Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பொந்தியு பிலாத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், எடிசன் வெய்கா ரோல்
  • பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
  • 31 மார்ச் 2024, 11:39 GMT
    புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்

இயேசு சிலுவையில் அறையப்பட்ட சமயத்தில் யூதேயா மாகாணத்தின் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து குறித்து, சுவிசேஷங்களில் (இயேசுவின் உபதேசங்கள்) உள்ள மத விவரிப்புகள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத வரலாற்று ஆசிரியர்களின் நூல்களில் சித்தரிக்கப்பட்ட விதங்களில் வேறுபாடுகள் இருப்பதாக ஆரம்பகால கிறிஸ்தவ அறிஞர்கள் கண்டறிந்தனர்.

மத விவரிப்புகளின்படி பிலாத்து நியாய, தர்மங்களில் அக்கறை கொண்டுள்ள நடுநிலையான மனிதர் என தெரிகிறது. இயேசுவிடம் எந்த குற்றத்தையும் காணாத பிலாத்து, அவரை தண்டிக்க விரும்பவில்லை. இயேசுவுக்கு தண்டனை அளிப்பது தொடர்பான பொறுப்பிலிருந்து அவர் நழுவுகிறார். தண்டனை குறித்து யூத மக்களையே தீர்மானிக்குமாறு கூறுகிறார்.

கிறிஸ்தவ மதத்தை சாராத வரலாற்றாசிரியர்களை பொருத்தவரை, பிலாத்து கொடூரமானவர், ரத்தவெறி பிடித்தவர், எதிரிகளை மன்னிக்காதவர்.

"சுவிசேஷங்களின் மத விவரிப்புகள் எப்படி பிலாத்துக்கு மிகவும் சாதகமாக உள்ளன என்பதே வியப்பூட்டுவதாக உள்ளது. அக்காலத்திலிருந்த சில ஆதாரங்கள் அவரை மிகவும் விமர்சிக்கின்றன" என்று, வரலாற்றாசிரியர் கெர்சோன் லேய்ட்டீ டீ மோரேஸ் பிபிசி பிரேசில் சேவையிடம் தெரிவித்தார்.

பிலாத்து குறித்து அக்கால கிறிஸ்தவர்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பம், யூத-விரோதத்தை மறைமுகமாக குறிப்பிடுவதாக ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, யூதர்கள் வாழ்ந்த நிலத்தில் ஆதிக்கம் செலுத்திய ஏகாதிபத்திய ரோமானிய பேரரசின் பிரதிநிதியாக ஆளுநர் இருந்தார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் யூத பிரபுத்துவத்தை தங்களுக்குப் போட்டியாகக் கருதினர். அவர்கள் வளர்ந்து வரும் புதிய பிரிவை ஏற்கவில்லை.

"மார்க், மத்தேயு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோரின் நான்கு சுவிசேஷக் கதைகள், இயேசுவின் மரணத்தில் பிலாத்துக்கு நேரடியாகப் பங்கு இருப்பதாகக் கூறுகின்றன. ஆனால் நாம் குழப்பமடைய வேண்டாம். இவர்கள் பிலாத்துவைப் பற்றி பேசும் நான்கு சுயாதீன எழுத்தாளர்கள் அல்ல," என்று வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான ஆண்ட்ரே லியோனார்டோ செவிடரேஸ் பிபிசி பிரேசில் சேவையிடம் தெரிவித்தார்.

நான்கு சுவிசேஷங்களில் மிகப் பழமையான உரையை எழுதிய மார்க், மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரின் பதிப்புகளுக்கு ஆதாரமாக இருந்தார். "அவர்கள் மார்கோஸின் கதையையே பின்தொடர்ந்தனர். தங்கள் உரைகளில் தகவல்களை சில இடங்களில் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்தனர்" என்று செவிடரேஸ் கூறுகிறார்.

"ஜானும் பிலாத்துவைப் பற்றி பேசுகிறார், ஆனால் சுயாதீனமாக இருக்கிறார். எனவே, இயேசுவின் மரணத்தில் பிலாத்துவிற்கு பங்கு இருக்கிறது என்று கூறுவதற்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஈஸ்டர் பண்டிகை: யார் இந்த பொந்தியு பிலாத்து? இயேசுவை சிலுவையில் அறைய கட்டாயப்படுத்தப்பட்டாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மத சார்பற்ற ஆசிரியர்களுக்கு, பிலாத்து இரத்தவெறி பிடித்தவர், எதிரிகளை மன்னிக்காதவர்.

மத தோற்றம்

விவிலியக் கண்ணோட்டத்தின்படி, ஒருமித்த கருத்து உள்ளது: அதன்படி, இயேசுவிடம் எந்த குற்றத்தையும் காணாத மனிதராக பிலாத்து இருக்கிறார்.

"இதற்கு மாறாக, அவர் யூத தலைவர்களிடமும் யூத மக்களிடமும் இயேசுவின் உயிரை பறிக்க வேண்டியதில்லை என்று கூறுகிறார். அதிகபட்சம், சில கசையடிகள் வழங்கி பின் விடுவிக்கலாம் என்பதுதான் பிலாத்துவின் முடிவு என சுவிசேஷ கதைகள் கூறுகின்றன", என, செவிடரேஸ் கூறுகிறார்.

இவை யூத எதிர்ப்பைக் குறிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அடக்குமுறைகளில் ஈடுபடும் ரோமானியப் பேரரசின் பிரதிநிதி. தண்டிக்கப்படுபவர்கள் யூத மக்களும் மதத் தலைவர்களும் ஆவர்.

"சுவிசேஷங்கள் எழுதப்பட்ட நேரத்தில், 70 ஆம் ஆண்டில் டைட்டஸ் நகருக்குள் நுழைந்த போது ஏற்பட்ட தீயினால் ஜெருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டது. நகரத்தின் ஒரு பகுதி ரோமானிய படைகளால் அழிக்கப்பட்டது. நகரத்தின் சுவர் ஏற்கனவே இடிந்த நிலையில் இருந்தது."

 
ஈஸ்டர் பண்டிகை: யார் இந்த பொந்தியு பிலாத்து? இயேசுவை சிலுவையில் அறைய கட்டாயப்படுத்தப்பட்டாரா?

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,

பிலாத்துவின் முன் இயேசு விசாரணை செய்யப்படுவதை சித்தரிக்கும் 1881 ஆம் ஆண்டு மிஹாலி முன்காசியின் ஓவியம்

"ஜெருசலேமைச் சுற்றி நடந்த இந்த நிகழ்வுகள் அனைத்தும் யூதர்கள் இயேசுவைக் கொன்றதற்காக நிகழ்ந்த பழிவாங்கல் அல்லது தண்டனையாக இயேசுவின் சீடர்கள் கருதினர்," என்று அவர் கூறுகிறார்.

"மேலும், மத்தியதரைக் கடல் பகுதி முழுவதும் பரவியிருந்த ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் உள்ள நகரங்களின் உள்ளூர் பகுதிகளில் இயேசுவின் சீடர்களுக்கும் ரோமானிய அதிகாரிகளுக்கும் இடையே ஒரு உரையாடல் ஏற்கனவே நடந்து கொண்டிருந்தது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

பேராசிரியர் டொமிங்கோஸ் ஜமக்னா, பிபிசி பிரேசிலிடம், "இயேசுவின் திருப்பாடுகள் பற்றிய கதைகளை ஆய்வுக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டும். அதற்கு பழங்கால நூல்களின் அறிவு தேவை" என கூறினார்.

"இதற்காக, ஆய்வாசிரியர்கள் வாய்வழி மரபுகளைச் சேகரித்துள்ளனர்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

வரலாற்றாசிரியர் செவிடரேஸ் இந்த நிகழ்வை "சிலுவையின் இறையியல்" என்று அழைக்கிறார் .

இக்கதைகள் "வரலாற்றை விட இறையியலையே" அதிகம் சார்ந்துள்ளன. "ஒரு நல்ல மனிதரான இயேசு எப்படி சிலுவையில் கெட்ட மனிதர்களுக்கான மரணத்தை சந்தித்தார் என்பதையும், மூன்றாம் நாளில் அவர் எப்படி மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதையும் பற்றி அவை கூறுகின்றன," என்று அவர் சுருக்கமாகக் கூறுகிறார்.

"யூதம், கிறிஸ்தவம் ஆகிய இரண்டுமே வரலாற்று ரீதியிலான மதங்கள்," என்கிறார் பேராசிரியர் டொமிங்கோஸ் ஜமக்னா.

'பொந்தியு பிலாத்து' யார்? ஒரு வரலாற்றுத் தேடல்

பிலாத்துவின் முழுமையான விவரங்களை அறிய, மதம் சாராத வரலாற்றாசிரியர்களின் பார்வையையும் பெற வேண்டும்.

வரலாற்றாசிரியர் ஃபிளேவியஸ் ஜோசபஸ் (37-100), அலெக்ஸாண்டிரியாவின் தத்துவஞானி பிலோ (கிமு 20 - கிபி 45) மற்றும் ரோமானிய செனட்டரும் வரலாற்றாசிரியருமான கயஸ் டாசிடஸ் (55-120) ஆகியோர் பிலாத்து குறித்து எழுதியுள்ளனர்.

பிலாத்து ஒரு வரலாற்று மனிதராக இருந்ததற்கு சாட்சியமளிக்கும் தொல்லியல் கண்டுபிடிப்புகளும் உள்ளன.

" மூன்று கிறிஸ்தவரல்லாத ஆசிரியர்கள் பிலாத்து பற்றி பேசியுள்ளனர். அவர்கள் பிலாத்து என்ற நபர் இருந்ததாக கூறுகின்றனர். அவர் உருவாக்கப்பட்ட நபர் அல்ல, மாறாக கிறிஸ்தவ படைப்பு” என்று செவிடரேஸ் குறிப்பிடுகிறார்.

"தொல்லியல் பார்வையில், 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு உள்ளது. அதில், பிலாத்து யூதேயாவின் ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பிலாத்து என்பவர் இருந்திருக்கிறார்."

ஆனால் வரலாற்று மற்றும் மத ஆதாரங்களுக்கிடையேயான புதிரை ஒன்றாக இணைப்பது பிலாத்து உண்மையில் யார் என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்குகிறது.

 
ஈஸ்டர் பண்டிகை: யார் இந்த பொந்தியு பிலாத்து? இயேசுவை சிலுவையில் அறைய கட்டாயப்படுத்தப்பட்டாரா?

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,

1890 இல் ரஷ்ய நிகோலாய் ஜி வரைந்த ஓவியத்தில் பிலாத்து இயேசுவை விசாரிக்கிறார்.

பிலாத்து அப்போதைய ரோமானிய மாகாணமான யூதேயாவின் ஐந்தாவது ஆளுநராக இருந்தார் என்றும், அவரது நிர்வாகம் 25 மற்றும் 37 ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது என்றும் அறியப்படுகிறது.

ஏழ்மையான மற்றும் தலைநகரில் இருந்து தொலைவில் இருந்த யூதேயா மிகவும் விரும்பப்படும் மாகாணங்களுள் ஒன்றாக இல்லை. இது, பிலாத்து, ரோமானிய பேரரசில் அதிக கௌரவத்தை அனுபவிக்கவில்லை என்பதைக் குறிக்கிறது. பிலாத்து குற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விதிக்க முடியும்.

அவரது அதிகாரங்களில் பிரதான பாதிரியாரை நியமிப்பதும் அடங்கும். இதனால் அவர் அதிகார மட்டத்திலும் அதிகாரம் மிக்க யூதர்களிடையேயும் நெருக்கமானார். அவருக்கு ராணுவ, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரமும் இருந்தது. வரி வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது.

"பிலாத்து பெரிய செனட்டர் குடும்பங்களில் இருந்து வரவில்லை, ரோமானிய ஆளும் வர்க்கத்திலிருந்து வரவில்லை. அவர் மாவீரர்களின் வரிசையில் இருந்து வந்தவர். எனவே, அவர் சரியான விகிதாச்சாரத்தைப் பேணி, உயர் பதவிகளை வகிக்கும் ஒருவராக இருப்பார்" என்று செவிடரேஸ் கூறுகிறார்.

"ஆனால், ரோமானியப் பேரரசுக்குள் எப்படி தொடர்புகளை, உறவுகளை பேணுவது என்பது அவருக்குத் தெரியும்."

யூதேயா ஆளுநராவதற்கு முன்பு, அவர் அலெக்ஸாண்ட்ரியாவில் வழக்கறிஞராக இருந்தார்.

"தனது செயல்களில் முற்றிலும் முரண்பாடான, வன்முறை குணமுடைய, ரோமானியர் அல்லாத ஒருவரைக் கையாள்வதில் சிறிதளவு மரியாதை மற்றும் கூர்உணர்வு இல்லாத ஒரு தனிநபர் என்று, பிலாத்து குறித்து பணக்கார எகிப்து நகரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஃபிலோ குற்றம்சாட்டுகிறார்" என்று வரலாற்றாசிரியர் செவிடரேஸ் கூறுகிறார்.

"பிலாத்து ஒரு திருடன் என்றும் மற்றவர்களின் பணம் மற்றும் சொத்து மீது கை வைப்பவர் என்று சொல்லும் அளவுக்கு ஃபிலோ எழுதியுள்ளார்."

 
ஈஸ்டர் பண்டிகை: யார் இந்த பொந்தியு பிலாத்து? இயேசுவை சிலுவையில் அறைய கட்டாயப்படுத்தப்பட்டாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பிலாத்துவின் குணாதிசயத்தைப் பற்றி [வரலாற்று ஆதாரங்களில்] ஒரு பொதுவான அம்சம் தெளிவாக உள்ளது: அவர் வன்முறையாளர். மேலும், உயர் பதவிகளுக்கு செல்ல சந்தேகத்திற்கு இடமின்றி நிர்வாக மற்றும் ராணுவப் பாதைகளில் பயணித்தவர்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

"ஃபிலோ மற்றும் ஜோசஃபஸ் இருவரும் பிலாத்து குறித்து அறியும் வகையிலான கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். அக்கடிதம் பிலாத்துவிற்கு சாதகமாக இல்லை. பிலாத்து ஒரு கடுமையான, பிடிவாதமான, வன்முறை, கொடூரமான, கொள்ளைக்காரனாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். சட்ட நடைமுறைகள் இல்லாமல் மக்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குபவர் என்றும் கருதுகிறேன்" என்கிறார் வரலாற்றாசிரியர் கெர்சோன் லேய்ட்டீ டீ மோரேஸ்.

உதாரணமாக, யூதர்கள் மீதான மரியாதைக்காக, யூதர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு பிராந்தியத்தில் ரோமானிய வழக்கறிஞர்கள் பிராந்திய நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட போது, அவர்கள் பேரரசரின் உருவம் கொண்ட பதாகைகளை கொண்டு வரமாட்டார்கள்.

"யூதர்கள் அதை விரும்பவில்லை, ஏனென்றால் அது ஒரு வகையான உருவ வழிபாட்டைக் குறிக்கும்" என்று இறையியலாளர் விளக்குகிறார். "பிலாத்து, தான் ரகசியமாக பதவியேற்ற போது, அந்த பாரம்பரியத்தை உடைத்தார்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

அதை யூதர்கள் கண்டறிந்து தெரிவித்த போது, ஒரு மைதானத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு எதிராகத் திரும்பும்படி தனது வீரர்களுக்கு பிலாத்து உத்தரவிட்டார். "அப்போது, அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நேர்ந்தன," என வரலாற்றாசிரியர் கெர்சோன் லேய்ட்டீ டீ மோரேஸ் கூறுகிறார்.

"அவர் ஜெருசலேம் கோவிலில் இருந்து பணத்தை ஆழ்குழாய் கட்டுவதற்காக திருப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த பணத்தை யூதர்கள் புனிதமாக கருதினர். ஊழல் நடந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் அவர் மத பிரச்னையில் தலையிட்டார். யூதர்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் வீரர்கள் சில யூதர்களை கொன்றிருப்பார்கள்," என்று அவர் விவரிக்கிறார்.

"எதிர்ப்பு தெரிவித்தாலே மிகுந்த பலத்துடன் பிலாத்து எதிர்வினையாற்றியுள்ளார்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

35 ஆம் ஆண்டில், கெரிசிம் மலையில் சமாரியன் ஊர்வலம் நடந்தது, மேலும் அந்த இயக்கத்தை வலுக்கட்டாயமாக ஒடுக்குமாறு உத்தரவிட்டார் பிலாத்து. அப்போது மீண்டும் பலர் இறந்தனர்" என்று மோரேஸ் தெரிவிக்கிறார்.

நியாயமான மனிதன்

பிலாத்து ஒரு வரலாற்று நபராக இருந்திருப்பார் என்று ஒருமித்த கருத்து உள்ளது. இருப்பினும் அவரை விவிலிய பிலாத்துவுடன் ஒப்பிட்டு குழப்பமடையக் கூடாது என, பண்டைய கிறிஸ்துவம் குறித்த ஆராய்ச்சியாளர் தியாகோ மேர்கி பிபிசி செய்தி பிரேசிலுக்கு தெரிவித்தார்.

"சுவிசேஷங்களில் நீதியின் மீது அக்கறை கொண்ட மனிதராக பிலாத்து குறிப்பிடப்படுகிறார். மற்ற ஆதாரங்களில் அவர் கொடுமை மற்றும் பிடிவாத குணம் கொண்டவராக காட்டப்பட்டுள்ளார்," என்று அவர் குறிப்பிடுகிறார்.

"பைபிளில் பிலாத்து நீதி சார்ந்த ஒருவராக கூறப்பட்டுள்ள நிலையில், ஜோசஃபஸின் கதைகளைப் படிக்கும்போது அந்த பிம்பம் தலைகீழாகி விடுகிறது. அவருடைய கதைகளில் பிலாத்து மக்களை இரும்பு மற்றும் நெருப்பு கொண்டு ஒடுக்கும் நபராக உள்ளார்."

கிறிஸ்தவத்தின் முதல் தசாப்தங்களில் பிலாத்துவின் வாழ்க்கையைப் பற்றி பல புராணக்கதைகள் வெளிவரத் தொடங்கின என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

"அக்கதைகளில் அவர் ஒரு துறவியாகவும் தியாகியாகவும் கூட கருதப்படுகிறார். அவர் காப்டிக் தேவாலயத்தில் தியாகியாகவும், எத்தியோப்பியன் திருச்சபையால் துறவியாகவும் நினைவுகூரப்படுகிறார். இது விநோதமானது என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்," என்று அவர் கூறினார்.

பொதுவாக, இந்த கதைகள், இயேசுவின் சார்பாக தலையிடாததற்காக பிலாத்து மனந்திரும்புதல் குறித்து பேசுகின்றன. இறுதியாக பிலாத்து கிறிஸ்தவத்திற்கு மாறியிருப்பார் என்றும் அவை தெரிவிக்கின்றன.

 
ஈஸ்டர் பண்டிகை: யார் இந்த பொந்தியு பிலாத்து? இயேசுவை சிலுவையில் அறைய கட்டாயப்படுத்தப்பட்டாரா?

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,

1850 ஆம் ஆண்டு சுவிஸ்-இத்தாலியான அன்டோனியோ சிசெரி வரைந்த இந்த ஓவியம், யூதக் கூட்டத்திற்கு முன் இயேசுவை நிறுத்துகிறார் பிலாத்து.

இறையியலாளர் மோரேஸின் கூற்றுப்படி, பைபிள் விவரிப்புகளில் பிலாத்துவின் இருப்பு இரண்டு குறியீட்டு நோக்கங்களுக்கு உதவுகிறது. முதலாவது, இயேசு பிறந்த தேசத்தில் ரோமானிய அரசின் வலுவான இருப்பை நிரூபிப்பது.

"ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவை அந்த அதிகாரத்தால் மட்டுமே எடுக்க முடியும்," என்று அவர் கூறுகிறார்.

இரண்டாவது, இயேசுவின் வாழ்க்கைக்கு ஒரு வரலாற்றுப் பிடிப்பை ஏற்படுத்துவது.

"இது ஒரு வரலாற்றுத் தன்மையைக் கொடுக்கிறது. [சுவிசேஷங்களில்] ஒரு ரோமானிய அதிகாரத்தின் இருப்பு, அந்தப் பிராந்தியத்தில், அந்தப் பிரதேசத்தில் ரோமானியப் பேரரசின் ஆதிக்கத்தை மட்டுமல்ல, அனைத்தின் வரலாற்றுத் தன்மையையும் உறுதிப்படுத்துகிறது" என்கிறார் மோரேஸ்.

இயேசுவை சிலுவையில் அறையும் முடிவுக்கு வந்தது எப்படி?

பிலாத்து மோசமாக காட்டப்பட்டுள்ள ஒரேயொரு விவிலியப் பகுதி உள்ளது. அது லூக்காவின் உரையில் உள்ளது.

"பொதுவாக, சுவிசேஷங்கள் பிலாத்துவை ஒரு முக்கியமான மற்றும் நியாயமான நபராக சுட்டிக்காட்டுகின்றன," என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்துகிறார். மத்தேயுவின் கதையில், மரண தண்டனைக்காக இயேசு கொண்டு வரப்பட்டபோது, "அவர் என்ன தீங்கு செய்தார்?" என்று பிலாத்து கேட்கிறார். யோவான் நற்செய்தியில், "இந்த மனிதருக்கு எதிராக நீங்கள் என்ன குற்றச்சாட்டைக் கொண்டு வருகிறீர்கள்?" என கேட்டுள்ளார் பிலாத்து.

"உண்மை என்ன?" என்று பிலாத்து அவரிடம் கேட்டார். பின்னர், யூதர்களிடம் சென்று, "அவரிடம் (இயேசு) நான் எந்தக் குற்றத்தையும் காணவில்லை" என்று கூறினார்" என்றும் யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களும் இவ்வாறே கூறுகின்றன. அவை, இயேசுவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு யூதர்கள் மீது பழி சுமத்துகின்றன .

 
ஈஸ்டர் பண்டிகை: யார் இந்த பொந்தியு பிலாத்து? இயேசுவை சிலுவையில் அறைய கட்டாயப்படுத்தப்பட்டாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"யூதர்கள் பிலாத்துவை மிரட்டியிருப்பார்கள் என்பதை லூகாவின் நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. `நீங்கள் சீசரின் நண்பராக இருந்தால், இந்த உலகில் யாரோ ஒருவர் ராஜ்ஜியத்தை நிறுவ விரும்புவதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என மிரட்டியிருப்பார்கள்" என்று மோரேஸ் கூறுகிறார்.

பிலாத்துவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரே பதிவு மத்தேயு நற்செய்தியிலிருந்து தெரியவருகிறது. அதன்படி, பிலாத்து திருமணம் ஆனவர். இயேசுவின் விஷயத்தில் அவருடைய மனைவி தலையிட முயற்சித்திருப்பார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அவர் மனைவி, பிலாத்துவிடம், `இந்த நீதிமான் (இயேசு) விஷயத்தில் ஈடுபடாதே! ஏனென்றால் இன்று நான் அவரால் ஒரு கனவில் மிகவும் கஷ்டப்பட்டேன்," என்று கூறியதாக அந்த நற்செய்தி கூறுகிறது.

இயேசுவின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்ததன் மூலம் அந்த சூழ்நிலையில் ரோமானிய அதிகாரத்தின் பச்சாதாபத்தை விவிலிய விவரிப்புகள் இன்னும் நிரூபிக்கின்றன.

"தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் உடல்கள் பொதுவான கல்லறையில் எறியப்பட வேண்டும் என்பதே வழக்கம். ஆனால், பிலாத்து இயேசுவின் உடலை ஒப்படைத்ததாகவும் அதை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் நான்கு சுவிசேஷகர்கள் தெரிவிக்கின்றனர்" என்று மோரேஸ் கூறுகிறார்.

"இயேசு கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட்டார்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

விசாரணையின்போது இயேசுவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது குறித்து பேசப்பட்ட போது, இதனால் கிளர்ச்சி ஏற்படும் என்பதை உணர்ந்து, பிலாத்து தண்ணீரை எடுத்து, கூட்டத்தின் முன்னிலையில் கைகளை கழுவி, "எல்லாப் பொறுப்பும் உங்களுடையது!" என கூறியுள்ளார்.

 

சிலுவையின் இறையியல்

ஈஸ்டர் பண்டிகை: யார் இந்த பொந்தியு பிலாத்து? இயேசுவை சிலுவையில் அறைய கட்டாயப்படுத்தப்பட்டாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இயேசுவின் மரணத்தின் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும், "வரலாறு, தொல்லியல், மொழியியல் ஆகியவற்றால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு அடிப்படையைக் கொண்டுள்ளன" என்று டொமிங்கோஸ் ஜமக்னா விளக்குகிறார்.

"ஆனால் இதன் நோக்கம் இறையியல் மற்றும் வாசகர்களின் நம்பிக்கையைத் தூண்டுவதாகும். எனவே, கிறிஸ்தவர்கள் இவற்றுக்கு அதிகப்படியான மதிப்பைக் கொடுக்கக் கூடாது," என்று அவர் தெரிவிக்கிறார்.

முதலாவதாக, "இயேசு ஒருபோதும் சோதிக்கப்படவில்லை" என்று வரலாற்றாசிரியர் செவிடரேஸ் தெரிவிக்கிறார்.

"யூதர்களின் பாஸ்கா தினத்தன்று (யூத விழா) அங்கு தோன்றிய எந்த கிளர்ச்சியாளரையும் கைது செய்ய தெருக்களுக்குச் செல்வதைப் பற்றி பிலாத்து கவலைப்படவில்லை. 'ஒரு கிளர்ச்சியாளர் தோன்றினால், அவரைப் பிடித்து சிலுவையில் அறையுங்கள்` என பிலாத்து கூறினார்," என்று வரலாற்றாசிரியர் செவிடரேஸ் விளக்குகிறார்.

"இறுதியில் இயேசுவைக் கொல்ல பிலாத்து உத்தரவிட்டார். ஆனால் இயேசுவை ஒருபோதும் விசாரணை செய்யவில்லை" என்று வரலாற்றாசிரியர் முடிக்கிறார்.

பண்டைய ரோம் குறித்து லட்சக்கணக்கான ஆவணங்கள் உள்ள போதிலும், சிலுவையில் அறையப்பட்டவரின் தீர்ப்பைப் பற்றி பேசும் எந்த உரையும் இன்றுவரை எஞ்சவில்லை என்று அவர் வாதிடுகிறார்.

வரலாற்று மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியின் படி, சிலுவையில் அறையப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உரிமை இல்லை. அவர்களின் உடல்கள் அழுகும் வரை சிலுவையிலேயே தொங்கவிடப்படும். அவர்களின் உடல்களை வேட்டையாடும் பறவைகள் உண்ணும்.

"ஸ்பார்டகஸின் கிளர்ச்சியின் போது [கி.பி. 70களில்] ஆறாயிரம் அடிமைகள் ரோமின் மையப்பகுதியில் அப்பியன் வழியில் சிலுவையில் அறையப்பட்டனர். அவர்களின் எலும்புகள் எங்கே? அவை ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் புதைக்கப்படவில்லை," என்கிறார் அவர்.

"ரோமானியர்களால் ஜெருசலேம் முற்றுகையின் கடைசி ஆண்டுகளில், 69 மற்றும் 70 இல், ஒரு நாளைக்கு 500 பேர் வரை சிலுவையில் அறையப்பட்டதை ஜோசபஸ் பேசுகிறார். அவர்களின் எலும்புகள் எங்கே? நாங்கள் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை, அவை ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை."

https://www.bbc.com/tamil/articles/cerwl3k8r3go

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பிலாத்துவின் விசாரணை

15 அதிகாலையில் தலைமை ஆசாரியர்கள், யூதத் தலைவர்கள், வேதபாரகர்கள் அனைவரும் கூடி இயேசுவை என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தனர். அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர். அவர்கள் இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்தனர்.

“நீ யூதர்களின் மன்னனா?” என்று பிலாத்து கேட்டான்.

அதற்கு இயேசு, “ஆமாம். நீர் சொல்வது சரிதான்” என்றார்.

தலைமை ஆசாரியர் இயேசுவின்மீது பல குற்றங்களைச் சுமத்தினர். பிலாத்து இயேசுவிடம், “இம்மக்கள் உனக்கு எதிராகக் குற்றங்களை சுமத்துவதை நீ அறிவாய். எனினும் நீ ஏன் எந்தப் பதிலும் சொல்லவில்லை?” என்று மீண்டும் கேட்டான்.

ஆனால் இயேசு இதுவரை எந்தப் பதிலையும் கூற வில்லை. இதைப்பற்றி பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான்.

இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து முயன்று தோற்பது

ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது சிறையில் இருந்து ஒருவனை ஆளுநர் விடுதலை செய்யும் அதிகாரம் பெற்றிருந்தார். மக்கள் விரும்புகின்றவனையே அவர் விடுதலை செய்ய முடியும். அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில் கலகக்காரர்களோடு ஒரு கலவரத்தில் கொலை குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

வழக்கத்தின்படி ஒருவனை விடுதலை செய்யும்படி மக்கள் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர். மக்களிடம் பிலாத்து, “யூதர்களின் மன்னனை விடுதலைசெய்ய விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். 10 பொறாமை காரணமாகத்தான் தலைமை ஆசாரியர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர் என்பதைப் பிலாத்து அறிந்திருந்தான். 11 தலைமை ஆசாரியர்கள் இயேசுவை விடுதலை செய்யவேண்டாம் என்றும் பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்றும் கேட்க மக்களைத் தூண்டிவிட்டனர்.

12 “அப்படியானால் யூதர்களின் மன்னனாகிய இந்த மனிதனை நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று பிலாத்து மக்களிடம் கேட்டான்.

13 “அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று அவர்கள் மீண்டும் சத்தமிட்டனர்.

14 “ஏன்? இவன் என்ன பாவம் செய்தான்” என்று பிலாத்து கேட்டான். ஆனால் மக்கள் மேலும் மேலும் சப்தமிட்டனர். “அவனைச் சிலுவையில் கொல்லுங்கள்” என்றனர்.

15 மக்களைப் பிரியப்படுத்த, பிலாத்து விரும்பினான். எனவே பரபாசை விடுதலை செய்தான். இயேசுவைச் சவுக்கால் அடிக்கும்படி வீரர்களிடம் சொன்னான். பின்னர் அவரைச் சிலுவையில் அறையும்படி வீரர்களிடம் ஒப்படைத்தான்.

16 பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர். 17 அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர். 18 பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். 19 கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். முழங்காலிட்டு அவரை வணங்குவதைப்போல நடித்துக் கிண்டல் செய்தார்கள். 20 எல்லாம் முடிந்த பிறகு சிவப்பு மேலங்கியைக் கழற்றி விட்டு அவரது சொந்த ஆடையை அணிவித்தனர். அவரைச் சிலுவையில் அறைவதற்காக அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்தனர்.

இயேசு சிலுவையில் அறையப்படுதல்

21 சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். இவன் அலெக்சாண்டர், மற்றும் ரூபஸ் ஆகியோரின் தந்தை. அவன் வயலில் இருந்து நகரத்திற்குள் வந்தான். வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர். 22 “கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்) 23 அங்கே இயேசுவுக்குத் திராட்சை இரசத்தைக் கொடுக்க வீரர்கள் முயன்றனர். அந்த இரசத்தில் வெள்ளைப்போளம் என்னும் போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது. ஆனால் இயேசு அதைக் குடிக்க மறுத்து விட்டார். 24 வீரர்கள் இயேசுவைச் சிலுவை மேல் ஆணியால் அடித்தனர். இயேசுவின் ஆடையை அவர்கள் பங்கு போட்டுக்கொண்டார்கள். எந்த ஆடையை யார் எடுத்துக்கொள்வது என்பதுபற்றி அவர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.

25 அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி. 26 அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர். 27 அவர்கள் இயேசுவின் இருபுறத்திலும் இரண்டு கள்ளர்களைச் சிலுவையில் அறைந்தனர். 28 [a]

29 அவ்வழியாய்ப் போகும் மக்கள் இயேசுவை அவமரியாதை செய்து பேசினார்கள். அவர்கள் தங்கள் தலையை உலுக்கி “ஆலயத்தை இடித்துப் போட்டுவிட்டு மூன்று நாட்களுக்குள் கட்டிவிடுவேன் என்றாயே. 30 ஆகவே நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள். சிலுவையில் இருந்து இறங்கி வா” என்றனர்.

31 வேதபாரகர்களும் தலைமை ஆசாரியர்களும் அங்கே அவர்களோடு இருந்தனர். அவர்களும் இயேசுவை மற்ற மக்கள் செய்த விதத்திலேயே கேலி செய்தனர். “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான். ஆனால் தன்னைத்தான் காப்பாற்ற முடியவில்லை. 32 இவன் உண்மையிலேயே கிறிஸ்து என்றால், யூதர்களின் மன்னன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாமே. நாங்கள் அதைப் பார்த்தால் இவனை நம்புவோமே” என்றனர். இயேசுவின் இருபுறமும் அறையப்பட்ட கள்ளர்களும் இயேசுவைப்பற்றி அவதூறாகப் பேசினர்.

இயேசு இறத்தல்

33 மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. 34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” [b] என்று பொருள்.

35 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் இதனைக் கேட்டனர். அவர்கள், “கவனியுங்கள். அவன் எலியாவை கூப்பிடுகிறான்” என்றனர். 36 ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான்.

37 இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.

38 இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்தது. அக்கிழிசல் மேற்புறம் தொடங்கிக் கீழேவரை வந்தது. 39 இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார்.

40 சில பெண்கள் சிலுவைக்குச் சற்றுத் தள்ளி நின்று இதனைக் கவனித்துக்கொண்டு நின்றனர். அவர்கள், மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாரான மரியாள் ஆகியோராவர். (யாக்கோபு மரியாளின் இளைய மகன்.) 41 இயேசுவுடனே கூட எருசலேமிற்கு வந்திருந்த ஏனைய பல பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.

இயேசுவின் அடக்கம்

42 இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளுக்கு முந்தின நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் 43 மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காகக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவிடம் துணிந்துபோய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.

44 ஏற்கெனவே இயேசு இறந்து போனதைக் கேள்விப்பட்டு பிலாத்து ஆச்சரியப்பட்டான். இயேசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்தான். இயேசு இதற்குள்ளே இறந்தது நிச்சயமா என்று அவனிடம் விசாரித்தான். 45 அந்த அதிகாரி இயேசு இறந்துபோனதை ஒப்புக்கொண்டான். எனவே இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்ல யோசேப்புக்கு பிலாத்து அனுமதி அளித்தான்.

46 யோசேப்பு மெல்லிய துணியை வாங்கி வந்தான். சிலுவையில் இருந்து இயேசுவின் சரீரத்தை இறக்கி அதனைத் துணியால் சுற்றினான். பிறகு அச்சரீரத்தைக் கொண்டு போய் பாறையில் வெட்டப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறை வாசலை ஒரு பாறாங்கல்லால் மூடிவிட்டான். 47 இயேசு வைக்கப்பட்ட கல்லறையை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயான மரியாளும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

Footnotes

  1. மாற்கு 15:28 சில கிரேக்க பிரதிகளில் 28வது வாக்கியம் உள்ளது. “வேத வாக்கியங்கள் சொன்னபடி நடந்தது. அவர்கள் அவரை குற்றவாளிகளோடு சேர்த்தனர்.’” (ஏசாயா 53:12.)
  2. மாற்கு 15:34 சங்கீதம் 22:1-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

https://www.biblegateway.com/passage/?search=மாற்கு 15&version=ERV-TA

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.