Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் பத்திரம் என்றால் என்ன? அதில் என்ன சர்ச்சை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ராகவேந்திர ராவ்
  • பதவி, பிபிபி நிருபர்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டம் சட்டபூர்வமாக செல்லுபடியாகுமா என்ற வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைவரின் பார்வையும் அதன் மீதே உள்ளது.

இந்த வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, அக்டோபர் 30ஆம் தேதி, இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி இந்தத் திட்டத்தை ஆதரித்து வாதாடினார். அவர் கூறுகையில், "சுத்தமான பணத்தை" பயன்படுத்துவதை இந்த திட்டம் ஊக்குவிக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் எதைப்பற்றியும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது என்றும் நியாயமான கட்டுப்பாடுகள் தேவை என்றும் அட்டர்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

அரசியல் கட்சிகள் தாங்கள் எவ்வளவு பணம் நன்கொடையாக பெற்றுள்ளனர், யாரிடம் இருந்து பெற்றுள்ளனர் என்ற தகவல்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற வாதம்தான் இந்த விவகாரத்தின் பின்னணியாக உள்ளது.

 
தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது என மத்திய அரசு வாதம்

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?

தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம்.

இந்திய அரசு 2017ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும்.

KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை.

இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.

தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.

மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம்.

 
தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது

தேர்தல் பத்திரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் என்ன?

இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, தேர்தல் பத்திரங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை முறைப்படுத்தும் என்று இந்திய அரசு கூறியது.

ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதாகவும் இது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக, மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பப்படுகிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனமும் உள்ளது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான Common Cause இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018 இல் தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், இந்தத் திட்டம் வரம்பற்ற அரசியல் நன்கொடைகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அனாமதேய நிதியுதவி வருவதற்கான வழியை இதனால் பெரிய அளவிலான தேர்தல் ஊழலை சட்டப்பூர்வமாக்குகிறது.

தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தெரிந்துகொள்ளும் உரிமையை மீறுவதாக உள்ளதாக மனுக்கள் கூறுகின்றன.

 
தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவை மீறுவதாக வாதிடப்படுகிறது

உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட ஒரு பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் வகையில் FCRA சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் லாபி செய்பவர்களுக்கு தங்களது சொந்த நோக்கத்தை இந்திய அரசியலிலும் ஜனநாயகத்திலும் திணிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

நிறுவனங்கள் தாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்திருக்கிறோம் என்பதை தங்களது ஆண்டு லாப நஷ்ட கணக்குகளில் தெரிவிக்க தேவையில்லை என நிறுவனச் சட்டம் 2013ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் குறித்து இந்த மனு கேள்வியெழுப்பியிருக்கிறது. இது அரசியல் நிதியில் ஒளிவுமறைவின்மையை அதிகரிக்கும் என்றும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்க அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் என்றும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் பத்திரத் திட்டம் பட்ஜெட்டில் உள்ளது. பட்ஜெட் என்பது ஒரு பண மசோதா என்பதால் ராஜ்யசபா அந்த திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

ராஜ்யசபாவில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், எளிதாக நிறைவேற்றும் வகையில், பண மசோதாவில் தேர்தல் பத்திரத் திட்டம் சேர்க்கப்பட்டது என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

முதலில், தேர்தல் பத்திரங்களை பண மசோதாவின் கீழ் நிறைவேற்ற முடியுமா?

இந்த சட்டப்பூர்வ கேள்வியை உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தற்போது பரிசீலிக்காது. ஏனெனில் ஒரு மசோதாவை எப்போது பண மசோதாவாக குறிப்பிடலாம் என்ற கேள்வி ஏற்கெனவே ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

 
தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

இந்தத் திட்டத்தில் எந்தக் கட்சி அதிகம் பயன்பெறுகிறது?

2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் மொத்தம் ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.

இந்த ரூ.9,188 கோடியில் பாரதிய ஜனதா கட்சியின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது.

அதே காலகட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் தோராயமாக ரூ.952 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் பெற்றுள்ளது.

Association for Democratic Reforms (ADR) அமைப்பின் அறிக்கையின்படி, 2017-18 நிதியாண்டுக்கும் 2021-22 நிதியாண்டுக்கும் இடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் 743 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், இதே காலகட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் நன்கொடைகள் 48 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளன.

இந்த ஐந்தாண்டுகளில், 2019-20 ஆம் ஆண்டில் (இது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு), தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.3,439 கோடி நன்கொடையாக வந்துள்ளதாக ADR தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதேபோல், 2021-22 ஆம் ஆண்டில் (11 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன), அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் 2,664 கோடி ரூபாய் நன்கொடை பெற்றன.

 
தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது

தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?

2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதியில் வெளிப்படைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த வெளிநாட்டு கார்ப்பரேட் சக்திகளை அழைப்பதற்கு சமம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ஷெல் நிறுவனங்களை திறக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

ADRன் மனுவின்படி, கறுப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்க, பணமதிப்பழிப்பு மற்றும் எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்க தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பலமுறை எச்சரித்துள்ளது.

தேர்தல் பத்திரங்களை 'நிதி வழங்குவது குறித்த தெளிவில்லாத முறை' என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி, இந்த பத்திரங்கள் நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும் அது யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பது தெரியாததாலும் இந்த பத்திரங்கள் மூலம் பண மோசடி நடக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cw8x8zyjz64o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.