Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   21 JUL, 2024 | 07:58 PM

image
 

கூட்டமைப்பினை மீள உருவாக்க வேண்டும். அது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றுகையில்;

கடந்த எட்டுத் தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரத்துக்காக, அவர்களின் இறையாண்மையை நிலை நிறுத்துவதற்காக, சிங்கள பௌத்த ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக, இரத்தமும் சதையுமாக நடைபெற்று வருகின்ற போராட்ட வலியின் நீட்சியில் உருவான, ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான அரசியல் இயக்கங்களில் ஒன்றாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ளது தமிழ் மக்கள் கூட்டணி.

ஈழத்தமிழினத்தின் இறையாண்மைக்கு நீதிவேண்டி நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்களையும், அபிலாசை வெளிப்பாடுகளையும் சிங்கள தேசம் எப்போது புரிந்துகொள்ளத் தலைப்படுகிறதோ, அப்போதுதான் அர்த்தம் மிகுந்த இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும். 

அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பினையும், இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்ட அதிகார பீடங்களின் செயல்முறைகளையும் நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதில் தெளிவுற்றுள்ள போதும், அடிப்படை விருப்புகளைக் கோருகின்ற எமது அரசியல் உரிமையின் மீது போர் தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை, ‘தமிழ்த்தேசியம்’ என்னும் ஓர் குடையின் கீழ் நின்று கூட்டாய் எதிர்க்கும் திராணியை உருவாக்குவதில் தான் ஈழத்தமிழினம் இன்று பெருந்தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

எட்டு தசாப்தங்கள் கடந்தும், நீர்த்துப்போகாத அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின், அடிப்படை மற்றும் அரசியல் உரித்துகளை அங்கீகரித்து, அர்த்தமுள்ள அரசியல் அதிகாரப் பகிர்வின் மூலம் இனச் சமத்துவத்தை அங்கீகரிக்கின்ற, பொருளாதார சுபீட்சமுள்ள இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு, இலங்கை அரசு தொடர்ந்தும் தவறி வருகிறது என்பதை பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகள் உணர்ந்துகொள்ளும் காலமும் நேரமும் நெருங்கி வந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இத்தகையதோர் சாதகத்தன்மை மிக்க அரசியற் சூழமைவில் ஈழத்தமிழர்களின் குரலை, தமிழ்த்தேசியம் என்னும் இயங்குதளத்தில் நின்று கூட்டுக் குரலாக ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமானது.  

தமிழ்த்தேசிய அரசியலில் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளைத் தீர்மானித்தல், சர்வதேச உறவுகளை மெய்நிலையில் வலுப்படுத்தல், இளைய தலைமுறை அரசியலாளர்களை வலுப்படுத்தல், மக்களை அரசியல்மயப்படுத்தல், மக்களின் உணர்ச்சியையும் திரட்சியையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தல் உள்ளிட்ட அரசியற் செல்நெறிகளை செயலுருப்பெறச் செய்ய வேண்டியுள்ளது.

மேற்கூறிய அத்தனையையும், இனநலன் ஒன்றையே நோக்காகக் கொண்ட நல்ல தலைமைத்துவத்தால் மட்டுமே ஏற்படுத்த முடியும். வினைத்திறனான தலைமைப் பண்புகளுக்குள் இவை அனைத்தும் அடங்கும். இப்போது நம் இனத்துக்கு இருக்கும் மிகப்பெரிய இடைவெளி ஆதர்சனத் தலைமையற்ற தன்மையே.

 சனத்திரட்சியை உருவாக்;கக்கூடிய, ஜனவசியம் மிக்க, மிக நேர்த்தியான தலைமைத்துவத்தை யாராலும் சரியான முறையில் கொடுக்க முடியவில்லை. அல்லது அத்தகைய அணுகுமுறைகள் குறித்து சிந்திக்கவில்லை. ஆனால் அதற்கான களச்சூழலை உருவாக்க வேண்டியது காலப் பெரும் பணியாக எம்முன் உள்ளதை நாம் உணரத் தலைப்பட வேண்டும்.

நம் எதிரிகள் ஒரு காலத்தில் நம் தலைவர்களை அழித்தார்கள். இன்று தலைவர்கள் உருவாகுவதற்கான சூழலை அழிக்கின்றார்கள். பொது எதிரியை எதிர்கொள்வதற்காக எமக்குள் உள்ள எதிர்ப்புணர்வுகளை புறம்தள்ளி ஒரு பொதுவான அரசியல் இயக்கத்துக்குள்  நாம் நிலமும் புலமுமாக இணைய வேண்டும். 

இந்தப் புள்ளியில் தான் யதார்த்தப் புறநிலைகளைப் புரிந்தவர்களாக, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தாது இன நலன்களை முன்னிறுத்தும் ஓர் கூட்டுத் தலைமையின் உருவாக்கம் குறித்தும், அத்தகைய நேர்கோட்டில் இயங்கும் ஒவ்வொரு கட்சிகளினதும் மரபார்ந்த தனித்துவங்களைப் பேணி ஒற்றுமைக்குள் வேற்றுமையும் வேற்றுமைக்குள் ஒற்றுமையும் காணுவது குறித்தும், கூட்டமைப்பை மீள உருவாக்குவது குறித்தும், அவ்வாறு மீளுருவாக்கம் பெறும் கூட்டமைப்பு என்பது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், அதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்த மாநாட்டின் ஊடாக நான் அழைப்பு விடுக்கிறேன்.

இன்று தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கின்றன. இங்கு தான் உரிமை அரசியலை சலுகை அரசியல் வெல்கிறது. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ் தேசிய அரசியல் மறுசீரமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும்.

இனத்துவ அரசியலை முன்னெடுக்கும் சமநேரத்தில், தேர்தல் அரசியலையும் எதிர்கொள்ள வேண்டிய தேவை எம்மிடத்தே திணிக்கப்பட்டிருக்கிறது. 

தேர்தல்கள் என்பதில் உள்ள அதிகார சபைகள் தேர்தல் - இளைய அரசியலாளர்களுக்கான பயில்களமாகவும் மாகாண சபைத் தேர்தல்கள் என்பது அறிவும் ஆற்றலும் மிக்க துறைசார் விற்பன்னர்களை பயன்கொள்ளும் களமாகவும், பாராளுமன்றத் தேர்தல் என்பது இனத்தின் அபிலாசைகளை சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்லும் விரும்பும் வாண்மைத்துவமும் மிக்க தலைவர்களுக்கான களமாகவும் அமைய வேண்டும். இந்த சிந்தனைத் தெளிவு கட்சி ரீதியாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இவற்றைத் தாண்டி, நிலத்தையும் புலத்தையும் நாம் உணர்ச்சிகளால் மட்டுமே பிணைத்து வைத்துள்ளோம். இது அறிவு மைய பிணைப்பாக மாறவேண்டும். 

இந்த விடயத்தில் உள்ள பலம் பலவீனங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய காலத்தேவை எழுந்துள்ளது. தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்கால நிலைத்திருப்பு நோக்கியும் தமிழினத்தினுடைய விடுதலை வேணவாக்களை முன்கொண்டு செல்வதற்கும் நிலத்திலும் புலத்திலும், தாய்த் தமிழகத்திலும் வாழ் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

ஈழத்தமிழர்கள் எவ்வாறு கொள்கை வேறுபாடுகளோடும் அரசியல் சித்தாந்த வேறுபாடுகளோடும் திசைவேறாக பிரிந்திருக்கிறார்களோ அதேபோன்றதொரு பிரிவினைகள் மிகுந்த நிலை தான் புலத்திலும் வேரோடியிருக்கிறது. 

விடுதலை வேண்டிப் பயணிக்கும் எங்கள் இனம், தன் இலக்கை அடைந்துகொள்ளும் எதிர்காலப் பயணங்களில் இதனால் பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்.

ஆழமாக நோக்கினால் ஈழத் தமிழ்த் தேசிய இனம் தொடர்ந்தும் தொடர்ந்தும் தன் வல்லமைகள் அத்தனையையும் இழந்து கொண்டேயிருக்கின்றது. மாறாக எதையும் பெறவில்லை. 

அது அரசியல் தீர்வாக இருக்கலாம். நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தியாகவும் இருக்கலாம். கருதத்தக்க எதையும் சுதந்திரத்துக்குப் பின் எங்கள் இனம் பெறவேயில்லை. 

இனத்தின் விடுதலை குறித்த சிந்தனைகள் வலுக்குன்றத் தொடங்கியிருக்கும் எங்களின் இரண்டாம் தலைமுறையினரிடத்தே, எங்கள் அறப்போர் குறித்த புரிதல்கள் குறுகியிருப்பதை அவதானிக்க முடிகிறது. 

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடிய இந்த நாட்டின் ஜனாதிபதி, நாற்பது வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையினர் அரசியல் நாட்டமற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தை மிக நாசூக்காக பதிவுசெய்திருந்தார். 

ஒருவகையில் பார்த்தால் அரசியற் தெளிவும் கொள்கைப் பிடிப்பும் மிக்க இளையோரை வழிப்படுத்துகின்ற, அரசியல் நெறிப்படுத்துகின்ற சமூகப் பொறுப்பிலிருந்து நாம் தவறிவருகிறோம் என்பதை உணர முடிகிறது.

ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் எவை என்ற கேள்வியை எங்கள் இளைய தலைமுறையை நோக்கி எழுப்பினால், நிலப்பறிப்பு, காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை என்கின்ற மூன்று தளநிலைகளுமே அவர்களால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

 ஆனால் அந்த மூன்று பிரச்சினைகளும் இனவிடுதலைப் போருக்கான களத்தைத் திறக்கவில்லை என்கின்ற பொதுப் புரிதல் இன்று எங்களிடத்தே இல்லை. 

பலாலி விளிம்பு முதல் பொத்துவில் வரை தமிழர்களின் மரபுவழித் தாயகமாக எங்கள் வசமிருந்தபோதே எங்கள் இனத்தின் அறப்போர் ஆரம்பித்திருந்தது என்பதையும், மேற்சொன்ன காரணங்கள் அந்தப் போர் சார்ந்து பின்வந்த நாட்களில் வலிந்து திணிக்கப்பட்ட துணைக்காரணங்கள் தாம் என்பதையும் உணரத் தலைப்பட்டால் தான், இனவிடுதலைப் போரின் அறநிலை சார் அடுத்த களங்களை உருவாக்க முடியும்.

ஆகவே, கொள்கைரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புகளுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே இங்குள்ள ஒவ்வொருவரினதும் முதன்மைக் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

எமது சிந்தனைகளை மீள் வடிவமைப்புக்கு கொண்டுவருவதன் மூலம் காலத்தின் வேகத்துடனும், பூகோள மாற்றங்களுடனும் எமது மக்களின் அபிலாசைத் தளங்களிலிருந்து தடம்புரளாது பயணிக்க வேண்டியுள்ளது. 

இந்த நெருக்கடிமிக்க சூழலை எளிதாகக் கையாள்வதாயின், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், புலத்திலிருந்தவாறு இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் உறவுகளும் ஒருங்குசேர தம் அரசியற் பயணத்தை முன்கொண்டு செல்வதற்கான எதிர்கால வழி வரைபடம் ஒன்றையும் அதுசார் கொள்கை வகுப்புகளையும் உருவாக்க வேண்டும்.

அத்தகையதோர் தளத்தில் நின்று எல்லாத் தரப்பினரையும் இணைத்துச் செயலாற்றுவதன் தேவையுணர்ந்த ஒருவனாக, அந்தத் தளத்தின் இணைப்புப்பாலமாக இருந்து என் எல்லா இயலுமைகளைக் கடந்தும் ஈழத்தமிழினத்தின் அரசியல் வேட்கையைச் சுமந்த பயணத்தின் பங்குதாரராக செயலாற்றுவதில் எனக்கிருக்கும் விருப்பையும், கடமையையும் நான் இவ்விடத்தில் வெளிப்படையாகவே பதிவுசெய்து நிறைவுசெய்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189032

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நெருக்கடிமிக்க சூழலை எளிதாகக் கையாள்வதாயின், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், புலத்திலிருந்தவாறு இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் உறவுகளும் ஒருங்குசேர தம் அரசியற் பயணத்தை முன்கொண்டு செல்வதற்கான எதிர்கால வழி வரைபடம் ஒன்றையும் அதுசார் கொள்கை வகுப்புகளையும் உருவாக்க வேண்டும்.

தேவையான வரலாற்றை உணர்ந்த பேச்சு. ஆனால் செயல்???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.