Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 28 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 9 பிப்ரவரி 2024

(பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கட்டுரை மறு பகிர்வு செய்யப்படுகிறது)

இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்ட விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1925-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்த இவர், சர்வதேச அளவில் தனது வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்பட்டவர்.

சுதந்திர இந்தியாவில் வேளாண்மை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட, பங்களிப்புச் செய்த விஞ்ஞானிகளில் எம்.எஸ். சுவாமிநாதன் மிக முக்கியமானவர். 60களிலும் 70களிலும் இந்தியாவின் பசியைப் போக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முக்கியமானவை.

 

இந்தியா சுதந்திரமடைந்தபோது 1943ஆம் ஆண்டின் வங்கப் பஞ்சம் ஏற்படுத்திய வடு மாறாமலேயே இருந்தது. முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க பல நடவடிக்கைகளை எடுத்தார். இந்திய விவசாய ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய பயிர் ரகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த முக்கியமான காலகட்டத்தில்தான் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் என்ற எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வுப் பணிகள் மெல்ல மெல்ல துளிர்விட ஆரம்பித்தன. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழங்களில் தனது படிப்புகளை முடித்த சுவாமிநாதன், 1947ல் மரபியல் மற்றும் தாவரப் பெருக்கம் குறித்த படிப்பிற்காக இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தில் இணைந்தார். 1949ல் மரபணு குறித்த தீவிர ஆராய்ச்சிப் பிரிவான சைடோஜெனிடிக்ஸில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.

இதற்கு நடுவில் இந்திய காவல் பணி தேர்வில் தேர்ச்சியடைந்தாலும்கூட, அவருக்கு நெதர்லாந்தில் மரபணுவியல் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் இந்திய காவல் பணிக்குப் பதிலாக மரபணுவியல் படிக்கும் வாய்ப்பைத் தேர்வுசெய்தார். இதற்குப் பிறகு கேம்ப்ரிட்ஜில் தனது பி.எச்டி பட்டத்தையும் பெற்றார்.

படிப்புகளை முடித்த பிறகு, 1954ல் இந்திய விவசாய ஆய்வுக் கழகத்தில் இளநிலை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இந்த காலகட்டத்தில் இந்தியா ஒரு மிகப் பெரிய உணவு நெருக்கடியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. மிகப் பெரிய அளவில் கோதுமையை பிஎல் - 480 ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி செய்துவந்தது.

 
எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான நார்மன் போர்லாக் ஒரு குட்டை ரக கோதுமையை உருவாக்கியிருந்தார். அவரைத் தொடர்புகொண்ட எம்.எஸ். சுவாமிநாதன், அதன் மாதிரிகளைக் கோரினார். 1963ல் இந்தியாவுக்கு வந்த போர்லாக், பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். அந்தக் குட்டை ரக கோதுமை இந்தியாவுக்கு பலனளிக்கும் எனத் தோன்றியது. ஆகவே அவற்றைத் தர ஒப்புக் கொண்டார்.

விரைவிலேயே நேரு மரணமடைந்துவிட, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்றார். எஃகு, சுரங்கம், கனரக பொறியியல் துறை அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் விவசாயத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இப்படித்தான் இந்திய பசுமைப் புரட்சிக்கான முதல் வித்து ஊன்றப்பட்டது.

உலகின் பிச்சைப் பாத்திரம் என்று 1960களில் கேலிசெய்யப்பட்ட இந்தியாவை, உலகின் உணவுப் பாத்திரம் என்று அழைக்கும் வகையில் மாற்றியவர் எம்.எஸ். சுவாமிநாதன் என்கிறார் அவருடைய மாணவரும் சக விஞ்ஞானியுமான சி.ஆர். கேசவன்.

"எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு மிகச் சிறந்த அடிப்படை அறிவியலாளர். அவருக்கு விவசாய அறிவியல் மட்டுமல்ல, பல துறைகளிலும் நிபுணத்துவம் இருந்தது. வெளிநாடுகளில் அவருக்கு பேராசிரியராக வாய்ப்பு அளிக்கப்பட்டும், அவர் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு இந்தியாவுக்கு வந்தார்.

இந்திய விவசாய ஆய்வுக் கழகத்தில் சேர்ந்த பிறகு, நிறைய அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக, சைட்டோ ஜெனிடிக்ஸிலும் கதிரியக்க உயிரியலிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார். 1960களின் இந்தியாவுக்கு நிறைய உணவு தானிய தேவை இருந்தது. இந்தியர்கள் புழுக்களைப் போல பெருகி வருவதால் நாம் நம் தானியங்களை வழங்கி அவர்களைக் காப்பாற்றிவிட முடியாது என பல அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் எழுதினார்கள்.

பசியோடு இருந்த இந்தியா உலகம் முழுவதும் அவமானப்படுத்தப்பட்டது. இந்தியா உலகின் பிச்சைப் பாத்திரமாக வர்ணிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மூலம் பசுமைப் புரட்சியைக் கொண்டுவந்தார். மரபணு மாற்றத்தால் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய கோதுமை முதலில் உருவாக்கப்பட்டது. பிறகு அரிசி உருவாக்கப்பட்டது. 1967ல் இது துவங்கியது. சில ஆண்டுகளிலேயே நிலைமை மாறியது. உலகின் பிச்சைப் பாத்திரமாக இருந்த இந்தியா, உலகின் உணவுக் களஞ்சியமாக மாறியது" என்கிறார் சி.ஆர். கேசவன்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

மரபணு மாற்றப்பட்ட குட்டை ரக கோதுமை, கூடுதல் விளைச்சலை அளிக்கும் என பரிந்துரைத்தார் எம்.எஸ். சுவாமிநாதன். ஆனால், அந்த காலகட்டத்தில் அரசுக்குள்ளிருந்தும் வெளியிலும் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டன. இந்தப் புதிய ரகம் இந்தியச் சூழல்களைத் தாங்குமா, பெரிய அளவில் உரத்தை இறக்குமதி செய்ய வேண்டியிருக்குமா என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. விவசாயிகளிடமும் தயக்கம் இருந்தது.

இதையடுத்து ஒரு சிறிய இடத்தை இந்தக் கோதுமையை விளைவித்துக் காட்டினார் சுவாமிநாதன். இதையடுத்து இதனைப் பரவலாக பயிரிட விவசாயிகள் முன்வந்தனர். முதற்கட்டமாக பஞ்சாபிலும் ஹரியானாவிலும் இவை பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. எதிர்பார்த்ததைப் போலவே இதற்கு நல்ல பலன் இருந்தது. பஞ்சாபில் 1965-66ல் 33.89 லட்சம் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, 1985-86க்குள் 172.21 லட்சம் டன்னாக உயர்ந்தது.

"ஆனால், அதிலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. பசுமைப் புரட்சியால் களஞ்சியங்களில் தானியங்கள் குவிந்தன. ஆனால், அவற்றை வாங்க மக்களிடம் பணம் இல்லை. ஆகவே மக்களின் பசி தீரவில்லை. இந்த முரண்பாட்டைத் தீர்க்க ஏதாவது செய்யவேண்டுமென நினைத்தார். பசியைத் தீர்க்க பசுமைப் புரட்சி மட்டும் போதாது என்பதை உணர்ந்தார். மேலும், பசுமைப் புரட்சி ஒரு நீடித்து நிற்கக்கூடிய வழிமுறை அல்ல என்பதையும் அவர் கணித்தார்.

80களிலும் 90களிலும் இதற்கென அவர் சில வழிகளை முன்வைத்தார். அதுதான் Evergreen Revolution என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில், அதிக அளவில் ரசாயனங்களையோ, பூச்சி மருந்துகளையோ பயன்படுத்தத் தேவையில்லை" என்கிறார் சி.ஆர். கேசவன்.

 
எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

1966 ஜூலையில் இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் இயக்குநராக எம்.எஸ். சுவாமிநாதன் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அது வேகமாக விரிவடையத் துவங்கியது. ஆறு பிரிவுகளுடன் இயங்கிவந்த அமைப்பு, 23 ஆய்வுப் பிரிவுகளைக் கொண்ட அமைப்பாக உருவெடுத்தது. அரிசி, கோதுமை, தானியங்கள், விவசாயத்தில் அணு ஆய்வு, தண்ணீர் தொடர்பான தொழில்நுட்பம் என மிகப் பெரிய அளவில் அந்த அமைப்பின் ஆய்வுகள் விரிவடைந்தன.

வேளாண் ஆய்வுக்கான இந்திய கவுன்சிலின் தலைமை இயக்குநராகவும் மத்திய அரசின் செயலராகவும் 1972ல் எம்.எஸ். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். 1979ல் மத்திய அரசின் முதன்மைச் செயலராகவும் ஆனார் சுவாமிநாதன். இதற்கு அடுத்த ஆண்டு மத்திய திட்டக் குழுவில் நியமிக்கப்பட்டார்.

I987ல் அவருக்கு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது. அதில் கிடைத்த நிதியை வைத்து எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிலையத்தை உருவாக்கினார்.

"உணவு உற்பத்தி அதிகரித்த பிறகு, அவற்றை மக்கள் வாங்கும் அளவுக்கு அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார் அவர். இந்தக் காரணத்திற்காகவே எம்.எஸ். சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷனை எம்.எஸ். சுவாமிநாதன் உருவாக்கினார். இதன் மூலம், பல கிராமங்களில் சுயஉதவிக் குழுக்களின் மூலம் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயிற்சியளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்" என்கிறார் சி.ஆர். கேசவன்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அறிவியலை மக்களின் பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்று, அறிவியலை வைத்து மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முயன்றவர் எனலாம் என்கிறார் கேசவன்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

"எம்.எஸ். சுவாமிநாதன், இந்தியாவின் மிகப் பெரிய வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல. அவர் மிகச் சிறந்த மனிதரும்கூட. தன்னுடைய நிலைப்பாடுகளோடு மாறுபடும் கருத்துகளையும் கவனிக்கக்கூடியவர். அதுதான் அவருடைய சிறப்பான அம்சம்" என்கிறார் சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய விவசாயம் குறித்த செய்திகளைச் சேகரித்துவரும் மூத்த பத்திரிகையாளரான பி. சாய்நாத். விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக அவர் அளித்த அறிக்கைகள் மிகமிக முக்கியமானவை என்கிறார் அவர்.

2004ல் இந்திய விவசாய ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையம் ஐந்து அறிக்கைகளை சமர்ப்பித்தது.

"விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு. அது பிறகு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் என்றே அழைக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. அதனுடைய அறிக்கை, எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை என்றே அழைக்கப்பட்டது. இந்திய விவசாயத்தின் முதல் செயல்திட்டமாக இந்த அறிக்கையைச் சொல்லலாம். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த அறிக்கையைக் கவனித்தார்கள். இந்திய விவசாயிகளுக்கு இரண்டே இரண்டு ஆங்கில வார்த்தைகள் தெரியும் என்றால், அது "சுவாமிநாதன் ரிப்போர்ட்" என்பதுதான். இந்த அறிக்கைதான் குறைந்தபட்ச ஆதார விலையை எப்படி நிர்ணயிப்பது எனக் கூறியது. அதாவது, உற்பத்திச் செலவோடு கூடுதலாக 50 சதவீதத்தை இணைந்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றார் அவர்.

இதன் முதல் அறிக்கை 2004ஆம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது. கடைசி அறிக்கை 2006 அக்டோபரில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்து வந்த அரசுகள் அந்தக் கமிஷனின் அறிக்கையை கொன்றுவிட்டன. மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர் அந்த அறிக்கையை உருவாக்கியிருந்தபோதிலும் எந்த அரசுகளுமே இந்த அறிக்கையைப் பற்றி விவாதிக்க ஒரு மணி நேரத்தைக்கூட நாடாளுமன்றத்தில் ஒதுக்கவில்லை

எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின் முக்கிய அம்சங்களை நிறைவேற்றுவோம் என்று தற்போதைய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதனை இப்போதுவரை செயல்படுத்தவில்லை. மாறாக, அதனைச் செயல்படுத்தினால், சந்தை விலைகளைத் தாறுமாறாக்கிவிடும் என்பதால், அவற்றை அமல்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது" என்கிறார் சாய்நாத்.

விதர்பா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அவர் நேரில் கண்டபோது அழுதுவிட்டார் என்கிறார் சாய்நாத்.

"நான் ஒரு முறை அவரைச் சென்னையில் சென்று சந்தித்தபோது, 'நீங்கள் விதர்பா பகுதியைப் பற்றி எழுதுபவை மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன' என்றார். 'நீங்கள் அங்கு வந்து பாருங்களேன்' என்று அவரை அழைத்தேன். அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, மிகக் குறைந்த கால அவகாசத்தில் அவருடைய ஆணையத்தின் மேலும் இரண்டு உறுப்பினர்களுடன் விதர்பாவுக்கு வந்தார். நாங்கள் முக்கியமான இடங்களுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய விலாஷ்ராவ் தேஷ்முக் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இரண்டு நாட்களுக்கு சாய்நாத் என்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறாரோ அங்கெல்லாம் செல்வேன் என்று கூறிவிட்டார். தற்கொலை செய்துகொண்ட 3 - 4 விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்றோம். அவருக்கு அப்போதே வயது 80க்கு மேல் ஆகியிருந்தது. இரண்டாவது வீட்டிற்குச் செல்லும்போதே அவர் அழுதுவிட்டார். முகத்தை மூடிக்கொண்டு அழுதார். இதை என்னால் மறக்க முடியாது" என நினைவுகூர்கிறார் பி. சாய்நாத்.

 
எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

2007ல் அப்போதைய மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராக அவரை நியமித்தது. அவர் உருவாக்கிய எம்.எஸ். சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் நீடித்த ஆற்றல், விவசாய உற்பத்தி ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, பங்களிப்புச் செய்துவருகிறது.

எம்.எஸ். சுவாமிநாதன் முன்னெடுத்த பசுமைப் புரட்சி குறித்து பிற்காலத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. பசுமைப் புரட்சி நிலத்தில் ரசாயனத்தைக் கொட்டி மாசுபாடுத்தவதாக சூழலியலாளர்கள் குற்றம்சாட்டினார்கள். இது குறித்து அவருடைய பார்வை என்னவாக இருந்தது? "பசுமைப் புரட்சியைப் பொறுத்தவரை, வசதியான விவசாயிகள் அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று நினைத்தார். ரசாயனமும் உரமும் பெரிய அளவில் இதற்குப் பயன்படுத்தப்படுவது குறித்த பார்வையும் மாறியிருந்தது. அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயங்கியதில்லை. அதுதான் அவரை மிகப் பெரிய மனிதர்களில் ஒருவராக்குகிறது" என்கிறார் சாய்நாத். அதேபோல, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்தும் பிற்காலத்தில் அவர் தனது கருத்துகளை மாற்றிக்கொண்டார் என்கிறார் சாய்நாத்.

எம்.எஸ். சுவாமிநாதன் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மனைவி மீனா சுவாமிநாதன் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். இந்தத் தம்பதிக்கு சௌமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா சுவாமிநாதன் என மூன்று மகள்கள்.

https://www.bbc.com/tamil/articles/cq5800pndepo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.