Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலஸ்தீன இஸ்ரேல் யுத்தம்: தமிழர்கள் யாருடைய பக்கம்? - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன இஸ்ரேல் யுத்தம்: தமிழர்கள் யாருடைய பக்கம்? - நிலாந்தன்

spacer.png

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியபோது 1970களின் இறுதியாண்டுகளிலும், 1980களின் முற்கூறிலும், தமிழ் இயக்கங்களான ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்றன பாலஸ்தீனத்தில்  படைதுறைப் பயிற்சிகளைப் பெற்றன. அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் தாயகத்தில் “பிஎல்ஓ ரெய்னிஸ்” என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களிற் பலர்  அந்த இயக்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்கள். அவர்களிற் சிலர்-சுரேஷ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள்- இப்பொழுதும் தமிழ் அரசியலரங்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் காலகட்டங்களில் பலஸ்தீனம் தமிழ் மக்களின் நட்பு சக்தியாக இருந்தது. அந்நாட்களில் கவிஞர் நுகுமான் தொகுத்த பாலஸ்தீனக் கவிதைகள் என்ற தொகுப்பு தமிழ்ப் போராளிகளால் விரும்பி வாசிக்கப்பட்டது. அந்நூல் பல இளம் கவிஞர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியது. அக்காலகட்டத்தில் இஸ்ரேல் இலங்கை அரசாங்கத்திற்கு போர்த் தளபாடங்களை வழங்கியது. அது கெடுபிடிப் போர்க் காலகட்டம்.

1992இல் இரஸ்ரேலிய உளவு நிறுவனமாகிய மொசாட்டின் உளவாளிகளில் ஒருவரான விக்டர் ஒஸ்ரோவ்ஸ்கி என்பவர் ஒரு நூலை வெளியிட்டார். By Way of Deception:The Making and Unmaking of a Mossad Officer எனப்படும் அந்த நூல் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்த நூலை வெளியிட்ட விக்டர் ஒஸ்ரோவ்ஸ்கி கனடாவில் தஞ்சமடைந்து விட்டார். அந்த நூலானது மொசாட் எவ்வாறு இலங்கைத்தீவில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளுக்கும் உதவிகளை புரிந்தது என்ற தகவல்களை வெளிப்படுத்தியது .விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் ஒரே மைதானத்தின் இருவேறு பகுதிகளில் பயிற்சி வழங்கப்பட்டது பற்றிய விபரங்கள் அந்நூலில் உண்டு.

மேலும் இலங்கை அரச படை அதிகாரிகள் தொடர்பாக தரக்குறைவாகச் சித்தரிக்கும் பகுதிகளும் உண்டு. இலங்கை அரச படை அதிகாரிகள் ஒருவர் துறைமுகத்தில் “வக்யூம் கிளினரோடு” இணைக்கப்பட்டிருந்த ஸ்கானிங் திரையைக் காட்டி இதில் என்ன தெரியும் என்று கேட்டபொழுது, நீருக்கடியில் ரகசியமாகச் சுழியோடி வருபவர்களின் குருதிப்பிரிவு உட்பட எல்லா விவரங்களையும் இது காட்டும் என்று ஒரு மொசாட் அதிகாரி அவருக்கு கூறுகிறார். ஏன் அப்படி பொய் சொன்னாய் என்று கேட்டதற்கு அவர்கள் இப்பொழுதுதான் காட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்ற தொனிப்பட அவர் பதில் கூறியதாக ஒரு ஞாபகம். இந்த நூலை விடுதலைப் புலிகள் இயக்கம் “வஞ்சகத்தின் வழியில்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து தனது போராளிகளுக்கு விநியோகித்ததாகவும் ஒரு ஞாபகம். அந்த நூல் இலங்கை அரசு படைகளை அவமதிக்கிறது என்று கூறி அப்போதிருந்த ஜனாதிபதி பிரேமதாச விக்டர் ஒஸ்ரோவ்ஸ்கிக்கு எதிராக வழக்குத் தொடுக்க முற்பட்டதாகவும் ஒரு ஞாபகம்.

spacer.png

இந்நூல் வெளிவந்த அடுத்தாண்டு, 1993இல் நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின் விளைவாக இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கையின்படி பலஸ்தீனர்களுக்கு ஒரு தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இக்கட்டமைப்பு இலங்கைத்தீவில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகம் நட்பாக காணப்பட்டது. தொடக்க காலத்தில் இருந்தே மகிந்த பாலஸ்தீனத்தின் நண்பனாக இருந்து வருகிறார். பலஸ்தீன-சிறீலங்கா சகோதரத்துவ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அவர். 2014 ஆம் ஆண்டு அவர் பலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். அங்கே அவருக்கு அந்நாட்டின் அதி உயர் விருது ஆகிய “Star of Palestine”-பலஸ்தீன நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது. அங்குள்ள ஒரு வீதிக்கு மகிந்தவின் பெயர் சூட்டப்பட்டது. இனப்படுகொலை மூலம் மகிந்த, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடித்ததாக தமிழ் மக்கள் குற்றஞ்  சாட்டிக் கொண்டிருந்த ஓர் அரசியற் சூழலில், ஐநாவில் மகிந்தவுக்கு எதிராகத்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், பலஸ்தீனம் மேற்கண்டவாறு மஹிந்தவைக் கௌரவித்தது.

இப்படிப்பட்டதோர் வரலாற்றுப் பின்னணியில், இப்பொழுது வெடித்திருக்கும் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான போரில் தமிழ் மக்கள் எப்படிப்பட்டதொரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? தர்மத்தின் அடிப்படையில் சொன்னால், போராடும் தேசிய இனம் என்ற அடிப்படையில் சொன்னால், பாலஸ்தீனத்தைத்தான் ஆதரிக்க வேண்டும். காசாவில் இப்பொழுது என்ன நடக்கின்றதோ அது தான் வன்னி கிழக்கிலும் நடந்தது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான அரபு நாடுகள் உண்டு. ஆனால் தமிழ் மக்களுக்கு ஆதரவாக வெளிப்படையாக எந்த ஒரு நாடும் அன்றைக்குக் குரல் கொடுக்கவில்லை. தமிழ்மக்கள் தனித்துவிடப்பட்டிருந்தார்கள். ஏறக்குறைய முழு உலகத்தாலும் சுற்றிவளைக்கப்பட்டிருந்த ஒரு நிலை. பலஸ்தீனர்களுக்கு உணவு, மருந்து, தார்மீக ஆதரவு போன்றவற்றைக் கொடுப்பதற்கு அரபு நாடுகள் உண்டு. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு யார் இருந்தார்கள்?

அதேசமயம் இஸ்ரேலுக்கு அதன் தொட்டப்பாக்களாகிய மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து தார்மீக ஆதரவையும் ஆயுத தளபாடங்களையும் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஆசிய வட்டகைக்குள் இந்தியா போர் தொடங்கிய உடனேயே இஸ்ரேலுக்கு தன் ஆதரவை தெரிவித்துவிட்டது.

இப்பொழுது மேற்சொன்னவற்றை தொகுத்துப் பார்க்கலாம். ஒரு காலம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக காணப்பட்ட பலஸ்தீனம் பின்னாளில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிஉயர் விருதை வழங்கியது. அதே சமயம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்த இஸ்ரேல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் பயிற்சிகளை வழங்கியதாக விக்டர் ஒஸ்ரோவ்ஸ்கி கூறுகிறார்.

391653287_3198766590430079_5382441304393
IMG-20231018-WA0020.jpg
391565988_3198766603763411_7386414878619

 

இப்பொழுது இஸ்ரேலை ஆதரிக்கும் மேற்கு நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன. அப்படியென்றால் இது விடயத்தில் ஈழத் தமிழர்கள் யாருடைய பக்கம் நிற்க வேண்டும்?

தர்மத்தின் அடிப்படையில் சொன்னால் பலஸ்தீனத்தின் பக்கம்தான். ராஜதந்திரத்தின் அடிப்படையில் பார்த்தால்?

முதலில் அரசியலில் தர்மம் சார்ந்த நிலைப்பாடுகள் உண்டா என்று பார்க்கலாம். நவீன அரசியலைப் பொறுத்தவரை அறம், தர்மம், நீதி என்று எதுவும் கிடையாது. அரசியல், ராணுவ, பொருளாதார நலன்சார்ந்த அருவருப்பான பேரம் மட்டும்தான் உண்டு.

உதரணமாக, யூதர்களை எடுத்துக் கொள்வோம். உலகின் மிக நீண்டகாலம்   புலப்பெயர்ந்த மக்கள் யூதர்கள்தான். சுமார் இரண்டு ஆயிரம் ஆண்டு கால புலப்பெயர்ச்சி அது. அதனால் உலகில் அதிகம் ஐரோப்பிய மயப்பட்ட ஆசியர்களாக அவர்கள் மாறினார்கள். கடந்த நூற்றாண்டில் யூதர்கள் ஐரோப்பாவெங்கும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இரண்டாம் உலகமகா யுத்தச் சூழலில் சுமார் 6 மில்லியன் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த இனப்படுகொலையின் குழந்தைதான் இஸ்ரேல். இன்னொரு விதமாகச் சொன்னால் யூதப் புலப்பெயர்ச்சியின் குழந்தையே இஸ்ரேல். ஆனால் ஓர்  இனப்படுகொலையின் விளைவாக உருவாகிய யூததேசம், இன்னொரு இனப்படுகொலைக்குக் காரணமாகியது. உலகில் அதிகம் இனப்படுகொலைக்கு உள்ளாகிய ஒரு மக்கள் கூட்டம் சிறிய பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்கின்றது. உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையில் இருந்து இஸ்ரேல் கற்றுக்கொள்ளாத அறத்தை, தர்மத்தை, நீதியை வேறு  யாரிடமிருந்து எதிர்பார்க்கலாம் ?

spacer.png

ஜனநாயகம், மனிதஉரிமைகள் போன்றவற்றை அரசியல் உபகரணங்களாகப் பயன்படுத்தும் மேற்கத்திய நாடுகள்தான்  இஸ்ரேலின் தொட்டப்பாக்கள். கடந்த 18 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கப் பிரதிநிதி பேசத் தொடங்கிய பொழுது, அங்கே பிரசன்னமாகியிருந்த பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் எழுந்து நின்று அமெரிக்கப் பிரதிநிதிக்கு தமது முதுகைக் காட்டியபடி நின்றார்கள். நிகழும் யுத்தத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை அது. ஆனால் அதே அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள்தான் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டு வருகின்றன.

இஸ்லாமிய நாடாகிய துருக்கி அமெரிக்கா தலைமையிலான நோட்டோவுக்குள் அங்கம் வகிக்கின்றது. ஆனால் ஹமாசுக்கு உதவி புரியும் நாடுகளில் துருக்கி முக்கியமானது. ஒருபுறம் அது ஹமாசுக்கு உதவி செய்கிறது; இன்னொருபுறம் அமெரிக்கக் கூட்டணிக்குள் காணப்படுகின்றது.

கியூபா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் தான் நிற்கின்றது. அது போராடி வென்ற ஒரு நாடு. ஈழப் போராட்டத்தின் தொடக்கத்தில் கியூபாவும் ஓர் இலட்சிய முன்மாதிரியாகப் போற்றப்பட்டது. ஈழப் போராளிகள் சிலர் தமக்கு கஸ்ரோ என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். ஆனால் கியூபா, ஐநாவில் தமிழ் மக்களின் பக்கம்  நிற்கவில்லை.

எனவே இங்கு தர்மம் ஒர் அளவுகோல் அல்ல.உலகில் எந்த ஒரு நாடும் அது சிறியதோ அல்லது பெரியதோ, தனது நலன் சார்ந்த முடிவுகளைத்தான் எடுக்கும். நலன்சார்ந்த உறவுகளைத்தான் வைத்துக் கொள்ளும். அறம் சார்ந்து அல்ல.

அரசுடைய தரப்புக்களே அவ்வாறு முடிவு எடுக்கும் பொழுது அரசற்ற சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத் தமிழர்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும்?

spacer.png

நீதிமான்களிடம் தான் ஈழத்தமிழர்கள் நீதியை கேட்கலாம் என்றால் உலகில் எங்கேயும் நீதியை கேட்க முடியாது. தேவராஜ்யத்திடம்தான் கேட்கலாம். அல்லது மறைந்த மலையக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டைமானைப்போல யாகம் செய்யலாம். நவீன அரசியலைப் பொறுத்தவரை பூமி தர்மத்தின் அச்சில் சுற்றவில்லை. அது முழுக்கமுழுக்க நலன்களின் அச்சில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் ஈழத்தமிழர்கள் இப்பொழுது என்ன நிலைப்பாட்டை எடுப்பது?

ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய ஆன்மீகவாதியும் எழுத்தாளரும் அறிஞரும் ஆகிய மு.தளையசிங்கம் ஒரு வார்த்தையை பயன்படுத்துவார். அதுதான் “சத்திய தந்திரம்”. மு.தளையசிங்கம் ஈழப்போரின் முன்னோடி இலக்கியவாதிகளில் ஒருவர். அவர் எழுதிய” ஒரு தனி வீடு” நாவல் ஒரு தனி நாட்டுக்கான போராட்டத்தை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியது என்று அவருடைய ஆன்மீக நண்பர்கள் கூறுவார்கள். சத்திய தந்திரம் என்றால் என்ன? மகாபாரதத்தில் கிருஷ்ணர் செய்வது அதைத்தான். பாரதப்போரில் பாண்டவர்கள் வென்றது புஜபலத்தால் அல்லது ஆயுத பலத்தால் அல்லது படை பலத்தால் மட்டும் அல்ல. பெருமளவுக்கு கிருஷ்ணருடைய புத்தி பலத்தால்தான். மகாபாரதத்தை வேறு வார்த்தைகளில் சொன்னால் கிருஷ்ண தந்திரம் எனலாம். அதைத்தான் தளையசிங்கம் சத்திய தந்திரம் என்று சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது போராட்டத்தின் இதயமாக இருக்கும் அறத்தைக் கைவிடாமல், உலக ஒழுங்குக்கு ஏற்ப நெளிவு சுழிவோடு நடந்து கொள்வது என்றால் அதுதான் ஒரே வழி. அதை கிறிஸ்துவின் வார்த்தைகளில் சொன்னால் “இதயத்தில் புறாக்களைப்போல் கபடம் இல்லாமலும் செயலில்  பாம்புகளைப் போல் தந்திரமாகவும்”  நடந்து கொள்வது.

https://www.nillanthan.com/6314/

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய ஆன்மீகவாதியும் எழுத்தாளரும் அறிஞரும் ஆகிய மு.தளையசிங்கம் ஒரு வார்த்தையை பயன்படுத்துவார். அதுதான் “சத்திய தந்திரம்”. மு.தளையசிங்கம் ஈழப்போரின் முன்னோடி இலக்கியவாதிகளில் ஒருவர். அவர் எழுதிய” ஒரு தனி வீடு” நாவல் ஒரு தனி நாட்டுக்கான போராட்டத்தை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியது என்று அவருடைய ஆன்மீக நண்பர்கள் கூறுவார்கள். சத்திய தந்திரம் என்றால் என்ன? மகாபாரதத்தில் கிருஷ்ணர் செய்வது அதைத்தான். பாரதப்போரில் பாண்டவர்கள் வென்றது புஜபலத்தால் அல்லது ஆயுத பலத்தால் அல்லது படை பலத்தால் மட்டும் அல்ல. பெருமளவுக்கு கிருஷ்ணருடைய புத்தி பலத்தால்தான். மகாபாரதத்தை வேறு வார்த்தைகளில் சொன்னால் கிருஷ்ண தந்திரம் எனலாம். அதைத்தான் தளையசிங்கம் சத்திய தந்திரம் என்று சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது போராட்டத்தின் இதயமாக இருக்கும் அறத்தைக் கைவிடாமல், உலக ஒழுங்குக்கு ஏற்ப நெளிவு சுழிவோடு நடந்து கொள்வது என்றால் அதுதான் ஒரே வழி. அதை கிறிஸ்துவின் வார்த்தைகளில் சொன்னால் “இதயத்தில் புறாக்களைப்போல் கபடம் இல்லாமலும் செயலில்  பாம்புகளைப் போல் தந்திரமாகவும்”  நடந்து கொள்வது.

நன்றி பகிர்விற்கு கிருபன் அண்ணை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.