Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பால் கடல் கடைதல்" 


[நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும்   திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை விமர்சியுங்கள்! ]


 
வேதகால தொடக்கத்தில் [கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம்] அசுரரும் தேவர்களும் சிறு தெய்வங்களாகவே கருதப்பட்டார்கள். சிலர் இரண்டு நிலையையும் கொண்டிருந்தார்கள் [வருணன்]. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் [வேதம்= மறை] பயன்படுத்தப் பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் [தேவர்] என்ற சொல்லை உருவாக்கினார்கள். பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள், யோக்கியர்கள் என்றுள்ளது. வேதப் பாடல்களில் உள்ள துதிகள் இயற்கையையே பாடுகின்றன. இந்திரன், வருணன், அக்னி என்று சொல்லப் படுபவை ஐம்பூதங்களே. அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். பிந்திய பிரமாண நூல்களான புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள், கீதை  என்பனை சமஸ்க்ருதத்தில் எழுதும் போதே இருக்கு வேதத்தில் உயர்வாக சொல்லப்பட்ட அசுரர் என்ற சொல், உயர்ச்சிப் பொருளை மாற்றி, இதற்கு அரக்கர் என்று பொருளிட்டு விட்டார்கள். மேலும் தேவர்கள் நேர்மறை சக்திகளாகவும் அசுரர்கள் எதிர்மறை சக்திகளாகவும் சித்தரித்தார்கள்.

புராணங்களை உற்று கவனித்திருக்கிறீர்களா? அசுரர்களை எப்படி காட்டி இருப்பார்கள், மாமிசம் உண்பவர்கள், அட்டுழியம் செய்பவர்கள். தேவர்கள் அமிர்தம் [கள்ளு / மது] அதாவது சைவம் உண்பவர்கள், அப்பாவிகள். இது நாம் சாதாரணமாக பார்ப்பது. உற்று கவனியுங்கள். அசுரர்கள் அளவு கடந்த பக்திமானாக இருப்பார்கள். பெண்கள் பக்கம் செல்லவே மாட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாம் ரவுடியிசம் மட்டுமே. உதாரணமாக யாகத்தைத் [வேள்வி] தடுப்பார்கள். ஆனால் மாறாக தேவர்கள் எந்த அராஜகத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் பெண் பித்தர்கள், அடுத்தவன் மனைவியை கவர்பவர்கள், சூதாடுவார்கள்,  துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தேவர்கள் நல்லவர்கள், அசுரர்கள் தீயவர்கள். இது கொஞ்சம் முரணாக இருக்கிறதல்லவா?
மேலும் உண்மையில் இருவரும் மிகவும் கடின மூர்க்கத்தனமான ஒற்றுமை இல்லாத தொடருந்து எதிர் அணியுடன் முட்டி மோதும் வீரர்களாகும்.

தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென அறிந்த மகா விஷ்ணு, தேவர்களிடம் உங்கள் முன் இருக்கும் வேலை மிகவும் கடினமானது, உங்களால் மட்டும்  தனியாக பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். அதனால் உங்களுக்கு அசுரர்களின் உதவி வேண்டும் என்று எடுத்து கூறினார். அதனால் தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். திரண்டெழும் சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்தில் சரிபகுதி என்றனர். நம்பினர் அசுரர்கள். ஆனால் இது ஒரு தந்திரமே! அசுரர்கள் ஆக தமது ஆற்றலை மட்டுமே பயன் படுத்துவார்கள், அவர்களின் பங்ககான  "சாவ வரம்" கிடைக்காது, நான் அதை பார்த்துக் கொள்வேன் என மகா விஷ்ணு உறுதி கூறினார் தேவர்களுக்கு. 


மேலும் மகாவிஷ்ணு  எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை - 
 அரக்கர்களைக் எமாற்றி கொல்லத் தான். இராவணனைக் கொன்றதும் அப்படியே! ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே? சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான். ராவணன் மிகச்சிறந்த பக்திமான். நல்ல அரசன். கடைசி வரை நேர்மையாக போரிட்டவன். கடைசியில் இராமன் ஏமாற்றுகளால் சீதையை மீட்டான். எனினும்,சீதையின் தூய்மையை நம்பவில்லை.
சீதையை 

"அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" 

என்று ராமன் குற்றம்சாட்டு கின்றான்.  இராவணனின் சிறையில் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப் பார்த்து,

"இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?"

என மேலும் ராமன் கூறுகிறார். கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது. பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள் நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை.

     "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல்
     ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்
     தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்"

அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான்.

     "நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக"
     "மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து"

அன்று நடந்தது என்ன? இன்று நடப்பது என்ன ? அதை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. மீண்டும் ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையை நம்பாமல் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் யார் காரணம்?

மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா? "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல - தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்." என்றல்லவா? 

சிறிதளவு உழைப்புக்கு பெருமளவு பயன்களை அனுபவிப்பது ஆளும் வர்க்கம். உழைக்கும் வர்க்க மக்களுக்கு மிகக்குறைந்த பயன்களையே அது அனுமதிக்கும். இது நாம் அறிந்த உண்மை. இப்ப கூறுங்ககள் 


"எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" 

இருவரும் தமது நம்பிக்கைக்காக கொலை செய்யக் கூடியவர்கள். இருவருமே தமது சுய நலத்திற்க்காக தமது வித்தியாசங்களை ஒரு புறம் தள்ளியவர்கள், இருவருமே கொடூர வீரர்கள். 

இன்றைய நவீன உலகில், ஒரு உதாரணத்திற்கு இஸ்ரேலியர்களையும் பலஸ்தீனியர்களையும் எடுங்கள். "வெஸ்ட்  பாங்கில்" [மேற்குக் கரை பகுதியில்] ஒரு பகுதி நிலத்திற்காக வருடக்கணக்காக ஒரு மோதலில் இடுபட்டுள்ளார்கள். இருவருமே அந்த இடத்திற்கு தாமே உரிமை உடையவர்கள் என நம்புகிறார்கள். இருவருமே ஒரு கூர்மையான விரோதிகள். இரு பக்கத்திலும் உள்ள தீவீரவாதிகள் மிகவும் கொடூர தந்திரங்களை தமது இலக்கடைய பாவிக்கிறார்கள். என்றாலும் ஒரு சமாதானத்தின் அடிப்படையில் தமது வேறுபாடுகளை ஒரு பக்கம் ஒதுக்கி கொள்கையளவில் ஏற்றுள்ளார்கள். ஆகவே மீண்டும் உங்களை கேட்கிறேன் 


"எந்த பக்கம் நல்லது ?  எந்த பக்கம் தீயது ?"

மீண்டும் நாம் "பால் கடல்" பக்கம் போவோம். இது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு கூட்டு முயற்சி. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கி பாற்கடலை  கடைந்தனர். கயிறான பாம்பின் தலைப் பக்கம் பற்றி, வலிந்து கடைந்தோர் (கதைப்படி) அசுரர்கள். வாலைப் பிடித்து கடைந்தோர் தேவர்கள். தலைப்பக்கமாக அசுரர்கள் இருந்ததால் பாம்பின் விஷக்காற்று பட்டு, அசுரர்களின் சிவந்தமேனி கறுப்பாகி விடுகிறது. சிவந்தமேனி கறுப்பாகிற அளவிற்கு அசுரர்கள் கடுமையாக உழைத்து பொருட்களை உருவாக்கு கிறார்கள். அப்போது பாற்கடலை கடைய, கடைய காமதேனு, கற்பக விருட்சம், உலக அழகியான லக்ஷ்மி என்று ஒவ் வொன்றாக பாற்கடலில் இருந்து வெளியே வருகிறது. அவை எதற்குமே அசுரர்கள் ஆசைப்படவில்லை. எல்லா வற்றையும் தேவர்களே எடுத்துக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வருகிறது. சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்திற்கு மட்டுமே அசுரர்கள் ஆசைப்பட்டார்கள். அதைக் கூட முழுதாக தமக்கே வேண்டு மென அசுரர்கள் கேட்கவில்லை. தங்களுக்கும் கொஞ்சம் அமுதம் தரப்பட வேண்டு மென்று தான் கேட்டார்கள்.  

இடையில் வந்த பொருளையெல்லாம் தம தாக்கிக் கொண்ட  தேவர்கள், இறுதியிலும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அமுதம் அசுரருக்குத் தர மறுத்து விட்டனர். இதனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை ஏற்பட்டபோது, மோகினி வடிவத்தில் வந்த மகாவிஷ்ணு தேவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பது போலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள், மோகினியிடம் அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனை ஆமோதித்தனர். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாக உட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக் கொண்டே அவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள். மோகினியின் மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்தத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. மேனியெல்லாம் கருக கடுமையாக உழைத்து அசுரர்கள் பாற்கடலை கடைந்தது உயிர் வாழ உதவும் அமுதத்திற்காகத்தான். அதைக் கூட தராமல், தேவர்கள் மகாவிஷ்ணு உதவியுடன் ஏமாற்றி விட்டர்கள். 

ஏமாற்றுவது  மகாவிஷ்ணுவிற்கு கை வந்த கலை. இன்னும் ஒரு அவதாரத்தில் கடவுள் விஸ்ணு ராமனாக அனுமனின் சகோதரனை பின்னல் யுத்த தர்மத்திற்கு புறம்பாக கொலை செய்து அனுமனின் உதவியை பெற்றார். ஒரு தனிப்பட்ட உதவியை பெற, எப்படி கடவுள் இந்த கொடூர செயலை செய்தார் ? இந்த கடவுள் அவதாரமான ராமன் மேலும் மிகவும் ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை, தவம் செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே, பறித்து எடுத்தான். இப்ப ராமர் போல் ஒரு அரசன் இருந்தால் சூத்திரர்களின் கதி என்ன ?


 
பிராமண இந்து சாதி அமைப்பு, இந்தியாவின் அரசியல் அமைப்பால் ஒழிக்கப்பட்டாலும், தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியர்களின் கொடூரத் தாக்குதல் இன்னும் தொடர்கிறது. தை,17,2017 இல், ஆந்திரப் பிரதேசத் தலைநகர் ஹைதராபாதில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்து ஆய்வு மாணவர், ரோஹித் வேமுல தற்கொலை, அப்படியான  சூத்திரர்களின் கதியின் பிந்திய செய்தியாகும்.

சாதிக்கொள்கை, தமிழரின் சமயமான சைவ சித்தாந்தத்தின் கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக் கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள் .மாணிக்கவாசகர் தமது  திருத்தெள்ளேணத்தில் 

"ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!"

என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?. என கேள்வி கேட்கிறார். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. 

தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை / இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், 

‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) 

என்று வினவுகிறார். எனினும் காலப் போக்கில், ஆரியக் கலப்புக்குப் பின்னர், 

முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! 

திருமால்→ விஷ்ணு ஆனான்! 

சிவன்→ ருத்திரன் ஆனான்! 

கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்! 


உதாரணமாக சுத்த தமிழ்க் கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன் ... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இப்படி, தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள்வாங்கப்பட்டது. 

ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பன வற்றினை முலமாக, அடிப்படையாக, கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ, உயரமோ குட்டையோ, பணக்காரனோ ஏழையோ, எல்லோரிடமும் ஒரே தன்மை, நிலை பாட்டை உடையதாக இருக்க வேண்டும்.

எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக, ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப் படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தில்லை..........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் பதிவு மிக அருமை.

இத்துணை விடயங்களைக் கொள்ளாவிடினும், தங்கள் கருத்தோடு ஒட்டி வரும் ஒரு சிறிய பதிவினை முன்பு வேறு ஒரு சூழலில் முகநூலில் பதிந்திருக்கிறேன். அதன் இணைப்பு :

https://www.facebook.com/share/p/7KFQBj7Mvdat8jXr/?mibextid=oFDknk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.