Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யு ரியூப்பர்களின் காலத்தில் தேசமாகச் சிந்திப்பது! நிலாந்தன்.

adminMarch 17, 2024
 

பார்க்க ஆசையா இருக்கு எண்டாலும் மனதில ஒரு கவலை  இருக்கு

spacer.png

கடத்த ஒன்பதாந் திகதி வெடுக்குநாறி மலையில் சிவ பூசைக்குள் போலீஸ் புகுந்தது. எட்டுப் பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சிறை வைக்கப்பட்ட அடுத்த நாள், 10ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்ற வெளியில் விமானப்படைக் கண்காட்சியின் கடைசி நாளன்று, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே திரண்டார்கள்.

அங்கு திரண்ட சனத்தொகை சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வில் திரண்ட தொகைக்குக் கிட்ட வரும் என்று கூறப்பட்டாலும், அது ஒரு மிகை மதிப்பீடு என்று கருதப்படுகின்றது. எனினும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் என்பது மட்டும் உண்மை.

தமது மரபுரிமைச் சொத்து ஒன்று ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், தமது வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்துவதற்காகவும் வெடுக்குநாறி மலையில் போராடிக் கொண்டிருக்கும் அதே மக்கள் மத்தியில் இருந்துதான் முற்ற வெளிக்கும் ஆட்கள் போனார்கள். இந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வது?

வெடுக்கு நாறி மலைக் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர், முற்றவெளிக்குப் போன மக்களைக் கடுமையாக விமர்சித்தார். 15 ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை மறந்து முற்றவெளிக்குப் போன மக்கள் மீது அவருக்குக் கோபம். அந்தக் கோபம் நியாயமானது. ஆனால் அதைவிட ஆழமான, நியாயமான ஒரு கேள்வி உண்டு. அது என்னவெனில், தமது சொந்த அரசியலின் மீதும் நேரடியான மற்றும் மறைமுக ஒடுக்குமுறைகளின் மீதும் தமிழ் மக்களின் உணர் திறனை விழிப்பை அதிகப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் எந்தக் கட்சியிடம் உண்டு?

ஒரு மக்கள் கூட்டத்தின் பொதுப் புத்தி அப்படித்தான் இருக்கும். அது வாழ்க்கையைக் கொண்டாடக் கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் தேடிப் போகும். மக்களுக்கு பொழுது போக வேண்டும். அதுதான் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பண்ணை வெளிக்கு வருகிறார்கள். யாழ்ப்பாணத்தின் ஏனைய உல்லாசத் தலங்களுக்குப் போகின்றார்கள். வசதி குறைந்தவர்கள் பண்ணைக்கும் ஏனைய சிறு பூங்காக்களுக்கும் போகின்றார்கள். வசதி கூடியவர்கள் யாழ்ப்பாணத்தின் நட்சத்திர அந்தஸ்துடைய விருந்தினர் விடுதிகளுக்கு போகின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்பு வரும்பொழுது தங்கள் சொந்தக்காரர்களின் வீடுகளில் தங்குவதுண்டு. இப்பொழுது கணிசமானவர்கள் விருந்தினர் விடுதிகளில் தங்குகிறார்கள். அதற்காக லட்சக்கணக்கில் செலவழிக்கின்றார்கள்.

அதாவது சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் இருப்பவர்கள் தங்கள் தங்கள் நிதித் தகமைக்கு ஏற்ப வாழ்க்கையைக் கொண்டாட விரும்புகிறார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையைக் கொண்டாட விரும்பும் அநேகருக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் ஒரு முன்னுதாரணம். மூன்றாவது புலப்பெயர்ச்சி அலைக்கு அது பிரதான காரணம்.

இப்படியாக வாழ்க்கையைக் கொண்டாட ஆசைப்படும் ஒரு மக்கள் கூட்டத்தை அவர்களுடைய சொந்த அரசியலின் மீது உணர்திறண் மிக்கவர்களாக மாற்றுவது எப்படி? அதை யார் செய்வது?

விமானப்படைக் கண்காட்சிக்கு வந்த ஒரு நோர்வேத் தமிழர் கூறுகிறார் “பார்க்க ஆசையா இருக்கு, எண்டாலும் ஒரு கவலை இருக்கு மனதில ” என்று. ஆசையாக இருக்கிறது என்பது வாழ்க்கையை கொண்டாட ஆசையாக இருக்கிறது என்று பொருள். கவலை இருக்கிறது என்பது இறந்த காலத்தில் தமிழர்கள் பட்ட துயரங்களை நினைக்கும் போது ஏற்படுவது.

ஆனால் அது இறந்த காலமல்ல, நிகழ்காலமுந்தான். அதனால்தான் வெடுக்கு நாறி மலையில் போராட வேண்டியிருக்கிறது; மயிலத்தமடுவில், மாதனையில் போராட வேண்டியிருக்கிறது; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. போர் ஒரு விளைவு மட்டுமே, மூல காரணம் அல்ல. ஒடுக்கு முறைதான் மூல காரணம். அது இப்பொழுதும் உண்டு.

எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் முற்றவெளிக்குப் போயிருக்கிறார்கள். அங்கே படையினர் பரசூட்டில் இறங்குவதைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். உலங்கு வானூர்தியில் ஏறுவதற்காக முண்டியடிக்கிறார்கள். அதைப் பெரும்பாலான யு ரியூப்பர்கள் கவர்ச்சியாக விற்கிறார்கள்.


இது யுடியூப்பர்கள் காலம். வாசிப்பதற்கான பொறுமை குறைந்து வருகின்றது. கேட்பதற்கான தாகம் அதிகரித்து வரும் ஒர் ஊடகச் சூழல். யுடியூப்பர்கள் எத்தனை பேர் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்? தான் பரப்புவது வதந்தியா செய்தியா என்று எத்தனை யுடியூப்பர்களுக்குத் தெரியும்? எத்தனை யுடியூப்பர்கள் தமிழுக்கு வெளியே போய் வாசிக்கின்றார்கள்? எத்தனை யுடியூப்பர்கள் தாங்கள் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்கள்? இதை இன்னும் கூர்மையாகக் கேட்டால் ஒரு யுடியூப்பருக்கு என்ன தகைமை இருக்க வேண்டும்? ஒரு நல்ல கமராவும் வேகமான இன்டர்நெற்றும் இருந்தால் மட்டும் போதுமா? தாங்கள் கூறும் விடயத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு எத்தனை யுடியூப்பர்களுக்கு உண்டு?

கடந்த சுதந்திர தினத்தன்று, ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவருடைய வருகைக்கு எதிராக கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பழைய பூங்கா வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்த வீதியின் குறுக்கே போலீஸ் ஒரு பேருந்தை நிறுத்தி வைத்திருந்தது. அவ்வாறு பழைய பூங்கா வீதி முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதை எதிர்த்து அந்த வீதி வழியாக காரில் வந்த ஒருவர் போலீசாரோடு முரண்படுகிறார். அது தொடர்பாக ஒரு யுடியூப்பர் செய்தி வெளியிடுகையில் “காரில் வந்த இந்தியர், பார்த்து மிரண்ட இலங்கை போலீஸ்” என்று தலைபிடுகிறார். அக்காணொளி ஆறு லட்சத்து எட்டாயிரம் பேர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொலிசாரைக் கேள்வி கேட்கும் நபர் ஒர் இந்தியர் அல்ல. சுயாதீன திருச்சபை ஒன்றின் பாஸ்டர். அவருடைய காரின் “டாஷ் போர்ட்” பகுதியில் இந்திய தேசியக்கொடி காணப்படுகின்றது. அதை வைத்து அவர் ஒரு இந்தியர் என்று யுரியூப்பர் கூறுகிறார். ஆயின்,ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் அந்தப் பொய் சென்று சேர்ந்திருக்கின்றதா?

இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்ட பொழுது ஓர் இந்திய யுடியூபர் கூறினார், வெள்ளைக்காரர்கள் வாங்கி வைத்திருக்கும் பாணை உள்ளூர் மக்கள் பறித்துக் கொண்டு ஓடுவதாக. அது ஒரு பொய்.


பெரும்பாலான யுரியூப்பர்கள் தமது காணொளிகளைப் பார்பவர்களின் தொகையை எப்படி கூட்டுவது என்று தான் சிந்திக்கிறார்கள். பார்ப்பவர்களின் தொகை கூடக்கூட வருமானம் பெருகும். எனவே பெரும்பாலானவர்கள் உழைப்பை எப்படிப் பெருக்குவது என்றுதான் சிந்திக்கின்றார்கள். இது ஓர் ஆபத்தான வளர்ச்சி. யு ரியூப்பர்களின் காலத்தில் உண்மை எது? பொய் எது? ஊடக அறம் எது? உழைப்பு மட்டும்தான் யூரியுப் தர்மமா? சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு, தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு யு ரியூப்பர்ளுக்கு இல்லையா? வாசகரை அல்லது பார்வையாளரை விமர்சனபூர்வமாகச் சிந்திக்கும் விழிப்புடைய பிரஜைகள் ஆக்குவதே தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகவியலாளரின் வேலை.
எனவே யுடியூப்பர்களின் காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவது எத்தனை சவால்கள் மிக்கது என்பதனை விமானப்படை கண்காட்சி தொடர்பாக வெளிவந்த பெரும்பாலான யுடியூப்கள் மீண்டும் நிரூபித்தன. இது அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பணி மேலும் கடினமாக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

இப்படிப்பட்டதோர் ஊடகச் சூழலில், முற்றவெளியில் திரளும் மக்களைத் திட்டித் தீர்ப்பதனால் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. தமது சொந்த அரசியலின் மீது அந்த மக்களை எப்படி உணர் திறண் மிக்கவர்களாக மாற்றுவது என்று கட்சிகள் சிந்திக்க வேண்டும். அதற்கு வேண்டிய வழிவகைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். தேசியவாத அரசியல் என்பது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது. தேசத்தை கட்டியெழுப்பும் கலையை; பண்பாட்டை; அறிவியலை; தேசத்தைக் கட்டியெழுப்பும் யுடியூப்பர்களை; தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இப்படி எழுதுவதுகூட சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கலாம். ஏனென்றால் வான்படைக் கண்காட்சி தொடர்பாக படித்தவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களில் அதைக் காண முடிந்தது. எல்லா பிரச்சினைகளும் முடிந்து விட்டன; நாங்கள் இப்பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்; கண்டதையும் எழுதிக் குழப்பாதீர்கள்; மக்கள் சந்தோஷமாக இருக்க விரும்புகிறார்கள்; அவர்களை மீண்டும் பலியாடுகள் ஆக்காதீர்கள்… என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. மக்களைத் தமது நிகழ்காலத்தின் மீது உணர் திறண் மிக்கவர்களாக மாற்ற முற்படும் எழுத்துக்களுக்கு வாசிப்பும் வரவேற்பும் குறைந்து வருகிறது.

பதிலாக மாயைகளின் மீதும் பொருளற்ற மகிழ்ச்சியின் மீதும் பொய்களின் மீதும் கட்டுக் கதைகளின் மீதும் தாகம் கொள்ளச் செய்யும் ஊடக கலாச்சாரம் மேலெழத் தொடங்கிவிட்டது. வெறுப்பர்கள்-haters-எல்லாவற்றையும் எதிர்மறையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில மாத கால இடைவெளிக்குள் யாழ்ப்பாணம் முற்ற வெளியில் மக்கள் பெருந்திரளாகக் கூடிய நிகழ்வுகளிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகமும் புத்திஜீவிகளும் கலைஞர்களும் ஊடகங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆழமான வாசிப்புக் குறைந்து, ஆழமான யோசிப்பும் குறைந்து,மேலோட்டமானவைகளை நோக்கி மொய்க்கும் ஒரு ஜன சமுத்திரத்தை புதிய ஊடக மரபு உற்பத்தி செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் புதிய வளர்ச்சிகளின் பின்னணியில் “டீப் ஃபேக்” – deepfake- என்று அழைக்கப்படும் ஆழமான போலி உருவாக்கப்படுகின்றது. அது ஒரு வெகுசனப் பண்பாடாக வளர்க்கப்படுகிறது. ஆழமான பொய்களின் மத்தியில்; மறதி அதிகமுடைய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில்; தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

 

https://www.nillanthan.com/6615/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆழமான வாசிப்புக் குறைந்து, ஆழமான யோசிப்பும் குறைந்து,மேலோட்டமானவைகளை நோக்கி மொய்க்கும் ஒரு ஜன சமுத்திரத்தை புதிய ஊடக மரபு உற்பத்தி செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் புதிய வளர்ச்சிகளின் பின்னணியில் “டீப் ஃபேக்” – deepfake- என்று அழைக்கப்படும் ஆழமான போலி உருவாக்கப்படுகின்றது. அது ஒரு வெகுசனப் பண்பாடாக வளர்க்கப்படுகிறது. ஆழமான பொய்களின் மத்தியில்; மறதி அதிகமுடைய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில்; தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

வாசிப்புப் பழக்கமே அருகி வருகிறது. குறிப்பாக பத்திரிகை, புத்தகங்கள் வாசிப்பது இளையோரிடம் குறைந்துவிட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.