Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
மேய்ப்பன்
----------------
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று நாங்கள் ஊரில் சொல்வதுண்டு. ஒருவர் உருப்படி இல்லாமல் இருக்கின்றார் அல்லது உருப்படவே மாட்டார் என்று தெரிந்தால், அவரின் வீட்டில் குறைந்தது ஒரு ஆமையாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாமாக்கும்.
  
ஒரு தடவை இங்கு ஒரு அயலவரின் வளர்ப்பு ஆமை காணாமல் போய்விட்டது. நேரடியாக என் வீட்டுக் கதவைத் தட்டினார். 'என்னுடைய ஆமை வீட்டை விட்டு ஓடிவிட்டது, உங்கள் வீட்டிற்கு அது வந்ததா?' என்று கேட்டார். அவரின் கேள்வி விளங்க எனக்கு சில விநாடிகள் எடுத்தது. அவரின் ஆமை இரவோடிரவாகவே ஓடியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். ஒரு ஆமை ஒரு இரவில் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நான் கணக்குப் போடத் தொடங்கினேன். ஆனால் அயலவரோ ஆமை என் வளவிற்குள்ளேயே இருக்கின்றது என்பது போல வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.
 
பலத்த தேடுதலின் பின் ஆமை என் வளவிற்குள் இல்லை என்று முடிவாகியது.
 
நிலையான ஒரு புள்ளியிலிருந்து ஒரு குறித்த மாறாத தூரத்தில் இயங்கும் ஒரு புள்ளியின் ஒழுக்கு வட்டம் என்று மனம் சொல்லிக் கொண்டேயிருக்க, கதவு மீண்டும் தட்டப்பட்டது. இன்னொரு அயலவர் கையில் ஒரு பெரிய ஆமையுடன் வாசலில் நின்றார். 'உங்களின் ஆமை என் வீட்டுக்கு வந்துவிட்டது' என்று ஆமையை என்னிடம் நீட்டினார்.
 
ஆமைக்கும், எனக்கும் எக்கச்சக்கமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் எல்லோரும் நினைக்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். ஆமை இறைச்சி கூட இதுவரை சாப்பிட்டதும் இல்லை.  
 
அப்பொழுது தான் நான் அந்த ஆமையை முதன்முதலாகப் பார்த்தது. பெரிய ஓட்டு ஆமை. அவர் நீட்டவும், ஆமையும் ஓட்டுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டியது. 'அடடே, உங்களின் ஆமைக்கு உங்களைத் தெரிகின்றதே' என்று அவர் ஆச்சரியம் காட்டிச் சிரித்தார்.
 
இருவருமாக ஆமையை உரியவரிடம் கொடுத்தோம். ஆமையை ஓடவிட்டவர் எனக்கு நன்றி சொன்னார், புதிதாக ஆமை புகுந்த வீட்டுக்காரர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். ஒரு நேரும், ஒரு மறையும் சேர்ந்து ஒன்றுமில்லை என்றாகியது.
 
ஆமை மறந்து, காலம் முயல் போன்று ஓட, இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக, ஏலியன்ஸ் இங்கு வந்திறங்கினால் என்ன சொல்லித் தப்பலாம் என்று வாசலில் நின்று பகலிலேயே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 
 
ஏலியன்ஸ் ஏன் அமெரிக்காவில் மட்டும் வந்து இறங்குகின்றார்கள் என்று தெரியவில்லை. 
 
இதுவரை இங்கு வாழ்ந்த மொத்த காலங்களிலும் சில டோஸ் ஃபைஸர் கோவிட் மருந்து மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்ட ஒரே ஒரு பொருளும், நிகழ்வும். ஏலியன்ஸ் அரிசி, பருப்பு, காசு, வீடு இப்படியானவற்றை இலவசமாக வழங்கும் ஒரு நாட்டில் இறங்கினால், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏதாவது தேறும். அமெரிக்காவில் எதுவும் தேறாது.
 
கழுத்து வலித்து, ஏலியன்ஸை விட்டு பார்வையை கீழே இறக்கினால், அதே ஆமை வீதியைக் கடந்து என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது.  அந்த வீட்டுக்காரர் பாவம், இரவில் தான் ஆமை ஓடுகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். இது 24 மணிகளும் ஓடுகின்ற அதே பழைய ஆமை. இந்தப் பரம்பரை இப்படித்தான் முயலை வென்றது.
 
ஆமையை அங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாலு அடிகள் பாய்ந்து நான் போக, ஆமையும் நானும் நடுரோட்டில் சந்தித்தோம். ஆமை அங்கேயே நடுரோட்டில் படுத்துவிட்டது. இந்தப் பக்கம் என்னுடைய வீடு, அந்தப் பக்கம் ஆமை வாழும் வீடு, நடுரோட்டில் ஆமையும் நானும், அப்பப்ப கார்கள் வந்து போகும் தெரு அது. ஊரில் வாத்து மேய்ப்பது என்பார்கள், சவூதியில் போய் ஒட்டகம் மேய்ப்பது என்பார்கள், அமெரிக்கா போய் ஆமை மேய்க்க வேண்டும் என்று எவரும் சொல்லவேயில்லை.
  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ரசோதரன் said:
கழுத்து வலித்து, ஏலியன்ஸை விட்டு பார்வையை கீழே இறக்கினால், அதே ஆமை வீதியைக் கடந்து என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது.  அந்த வீட்டுக்காரர் பாவம், இரவில் தான் ஆமை ஓடுகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். இது 24 மணிகளும் ஓடுகின்ற அதே பழைய ஆமை. இந்தப் பரம்பரை இப்படித்தான் முயலை வென்றது.

அந்த முயலா(ஆ)மை கதை இங்க என்னமா பொருந்திப் போகுது!

  • Haha 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.