Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"வறுமையின் நிறம் சிவப்பு"
 
 
கொழும்பு, காலி முக திடலில், வறுமையை ஒழிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்து ஐம்பது நாள் தாண்டியும் மக்களின் போராட்டம் முடிவற்று இன்னும் தொடர்கிறது. சிவப்பு கொடிகள், கருப்பு கொடிகள் பல அங்கு மக்கள் ஏந்தி அமைதியான ஆர்ப்பாட்டம் (Demonstration) அல்லது போராட்டம் (Public protest) செய்கிறார்கள். கருப்பு கொடி துக்கத்தை குறிக்கும் என்றாலும், சிவப்பு கொடி எதற்க்காக ?. கூட்டத்தில் நானும் ஒருவனாக இன்றுதான் இணைந்தேன். என் மனதில் முதல் தோன்றியது அது தான். ஏன் சிவப்பு ?
 
எல்லோரையும் பார்க்கிறேன், அவர்களின் வறுமை எல்லையை தாண்டி இருப்பதை அவர்களின் கண் காட்டுகிறது. கோப ஆவேசத்தில் அது சிவந்து இருப்பதை காண்கிறேன்! மா சே துங் [Mao Zedong] எழுதிய [கம்யூனிசம்] பொதுவுடைமை புத்தகத்தினை சிவத்த புத்தகம் ["Red Book"] என்றும் அழைப்பது வழமை. இப்ப எனக்கு ஏன் வறுமையின் நிறம் சிவப்பு என்பது தெளிவாக உணர முடிந்தது.
 
நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு,படுக்கையில் சரிந்து இருந்து நேரத்தை பார்த்தேன். அது எட்டு மணியை காட்டியது. நான் இப்ப படுத்தால், நேரத்துடன் எழும்பிவிடுவேன். இன்னும் இரண்டு மணித்தியாலம் ஆவது பொறுத்து இருப்பது நல்லது. ஆனால், அதுவரை எதாவது வாசிக்கலாம் என்றால், என்னிடம் இருப்பதோ பழைய பழைய புத்தகங்களே, அதை திருப்பி திருப்பி எத்தனை தரம் வாசிப்பது. வறுமையில் இருப்பது உண்மையில் சலிப்பு தான். இதை மனித வாழ்வில் ஒரு மலட்டுத்தன்மை என்று கூட சொல்லலாம். சாப்பிடவே போராடிக்கொண்டு இருக்கும் நான், எப்படி புது புத்தகம் வாங்குவேன் ?
 
கொஞ்ச நேரம் வெளியே, காசு இல்லது வாங்கக் கூடிய காற்றை வாங்கப் புறப்பட்டேன். என் மனம் என்னைவிட பல மடங்கு வேகமாக, ஆனால் பின்னோக்கி சென்றது. அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலத்திற்குள் புகுந்துவிட்டது. அங்கே பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவரின் புறநானூறு 160 , 164 இல் இருந்து சில அடிகளை அது முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.
 
"உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று
இல்லுணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்ளில் வறுங்கலம் திறந்துஅழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும்
25 வினவல் ஆனா ளாகி நனவின்"
 
'என் மகன் இல்லத்தை மறந்து விளையாடச் செல்வதும், பசி தாங்க முடியாமல் இல்லம் திரும்பி, கூழ் இருக்கும் பானையைத் திறந்து பார்ப்பதும், அதில் கூழ் இல்லாமையால் அழுவதும், அதனைப் பார்த்த என் மனைவி ‘அழுதால் புலி வந்துவிடும், அழாதே’ என்று அச்சுறுத்துவதும், பின் நிலாவை வேடிக்கை காட்டித் தேற்றுவதும் என் வீட்டில் வாடிக்கையாகப் போய்விட்டது' என்று அவன் புறநானூறு 160 இல், மன்னன் குமணன் இடம் கூறுவதும், அதை தொடர்ந்து
 
"ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!"
 
'சமைத்தலை முற்றிலும் மறந்த உயர்ந்த பக்கங்களையுடைய அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. உடல் மெலிந்து வருந்தி, பால் இல்லாததால் தோலோடு சுருங்கித் துளை மூடிய பயனில்லாத வற்றிய முலையச் சுவைத்து அழும் என் குழந்தையின் முகத்தை நோக்கி, நீர் மல்கிய ஈரம் படிந்த இமைகளைக்கொண்ட கண்களுடைய என் மனைவியின் துன்பத்தை நினைத்து உன்னை [குமணன்] நாடி வந்தேன்' என்று புறநானூறு 164 இல் கூறுவதும் வறுமையின் நிறம் எவ்வளவு சிவப்பு என்பதை காட்டியது.
 
ஆமாம், இப்ப நான் வறுமையில் இருந்தாலும், ஒரு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன், இதைவிட கொடூர நிலையில், ஒரு நாளைக்கு ஒரு கஞ்சிக்கு - உயிரை பிடித்து வாழ - முள்ளிவாய்க்காலில் வரிசையில் நின்றதை நான் மறக்கவில்லை. அந்த அனுபவம் தான் என்னை இன்னும் வாழவைக்க உறுதி தந்துகொண்டு இருக்கிறது.
 
உயிர்கள் எல்லாம் தாம் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை உணவு. பாதுகாப்புக்கு உறைவிடம். அவ் உணவிற்காக நொடி பொழுதும் பல போராட்டங்களை அன்று முதல் சந்தித்துக் கொண்டே வந்துள்ளது. பொதுநிலையில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தது வரை மனிதனுக்குள் முரண்பாடுகள் இருக்கவில்லை. வறுமை சிவப்பாகவும் இருந்ததில்லை. சேமிக்க தொடங்கிய பின்னரே தோன்ற ஆரம்பித்தன இந்த முரண்பாடுகள். இம்முரண்பாடுகளே வர்க்கமாய் நிலைபெற்று இன்று வரை இயற்கைச் சமூகத்தை செயற்கையாக்கியிருக்கிறது. ஆமாம் இந்த நவீன உலகிலும், உண்ண உணவின்றி, தவிக்கும் என்னைப் போல் பலரை காணலாம். அன்று அரசனிடம் முறையிட்டனர். இன்று அரசிடம் முறையிடுகின்றனர், அது தான் வித்தியாசம்.
 
அடுத்தநாள் காலை, பத்து மணிக்கு பிறகு நான் எழும்பினேன், பசி குறைந்த பாடு இல்லை. நான் எடுக்கும் ஓய்வூதியம், இன்றைய விலைவாசி உயர்வில் கட்டுப்படி ஆகாது. அதுமட்டும் அல்ல, எல்லா பொருட்களுக்கும் நீண்ட வரிசையிலும் நிற்க வேண்டும். எதோ என்னிடம் இருந்த தேயிலை தூளில், மிக கொஞ்சமாக எடுத்து ஒரு தேநீர் ஆக்கி , என்னிடம் இருந்த நாளான [stale] பானில் இரு துண்டுகளை அதில் தோய்த்து என் வயிற்றை சிறிது நிரப்பினேன். ஆனால் அது நிறைந்த பாடாக இல்லை. எனவே என்னிடம் இருந்த ஒரே ஒரு முட்டையையும், எண்ணெய் இல்லாததால், எண்ணெய் இல்லாமலே பொரித்தேன். என்றாலும் முட்டையை என்னிடம் மிகுதியாக இருந்த அதிக மிளகாய் தூளில் வறட்டி எடுத்தேன். ஏன் என்றால் இந்த உறைப்பு என் பசியை அடக்கும் என நான் நம்பியதால், எனக்கு வேறு வழி தெரியவில்லை.
 
யாரோ என் கதவின் ஊடாக எதோ போடுவது தெரிந்தது. தட்டுத்தடுமாறி எழும்பி, அது என்ன என்று பார்த்தேன், அவை துண்டு பிரசுரங்கள் மற்றும் பிரச்சாரத் துண்டுகள். என் அடுத்த ஓய்வூதியத்திற்கு இன்னும் நாலு நாள் இருக்கு. அதன் பின்புதான் ஏதாவது கொஞ்சம் வயிற்று பசிக்கும் அறிவு பசிக்கும் வாங்கலாம், ஆகவே இப்ப கொஞ்சம் வயிற்றுப பசி ஆறி இருப்பதால், அறிவு பசிக்கு அந்த இலவச துண்டுகளை ஒவ்வொன்றாக வாசிக்க தொடங்கினேன்.
 
சிவத்த கருத்த கொடிகளுடன் தமது ஐம்பது நாள் போராட்டம் பற்றியும், மற்றும் இதுவரை இணையாதவர்களை இணையும் படியும் அழைப்பு இருந்தது. 1917 இல் ஏற்பட்ட, சமூக மற்றும் பொருளாதார மாற்றஙகள் வேண்டி, உருசியப் மக்கள் செய்த புரட்சி ஞாபகம் வந்தது. அந்த புரடசிக்கு அடையாளமாக சிவப்பு கொடி இருந்தது. ஆகவே சிவப்பு கட்டாயம் வறிய [ஏழை] மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் சின்னம் என்பதில் உறுதியானேன். நானும் அதில் ஒருவனே என்ற உணர்வு என்னை அங்கு போய் சேர தூண்டியது.
 
என்றாலும் கொஞ்சம் மனதில் சஞ்சலமும் தவிப்பும் தோன்றியது. நாம் ஒரு நேர கஞ்சிக்காக, குண்டுகளுக்கிடையில், உயிரையும் கையில் பிடித்து காத்திருந்த தருவாயில் கூட, வெடி கொளுத்தி கொண்டாடியவர்களே இவர்கள். என்றாலும் மன்னித்து மறந்துவிடு என்ற எம் பண்பாடும் நினைவுக்கு வந்தது. எப்படியாகினும் நாம் முன்னைய செயலை மறக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும் போல் தோன்றியது.
 
கணவன், மனைவி இருவருக்கும் இடையே நிகழ்ந்த ஓர் உரையாடலில், "நான் செய்த தவறை மன்னித்து, மறந்துவிட்டதாகச் சொல்கிறாய். பின், ஏன் மீண்டும், மீண்டும் அதைப் பற்றிப் பேசுகிறாய்?" என்று கணவன் தன் மனைவியிடம் கேட்கிறார். அதற்கு, மனைவி, "நான் மறந்து, மன்னித்துவிட்டேன். ஆனால், நான் மறந்துவிட்டேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், உங்களுக்கு அதை நினைவுபடுத்துகிறேன்" என்று பதில் சொல்கிறார். அப்படித்தான் என் நிலையும் இருந்தது.
 
இப்ப நான் அவர்களில் ஒருவனாக, காலிமுகத்திடலில் சிவத்த கொடியுடன் "வறுமையின் நிறம் சிவப்பு" என்று, அந்த வறுமைக்கு சாதி பேதம், இனத்துவேசம், மத வேறுபாடு ஒன்றுமே இல்லை என்று, அரசியலுக்கு அப்பாற் பட்டு, இன்று உணர்ந்து நிற்கும் இளம் தலைமுறையுடன், தாத்தாவாக நானும் இணைந்துவிட்டேன்!
 
 
"வாருங்கள், வந்து கை கொடுங்கள்
உரிமை இழந்து பல ஆண்டாச்சு ...
சொல்லுங்கள், நீதியான நல்ல தீர்வுகளை
வரிசை குறைத்து அப்பாவிகள் வாழ ...
தாருங்கள், கவலை தீர்க்கும் முடிவுகளை
எல்லோரையும் சரி சமமாக மதிக்க ...
கூடுங்கள், ஒன்றாய் குரல் எழுப்புங்கள்
கொதித்து எழுந்த மக்கள் கேட்கிறார்கள் ... "
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
287344222_10221166254968749_1735153041608774595_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=UkBeDIiI4s4Ab65tH-H&_nc_oc=Adj_X5MVQA_5bl9jIcwG7PIlEpGNhLshw92MGXelhl526WDYOcvqyMxiQl2kzdYWUpvb2q3YREjqB3wbXtryQtZE&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBEuOiyn22ARMbPkgPve1e-DprkGykwvwHS6IHnUn4DTg&oe=6621F83D  287188336_10221166254888747_8516474758046253073_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nPPlsR1YtUAAb6gDeT6&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCEf82U5WhgJrfVqdtWfwS54S64C5mV6YGyNmj1ohuxRw&oe=6621FD62
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.