Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

கயானாவில் எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னெப்போதும் இல்லாத ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லியாண்ட்ரோ ப்ரேஸரஸ்
  • பதவி, பிபிசி செய்தி பிரேசில்
  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

சகோதரர்கள் ஷிவ் மற்றும் ஹேமந்த் 1982இல் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான கயானாவை விட்டு வெளியேறி கனடாவுக்குச் சென்ற போது அவர்களது வயது 19 மற்றும் 16. ஒரு நல்ல வாழ்க்கைக்காக ஆயிரக்கணக்கான கயானா இளைஞர்கள் என்ன செய்தார்களோ அதையே அவர்களும் அப்போது செய்தனர்.

வட அமெரிக்கா சென்று தங்களுக்கென குடும்பங்களை உருவாக்கி வாழ்ந்து வந்தனர். வருமானத்திற்கு ரியல் எஸ்டேட் மற்றும் நிதித்துறையில் வேலை செய்தார்கள்.

39 ஆண்டுகளுக்குப் பிறகு 2021இல், அவர்கள் கயானா திரும்ப முடிவெடுத்தனர்.

சமீப காலங்களில் பெட்ரோலியம் மூலம் கிடைத்த வருமானத்தால் கயானாவின் பொருளாதாரம் உயர்ந்தது. இதனால் நாட்டை விட்டு வெளியேறிய சகோதரர்களின் மனம் மாறியது.

அவர்கள் கயானா நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் அதிக மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்வதிலும் வாடகைக்கு விடுவதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை உருவாக்கினர்.

ஷிவ் மற்றும் ஹேமந்த் கயானாவில் புதிதாக உருவாகியுள்ள நடுத்தர வர்க்கத்தின் இரண்டு முக்கிய பிரதிநிதிகள். இந்த புதிய நடுத்தர வர்க்கம் என்பது கயானா நாட்டில் கச்சா எண்ணெய் ஆய்வு தொடங்கியதிலிருந்து மீண்டும் நாட்டிற்கு திரும்பிய மக்களே.

2019 முதல், இந்த கச்சா எண்ணெய் ஆய்வின் காரணமாக உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது, முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடான கயானா.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

ஷிவ் மிசிர், தனது 19வது வயதில் கயானாவை விட்டுச் சென்றார்.

வரலாறு காணாத பொருளாதார ஏற்றம்

கயானா என்பது தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில், சூரினாம் மற்றும் வெனிசுலா இடையே அமைந்துள்ள ஒரு நாடு.

வெறும் 8,00,000க்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது கயானா. ஆரம்பத்தில் கரும்பு உற்பத்திக்காக டச்சு காலனியாக உருவாக்கப்பட்டது.

1966 வரை ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து கயானாவிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. 2015ஆம் ஆண்டில், அமெரிக்க எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில் (Exxon Mobil), நாட்டின் கடற்கரையோரம் பொருளாதார ரீதியாக லாபமளிக்கக் கூடிய எண்ணெய் வயல்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், எக்ஸான் மொபில், அமெரிக்கன் ஹெஸ் கார்பரேஷன் மற்றும் சீன சிஎன்ஓஓசி நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு கயானீஸ் கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் எண்ணெய் கிணறுகளைத் தோண்டியது.

தோராயமாக 1,100 கோடி பீப்பாய்கள் அளவிலான எண்ணெய் இருப்பு இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்திய மதிப்பீடுகள் இந்த அளவு 1,700 கோடி பீப்பாய்கள் அளவை எட்டும் என்று கூறுகின்றன.

இது 1,400 கோடி பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்ட பிரேசிலின் மொத்த எண்ணெய் இருப்பையும் விட அதிகமாக இருக்கும்.

2019 வரை, கயானா மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் விவசாயம், தங்கம் மற்றும் வைரச் சுரங்கம் மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றைச் சார்ந்து இருந்தது.

அந்த ஆண்டு முதல், எண்ணெய் வருவாய் கயானா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கத் தொடங்கியது.

2020ஆம் ஆண்டில், பிரேசிலின் அப்போதைய பொருளாதார அமைச்சர் பாலோ குடெஸ், கயானா நாட்டை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நகரங்களில் ஒன்றான துபாயோடு ஒப்பிட்டார். எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் செல்வத்தின் அடையாளமாக திகழ்கிறது துபாய்.

"கயானா, நமது பிராந்தியத்தின் புதிய துபாய்" என குடெஸ் கூறினார். கச்சா எண்ணெய் இருப்பு குறித்த அளவீடுகள் உண்மையில் உலகின் கவனத்தை ஈர்க்கின்றன.

 

நான்கே ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சி

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சமீபத்திய ஆண்டுகளில், கயானாவின் பொருளாதாரம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது.

2019 மற்றும் 2023க்கு இடையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.17 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து சுமார் 3 மடங்காக அதாவது 14.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. அதாவது 184% அதிகரித்துள்ளது ஜிடிபி.

2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 62% ஆக இருந்தது. அதேபோல், தனிநபர் வருமானம் (நாட்டின் செல்வத்தை குடிமக்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது) 2019இல் 6,477 அமெரிக்க டாலரில் இருந்து 2022இல் 18,199 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

ஒப்பீட்டளவில், அந்த எண்ணிக்கை பிரேசிலின் 2022 தனிநபர் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும் மற்றும் குவாத்தமாலாவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

“நாட்டிற்கே லாட்டரி அடித்தது போல உள்ளது. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இது. நாட்டின் வளர்ச்சி குறித்து மக்களிடம் அதிக நம்பிக்கை தெரிகிறது” என்று கயானா மற்றும் சூரினாமுக்கான உலக வங்கியின் பிரதிநிதி டிலெட்டா டோரெட்டி பிபிசி பிரேசிலிடம் கூறினார்.

எண்ணெய் உற்பத்தியின் விளைவாக, நாட்டின் பொருளாதாரத்தின் பிற துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளன.

சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் படி, 2022இல் எண்ணெய் துறையைத் தவிர்த்து ஜிடிபி வளர்ச்சி 11.5% ஆகும். தலைநகர் ஜார்ஜ்டவுன் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் இதன் விளைவுகள் தெரிகிறது.

புதிய மருத்துவமனைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களிலும், அமெரிக்கன் மேரியட் மற்றும் பெஸ்ட் வெஸ்டர்ன் போன்ற சர்வதேச சொகுசு ஹோட்டல்களை நிர்மாணிப்பதிலும் கிரேன்கள் மற்றும் தொழிலாளர்கள் தீவிரமாக வேலை செய்வதைக் காணலாம்.

புதிய நெடுஞ்சாலைகளில் டஜன்கணக்கில் புதிதாக கட்டப்பட்ட கிடங்குகள் காணப்படுகின்றன. நாட்டின் கட்டுமானத் தளங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக டிராக்டர்கள், எஸ்கவேட்டர்கள் மற்றும் பிற கனரக கட்டுமான உபகரணங்களால் இந்த கிடங்குகள் நிரப்பப்பட்ட உள்ளன.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

ஜார்ஜ்டவுனில் உள்ள பெஸ்ட் வெஸ்டர்ன் என்ற அமெரிக்க நட்சத்திர ஹோட்டலை சீன நிறுவனம் ஒன்று கட்டி வருகிறது.

புதிய நடுத்தர வர்க்கம்

இந்த பொருளாதார ஏற்றத்தால்தான் சகோதரர்களான ஷிவ் மற்றும் ஹேமந்த் தற்காலிகமாக கயானாவுக்குத் திரும்ப முடிவு செய்தனர்.

2021 முதல், அவர்கள் இருவரும் தங்கள் புதிய வணிகத்தை கவனித்து கொள்வதற்காக டொராண்டோ (கனடா) மற்றும் ஜார்ஜ்டவுன் இடையே அடிக்கடி பயணம் செய்கிறார்கள்.

எண்ணெய் மூலம் கிடைக்கும் பணம் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்கும், நாட்டின் தற்போதைய பணக்கார வர்க்கத்திற்கும் பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

“மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். பொருளாதார ரீதியில் பயன் தரக்கூடிய ஒரு அமைப்பின் பகுதியாக தாங்கள் இருப்பதாக உணர்கிறார்கள்” என்கிறார் ஷிவ்.

மேலும், "கயானாவில் ரியல் எஸ்டேட்டில் அல்லது எண்ணெய் தொழில் விநியோகச் சங்கிலியில் பணிபுரியும் பல பணக்காரர்கள் உள்ளனர்."

அமெரிக்காவிலோ கனடாவிலோ வசித்துக் கொண்டு, எண்ணெய் வளத்தால் ஆதாயம் பெறும் நம்பிக்கையில் கயானாவில் சொத்து அல்லது நிலத்தில் முதலீடு செய்யும் மற்ற கயானிகளை தனக்குத் தெரியும் என்கிறார் ஷிவ் மிசிர்.

அவர்கள் கயானாவிற்கு வந்ததும், தானாகவே புதிய நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள்.

"நாட்டிற்கு திரும்பி வரும் பல கயானிகள் உள்ளனர். அவர்கள் உயர் சமூகங்களில், தனியார் பாதுகாப்புடன் கூடிய நவீன வீடுகளில், முன்பு இருந்த அனைத்து வசதிகளுடன் வாழ முயற்சி செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தவர்கள்." என்கிறார் ஷிவ்.

அதிக பொருள் வாங்கும் திறன் கொண்ட வாடிக்கையாளர்களுடன் பழகியுள்ள ஷிவ், நாட்டின் பணக்கார வர்க்கத்தின் ஒரு பகுதியினர் இன்னும் வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.அதனால் தான் நாட்டில் இப்போதும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இல்லை என்று கருத்துத் தெரிவிக்கிறார்.

 
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எண்ணெய் வளம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றம் மற்ற துறைகளையும் உயர்த்தியுள்ளது.

துடிப்பான சந்தை

டச்சு மற்றும் ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்ட போதிலும், கரீபியனில் உள்ள அதன் அண்டை நாடுகளைப் போலவே, அமெரிக்காவுடன் நெருங்கிய வணிக மற்றும் கலாச்சார உறவுகளைப் பேணுகிறது கயானா. வெறும் நான்கு மணி நேர விமான பயணத்தில் அமெரிக்காவை அடையலாம்.

ஷிவ் கூற்றுப்படி, கயானிய பணக்கார வர்க்கத்தின் பெரும் பகுதியினர் தங்கள் குழந்தைகளை அமெரிக்கா, கனடா அல்லது ஐரோப்பாவிற்கு படிக்க அனுப்புகிறார்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை சந்திக்கச் செல்லும்போது இந்த நாடுகளை சுற்றிப் பார்க்கவும் வாழ்க்கை முறையை அனுபவிக்கவும் செய்கிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில், பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சி, நாட்டின் உயரடுக்கினரை மையமாகக் கொண்ட வணிகங்களைத் திறப்பதை ஊக்குவித்தது என்று தொழிலதிபர் ஷிவ் மிசிர் உறுதிப்படுத்துகிறார்.

"எடுத்துக்காட்டாக, எங்கள் வணிகம் அவற்றில் ஒன்று" என்கிறார்.

மிசிர் சகோதரர்களின் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூவி டவுன் ஷாப்பிங் சென்டரில் ஒரு சிறிய இடத்தில் செயல்படுகிறது, இது ஜார்ஜ்டவுனில் 2019இல் திறக்கப்பட்டது, அதே ஆண்டில் தான் நாட்டில் கச்சா எண்ணெய்க்கான ஆய்வு தொடங்கியது.

ஒரு காலத்தில் நாட்டின் செல்வத்தின் முக்கிய ஆதாரங்களாக விளங்கிய கரும்பு மற்றும் அரிசி பயிரிடப்பட்ட ஜார்ஜ்டவுனின் புறநகர்ப் பகுதிகள், இப்போது ஆடம்பர வீடுகள் மற்றும் உயர் சமூக வாழ்விடங்களுக்கு வழிவகுக்கின்றன.

கயானா நாடு சந்திக்கும் மாற்றங்களையும், புழக்கத்திற்கு வரும் பணம் எப்படி புதிய பழக்கங்களையும் நிலப்பரப்புகளையும் உருவாக்குகிறது என்பதை இது காட்டுகிறது.

புதிதாக உருவான ஷாப்பிங் சென்டர்களில் ஒன்று அமேசானியா மால் ஆகும். இது டெமராரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. நகரின் மையத்திலிருந்து அரை மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.

இந்த ஷாப்பிங் சென்டரின் முக்கிய கடைகளில் ஒன்று ஸ்டார்பக்ஸ்.

ஏப்ரல் 2023இல் திறக்கப்பட்ட இந்த ஷாப்பிங் சென்டர், 200 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 50 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது.

பிபிசி பிரேசிலிடம் பேசிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம், "நாடே இப்போது 'ஒரு துடிப்பான சந்தையாக இருப்பதால்', இங்கு ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட்டது" என்று கூறியது.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

ஒரு காலத்தில் கரும்பு மற்றும் அரிசியை பயிரிட பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் இப்போது ஆடம்பர வீடுகள் மற்றும் உயர் சமூக வாழ்விடங்கள் கட்டப்படுகின்றன.

பல நாடுகளின் புதிய முதலீடுகள்

புதிய எண்ணெய் வளம் கயானாவிற்குள் எவ்வளவு விரைவாக தாக்கம் செலுத்துகிறது என்பதற்கான மற்ற அறிகுறிகளும் உள்ளன. பல தசாப்தங்களாக நாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பு பணிகள் நடக்கவில்லை. இப்போது அதற்கான ஒப்பந்தங்களை கோரும் பல நாட்டு நிறுவனங்களை கயானா நாடு ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

நாட்டில் வணிக ரீதியான எண்ணெய் ஆய்வு நடத்தப்பட்ட முதல் ஆண்டான 2019ஆம் ஆண்டில், சாலைகள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அரசாங்கம் 187 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2023இல், அந்த எண்ணிக்கை 650 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, அதாவது 247% அதிகரித்துள்ளது.

“கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நான் இங்கு வசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடு சென்று, திரும்பி வரும்போது வித்தியாசத்தை கவனிக்கிறேன்,” என்கிறார் உலக வங்கியின் அதிகாரி டிலெட்டா டோரெட்டி.

“புதிய சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் என பல உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. நாட்டிற்கு வரும் அதிக எண்ணிக்கையிலான வணிகப் பணிகளும் கவனிக்கத்தக்கவை என்கிறார் அவர்.

எதிர்பாராத மூலவளங்கள் கிடைப்பதால், உலகளாவிய கட்டுமானத் தளமாக மாறியுள்ளது கயானா நாடு. நிதி ஒப்பந்ததாரர்களுக்கு கடன் வழங்கும் நாடுகளின் பார்வையும் கயானாவின் மீது உள்ளது.

"எங்களிடம் ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்ளன" என்று கயானாவின் பொதுப்பணித் துறை துணை அமைச்சருக்கு இணையான பதவியை வகிக்கும் டியோடாட் இந்தார் பிபிசி பிரேசிலிடம் தெரிவித்தார்.

சீனா அந்த குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக தோன்றுகிறது. உதாரணமாக, சீன நிறுவனங்களின் கூட்டமைப்பு டெமராரா ஆற்றின் மீது புதிய பாலம் கட்டுவதற்கான டெண்டரை வென்றது. இந்த பணிக்கு சீன வங்கி நிதியளித்தது.

 
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

சீன மற்றும் கயானிய தொழிலாளர்கள் டெமராரா ஆற்றின் மீது பாலம் கட்டுகின்றனர்.

இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக கருதப்படுகிறது, ஏனெனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பாலத்தை மாற்றுவது இதன் முக்கிய பணி. ஒரு நாளைக்கு பல முறை கப்பல்கள் இந்த ஆற்றை கடந்து செல்கின்றன.

புதிய பாலம் ஒரு தொங்கு அமைப்பைக் கொண்டிருக்கும். மேலும் கப்பல்கள் கீழே செல்ல அனுமதிக்கும். இந்தத் திட்டத்தின் மதிப்பு 260 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

கயானா அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் பல மருத்துவமனைகளின் கட்டுமானத்திற்கும் சீன வணிகர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

ஆனால் சீனாவுக்கு இங்கு போட்டியாளர்கள் உள்ளனர். 2022ஆம் ஆண்டில், நெடுஞ்சாலை அமைப்பதற்கான $106 மில்லியன் டெண்டரை வென்றார் ஒரு இந்திய ஒப்பந்ததாரர்.

கயானா அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு பொது மருத்துவமனையைக் கட்டுவதற்கு அந்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஆஸ்திரியா கடன் வழங்கியுள்ளது. திட்டத்தின் மதிப்பு 161 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

சில நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்து வருகின்றன. டெமராரா ஆற்றின் மீது பாலம் கட்டும் சீனக் கூட்டமைப்பு இதைத் தான் செய்கிறது. திட்டப் பணிகள் சீன மற்றும் கயானிய தொழிலாளர்களிடையே பிரித்து அளிக்கப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில், வெனிசுலாவிற்கும் அந்த நாட்டிற்கும் இடையே எஸ்சிகிபோ பிராந்தியம் தொடர்பாக இருந்த நீண்ட கால பிரச்னை காரணமாக சர்வதேச நாடுகளின் கவனத்திற்குள் வந்தது கயானா.

எஸ்சிகிபோ பிராந்தியம், தோராயமாக 1,60,000 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட பகுதி. இது கயானாவின் 70% நிலப்பரப்பைக் குறிக்கிறது. இது தங்கம், தாமிரம் மற்றும் வைரம் போன்ற கனிமங்கள் நிறைந்த பகுதியாகும். மேலும் சமீபத்தில் எண்ணெய் மற்றும் பிற ஹைட்ரோகார்பன் வளங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எஸ்சிகிபோ, கயானாவின் 70% நிலப்பரப்பைக் கொண்ட ஒரு பிரதேசம்.

இந்திய வம்சாவளியினர் திடீர் பணக்காரர்களானது எப்படி?

கயானாவைச் சேர்ந்த டேவிட் ஹிண்ட்ஸ், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக அமெரிக்காவிற்கும் அவரது சொந்த நாட்டிற்கும் இடையே பயணம் செய்து வருகிறார்.

அவர் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) பேராசிரியராக உள்ளார். கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

கயானா மிகவும் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் வர்க்கப் பிரிவைக் கொண்ட நாடு என்று ஹிண்ட்ஸ் கூறுகிறார்.

17 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், நாடு ஐரோப்பியர்களால் காலனித்துவப்படுத்தப்பட்டது. அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் உழைப்பைப் பயன்படுத்தி சர்க்கரையை உற்பத்தி செய்தனர்.

1833இல் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் பிறகு, கிழக்கு ஆசியாவில் இருந்து, குறிப்பாக இப்போதைய இந்தியா, சீனா மற்றும் போர்த்துகீசிய பிராந்தியத்திலிருந்து கயானாவிற்கு பணியாளர்களை கொண்டுவரத் தொடங்கியது ஐக்கிய இராஜ்ஜியம்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, மக்கள் தொகையில் 39.8% இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், 30% ஆப்பிரிக்க வம்சாவளியினர், 10.5% பழங்குடியினர் மற்றும் 0.5% பேர் சீன, டச்சு மற்றும் போர்த்துகீசியம் போன்ற பிற பூர்வீகங்களைக் கொண்டவர்கள்.

அப்போதைய பிரிட்டிஷ் பேரரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், ஆசிய மற்றும் போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த குடியேறியவர்களை நாட்டின் வர்த்தகம் மற்றும் புதிய தொழில்துறைகளில் வேலை செய்ய ஊக்குவித்ததாக ஹிண்ட்ஸ் கூறுகிறார்.

"இந்தியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களின் சந்ததியினர் கயானாவின் பொருளாதார உயரடுக்கின் ஒரு பகுதியாக உள்ளனர்" என்று அவர் கூறுகிறார்.

மறுபுறம், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்ரிக்கர்களின் சந்ததியினர், குறைந்த திறன் வேலைகளில் அல்லது பொது சேவையில் வேலை செய்யத் தொடங்கினர் என்று ஹிண்ட்ஸ் விளக்குகிறார்.

கயானாவின் 'புதிய பணக்காரர்கள்' நாட்டில் குடியேறிய அதே பொருளாதார உயரடுக்கிலிருந்து வந்தவர்கள் என்று பேராசிரியர் உறுதிப்படுத்துகிறார்.

"பொருளாதார ஏற்றத்தை சாதகமாகப் பயன்படுத்துபவர்கள் கயானாவின் உயரடுக்கில் ஏற்கனவே வேரூன்றியவர்கள்" என்கிறார் பேராசிரியர் ஹிண்ட்ஸ்.

நாட்டில் நிலவும் சமூக சமத்துவமின்மை பற்றி கயானிய அரசாங்கத்திடம் பிபிசி பிரேசில் கேட்டது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

 
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'புதிய துபாய்'

தொழிலதிபர் ரிச்சர்ட் சிங் ஜார்ஜ்டவுனில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்கிறார். நகரின் மையத்தில், தனது டீலர்ஷிப்பில் நிறுத்தப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட கார்களை தனது பணியாளர்கள் கவனமாக மெருகூட்டுவதை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சிறுவயதில் இருந்தே கார் மற்றும் தொழில்நுட்பம் மீது ஆர்வம் கொண்டவர். இவர் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்கிறார், பெரும்பாலும் ஜப்பான் போன்ற நாடுகளில் கார்கள் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த கார்களில், கயானா கார்களில் உள்ளது போல், வலது பக்கத்தில் ஸ்டீயரிங் உள்ளது.

அவரைப் பொருத்தவரை, எண்ணெய் வளம் மூலம் பொருளாதார மாற்றம் இருந்த போதிலும், நாட்டின் பணக்கார வர்க்கத்தினர் பயன்படுத்தப்பட்ட கார்களை விரும்புகின்றனர். ஏனெனில் புதிய கார்களை இறக்குமதி செய்வதற்கான வரி மிக அதிகமாக உள்ளது. நாட்டில் இன்னும் முறையான திறனுடைய தொழிலாளர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான அணுகல் இல்லை. எனவே புதிய வாகனங்களை இறக்குமதி செய்து, பராமரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

ஜப்பானிய உற்பத்தியாளர்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மேல் இருந்த வாடிக்கையாளர்களின் கவனம் இப்போது பிஎம்டபிள்யூ கார்கள் மேல் சென்றுவிட்டதாகவும், நாட்டில் எண்ணெய் ஆய்வு தொடங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களிடம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார் சிங்.

எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறையுடன் தொடர்புடைய பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு அடிக்கடி வருகிறார்கள். அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வாகனங்களைத் இங்கு தேடுகின்றன.

"கயானிய உயரடுக்கின் நுகர்வோர் பழக்கங்களை நன்கு அறிந்த சிங், நாட்டில் ஒருவித 'புதிய நடுத்தர வர்க்கம்' உருவாகி வருவதைக் கவனிக்கிறேன்" என்கிறார் ரிச்சர்ட் சிங்.

"ஆம், ஒரு புதிய நடுத்தர வர்க்கம் உள்ளது. அது கயானாவில் உள்ள பழைய நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலே அமர்ந்திருக்கிறது" என்கிறார் சிங்.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

தொழிலதிபர் ரிச்சர்ட் சிங் ஜார்ஜ்டவுனில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்கிறார்.

தொழிலில் வருவாய் அதிகரிப்பு தனது பிடித்தமான ஒன்றைத் தொடர சிங்கை அனுமதிக்கிறது, அது மோட்டார் ஸ்போர்ட்ஸ். கடந்த ஆண்டு மே மாதம், ஃபார்முலா 1 பார்க்க மயாமிக்குச் சென்றார் சிங்.

ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் அதன் உச்சத்தை எட்டவில்லை என்று தொழிலதிபர் சிங் நம்புகிறார்.

"நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். கயானா (பொருளாதார ரீதியாக) மிகப்பெரிய உயரத்தை அடையும் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் சிங்.

துபாயுடன் கயானாவை ஒப்பிடுவதை நம்பிக்கையான தொனியில் சிங் ஒப்புக்கொள்கிறார்.

"நான் எப்பொழுதும் துபாய் பற்றிய கதைகளைப் பார்த்திருக்கிறேன். 90களில் நீங்கள் அங்கு சென்றால், அது வெறும் பாலைவனமாக இருந்தது. இப்போது சென்றால் அதை அடையாளம் காண முடியாது, முற்றிலும் மாறிவிட்டது" என்று அவர் கூறுகிறார்.

"இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் இந்த நாட்டைப் பார்த்து, 'இது கயானா என்று என்னால் நம்ப முடியவில்லை' என்று சொல்வார்கள். அத்தகைய மாற்றம் இங்கேயும் நடக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் ரிச்சர்ட் சிங்.

https://www.bbc.com/tamil/articles/cq5x22nq5x8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.