Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்

கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்
படக்குறிப்பு,

கடந்த 15 ஆண்டுகளில் கோவை - பாலக்காடு வழித்தடத்தில் 11 யானைகள் இறந்துள்ளன - வனத்துறை தரவுகள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 9 மார்ச் 2024

தமிழ்நாடு முழுவதும் யானைகள் ரயில்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகிறது. வனத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே, ரயில்களில் மோதி 36 யானைகள் மரணித்துள்ளன.

இதில், குறிப்பாக கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்களில், 2008 முதல் இதுவரையில், 11 யானைகள் மரணித்துள்ளதாக வனத்துறை கூறுகிறது.

குறிப்பாக மதுக்கரையில் கடந்த, 2021 நவம்பர் மாதம் ஒரு குட்டியானை உள்பட மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு மரணித்த சோக சம்பவமும் அரங்கேறியது. இதுபோன்று தமிழ்நாட்டில் வன எல்லையிலும், காப்புக் காட்டிற்கு உள்ளேயும் பயணிக்கும் ரயில் தண்டவாளங்களில் யானைகள் மட்டுமின்றி, இதர வனவிலங்குகள் அடிபட்டு மரணித்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து மதுக்கரை அருகேயும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி இறப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம், வனத்துறை மற்றும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்தியாவில் முதல் முறையாக, ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை கோவையில் வனத்துறை அமைத்துள்ளது. யானைகள் உயிரைக் காக்க இந்தக் கட்டுப்பாட்டு அறை எப்படிச் செயல்படுகிறது?

 

இந்தியாவின் முதல் AI கேமரா கண்காணிப்பு

கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்

தமிழகத்தைப்போன்று நாட்டில் பல மாநிலங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்க மத்திய ரயில்வே அமைச்சகம், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில், ‘கஜ்ராஜ்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தில் ரயில்வே தண்டவாளங்கள் அருகே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சென்சார்களை பொருத்தி, யானைகள் நடமாட்டம் குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், கென்யா, ஆப்ரிக்கா போன்ற நாடுகள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கேமராக்கள், சென்சார்கள் பொருத்தி, மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் யானைகளைப் பாதுகாக்கின்றனர்.

கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்
படக்குறிப்பு,

24 மணிநேரம் செயல்படும் வகையில் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது

இதே தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தற்போது, தமிழ்நாடு வனத்துறை கோவை மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு அறையை அமைத்து, ரயில் தண்டவாளத்தில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கட்டுப்பாட்டு அறை எப்படிச் செயல்படுகிறது, எப்படி யானைகள் பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிய, பிபிசி தமிழ் குழு கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்றிருந்தது.

கோவை மதுக்கரையில் ரயில் தண்டவாளம் அருகே அமைந்திருந்த கட்டுப்பாட்டு அறையை நாம் அடைந்தபோது, அங்குள்ள பணியாளர்கள் மும்முரமாக ரயில்வே மற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு, தண்டவாளம் அருகே யானைக்கூட்டம் நிற்கும் தகவலைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

12 AI கேமராக்கள் - இரண்டு வகை பார்வை

கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்
படக்குறிப்பு,

"இந்தியாவிலேயே முதல் முறையாக AI தொழில்நுட்ப உதவியுடன் யானைகள் ரயில் தண்டவாளங்களைக் கடப்பது கண்காணிக்கப்படுகிறது," என்கிறார் சுப்ரியா சாஹூ.

பிபிசி தமிழிடம் பேசிய, கட்டுப்பாட்டு அறை பணியாளர் மணிகண்டன், ‘‘யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்கள் ‘ஏ டிராக்’ மற்றும் ‘பி டிராக்’ எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தண்டவாளங்களில் மொத்தம், 12 டவர்கள் அமைத்து அதில், 12 AI கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு கேமராவில் சாதாரண வீடியோ மற்றும் வெப்ப காட்சி (Thermal View) என இரண்டு வகை வீடியோக்களை நேரலையாகப் பார்க்க முடியும்.

ரயில் தண்டவாளத்திலும், அதன் இருபக்கமும் 100 அடி வரையில் யானை வந்ததும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் யானை கண்டறியப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் அலாரம் அடித்து எச்சரிக்கை கிடைக்கும்.

யானை கண்டறிந்தவுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம், அருகிலுள்ள ரயில் நிலையம், அந்த நிலையத்தின் அதிகாரி மற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு யானை எந்த டிராக்கில் எத்தனையாவது மைல் கல் அருகே நிற்கிறது என மெசேஜ் அனுப்பப்படும்.

உடனடியாக இந்தத் தகவல் லோகோ பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு ஹாரன் அடித்துக்கொண்டே மிக மெதுவாக ரயில் இயக்கப்படும். யானை மட்டுமின்றி காட்டு மாடு, மான் கூட்டம், சிறுத்தை என எந்த விலங்கு வந்தாலும் எச்சரிக்கை அனுப்பப்படும்,’’ என்கிறார்.

 

24 மணிநேர கண்காணிப்பு

கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்

மணிகண்டன் நம்மிடம் விவரித்துக் கொண்டிருந்தபோதே ‘பி டிராக்’ பகுதியில் ஒரு குட்டியுடன் ஒரு பெண் யானை தண்டவாளத்தைக் கடந்தது. அதைப் பற்றி ரயில்வே துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து, யானை பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்த பிறகு பேச்சைத் தொடர்ந்தனர்.

மேலும் தொடர்ந்த மணிகண்டன், ‘‘இரு துறைகளுக்கும் மெசேஜ் சென்றாலும், கூடுதலாக நாங்கள் யானையின் நகர்வைப் பொறுத்து கேமராக்களை நகர்த்தி யானையின் நடமாட்டத்தை முழுமையாகக் கண்காணிப்போம்.

இந்தத் தகவல்களை தண்டவாளம் அருகே 24 மணிநேரமும் பணியில் இருக்கும் வனத்துறை பணியாளர்களுக்கு, வாக்கி டாக்கி அல்லது மொபைல் மூலமாக நேரடியாகத் தெரிவிப்போம். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று யானைகளைப் பாதுகாப்பாக தண்டவாளத்தில் இருந்து காட்டிற்குள் விரட்டிவிடுவார்கள்.

ரயில் வேகத்தைக் குறைப்பது, யானைகளைப் பாதுகாப்பாக வனத்தினுள் விரட்டி அவற்றை ரயில் விபத்தில் இருந்து பாதுகாப்பது ஆகியவைதான் கட்டுப்பாட்டு அறையின் முதன்மைப் பணி. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் நாங்கள், 4 பேர் 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,’’ என்றார்.

யானைகள் குறித்து 388 முறை எச்சரிக்கை

கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்
படக்குறிப்பு,

தெர்மல் கேமரா உதவியுடன் இரவிலும் யானையின் நடமாட்டம் கவனிக்கப்படுகிறது.

யானைகள் கண்காணிப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, தமிழ்நாடு வனத்துறை செயலாளரும் அரசின் முதன்மைச் செயலாளருமான சுப்ரியா சாஹூ, ‘‘கோவை மதுக்கரையில் ‘ஏ டிராக்’ தண்டவாளத்தில் 1.78 கிலோமீட்டர், ‘பி டிராக்’ தண்டவாளத்தில் 2.8 கிலோமீட்டர் தொலைவு, என இரண்டும் 12 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 7.24 கோடியில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற திட்டம் இதுவரை இல்லை, இது நாட்டின் முதல் முயற்சி," என்றார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென யோசித்து, தாங்களாகவே இத்திட்டத்தை உருவாக்கி, ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வைத்து திட்டத்தைச் செயல்படுத்தியதாகவும் சுப்ரியா சாஹூ கூறினார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் யானைகள் கண்காணிப்பு திட்டத்தின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டு இதுவரை மட்டுமே, 388க்கும் மேற்பட்ட எச்சரிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் அவர்.

அதோடு, ‘‘யானை தண்டவாளத்திலோ, அதற்கு அருகில் வன எல்லையிலோ நின்றால், செயற்கை நுண்ணறிவு தாமாக யானைகளைக் கண்டறிந்து நமக்குத் தகவல் தருகிறது. பணியாளர்கள் மூலம் யானைகள் வனத்தினுள் விரட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு அருகே, யானைகள் வனத்தினுள் கடந்து செல்ல இரண்டு இடங்களில் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களால் யானைகள் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து செல்வதுடன், யானை – ரயில் மோதல் விபத்து சம்பவங்கள் தவிர்க்கப்படுகின்றன.

அதிக ரயில் விபத்துகள் ஏற்படும் கோவை, தருமபுரி, ஓசூர் மற்றும் மனித – யானை மோதல் அதிகளவில் நிகழும் கூடலூர் என, ஐந்து இடங்களில் இத்திட்டத்தை விரைவில் வனத்துறை செயல்படுத்த உள்ளது,’’ என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் சந்தோஷ், ‘‘தண்டவாளத்தில் நின்ற யானை, தண்டவாளத்தின் இருபுறமும் 100 அடிக்குள் நின்ற யானைகள், வனத்தினுள் இருந்து தண்டவாளத்தை நோக்கி நகரும் யானைகள் என அனைத்தையும் பற்றி எச்சரிக்கைகளை வழங்கியுள்ளோம். அந்த வகையில்தான் 6 மாதத்தில் 388 எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், யானைகள் தண்டவாளத்தில் நின்ற சம்பவம் என்றால் அதிகபட்சமாக, 60 சம்பவங்கள்தான் இருக்கும்,’’ என விளக்கியுள்ளார்.

ரயிலில் அடிபடும் யானைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘பயணம் மிக எளிதாகிறது – விபத்து தவிர்க்கப்படுகிறது’

இந்த வழித்தடத்திலுள்ள எட்டிமடை ரயில்வே நிலைய அலுவலர் செளவுரவ் குமார், ‘‘இந்த கேமரா திட்டம் வருவதற்கு முன்பு யானைகள் எங்கு நிற்கிறது, எத்தனை யானைகள் நிற்கின்றன என எந்தத் தகவலும் தெரியாது.

பகலிலாவது லோகோ பைலட்கள் மெதுவாக வருவார்கள், கண்களால் வனத்தைப் பார்க்க முடியும். ஆனால் இரவு நேரங்களில் எதுவுமே தெரியாது. இந்தத் திட்டம் துவங்கப்பட்டபின், இரவு நேரங்களிலும் யானைகள் குறித்த தகவலை வனத்துறை வழங்குகின்றனர்," என்றார்.

"யானை எந்த மைல் (கி.மீட்டர் தொலைவில்) கல் அருகே நிற்கிறது, எத்தனை யானைகள் நிற்கின்றன, தண்டவாளத்தில் நிற்கிறதா இல்லை அருகிலா என அனைத்து தகவல்களையும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

யானை நிற்பதாக தகவல் வந்ததும் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிப்போம், லோகோ பைலடுக்கு கட்டுப்பாட்டு அறை தகவல் உடனடியாகத் தெரிவித்ததும், சாதாரணமாக 70 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் ரயிலின் வேகத்தை 20 – 30 கி.மீ வேகமாகக் குறைப்பார்கள்.

மேலும், 2 கி.மீ தொலைவுக்கு முன்பிருந்தே ஹாரன் அடித்துக்கொண்டு பாதுகாப்பாக வருவார்கள். இந்தத் திட்டம் யானைகள் விபத்தில் சிக்குவதைத் தவிர்க்கிறது,’’ என்றார்.

https://www.bbc.com/tamil/articles/crg9n4vv12zo

  • கருத்துக்கள உறவுகள்

இத் திட்டத்தால் தற்கொலை செய்ய தண்டவாளத்துக்கு வரும் காதலர்களும் காப்பாற்றப் படுவார்களா ......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இத் திட்டத்தால் தற்கொலை செய்ய தண்டவாளத்துக்கு வரும் காதலர்களும் காப்பாற்றப் படுவார்களா ......!  😁

கமராவில் அம்பிட்டால் காப்பாற்றுவினம் தானே அண்ணை?!

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரயிலில் யானைகள் அடிபடாமல் டிரோன், ஏஐ தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு தடுக்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு

கோவை, யானைகள், வனத்துறை

கட்டுரை தகவல்

கோவை வனக்கோட்டத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆளில்லா டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு டிரோன்களின் உதவியுடன், ரயில் வரும் போது யானைகள் ரயில் பாதை அருகிலேயே வராமல் துரத்தும் புதிய திட்டம் தற்போது துவக்கப்பட்டுள்ளது.

இந்த டிரோன்கள் 24 மணி நேரமும் 2 ரயில் பாதைகளை டிரோன் மூலமாகக் கண்காணித்து, ரயில் பாதைக்கு அருகில் வரும் யானைகளை சைரன் சத்தம் எழுப்பி துரத்துவதை பிபிசி தமிழ் மேற்கொண்ட களஆய்வில் அறிய முடிந்தது.

இந்தியாவில் 14 ஆண்டுகளில் ரயில் மோதி 186 யானைகள் பலி

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2010-2024 காலகட்டத்தில் 186 யானைகள் ரயில்கள் மோதி உயிரிழந்துள்ளன.

ரயில்வே அமைச்சகம் மற்றும் மாநில வனத்துறைகள் உடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வில், 77 ரயில் பாதைகளில் அதிகமான காட்டுயிர் உயிரிழப்புகள் நடப்பதை அறிந்து பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டதாகக் கூறுகிறது அந்த அறிக்கை.

அதன்படி, தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதிகளில் காட்டுப்பகுதி மற்றும் பட்டா நிலங்களில் அமைந்துள்ள 2 ரயில் வழித்தடங்களில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பது அதிகமாக நடந்துள்ளது.

தமிழக எல்லையிலுள்ள எட்டிமடை ரயில் நிலையம், கேரளா எல்லையிலுள்ள வாளையார் ரயில் நிலையம் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏ மற்றும் பி என 2 வழித்தடங்கள் 7 கி.மீ. தூரத்துக்கு அமைந்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர், இவ்விரு ரயில் வழித்தடங்களும் மதுக்கரை வனச்சரகம் சோளக்கரை காப்புக்காட்டுப் பகுதியை மூன்று துண்டுகளாக பிரிக்கின்றன.

கோவை, யானைகள், வனத்துறை

இவற்றில் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்கு தண்டவாளத்தை கடக்கும்போதுதான் ரயில்கள் மோதி காட்டு யானைகள் இறந்துள்ளன. கடந்த 2008 லிருந்து 2021 வரையிலும் 6 ரயில் மோதல் நிகழ்வுகளில் 11 யானைகள் உயிரிழந்துள்ளதாக பிபிசியிடம் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பின் நீதிமன்ற உத்தரவு காரணமாக, வனத்துறை மற்றும் ரயில்வே துறை இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

தமிழக வனப்பகுதியில் ரயில் பாதைகள் அமைந்துள்ள இடங்களில், கனமான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டன. யானைகள் ஒரு புறமிருந்து மறுபுறமுள்ள காட்டுப்பகுதிக்கு பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில், ரயில்வே இருப்புப்பாதைக்கு கீழே 2 சுரங்கப்பாதைகள் ரயில்வே துறையால் கட்டப்பட்டுள்ளன.

ரயில் பாதைகளை ஒட்டி யானைகள் வரும்போது, அவற்றை சியர்ச் லைட் மற்றும் பட்டாசுகள் வெடித்து துரத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வழித்தடக் காவலர்கள் (Track Watchers) நியமிக்கப்பட்டனர்.

இதற்கு ஓரளவுக்குப் பலன் கிடைத்தது. இருப்பினும் 7 கி.மீ. தூரமுள்ள 2 ரயில் வழித்தடங்களிலும் ரயில்கள் வரும்போதெல்லாம் ஆட்களை வைத்து, யானைகளைக் கண்காணித்து துரத்துவதில் பல நடைமுறைச் சிரமங்கள் இருந்தன.

ஏஐ கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது?

கோவை, யானைகள், வனத்துறை

படக்குறிப்பு,ஏஐ கட்டுப்பாட்டு மையம்

2023-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை வைத்து, யானைகளைக் கண்காணிக்க தமிழக வனத்துறை திட்டமிட்டது. அதற்காக வாளையார் அருகேயுள்ள நவக்கரை வனப்பகுதியில் ஏஐ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது.

ஏ மற்றும் பி வழித்தடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் இரவு நேரங்களிலும், யானையின் உடல் வெப்பத்தை வைத்து, அவற்றைக் கண்டறியும் திறனுள்ளவை. இந்த கேமராக்கள் ஏஐ கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தலா 2 பேர் வீதமாக 24 மணி நேரமும் இவற்றைக் கண்காணித்து வருகின்றனர்.

"யானைகள் ரயில் தடத்துக்கு அருகில் செல்லும்பட்சத்தில் மையத்திலுள்ள அலாரம் அலறுகிறது. உடனடியாக எந்த வழித்தடத்தில் எந்த இடத்தில் எவ்வளவு தூரத்தில் யானை இருக்கிறது என்பது ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்டு, தானியங்கி முறையில் (Automatic Messages) ரயில்வே துறையினருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது."

"உடனடியாக லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநருக்கு, ரயில் நிலைய மேலாளரிடமிருந்து தகவல் தரப்பட்டு, குறிப்பிட்ட பகுதியில் ரயிலை நிறுத்தவோ அல்லது மிகவும் மெதுவாக இயக்கவோ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த தகவல் தமிழக வனத்துறையின் வனவருக்கும் செல்கிறது. இவ்விரு வழித்தடங்களிலும் 25 டிராக் வாச்சர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் அப்பகுதியில் பணியில் இருப்பவர்களுக்கு வாக்கி டாக்கி அல்லது அலைபேசியில் தகவல் தரப்பட்டு, ரயில் தடத்திற்கு அருகிலுள்ள யானைகளைத் துரத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கோவை, யானைகள், வனத்துறை

படக்குறிப்பு,ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர் சந்தோஷ்

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர் சந்தோஷ், ''2024 பிப்ரவரியிலிருந்து இந்த மையம் செயல்படுகிறது. தமிழக வனத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து எடுத்துள்ள இந்த கூட்டு முயற்சியால் அப்போதிலிருந்து இப்போது வரையிலும் 8750 முறை, யானைகள் இவ்விரு ரயில் பாதைகளைக் கடந்தும் ரயில் மோதி காட்டுயானை இறக்கும் நிகழ்வு நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.'' என்றார்.

கட்டுப்பாட்டு மையத்தின் பராமரிப்பு மேலாளரும், வனத்துறை தொழில்நுட்ப உதவியாளருமான நித்தியானந்தம், ''இதில் ரயில்வே துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ஆம் ஆண்டில் ஒரே நாளில் ரயில் மோதி 3 யானைகள் இறப்பதற்கு முன்பு வரையிலும், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இப்பகுதியில் 100–120 கி.மீ. வேகத்திலும், சரக்கு ரயில்கள் 60–70 கி.மீ. வேகத்திலும் சென்று கொண்டிருந்தன. அதன்பின்பு இந்த வேகத்தை முறையே 40–45 கி.மீ. மற்றும் 25–30 கி.மீ. வேகமாகக் குறைத்துவிட்டனர்.'' என்றார்.

இவ்வாறு வேகத்தைக் குறைத்ததன் காரணமாகவே, ஏஐ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தகவல் சென்றதும், யானைகள் மீது ரயில் மோதாத வகையில் நிறுத்தவோ அல்லது மெதுவாகக் கடந்து செல்லவோ வழிவகை செய்ய முடிவதாக ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த மையம் செயல்படத் துவங்கியதிலிருந்து இப்போது வரை ரயில் மோதி காட்டுயானை இறந்ததாக ஒரு நிகழ்வும் பதிவாகவில்லை என்று தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவும் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் விரிவான தகவல்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

தேனீக்கள் ரீங்கார ஒலியால் யானைகளை துரத்தும் டிரோன்கள்

கோவை, யானைகள், வனத்துறை

படக்குறிப்பு,தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்தின் டிரோன் பொறியாளர் பாலமுருகன்

இந்நிலையில், ரயில் பாதைக்கு அருகிலேயே யானைகள் வராத வகையில் தடுத்து துரத்துவதற்கு, அதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதியதொரு திட்டத்தை தமிழக வனத்துறை செயல்படுத்தியுள்ளது.

தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்துடன் (TNUAVTC-Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation) தமிழக வனத்துறை இணைந்து ரூ.8.3 கோடி மதிப்பில் இத்திட்டத்தைத் துவக்கியுள்ளது.

இதற்காக தனியார் நிறுவன உதவியுடன் இத்திட்டத்துக்காக 3 வயர் இணைப்புள்ள (Tethered Drone) டிரோன்களையும், 3 கண்காணிப்பு டிரோன்களையும் (Surveillance Drone) ஆளில்லா வானூர்தி கழகம் உருவாக்கியுள்ளது.

ஏற்கெனவே நவக்கரையில் செயல்பட்டு வரும் ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கு அருகிலேயே இதற்காக கட்டுப்பாட்டு அறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இரு ரயில் வழித்தடங்களையும் கண்காணிக்க அவற்றை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

இந்த 3 இடங்களிலிருந்தும் கேபிள் உதவியுடன் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட 3 டிரோன்கள் 24 X 7 மணி நேரமும் 100–150 மீட்டர் வரை உயரத்தில் ஒரே இடத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. மின்தடை ஏற்பட்டால் தொடர்ந்து இயங்க 6 மணி நேரம் இயங்கும் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்படும் அந்த டிரோன்களில் உள்ள கேமராக்களில் 2 தண்டவாளங்களை ஒட்டியுள்ள பகுதிகளும், அதையொட்டிய காட்டுப்பகுதிகளும் அதனுடன் இணைக்கப்பட்ட லேப் டாப்பில் தெரிகின்றன. இந்த லேப் டாப்கள், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. தெர்மல் முறையில் இரவிலும் உருவங்கள் துல்லியமாகத் தெரியும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் கேமராக்கள் செயல்படுகின்றன.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்தின் டிரோன் பொறியாளர் பாலமுருகன், ''இந்த வகை வயர் இணைப்புள்ள டிரோனில் (Tethered Drone) உள்ள மோட்டார் எல்லாமே DC மின்சாரத்தில் இயங்குவதால் சூடாகாது. இதில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் புவியமைப்பு சார்ந்த அனைத்து தகவல்களையும் துல்லியமாகத் தரும். தூரல் மழையிலும் இந்த டிரோன் இயங்கும். மிகக்கனமான காற்று மற்றும் மழையில் மட்டுமே இது இயங்காது.'' என்றார்.

''இதிலுள்ள ஜூம் கேமரா 180 டிகிரியில் கண்காணிக்கும். வீடியோ கண்ட்ரோல் யூனிட்டில் பதிவாகும் காட்சிகள், லேப்டாப் மூலமாக கட்டுப்பாட்டு அறைக்கு வரும். அதனால் அனைத்து டிரோன்களின் தகவல்களும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகிக் கொண்டே இருக்கும். இந்த டிரோன் பரவலாக 2.5 கி.மீ. துாரமுள்ள ரயில் பாதையை ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கும் திறனுடையது. ரயில் பாதை மட்டுமின்றி, மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் யானைகள் செல்வதையும் இதன் மூலமாகக் கண்காணித்து, அவற்றைத் துரத்த முடியும்.'' என்றார் பாலமுருகன்.

கோவை, யானைகள், வனத்துறை

படக்குறிப்பு,டிரோன் பைலட் ஷெர்பின்

ரயில் தடத்திற்கு இரு புறமும் 100 மீட்டர் வரையுள்ள தூரத்தை சிவப்புப் பகுதி (Red Zone) என்றும், 200–300 மீட்டர் வரையுள்ள பகுதிகளை ஆரஞ்சு பகுதி (Orange Zone) என்றும் பிரித்துள்ளனர். மதுக்கரை வனச்சரகத்தில் சோளக்கரை காப்புக்காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கோபுரங்களிலும் (Watch Tower) இடங்களிலும் தலா 2 பேர் வீதமாக, 3 ஷிப்ட்களில் மொத்தம் 18 பேர் 24 மணி நேரமும் இந்த டிரோன்களை இயக்கி வருகின்றனர். வயர் டிரோன்கள் தவிர்த்து, பேட்டரியில் இயங்கும் டிரோன்களாலும் கண்காணிக்கின்றனர்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய டிரோன் பைலட் ஷெர்பின், ''ஏற்கெனவே ரயில் வழித்தடங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள ஏஐ கேமராக்கள், யானைகள் மிக அருகில் வரும்போதுதான் அவற்றைக் கண்டறிந்து, ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தரும். ஆனால் இந்த கேபிள் இணைப்பு டிரோன்களால் 24 X 7 நேரமும் ரயில் பாதையைக் கண்காணிக்கும் போது 200 மீட்டர் தூரத்தில் யானை வரும்போதே கண்டறிந்து, அதை டிரோன் கட்டுப்பாட்டு அறைக்கும், ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கும் தகவல் தருகிறோம்.'' என்றார்.

"யானை இருப்பது தெரிந்துவிட்டால் ஏஐ தொழில்நுட்பத்தை அதில் பயன்படுத்தும்போது, ரயில் தடத்திலிருந்து எந்த திசையில் எவ்வளவு தூரத்தில் யானை இருக்கிறது என்பதைக் காண்பிக்கும். உடனடியாக நாங்கள் கண்காணிப்பு டிரோனை வைத்து, அந்த யானைக்கு மேலாகக் கொண்டு சென்று, சைரன் அல்லது தேனீக்கள் ரீங்காரமிடும் சத்தத்தை ஒலிக்க விட்டு, யானையை காட்டுக்குள் துரத்திவிடுவோம்.'' என்றார் ஷெர்பின்.

கோவை, யானைகள், வனத்துறை

படக்குறிப்பு,யானைகள் செல்வதற்கான சுரங்கப் பாதை

2024-ஆம் ஆண்டிலிருந்து ஏஐ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, ரயில்வே மற்றும் தமிழக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், டிராக் வாச்சர்களால் யானைகளை துரத்தும் பணி நடந்துவந்தது. அதில் பல சிரமங்கள், ஆபத்துகள் இருந்ததை டிராக் வாச்சர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய டிராக் வாச்சர் மாதேஷ், ''ரயில்களில் யானைகள் அடிபடாமலிருக்க, இந்த 2 தண்டவாளங்களையும் 25 டிராக் வாச்சர்கள் கண்காணித்து வருகிறோம். ஏஐ தொழில்நுட்பம் வந்தபின்பு, எங்களுடைய பணிக்கு பெரிதும் உதவியாகவுள்ளது. இப்போது டிரோன்களை வைத்தே யானைகளைத் துரத்த முடியும் என்பது இந்த பணியை மேலும் எளிதாக்கியுள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள கேரள வனப்பகுதியில் சமீபத்தில் ஒரு யானை ரயில் மோதி இறந்தது.'' என்றார்.

கோவை, யானைகள், வனத்துறை

தமிழகத்தில் யானை–மனித மோதல் அதிகமாக நடக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் மற்றும் கோவையின் வேறு சில பகுதிகளிலும் இரவு, பகலாக யானைகளைக் கண்காணித்து, அவற்றைத் துரத்துவதற்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு இந்த ஏஐ தொழில்நுட்பத்தையும், டிரோன்களையும் இணைத்து ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்கிறார் கோவை மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் பிரபு.

பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய டிஎஃப்ஓ வெங்கடேஷ் பிரபு, ''கூடலூரில் இந்த ஏஐ தொழில்நுட்பம், யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, யானைகளையும், யானைகளிடமிருந்து மக்களையும் காப்பதற்கு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ரயில்களில் அடிபடாமல் யானைகளைக் காப்பதற்கு இதே தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கிறது.'' என்றார்.

''இரவு நேரங்களில்தான் யானைகள் ரயிலில் அடிபடும் நிகழ்வுகள் அதிகமாக நடந்துள்ளன. இந்த ஏஐ தொழில் நுட்பத்தில் தெர்மல் முறையில் இரவிலும் யானைகள் நடமாட்டம் தெரிவதால், யானைகளை டிராக் வாச்சர்கள் மூலமாக ரயில்வே கீழ்பாலங்கள் வழியாக எளிதாகத் துரத்த முடிகிறது. இப்போது டிரோன்களை வைத்தே சத்தம் எழுப்பி யானைகளைத் துரத்த முடியும் என்பதால் எங்களது பணி இன்னும் முழுமையடைந்துள்ளது,'' என்றார் டிஎஃப்ஓ வெங்கடேஷ் பிரபு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz6e7qg078wo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.