Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜராஜ சோழனின் பிறந்தநாளை 1000 ஆண்டுகளாக தமிழ்நாடு கொண்டாடுவதன் பின்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜராஜ சோழனின் பிறந்தநாளை 1000 ஆண்டுகளாக தமிழ்நாடு கொண்டாடுவதன் பின்னணி

ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் சதய திருவிழா
கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன்.க.
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 48 நிமிடங்களுக்கு முன்னர்

வாழும் காலத்திலும் மறைந்த காலத்திலும் பிரம்மாண்ட பிறந்தநாள் விழா கொண்டாட்டம் என்பது ஒரு சிலருக்கே அமைகின்றது. தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது மறைந்து ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் பிறந்த நாள் கொண்டாடப்படுவது மாமன்னன் ராஜ ராஜசோழனுக்கு மட்டுமே.

அப்படி அவர் என்ன செய்தார்? எதற்காக இந்த ‘சதய விழா’ ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் கொண்டாடப்பட்டு வருகின்றது? சாமானியர் முதல் தமிழ்நாட்டு முதலமைச்சர் வரை அரசு விழாவாகவே அறிவித்து தொடர்ந்து கொண்டாடி மகிழ்ந்து வரும் சதய திருவிழா கொண்டாட்டம் பற்றியும் அதற்கு உரியவரான ராஜராஜ சோழனை பற்றியும் விரிவாக பார்ப்போம்.

விவசாயத்தை மையம் கொண்ட ஆட்சி

உடையார் ராஜராஜ சோழ தேவர் என்று அழைக்கப்படும் அருண்மொழி, சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவியாருக்கும் மகனாக பிறந்தவர். சோழராஜ்யத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததும் இவரே. ராஜராஜன் தனது ஆட்சி காலத்தில் செழியன், சேரன், உதகை அரசன், குடமலை மன்னன், கங்க பாடி அரசன், சாளுக்கிய அரசன் கலிங்க மன்னன், தெலுங்கு பீமன் உள்பட 12 நாடுகளை ஆண்ட 13 அரசர்களை வென்றெடுத்துள்ளார்.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் பிபிசி தமிழிடம் பேசும் போது, “சிறந்த சாதனையாளரான இவருக்கு 36 பட்டப் பெயர்கள் இருந்தது. இவருடைய காலத்தில் சோழப் பேரரசு சதுர்வேதி மங்கலம், நகரம், நாடு, வளநாடு போன்ற சுய நிர்வாக திறன் உள்ளதாக விளங்கியது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட சமுதாயம் அமைந்திட இவர் சிறந்த வழிகாட்டியாக இருந்தார் . இவருடைய பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் அருண்மொழிவர்மன். ஆனால் இவரது ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி.பி. 988 ஆம் ஆண்டிலேயே இராஜராஜன் என்னும் பெயர் வழங்கப்பட்டது. என்பதை திருச்செக்கட்டான்குடி ,திருமால்புரம் ஆகிய ஊர்களில் காணப்படும் கல்வெட்டுகளால் அறிய முடியும். இதற்கு காரணம் போர்களில் இவர் பெற்ற வெற்றிகளே ஆகும்” என்றார்.

அதேபோல் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை நன்கு விளக்கும் மெய்கீர்த்தியை இனிய தமிழ் மொழியில் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் மேற்கொண்ட அரசன் ராஜராஜ சோழன் ஆவான்.

ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் சதய திருவிழா
 

தமிழ்நாட்டின் பிரம்மாண்ட தஞ்சை ராஜராஜேஸ்வரம்

தஞ்சை பெரிய கோயிலை கட்டியது யார் என்றே தெரியாத நிலையில் தான் தமிழக மக்கள் இருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொல்லியல் இயக்குனரான ஜெர்மனியை சேர்ந்த ஹூல்ஸ் தஞ்சை கோயிலை ஆய்வு செய்து பெரும் முயற்சியினால் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பிறகே ராஜராஜசோழன் என்னும் பெயர் உலகிற்கு பிரபலமாயிற்று.

ராஜராஜ சோழனுக்கு 13 மனைவியர்கள் இருந்துள்ளனர். இவர்களில் உலோக மகாதேவி மற்றும் தந்திசக்தி விடங்கி ஆகியோர் பட்டத்தரசியாக இருந்துள்ளனர்.

 

பெண்களுக்கு சம அந்தஸ்தை வழங்கியவர் ராஜராஜன்

தஞ்சை பெரிய கோவிலில் 107 கல்வெட்டுகள் உள்ளன. இதில் 89 சோழர்கள் கால கல்வெட்டுகளாகும். அதில் 64 ராஜராஜன் காலத்திய கல்வெட்டாகும். கல்வெட்டுகள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. ஒரு சில சொற்கள் மட்டும் கிரந்தத்தில் உள்ளது.

கோவிலின் விளக்கு எரிப்பதற்காக பல பொருட்களை ராஜராஜன் கொடுத்துள்ளார். அதை சில கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இதில் பல உயர் அதிகாரிகளின் பெயர்களும், சில படை வீரர்களின் பெயரும் உள்ளன. அவர்கள் கொடுத்த தானங்கள் மற்றும் அதன் எண்ணிக்கை அவர்களுடைய பெயருடன் இணைத்து எழுதப்பட்டுள்ளது.

அதில் "நாங் குடுத்தனவும், தன் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்கள் குடுத்தனவும் மற்றும் குடுப்பார் குடுத்தனவும் கல்லிலே வெட்டி அருளுக...'' என்று கல்வெட்டு தொடங்குகிறது.

“தஞ்சை பெரிய கோவிலுக்கு மன்னரும் அவருடைய சகோதரி, மனைவிகள், மற்றும் அதிகாரிகள், பணிப்பெண்கள் கொடுத்த நன்கொடை குறித்த முழு விவரங்களும் மிக துல்லியமாக கல்லில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்க நகை என்றால் அந்த தங்கத்தினுடைய எடை, மதிப்பு, செப்பு சிலைகள் என்றால் அதன் உயரம், எடை என்ன, உள்ளிட்ட அனைத்து வகை விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை போல் கோவிலில் பணியாற்றிய 407 நடன பெண்கள், 50 இசைக் கலைஞர்கள் பற்றிய முழு விபரங்கள், உணவுப் பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலை விவரம் வழிபாட்டுச் செலவினங்கள்,நாடு முழுவதும் வரி வசூலுக்காக நிலம் அளக்கப்பட்டது பற்றிய விவரம், வரி செலுத்தப்படாத நிலங்கள், அரசு கையகப்படுத்திய விபரங்கள், போர்கள் குறித்த விபரங்கள் என ஏராளமான அனைத்து வகை தகவல்களையும் தெளிவாக ராஜ ராஜன் பதிவு செய்துள்ளார்" என பேராசிரியர் ரமேஷ் கூறுகிறார்.

ராஜராஜன் அரியணையில் ஏறியதை தொடர்ந்து வந்த 100 ஆண்டுகளும் சோழ மரபின் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. இவர் காலத்தில் 30 ஆண்டுகளும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவரது ஆட்சி முறை ராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம் என பல்வேறு துறைகளிலும் புதிய எழுச்சியுடன் காணப்பட்டது. ஆட்சியில் காலாட் படை, குதிரைப் படை, யானைப் படை, மற்றும் வலிமையான கப்பற்படையும் பராமரிக்கப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் சதய திருவிழா

வரலாற்றில் மிகச்சிறந்த மன்னன் ஒருவனுக்கு தி கிரேட் என்னும் அடைமொழியை ஆய்வாளர்கள் வழங்குவார்கள். தமிழ்நாட்டு வரலாற்றில் எத்தனையோ அரசர்கள் இருந்திருந்தாலும் சோழப்பேரரசர் இராஜராஜனுக்கு தி கிரேட் என்னும் அடைமொழியைஆய்வாளர்கள் கொடுத்தனர்.

வரலாறு எழுதிய பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்களும் இராஜராஜனை மட்டும் தி கிரேட் ராஜராஜா என்று தாங்கள் எழுதிய நூல்களிலும் ஆவணங்களிலும் பதிவு செய்துள்ளனர்.

இதற்கான காரணங்களை விளக்குகிறார் பேராசிரியர் ரமேஷ். “இவருடைய ஆட்சியில் ஊராட்சி அமைப்புகள் அனைத்துமே தன்னாட்சி பெற்றவைகளாக சிறந்து விளங்கின. தமிழக மக்களின் பெரும்பாலானவர்களுக்கு புனித நூலாக உள்ள திருமுறைகள் கிடைக்க ராஜராஜன் தான் காரணமாவார். இவர் இல்லை என்றால் திருமுறைகள் எல்லாம் சிதம்பரத்திலேயே செல்லரித்து அழிந்திருக்கும்” என்று மேலும் சில தகவல்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

 

"பதவி ஆசை இல்லாதவர்"

சுந்தர சோழன் காலத்தில் ராஜராஜன் அருண்மொழி என்ற படைத் தலைவராக மட்டுமே செயல்பட்டார். அவருக்கு ஆதித்த கரிகாலன் என்ற சகோதரரும் இருந்தார். அவர்தான் பட்டத்து இளவரசர் . அவருடைய சகோதரனும், தந்தையாரும் அடுத்தடுத்து இறக்க அரச பதவி இவரை தேடி வந்தது என்ற போதிலும் சித்தப்பா மதுராந்தகச் சோழருக்கு பதவி ஆசை இருப்பதை அறிந்த இவர் தனக்கு கிடைத்த பதவியை அவருக்காக விட்டுக் கொடுத்தார். இந்த செய்தியை திருவாலங்காட்டு செப்பேடுகள் உறுதி செய்கின்றன.

“பதவிக்காக உறவுகளை துறப்பவர்களை வரலாற்றில் நிறைய கண்டுள்ளோம். ஆனால் உறவுக்காக பதவியை மறுத்த ராஜ ராஜன் போன்றவர்களை மிக அரிதாக தான் பார்க்க முடியும். இவரது காலத்தின் குடிமராமத்து, குடவோலை முறை உள்ளிட்டவை காலம் கடந்து போற்றப்படும் திட்டங்கள் ஆகும். இவரது காலத்தில் ஏழைகளுக்கு மிகக் குறைந்தபட்ச வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன . 'ராஜராஜேஸ்வர உடையார் பெரும் பண்டாரம்' என்ற ஒரு முன்மாதிரி வங்கி அமைப்பின் மூலம் இந்த கடன் உதவியை ராஜராஜன் வழங்கியிருக்கின்றார். இந்த கடனை வாங்கும் மக்கள் இதற்காக செலுத்தும் வட்டி பொழிசை என்று கல்வெட்டுகளில் குறித்து வைக்கப்பட்டுள்ளது .இந்த பொழிசை பெரும்பாலும் விலை பொருள் வடிவிலேயே பெறப்பட்டுள்ளது" என்று பேராசிரியர் ரமேஷ் கூறுகிறார்.

 
ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் சதய திருவிழா

மன்னர் ஆட்சியில் நடைபெற்ற மக்களாட்சி

ராஜராஜனே தனது பிறந்த நாளான ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரம் வரும் தினத்தை கொண்டாடி உள்ளார். அவரது காலத்தில் கேரள பகுதியாக இருந்த கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள திருநந்திக்கரையில் உள்ள கல்வெட்டு இதை பதிவு செய்துள்ளது. ஏழு நாட்கள் இந்த திருவிழா நடைபெற்றுள்ளது.

ராஜராஜன் ஆட்சிக் குறித்த மேலும் சில தகவல்களை அறிய பிபிசி தமிழ், எழுத்தாளர் டாக்டர். குடவாயில் பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டு பேசியது.

“மன்னன் மட்டும் இந்த விழாவை கொண்டாட வில்லை. மக்களும் உணர்வுபூர்வமாக கொண்டாடியுள்ளார்கள், குறிப்பாக சென்னைக்கு அருகில் உள்ள திருவிடந்தை என்ற மீனவ கிராமம் உள்ளது. அக்காலத்திலேயே அந்த ஊர் மக்கள் சதய விழாவை தங்களது சொந்த பணத்தை செலவிட்டு மிக சிறப்பாக கொண்டாடி உள்ளார்கள். மக்கள் மட்டுமல்ல ராஜராஜனுக்கு பின் வந்த பல சோழ மன்னர்களும் சதய விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக தமிழ் பாடும் விழாவாகவே இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். ராஜராஜனின் ஆட்சி காலம் முடியாட்சியாக இருந்த போதிலும் மக்களாட்சியாகவே அது நடைபெற்றது. மக்களின் உணர்வுகளை புரிந்து மதிப்பு கொடுத்து சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளார்” என்று அவர் கூறினார்.

ராஜராஜ சோழன் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நீர் ஆதாரங்களை பெருக்கினார்.

தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலின் உள்ளே இருக்கும் வடிகால்கள் கோவிலில் உள்ள நீரை வெளிப்பிரகாரம் வழியாக அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இது மழைநீர் சேகரிப்பு திட்டத்துடன் கட்டப்பட்ட மிகச் சிறந்த கட்டிட அமைப்பிற்கு உதாரணமாகும்.

 
ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் சதய திருவிழா

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வைத்த ராஜராஜசோழன் சிலை

ராஜராஜ சோழனின் காலத்திலிருந்து சதய விழா மிக பிரம்மாண்டமாகவும் தொடர்ந்து வந்த காலக்கட்டங்களில் மிக சிறிய அளவிலேனும் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. மீண்டும் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த விழாவை நடத்தியவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி.

“அவருக்கு வரலாற்றில் அளவு கடந்த ஈடுபாடு உண்டு. அதிலும் ராஜராஜன் ஆயிரமாவது ஆட்சி ஆண்டு விழாவினை நடத்தியதும் அவர் தான். ராஜராஜனுக்கு சிலை வைத்து தொடர்ந்து அதை அரசு விழாவாக மாற்றியதில் மிகப்பெரிய பங்கு அவருக்கு உண்டு. தற்போதைய முதலமைச்சர். மு க ஸ்டாலின் அவர்களும் இதை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். மேலும் தஞ்சாவூர் மக்கள் மட்டுமல்லாது ராஜ ராஜ சோழன் எங்கெல்லாம் வென்றெடுத்தானோ அந்த பகுதி மக்கள் அனைவரும் ராஜராஜ சோழனின் ஆட்சியின்பால் ஈடுபாடு கொண்டு மன்றத்தின் வாயிலாக, குழுக்களாக பல்வேறு வழிகளிலும் சதய விழாவை கொண்டாடி வருகின்றனர்” என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் சதய திருவிழா
 

சிறந்த நிர்வாகம்

சோழ சாம்ராஜ்யத்தில் ராஜராஜனின் நிர்வாகத் திறமை அனைத்து மன்னர்களுக்கும் ஒரு உதாரணமாக விளங்கியது . நாட்டின் அனைத்து பகுதியிலும் காவல்படைகள், சிங்கம் போல் சாம்ராஜ்யத்தை சுற்றி வருவதற்கு தனது மகன் ராஜேந்திரன், நம்பிக்கையான அரசியல் அறிவும், கூர்மையான திறனும் கொண்ட அதிகாரிகள் என எல்லோரையும் தன்னிடம் நிறுத்திக் கொள்ளும் சாதுர்யம் ராஜராஜனிடம் இருந்தது. ராஜராஜன் காலத்தில் நிலவரி, குடவோலை முறையில் தேர்தல், ஊராட்சி அமைப்பு, அதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை, அவர்களுக்கான தகுதிகள் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டது.

“மும்முடி சோழன் என்ற ராஜராஜ சோழன் பிறந்தது சதய நாள் என்பதை தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டும், இவரது பட்டத்தரசி உலோக மாதேவி கட்டுவித்த திருவையாறு கோவில் மற்றும் திருவெண்காடு கோவில் கல்வெட்டுகளும் உறுதிபடுத்துகின்றன” என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் சதய திருவிழா

ராஜராஜன் பிறப்பதற்கு முன்பே கணித்த ஆருட கல்வெட்டு

திருவண்ணாமலை வட்டாட்சியரும் , திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலருமான பாலசுப்ரமணியன் பிபிசி தமிழுடன் ராஜராஜ சோழன் குறித்த சுவராசிய தகவல்களை கூறினார். “ராஜராஜன் பிறக்கும் முன்பே சான்றோர்களால் ஆருடம் கணிக்கப்பட்டு அது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஜவ்வாது மலைப்பகுதியில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.இதை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல்லியல் துறை அதிகாரிகளும் வரலாற்று ஆய்வாளர்களும் ஆவணப்படுத்தி உள்ளார்கள். இந்தக் கல்வெட்டு கிரந்த லிபி எழுத்துருவில் வெட்டப்பட்டுள்ளது."

"இதில் திருமாலே ராஜராஜனாய் இந்த பூமியில் அவதரிப்பார் என்றும் அவருடன் தேவர்கள் குருநாதரான பிரகஸ்பதி போன்ற ஜெயந்தன் என்ற ஒருவர் தோன்றுவார் என்றும், அவர்கள் இருவரும் திரிசூலம் மலையின் உயர்ந்த மலைமுகட்டில் புதிதாய் ஒரு நகரத்தை தோற்றுவிப்பார்கள் என்றும் உள்ளது. இது ராஜ ராஜனின் காலத்திற்கு சற்று முந்தியதாக கருதப்படுகின்றது. இதில் கூறப்பட்டிருக்கும் சில தரவுகளை திருவாலங்காடு செப்பேடும் கூறுகின்றது.இதில் ராஜராஜன் பற்றின விஷயம் மட்டும் உண்மையாக நிகழ்ந்தது” என்கிறார் அவர்.

 

ராஜராஜனின் நீர்மேலாண்மை பணிகள்

தமிழகத்தில் நீர்மேலாண்மை குறித்த கருத்தாடல்கள் சங்க இலக்கிய காலத்திலிருந்தே தொடங்குகிறது. எனினும் கல்வெட்டு சான்றுகள் படி பல்லவர் காலத்தில் வட தமிழகத்தில் அதிக அளவில் பெரிய அளவில் ஏரிகள் வெட்டுவித்து பாசன வசதிகள் செய்து தரப்பட்டதை காணலாம். தொடர்ந்து சோழர்கள் காலத்தில்தான் அதிக அளவில் தமிழகம் முழுவதும் ஏரிகள் வெட்டுவித்த விவரங்கள் கிடைக்கின்றன.

குறிப்பாக முதலாம் பராந்தகன் காலத்தில் ஏரிகள் வெட்டுவித்த கல்வெட்டுகள் அதிக அளவில் கிடைக்கின்றன. அடுத்ததாக பெரிய அளவில் ஏரிகளையும் அதற்குண்டான வாய்கால்களையும், வெட்டி நிலங்களுக்கு தேவைக்கு ஏற்றாற்போல பிரித்தளிக்கும் வசதிகளை கொண்டும் பல்வேறு ஏரிகள் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சை டெல்டா பகுதிகளில் ஏற்படுத்தியவர் இராஜராஜன்.

இவர் பெயரிலேயே, ராஜராஜன் கிணறு என்று உக்கல் கிராமத்திலும், ராஜராஜன் வாய்க்கால் என்று பல கல்வெட்டுகளும், ராஜராஜன் வதி என்றும், இராஜராஜன் பட்டப் பெயர்களில் பல நீர்நிலைகளும் உள்ளன.

ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படும் சதய திருவிழா

உய்யக்கொண்டான் வாய்க்கால்

தஞ்சைப் புதுக்கோட்டைப்பகுதிகளில் பல ஏரிகளையும் அமைத்து அதற்கு குமிழித்தூம்புகளையும் ஏற்படுத்தி நீர்பாசன வசதியை பெருக்கியவர் இவரே.

“திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டு வருவதற்காக திட்டமிட்டு அதற்காக திருச்சிக்கு சற்று தொலைவில் உள்ள கரூர் அருகில் மாயனூர் பகுதியில் இருந்து மதகு வாய்க்கால் ஏற்படுத்தி அதை புதுக்கோட்டை மற்றும் திருச்சி வரை கொண்டு வந்தார். இதுவே இன்று வரை உய்யக்கொண்டான் வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உய்யக் கொண்டான் வாய்க்காலை பராமரிப்பதற்காக சோழமாதேவி கோவிலில் ஏரி வாரியம் அமைத்தது தொடர்பான கல்வெட்டையும் நாம் காண முடியும். அதேபோல் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஏரிகளை அமைத்து ஒவ்வொரு ஏரியிலிருந்தும் நீர் நிறைந்து மற்றொரு ஏரிக்கு நீர் பாயும் வகையில் வழித்தடம் ஏற்படுத்தி ஏரியூர் நாடு என்று அமைத்து, விவசாயிகள் நலம் பெரும் வகையில் சீரியபணியை செய்துள்ளார். இவர் காலத்தில் அமைத்த நீர்மேலாண் பணிகள் 1000 ஆண்டுகளுக்கு மேலும் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன என்பதே இவரின் சிறந்த நீர்மேலாண்மைப் பணிகளுக்கான சான்றும் பெருமையும் ஆகும்” என்று திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் பாலசுப்ரமணியன் தெரிவிக்கிறார்.

திருச்சி ஆற்றுப்படை அமைப்பின் நிறுவனர் பார்த்தீபன் பிபிசி தமிழிடம், “ தமிழக மன்னர்களிலேயே சிறந்த ஆட்சியை வழங்கியது ராஜராஜசோழன்தான் எனவே தான் இன்று வரை அவரை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் இவர் பற்றின வரலாறு கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மூலமாகவும் பாலகுமாரனின் உடையார் என்ற நாவல் மூலமாகவும் இளைஞர்களிடத்தும், கல்லூரி மாணவர்களிடத்தும் வெகுவாக சென்றடைந்தது. மேலும் தற்பொழுது கற்பனை கலந்து வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படமும் ராஜராஜ சோழனை நகரங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கொண்டு சேர்த்தது” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cl4rpr6675eo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா

25 OCT, 2023 | 04:16 PM
image

தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தஞ்சை பெரிய கோயிலில்  கோலாகலமாக நடைபெற்றது.

kDQeG5nG.jpg

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன், முடி சூட்டிய நாளை அவன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா நேற்று, (24 ஆம் தேதி), காலை மங்கல இசையுடன் துவங்கியது.

தொடர்ந்து திருமுறை பாடல்கள், கருத்தரங்கம், 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து சதய விழாவான இன்று (25ம் தேதி) ராஜராஜ சோழன் மீட்டெடுத்த பன்னிரு திருமுறைகளுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, ஓதுவார்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களை பாடி ஊர்வலமாக, யானை மீது எடுத்துச் சென்றனர்.

fYdmG8G8.jpg

தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான மங்கள பொருட்களைக் கொண்டு பேரபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

https://www.virakesari.lk/article/167731

  • கருத்துக்கள உறவுகள்

1000 ஆண்டுகளுக்கு அப்புறம் பிரபாகரனையும் கொண்டாடும் தமிழ் உலகம்.. உலகில் இன்றுவரை பேசப்படும் நான்கே நான்கு பழைமையான மொழிகளில் தமிழும் ஒன்று.. அது போல இன்னும் ஆயிரம் ஆண்டின் பின்னும் வளைஞ்சு நெளிஞ்சு எப்படியாவது அழிவுகளில் இருந்து மீண்டு தமிழும் தமிழர்களும் இந்த உலகில் இருப்பார்கள்.. அவர்கள் தம் மூதாதையர் ஈழத்தில் ஆயிரம் ஆண்டுகளின் முன் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைத்து பெருமையும் கண்ணீரும் சிந்துவார்கள்.. ஒரு மாவீரன் தான் கொண்டகொள்கைக்காக கடைசிவரை போராடி தன் குடும்பத்தோடு தான் போராடிய மண்னில் தன்மக்களோடு போராடிவீழ்ந்த வரலாற்றை கடைசித்தமிழன் உள்ளவரை கொண்டாடுவார்கள்.. கருணாவும் ட்க்ளசும்கூட இந்த வரலாற்றில் எட்டப்பன்களாக இடம்பெற்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காறித்துப்பப்படுவார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.