Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும் இந்தியா

–பதின்மூன்றை நடைமுறைப்படுத்தத் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி மிக இலகுவாக இந்தியா தட்டிக் கழித்துத் தமக்கு ஏற்ற முறையில் இந்தியத் தூதரகம் மேற்கொள்ளும் நகர்வுகள் பற்றியும் பதின்மூன்று தொடர்பாக ஜனாதிபதி ரணில் ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி நிகழ்த்திய விசேட உரையை மேற்கோள் காண்பித்து அதிகாரங்கள் இல்லை என்பது குறித்தும் சிறிய விளக்கத்தை இக் கட்டுரை தருகிறது-

அ.நிக்ஸன்-

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஏனெனில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பிரதான திருத்தமாக உள்ள இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் போதுமானது.

ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் பதின்மூன்றை  நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற விருப்பம் சிங்கள ஆட்சியாளர்கள் எவருக்கும் இல்லை என்பதே உண்மை.

சர்வதேசத்தின் வார்த்தையில் அடிக்கடி உச்சரிக்கப்படும் “நல்லிணக்கம்” என்பதை வெளிப்படுத்த பதின்மூன்று 2009 இற்குப் பின்னர் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். ஆனால் அவர்கள் பதின்மூன்றைக்கூட எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்?

இப் பின்னணி இந்தியாவுக்கு நன்கு தெரியும். அமெரிக்காவுக்கும் இது புரியும்.

ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை அல்லது ஒற்றுமையில்லை என்று கூறுகின்ற இந்தியா, சிங்கள ஆட்சியாளர்களின் விரும்பத்திற்கு அமைவாகவும் தமது புவிசார் அரசியல் பொருளாதார நோக்கிலும் செயற்பட்டு வருகின்றது.

இருந்தாலும் பதின்மூன்றை நடைமுறைப்படுத்தலாம் என்று விளக்கமளித்துத் தமக்கு விசுவாசமான ஒரு சில தமிழர்களைப் பயன்படுத்தி அவர்கள் ஊடாக இந்தியத் தூதரகம் படாதபாடுபடுகின்றது. துணைத்  தூதரகம் இதற்கான ஏற்பாட்டைச் செய்கிறது.

வடக்குக் கிழக்கில் பலமான சிவில் சமூக அமைப்புகள் இல்லை. சில சிவில் சமூக அமைப்புகள் ஏதோ சில அரசியல் கட்சிகளின் பின்னால் செல்கின்றன. இந்தப் பலவீனங்களை அறிந்து புதிய முயற்சி எடுப்பதாகக் கூறிக் கொண்டு வேறொரு திசைக்கு தமிழர் அரசியல் விடுதலை விவகாரம் இழுத்துச் செல்லப்படுகின்றது போல் தெரிகிறது.

வடக்குக் கிழக்கில் இந்திய அரசியல் – பொருளாதார நலன்கள் என்ற அடிப்படையில் மாத்திரம் இயங்குவதற்கான கருத்திட்டங்கள் துல்லியமாக வகுக்கப்படுகின்றன. இதற்கான துரும்புச் சீட்டுதான் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற கதை.

கொழும்பை மையமாகக் கொண்ட சிங்களப் பகுதிகளில் சீனத் திட்டங்கள் ஏற்கனவே வியாபித்துள்ள நிலையில், தற்போது வடக்குக் கிழக்கிலும் சீனா தனது திட்டங்களை விஸ்த்ரித்து வருகின்றது.

இதன் காரணமாகவே தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளைக் கடந்து வேறு கோணத்தில் அரசியல் பொருளாதார வியூகங்களை இந்தியா வகுக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.

இதற்கேற்ப தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் காரணம் என்பதை ஈழத்தமிழர்கள் பலமாக நம்ப வேண்டும் என்ற வியூகத்திலும் இந்தியத் தூதரகம் காய் நகர்த்துகின்றது.

spacer.png

இதற்காக இரு வகையான அணுகுமுறைகள் மிகச் சமீபகாலமாகக் கையாளப்பட்டு வருகின்றன.

ஒன்று, தமிழ்த்தேசியக் கட்சிகள் மீது முழுமையாகக் குற்றம் சுமத்திவிட்டு இந்திய நலன்களுக்கு ஏற்ற முறையில் தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை மாற்றியமைப்பது.

இரண்டாவது, சிங்கள மக்கள் கோபப்படாத முறையிலும் சிங்கள மக்கள் இந்தியா மீது வெறுப்படையாமலும் நோகாத அரசியல் ஒன்றைச் செய்யும் முயற்சிகள்.

2009 இன் பின்னரான சூழலில் பதின்மூன்றை  நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று இந்திய – இலங்கை அரசுகள் கூட்டாகக் குற்றம் சுமத்தி வருகின்றனமைகூட ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை மலினப்படுத்தும் உத்திகள் என்பதும் பகிரங்கம்.

தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒருமித்த குரலில் நிரந்தர “அரசியல் தீர்வுக்கான திட்டங்கள்” “பொறிமுறைகள்” இல்லை என்பது உண்மைதான். ஆனால் பதின்முன்றை நடைமுறைப்படுத்தத் தமிழ்த்தேசியக் கட்சிகள் தான் தடையாக இருக்கின்றன என்ற பிரச்சாரம் திசை திருப்பும் அரசியல் உத்தி.

அதேநேரம் மாகாண சபைகளுக்கான பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் இந்தியாவினால் திணிக்கப்பட்டது என்றும் சர்வஜன வாக்கெடுப்பின்றி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும் கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி ரணில், பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த யூன் மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

கடிதத்தில் மகாநாயக்கத் தேரர்களின் ஒப்புதல் வாக்குமூலமும் இருந்தது.

அது மாத்திரமல்ல பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய பேராசியர் ரொகான் குணரட்ன கடந்த ஆண்டு இலங்கை இராணுவத்தின் ஜேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

பதின்மூன்றை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பதே ஜனாதிபதி ரணிலின் நோக்கம் என்ற தொனியில் மூத்த இராஜதந்திரி தயான் ஜயதிலக கடந்த வருடம் டிசம்பர் மாதம் த ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால் இதுபற்றியெல்லாம் இந்திய தூதரகம் பேசுவதில்லை. மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் நேர்மையானவர்கள் என்ற தொனியிலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த முடியும் என்ற நச்சுக் கருத்தையுமே இந்தியத் தூதரகம் திட்டமிட்டு விதைக்கிறது.

மாகாண சபைகளிடம் முழுமையான அதிகாரங்கள் ஒப்படைக்கப்படவில்லை என்பதை கடந்த ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் தனது விசேட உரையில் ஒப்புக் கொண்டிருக்கிறார். பதின்மூன்று பற்றிய சில விதப்புரைகளை ரணில் முன்மொழிந்துள்ளதன் மூலம் இந்த விடயங்களை அறிந்துகொள்ள முடியும்.

ரணில் பரிந்துரைத்த மூன்று உத்தேசத் திட்டஙகளும் வருமாறு.

1) மாகாண பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பான தேசிய கொள்கைகளை வகுப்பதில் மாகாண சபைகளின் பங்களிப்பைப் பெறுதல்.

2) மாகாண பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பான தேசியக் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கு பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை கையேற்பது அல்லது மாகாண சபையால் செயல்படுத்தப்படும் நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது.

3) மேற்படி பரவலாக்கப்பட்ட விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மாகாண சபைகளிடமே இருக்கும்.

ஆகவே மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் இல்லை என்பதையே ரணில் முன்வைத்த இத்திட்டங்கள் காண்பிக்கின்றன.

அத்துடன் தனது உரையில் மாகாண சபை பற்றிய மற்றொரு கருத்தையும் ரணில் பின்வருமாறும் கூறுகிறார்.

“மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான விடயதானங்கள் பொருந்தாமல் இருக்கிறது என்று கூறும் நபர்களும் இலங்கைத்தீவில் இருக்கின்றார்கள்” என்று ரணில் தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதேநேரம் பொலிஸ் அதிகாரங்களைக் கையளிக்க முடியாது அது உணர்வுடன் கூடிய விவகாரம் என்றும் ரணில் தனது உரையில் விபரிக்கிறார். ஆகவே பொலிஸ் அதிகாரங்கள் இல்லை என்பதும் காணி அதிகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்பதும் இங்கே தெரிகிறது.

காணிக் கொள்கை தொடர்பாக தேசிய காணி ஆணைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும். ஆனால் இதுவரையும் மாகாண சபைகளை உள்ளடக்கிய தேசிய காணி அதிகார சபை உருவக்கப்படவில்லை.

இந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தம் பற்றியும் அதனை நடைமுறைப்படுத்தத் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்ற கதைகளும் எப்படிப் பொருத்தமாகும்?

அதேநேரம் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த ரணில் கூறிய விதப்புரைகள்  மூன்று மாதங்கள் சென்றுவிட்ட நிலையிலும் செயலில் வரவில்லை என்பது பற்றி எதிர்க்கட்சிகள்கூட  கேள்வி கேட்கவில்லை.

spacer.png

ஏனெனில் 2009 இற்குப் பின்னர் பதின்மூன்றும் தேவையில்லை என்ற உணர்வு சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட சிறிய சிங்கள் கட்சிகளிடம் உண்டு. இதனையே ரணில் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் நாசூக்காக வெளிப்படுத்தியிருந்தார்

ஆகவே 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் “தமிழ் இன அழிப்பு” பற்றிய சர்வதேச விசாரணையை ஒற்றை வார்த்தையில் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாக் கோரியிருந்தால் இன்று இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.

அத்தோடு பதின்மூன்று என்ற அரை குறைத் தீர்வை விடவும் முழுமையான தீர்வுக்குரிய பொறிமுறை தயாரிக்கப்பட்டிருந்தால் இந்த அவமானம் ஏற்பட்டிருக்காது.

அமைச்சர்களுக்கான முழு அந்தஸ்த்துடன் புதுடில்லியில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமைபுரியும் முன்னாள் அமைச்சர் மிலிந்த கொறகொட பதின்மூன்று இனிமேல் தேவையில்லை என்று 2020 மார்ச் மாதம் கொழும்பில் பகிரங்க அறிக்கை வெளியிட்டிருந்தர்.

நாடாளுமன்ற உறுப்பினரும் இறுதிப் போரில் பங்கெடுத்தவருமான முன்னாள் இராணுவ அதிகாரி சரத் வீரசேகர பதின்மூன்று பற்றிப் பேச வேண்டிய அவசியமே இல்லை என்று நாடாளுமன்றத்திலேயே அடித்துக் கூறியிருக்கிறார்.

ஆகவே இவை பற்றியெல்லாம் கொழும்புக்குப் பல தடவைகள் வந்து சென்ற இந்திய வெளிவிவார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வாய்திறந்தாரா?

மாறாகத் தமிழ்த்தேசியக் கட்சிகள் மீது மிக இலகுவாகக் குற்றம் சுமத்திவிட்டு பதின்மூன்றை விட்டால் வேறு தீர்வு இல்லை என்று தவறான நச்சுக் கருத்துக்களை விதைப்பதன் பின்னணி என்ன?

இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வடக்குக் கிழக்கில் இந்தியாவுக்குத் தேவையான பொருளாதார நலன்களை பெற முடியும் என்றால் பதின்மூன்று விடயத்தில் ஏன் அழுத்தம் கொடுக்கக்கூடாது?

சீனாவுக்கு எதிராக இந்தோ – பசுபிக் விகாரத்தில் அமெரிக்கவுடன் கூட்டுச் சேர்ந்து மேற்கொள்ளும் நகர்வுகள், அமெரிக்காவுடனான பனிப் போருக்கு மத்தியில் இலங்கையில் அமெரிக்க – இந்திய கூட்டுப் பொருளாதார முறைகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்புக்கும் வியூகங்கள் வகுக்க முடியுமென்றால் பதின்முறை நடைமுறைப்படுத்த ஒரு தொலைபேசி அழைப்புப் போதுமானது.

இந்தியப் பிராந்தியத்துக்குப் பாதுகாப்புத் தேவை என்றால் ஈழத்தமிழர்கள் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்று சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பல தடவைகள் ஆவேசமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆனால் தன்னுடைய அரசியல் அனுபவத்தில் இந்தியாவை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றிய பொறிமுறையை சம்பந்தன் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வகுக்கத் தவறிதயன் விளைவுகள்தான் தற்போதைய இந்த இழி நிலைக்குப் பிரதான காரணம்.

2009 இல் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தியா ஈழத்தமிழர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துவிடலாம் என்ற சந்தேகத்தில், துரொய்க்கா (troika) எனப்படும் மூவர் கொண்ட உயர்மட்டக் குழுவை இலங்கை உருவாக்கியது.

கோட்டபாய ராஜபக்ச, மிலிந்த மொறகொட, பசில் ராஜபக்ச ஆகியோா் அதில் அங்கம் வகித்திருந்தனர். இதனை மகிந்த ராஜபக்சவின் செயலாளராகப் பதவி வகித்திருந்த லலித் வீரதுங்க பிற்.எல்கே என்ற இணையத்தளத்துக்கு .வழங்கிய நேர்காணலில்  கூறியிருந்தார். (இது பற்றி இப் பத்தியில் முன்னரும் குறிப்பிடப்பட்டிருந்தது)

இந்தியா ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடாமல் இன்றும் கூட  இவ்வாறான பொறிமுறையை இலங்கை கையாளுகின்றது.

ஆகவே 2009 இற்குப் பின்னரான சூழலில் அமெரிக்காவும் இந்தியாவும் சொல்வதைக் கேட்டுச் செயற்பட்டதன் விளைவுதான் இன்று தமிழ்த்தேசியக் கட்சிகள் சுயமரியாதையை இழந்து நிற்பதற்கும் இந்திய நலன்களுக்கு ஏற்ப வியூகங்கள் வகுக்கப்படுகின்றமைக்கும் காரணம்.

1979 இல் கொழும்பில் இருந்த சீனத் தூதுவர் பேராசிரியர் வில்சனிடம் கூறிய கருத்தின் பிரகாரம், இந்தியச் செல்வாக்கைத் தடுக்க அதுவும் 2009 இற்குப் பின்னரான சூழலில் சீனா வடக்குக் கிழக்கில் கால் பதிக்கிறது என்றால், அதனை இந்தியா புரிந்துகொள்ளாத வரையும் சீன அபிவிருத்தித் திட்டங்களைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் – இராணுவ ஆய்வாளர் டி.சிவராம் “தமிழர் போராட்டமும் பெருஞ் செஞ்சீனமும்” என்ற தலைப்பில் 2003 இல் வீரகேசரி ஞாயிறு வார இதழில் எழுதிய கட்டுரையில் தமிழ் ஈழம் அமைந்தால் சீனா அதனை ஏன் எதிர்க்கும் என்பது பற்றி பேராசியர் வில்சனிடம் சீனத் தூதுவர் கூறிய விடயங்கள் பற்றி எழுதியுள்ளார்.
 

http://www.samakalam.com/தமிழ்க்-கட்சிகளிடம்-ஒற்ற/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.