Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 FEB, 2024 | 05:30 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் இவ்வருடம் நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிக்காட்டிவருகிறார். கடந்தவாரம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த வேளையிலும் அதை அவர் வெளிக்காட்டியதாக செய்திகள் கூறின.

மக்களின் ஆணையுடன் அரசாங்கம் ஒன்று பதவிக்கு வருவதை உறுதிசெய்யக்கூடிய தேர்தல்களுக்காக காத்திருப்பவர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்களை நேர்மறையாக நோக்குவார்கள். ஜனாதிபதி பதவி நாட்டின் மிகவும் பலம்பொருந்திய பதவி. சர்வதேச வங்குரோத்து நிலைக்குள் நாடு மூழ்கிக்கிடக்கும் மிகவும் தீர்க்கமான இந்த காலப்பகுதியில்  ஜனாதிபதி நாட்டுக்கு தலைமைதாங்குகின்ற போதிலும், அவருக்கு மக்களின் ஆணை கிடையாது.

அரசாங்கத்தின் அடுத்த இரு மட்டங்களான  மாகாணசபைகளும் உள்ளூராட்சி சபைகளும்  மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதவையாக இருக்கின்றன.    மக்களின் ஆணையின்றி ஆட்சிசெய்வது தீர்மானங்களை எடுப்பவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதாக இருக்கலாம். ஆனால், அதனால், பாதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள்  நாளடைவில் கிளர்ச்சியில் இறங்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் குறித்து உட்கிடையான ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தாமல் பல தசாப்தகாலமாக நீடித்த மூன்று அரசாங்கங்களில்   உறுப்பினராக இருந்தவர் இன்றைய ஜனாதிபதி.

ஆறு வருடங்களுக்கு பொதுத்தேர்தலை ஒத்திவைப்பதற்கு 1982  ஆம் ஆண்டில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியபோது ஜனாதிபதி கல்வியமைச்சராக பதவி வகித்தார். 1917 ஆம் ஆண்டில் தேர்தல் சீர்திருத்தங்களை செய்வதில் இறங்கிய அரசாங்கத்தில் அவர் பிரதமராக இருந்தார். அந்த சீர்திருத்த முயற்சி மாகாணசபைகளை தொடர்ந்து முடக்கநிலையில் வைத்திருக்கிறது.

மீண்டும், 2022 ஆம் ஆண்டில் பணம் இல்லை என்று காரணம் கூறி உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்த அரசாங்கத்தில் ஜனாதிபதியாக விங்கிரமசிங்க இருக்கிறார்.

சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தன "ஒரு நிதியாண்டில் வருவாயையும் செலவினத்தையும் சமநிலைப்படுத்துவது அரசாங்கத்தைப் பொறுத்தவரை, மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. நீண்டகால பட்ஜெட் பற்றாக்குறைகளை கையாளுவதற்கு பொறிமுறைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. அதற்கு மத்தியிலும்   இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

1,000 கோடி என்பது 2022 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அன்று கேட்ட தொகையாகும். இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் உயர்வாக இருந்த நிலையில் அதே தொகை   இரு தேசிய தேர்தல்களையும் நடத்துவதற்கு போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. பொருளாதாரம் மீட்சி பெற்றவரும் நிலையில் 2022 ஆம் ஆண்டில் 1,000 கோடி ரூபாவை தேடுவதை விடவும் இன்று 2,000 கோடி ரூபாவை தேடுவது சுலபமானதாக இருக்கவேண்டும்.

சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துதல்

தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டில் நடைபெறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நீண்டகாலமாக மக்களுக்கு நிராகரிக்கப்பட்டுவந்த பொருளாதாரப் பயன்களை வழங்குவதற்கு அரசாங்கம் முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு பல தசாப்தங்களாக இருபது இலட்சம் விவசாயக் குடும்பங்கள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவந்த நிலங்களை அவர்களுக்கு சொந்தமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

பெருந்தோட்டத் துறையில் தேயிலைத் தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் பல தசாப்தங்களாக கஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு ( இதுகாலவரையில் இவர்கள் நிலமற்றவர்களாக இருந்துவருகிறார்கள் )  வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கும் வீட்டுத் தோட்டங்களைச் செய்வதற்கும்  சொந்தமாக நிலங்கள் வழங்கப்படும்.

மக்களுக்கு சொந்தமாக நிலங்கள் வழங்கப்படுவதால் அதில் அவர்கள் முதலீடுகளைச் செய்யக்கூடியதாக இருக்கும் அல்லது பெரியளவில் விவசாயத் தொழில்துறையை முன்னெடுப்பதில் நாட்டம் கொண்டிருக்கும் பல்தேசியக் கம்பனிகளுக்கு நிலங்களை அவர்கள் விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால், தற்போதைய வறுமைக்கு மத்தியில் அந்த நிலங்களை அவர்கள் மலிவான விலைக்கு விற்றுவிடக்கூடாது. குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது நிலங்களை விற்பனை செய்வதற்கு கட்டுபாடுகளை விதிக்கவேண்டிய தேவை ஏற்படலாம்.

பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது என்று பெரும்பாக பொருளாதாரத் தரவுகள் காண்பிக்கும் நிலையில்,  வரிகளைக் குறைப்பதற்கான  சாத்தியம் குறித்தும் ஜனாதிபதி பேசிவருகிறார். சனத்தொகையில் வறிய மக்களுக்கு இந்த வரிகள் தாங்கமுடியாத சுமையாக இருக்கின்றன. மக்களின் வாழ்க்கைத்தரங்களில்  மேம்பாட்டை ஏற்படுத்துவது  தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய நிச்சயமான வழியாகும்.

கடந்த வாரம்   பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க ( வரைபடத்தின் பிரகாரம் ) V வடிவிலான பொருளாதார மீட்சி பற்றி குறிப்பிட்டார். வறுமை அதிகரிப்பு, மந்தபோசாக்கு, பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடுதல் பற்றி செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் வருகின்ற எதிர்மறையான தகவல்களை பெற இது உதவும்.

"முன்னென்றும் இல்லாத வேகத்தில் கீழ் நோக்கிச் சென்ற பொருளாதாரம் ரொக்கட் வேகத்தில் மீட்சிபெற்றுவருகிறது.V வடிவிலான இந்த மீட்சி நம்பிக்கையைத் தருகிறது" என்று ஜனாதிபதி தனது உரையில் கூறினார்.

மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருவதற்கு புறம்பாக அரசாங்கம் மாற்றுக் கருத்துக்களை குறிப்பாக எதிரணிக் கட்சிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்துவதன் அல்லது ஒடுக்குவதன் மூலமாக பொது விவாதத்தில் தனது கருத்துக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் நாட்டம் காட்டுகிறது. எதிர்க்கருத்துக்களை சட்டவிரோதமாக்குவதற்கும் குற்றமாக்குவதற்கும் புதிய சட்டங்களை அரசாங்கம்  கொண்டுவருகிறது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்  விமர்சனக் குரல்களை மௌனமாக்குவதன் மூலமாக பொது விவாதத்தை அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் மாற்றுவதற்கு அதன் உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் இணையவெளி பாதுகாப்பு சட்டம் அமைந்திருக்கிறது. இந்த சட்டம் சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இரு கொடூரமான சட்டமூலங்களையும் அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது.  பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் பிரதான ஊடகங்களை அச்சுறுத்தும் வகையிலான ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமுலமுமே அவையாகும்.நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்த அதே அரசியல் தலைவர்கள் பொதுவெளியில்  விமர்சனங்களை முன்வைப்பதும், மாற்று யோசனைகளை கூறுகின்றதுமான குரல்களை நசுக்க உறுதி பூண்டிருக்கிறார்கள்.

ஏற்றுக்கொள்ளமுடியாத  சட்டம்

1980 ஆண்டின் தன்னார்வ சமூக சேவைகள் அமைப்புக்கள் சட்டத்தை சிவில் சமூக அமைப்புக்கள் அவை  செய்கின்ற பணிகளுக்கு சட்டரீதியான அந்தஸ்தைப் பெறுவதற்கு  பயன்படுத்திவருகின்றன. அந்த சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு  அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பதிவு மற்றும் மேற்பார்வை சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது.  அதன் வரைவு இப்போது வெளிவந்து இருக்கிறது. அது சிவில் பரப்புக்கு (Civil Space ) பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்துவரும் பொதுச்சட்ட பாரம்பரியத்தின் பிரகாரம் அமைப்புக்கள் தங்களைப் பதிவுசெய்வதற்கு பலவகையான தெரிவுகள் இருந்தன. சட்ட அந்தஸ்தைப் பெறவேண்டுமானால் அமைப்புக்கள் கம்பனிச் சட்டத்தின் கீழும் தங்களைப் பதிவுசெய்துகொள்ளமுடியும் அல்லது உள்ளூர் மட்டத்தில் அரசாங்கத்தின் மாவட்ட செயலகங்களில் அல்லது பிரதேச செயலகங்களில் பதிவுசெய்து கொள்ளலாம்.

தற்போது கூட அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு வரும் நிதி மத்திய வங்கியின் உகந்த கவனிப்புடன் கூடிய வங்கிகளின் ஊடாகவே வருகிறது. வழங்குநர்களின்  கணக்காய்வுக்கும் அந்த நிதி உட்படுத்தப்படுகிறது. தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்தில் பதவுசெய்துகொள்ளாத அமைப்புக்கள் ஏனைய அரச நிறுவனங்களினால் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

உத்தேச புதிய சட்டம் வித்தியாசமானதாக இருக்கிறது. சிவில் அமைப்புக்களை (அவை பெரும்பாக நிதி அமைப்புக்களாக இருந்தாலென்ன நம்பிக்கை நிதியங்களாக இருப்பதாலென்ன அல்லது பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டவையாக இருந்தாலென்ன) ஒரே இடத்தில் பதிவுசெய்ய அது நிர்ப்பந்திக்கிறது.

புதிய சட்டத்தின் பிரகாரம் சிவில் அமைப்புக்கள் தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்தில் தங்களைப் பதிவுசெய்யவேண்டும். இந்த செயலகம் தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கிறது. பதிவு மற்றும் மேற்பார்வைச் செயன்முறை ஊடாக சிவில் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சித்து வந்திருக்கிறது.

சந்தேகத்துக்குரிய சூழ்நிலைகளில் ஆயிரக்கணக்கில் பொலிஸ் முற்றுகைகளுக்கும் கைதுகளுக்கும் வழிவகுத்திருக்கும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தற்போது தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பெரும் கவனத்துக்குள்ளாகியிருக்கும் தேசிய பாதுகாப்பு அமைச்சின் கீழேயே பொலிஸ் இருக்கிறது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகம் அமைந்திருக்கும் இடம் சிவில் அமைப்புக்களை சட்டம் ஒழுங்கு கட்டமைப்புக்குள் வைத்து அரசாங்கம் நோக்குகிறது என்ற  எதிர்மறையான செய்தியையே கொடுக்கிறது. கொடூரமான புதிய சடடம் சிவில் அமைப்புக்கள் குற்றவியல் வழக்கு தொடுப்புக்களுக்கும் தண்டனைக்கும் உள்ளாகக்கூடிய ஆபத்தைத் தோற்றுவிக்கும்." அடிப்படை கலாசார விழுமியங்களுக்கு " எதிராகச் செயற்படுவதாகக் கூறி சிவில் அமைப்புக்களை இடைநிறுத்தவும் மூடிவிடவும் முடியும்.

இந்த கட்டுபாட்டின் பிரகாரம் மதசார்பற்ற அரசுக்கு கோரிக்கை விடுவதையோ, தன்பாலினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையோ அல்லது கருக்கலைப்புக்கான உரிமைக்காக வாதிடுவதையோ அடிப்படைக் கலாசார விழுமியங்களுக்கு எதிரான செயல்கள் என கருதமுடியும். தங்களை எதிர்ப்பவர்களுக்கு அல்லது தங்களது வழிக்கு வராதவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு அரசாங்கங்கள் சட்டங்களைப் பயன்படுத்திவந்திருக்கின்ற பாணியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது உத்தேச சட்டம் மிகவும் ஆபத்தானதாகும்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்து முன்னைய அரசாங்கம் இதே போன்ற சட்டம் ஒன்றை 2018 ஆம் ஆண்டில்  கொண்டுவந்தது. அந்த நேரத்தில் தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுனங்கள் செயலகம் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் இருந்தது. அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அலட்சியம் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட சிவில் சமூகத் தலைவர்கள் குழுவொன்று அன்றைய பிரதமர் விக்கிரமசிங்கவைச் சந்தித்து தங்களது வேண்டுகோளை முன்வைத்தனர்.

சில நாட்களுக்குள்ளாகவே அந்த சட்டவரைவு வாபஸ்பெறப்பட்டது. சிவில் சமூகத்துக்கான கட்டமைப்பு ஒன்று தொடர்பில் சொந்த யோசனைகளின் அடிப்படையிலான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு தன்னைச் சந்தித்த சிவில் சமூகத் தலைவர்களிடமே விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

பரந்தளவில் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளுடன் இரு வருட கலந்தாலோசனைகளுக்கு பிறகு தன்னார்வத் துறையினருக்கான சட்டக் கட்டமைப்புை ஒன்று தொடர்பில் வழிகாட்டல்கள்  வகுக்கப்பட்டன. அவை ஒரு வருடத்துக்கு முன்னர் அரசாங்கத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டன.  ஆனால் அவற்றின் உள்ளடக்கமோ அல்லது உணர்வோ தற்போதைய சட்டவரைவில் இல்லை.

இத்தகைய சூழ்நிலையில், 2018 ஆம் ஆண்டில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது சந்தித்துப் பேசக்கூடியதாக இருந்ததைப் போன்று தற்போதும் ஜனாதிபதியாக அவரைச் சந்தித்து அதே விடயத்தை பேசுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அன்று வெளிப்படுத்திய நல்லெண்ண அணுகுமுறையையே அவர் தற்போதும் சமூகத்தினதும் நாட்டினதும் மேம்பாட்டுக்காக கடைப்பிடிக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/176379

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.