Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,

சுமார் 200 ஏக்கருக்கும் மேல் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை தூய்மைப்படுத்தி, அதில் 93 ஏக்கருக்கு பசுமைப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க. சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தென் சென்னையில் அமைந்துள்ள பெருங்குடியைச் சுற்றி வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அங்கு மலை மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்தக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, திடக்கழிவு மறுசுழற்சி செய்வதற்கான பயோமைனிங் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலம் தங்கள் பல ஆண்டுக்கால பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அதைச் சுற்றி வாழும் மக்களிடம் துளிர்த்தது.

ஆனால், சமீபத்தில் சென்னை மாநகராட்சி முன்வைத்துள்ள பசுமைப் பூங்கா திட்டம் அவர்களை மீண்டும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

அங்கு அமைக்கத் திட்டமிட்டுள்ள பசுமைப் பூங்காவை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பது ஏன்? அதற்கு மாற்றாக அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.

பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,

பசுமைப் பூங்கா குறித்த செயல் விளக்கக் கூட்டத்தில் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தென் சென்னை மக்கள் கொந்தளிப்பது ஏன்?

பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் அமைந்துள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு. கடந்த 30 ஆண்டுக்காலமாக அப்பகுதி மக்களின் வாழ்வை நஞ்சாக்கிக் கொண்டிருக்கும் அது, சுமார் 200 ஏக்கருக்கும் மேலாகப் பரவியிருக்கிறது. சொல்லப்போனால், அந்தப் பகுதி குப்பைக் கிடங்கு எனப் பேச்சுவழக்கில் பெயர் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், உண்மையில் அதுவொரு சதுப்புநிலம்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியான அங்கு பல்லாண்டு காலமாக சென்னையின் திடக்கழிவுகளைக் கொட்டிக் கொட்டி, நிலம் பாழாகிக் கிடக்கிறது. இந்நிலையில், அங்குள்ள திடக்கழிவுகளை பயோமைனிங் மூலமாக அப்புறப்படுத்தி, நிலத்தைத் தூய்மையாக்கி மீட்டுருவாக்கும் முயற்சி 2022ஆம் ஆண்டில் 350 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.

விரைவில் பெருங்குடி குப்பைக் கிடங்கின் திடக்கழிவுகள் முற்றிலுமாக மறுசுழற்சி செய்யப்பட்டு, சதுப்பு நிலம் மீட்கப்படக்கூட வாய்ப்புள்ளது என்ற செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனாலும், அப்படி மீட்கப்படும் அந்த நிலத்தில் தற்போது 185 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள பசுமைப் பூங்கா அவர்களைக் கோபமடையச் செய்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சென்னை மாநகராட்சி மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. அந்தத் திட்டம், பசுமைப் பூங்காவின் பரப்பளவைக் குறைப்பதாகவோ அல்லது மொத்த நிலத்தையும் நீர்நிலையாக மாற்றுவதாகவோ இருக்கலாம் என்றும் அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் திட்டத்தின் சாத்தியக்கூறுகளைப் பொறுத்து முடிவு செய்யப்படும் எனவும் சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம்,SAVE PALLIKARANAI WETLAND

படக்குறிப்பு,

பசுமைப் பூங்காவுக்கான 93 ஏக்கர் பரப்பளவில் 11.2 ஏக்கரில் கட்டடங்கள், சாலைகள், நடைபாதைகள் ஆகியவை உருவாக்க திட்டமிடப்பட்டது.

பசுமைப் பூங்கா திட்டத்தில் என்ன இருக்கிறது?

பள்ளிக்கரணை பசுமைப் பூங்கா திட்டத்தின்கீழ் 93 ஏக்கர் பரப்பளவில், குப்பைக் கிடங்காக இருந்த நிலத்தில் 185 கோடி செலவில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடந்த சந்திப்பில் விளக்கப்பட்டதன்படி, இந்தத் திட்டத்தில் நிழல் குடிசைகள், சூழலியல் கல்வி மையங்கள், பறவை நோக்குதல் கோபுரம், கழிவறைகள், நடைபயிற்சிக்கான பகுதி எனப் பலவும் அமைக்கப்படும்.

இதற்காக ஒதுக்கப்படும் 93 ஏக்கர் பரப்பளவில் 58.15 ஏக்கருக்கு பசுமைப் பூங்கா அமைக்கப்படும். மீதமுள்ள 23.8 ஏக்கர்களில் நீர்நிலைகள் உருவாக்கப்படும். மொத்த நிலப்பரப்பில், கட்டடங்கள், சாலைகள், நடைபாதைகள் ஆகிய கட்டமைப்புகள் 11.2 ஏக்கரில் உருவாக்கப்படும்.

குப்பைக் கிடங்கில் நடைபெற்று வரும் திடக்கழிவு மறுசுழற்சி செயல்முறையில் இதுவரை 17 லட்சம் சதுர மீட்டர் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன என்றும் இன்னமும் சுமார் 30 லட்சம் சதுர மீட்டர் அளவிலான கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளன என்றும் சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,

திடக்கழிவு மறுசுழற்சி முறையில் பெருங்குடி குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

பெருங்குடியில் நடக்கும் திடக்கழிவு மறுசுழற்சி

பெருங்குடி குப்பைக் கிடங்கில் குவிந்துள்ள குப்பை மலைகளை பயோமைனிங் எனப்படும் திடக்கழிவு மறுசுழற்சி முறையில் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணி கடந்த 2022 முதல் நடந்து வருகிறது.

மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிக் குப்பைகளை மாற்று எரிபொருளாக மாற்றுகிறார்கள்.

இதுகுறித்து பிபிசியிடம் முன்பு பேசிய இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனமான சிக்மாவின் துணைத்தலைவர் ஸ்ரீதர், “பல ஆண்டுகளாகக் குவிக்கப்பட்ட குப்பைகளைக் கிளரும்போது, அதைச் சுத்தப்படுத்தும்போது துர்நாற்றம் வீசவே செய்யும். ஆனால், இந்தத் திட்டம் ஒரு சில ஆண்டுகளில் முடிவடைந்த பிறகு, இந்தப் பகுதியின் நிலத்தடி நீர், காற்று ஆகியவற்றின் தரம் மேம்படும்,” என்று கூறினார்.

தற்போது ஓரளவுக்கு திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகள் முடிந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி இந்தப் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து கழிவுகளால் பாழான நிலம் மீட்கப்பட்ட பிறகு அங்கு பசுமைப் பூங்கா அமைக்கத் திட்டமிட்டது.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,

குப்பைக் கிடங்கை அகற்றிய பிறகு, சதுப்பு நிலத்தை ஏதும் செய்யாமல் இயற்கையாகவே விடவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

‘பசுமைப் பூங்காவால் எந்தப் பயனும் இல்லை’

ஆனால், கடந்த ஜனவரி மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பசுமைப் பூங்கா அமைக்க வேறு இடம் பார்க்குமாறும் இந்தப் பகுதியில் மீட்கப்படும் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்து, சதுப்பு நிலத்தை மீட்டெடுக்குமாறும் கூறியிருந்தது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி நடந்த இந்தத் திட்டம் குறித்த செயல்விளக்கக் கூட்டத்தில் பெருங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் கலந்துகொண்டனர்.

அவர்கள் இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லையெனவும் குப்பைகளை அகற்றிய பிறகு மீட்கப்படும் நிலத்தை மீண்டும் சதுப்புநிலமாகவே மாற்றவேண்டும் எனவும் கூறினர். மேலும், இப்போது தங்களுக்குத் தேவை பசுமைப் பூங்கா அல்ல, வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதுதான் எனக் கூறிய குடியிருப்புவாசிகள், அதற்கு சதுப்புநிலம் மீட்டுருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வேளச்சேரி மேற்கு, ஏஜிஎஸ் காலனி மக்கள் நலச்சங்கத்தின் செயலாளர் கீதா கணேஷ், “அந்த இடத்தில் இருக்கும் குப்பைக் கிடங்கை அகற்றிவிட்டு, அங்கு வேறு எதுவும் செய்யாமல் அப்படியே விட்டாலே போதுமானது. அதைச் செய்தாலே இங்கு பெய்யும் மழைநீர் அனைத்தும் அங்கு சென்றுவிடும்.

அங்கிருக்கும் இடத்தை முறையாகத் தூர்வாரிப் பராமரித்தாலே வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் வருவதைத் தடுக்க முடியும். அதைவிட்டு, இத்தகைய திட்டத்தைக் கொண்டு வருவதால் எந்தப் பயனும் இல்லை,” என்று கூறினார்.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம்,SAVE PALLIKARANAI WETLAND

படக்குறிப்பு,

சதுப்பு நிலப்பகுதியை மீட்ட பிறகு பசுமைப்பூங்கா என்ற பெயரில் மாநகராட்சி நிர்வாகம் எடுத்துக்கொள்வது குறித்து மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட சதுப்பு நிலம்

பள்ளிக்கரணை 1900களின் தொடக்க காலத்தில் 8,000 ஹெக்டேருக்கு பரந்து விரிவடைந்திருந்ததாகப் பழைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் பரப்பு, ஈசிஆர் முதல் மத்திய கைலாஷ் வரை நீண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், தென் சென்னையின் வளர்ச்சியில் பங்கு வகித்த நெடுஞ்சாலைகள், ஐடி பூங்காக்கள் மற்றும் அதைச் சுற்றி வளர்ந்த இன்னும் பல கட்டுமானங்கள், ஆங்காங்கே துண்டு துண்டாக அந்த நிலத்தை வெட்டியெடுக்கவே, இறுதியில் தற்போது சுமார் 500 ஹெக்டேர் என்ற பரப்பளவாகச் சுருங்கிவிட்டது.

இந்நிலையில், அதில் 200 ஏக்கர் பரப்பளவை பெருங்குடி குப்பைக் கிடங்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தது. கடந்த 2007ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெருங்குடியைச் சுற்றி வாழும் பெண்களின் தாய்ப்பாலில் ஆர்கனோகுளோரின் எனப்படும் நச்சு வேதிமம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதற்குக் காரணமாக அந்தக் குப்பைக் கிடங்கை அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.

உலகிலேயே தூய்மையானதாகக் கருதப்படும் தாய்ப்பாலையே நஞ்சாக்கிய குப்பைக்கிடங்கின் அபாயகரமான சூழலில் வாழ்ந்த மக்கள், தற்போது அது தூய்மைப்படுத்தப்படுவதை எண்ணி மகிழ்ந்தாலும், அதன்பிறகு அந்த நிலத்தை மீட்ட பிறகு மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் அதை பசுமைப்பூங்கா என்ற பெயரில் எடுத்துக்கொள்வது குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர்.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தத் திட்டம், ஏற்கெனவே வாழ்விடப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள உயிரினங்களை மேலும் சிக்கலில் தள்ளும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பசுமைப் பூங்கா அமைப்பதால் என்ன பிரச்னை?

“பல கோடி ரூபாய் செலவில் செய்யப்படும் பயோமைனிங் மூலம், அந்த நிலத்தை மீண்டும் மீட்டுருவாக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இந்தச் செயல்முறை பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், இங்கு 2022 முதல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஒருவழியாக இந்த நிலம் தூய்மைப்படுத்தும் முயற்சி முடிவடைந்தால், அதை சதுப்புநிலமாகவே விடவேண்டியது மிகவும் அவசியம்,” என்று விளக்குகிறார் கடல் உயிரியல் வல்லுநரான முனைவர் தி.தி.பாபு.

“இத்தகைய ஈரநிலக் கட்டமைப்பை மனிதர்களால் புதிதாக வேறோர் இடத்தில் அப்படியே செயற்கையாக உருவாக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.” அப்படியிருக்க, மீட்கப்படும் நிலத்தின் இயற்கை அமைப்பை மறுபடியும் மீட்டுருவாக்க முயல்வதே சரியான அணுகுமுறை என்று வலியுறுத்துகிறார் முனைவர் தி.தி.பாபு.

அப்படிச் செய்யத் தவறினால், அது அப்பகுதியில் ஏற்கெனவே சீரழிந்து கொண்டிருக்கும் சூழலியல் சமநிலையை மேலும் சீர்குலைக்கும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.

இது அப்பகுதியைச் சுற்றி வாழும் மக்களைப் பாதிப்பது மட்டுமின்றி, தற்போது வாழ்விடப் பற்றாக்குறையால் அழிந்துகொண்டிருக்கும் பள்ளிக்கரணை வாழ் ஊர்வனங்கள், பறவைகள் மற்றும் இதர உயிரினங்களையும் தாவரங்களையும் மேன்மேலும் அழிவை நோக்கித் தள்ளும் எனவும் கூறுகிறார் கடல் உயிரியல் வல்லுநர் முனைவர் தி.தி.பாபு.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கையில், பஞ்சு போல் நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் கொண்டவை.

‘குப்பைக் கிடங்கே சதுப்பு நிலத்தில் வந்ததுதானே!’

முப்பது ஆண்டுகளுக்கு முன் ஐந்தாயிரம் ஏக்கருக்கும் மேல் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்த அரசாங்கம், சதுப்பு நிலத்திலேயே குப்பையையும் கொட்டியது என்று கூறும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகர், “இப்போது அந்தக் குப்பைக் கிடங்கைத்தான் பசுமைப் பூங்காவாக மாற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குப்பைக் கிடங்கே சதுப்பு நிலத்தில் வந்ததுதானே,” என்று வாதிடுகிறார் அவர்.

பல ஆண்டுக்காலமாகச் சிதைக்கப்பட்ட பிறகு, இப்போதுள்ள இந்த நிலத்தை முற்றுமுழுதாகப் பழைய சதுப்பு நிலமாக மாற்ற முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

“பழைய சதுப்பு நிலம் எப்படி இருந்ததோ அதே நிலைக்கு அதை மீட்டெடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. அந்தச் சதுப்பு நிலப்பகுதி முழுக்கவும் பஞ்சு போல் நீரை உறிஞ்சிக் கொள்ளும் திறன் கொண்டவை.

ஆனால், இத்தனை ஆண்டுக்காலமாக அங்குக் குவிக்கப்பட்ட கழிவுகளால் நிலமே பாழாகிக் கிடக்கிறது. அவ்வளவு பெரிய சிதைவை முற்றிலுமாகச் சரிசெய்து நிலத்தை மீட்டெடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்,” என்கிறார் டேவிட் மனோகர்.

இதே சந்தேகத்தை பெருங்குடி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களில் சிலரும் எழுப்புகின்றனர். ஆனால், தரைமட்ட அளவு வரை குப்பைக் கிடங்கில் இருக்கும் குப்பைகளை முழுமையாக மறுசுழற்சி செய்து நிலத்தை மீட்க முடியும் என்று திடக்கழிவு மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை பெருங்குடி குப்பைக் கிடங்கு இருக்கும் பகுதியை முற்றிலுமாக மீட்டெடுத்தாலும், அங்கு “பசுமைப் பூங்கா உட்பட எந்தவிதமான கட்டமைப்புகளையும் கொண்டு வரக்கூடாது, சதுப்புநிலத்தை மீட்டெடுத்து அதே நிலையில் பராமரிக்க வேண்டும்” என்று அதைச் சுற்றி வாழும் மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/ckvey9n5210o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.