Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இராமன் வில் - நெற்கொழு தாசன்

 

அவன் சாவோடும் போரோடும் வளர்ந்த குழந்தை. இப்போது எல்லாம் அழிவுற்றதான ஒரு தனியன்.  எறும்பைப் போல,  இலையானைப் போலவாவது தனக்குமொரு  வாழ்க்கை   இருந்துவிடாதாவென எண்ணுகின்ற போதெல்லாம் தனது பெயரைத்தான்  நினைத்துக்கொள்வான். பார்க்கும், பழகும்  அனைவருக்கும் அவன் எல்லாவற்றாலும் விடுதலை பெற்றவொரு  சாமானியன்.  விடுதலை என்பதன் அர்த்தம் உள்ளங்கை ரேகைபோல ஆளுக்காள் மாறுபட்டாலும்  விடுதலையில்தான் எல்லாமுமிருக்கிறது  என்பவர்களுக்கு, தனது பெயரே விடுதலை என்பதுதான்  என்பதை,  விளங்கவைக்கவே தன் கதையை சொல்லுவான். அந்தக் கதை கருப்பிகுளத்திலிருந்து ஆரம்பிக்கும். 

"இராமன் வில்லு காட்டுகிறேன் வா" என்று மதுரா அவனது கையைப் பிடித்து அழைத்துச்சென்று கருப்பி குளக்கட்டில் இருத்தி வைத்திருந்த, கருமேகங்கள் சூழ்ந்த அந்த மாலைப்பொழுதை நினைவிலிருந்து மெதுவாக மீட்கத் தொடங்கும்போதே ஆக்காட்டி அலைவுற்றுக் கத்தும் ஓசை அவனது ஒற்றைக் காதுக்குள் கேட்கத் தொடங்கும். அந்த ஓசை தலையைப் பிளந்து நெருப்புக்கோளம் வெளிவருவதுபோல  உணரவைக்கும்.  பின்வந்த  நாள்களில் யாருமில்லாமல் தனியனாகக்  குளக்கட்டில்போய் அமர்ந்திருந்தால், அந்த வழியாக தலைச்சுமையுடன் நடந்து செல்வோரையும், மாடுகளை ஓட்டிச்செல்வோரையும், அருகிலிருந்த முகாமிலிருந்து பயிற்சிக்காக ஓடும் போராளிகளையும் பார்த்துக் கொண்டதெல்லாம்  நினைவுக்கு வருவதில்லை. ஆனால் அந்த முதல்நாள் நினைவுகள், ஆக்காட்டியின் அலறல் இடைவிடாது தொடர்ந்துகொண்டே இருந்தது. அந்தச் சாவும் நிழல்போல வளர்ந்துகொண்டே இருந்தது. 

வவுனிக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதும் அதுவழியாக நுரைத்துப் பெருகிவரும் நீர்  வயல்களையும், குடிமனைகளையும் கடந்து கருப்பிகுளத்தை வந்தடையும். குளம் நிரம்பியதும் அங்கிருந்து மூன்று கிளை வாய்க்கால்களால்  பிரிந்து வடக்கு வயல்களைக் கடந்து விரிந்துகிடக்கும் பெருங்காட்டை ஊடறுத்துச் சென்று பாலியாற்றில் கலக்கும். யானைகளும் கரடிகளும் நிறைந்துகிடக்கும் அந்தக் காட்டிலிருந்து பலதடவைகள்  யானைகள் கருப்பி குளத்தில் இறங்கி நீர் தூவிக் குதூகலிப்பதும் உண்டு. தாமரைகளும் அல்லியும் நிறைந்து  கருப்பிகுளம் எக்காலமும் செழிப்புற்றுக்கிடக்கும். குளத்தின் அகன்ற கட்டில் இருந்து அந்த நீரின் அசைவுகளையும் மிதக்கும் தாமரை இலைகளையும் அதில் தாவும் சிறு பூச்சிகளையும், பசியகருமைபடர்ந்து விரிந்துகிடக்கும் பெருங்காட்டையும்  பார்த்துக்கொண்டிருந்தால்  நேரமே போவது தெரியாது. எல்லாவற்றையும் இழந்த பின்னும் விடுதலைக்கு அந்தக் குளக்கட்டில் வந்திருந்ததும் கிடைக்கும் அமைதி அலாதியானது. இரவுகளையும் கூட அந்தக் குளக்கட்டிலேயே உறங்கிக் களித்துவிடவும் தயாராகவே இருந்தான். ஆனால்  இரவுகளில் அங்கு வரும் யானைகளுக்கும் நரிகளுக்கும் இடையூறாக மனிதவாடை இருந்து விடக்கூடாதென எழுந்து சென்றுவிடுவான். கருப்பி குளத்திலிருந்து இருநூறு மீற்றர்கள் தூரத்தில் அவனது தற்போதைய வீடு இருந்தது. அவனுக்கு அது வீடு. ஏனையோருக்கு வயல்காவலுக்கு கட்டப்பட்ட  குடில் அல்லது கொட்டில்.

அன்று கையைப்பிடித்து அழைத்துச்சென்றவள், அவனைக் கட்டில் இருத்திவிட்டு குளத்தில் இறங்கி தாமரைப் பூக்களையும் சில தாமரைக் கிழங்குகளையும் பிடிங்கி வந்தாள். பின் கட்டில் வாகாக ஏறி அவனுக்கருகில் அமர்ந்துகொண்டு தாமரை இதழ்களைப் பிரித்து, நடுவில் மகரந்தம் சூழ்ந்திருந்த பகுதியை காரித்தின்றாள். தானே கடித்து துண்டாக்கி விடுதலைக்கும் கொடுத்தாள். ஒரு கையில் நிறைந்த தாமரைப்பூக்களுடன் தன்னருகில் இருந்த மதுராவை பிரியத்துடன் பார்த்தான்.சில்லெனகுளிர்ந்த காற்று அவனது கழுத்தைத் தடவிப்போனது. அப்போதுதான்  "அங்க பார் இராமன் வில்லு" என  வானத்தில் தோன்றிய வளைந்த வண்ணக்கலவையை சுட்டிக்காட்டினாள்.  குளக்கட்டிலிருந்து நீருக்குள் குதித்து இராமன் வில்லு, இராமன் வில்லு வா வாவெனக் கத்தினாள்.  அவனும்  குளத்தின் நீருக்குள் மெதுவாக  இறங்கினான். பல தடவைகள் தாயுடன் அந்தக் குளப்பகுதியை நடந்தோ சைக்கிளிலோ கடந்துபோயிருந்தாலும் குளத்தின் அருகிலோ அல்லது குளத்தின் கட்டுகளுக்கோ சென்றதில்லை. குளத்தில் முதலை இருக்கிறதென வெருட்டியிருந்தார்கள். அந்த பயம் காரணமாக  அவன்  குளத்திற்குள்  இறங்கிப் பார்க்க கேட்டதுமில்லை. விரும்பியதுமில்லை. 

அன்றுதான் குளத்தின்கரையில், கால்கள் நீரில் புதைய முதன் முதலாக நின்று வியந்து பார்த்தான். கால்களுக்கு கீழே பூமியே புதைவதுபோல தோன்ற மதுராவின் கைகளைப் பற்றிக்கொண்டான். தூரத்தே தெரிந்த கரும் முகில்களை, அவற்றின்  திரண்ட பருமன்களை, அதனூடு இடைவெட்டி உருவாகிக் கிடந்த வானவில்லை கண்கள் விரியப் பார்த்தான். பதினைந்து வயதேயான மதுரா, தான் வானவில்லை பார்க்கவும், தாமரைப் பூக்களை ஆய்ந்து விளையாடவும் வேண்டுமென்ற  ஆவலில்தான் அவனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். அவளுக்கு அந்த வனப்புமிகுந்த நிலமும் குளமும் குளத்தின் அருகிலிருந்த விளாத்தி மரநிழலும்  மிகப் பிடித்தமானது. நிழல் வளர்வதைப்போல தானும் வளர்வேன் என்று சொல்லுவாள். பற்றிப்பிடித்திருந்த கையை விலக்கிவிட்டு இராமன் வில் என்ற அந்த வர்ணக்கலவையை  எட்டிப் பிடித்துவிடலாம் என்பதுபோல மகிழ்ந்து  துள்ளியதைப் பார்த்தான். அந்தக் கணத்தில்தான் அது நிகழ்ந்தது. வானம் இடிந்து விழுந்ததுபோலவொரு ஓசை.  மதுரா முகங்குப்புற விழுந்தாள். அவளது தலையிலிருந்து வழிந்த குருதி குளத்து நீரில்கலந்து   வானில் தோன்றியதுபோலவே  இராமன் வில்லுகள் பல  தோன்றின. அந்த சத்தத்தால் கலவரமுற்ற ஆக்காட்டியொன்று அலைவுற்றுக் கத்தியபடி வட்டமிட்டுப்  பறந்தது.

அவன் அருகிலிருந்து பார்த்த முதல் சாவு அவளது. ஏன் சுட்டார்கள். எதற்கு சுட்டார்கள். எங்கிருந்து சுட்டார்கள். எதுவுமே அவனுக்குப் புரியவில்லை. மறுநாள் பலவித தோரணைகள் கொண்ட  பலர் அவனிடம் கேள்விகள் கேட்டார்கள். கருப்பிகுளத்தின் மறுகரையில், "எங்களூர்காரங்க" என்று அந்தக் கிராம மக்களால் அழைக்கப்பட்ட, இந்திய இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி  மலர்வளையத்துடன் வந்து நீண்டநேரம் கைகளை கட்டியபடி கண் கலங்க மதுராவில் உடலருகில் நின்றிருந்தார். தவறுதலான சூடு என்று ஊர்ப்பிரஜைகள் குழுவிடம் கூறி, சூட்டினை மேற்கொண்ட நபரை  இராணுவ நீதிமன்றில் நிறுத்துவதாகவும், சாட்சி சொல்லவரும்படியும் கோரிக்கை விடுத்து தன்னை தவறற்றவனாக நிறுவிக்கொண்டார். கரும் பச்சை உடையில், முகத்தில் மீசையோ தாடியோ இல்லாமல் பளிச்சென்றிருந்த  அவரது தோற்றமும், கையில் தன்னைப்போலவே  சின்னவிரலோடு சேர்ந்திருந்த ஆறாவது விரலும் அவனுக்குள் படிந்துகொண்டது. வீட்டுக்கு அடிக்கடி வந்து சாப்பிட்டு செல்லும் தாடிமீசை தரித்த பலருடன் அந்த அதிகாரியை ஒப்பிட்டுப் பார்த்தான். இவர், அவர்கள் யாரைப்போலவும்  இல்லையென தலையை அசைத்துக் கொண்டான்.  அப்போதுதான்  அந்த அதிகாரியின் சீருடையில் இருந்த மூவர்ணத்தை பார்த்தான். அதுவொரு சிதைவுற்ற இராமன் வில் என மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.  

மதுராவின் சாவின் பின்வந்த பத்தாம் நாள் அவனது வீடு எரிக்கப்பட்டது. அவனும் அம்மம்மாவும் தவிர மற்ற அனைவரும் கருகி இறந்தனர். பயத்தில் நடுங்கிய ஊர் காட்டுக்குள் இறங்கி ஒளிந்துகொண்டது. ஊரோடு அவனும் சேர்ந்துகொண்டான். காடு அம்மம்மாவை வாங்கிக் கொண்டு தன்  வெம்மையை அவனுக்குக்  கொடுத்து அரவணைத்துக் கொண்டது. செஞ்சிலுவைச்சங்கத்திடம் முறையிட்டதாலும், சாட்சியாக அவன் இருந்த காரணங்களாலும் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவே வீட்டினை எரித்து படுகொலையை நிகழ்த்தியதாக காடெங்கும் முணுமுணுப்புகளால் நிறைந்திருந்தது. குடும்பத்தோடு அவனும் எரித்தழிக்கப்பட்டுப்போனான் என வரலாறு பதிந்துகொண்டது. விடுதலை என்ற அவனது பெயர் காட்டைத்தாண்டி, கருப்பிகுளத்தை கடந்து தமிழ் நிலமெங்கும் பரவியது. 

சிறுவயதில் மயிலிறகு பொறுக்கக் கூட்டிச்செல்லும் தம்பியின் நினைவாகவே விடுதலை என்ற பெயரை தனக்கு வைத்தாக தாய் சொல்லியிருந்தாள். முகம் தெரியாத அந்த மாமனின் கண்களும் உனது கண்களைப்போலதான்  இருக்குமென்று  அம்மம்மா கூறிய நாளில் அவனுக்கு அந்தப்பெயர் குறித்தொரு பெருமித உணர்வே கிடைத்தது. அந்தப் பெருமிதம்தான்  இன்றைய வாழ்வின் நாசமறுப்புக்கு ஆரம்பப்புள்ளி என்று சொல்வான். தன் நினைவுகளிலிருந்து தப்பி ஓட நினைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இயலாமையால் திரும்பி வந்து கருப்பிகுளத்தின் கட்டினில் அமைதியாக இருந்துவிடுவதை அல்லது அந்தப் பெருங்காட்டுக்குள் இறங்கிவிடுவதைத்  தவிர வேறுவழி தோன்றியதில்லை. காலையோ மாலையோ குளத்தின் கரையினில் அல்லது விளாத்திமர நிழலில் அமர்ந்துவிட்டால் போதும் எல்லா நினைவுகளும்  கழன்றுபோக  வெற்று மனிதனாகிடுவேன் என்பான்.

சிறுவயதுகளில், பச்சை உடுப்புடன் கம்பீரமாக வந்து, மயில் இறகு பொறுக்கித்தரும் மாமனை கனவுகளில் கண்டிருக்கிறான். கைவிரலைப்  பிடித்து அழைத்துச்செல்லும் மாமன் அப்படியே வானம் இறங்கும் தொலைவுவரை நடந்து கொண்டிருக்க, ஆயுதமொன்றின்மேல் தொப்பியை கவிழ்த்து வைத்து சுவர்களில் வரையப்பட்ட ஓவியமொன்றொடு கனவு முடியும். பாடசாலைகளில் தன் கனவு பற்றிப் பகிர்ந்துகொண்ட போதெல்லாம் மற்ற நண்பர்களும், தங்களுக்கும் அதேசாயலிலொரு கனவு தோன்றுவதாக கூறுவார்கள். மாமாக்களினதும், அண்ணாக்களினதும் கதைகளால் அந்தக் காலங்கள் நிரம்பியிருந்தன. அவனிடம் மாமாவின் கதை அரைகுறையாவே இருந்தது. 

மதுராவின் சாவின்பின் பலநாட்கள் கழிந்து, ஒரு புகைப்படம் கூட இல்லாமல்போன மாமனைப் பற்றி அயல்வீட்டு "மணிமுத்தாறு" ஆச்சியிடம் கேட்டான். "ஒன்றாக வந்தோமே மாநகரத்திலிருந்து நன்றாகத்தான் இருந்தோமா" என ஆரம்பித்து, றப்பர் தோட்டத்தில் ஒரேயொருநாள்  வேலைக்கு போகாத காரணத்தால் ஆப்கானிலிருந்து வேலைக்கு வந்த காவலாளியொருவன்  சுட்டுக்கொன்ற கதையையும், பதின்நான்கு வயதுப் பாலகியை  நிர்வாணமாக்கி பிரம்பாலடித்த தோட்டத்துரையின் திமிரையும், அங்கிருந்து ஒளிந்தோடி இங்கு வந்தும் ஒளியுறமே, பழைய கப்பல் ஏறி வாழவென்று வந்தோமேயென, தங்கள் பூர்வீகக் கதையை  ஒப்பாரியோடு கூறியதையும்,  மண் அள்ளித் தூற்றியதையும் பார்த்தான்.  அதன்பின் அதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை. மாமன் குறித்து தனக்குள் ஒரு சித்திரத்தை வரைந்துகொண்டான். அது ஊரவர்களின், மாமனின் நண்பர்கள் சொன்ன கிளைக் கதைகளிலிருந்து அவன் உருவாக்கியது. மாமன் இருந்திருந்தால் வீடு எரிந்திருக்காது. அப்படி எரிந்திருந்திருந்தாலும் ஒரு தேவதூதன்போல கையைப்பிடித்து  தங்களை காப்பாற்றி இருப்பானென உளமார  நம்பிக்கை கொண்டான்.

எப்படியும் திரும்பி வந்துவிடுவானென்று அத்தனை பேரும் நம்பியிருந்தாக சொல்லியிருந்ததுதான் அவனுக்கு வியப்பை கொடுத்தது. ஏனென்றால் ஆபத்துவேளைகளில்  காற்றோடு காற்றாற்றவும் நீரோடு நீராகவும் மரத்தோடு மரமாகவும் மாறிவிடக்கூடிய அசாத்தியமான திறமை கொண்டவனென  கூறியிருந்தார்கள். ஒருநாள் பத்துமணி சேவல் கூவும்போது அவனோடு வந்துசென்றவர்கள் மறுநாள் வெள்ளிவிழும் பொழுதில் வந்து அவன் இல்லையென்றும் உடல் கிடைக்கவில்லையென்றும் கூறினார்களாம். அதுவொரு இயக்க இரகசியம் எனக் கருதி எப்படி  நடந்தது என்று யாருமே கேட்கவில்லை. அவர்களும் சொல்லவில்லை. பின் பல தடவைகள் வந்துசென்றிருந்தாலும் அதைபற்றி எதுவுமே அவர்களும்  பேசியதில்லை. இவர்களும் கேட்டதில்லை.   அவர்கள் அவனுக்கு வைத்த பெயரை மட்டும் கூறினார்களாம். அந்தப் பெயரை இவன் பிறந்தபோது அவர்களே  இவனுக்கு வைத்துவிட்டார்கள். "விடுதலைக்கு எத்தனை மாமன்கள் பாருங்கள்" அக்கா என்று கூறுவர்களாம். 

சுற்றியிருந்த அத்தனையும் இல்லாமல்போய் காட்டிலிருந்து மீண்டும்  திரும்பி வந்தபோது அவன் வாழ்ந்த நிலத்தில் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. ஒவ்வொரு இடமாக மாறிமாறி இனி ஒழிய இடமில்லையென்ற நிலைவந்தபோதுதான் திரும்பிப் பார்த்தான் கூட யாருமேயில்லை. காட்டின்  வெம்மை அவனுக்குள் நீறாமல் எரிந்துகொண்டிருந்தது.  எல்லாக் காலங்களிலும், தங்கள் எல்லோரிலும்   ஆயுதங்களால் நிகழ்ந்த வடு  அவனுக்குள் ஆறாமல் கிடந்தது. ஆயுதங்களை வெறுத்தான். அது வழங்கிவிடும் அதிகாரபோதையை காறி உமிழ்ந்தான். அதன் மூலம் கிடைக்கின்ற பாதுகாப்பையும் துணிவையும் நிராகரித்தான். அது நிகழ்த்திய  கொலைகளை  துயரத்தோடு சுமந்தான். ஆனால் ஆயுதம் மீதான வெறுப்பு அதனைச் சுமந்து திரிந்தவர்கள் மீது வரவேயில்லை. அவர்களை பரிதாபத்துடன் நேசித்தான். இது அவனுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. 

இரண்டுபட்ட மனநிலையில் நிராகரிக்கவும் வெறுக்கவும் அதேசமயம் நேசிக்கவும் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டான். தனிமை சூழ்ந்த நாட்களில்  கருப்பிகுளத்தை கடந்து காட்டுக்குள் இறங்கிவிட்டால் நாளும் பொழுதும் போவது தெரியாமல் அலைந்துகொண்டே இருப்பான். காடு அவனுக்கு சலிப்பதில்லை. காட்டுக்குள் ஓடும் ஆறொன்றின் அமைதியுடன் நடந்துகொண்டே இருப்பான். ஊருக்குள் திரும்பிவந்த  நாள்களில்  அவன் நடந்த வழியெங்கும் சாவுகள் வளர்ந்து கொண்டே இருந்ததைப் பார்த்தான். அதனால் ஊருக்கே வர அஞ்சினான். யாரும் யாருக்காவும் காத்திருக்கவில்லை. எல்லைகள் மாறிக்கொண்டிருந்தன. எந்த ஆயுதத்தாலும் அவனை நெருக்க முடியவில்லை. நெருங்க முயன்ற போதெல்லாம் காடு அவனை தனக்குள் மறைத்துக் கொண்டது. வெளியில் திசைகள் பற்றியெரிந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மக்களின் பெரும் நம்பிக்கை சரிந்துபோனதை அவனால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. ஆயுதம் மீதான அவனது வெறுப்பும், நிராகரிப்புமே வாழ்வதற்கு போதுமானது எனக் கண்டுகொண்டான். மதுராவில் தொடங்கி ஒவ்வொருவராக அவனைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கக் கண்டான்.  

வீடு எரிந்தபோது ஊரவர்களுடன் காட்டுக்குள் இறங்கியவன், ஊரே எரிந்து எழுந்து திசையறியாது ஓடியபோது, தனியனாக காட்டுக்குள் இறங்கினான். காடு அபயமளித்தது. எப்பவாவது ஒருதடவை ஊருக்கு திரும்புவான். அவன் திரும்பும்  ஒவ்வொரு தடவையும் ஊர் மாறிக்கொண்டிருந்தது. முகங்கள் மாறின.மொழிகள் மாறின. ஆயுதங்கள் மாறின. பச்சை உடைகள் மாறின. மனிதர்கள் மாறினார்கள். அந்தமாற்றங்கள் அவனை ஊரிலிருந்து விலகவைத்தன. இருந்தும் கருப்பிகுளமும் அவன் வாழ்ந்த நிலமும் அவனை அழைத்துக்கொண்டுதான்  இருந்தது. அதற்காக ஒருநாள்  ஊருக்கு திரும்பியவன் கைதுசெய்யப்பட்டான்.  

மீண்டும் ஒருதடவை விடுதலை என்ற பெயர் தமிழ் நிலமெங்கும் பேசுபொருளானது. ஊடகங்களில் சில முன்னாள் போராளியென்றன, சில அப்பாவி  இளைஞன் என்றன,  அரசியல் தலைவர்களில் சிலர் போராளிகளை திரட்டி புதிய அமைப்பை கட்டியெழுப்பும் தலைவன் என்றார்கள். தாக்குதலுக்கு மீண்டும் தயாராகின்றன படையணிகள் என்றார்கள். ஆயுதங்களை வெறுத்து நிராகரித்த அவனைச் சுற்றிலும் ஆயுதங்கள் பேசுபொருளாயின.  தடுப்புக்காவலில் இருந்த அவனுக்கு இவை எதுவுமே தெரியாது. விசாரணையின்போது எங்கெல்லாம் உறங்கியதாக கூறினானோ, எங்கெல்லாம் உணவு தயாரித்ததாக கூறினானோ அங்கெல்லாம் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் கண்முன்னாலேயே  அந்த இடம் உருக்குலைக்கப்பட்டது. தன்னால், தனக்கு அபயமளித்த காடு சிதைக்கப்படுவதை நேரில் பார்த்தான். இயலாமையோடு யாருக்கும் தெரியாமல் அன்றுவரை காப்பாற்றிவந்த ஆயுதம் பற்றிய இரகசியத்தை காட்டுவதாக கூறினான். தன்னைச் சுற்றிலும் ஆயுதங்கள் குறிபார்க்க  அழைத்துச் சென்றான்.  அவர்கள் எழுப்பிய ஆரவாரங்களால் கலவரமுற்று ஆக்காட்டியொன்று அவலக்குரல் எழுப்பியபடி பறந்துபோனது.

கருப்பிகுளத்துக்கு நேர் எதிராக இருந்த கட்டுப்பகுதிக்குள் நீண்ட நேர பயணத்தின் பின், வானத்தை மறைத்துநின்ற பெருமரங்களிடையில் திசையெங்கும் கிளையெறிந்து உயர்ந்து நின்ற அரசமரத்தின் கிளையொன்றை சுட்டிக்காட்டினான். அவன் காட்டிய திசையில் பார்த்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். துருவெறிப்போன ஆயுதமொன்றை தோளில் சுமந்தபடியொரு  எலும்புக்கூடு  கயிற்றில்  அசைந்து கொண்டிருந்து. அதற்கு நேர்கீழே நிலத்தில் குவியலாக இருந்த கரிய கற்களில்  யாரோ வழிபாடு நிகழ்த்தியமைக்கு ஆதாரமாக கருகிய காட்டுப்பூக்கள் கிடந்தன.

உயரதிகாரியின் கட்டளைக்கு இணங்க மரத்தில் எறிய இராணுவ வீரர்கள் கயிறை அறுத்து மெதுவாக எலும்புக்கூட்டை இறக்கினார்கள். அதன் தோளில் கொழுவியிருந்த துருப்பிடித்திருந்த ஆயுதத்தில் மிகப் பழையதான தினக்குறிப்பேடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. அதனை எடுத்துப் பார்த்தபோது எழுத்துக்கள் எல்லாம் அழிந்துபோய் பக்கங்கள் சிதைந்து மக்கி கையோடு கழன்று வந்தன. அதிலொன்றை எடுத்து  பார்த்தபோது அதில் அச்சிடப்பட்டிருந்த ஆண்டு மட்டும் தெரிந்தது. அது  ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து எட்டு. 

விடுதலை விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டான்.  எலும்புக்கூடு ஆயுதம் தினக்குறிப்பேடு கயிறு  கீழே இருந்த கருகிய மலர்கள் என எல்லாவற்றையும் சேகரித்து  ஆய்வுக்கு அனுப்பினார்கள். நீதிமன்றத்தால்  விடுதலையை விசாரணைக் கைதியாக வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்டது. ஆய்வுக்கு அனுப்பிய பொருள்களின் முடிவு கிடைத்தபோது, கருகிக்கிடந்த மலர்களில் விடுதலையின் கைரேகை இருப்பதாக சொல்லி அவனை புனர்வாழ்வுக்கு அனுப்பினார்கள்.   வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்  இலங்கைக்கான இந்திய வதிவிடப் பிரதிநிதியை அழைத்து, எலும்புக்கூட்டையும், ஆயுதத்தையும், தினப்பதிவேட்டையும்  கையளித்தது. அந்த நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென்ற அய்யத்தையும் நீதிமன்றம் தெரிவித்துக்கொண்டது.

எலும்புக்கூட்டை பெற்றுக்கொண்ட இந்திய தூதுவராலயம், தமது சார்பில் டீ. என்.ஏ சோதனைகள் உட்பட அனைத்தையும் மீண்டும் செய்து கொண்டார்கள். பின்   முழு இராணுவ மரியாதையுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து திரட்டப்பட்ட  தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு அடையாளம் காணப்பட்டு தமிழகத்தின் "மணிமுத்தாறு"  என்ற கிராமத்திற்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு  உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட பின்னர்,  உறவினர்கள் கூடிநிற்க, இலங்கையில் இராணுவப் பணியிலிருந்தபோது அனுப்பியிருந்த கடிதமொன்றும் வாசிக்கப்பட்டது. அதில் விடுதலையின் கண்கள் ஆயிரமாயிரமென பெருகுவதாகவும் ஒருவரி எழுதப்பட்டிருந்தது.  தங்களது தந்தை இலங்கையில் வாழ்ந்த இடத்தை பார்க்க விரும்புவதாக அவர்கள் கோரிகை விடுத்தார்கள். நீண்ட பரிசீலனையின் பின் அவர்களது விருப்பத்தை  நிறைவேற்ற இந்திய தூதரகம் முன் வந்தது. அத்தோடு அவர்கள் விடுதலையை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

அவர்கள் விடுதலையை சந்தித்தநாளில், காட்டினை ஊடறுத்து முகாம்கள் முளைத்திருந்தன. விலங்குகள் யாவும் இடம்பெயர்ந்திருந்தன. பறவைகள் தூரப்போயிருந்தன. தாமரைகள் இல்லாமல் கருப்பிகுளம் பாளம் பாளமாய் வெடித்துக்கிடந்தது. காடு தன்னை காடென மறந்து வெம்மையை இழந்து  விட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக  காடு எல்லோருக்கும் எட்டாத இடமாயிற்று. இப்போது காற்றும் காட்டாற்று வெள்ளமும் அனுமதி பெற்றுத்தான் காட்டுக்குள் உள்நுழைய முடிகிறதென, இந்தக் கதையை கருப்பிகுளக்கட்டில் இருந்து, காட்டைப் பார்த்தபடி சொல்லிமுடித்தான். 

(இமிழ் – மார்ச் 2024)

மூலம்: நெற்கொழு தாசன் Messenger ஊடாக.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, கிருபன் said:

கொலைகளை  துயரத்தோடு சுமந்தான். ஆனால் ஆயுதம் மீதான வெறுப்பு அதனைச் சுமந்து திரிந்தவர்கள் மீது வரவேயில்லை. அவர்களை பரிதாபத்துடன் நேசித்தான்.

பதிவுக்கு நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆயுதங்களை வெறுத்த ஆனால் ஆயுதம் தாங்கியவர்களை (போராளிகளை) வெறுக்காத இருமையான மனநிலை. தமிழர்களின் போராட்டம் பெரிய அழிவுகளைக் கொடுத்தது. ஆனால் ஆயுதப்போர் ஒரு பலனையும் தரவில்லை. இந்த விரக்தியான நிலைதான் 90 களுக்கு முன்னர் பிறந்தவர்களினது. அது கதையில் தெரிகின்றது.

கதையின் முடிவில் காட்டாற்று வெள்ளமும் அனுமதி பெற்றுத்தான் ஓடுகின்றது என்பது “அமைதி”யான இக்காலத்தில் அதிகாரமும், இராணுவ பலமும் எப்படி அடக்குமுறையைத் தொடர்கின்றன என்ற குறியீட்டுடன் முடித்தமாதிரி உள்ளது.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது 1350 படுக்கைகள் உள்ளன. எனினும் படுக்கை வசதிகள் போதாமையாக உள்ளன. சில சமயங்களில் நோயாளிகள் நிலத்திலும் படுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் மேலும் மூன்று விடுதிகளை திறக்க உள்ளோம்.  இதன்மூலம் இந்த படுக்கை வசதிகள் ஓரளவு மேம்படும் என நினைக்கின்றேன். மகப்பேற்று கட்டட தொகுதி மற்றும் இருதய நோய் கட்டட தொகுதி அமைக்கப்படவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தொண்டர்களுக்கு நாம் நியமனங்களை வழங்க முடியாது. சுகாதார அமைச்சே அதனை செய்யவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையை பெறுபவர்கள் பூரணமான நம்பிக்கையை கொண்டுள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த வைத்தியசாலையில் என்ன நடைபெறுகின்றது என்பது தெரியாது என்ற வகையில் வைத்தியசாலையின் சேவையை சிதறடிக்கும் வகையில் சொல்லப்படும் காரணங்கள் பூதாகரமாக வெளியில் கொண்டு செல்லப்படும். ஆகவே உண்மையை அறிந்து கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி  யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள், அவர் தொடர்பில் அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவின் வைத்தியசாலை தொடர்பான நடத்தைகள் தொடர்பில் ஐபிசி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்த மேலதிக விடயங்கள் காணொளியில்... https://ibctamil.com/article/jaffna-teaching-hospital-director-breaks-the-truth-1734797306
    • காசு இருந்தால் கீழேயும் போகலாம் மேலையும் போகலாம்.....?
    • செல்ஃபி எடுக்க சென்று ரயிலில் மோதி தாயும் மகளும் பலி December 22, 2024  07:25 pm அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த தாயும் மகளுமே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 18 வயதுடைய மகளும் 37 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலில் அவர்கள் மோதுண்டுள்ளனர்.  செல்ஃபி எடுக்கும்போது அவர்களுடன் மற்றொரு இளைஞரும் அங்கு வந்திருந்த போதும் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197693
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.