொறுப்பற்றவர்களாக மாறுகிறார்கள். யாராவது மேலே இருந்து ஏய்க்கவில்லை எனில் வேலை செய்யவே முடியாதவர்கள் ஆகிறார்கள். ஒரு மனிதக் கூட்டத்தையே இந்த கல்வி உளவியல் அடிமைகளாக்கி வைத்திருக்கிறது. ஒரு கல்வியாளனாக வேறெவரையும் விட நான் இதை நன்றாக அறிவேன். இதைச் சொன்னால் எனக்கு மரியாதை குறையும் என நான் கவலைப்பட மாட்டேன். 
தாராளவாதிகள் இன்னொரு பக்கம் இதை விமர்சிக்கவே கூடாது, விமர்சித்தால் நீ பழமைவாதி, பார்ப்பனியவாதி என்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், நாங்கள் இந்த கல்வியமைப்பை விமர்சிக்க மாட்டோம், செருப்பால் அடிப்போம். இது மாறும் வரை அடித்துக் கொண்டே இருப்போம். சாணியில் முக்கி அடிப்போம். ஒருநாள் மக்கள் முழித்துக் கொண்டு குரல் எழுப்பும் வரை அடிப்போம்.

Posted 1 hour ago by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2023/10/blog-post_43.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.