Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

         சங்கீத கலாநிதி 

'சங்கீத கலாநிதி' விருது பெற்ற திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களை வாழ்த்துவோம். அவர் பார்ப்பன சமூகத்தில் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர் என்பது அவருக்கான கூடுதல் தகுதி, சிறப்பு; நமக்கான கூடுதல் மகிழ்ச்சி.

         தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள்,  'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யை நிரப்பிக் கொண்டு திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பிற்போக்குத்தனமாகக் கொதிக்கிறார்கள், குதிக்கிறார்கள் என்றால் ஒரு காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரின் கற்பனைக்கு விட்டு விடுவோம். சுமார் ஐம்பது வருட காலம் அடங்கி இருந்தவர்கள் இப்போது ஒன்றியத்தில் ஒரு மதவாத, பார்ப்பனிய, பாசிச அரசு அமைந்ததும் பண்ணுகிற அலப்பறைகள் எண்ணிலடங்கா. அவர்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், "வினாஷ் காலே விபரீத புத்தி".
         இசைத்துறையில் 
அவர் அந்த விருதுக்கு முழுத் தகுதியுடையவர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்களது வாழ்வியலுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர் என்பதே சுருக்கமாக அவர்களது குற்றச்சாட்டு. 'மகா பெரியவா'ளைப் பாடும் பிற்போக்காளர்கள் மத்தியில் தந்தை பெரியாரைப் பாடும் முற்போக்காளர் திரு. டி.எம்.கிருஷ்ணா என்பதே அவர்களது ஆற்றாமை. அதிலும் சில பிரகஸ்பதிகள் 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யில் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுப்பார்களாம்; திரு.டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இசை நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்களாம். *உயிரே போச்சு* என்று அவரோ, இசையுலகமோ *தலை*யில் கைவைத்து உட்காரப் போகிறதா, என்ன ?
         பார்ப்பனராயிருக்கும் திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கே இன்று இந்த நிலைமையென்றால், அன்று மற்றவர்கள் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவர் பெரியாரைப் போற்றிய பாடல்களில் ஒன்று கீழே காணொளியில் உள்ளது. இவர் போற்றிய பெரியார் பார்ப்பனர்களை மட்டுமா எதிர்கொண்டார் ? பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடித்த மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மகாத்மாவின் மரியாதைக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காமல் அவரை எதிர்த்து நின்றது பெரியாரின் மகாத்மியம். வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் இறுதி வரை உறுதியாக நின்று வென்றெடுத்தவர் தந்தை பெரியார். அதனால்தான் செத்து ஐம்பது வருடங்கள் ஆன பிறகும் அவாளை மிரட்டுகிறார் பெரியார்.
           சரி, இவ்வளவு பேசியாயிற்று. எந்த மகாத்மாவைப் பெரியார் எதிர்த்தார் என்பதையும் பார்ப்போமா ? அதற்கு வர்ணாசிரமத்தில் எவ்வளவு மூழ்கித் திளைத்தவர் காந்தியார் என்பது தெரிய வேண்டுமே ! 

          1921 - 22 காலகட்டத்தில் குஜராத்தி பத்திரிக்கையான நவஜீவனில் காந்தியார் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை :

"(1) பிறப்பை அடிப்படையாகக் கொண்ட வருணாசிரமப் பிரிவுகளில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. 
(2) வர்ணம் என்பது பிறப்பதற்கு முன்னாலேயே மனிதனுடைய தொழிலை நிர்ணயிப்பதாகும். 
(3) வர்ணாசிரம முறையில் எந்த மனிதனுக்கும் அவன் விரும்பும் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்திரம் கிடையாது.
(4) ஆரம்பப் படிப்பைப் பரப்ப ஜாதி ஒரு வசதியான அமைப்பாகும். ஒவ்வொரு ஜாதியும் அதனுடைய வகுப்பாரின் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடும். ஜாதிக்கு ஒரு அரசியல் அடிப்படையும் உண்டு. ஜாதியானது சில முறைகளால் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் அந்த ஜாதியினருக்குள் உண்டாகும் பூசல்களைத் தீர்த்து வைக்க உதவும். ஜாதியின் உதவியால் ஒவ்வொரு ஜாதியும் ஒரு படையைத் திரட்டுவது சுலபமானதாகும்.
(5) சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்குத் தேவையில்லை என நான் நம்புகிறேன். சமபந்தி போஜனம் நட்பை வளர்க்கிறது என்பது அனுபவத்திற்கு மாறானதாகும். இது உண்மையாக இருக்குமானால் ஐரோப்பாவில் ஒரு சண்டை கூட நிகழ்ந்திருக்காது. மலம் கழிப்பதைப் போலவே உண்பதும் ஒரு மட்டமான செய்கையாகும். மலம் கழித்தவுடன் நமக்கு அமைதி ஏற்படுகிறது. ஆனால் சாப்பிட்டவுடன் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்பதே இந்த இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆகும். மலம் கழிப்பதை நாம் எப்படி ஒதுங்கித் தனித்து செய்கிறோமோ அதேபோல சாப்பிடுவதும் ஒதுங்கித் தனித்தே நடத்தப்பட வேண்டும்.
(6) இந்தியாவில் சகோதரர் குழந்தைகள் ஒன்றை ஒன்று திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காமலா இருந்து விடுகிறார்கள் ? வைஷ்ணவரிடையே பல தாய்மார்கள் மற்ற குடும்பத்தாருடன் கூடி சாப்பிடுவதோ அல்லது பொதுவான ஒரு தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் குடிப்பதோ கூட இல்லாத அந்த அளவுக்கு வைதீக உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பில்லாமலா இருக்கிறார்கள் ? சமபந்தி போஜனத்தையும் கலப்பு மணத்தையும் ஜாதி அனுப்புமதிப்பதில்லை என்பதால் ஜாதி கேடானது என்று சொல்லிவிட முடியாது.
(7) கட்டுப்பாட்டிற்கு மற்றொரு பெயர்தான் ஜாதி என்பது. அளவு மீறி அனுபவிப்பதற்கு ஒரு எல்லையை உண்டாக்குவது தான் ஜாதி. வசதிகளை அனுபவிக்கும் முயற்சியில் தனது எல்லையைத் தாண்ட ஜாதி ஒருபோதும் அனுமதிப்பதில்லை. சமபந்தி போஜனம், கலப்பு மணம் ஆகியவற்றிற்கு ஜாதி முறை தடை போடுவதன் முக்கியமான கருத்து இதுதான்.
(8) ஜாதி முறையை ஒழித்து மேற்கு ஐரோப்பிய சமுதாய முறையை கடைப்பிடிப்பதற்கு ஜாதி முறையின் உயிர் நிலையான பரம்பரை ஜாதித் தொழிலைக் கைவிட்டாக வேண்டும். பரம்பரை ஜாதித் தொழில் என்பது எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கொள்கையாகும். அதை மாற்றுவதன் மூலம் குழப்பம்தான் உண்டாகும். என் வாழ்வில் ஒரு பிராமணனை பிராமணன் என்று அழைக்க முடியாவிட்டால் அந்த பிராமணனால் எனக்கு எந்த விதமான பயனும் இல்லையே ! ஒரு பிராமணன் சூத்திரன் ஆகவும் ஒரு சூத்திரன் பிராமணனாகவும் மாற்றப்பட்டால் அது பெரும் குழப்பமாகத்தானே இருக்கும் ?
(9) ஜாதி முறை சமுதாயத்தில் இயற்கையான ஒரு அமைப்பாகும். இந்தியாவில் அதற்கு ஒரு மதப்பூச்சு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகள் ஜாதி முறையின் பயனைச் சரியானபடி புரிந்து கொள்ளாத காரணத்தால் அந்த நாடுகள் இந்தியா அடைந்த அளவுக்கு ஜாதியால் பல நன்மைகள் அடைய முடியவில்லை.
               மேற்கூறியவை என்னுடைய கருத்துக்களாக இருக்கின்றமையால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களை நான் எதிர்க்கிறவனாக இருக்கிறேன்".

             இவற்றின் அடிப்படையில் "Beware of Gandhi" என்று அண்ணல் அம்பேத்கரே எழுதினார் என்றால், காந்தியாரை எதிர்த்து நின்ற பெரியார் பெரியார்தானே ! பின்னே சும்மாவா டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் போற்றினார் ! 

பின் குறிப்பு : அவாள்லாம் டி.எம்.கிருஷ்ணாவைத் தாக்க, நாம் பதிலுக்கு அவாளைத் தாக்க crossfire ல் காந்தியார் மாட்டிக் கொண்டாரோ ? சரி, விடுங்க தோழர் ! போர்க்களம்னா அப்படிதான் ரணகளம் ஆகும் !

 

https://www.facebook.com/share/p/ma32NPCiZiRCgGh4/?mibextid=oFDknk

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்......👍

எழுத்தாளர் சாரு (சாருநிவேதிதா) டி. எம். கிருஷ்ணா விவகாரத்தில் சற்று வித்தியாசமான ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதை நான் யாழ் களத்தில் வேறு ஒரு திரியில் பகிர்ந்திருந்தேன். 

https://charuonline.com/blog/?p=14482

 

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

எழுத்தாளர் சாரு (சாருநிவேதிதா) டி. எம். கிருஷ்ணா விவகாரத்தில் சற்று வித்தியாசமான ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார்

இது தொடர்பில் தங்களின் இடுகையை வாசித்தேன். இணைப்பை அளித்தமைக்கு நன்றி, தோழர் ரசோதரன் !

        எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்றோரது கருத்துகளுடன் பெரும்பாலும் எனக்கு ஒத்துப் போவதில்லை. ஒருவரது எழுத்து பற்றி கருத்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அந்த வகையில் இவர்கள் Fashionable non-conformists (being different just for the sake of being different) என்பது எனது முதல் கணிப்பாய் அமைந்தது. அதனைப் பெரிய அளவில் நான் மாற்றவில்லையாயினும், சமீப காலங்களில் இவர்களிடம் வேறு ஒரு பரிமாணத்தையும் பார்க்கிறேன். ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய பாசிசத்தின் மொழியை வழிமொழியும் அவர்களின் நிலைப்பாடே அது. திரு. டி.எம்.கிருஷ்ணா சேரிக்கே சென்று கர்நாடக இசை சொல்லித் தருவதைக் கொச்சைப்படுத்தும் எழுத்தைப் படித்ததும், "சாரு நிவேதிதா தம் இயல்பு மாறாமல் எழுதுகிறார்" என்று சிரித்துக் கொள்கிறேன்.

              (இப்போதெல்லாம் (எப்போதும் அப்படிதானோ ?) சமூக வலைத்தளங்களில் ஒருவருக்குப் பிடித்த எழுத்தாளாரையோ, நடிகரையோ, இசையமைப்பாளரையோ விமர்சனம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர் நம் மீது வன்மத்துடன் தனிநபர் தாக்குதலைத் தொடுப்பது வேடிக்கையான ஒன்று. அவர் கும்பிடுகிற சாமியை விமர்சனம் செய்யவே யாருக்கும் உரிமையுண்டு என்பது எனது உறுதியான எண்ணம். குறைந்த பட்சம் அறிவுலகிலாவது இந்திய தண்டனைச் சட்டம் 295 A ஐத் தூக்கிக் கிடாச மாட்டார்களா என ஏங்குகிறேன். நிற்க.

            இதனால் அறியப்படுவது என்னவென்றால்  மேற்கூறிய எழுத்தாளர்களின் ரசிகர்கள் கொதித்தெழுந்தால், நான் சிரித்துக் கடந்து சென்று விடுவேன்.)

           மென்மேலும் எனக்கு எழுத வாய்ப்பளிக்கும் ரசோதரன் அவர்களுக்கு மீண்டும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஐயா .......! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுப.சோமசுந்தரம் said:

 

        எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்றோரது கருத்துகளுடன் பெரும்பாலும் எனக்கு ஒத்துப் போவதில்லை. ஒருவரது எழுத்து பற்றி கருத்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அந்த வகையில் இவர்கள் Fashionable non-conformists (being different just for the sake of being different) என்பது எனது முதல் கணிப்பாய் அமைந்தது. 

       

👍சாரு அவர்களின் கருத்தைப் பார்த்தேன். வில்லாய் வளைந்து (உள்ளூர் பாசையில் குத்தி முறிந்து"😂) ஒரு தரப்பிற்கு முட்டுக் கொடுப்பது போலவும் இருக்கிறது அவர் கருத்து. "கிருஷ்ணா சங்கீத செயல்களினால் தகுதியானவர் தான்" என்கிறார் (அதற்குத் தான் விருது என்று விருது கொடுத்த அமைப்பும் சொல்லி விட்டது). பின்னர் பல்ரி அடித்து "உவர் கிருஷ்ணா ஏன் இவ்வளவு நல்லவரா இருக்கிறார்? நோபல் பரிசு வாங்கவா? இது மேற்கின் சதிகளில் ஒன்று!" என்று சிறு பிள்ளைத் தனமாக அலம்பியிருக்கிறார்.

சாரு எல்லாம் எழுத்தாளர் என்ற அடையாளத்தோடு வலம் வருவது தமிழ் எழுத்துலகின் துரதிர்ஷ்டம் என நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இது தொடர்பில் தங்களின் இடுகையை வாசித்தேன். இணைப்பை அளித்தமைக்கு நன்றி, தோழர் ரசோதரன் !

        எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்றோரது கருத்துகளுடன் பெரும்பாலும் எனக்கு ஒத்துப் போவதில்லை. ஒருவரது எழுத்து பற்றி கருத்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அந்த வகையில் இவர்கள் Fashionable non-conformists (being different just for the sake of being different) என்பது எனது முதல் கணிப்பாய் அமைந்தது. அதனைப் பெரிய அளவில் நான் மாற்றவில்லையாயினும், சமீப காலங்களில் இவர்களிடம் வேறு ஒரு பரிமாணத்தையும் பார்க்கிறேன். ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய பாசிசத்தின் மொழியை வழிமொழியும் அவர்களின் நிலைப்பாடே அது. திரு. டி.எம்.கிருஷ்ணா சேரிக்கே சென்று கர்நாடக இசை சொல்லித் தருவதைக் கொச்சைப்படுத்தும் எழுத்தைப் படித்ததும், "சாரு நிவேதிதா தம் இயல்பு மாறாமல் எழுதுகிறார்" என்று சிரித்துக் கொள்கிறேன்.

              (இப்போதெல்லாம் (எப்போதும் அப்படிதானோ ?) சமூக வலைத்தளங்களில் ஒருவருக்குப் பிடித்த எழுத்தாளாரையோ, நடிகரையோ, இசையமைப்பாளரையோ விமர்சனம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர் நம் மீது வன்மத்துடன் தனிநபர் தாக்குதலைத் தொடுப்பது வேடிக்கையான ஒன்று. அவர் கும்பிடுகிற சாமியை விமர்சனம் செய்யவே யாருக்கும் உரிமையுண்டு என்பது எனது உறுதியான எண்ணம். குறைந்த பட்சம் அறிவுலகிலாவது இந்திய தண்டனைச் சட்டம் 295 A ஐத் தூக்கிக் கிடாச மாட்டார்களா என ஏங்குகிறேன். நிற்க.

            இதனால் அறியப்படுவது என்னவென்றால்  மேற்கூறிய எழுத்தாளர்களின் ரசிகர்கள் கொதித்தெழுந்தால், நான் சிரித்துக் கடந்து சென்று விடுவேன்.)

           மென்மேலும் எனக்கு எழுத வாய்ப்பளிக்கும் ரசோதரன் அவர்களுக்கு மீண்டும் நன்றி.

சாரு தன் இயல்பு மாறாமல் எழுதியிருக்கின்றார் என்று நீங்கள் சொல்லியிருந்த இடத்தில் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவர் எப்போதும் இப்படித்தானே. இப்படி எல்லாம் இவர் எப்படி யோசிக்கின்றார் என்று தான் நான் யோசிப்பேன். இப்பொழுது பெருமாள் முருகன் இவரிடம் சிக்கியுள்ளார்.....😀

2 hours ago, Justin said:

👍சாரு அவர்களின் கருத்தைப் பார்த்தேன். வில்லாய் வளைந்து (உள்ளூர் பாசையில் குத்தி முறிந்து"😂) ஒரு தரப்பிற்கு முட்டுக் கொடுப்பது போலவும் இருக்கிறது அவர் கருத்து. "கிருஷ்ணா சங்கீத செயல்களினால் தகுதியானவர் தான்" என்கிறார் (அதற்குத் தான் விருது என்று விருது கொடுத்த அமைப்பும் சொல்லி விட்டது). பின்னர் பல்ரி அடித்து "உவர் கிருஷ்ணா ஏன் இவ்வளவு நல்லவரா இருக்கிறார்? நோபல் பரிசு வாங்கவா? இது மேற்கின் சதிகளில் ஒன்று!" என்று சிறு பிள்ளைத் தனமாக அலம்பியிருக்கிறார்.

சாரு எல்லாம் எழுத்தாளர் என்ற அடையாளத்தோடு வலம் வருவது தமிழ் எழுத்துலகின் துரதிர்ஷ்டம் என நினைக்கிறேன்.  

நீங்கள் இப்படி சொல்வது சாருவிற்கு தெரிந்தால், அமெரிக்காவில் ஒரு பேராசிரியர் இருக்கின்றார், அவருக்கு நான் தமிழில் எழுதுவது தமிழின் துரதிர்ஷ்டமாகத் தெரிகின்றதாம் என்று ஆரம்பித்து, அந்தப் பேராசிரியருக்கு லத்தீன் அமெரிக்காவில் இன்னாரை தெரியுமா, பிரான்ஸில் இன்னாரை தெரியுமா என்று உங்களை வறுத்து எடுத்துவிடுவார்...........🤣🤣

நல்ல ஒரு எழுத்து நடை அவரிடம் இருக்கின்றது. 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பற்றி பெருமாள்முருகன் இன்று 'அருஞ்சொல்' இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது.

*******************************************************  

சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா
பெருமாள்முருகன்
25 Mar 2024

மியூசிக் அகாடமி 1929ஆம் ஆண்டு முதல் கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு வழங்கிவரும், மிகுந்த மதிப்பிற்குரியதாகக் கருதப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு (2024) டி.எம்.கிருஷ்ணா பெறுகிறார். மிகச் சிறுவயதிலேயே மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கிய அவர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகப் பாடிவருகிறார். ‘நெடுங்காலமாக மிகத் திறமையான இசைக் கலைஞராக விளங்கும் அவர் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்று விருது அறிக்கை கூறுகிறது.

பல்லாண்டுகளாகப் பாடிவரும் அவர் ஒன்றையே தேய்ந்துபோகும் அளவு திரும்பச் செய்யும் இயல்புடையவர் அல்ல. அகத்திலும் புறத்திலும் பல பரிசோதனைகளை முன்னெடுக்கும் தேடல் நிரம்பியவர். எல்லாத் தரப்பினருடனும் இசைக் கலைஞராகத் தம் உரையாடலை நிகழ்த்துவதும் அனைவரின் குரலுக்கும் உரிய மதிப்பு கொடுத்துக் கேட்பதும் அவரது பரிசோதனைகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. 

தமிழ்நாட்டுக்கு அப்பால்…
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் என்றில்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அவரது இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளத்தின் எந்தக் கலை விழாவும் டி.எம்.கிருஷ்ணா இல்லாமல் நிறைவுறாது என்று சொல்லும் வகையில் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கேரள மக்களின் பெருவிருப்பத்தை ஏற்று நாராயண குருவின் பாடல்களுக்கு மெட்டமைத்துக் கச்சேரிகளில் பாடுகிறார். நாராயண குருவின் பாடல்களை மட்டுமே பாடும் தனிக் கச்சேரிகளையும் கேரளத்தில் நடத்துகின்றனர். 

கடம் இசைக் கலைஞரான விக்கு விநாயக்ராம் குழுவுடன் இணைந்து அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. ‘ஜோகப்பாஸ்’ என்னும் திருநர் இசைக்குழுவுடன் சேர்ந்து அவர் பாடியுள்ள கச்சேரிகள் பல. காஞ்சிபுரத்தில் இயங்கும் ‘கட்டைக் கூத்துச் சங்கம்’ குழுவுடன் அவர் நிகழ்த்தியுள்ள இசை நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. நாதஸ்வர இசைக் கலைஞர்களான செய்க் மகபூப் சுபானி – திருமதி கலீசபி மகபூப் குழுவினருடன் இணைந்தும் அவர் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இத்தகைய இசை நிகழ்வுகளில் தம்மை முடிந்தவரை பின்னிறுத்திக்கொண்டு சககலைஞர்களான அவர்களது திறன் வெளிப்பாட்டுக்கு மிகுதியான வாய்ப்புகளை வழங்குவதைக் காண்போர் உணர முடியும். 

கர்நாடக இசைக் கச்சேரிகளின் மரபை உடைத்து வெவ்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் இணைந்து அவர் மேற்கொண்ட இத்தகைய நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களுக்கு இதுவரை கிட்டாத புதிய அனுபவங்களைக் கொடுத்தன. கர்நாடக சங்கீதத்திற்கான இடம் சபாக்களும் கோயில் திருவிழாக்களும்தான் என்றிருந்த நிலையை இவை மாற்றின. இலக்கியத் திருவிழாக்களிலும் பலவகைச் சமூக நிகழ்வுகளிலும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி இத்தகைய நிகழ்ச்சிகளை ரசிப்பதைப் பார்க்க முடிந்தது. மிகச் சிலருக்கு மட்டுமே புரிபடும் ரகசியம் கர்நாடக சங்கீதம் என்று பொதுவெளியில் இருக்கும் எண்ணத்தை இவை மாற்றின. 

புதுமையான முன்னெடுப்புகள்
டி.எம்.கிருஷ்ணா ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல; களச் செயல்பாட்டாளரும் ஆவார். தம் களச் செயல்பாட்டையும் இசை சார்ந்தே புரிபவர் அவர். எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய்க் கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை மாற்றச் செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு இணைந்த அவர் தம் பங்களிப்பாகப் ‘பொறம்போக்குப் பாடல்’ பாடி அப்பிரச்சினையைக் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

புறம்போக்கு நிலங்கள் எவர் ஒருவருக்கும் சொந்தமல்ல, அனைவருக்குமான பொதுவெளிகள் அவை என்பதை அப்பாடல் விரிவாக எடுத்துச் சென்றது. ஒருவரைத் திட்டுவதற்குப் ‘பொறம்போக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. வசைச்சொல்லாக மாறிவிட்ட அதைத் தம் இசையால் மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம். அப்பாடலை வெளியிட்ட சுற்றுச்சூழல் குழுவினர் ‘டி.எம்.கிருஷ்ணா ஒரு பொறம்போக்கு’ என்று அழைத்து மகிழ்ந்தனர். அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்னும் பொருளில் அந்த அழைப்பு அமைந்தது.

துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் பெஜவாடா வில்சனுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்’ பற்றி ஒரு பாடல் உருவாக்கலாம் என்னும் எண்ணம் டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தோன்றியது. அதை என்னிடம் பகிர்ந்துகொண்டார். ‘மலம் அள்ளலாமா – கைகள் மலம் அள்ளலாமா’ என்னும் பல்லவியைக் கொண்ட கீர்த்தனை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அதைப் பல கச்சேரிகளில் அவர் பாடினார். தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபோது ‘எந்தச் சிலையாக இருந்தாலும் அது ஒரு கலைஞனின் கைவண்ணம். அதைச் சிதைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது’ என்று சொன்னார்.

அதைப் பொருளாகக் கொண்டு நான் எழுதிய ‘சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்’ என்னும் பாடலையும் பாடினார். அதைத் தொடர்ந்து பெரியாரைப் பற்றி நான் எழுதிய ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்னும் பாடலையும் பாடி கடந்த 2023 மார்ச் மாதம் வைக்கம் போராட்ட நூற்றாண்டுத் தொடக்கத்தின்போது வெளியிட்டார். அது பல்லாயிரம் பேரிடம் சென்று சேர்ந்தது. கிறித்தவ, இஸ்லாம் மதப் பக்திப் பாடல்களையும் கச்சேரிகளில் தொடர்ந்து பாடிவருகிறார். 

வாழ்த்துகள்...
சென்னையில் உள்ள ஊரூர் ஆல்காட் குப்பத்தில் அவர் தொடர்ந்து பல்வேறு கலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இவ்வாண்டு பிப்ரவரி இறுதியில் அங்கு நடைபெற்ற அவரது இசைக் கச்சேரியில் ஆறு பாடல்களைப் பாடினார். அவ்வூரைச் சேர்ந்த மீனவர் குடும்பங்கள் பெருந்திரளாக வந்திருந்து அக்கச்சேரியைக் பெருங்கொண்டாட்டம் ஆக்கினர். பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய காவடிச் சிந்தை அவர் பாடி முடித்தபோது மக்களின் சீழ்க்கைச் சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று. கர்நாடக சங்கீதக் கச்சேரியில் இப்படிச் சீழ்க்கைச் சத்தம் ஒலிப்பதை டி.எம்.கிருஷ்ணாவின் நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடியும். சமீபத்தில் ‘சங்க இலக்கியக் கீர்த்தனைகள்’ என்னும் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். சங்க இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் தம்மாலான முயற்சியாக இதை அவர் காண்கிறார். 

இசை போன்ற கலைத் துறையில் ஈடுபட்டுச் சாதனை புரியும் கலைஞர்கள் பெரும்பாலும் அத்துறை சார்ந்த அனுபவ அறிவை மட்டுமே கொண்டிருப்பார்கள். அதன் நுட்பங்கள் பற்றி அவர்களால் பேசவோ எழுதவோ இயலாது. டி.எம்.கிருஷ்ணா பேசவும் எழுதவும் செய்கிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்கள் மிகுந்த கவனம் பெற்றவை. ’கர்னாடக சங்கீதத்தின் கதை’ என்னும் நூலை எழுதியுள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றி மிகுந்த மரியாதையுடன் விமர்சனப்பூர்வமாக அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. அது தமிழில் சிறுநூலாக வெளியாகியுள்ளது. மிருதங்கம் வாசிப்போர் பற்றி மட்டுமே இசை ரசிகர் அறிந்திருப்பர். மிருதங்கம் செய்வோர் பற்றி விரிவாக ஆராய்ந்து ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்னும் விரிவான நூலை எழுதினார். அது இசையுலகில் இருக்கும் சாதிரீதியான பாகுபாட்டை விரிவாகப் பேசி நல்லதொரு உரையாடலை உருவாக்கியது. 

இவ்வாறு இசைக் கலைஞர் என்னும் அடையாளத்தை ஒருபோதும் மறவாமல் சமூகத்தின் பல தளங்களில் தம் எதிர்வினைகளை நிகழ்த்திவரும் டி.எம்.கிருஷ்ணாவுக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கி மியூசிக் அகாடமி பெருமை பெற்றுள்ளது. விருது அறிவிப்பில் ‘சமூக மாற்றத்திற்கு இசையை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது வெறும் புகழ்ச்சியல்ல; பேருண்மை. டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்.

https://www.arunchol.com/perumal-murugan-article-on-tm-krishna

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

இசைக் கலைஞர் என்னும் அடையாளத்தை ஒருபோதும் மறவாமல் சமூகத்தின் பல தளங்களில் தம் எதிர்வினைகளை நிகழ்த்திவரும் டி.எம்.கிருஷ்ணாவுக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கி மியூசிக் அகாடமி பெருமை பெற்றுள்ளது. விருது அறிவிப்பில் ‘சமூக மாற்றத்திற்கு இசையை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது வெறும் புகழ்ச்சியல்ல; பேருண்மை. டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்.

மிக அருமை. டி.எம்.கிருஷ்ணா வை சுருக்கமாகவும் முழுமையாகவும் எடுத்துக் காட்டும் பெருமாள் முருகனின் எழுத்து. அதை சரியாக எடுத்தளித்த ரசோதரன் அவர்களுக்கு நன்றி. பெருமாள் முருகனின் இந்த எழுத்திற்கான இணைப்பை நிறைய புலனக் குழுமங்களில் நான் பகிர ஏதுவாக அமைந்தது.

Edited by சுப.சோமசுந்தரம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.