Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை எண்ணூரில் எங்கு பார்த்தாலும் எண்ணெய் படலம் - எங்கிருந்து கசிந்தது? பிபிசி கள ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 டிசம்பர் 2023

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெரும் மழையினால் நகரின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்கு உள்ளாயின என்றால், எண்ணூர் பகுதி மக்கள் சந்தித்த பிரச்னை விபரீதமானதாக இருந்தது.

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிறைய இடங்களில் மழை நீர் தேங்கியது மட்டுமில்லாமல் பலரின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் தங்களது உடமைகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கலந்தது மிகப் பெரிய மாசுபாட்டு பிரச்னையை உருவாக்கியிருக்கிறது. இந்த எண்ணெய் கலந்த நீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள்ளும் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

 
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்

சென்னை எண்ணூரில் எங்கு பார்த்தாலும் எண்ணெய் படலம்

கடுமையாக மழை பெய்த திங்கள் கிழமையன்று, மழை நீர் வீடுகளுக்குள் வந்தது. அடுத்த நாளில் இருந்து எண்ணெய் கலந்த தண்ணீர் வீடுகளுக்குள் புக ஆரம்பித்தது. எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி, பங்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகள், கிரிஜா நகர் பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் இந்த எண்ணெ மிதக்கும் தண்ணீர் உள்ளே புகுந்தது.

இது தவிர, தாழங்குப்பம், காட்டுக்குப்பம், நெட்டுக்குப்பம் பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளிலும் எண்ணெய் மிதக்க ஆரம்பித்தது.

சென்னையின் பிற பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததால், ஆரம்பத்தில் இதை எப்படி அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதென்றே அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியவில்லை.

"முதல்ல சாதாரணமான மழை நீர்தான் வீட்டிற்குள் வந்தது. பிறகு தண்ணீர் எண்ணையோடு கலந்து வீட்டிற்குள் வர ஆரம்பித்தது. இந்த எண்ணெய் கலந்த தண்ணீரில் மூழ்கி பொருட்கள் எல்லாம் நாசமாகிவிட்டன. பாதி வீடு வரை எண்ணெய் தேங்கிவிட்டது. நாங்கள் கூலி வேலை செய்கிறோம். இதை எப்படி தாங்க முடியும்" என்கிறார் எர்ணாவூர் திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குப்புராணி.

இது தவிர, தாழங்குப்பம், காட்டுக்குப்பம், நெட்டுக்குப்பம் பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளிலும் எண்ணெய் மிதக்க ஆரம்பித்தது.

 
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்

“தாங்க முடியாத அளவிற்கு வீசும் டீசல் வாசம்”

எர்ணாவூரில் இருக்கும் ஆதி திராவிடர் காலனிக்குள் நுழையவே முடியாத அளவுக்கு எண்ணையும் தண்ணீரும் கலந்த சேறு கிடக்கிறது. அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் அனைத்திலும் எண்ணெயும் தண்ணீரும் புகுந்த நாசம் செய்திருக்கிறது.

"எண்ணெய் கலந்து வந்ததால் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்ஜ், வாஷிங் மிஷின், குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்கள் என எல்லாமே போய்விட்டன. நான் ஆட்டோ ஓட்டுகிறேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை இதுபோல பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் எர்ணாவூரின் ஆதி திராவிடர் காலனி பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான கோபி.

துணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாவற்றின் மீதும் எண்ணெய் படிந்திருப்பதால், அவை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டன.

"வீட்டிற்குள் எண்ணெய் புகுந்ததால் உள்ளே கால் கூட வைக்க முடியவில்லை. எந்தப் பொருளையும் இனிமேல் பயன்படுத்த முடியாது. எண்ணெயில்லாமல் தண்ணீர் மட்டும் வந்திருந்தால், துணிகளைக் பிழிந்து, காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இப்போது அந்தத் துணிகளை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு புதிதாகத்தான் வாங்க வேண்டும். நாங்கள் தினமும் 300 -400 ரூபாய் சம்பாதித்து தினக்கூலியாக வாழ்கிறோம். எங்களிடம் அதற்கு பணம் ஏது" என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்.

இப்படி வீடுகளுக்குள் எண்ணெயும் தண்ணீரும் புகுந்தது ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இந்த எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்ததால், அதில் மீன்கள் செத்து மிதக்கத் துவங்கின. அந்த ஆறு கடலில் வந்து கலக்கும் முகத்துவாரப் பகுதியிலும் எண்ணெய் மிதந்துகொண்டிருக்கிறது. அதனால், அந்தப் பகுதி முழுக்கவே நிற்க முடியாத அளவுக்கு டீசல் நெடி வீசிக்கொண்டிருக்கிறது.

"மூச்சு விட முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. நெடியைத் தாங்க முடியாமல், குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பதில்லை" என்கிறார் கொசஸ்தலை ஆறும் கடலும் சேரும் பகுதியில் வசிக்கும் சித்ரா.

 
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்

எண்ணெய் எங்கிருந்து கசிந்தது?

இது தொடர்பான செய்திகள் வெளியானதும், மிகத் தாமதமாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரம் குறித்து ஆராய ஆரம்பித்தது. அதற்குப் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் "இந்த எண்ணெய் மணலி தொழிற்பேட்டை பகுதியிலிருந்து பக்கிங்காம் கால்வாயில் கலந்திருக்க வேண்டும். இந்த எண்ணெய் எங்கிருந்து வருகிறது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் குழு ஆராய்ந்தது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் தெற்கு வாயில் அருகே உள்ள மழை நீர் வெளியேறும் பகுதிக்கு அருகில் எண்ணெயுடன் தண்ணீர் கலந்து தேங்கியிருந்தது. இதிலிருந்து இந்த எண்ணெய் வந்திருக்கலாம். ஆனால், நாங்கள் ஆய்வு நடத்தியபோது அங்கிருந்து வந்த மழை நீரில் எண்ணெய் படலம் ஏதும் இல்லை.

வளாகத்திற்குள் தேங்கியிருந்த மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டபோது, தரையில் படிந்திருந்த எண்ணெயும் அந்த தண்ணீருடன் சேர்ந்து வெளியேறியிருக்கலாம். பிறகு மெதுமெதுவாக பங்கிங்கம் கால்வாயில் கலந்திருக்கலாம். இப்படி எண்ணெய் மிதப்பதை அகற்றும்படி சிபிசிஎல்லுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மழை நீர் கால்வாயுடன் கலக்கும் இடத்தில் உறிஞ்சிகளை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சிபிசிஎல்லுக்கு மேலே உள்ள கால்வாய் பகுதிகளிலும் எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது" என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், சி.பி.சி.எல். நிறுவனம் தங்கள் ஆலையிலிருந்து எண்ணெய் வெளியேறியதாகச் சொல்வதை ஏற்கவில்லை. அந்த நிறுவனம் X சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த விளக்கத்தில், "சி.பி.சி.எல். மணலி சுத்திகரிப்பு நிலையத்தின் எந்தக் குழாயிலும் கசிவு ஏதும் இல்லை. மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட இடைவிடாத மழையால், சுத்திகரிப்பு நிலையத்திற்குள் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மணலியின் பிற தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சி.பி.சி.எல். நிலைமையை புரிந்துகொண்டு தடையற்ற வகையில் ஆலையை இயக்கி, தமிழகத்துக்கு எரிபொருட்கள் வழங்குவதை உறுதி செய்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. இப்போது நீர் மட்டம் குறைந்திருக்கிறது. நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் சனிக்கிழமையன்று பதிலளித்த சி.பி.சி.எல்., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் வழக்கறிஞர், இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் இந்த எண்ணெய் தங்களுடைய ஆலையிலிருந்து வெளியேறவில்லையென்றும் கூறியிருக்கிறார்.

சிமென்ட் ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், அனல் மின் நிலையங்கள் என ஏற்கனவே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் எண்ணூருக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக வந்திருக்கிறது இந்த எண்ணெய்க் கசிவு.

https://www.bbc.com/tamil/articles/cprprj2nevxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அதே வாளி! பாதிக்கப்பட்ட மக்களை கொண்டே எண்ணெய் அகற்றம் - எண்ணூரில் என்ன நடக்கிறது?

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு,

தினக்கூலி என்ற அடிப்படையில் இந்த பகுதி மக்கள் எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட போதிலும் எண்ணூர் பகுதி மக்களின் வாழ்க்கை 10 நாட்களுக்கும் மேலாக ஸ்தம்பித்துள்ளது. கடந்த 5ம் தேதி சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து கசிந்ததாக கூறப்படும் எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலந்து எண்ணூர் முகத்துவாரம் தொடங்கி காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை பரவியுள்ளதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள். ஆனால், எண்ணெய் தங்கள் நிறுவனத்தில் இருந்து கசியவில்லை என்று மறுக்கிறது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்.

இந்நிலையில் ஆற்றுப்பகுதியில் உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் இதே பகுதியை சேர்ந்த 8 மீனவ கிராம மக்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாளி மற்றும் பேப்பர் கொண்டு தினசரி நூறு படகுகள் மூலமாக இந்த மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகின்றனர். இதில் 17, 18 வயதை சேர்ந்த இந்த பகுதி கல்லூரி மாணவர்களும் அடங்குவர். இந்த எண்ணெய் கழிவுகள் மீனவ கிராமங்களை தாண்டி ஆற்றை சார்ந்து வாழாத மக்களின் குடியிருப்புகளையும் கூட கடுமையாக பாதித்துள்ளது.

இதன் தாக்கம் எந்தளவு எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இதன் உடனடி மற்றும் நீண்டகால தாக்கங்கள் என்ன என்பது குறித்தும் பிபிசி கள ஆய்வு செய்துள்ளது.

எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு,

எண்ணூரில் 8 மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

எண்ணூரில் கடும் பாதிப்பு

கடந்த 4ம் தேதி எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர், ஜோதிநகர் பகுதிகளில் உள்ள பக்கிங்காம் கால்வாய் வழியாக வெள்ள நீரோடு சேர்த்து எண்ணெய் கழிவுகள் எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் நுழைந்துள்ளது. இதில் ஆற்றோர பகுதிகளான காட்டுக்குப்பம், சிவன்படை வீதி, தாளான்குப்பம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம் ஆகிய 8 கிராமங்களின் கரை வரை எண்ணெய் பரவியுள்ளது.

இது தவிர பிருந்தாவன் நகர், ஆதிதிராவிடர் காலனி, திருவீதியம்மன் கோவில், கிரிஜா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் எண்ணெய் புகுந்துள்ளது. இதனால் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்த பகுதி மக்கள் கடுமையான விளைவுகளை சந்தித்து வருகின்றனர்.

 
எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு,

எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த 8 மீனவ கிராம மக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

எண்ணெய் அகற்றும் பணியில் மாணவர்கள்

எண்ணெய் கழிவுகள் ஆற்றில் கலந்து முதல் 5 நாட்கள் யாரும் வரவில்லையென்றும் அதன் பின்னரே அரசு மீட்பு பணிகள் உதவிக்கு வந்ததாகவும் கூறுகின்றனர் இந்த பகுதி மக்கள். எண்ணூர் முகத்துவாரம் முதல் 20 சதுர கிலோமீட்டர் வரை பரவியிருப்பதாக கூறப்படும் எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த 8 மீனவ கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையே பயன்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.

இதற்காக ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தங்கள் மீனவர்களை படகுகளுடன் அனுப்பியுள்ளதாகவும், எந்த நவீன இயந்திரங்களும் வரவில்லை. கையால் சிறிய வாளியைக் கொண்டு அள்ளியே எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்தி வருவதாகவும் கூறுகிறார் ஊர் தலைவர் குமாரவேல்.

இதில் இதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களும் அடக்கம். 13ம் தேதி எண்ணூர் முகத்துவார பகுதிக்கு சென்ற போது அங்கிருக்கும் சிதிலமடைந்த கப்பல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் தியாகராய கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிக்கும் 17 வயது மாணவர் அஜய். அவரோடு அவர் வயதை ஒத்த மாணவர்கள் சிலரும், படித்து முடித்த சில இளைஞர்களும், மற்ற மீனவர்களும் அந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
எண்ணூர் எண்ணெய் கசிவு

வாளியில் எண்ணெயை அள்ளும் மீனவர்கள்

தினக்கூலி என்ற அடிப்படையில் இந்த பகுதி மக்கள் எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். “முதலில் சிபிசிஎல் கொடுத்த பஞ்சு போன்ற காகிதத்தை எண்ணெயில் முக்கி எடுத்து 220 லிட்டர் பேரல் ட்ரம்மில் பிழிய சொன்னதாக கூறுகிறார்” மீனவர் ஆறுமுகம்.

பின்னர் இது சாத்தியமற்ற ஒன்று என்று அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகே இந்த மக்களுக்கு சிறிய வாளி வழங்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு படகிற்கும் மூன்று பணியாளர்கள் இருப்பார்கள். தினசரி ஒரு படகு ஒரு ட்ரம்மை நிரப்ப வேண்டும். இதற்காக குறைந்தது 6 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த மீனவர்கள் குனிந்து அந்த எண்ணெயை அள்ளி ட்ரம்மில் நிரப்ப வேண்டும்” என்று கூறுகிறார் அவர்.

 
எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு,

ஆற்றை சார்ந்து வாழாத மக்களின் குடியிருப்புக்குள்ளும் எண்ணெய் புகுந்துள்ளது

குடியிருப்புகளுக்குள் புகுந்த எண்ணெய்

ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளை தாண்டி பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றை சார்ந்து வாழாத மக்களின் குடியிருப்புக்குள்ளும் எண்ணெய் புகுந்துள்ளது. இதனால், பிருந்தாவன் நகர், ஆதிதிராவிடர் காலனி, திருவீதியம்மன் கோவில், கிரிஜா நகர் பகுதிகளில் நீர் ஆதாரமாக உள்ள ஒட்டுமொத்த கிணறுகளிலும் எண்ணெய் கலந்துள்ளது.

மேலும், வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் புகுந்ததால் கழிவறை, பைப் இணைப்புகள் என அடிமட்டம் வரை பரவியுள்ளது. இது இன்னும் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாத நிலையே நிலவுகிறது. இந்த மக்களும் மீனவ மக்களை போலவே உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

மனிதர்கள் மட்டுமல்ல

இந்த எண்ணெய் கசிவினால் மனிதர்கள் மட்டுமல்ல, இந்த பகுதியை சார்ந்து வாழும் பிற உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் விஷாந்த். “சுவாசிக்க முடியாமல் மீன்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் பலவும் இறந்து விட்டது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் நீண்ட காலத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார் அவர்.

 
எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு,

நுரையீரல் மருத்துவர் திருப்பதி மற்றும் தோல் மருத்துவர் ஷர்மதா

நீண்ட நாள் உடல் உபாதைகள்

எண்ணெய் கழிவுகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்ததால் அதன் நெடியாலும் மற்றும் உடலில் அதிகம் பட்டதாலும் இப்பகுதி மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அந்த எண்ணெயை அகற்றும் பணியில் இந்த மீனவர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் தோல் நோய்கள், சுவாசக்கோளாறுகள் என பல நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளனர் அவர்கள்.

இதுகுறித்து நுரையீரல் மருத்துவர் திருப்பதி கூறும்போது, "இந்த பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் எண்ணெய் கழிவுகளில் காணப்படும் ஹைட்ரோ கார்பனை சுவாசிப்பதால் அது சுவாசப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகிறார். இதனால் உடனடி பிரச்சனைகளாக இருமல், காய்ச்சல், சுவாச கோளாறு உள்ளிட்டவை ஏற்படலாம் என்றும், நீண்ட நாள் பிரச்சனைகளாக ஆஸ்துமா மற்றும் அரிதாக புற்றுநோய் கூட ஏற்படலாம்" என்று தெரிவிக்கிறார்.

மேலும் அடர்த்தி மிகுந்த எண்ணெயில் நேரடியாக நமது சருமம் படும்போது அதில் உள்ள வேதியியல் கூறுகள் பூஞ்சை தொற்று, படர் தாமரை, தேமல், அலர்ஜி உள்ளிட்ட தோல் பிரச்னைகள் ஏற்படலாம் என்று கூறுகிறார் தோல் மருத்துவர் ஷர்மதா.

 
எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு,

எண்ணெய் கழிவுகளால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துவிட்டன.

பொருளாதார ரீதியாக இழப்பு

எண்ணூர் பகுதியில் உள்ள 8 மீனவ கிராமங்களில் 1000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். தற்போது எண்ணெய் கழிவுகளால் 700க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன. மேலும் டன் கணக்கில் வலைகள் நாசமாகியுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு படகையும் முறையாக நவீன முறையில் சுத்தப்படுத்தி மறுகட்டமைப்பு செய்யவே குறைந்தது 50,000 முதல் 1,00,000 ரூபாய் செலவாகும் என்று கூறுகிறார் மீனவர் வெங்கடேசன்.

“இது மீன்களின் இனப்பெருக்க காலம். எண்ணெய் கழிவுகளால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துவிட்டன. மீதமுள்ள மீன்களும் ஆழ்கடலை நோக்கி சென்றுவிட்டன. இதனால் அடுத்த 1 ஆண்டில் தொடங்கி 5 ஆண்டுகள் வரை சாதாரண மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது கடினம்” என்கிறார் குமாரவேல். அப்படியே ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடித்து வந்தாலும் இந்த பகுதியில் இருந்து வரும் மீன்களில் எண்ணெய் கழிவின் பாதிப்பு இருக்கக் கூடும் என்று யாரும் வாங்க முன்வருவதில்லையாம். இது முழுவதுமாக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே பாதித்துள்ளது.

“இப்படி நாங்கள் இயற்கையோடும் போராடுறோம், இது போன்ற செயற்கை விபத்துகளையும் எதிர்கொண்டு வாழ்கிறோம். இதற்கு பதில் அரசே ஒரு பாட்டில் விஷத்தை கொடுத்து விடுங்கள். அதைக் குடித்து நாங்கள் இறந்து விடுகிறோம்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் குமாரவேல்.

இது தவிர குடியிருப்புகளுக்குள் சென்றுள்ள எண்ணெய் கழிவு “பல ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வாங்கிய பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சோஃபா என வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் நாசம் செய்து விட்டதாக” கூறுகிறார் காஞ்சனா. மேலும் இந்த பகுதியில் உள்ள மக்களின் பல பொருட்கள் ஒட்டுமொத்தமாக எண்ணெய் கழிவுகள் படிந்து மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மக்கள் 20 வருடங்கள் பின்னுக்கு இழுக்கப்பட்டுள்ளனர்.

 
எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு,

குற்றச்சாட்டை மறுத்துள்ளது சிபிசிஎல்

சிபிசிஎல் காரணமா?

இந்த எண்ணெய் கசிவு வெள்ள நீரில் கலந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என்று எண்ணூர் பகுதி மக்களும் , சூழலியல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், ஆரம்பம் முதலே இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது அந்நிறுவனம். இதுகுறித்து பிபிசி தமிழ் அந்நிறுவனத்திடம் கேட்டபோது, தங்கள் நிறுவனத்தில் எந்த விதமான கசிவும் இல்லை என்று பதிலளித்துள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன, இந்த பிரச்னையில் அவற்றையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் எண்ணெய் அப்புறப்படுத்தும் பணியில் தாங்கள் அதிக பங்களிப்பை செலுத்துவதாகவும், மக்களும் மருத்துவ முகாம், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அரசுடன் சேர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்.

 
எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு,

குறிப்பிட்ட நிறுவனம்தான் இந்த கசிவிற்கு காரணம் என்று அரசு முடிவுக்கு வரவில்லை

தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

இந்த எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் காரணமா? நிவாரணம் சிபிசிஎல் வழங்குமா அல்லது அரசு வழங்குமா என்ற கேள்வியை முன்வைத்த போது, சிபிசிஎல் என்பது வேறு பிரச்னை. இதுவரை குறிப்பிட்ட நிறுவனம்தான் இந்த கசிவிற்கு காரணம் என்று அரசு முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் நிவாரண பணிகளுக்கான சிறப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ். மேலும், இந்த பகுதியில் உள்ள நிறுவனங்களிடம் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவிகள் கேட்டுள்ளதாகவும், அதில் அதிக பங்களிப்பு சிபிசிஎல் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் உயர்த்தி வழங்கப்படுமா?

வெள்ளம் பாதிக்கப்பட்ட இதர பகுதிகளை விட எண்ணூர் பகுதி மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் அதிகமாக வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு, இந்த மக்களுக்கு தனி பேக்கேஜ் எனவும், அது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் முதற்கட்டமாக இவர்களுக்கு தேவையான உடைகள், அடுப்பு, பாத்திரங்கள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கந்தசாமி ஐஏஎஸ்.

 
எண்ணூர் எண்ணெய் கசிவு
படக்குறிப்பு,

இந்த எண்ணெய் கசிவிற்கு சிபிசிஎல் தான் காரணம்

யார் பொறுப்பேற்பது?

“இந்த எண்ணெய் கசிவிற்கு சிபிசிஎல் தான் காரணம்” என்று உறுதியான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். ஆனால், அந்த சிபிசிஎல்-லை பொறுப்பேற்க வைக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறுகிறார் அவர்.

“ஆறும் கடலும் இணையக்கூடிய இயற்கையான ஆரோக்கியமான பரவல் அமைப்பு இருக்கக்கூடிய இடம்தான் இந்த எண்ணூர். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்கள் இந்த பகுதியை ஏதோ மதிப்பில்லாத பகுதி போல் அழித்து வருகின்றன. அனல் மின் நிலையங்கள், அதன் சாம்பல் குட்டைகள், துறைமுகம் அதன் கட்டுமானங்கள் மற்றும் சிவப்பு பட்டியலில் இருக்கும் 34 நிறுவனங்களின் கழிவுகள், பக்கிங்காம் கால்வாய் கழிவு என அனைத்தும் இந்த ஆற்றில் கலக்கப்பட்டுள்ளது. 1996இல் இருந்தே இந்த நீரில் சாம்பல் கலப்பது, எண்ணெய் கலப்பது நடந்து வருகிறது. ஆனால் அரசு மற்றும் நீதிமன்றங்களின் கண்களுக்கு இது போன்ற பேரிடர்கள் வரும்போது மட்டுமே இது தெரிகிறது” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

மேலும், “தற்போது சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் மக்களுக்கும் இது ஒரு ஆரோக்கிய அழிவுதான். அவர்களுக்கு முறையான முகக்கவசம் இல்லை. நவீன இயந்திரங்கள் பல இருந்த போதும் அவர்கள் வாளி மற்றும் பேப்பர் கொண்டுதான் இந்த எண்ணெய் கசிவுகளை அகற்றி வருகிறார்கள். இந்த எண்ணெய் கழிவில் இருந்து வரும் விஷ வாயுக்களை சுவாசிக்கும் அவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். ஸ்கிம்மர் இயந்திரம் உள்ள போதும் கூட மீனவர்கள் வாளியில் அள்ளி எண்ணெயை அகற்றிக் கொண்டிருக்கின்றனர். இது என்னை பொறுத்தவரை நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் குற்றமே” என்கிறார் அவர்.

நிவாரணம் என்ன?

“ஜூலை 2022ல் வெளியான நீதிமன்ற உத்தரவான, இந்த நீர்நிலையை பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். 6 மாதத்திற்குள் இதை சீர்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரிவான ஆய்வு செய்து நீண்ட கால விளைவுகளை கணக்கில் கொண்டு சுகாதார கண்காணிப்பு, பொருளாதார ரீதியான இழப்பீட்டை வழங்க வேண்டும்” என்று கூறுகிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

https://www.bbc.com/tamil/articles/cp6re18gnkro

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.