Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மோடியும் கச்சதீவும்

மோடியும் கச்சதீவும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

   இந்தியா கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அது தொடர்பாக சர்ச்சை  கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.  அதுவும் பத்து வருடங்களாக பதவியில் இருந்துவரும் அவர் இதுகாலவரை எதுவும் பேசாமல் இருந்துவிட்டு தற்போது பிரச்சினையை கிளப்புவது கச்சதீவை மீண்டும் இந்தியா வசமாக்குவதற்காக அல்ல, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தனது பாரதிய ஜனதா கட்சிக்கு  தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெறுலாம்  என்ற எதிர்பார்ப்பிலேயே என்பதை  புரிந்துகொள்வதற்கு  அரசியல் ஞானம் தேவையில்லை.

  வடஇந்தியாவில் அமோகமான மக்கள் செல்வாக்குடைய தலைவராக இருந்துவரும் மோடி மூன்றாவது தடவையாகவும் பிரதமராக வருவார் என்று உறுதியாக  நம்பப்படுகிறது. அவ்வாறு நடந்தால் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பிரதமராக பதவிக்கு வருபவர் என்ற பெருமையை அவர் தனதாக்கிக்கொள்வார்.

ஆனால், அவரின் பாரதிய ஜனதா  தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக, சுமார் ஏழு தசாப்தங்களாக மாறி மாறி இரு பெரிய திராவிட இயக்கக் கட்சிகளின் ஆட்சியில் இருந்துவரும் தமிழ்நாட்டில் கணக்கில்  எடுக்கத்தக்க ஆதரவைப் பெறமுடியாமல் இருக்கிறது. இது அவருக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது.

   நீண்டகாலமாக கூட்டணி சேர்ந்து இயங்கிவரும் திராவிட முன்னேற்ற கழகத்தையும் காங்கிரஸ்  கட்சியையும் தேர்தல் பிரசாரங்களில் ஒருங்கே  தாக்குவதற்கு மோடியும் கட்சியும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில்  உணர்ச்சியைக் கிளறக்கூடிய கச்சதீவு பிரச்சினையை  பயன்படுத்த முனைந்து நிற்பதே தற்போதைய சர்ச்சைக்கு  காரணமாகும். 

  எதிர்க்கட்சியை தாக்குவதற்கு  மோடி கச்சதீவு பிரச்சினையை  பயன்படுத்துவது  இதுதான்  முதற்தடவை அல்ல. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையொன்றில் அவர் “தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கச்சதீவை இன்னொரு நாட்டுக்கு கொடுத்து விட்டார்கள். இந்திரா காந்தியின் தலைமைத்துவத்தின் கீழ்தான் அது நடந்தது….. அந்தத் தீவு பாரதமாதாவின் ஒரு பகுதியாக அல்லவா  இருந்தது? ” என்று  குறிப்பிட்டார்.

 அவரது அந்தப் பேச்சு  தற்போது மூண்டிருப்பதைப்  போன்று ஊடகங்களின் அதீத கவனிப்புடன் கூடியதாக பெரும் சர்ச்சையை உருவாக்கவில்லை. லோக்சபா தேர்தல் பிரசாரங்களின் சூடு இயல்பாகவே தற்போதைய சர்ச்சை மீது கவனத்தை பெரிதும் திருப்பியிருக்கிறது.

   கச்சதீவை முன்னாள்  இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கைக்கு கையளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் விபரங்களை அறிவதற்கு பாரதிய ஜனதாவின் தமிழ்நாடு தலைவர் குப்புசாமி  அண்ணாமலை தகவலைப் பெறுவதற்கான உரிமையின்( Right to Information)  அடிப்படையில் வெளியுறவு அமைச்சை நாடியது ஒன்று தற்செயலானது அல்ல. 

  “இந்திய அரசாங்கம் 1974 ஆம் ஆண்டில் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது. அந்தத் தீவு பாரதத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களும் விளங்கிக் கொள்வார்கள். ஆயிரக்கக்கான வருடங்களாக தமிழ்நாட்டு மீனவர்கள் எந்தவித இடையூறும் இன்றி  மீன்பிடிக்கும் உரிமையைக் கொண்டிருந்த கச்சதீவு  தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அது சூட்சுமமான முறையில் இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. ஏன் அவ்வாறு நடந்தது? அதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா? ஆர்வமிகுதி காரணமாக அந்த காலப்பகுதியின் முக்கியமான ஆவணங்களை தந்துதவுமாறு நான் வெளியுறவு அமைச்சை அணுகினேன்” என்று அண்ணாமலை கூறினார்.

பாரதிய ஜனதா உயர்மட்டத்தின் முழுமையான அனுசரணையுடன்தான் அண்ணாமலை தகவலைக் கோரினார் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன்  வெளியுறவு அமைச்சிடம் இருந்து ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதும் அவர் தனக்கு நெருக்கமான ஊடகங்களுடன் அவற்றைப்  பகிர்ந்துகொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுத் தொடர்பாடலுக்கு பொறுப்பான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறு பாரதிய ஜனதா செய்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.

  “தமிழ்நாட்டில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு தந்திரோபாயமாகவே பாரதிய ஜனதா தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி வெளியுறவு அமைச்சிடம் கச்சதீவு விவகாரம் தொடர்பில் விபரங்களைப் பெற விண்ணப்பித்தது. மக்கள் எதிர்நோக்கும் எரியும்  பிரச்சினைகள் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு செய்யப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான  விண்ணப்பங்கள் அலட்சியம் செய்யப்பட்டு  அல்லது நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விண்ணப்பம் அதிமுக்கியத்துவம் கொடுத்துக்  கவனிக்கப்பட்டு பதில் வழங்கப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதாவின் தமிழ்நாட்டு தலைவர் தனக்கு கிடைத்த பதிலை மிகவும் வசதியாகவே தனக்கு  நெருக்கமான ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டார். பிரதமர் மோடி உடனடியாகவே அதைப் பெரிதுபடுத்திச் சர்ச்சையாக்கிவிட்டார். இது கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறும் ஆட்டநிர்ணயச்சதி (Match fixing ) போன்று இருக்கிறது ” என்று ரமேஷ் கூறினார். 

 அண்ணாமலைக்கு வெளியுறவு அமைச்சிடம் இருந்து கிடைத்த ஆவணங்கள் தொடர்பில்  கடந்தவாரம் ரைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையில் வெளியான விரிவான செய்தியை அடுத்தே பிரதமர் மோடி முதலில் ‘ எக்ஸ் ‘ சமூக வலைத்தளத்தில் பதிவைச் செய்தார்.

  இந்திரா காந்தி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தார்; இலங்கையுடன் இந்திய அரசாங்கம் அன்று நடத்திய பேச்சுவார்த்தைகள்  தொடர்பில்  தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் மு. கருணாநிதிக்கு முழுமையாக தெரியப்படுத்தப்பட்டது ; கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்படுவதை வெளிப்படையாக கருணாநிதி எதிர்த்தாலும், முறைமுகமாக மத்திய அரசாங்கத்துடன் இணங்கிப்போனார் என்பனவே வெளியுறவு அமைச்சு வழங்கிய பதிலைப் பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாகும்.

  மேலும் காங்கிரஸ் ஒருபோதுமே இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பில்  அக்கறையுடன் செயற்பட்டதில்லை என்ற தனது  குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக பிரதமர்  ஜவஹர்லால்  நேரு கச்சதீவு குறித்து தெரிவித்த கருத்தையும் மோடி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

 ” அந்த சிறியதொரு தீவுக்கு எந்த வகையிலும் நான் முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. அதன் மீதான எமது உரிமைக் கோரிக்கையை கைவிடுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. இந்த விவகாரம் காலவரையறையின்றி நீடிப்பதையும் பாராளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்படுவதையும் நான் விரும்பவில்லை ”  என்று 1961 மே 10  நேரு குறிப்பிட்டதாக  வெளியுறவு அமைச்சின் பதிலில் தெரிவிக்கப் பட்டிருப்பதாக  ரைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தி கூறுகிறது.

” புதிய தகவல்கள்  மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ் எவ்வாறு கச்சதீவை விட்டுக் கொடுத்தது என்பதை வெளிக்காட்டுகின்றன. அவை அதிர்ச்சியை தருகின்றன. திடுக்கிட வைக்கின்றன. இது ஒவ்வொரு இந்தியனையும் ஆத்திரமடையச் செய்திருக்கிறது. காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்பமுடியாது என்ற மக்களின் எண்ணத்தை இது மீண்டும் உறுதிப்படு்த்துகிறது. இந்தியாவின் ஐக்கியம், ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் முறையிலேயே 75 வருடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் செயற்பட்டு வந்திருக்கிறது” என்று மார்ச் 31 மோடி ‘ எக்ஸ் ‘ பதிவில் கூறினார்.

  ஏப்ரில் முதலாம் திகதி செய்த இரண்டாவது பதிவில் ரைம்ஸ் ஒஃப் இந்தியாவின் இரண்டாவது செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொண்ட இந்திய பிரதமர், ஆரவாரப் பேச்சைத் தவிர திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கு  எதையும் செய்யவில்லை. கச்சதீவு விவகாரம் தொடர்பில் வெளியாகும் புதிய விபரங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை வேடத்தை முற்றுமுழுதாக அம்பலப்படுத்துகின்றன. காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் குடும்பக்கட்சிகள். அவற்றுக்கு தங்களது சொந்த புதல்வர்கள், புதல்விகளின் முனனேற்றத்தில் மாத்திரமே அக்கறை. குடும்பங்களின் மேம்பாட்டுக்கே அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

 அதே தினம்  இந்த பிரச்சினை குறித்து புதுடில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கச்சதீவு விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது என்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் கச்சதீவு இந்திய பிராந்தியத்திற்குள் வரப்போவதில்லை என்பதை முதலமைச்சர் கருணாநிதி நன்கு அறிந்திருந்தார் என்றும் குறிப்பிட்டார். 

  ‘ இந்திரா காந்தி அரசாங்கம் இலங்கையுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் அவ்வப்போது  கருணாநிதிக்கு கூறப்பட்டுவந்தன. 1973 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஒரு வருடம் கழித்து 1974 ஜூனில் முதலமைச்சர் கருணாநிதிக்கு வெளியுறவுச் செயலாளர் கெவால் சிங்  கச்சதீவுக்கு உரிமைகோருவதைக் கைவிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து கூறினார்.

 ‘ அந்த தீர்மானத்தை இரு வருடங்களுக்கு தாமதிக்க முடியாதா என்று கெவால்சிங்கிடம் கேட்ட கருணாநிதி அரசியல் காரணங்களுக்காக  உடன்படிக்கைக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை தன்னால் எடுக்கமுடியாது.  ஆனால் பெரிய எதிர்ப்புகள் கிளம்பாமல் பார்த்துக்கொள்ள முயற்சிப்பதாக கூறினார்’ என்று வெளியுறவு அமைச்சின் ஆவணங்களில் கூறப்பட்டிருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

  உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வது குறித்து புதுடில்லி சிந்திக்கிறதா? இலங்கையுடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா ? என்று செய்தியாளர்கள் ஜெய்சங்கரிடம் திரும்பத்திரும்ப கேட்டபோது அவர், ” அதுவல்ல முக்கியமான பிரச்சினை. கச்சதீவு விவகாரம்  நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது ” என்று கூறி  நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொண்டார். ஆனால், கச்சதீவு பிரச்சினை  அரை நூற்றாண்டுக்கு முன்னர் தீர்த்துவைக்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுவதை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்.

  கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி விட்டுக் கொடுத்ததன் விளைவாகவே இந்திய மீனவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது என்பதை வலியுறுத்துவதிலேயே ஜெய்சங்கர் கூடுதல் அக்கறை காட்டினர். “கடந்த இருபது வருடங்களில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையினால் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். 1175 இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதுவே நாம் ஆராய்கின்ற பிரச்சினையின் பின்னணி. காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் கச்சதீவு பிரச்சினையில் தங்களுக்கு பொறுப்பு எதுவும் இல்லை என்பது போன்று நடந்து கொள்கின்றன” என்று அவர் கூறினார். 

   பாரதிய ஜனதாவின் பல முக்கிய தலைவர்களும் இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியையும் திராவிட முன்னேற்றக் கழகத்யைும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இது இலங்கைக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு  உறவுகளைப் பாதிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்ட பிரச்சினை என்பதைப் பற்றிய கரிசனை எதுவும் இல்லாமல் வெறுமனே தேர்தல் அரசியல் நலன்களை நோக்கமாகக் கொண்ட கருத்துக்களாகவே அமைந்திருக்கின்றன.

 ” பந்து இப்போது மத்திய அரசாங்கத்தின் பக்கத்திலேயே இருக்கிறது. சாத்தியமான சகல தீர்வுகள் குறித்தும் பரிசீலிக்கப்படும். தமிழ்  மீனவர்களைப் பாதுகாப்பது மாத்திரமே பாரதிய ஜனதாவின் நோக்கம். பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சரும் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள். கச்சதீவு இலங்கைக்கு சட்டவிரோதமாகவே கையளிக்கப்பட்டது. அந்த தீவை மீட்டெடுப்பதற்கு சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் எடுக்கின்றது” என்று கடந்த வாரம் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மோடி கிளப்பியிருக்கும் சர்ச்சைக்கு ‘ எக்ஸ் ‘ சமூக வலைத்தளத்தில் உடனடியாகவே  பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் அவர்களே, உங்களது தவறான ஆட்சியின் பத்தாவது வருடத்தில் தீடீரென்று உறக்கத்தில் இருந்து எழுந்தவர் போன்று இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளைக் கிளப்புகிறீர்கள். தேர்தல் தான் அதற்கு காரணம் போலும். என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் தடுமாற்றத்தில் இருப்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

  மோடி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷுடன் செய்துகொண்ட நில எல்லை உடன்படிக்கையுடன் கச்சதீவு உடன்படிக்கையை ஒப்பிட்ட கார்கே “உங்களது அரசாங்கத்தின் கீழ் ஒரு நட்புறவு அடையாளமாக இந்தியாவின் 111 நிலப்பகுதிகளை விட்டுக்கொடுத்து பங்களாதேஷிடமிருந்து 55 நிலப்பகுதிகளை மாத்திரம் இந்தியாவுடன் சேர்த்துக்கொண்டீர்கள். அப்போது நீங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட எல்லை உடன்படிக்கை நிலப்பகுதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு செயல் அல்ல,  இதயங்களின் சந்திப்பு பற்றியது என்று கூறினீர்கள். அதே போன்றே கச்சதீவு உடன்படிக்கையும் இன்னொரு அயல்நாடான இலங்கையுடன் நட்புறவின் அடிப்படையில் செய்து கொள்ளப்பட்டதேயாகும்” என்று மோடிக்கு சுட்டிக்காட்டினார்.

  “தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவிருப்பதற்கு முன்னதாக உணர்ச்சிபூர்வமான பிரச்சினையை கிளப்பியிருக்கிறீர்கள். ஆனால், கச்சதீவு தொடர்பான வழக்கில் 2014 ஆம் ஆண்டில் உங்களது சொந்த அரசாங்கத்தின் சட்டமா அதிபர் ஸ்ரீ முகுல் றோராக்கி உயர்நீதிமன்றத்தில் கூறியதை மறந்துவிட்டீர்களா? ‘ 1974 உடன்படிக்கையின் மூலமே கச்சதீவு இலங்கை வசமானது…. அதை எவ்வாறு திருப்பியெடுக்கமுடியும்?  கச்சதீவை மீளப் பெறவிரும்பினால், நீங்கள் போருக்கு போகவேண்டியிருக்கும் ‘ என்று அவர் கூறியிருந்தார். பிரதமர் அவர்களே கச்சதீவை மீட்டெடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண உங்களது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கையை எடுத்ததா என்பதை நீங்கள் கூறவேண்டும்” என்று ‘ எக்ஸ் ‘ மூலமாக மோடியை நோக்கி கேட்டிருக்கிறார் கார்கே.

  காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து வருகிறார்கள். ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற நேரு — காந்தி குடும்ப தலைவர்கள் இதுவரையில் எந்த கருத்தையும் கூறவில்லை.

 கச்சதீவு உடன்படிக்கையை நியாயப்படுத்திய ஜெய்ராம் ரமேஷ், “கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாக மாறிய அதே 1974 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி —  சிறிமா பண்டாரநாயக்க உடன்படிக்கை இலங்கையில் இருந்து 6 இலட்சம் தமிழ் மக்கள் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதித்தது. அந்த நடவடிக்கை மூலமாக பிரதமர் இந்திரா காந்தி அதுகாலவரை நாடற்றவர்களாக இருந்த 6 இலட்சம் மக்களின் மனித உரிமைகளையும் கண்ணியத்தையும் காப்பாற்றினார் ” என்று கூறினார்.

  மோடி அரசாங்கம் பங்களாதேஷுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக நில எல்லை சட்டத்தைக் கொண்டுவந்தபோது அந்த உடன்படிக்கையின் விளைவாக இந்தியா 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை  இழக்கப்போகின்ற போதிலும், மனிதாபிமான தேவையை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் சிறுபிள்ளைத் தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஆதரவை வழங்கியது என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.

  இலங்கை தரப்பின் பிரதிபலிப்பு :

  கச்சதீவு பிரச்சினை பாரதிய ஜனதாவினால் தேர்தல் பிரசாரப் பொருளாக்கப்பட்டு  விட்ட நிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் முக்கிய கவனத்துக் குரியதாகும். 

  மோடி சர்ச்சையைக் கிளப்பி ஒரு வாரகாலம் கடந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான உத்தியோகபூர்வ பிரதிபலிப்பையும் வெளியிடாமல் மிகுந்த இராஜதந்திர விவேகத்துடன்  நடந்துகொள்கிறது. வெளியுறவு அமைச்சர் அலி சப்பரி, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்விநியோக அமைச்சர் ஜீவன் தொண்டமான் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தனவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இந்தியாவில் தேர்தல் நடக்கிறது என்று மாத்திரம் பதிலளித்ததா செய்தி வெளியானது.

  ஆனால், இரு நாடுகளினதும் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்கள் மூலமாக வெளியிட்ட கருத்துக்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

  ” லோக்சபா தேர்தலை முன்னிட்டு பிரதானமாக  உள்நாட்டுப் பாவனையை நோக்காகக்கொண்டு இந்தியாவில் அரசியல் விவாதம் மூண்டிருக்கின்ற போதிலும், கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த உடன்படிக்கையை மாற்றியமைக்கும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை” என்று டெயிலி மிறர் அதன் ஆசிரிய தலையங்கத்தில் கூறியிருக்கிறது.

  இந்திய உயர்மட்ட தலைவர்களை சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாக அன்றி அறிவார்ந்த அரசியல்ஞானிகளாகப் பார்க்கவே இலங்கையர்கள் விரும்புகிறார்கள். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட இராஜதந்திரப் பக்குவத்தை கைவிட்டு தமிழ்நாட்டில் சொற்ப வாக்குகளுக்காக பிரதமர் மோடியுடன் கைகோர்த்து நிற்பது பெரும் ஏமாற்றத்தை தருகிறது என்று டெயிலி மிறர் எழுதியிருக்கிறது.

 ” 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு குறிப்பாக கொவிட்  பெருந்தொற்று / பொருளாதார நெருக்கடி காலப் பகுதிகளில் இலங்கையில் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கு இந்தியா அயராது எடுத்துவந்த முயற்சிகளை பாதிக்கக்கூடிய ஆபத்தை கச்சதீவுச் சர்ச்சை கொண்டிருக்கிறது. மாலைதீவில் இந்தியா கண்டிருக்கும் பின்னடைவுக்கு பிறகு தேர்தல் நலனுக்காக குறுகிய நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த பிரசாரம் அனாவசியமானது. பாக்கு நீரிணைக்கு இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கு இது உதவாது ” என்று த மோர்ணிங் பத்திரிகை எழுதியிருக்கிறது.

  பாக்குநீரிணைக்கு இடையில் நல்லெண்ண உறவுகளில் ஏற்படக்கூடிய பாதிப்பை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதற்கு பல வல்லாதிக்க நாடுகள் நாட்டம் காட்டும் என்பது இந்திய அரசாங்கத்துக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

 ” தமிழ்நாடடில் உணர்ச்சிபூர்வமானதாக இருந்துவரும் ஒரு பிரச்சினையை இந்தியப் பிரதமர் கிளப்பியிருப்பது வேறு பிராந்தியங்களில் நண்பர்களை தேடுவது குறித்து சிந்திக்க இலங்கையை தூண்டுவதற்கு போதுமானதாகும். இந்தியாவில் அதிகார உயர்பீடத்தில் உள்ளவர்கள் இலங்கையின் பிராந்தியத்துக்கு தொடர்ச்சியாக உரிமை கோரினால் வேறு எங்காவது பாதுகாப்பு உத்தரவாதத்தை தேடவேண்டிய நிர்பந்தம் இலங்கைக்கு ஏற்படும் ” என்று ஃபைனான்சியல் ரைம்ஸ் ஆசிரிய தலையங்கத்தில் எழுதியிருக்கிறது.

 இந்திய பத்திரிகைகள்

  ” பிரதமரின் கருத்துக்கள் துரதிர்ஷ்டவசமானவை.குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கூறப்படுபவை.பல வருடங்களுக்கு முன்னர் தீர்க்கப்பட்டுவிட்ட ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறுவது மிகவும் தவறானது. விவேகமானதல்ல. மக்களின் உணர்ச்சிகளைக் கிளறக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களைக் கூறும்போது பிரதமர் பெருமளவுக்கு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் ” என்று டெக்கான் ஹெரால்ட் கூறியிருக்கிறது.

  இலங்கையுடனான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சினையை அரசியல் அனுகூலத்துக்கு பயன்படுத்த முனைந்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி ஆரோக்கியமற்ற ஒரு போக்கை தொடக்கி வைத்திருக்கிறார் என்று  ‘ த இந்து ‘ பத்திரிகை குறிப்பிட்ட அதேவேளை, அரசியல் எதிரிகளுக்கு மேலாக புள்ளிகளை எடுப்பதற்கு பாரதிய ஜனதா தலைமைத்துவம் கச்சதீவு பிரச்சினையை கிளப்புவது பெரும் குழப்பத்தை தருகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியிருக்கிறது.

  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்களை மறுதலித்திருக்கும் இந்துஸ்தான் ரைம்ஸ் இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பிரச்சினைக்கும் கச்சதீவுக்கும் தொடர்பு கிடையாது என்று கூறியிருக்கிறது.

  பழைய பிரச்சினைகளை கிளறாமல் இருப்பதில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். தேர்தல் அனுகூலத்துக்காக நட்பு நாடொன்றுடனான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. பெய்ஜங் அவதானித்துக் கொண்டிருக்கிறது  என்பதை மறந்துவிடக் கூடாது என்று மோடிக்கும் ஜெய்சங்கருக்கும் அறிவுரை கூறுவது போன்று இந்துஸ்தான் ரைம்ஸ் எழுதியிருக்கிறது.

   இந்திய இராஜதந்திரிகள்

 2004 — 2006 காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த நிருபமா ராவ் கருத்து தெரிவிக்கையில் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் கச்சதீவு தொடர்பில் கிளம்புகின்ற சர்ச்சை தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான தாக இருந்த பழைய பிரச்சினை மீண்டும் கிளப்பப்படுவதாக இலங்கையில் அர்த்தப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

 நீண்டகாலத்துக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட ஒரு சர்வதேச உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கு  இந்தியா விரும்புகிறதா? அவ்வாறு செய்வதன் மூலம் சர்வதேச அரசியலில் வழமைக்கு மாறான முன்னுதாரணம் ஒன்றை வகுக்க இந்தியா விரும்புகிறதா? என்று வெளியுறவுச் செயலாளராகவும் பதவியில் இருந்த நிருபமா ராவ் கேள்வியெழும்பினார்.

 இலங்கையில் இருந்த இன்னொரு இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் காந்தா ( 2009 — 2013 ) கச்சதீவு பிரச்சினை தற்போது கிளப்பப்பட்டிருப்பது இந்தியாவில் ஒரு தேர்தல் பிரச்சினை என்பதை கொழும்பு விளங்கிக்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

  மீட்புக்கோரிக்கை 

 தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருக்கின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ( 2008) திராவிட முன்னேற்றக்கழகமும் (2013 ) இந்த விவகாரம் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றத்தையும் நாடின. ஆனால், மத்திய அரசாங்கங்கள் உடன்படிக்கையை மாற்றியமைக்க முடியாது என்ற நிலைப்பாட்டையே உறுதியாக அறிவித்தன. இன்றும் புதிய தலைமைத்துவங்களின் கீழும் திராவிடக் கட்சிகள் மீட்புக் கோரிக்கையை வலியுறுத்திய வண்ணமே இருக்கின்றன.

   தற்போது பிரதமர் மோடியும் பாரதிய ஜனதாவும் தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெரிய வாக்கு வங்கியாக விளங்கும் மீனவர் சமூகத்தை இலக்கு வைத்து அரசியல் அனுகூலத்துக்காக திட்டமிட்டு இந்த பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இந்த பிரசாரத்திற்கு எடுபடக்கூடிய சாத்தியமில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையை மாத்திரம் முன்னிலைப்படுத்தி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை தேர்தல்களில் அந்த மாநில மக்கள் ஒருபோதும் பெரிதாக ஆதரித்ததில்லை. அதே கதியே கச்சதீவுப் பிரச்சினையை கிளப்புவதன் மூலமாக வாக்குகளைப் பெறலாம் என்ற பாரதிய ஜனதாவின் எதிர்பார்ப்புக்கும் ஏற்படும்.

 இந்திரா காந்தி காலத்தில்  கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தமைக்காக   காங்கிரஸை மோடி குற்றஞ்சாட்டுகிறாரே தவிர தீவை மீட்டெடுக்கப்  போவதாகக் கூறவில்லையே!

 

 

https://arangamnews.com/?p=10609



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.