Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"சங்க காலத்துக் காதல் பிரச்சனை?"
 
 
சங்ககாலம் எதிர்ப்பற்ற காதல் வாழ்வுக்கு மட்டும் உடனாகி இருந்துவிடவில்லை. பல பாடல்கள் காதல் வாழ்வைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் சங்க காலத்துக் காதலிலும் பிரச்சனைகள் இருந்தன. அவை ஊர்வம்பாய் பேசப்பட்டன. இதை "அம்பல்" என்றும் "அலர்" என்றும் சங்க கால மக்கள் வழங்கி வந்தனர்.
 
"அம்பல்" என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக் காதலை பலரும் அறிந்து, பழித்துக் கூறல் என்றும், அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் கருத்து கொள்ளலாம். இது ஒரு வித கிசுகிசு என்று கூட சொல்லலாம். ஊர்வம்பு என்றாலே பொதுவாக பெண்களையே குறிக்கும். "தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்" என்று நற்றிணையில் கபிலர் கூறுகிறார். காலையில் ஒரு பெண்ணிடம் ஒரு செய்தியைச் சொன்னால் போதும், மதியத்துக்குள் அச்செய்தி ஊருக்குள் பரவிவிடும் என்று பொதுவான கதை உண்டு. கூடியிருந்து முணுமுணுத்துப் அடுக்களைப் புகையைப் போல அதை பரப்புவார்களாம்.
 
எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையிலே ஒரு காட்சி வருகின்றது. ஒரு பெண் ஆடவன் ஒருவனைக் காதலிக்கின்றாள். அதைத் தெரிந்து கொண்ட அயல் பெண்கள்; அந்தப் பெண்ணின் தாய் தெருவில் போகும் போது கடைக்கண்ணால் பார்த்து தம் மூக்கின் மேல் சுட்டுவிரலை வைத்து அவளை இகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள். அவமானத்தால் குறுகிப் போன தாய் வீடு திரும்பி வந்து காதலித்து தனக்கு வசை தேடித்தந்த தன் மகளைத் தடி எடுத்து நன்றாக அடித்து விடுகின்றாள். இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்!
 
மேலும் இதற்கு ஒரே வழி தலைவனுடன் நீ ஓடி விடுவது தான். ஊரைப் பற்றிக் கவலைப்படாதே.. எப்போதும் அலர் தூற்றும் ஊர்..  அலர் தூற்றும்…. தூற்றட்டுமே அதனாலென்ன என்கிறாள் தோழி!!
 
 
"சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை; அலைப்ப
அலந்தனென்; வாழி தோழி! கானல்
புதுமலர் தீண்டிய, பூநாறு குரூஉச் சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம்; இயல்தேர்க் கொண்கனொடு
செலவு, அயர்ந் திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!"
[நற்றிணை - 149]
 
 
இன்று எத்தனையோ பெற்றார் காதலித்தவனோடு மகள் ஓடிவிட ஐயோ முதலே தெரிந்திருந்தால் கட்டுப்படுத்தி வைத்திருக்கலாமே என்று கவலைப்படுவதைக் காண்கின்றோம். என்னுடைய அறியாமையால் பிள்ளை போய்விட்டதே என்று தன்னைத்தான் நொந்து கொள்ளும் ஒரு தாயின் அவலத்தை காண்கின்றோம். இது போல மகளை நினைத்து ஏங்கும் தாயை அகநானூற்றிலும் காண்கிறோம்! தலைமயிரும் [கூந்தலும்] சுருண்டு படிந்துள்ளது. முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன. இவள் பெண் என்னும் இயல்பினை அமைந்தனள் -என்று- என் கண்களே பல முறை பார்த்து எனது நெஞ்சமானது நேற்றும் ஐயுற்றது. அதன் பின்னும் எனது அறியாமையால் யான் என் மகளை வீட்டிற்குள்ளேயே இருக்கச் செய்யாது விட்டேன் என புலம்பும் ஒரு தாயை இங்கு காண்கிறோம். இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்!
 
அவள் நடக்கும்போது ஒலிக்கும் தன் காலிலுள்ள சிலம்பைக் கூடக் கழற்றி வைக்காமல் சென்றுவிட்டாள்... என்னை விட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்..... இவள், என் மகள்... தரிசு நிலத்திற்கு போனாலோ? ... சுனையில் நீர் இல்லாததால் அங்கே புறா புதிய நெல்லிக்காயை குத்தி சாப்பிடுங்கள், அங்கே வறண்ட தண்டுகள் மற்றும் நெல்லிக்காய்கள் மேற்கு காற்றினால் கீழே விழுந்து  குவிந்து கிடந்தது பளிங்கு போல் தெரியும். அப்படியான வறண்ட நிலத்தைக் கொண்ட  காட்டு வழியில் சென்று கொண்டிருப்பாளோ?.... இல்லை.. கையில் கூர்மையான வேல் வைத்திக்கும் காளை போன்றவனுடன் சென்று கொண்டிருப்பாளோ?.... இல்லை..  காளையின் பொய்யுரையை நம்பிச் சென்று கொண்டிருப்பாளோ?..... இல்லை..  தேக்கின் அகன்ற இலைப்புதர் போல் தோன்றும் குடிசையில் வாழும் கானவர் சிறுகுடி முற்றத்தில் வேகவைத்த புலால் உணவை உண்டு கொண்டிருப்பாளோ?... புலம்புகிறாள் தாய் !!
 
 
"கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
கண்துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம்! பெயர்த்தும்
அறியா மையிற் செறியேன் யானே
பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
கோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய்
அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்
அகலிலை குவித்த புதல்போல் குரம்பை
ஊன்புழுக்கு அயரும் முன்றில்
கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே."
[அகநானூறு 315]
 
 
பெண்களைப் பெற்றோர் அவர்களைத் திருமணம் செய்துகொடுக்கும் வரையிலும் தமது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வதாக அடிக்கடிப் புலம்புவது கேள்விப் பட்டிருப்பீர்கள். இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
 
 
சங்க காலத்திலே குழந்தைப் பருவம் முதல் பெண்கள் அணிந்திருக்கும் சிலம்பை அவர்களின் திருமணம் நடப்பதற்கு முன்பு அகற்றுவார்கள். அதனைச் சிலம்பு கழிதல் என்பார்கள். இன்றைய வளைகாப்பு போல அந்த நிகழ்வும் விழாவாக நடைபெற்றுள்ளது போலும்.
 
ஒரு வசதியான குடும்பத்துப் பெண் தன் ஏழைக் காதலனோடு ஓடிச் சென்று விடுகிறாள். கணவன் வீட்டிலே அவளின் சிலம்பு அகற்றும் விழா நடக்கின்றது எளிமையாக! அதைப் பெண்ணின் தாய் கேள்விப் படுகின்றாள். ஐயோ என் பிள்ளைக்கு புல்வேய்ந்த குடிசை வீட்டில் வறுமையுடன் விழா நடக்கிறதே! எங்கள் வீட்டில் என்றால் எப்படிச் சீரும் சிறப்புமாகச் செய்திருப்போம் என்று வருந்துகிறாள் அந்தத் தாய்!
 
 
"கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
இவை கண்டு, இனைவதன் தலையும், நினைவிலேன்,
கொடியோள் முன்னியது உணரேன், ''தொடியோய்!
இன்று நின் ஒலி குரல் மண்ணல்'' என்றதற்கு,
எற் புலந்து அழிந்தனள் ஆகி, தற் தகக்
கடல்அம் தானை கை வண் சோழர்,
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடை,
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த 20
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
''சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
மேயினள்கொல்?'' என நோவல் யானே. "
[அகநானூறு 369]
 
 
சீரும் சிறப்பும் இல்லாத அவன் மனை. ஏழைப் பெண்கள் வாழும் புல் வேய்ந்த குடிசை. அதன் முற்றத்துத் தூணில் ஒரே ஒரு பசு மட்டும் கட்டியிருக்கும். ஏதுமில்லாது வறுமையில் வாடும் அந்த மனையில் சிலம்பைக் கழற்றி வைக்கும் திருமணம் நடை பெறுகிறதே என்ற செய்தி அகநானூற்றில் [369] காணப்படுகின்றது.
 
துணிவோடு கல் நெஞ்சத்துடன் நீ அறியாத நாட்டுக்கு, தகைமை இன்றி உன்னை அழைத்துச் செல்லும் சிறுமைக் குணம் படைத்தவனுக்கு ஒத்தவளாகச் சென்றுவிட்டாய். இதுதான் உன் மடமைத் தகுதி என்று ஏசுகிறாள் அந்த தாய் தனது வேதனையில்.. . அது மட்டும் அல்ல, மகளே! என் நிலைமையை எண்ணிப் பார். வளையல் அணிந்த மகளிர் முறை முறையாக வந்து உன்னைப் பாராட்டுவர்... அவர்கள் இப்போது தவிக்கின்றனர்... நீ ஊட்டாததால்... நீ வளர்த்த கிளி பால் உண்ண மறுக்கிறது.... மயில் போல் நடக்கும் உன் தோழிமாரும் விளையாடவில்லை.... நீ நீர் ஊற்றாததால்.... நீ தாழியில் வளர்த்த செடிகளும் பூக்கவில்லை.... அழகு தவழ வயிரம் பதித்து வைதிருக்கும் உன் சுவர் ஓவியத் தெய்வத்துக்கும் படையல் செய்யப்படவில்லை..... இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டு நான் வருந்திக் கொண்டிருக்கிறேன்.....
 
அத்துடன் பழைய நினைவுகள் பல என் நினைவுக்குச் சரியாக வரவில்லை... வளையல் அணிந்தவளே!... “இன்று நீ தலை முழுகும் நாள்” என்றேன் [“This is the day of bathing after your menses”] தன்னைத் தாய் 'தலை முழுகப் போகும் நாள்' என்று தாய் கூறியதாக நினைத்து சினந்து நீ வருந்துகிறாய் என புலம்பும் தாயை காண்கிறோம். இங்கே வறுமைப்பட்ட இடத்திலே வாழ்க்கைப்பட்டு விட்டாளே என்ற எண்ணப்பாடுடைய ஒரு தாயைச் சந்திக்கின்றோம்! மகள் புகுந்த வீட்டை விட தன் வீடே பண வசதியில் சிறந்தது என்ற எண்ண ஏற்றத்தாழ்வை இன்றுபோல அன்றும் பார்க்கின்றோம்.
 
பெரியோரை வியத்தலும் இல்லை. சிறியோரை இகழ்தலும் இல்லை என்ற சங்கப் பண்பு நெறி அடிபட்டுப் போவதை இங்கே காண்கிறோம்.!
 
இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
19598943_10209661603319648_6327591870321169744_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jHTs3_kMg7AQ7kNvgGp8vQA&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBdQmINvPrusr2DlU6fx2FkldA16pqd7qBnP9DYjEtv6g&oe=6662D0C8 19642295_10209661605679707_959355806057558988_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XiqdvP0cCeUQ7kNvgEV_aJv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAvq6aE-qsBfMYmRR4mbuRyZ8vAxjcw8gN6kQH-Qky5fA&oe=6662DF52 19642539_10209661607559754_6055775717698101424_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ipXDNNeK9G4Q7kNvgGXbFNc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCite062LPw1kwMUULQDUhTQzrO7XStWyGJFD3edd2y_Q&oe=6662C827
 


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.