Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விஜய்

பட மூலாதாரம்,PTI

2 மணி நேரங்களுக்கு முன்னர்

“நல்ல தலைவர்கள் தான் தமிழ்நாட்டில் இல்லை,” என்றும், “நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்,” என்றும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

மேலும், போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமையாக இருந்தாலும், சில விஷயங்களிலிருந்து நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விஜய்யின் இப்பேச்சு தமிழக அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் சொன்ன கருத்துகள் பொதுவான வாதமாக இருப்பதாகவும் நேரடியான குற்றச்சாட்டு இல்லை என்றும் தி.மு.க-வினர் கூறிவருகின்றனர். விஜய்யின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீமான், இதனை கூட்டணிக்கான அஸ்திவாரமாக எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூன் 28, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்தாண்டு இந்நிகழ்வு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்தாண்டு, இந்நிகழ்ச்சி இருகட்டங்களாக நடைபெறுகிறது. இதன் இரண்டாம் கட்டம் வரும் ஜூலை 3 அன்று நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் நாங்குநேரி சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்டு, 12-ஆம் வகுப்பில் 469 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் சின்னதுரையின் அருகில் அமர்ந்திருந்தார்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

விஜய் உரையின் சிறப்பம்சங்கள்

விஜய்

பட மூலாதாரம்,VIJAY / INSTAGRAM

  • வாழ்க்கையில் நாம் என்னவாக போகிறோம் என்பது குறித்த தெளிவு பலருக்கும் இருக்கலாம். ஆனால், சில மாணவர்களுக்கு எந்த துறையை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதில் தொய்வு இருக்கலாம். எல்லா துறையும் நல்ல துறைதான், அதில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் 100% உழைப்பை செலுத்தினால் யாராக இருந்தாலும் வெற்றி நிச்சயம். எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசியுங்கள்.
  •  
  • பொறியியல், மருத்துவம் மட்டுமே நல்ல படிப்பு இல்லை. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், நல்ல தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இல்லை. இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றனர். அரசியலும் ஏன் ஒரு துறையாக வரக்கூடாது? அப்படி வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
  •  
  • “நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா, வேண்டாமா?” என விஜய் கேள்வி எழுப்பினார். அப்போது, அரங்கிலிருந்தவர்கள் ஆரவாரம் செய்ததையடுத்து, “உங்களின் ஆர்வம் புரிகிறது, இப்போதைக்குப் படியுங்கள், மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,” எனத் தெரிவித்தார்.
  •  
  • மறைமுகமாகவே நீங்கள் அரசியலில் ஈடுபடலாம் எனக்கூறிய விஜய், ஒரு செய்தியை பல செய்தித்தாள்கள் எப்படி வெவ்வேறு விதமாக கையாள்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
  •  
  • சமூக ஊடகங்கள் நல்லவர்களைக் கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காண்பிக்கின்றனர். அதையெல்லாம் படியுங்கள், ஆனால் எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன பிரச்னைகள் உள்ளன, சமூகத் தீமைகள் குறித்து உங்களுக்குத் தெரியும். சில கட்சிகளின் பொய்யான பிரசாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமான பார்வை கிடைக்கும். அதுதான் சிறந்த அரசியல், என்றார்.
  •  
  • நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்த பாருங்கள். தவறான பழக்கங்களில் ஈடுபடக் கூடாது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்களை காப்பாற்றுவது அரசின் கடமை, இப்போது ஆளும் அரசு அதைத் தவற விட்டுவிட்டார்கள் என்பதை நான் பேச வரவில்லை, அதற்கான மேடையும் இதுவல்ல. சில சமயங்களில் அரசாங்கத்தைவிட நம் பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்தை தவிர்க்கும் பொருட்டு, ‘Say No to Temporary pleasure, Say No to drugs’ என மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் சொன்னார் விஜய்.
  •  
  • தேர்வில் தோல்வியடைந்தவர்கள், நினைத்த மதிப்பெண்களை பெற முடியாதவர்கள் விரக்தி அடைய வேண்டாம். வெற்றி, தோல்வியை சமமாக பாவிக்கக் கற்றுக்கொண்டால், தோல்வி நம்மிடம் வருவதற்கு பயப்படும். வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது தொடர்கதை அல்ல, என்றார்.
 

சீமான் கூறியது என்ன?

சீமான்

பட மூலாதாரம்,X/ நாம் தமிழர் கட்சி

படக்குறிப்பு,சீமான்

‘தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் வேண்டும்’ என்றும், ‘போதைப் பழக்கம்’ குறித்தும் விஜய் பேசியது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, “விஜய் யாரைச் சொல்கிறார் எனத் தெரிந்தால்தான் பதில் சொல்ல முடியும். போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது என விஜய் கூறியிருப்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? இது பொதுவான குற்றச்சாட்டு. தமிழ்நாடு கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தேசியச் சராசரியைவிட அதிகமாக உள்ளது,” என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சி நடத்துவதற்காக விஜய்க்கு வரவேற்பு அளித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை-பணக்காரர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் விஜய்க்கு வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் பேச்சு குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய சீமான், விஜய்யை பலரும் எதிர்த்தபோது தான் தொடர்ந்து பல நேரங்களில் அவருக்கு ஆதரவாக நின்றதாகக் கூறினார். அப்போது, இதனை கூட்டணிக்கான அஸ்திவாரமாக எடுத்துக்கொள்ளலாமா என செய்தியாளர் கேட்டபோது, “எடுத்துக்கொள்ளலாம்,” என சீமான் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:
விஜய்யின் பேச்சு குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய சீமான், விஜய்யை பலரும் எதிர்த்தபோது தான் தொடர்ந்து பல நேரங்களில் அவருக்கு ஆதரவாக நின்றதாகக் கூறினார். அப்போது, இதனை கூட்டணிக்கான அஸ்திவாரமாக எடுத்துக்கொள்ளலாமா என செய்தியாளர் கேட்டபோது, “எடுத்துக்கொள்ளலாம்,” என சீமான் கூறினார்.

அதே பேச்சுத் தான், அப்படி ஒன்றும் அதிர்வலையை ஏற்படுத்துவது போல இதில் ஒன்றும் விசேடமாக இல்லை. இதே பேச்சை சிவாஜி, ரஜனி, கமல், பாக்கியராஜ், டி ராஜேந்தர்.... என்று அரசியலுக்கு வந்து போன பல நடிகர்கள் பேசியிருக்கின்றனர். 

வாங்கோ, வந்து பாருங்கோ, களம் என்னவென்று அப்பத்தான் தெரியும். 

நிச்சயம் மூன்றாவது அணி ஒன்று பலமிக்கதாக வேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்தால் அது பலமே....👍.    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரசோதரன் said:

வாங்கோ, வந்து பாருங்கோ, களம் என்னவென்று அப்பத்தான் தெரியும். 

நிச்சயம் மூன்றாவது அணி ஒன்று பலமிக்கதாக வேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்தால் அது பலமே....👍.    

அவர்களுக்குள் நீண்டதொரு திட்டம் உள்ளது போல் தெரிகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026இல் விஜய் நாம் தமிழருடன் கூட்டணி அமைக்க திட்டமா? அவரது பேச்சு உணர்த்துவது என்ன?

விஜய் - தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம்,PTI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நல்ல தலைவர்களுக்கான தேவை இருக்கிறது என்கிறார். அவரது இந்தப் பேச்சு தனித்துப் போட்டியிடும் அவரது விருப்பத்தை உணர்த்துகிறதா?

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த பிறகு அவரது ஒவ்வொரு கருத்தும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று கூறப்படும் நிலையில், இன்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் தெரிவித்த சில கருத்துகள் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.

விஜய் பேசியது என்ன?

சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய விஜய், பொதுவான சில கருத்துகளைப் பேசியதோடு கவனிக்கத்தக்க சில விஷயங்களையும் குறிப்பிட்டுப் பேசினார்.

"தமிழ்நாட்டில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே எது அதிகமாகத் தேவைப்படுகிறதென்றால், நல்ல தலைவர்கள்தான். நான் அரசியல் தலைவர்களை மட்டும் சொல்லவில்லை. எல்லாத் துறைகளிலும் சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் ஒரு பணி வாய்ப்பாக ஏன் வரக்கூடாது? அப்படி வர வேண்டுமென்பதே என் விருப்பம்."

"நீங்கள் தினமும் செய்தித்தாள்களைப் படியுங்கள். ஒரே செய்தியை வெவ்வேறு நாளிதழ்கள் வெவ்வெறு மாதிரி எழுதுவார்கள். எல்லாவற்றையும் பாருங்கள், படியுங்கள். எது உண்மை, எது பொய் என ஆராயுங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன பிரச்னை, மக்களுக்கு என்ன பிரச்னை, சமூகத் தீமைகள் பற்றியெல்லாம் தெரிய வரும். அதைத் தெரிந்துகொண்டால், ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரங்களை நம்பாமல், எது சரி, எது தவறு, எது உண்மை, எது பொய் என்பதைத் தெரிந்துகொண்டு, நல்ல தலைவர்களைத் தேர்வுசெய்யும் விசாலமான பார்வை வரும்."

Whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"சமீப காலத்தில் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை, ஆளும் அரசு தவறவிட்டுவிட்டார்கள் என்று பேச வரவில்லை. அதற்கான மேடையும் இதுவல்ல. சில நேரங்களில் நம் வாழ்வை நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று பேசியிருக்கிறார் விஜய்.

இதில் நல்ல தலைவர்கள் தேவை என அவர் குறிப்பிட்டது, ஊடகங்கள் மீதான அவரது விமர்சனம், போதைப் பொருளிலிருந்து காப்பது அரசின் கடமை என்பன போன்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் கவனிப்பிற்கும் விவாதத்திற்கும் உள்ளாகியிருக்கின்றன.

 
விஜய் - தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம்,PTI

விஜயின் பேச்சு குறித்து கருத்து கூறிய மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன், "அவரது பேச்சை வைத்துப் பார்த்தால், விஜய் தி.மு.கவுக்கு எதிரான மனநிலை தனக்கு இருப்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அதுதவிர, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ராகுல் காந்தி, திருமாவளவன், சீமானுக்கு வாழ்த்து சொன்னவர், தமிழ்நாட்டில் நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்ற கூட்டணியின் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சொல்லவில்லை.’’

’’ஆனால், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என நினைப்பவர், ஆளும் கட்சியை எதிர்த்துத்தான் அரசியல் செய்ய முடியும். இருந்தபோதும், மக்கள் பிரச்னைக்கு அவர் எப்படி, எவ்வளவு தீவிரமாகச் செயல்படுவார் என்பதை வைத்துத்தான் அவரது அரசியல் எதிர்காலம் தீர்மானமாகும்," என்கிறார்.

நாம் தமிழருடன் கூட்டணியா?

இதற்கிடையில், தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதைக் கோடிட்டு காட்டும் வகையில் பேசியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளிடம் கேட்டால், இதெல்லாம் மிகவும் ஆரம்பக் கட்டம் என்கிறார்கள்.

"வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகள்தான் தனித்து நிற்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை எங்கள் அனுபவம் தேவைப்படலாம். எங்களுக்கும் துடிப்புமிக்க இளைஞர்களின் கூட்டு தேவைப்படுகிறது.

ஆகவே, இரு பிரிவினரும் எதார்த்தமாகவே நெருக்கமாக இருக்கிறோம். இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும்," என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச பொறுப்பாளரான பாக்கியராசன்.

விஜய் - தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதிமுகவும் அந்தக் கூட்டணியில் ஆர்வம் காட்டக்கூடும் என்கிறார் குபேந்திரன்.

"விஜய்யின் பிறந்தநாளுக்கு பலத்த வாழ்த்துகளைச் சொல்கிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி. கள்ளக்குறிச்சிக்கு விஜய் சென்றதற்கு வாழ்த்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். எப்படியாவது தி.மு.கவை தோற்கடிக்க வேண்டும் என்ற தவிப்பில் உள்ள அதிமுகவுக்கு விஜய் நிச்சயம் தேவைப்படுவார்."

ஆனால், "அப்படி ஒரு கூட்டணிக்கு விஜய் ஒப்புக்கொள்வாரா என்பது தெளிவாகவில்லை. அந்தக் கூட்டணியில் சீமான் இருப்பாரா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், தொகுதிப் பங்கீட்டில் ஆரம்பித்து முதல்வர் யார் என்பதுவரை மூன்று தரப்புமே இறங்கிவர வேண்டியிருக்கும்" என்கிறார் குபேந்திரன்.

நாம் தமிழர் வட்டாரங்களில் வேறு ஒரு விஷயத்தையும் சொல்கிறார்கள். அதாவது சமீபத்தில் விஜய்யும் சீமானும் சந்தித்துப் பேசியதாகவும் வேறு சிலரையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கலாம் என விஜய் கூறியதாகவும் தேர்தல் நெருக்கத்தில் அதை முடிவு செய்யலாம் என சீமான் கூறியதாகவும் சொல்கின்றனர்.

 
2026இல் விஜய் நாம் தமிழருடன் கூட்டணி அமைக்க திட்டமா? அவரது பேச்சு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,NAAM TAMILAR

ஆனால், இதற்கெல்லாம் முற்றிலும் மாறான ஒரு கருத்தை முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"விஜய்யை பொறுத்தவரை தனித்துக் களம் காணவே விரும்புவார். அவர் முதல் முறையாகக் களமிறங்குவதால் தனது வாக்கு வங்கியின் பலத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவார். சீமானை பொறுத்தவரை அவரது வாக்கு வங்கி பத்து சதவீதத்திற்குக் கீழேதான் இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அதை உயர்த்த மிகுந்த முயற்சியும் காலமும் தேவை. ஆகவே கூட்டணி அமைக்க விரும்புகிறார்," என்று தெரிவிக்கிறார் அவர்.

மேலும், "வரவிருக்கும் 2026 தேர்தல் களம் தி.மு.கவுக்கு எதிரானது. பா.ஜ.க. இன்னொரு கூட்டணியாக இருக்கும். அந்த இரண்டிலும் சீமான் இடம்பெற முடியாது. எனவே, அதிமுக., விஜய்யுடன் இணைந்து களம் அமைக்க அவர் விரும்பலாம். ஆனால், விஜய் தனித்துப் போட்டியிடவே வாய்ப்பு அதிகம். தன்னுடைய இன்றைய பேச்சில் விஜய் அதைத்தான் உணர்த்தியிருக்கிறார். அதாவது, நல்ல தலைவர்கள் தேவை என்கிறார். இப்போதுள்ள தலைவர்களை விட்டுவிட்டு, அத்தகைய நல்ல தலைவராக வர அவர் விரும்புகிறார் என்பதைத்தான் அது சுட்டிக்காட்டுகிறது. 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் இதெல்லாம் தெளிவாகும்," என்கிறார் ஷ்யாம்.

விஜய் தரப்பைப் பொறுத்தவரை வேறு சில கணக்குகளும் இருக்கின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகளின் மொத்த சதவீதம் சற்று குறைந்து, நாம் தமிழர், பாஜக ஆகியவை குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைப் பெற்றிருப்பதைக் கவனிக்கும் அவர்கள், இரு திராவிடக் கட்சிகளும் இழக்கும் வாக்குகளின் பெரும்பகுதியைப் பெற நினைக்கிறார்கள்.

இது தவிர, விஜய் களத்தில் இறங்கினால், பட்டியலின, சிறுபான்மையினர் வாக்குகளும் திராவிடக் கட்சிகளிடமிருந்து தங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறார்கள். இதுதவிர, GOAT படம் வெளியான பிறகு, தீவிர அரசியலை விஜய் கையிலெடுப்பதோடு, மாநாடு ஒன்றையும் நடத்தக்கூடும் என்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/articles/ce78d1x97pgo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தளபதி விஜய் பங்கு பற்றிய 'கல்வி விருது வழங்கும் விழா' !

29 JUN, 2024 | 03:37 PM
image
 

நடிகரும், தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவருமான தளபதி விஜய், தமிழகத்தில் நடைபெற்ற 'ஓ' லெவல் மற்றும் 'ஏ' லெவல் தேர்வுகளில் அதிக பெறுபேறு பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு விருதும், பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

நடிகர் விஜய்- தன்னுடைய ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதனூடாக தமிழகத்தில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தை தற்போது தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் இயக்கமாக மாற்றி இருக்கிறார். 

இந்த அரசியல் கட்சியின் சார்பில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டிலும் தமிழகத்தில் 'ஓ' லெவல் மற்றும் 'ஏ' லெவல் தேர்வுகளில் அதிக பெறுபேறு பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு அவர்களுடைய பெற்றோர்களுடன் பங்கு பற்றும் வகையில் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தினார். 

இந்த விழா சென்னையில் நடைபெற்றதுடன் இதன் போது தமிழகத்தில் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்களுடன் வருகை தந்தனர். அவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து, சான்றிதழையும், ஊக்கத் தொகையும் வழங்கினார். தேர்வுகளில் முதலிடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு வைர தோடு, வைர மோதிரம் ஆகியவற்றை பரிசாக அளித்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.

இந்நிகழ்வினை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளராக புஸ்ஸி. என். ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

இந்நிகழ்வில் தளபதி விஜய் பேசிய சில விடயங்கள் 

''அனைத்து துறைகளுமே நல்லவை தான். அதில் மாணவச் செல்வங்களாகிய உங்களுக்கு எந்தத் துறை பிடித்திருக்கிறதோ... அதில் கடுமையாக உழைத்து முன்னேறுங்கள்.

உங்களுக்கு பிடித்த துறையை பற்றியும், அதில் உள்ள தெரிவுகளை பற்றியும் .. உங்களின் ஆசிரியர்களிடத்திலும், உங்களின் பெற்றோர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் கலந்து ஆலோசித்து நல்லதொரு முடிவை மேற்கொள்ளுங்கள்.

மேலும் நமக்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை. தலைவர்கள் என்றதும் அரசியலை பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. நீங்கள் எந்த துறையில் ஈடுபட்டு இருக்கிறீர்களோ..! அந்த துறையில் தலைமை இடத்திற்கு வர வேண்டும். 

அதைத்தான் நான் குறிப்பிடுகிறேன். அதே தருணத்தில் நன்கு படித்தவர்களும் கூட அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறேன். '' என்றார்.

ci_29624_tvk_vijay__2_.jpg

ci_29624_tvk_vijay_3__2_.jpg

https://www.virakesari.lk/article/187254

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீட் எனும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது - விஜய்!

03 JUL, 2024 | 03:24 PM
image

'நீட் எனும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்திருக்கிறார். 

தமிழகத்தில் நடைபெற்ற 'ஓ' லெவல் மற்றும் 'ஏ' லெவல் தேர்வுகளில் அதிக பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்த சென்னை உள்ளிட்ட பத்தொன்பது மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் நடிகர் விஜய் பங்கு பற்றி சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்குகிறார்.

இதற்கு முன்னதாக அந்நிகழ்வில் நடிகர் விஜய் பேசியதாவது, 

நீட் தேர்வால் தமிழக கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.

நீட் தேர்வில் மூன்று பிரச்சனைகள் உள்ளது. நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளது. 1975 ஆம் ஆண்டிற்கு முன் கல்வி என்பது மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் மத்திய அரசின் கீழ் வந்தது.

ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல. மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என் சி ஆர் டி எனும் பாடத் திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் சமமாக எழுத முடியும். அதுவும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்றால் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை பற்றி நம் அனைவருக்கும் தெரியும் இதன் மூலம் இந்த தேர்வு மீதான நம்பகத் தன்மை மக்கள் மத்தியில் இழந்து விட்டது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதனை கால தாமதம் செய்யாமல் மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

நிரந்தர தீர்வாக கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி, மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து சிறப்பு பொதுப் பட்டியல் என்ற ஒன்றை உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்விடயத்தில் மாநில அரசுக்கு முழு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் கல்லூரிகளுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளட்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எனது பரிந்துரை. ஆனால் இது நடக்குமா! நடக்க விடுவார்களா! என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இது தொடர்பான எனது பார்வையை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

மாணவர்களாகிய நீங்கள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும். இந்த உலகம் மிகப் பெரியது. அதில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஏதேனும் ஒரு விடயத்தில் தோல்வி அடைந்து விட்டால்.. முடங்கி விடாதீர்கள். தோல்வி அடைந்தால் கடவுள் இன்னும் நிறைய வாய்ப்புகளை உங்களுக்காக வைத்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அது என்னவென்பதை கண்டுபிடியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்'' என்றார்.

poli_3724_3.jpg

https://www.virakesari.lk/article/187599

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் கருத்துத் தெரிவித்த தமிழ்நாட்டின் 3 விவகாரங்கள் என்னென்ன? அவரது அரசியல் சார்பு பற்றி என்ன தெரியவந்திருக்கிறது?

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

பட மூலாதாரம்,X/@VIJAYFC

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 ஜூலை 2024, 03:23 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்திருந்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களத்தில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

‘ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம்’ மற்றும் ‘பிளவுவாத அரசியல் கலாசாரம்’ ஆகியவற்றை எதிர்த்துத் தனது அரசியல் அமையும் என்று தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், பலரது கவனமும் விஜய் பக்கம் திரும்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தன்னை அறிவித்துள்ள நடிகர் விஜய் இதுவரை முக்கியமான மக்கள் பிரச்னைகளில் நேரடியாகத் தனது கருத்தை தெரிவித்தது வெகு சில நேரங்களில் மட்டுமே.

 

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி விஜய் கூறியது என்ன?

இஸ்லாமிய சமூகத்தினருக்குப் பாதகம் விளைவிக்கும் என்று எதிர்க்கட்சிகளால் எதிர்க்கப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார் விஜய்.

“சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.

கள்ளச்சாராய மரணங்கள் பற்றி விஜய் கூறியது என்ன?

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

பட மூலாதாரம்,X/@TVKVIJAYHQ

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து கூலித் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், “கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது” இதுவே முதல் முறையாக மாநில அரசு மீது விஜய் கூறிய முதல் விமர்சனம்.

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

பட மூலாதாரம்,X/@VIJAYFC

நீட் தேர்வு விவகாரத்தில் விஜயின் நிலைப்பாடு என்ன?

இந்த வாரம் சென்னையில் நடைபெற்ற, பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான கல்வி விருது விழாவில் பேசிய விஜய் நீட் தேர்வு குறித்தும் மாநில உரிமைகள் குறித்தும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் கிராமப்புற ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975க்கு முன் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. ஒன்றிய அரசு அதை பொதுப் பட்டியலில் சேர்த்ததே பிரச்னையின் தொடக்கம்.

ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கே எதிராக உள்ளது. பன்முகத்தன்மை நமது பலம், பலவீனம் அல்ல. பல்வேறு குளறுபடிகள் காரணமாக நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. நீட் தேர்வு ரத்து குறித்து தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” என்றார்.

தனது உரையை முடிக்கும்போது , “வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் வருத்தப்படாதீர்கள். கடவுள் உங்களுக்காக மற்றொரு வாய்ப்பை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் என்று அர்த்தம்” என்று மாணவர்களுக்குத் தெரிவித்தார்.

மாணவர்களுக்கான கல்வி விருது நிகழ்வில் முதல் நாள் பேசிய விஜய் நீட் தேர்வு குறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, குவைத்தில் உயிரிழந்த இந்திய தொழிலாளர்களுக்கு இரங்கல், புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு வேதனை, அம்பேத்கர் ஜெயந்திக்கும், ரமலான் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதமர் மோதி, அண்டை மாநிலத் தலைவர்கள், திமுக எம்பிக்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த ஆண்டு, மாணவர் சந்திப்புகளில் பேசிய விஜய், “அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை விட்டுவிடுங்கள். நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான். புதிய தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நமது விரலை வைத்து நாமே குத்திக் கொள்ளக்கூடாது. 1.5 லட்சம் பேர் கொண்ட ஒரு தொகுதியில் வாக்குக்கு ரூ.1000 கொடுத்து, ஒருவர் 15 கோடி செலவு செய்கிறார் என்றால், அவர் அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா?” என்று பேசினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஹதராபாத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்திருந்தார். அதற்கு முன்னதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜயை சந்தித்திருந்தார். இவை எல்லாம் மரியாதை நிமித்தமான சந்திப்புகள் என்றே கூறப்பட்டன.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘தலைவா’ படத்தின் போஸ்டரில் டைம் டு லீட் என்ற வாசகம் இருந்தது. தலைவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்ததால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்த வாசகம் நீக்கப்பட்ட பிறகு படம் வெளியானது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக, அதிக சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கும் போதே, அதை விடுத்து, அரசியலில் இறங்கப் போகிறேன் என்று விஜய் கூறியவுடனே, அவர் எந்தப் பக்கம் செல்லப் போகிறார் என்பது குறித்த பேச்சுகள் தொடங்கிவிட்டன.

 
விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

பட மூலாதாரம்,PAZHA KARUPPAIAH

‘சீமானுடன் சேர்ந்தால் சர்வ நாசம்’ – பழ கருப்பையா

பிபிசி தமிழிடம் பேசிய மூத்த அரசியல்வாதி பழ கருப்பையா, “விஜய் பாஜகவுக்கு எதிராக நிற்கிறார் என்று தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுகவை எதிர்த்துதான் அவர் அரசியலுக்கு வர வேண்டும். இப்போது இருக்கும் ஆட்சி சிறந்தது என்றால், புதிதாக ஒருவர் ஏன் வர வேண்டும்? ஸ்டாலினை எதிர்க்க மாட்டார் என்றால், விஜய் கட்சி தொடங்குவதற்கான தேவையே கிடையாது," என்று கூறினார்.

மேலும், "யாரோடு சேரக்கூடாது என்று விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். சீமானுடன் சேர்ந்தால் சர்வ நாசம் ஆகிவிடுவார். அது அவருக்குத் தெரியாது, நான் சொல்கிறேன். ரெட்டியார், நாயக்கர், நாயுடு, அருந்ததியர் ஆகியோர் தமிழர்கள் இல்லை என்று கூறி 20% வாக்குகளை ஒதுக்கி வைத்துள்ளார் சீமான். பாஜகவுடன் சேர்ந்தால் 12% இஸ்லாமிய வாக்குகள் கிடைக்காது."

"விஜய் கூறியுள்ள ஒன்றிரண்டு விஷயங்களை வைத்து அவரின் முழு உள்ளத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் மென்மையான எதிர்ப்பாளியாக இருக்கிறார். வன்மையாகக் கையாள வேண்டும் என்பது என் கருத்து,” என்று கூறுகிறார் பழ கருப்பையா.

 

'திமுகவின் வாக்கு வங்கி குறையும்' - தமிழருவி மணியன்

விஜய் அரசியலுக்கு வருவதால் உடனடி பாதிப்பு திமுகவுக்கு என்கிறார் ரஜினியின் அரசியல் ஆலோசகரான தமிழருவி மணியன்.

திமுகவின் வாக்கு வங்கியில் 16% சிறுபான்மையினரின் வாக்குகள். சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்ற திமுகவைவிட, தலித் கிறிஸ்தவரான விஜய் அதைக் கூறினால், மக்களிடம் எடுபடும். தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும் விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்தினர். முதல்வரும் உதயநிதியும் மட்டும்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை” என்றார்.

திமுக கூறும் கருத்துகளையே விஜய் கூறினால், திமுக கூட்டணிக் கட்சிகளை விஜய் பக்கம் இழுக்க வாய்ப்புண்டு என்கிறார் அவர்.

“திருமாவளவன் திமுகவில் மகிழ்ச்சியாக இல்லை, இறுக்கமாகத்தான் இருக்கிறார். புதுக்கோட்டையில் 300 பேர் வசிக்கும் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் அள்ளிப் போட்டவர்களை இன்னுமா கண்டுபிடிக்கிறார்கள்? இதன் பின்னால் உள்ள நுண் அரசியல் அவருக்குத் தெரியாதா? பாசிச எதிர்ப்பு, என்பதற்காகத்தான் அங்கு இருக்கிறார். அதையே விஜய் கூறினால், அவருடன் சேர வாய்ப்புண்டுதானே! விஜய் ‘ஒன்றிய அரசு’ என்றுதான் கூறுகிறார். இவை எல்லாம் சூசகமாக என்ன கூறுகிறது?” என்றார்.

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

பட மூலாதாரம்,FACEBOOK/ தமிழருவி

சீமானும் விஜய்யும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உண்டு என்று கூறும் தமிழருவி மணியன், “விஜய்யை வரவேற்க சீமான் தயாராக இருக்கிறார். அவருக்குப் பின்னால் இருப்பது தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் என்றாலும், கூட்டணி அமைக்க ஒத்த கருத்து தேவையில்லை, பொது எதிரி இருந்தால் போதும். அது திமுக. 1967இல் தமிழ்நாட்டில் காமராஜரை வீழ்த்துவதற்காக, முற்றிலும் வெவ்வேறான கொள்கைகள் கொண்ட கருணாநிதி, ராஜாஜி, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்டுகள் ஒன்றிணைந்தனர்.

அதேபோன்று 1977இல் மத்தியில் இந்திரா காந்தி என்ற பொது எதிரியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இருப்பினும், விஜய்க்கு அதிகபட்சமாக 8-10% வாக்குகளுக்கு மேல் கிடைக்காது. சீமானுடன் சேர்ந்தாலும் மொத்தமாக 20%க்கு மேல் கிடைக்காது. எனவே இந்தக் கூட்டணி கோட்டையைப் பிடிக்க முடியாது,” என்றார்.

மேலும், விஜய் தனது நகர்வுகளை மிகவும் திட்டமிட்டு எடுத்து வைப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் தமிழருவி மணியன். “காமராஜர் சாயலில் முதல் அடியைக் கல்வியை நோக்கி எடுத்து வைத்துள்ளார். ஏழை எளியவர்களுக்கு இரவுப் பாடசாலை, ஆண்டுதோறும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விருது, ஏழை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் படிக்க நூலகங்கள் அமைக்கக் கூறியுள்ளார். அம்பேத்கர் ஜெயந்தியின்போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அதை விழாவாகக் கொண்டாடச் சொல்லியிருந்தார். ரமலான் பண்டிகையின் போது இஸ்லாமிய மக்களுடன் நோன்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்” என்றார்.

 

'ரஜினியுடன் இருந்த மூன்று ஆண்டுகள் வீணாகிவிட்டது'

எனினும் நடிகர்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் அவர் பதிவு செய்கிறார்.

“நான் மூன்று ஆண்டுகள் ரஜினிகாந்துடன் பயணம் செய்து, ஆயிரம் வியூகங்களை அமைத்து, எனது காலத்தை வீணடித்துவிட்டேன். எனது நம்பகத்தன்மையையும் ஓரளவு இழந்துவிட்டேன். ஆனால் ரஜினி எதையும் இழக்கவில்லை. எனது சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன், நடிகர்களிடம் இருந்தது பெரிதாக எதையும் எதிர்ப்பார்க்க முடியாது. 90களில் ரஜினிகாந்துக்கு இருந்தது போல, தற்போது விஜய்க்கு ரசிகர் கூட்டம் உள்ளது. ரஜினி மாதிரி கடைசி நேரத்தில் பின்வாங்குவாரா இல்லையா என்று எப்படி உறுதியாகத் தெரியும்? அரசியல் என்பது பெரும் திமிங்கலங்கள் உள்ள பெருங்கடல், இதில் விஜய் கரை சேர்வது மிகவும் அரிது” என்றார்.

நல்ல தெளிவான அரசியல் சிந்தனை உள்ளவர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்று விஜய் மக்களுக்குக் காட்டவில்லை என்றும், அது அவருக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதைக் காலம் அவருக்கு உணர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

'பாஜகவின் பிடியிலிருந்து விஜய் தப்ப முடியாது'

டென்வர் பல்கலைகழக பகுதி நேர பேராசிரியரும், சென்னை பல்கலைக்கழக அரசியல் பொது நிர்வாகத் துறையின் முன்னாள் தலைவருமான ராமு மணிவண்ணன், “தனது பலம் என்னவென்று தெரிந்துகொள்ள விஜய் தனியாகப் போட்டியிடுவார். அவரது இளம் ரசிகர்களுக்கு பொதுவெளியில் ஒரு இடம் இருக்கிறது, ஆனால் விஜய் எந்தப் பக்கம் நோக்கித் தனது அரசியலை நடத்துவார் என்று கேட்டால், அது இன்னும் அவருக்கே தெரியாது," என்கிறார்.

"ரஜினி 90களில், சிறந்த நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி, தானே ஒரு பிராண்டாக உருவான போது அவரது புகைப்படங்களை அட்டைப் படமாகப் போட்டனர் குமுதமும் ஆனந்த விகடனும். ஆனால் அவரால் ஒரு அரசியல்வாதியாக உருவெடுக்க முடியவில்லை. இப்போது ஊடகங்கள் அதைத்தான் விஜய்க்கும் செய்கின்றனர்” என்றார்.

விஜய்யின் குடியுரிமை திருத்தச் சட்டம், நீட் தேர்வு குறித்த கருத்துகளைக் கொண்டு அவர் பாஜகவுக்கு எதிராக நிற்கிறார் என்று கூறப்பட்டாலும், அப்படிக் கூற முடியாது என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

“தமிழ்நாட்டுக்கு என்று ஒரு நிலைப்பாடு உண்டு, அதைத்தான் விஜய் பேசுகிறார். திமுக, அதிமுக யாராக இருந்தாலும் மாநிலத்துக்கான பொது நிலைப்பாட்டைத்தான் பேசுவார்கள். பாஜகவின் பிடியிலிருந்து வெகுதொலைவில் இருக்க முடியாது. கல்வி விருது நிகழ்ச்சி நடத்த எப்படிப் பணம் கிடைக்கிறது என்பது போன்ற பல கேள்விகள் எழும்,” என்றார்.

மேலும், “ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று தெரியும்வரை அவரைப் பற்றிய பேச்சு இருந்துகொண்டே இருந்தது. தெரிந்தபிறகு, காணாமல் போய்விட்டார். அதே போன்றுதான், விஜய்யும். விஜய் எல்லாருக்கும் எதிரி, எல்லோருடன் இணங்கிப் போவது என்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளார். அவர் எந்தப் பக்கம் என்று தெரிந்துவிட்டால் அவரது முக்கியத்துவம் குறைந்துவிடும். தமிழகத்தைப் புரட்டிப் போடும் அளவுக்கு அவர் ஏதும் செய்யாத வரை அவர் மீதான நம்பிக்கை குறைவுதான்” என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.