Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"பிரியமான தோழிக்கு [காதலிக்கு]"
 
 
இலங்கை, யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில், அன்று மகிழன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பொதுவாக கருணையும், இரக்கமும் கொண்டவன். அவன் இளம் பொறியியலாளராக இருந்தும் எழுத்தின் மீதும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு இருந்தான். ஒரு நாள் யாழ் நூலகத்தில், இலக்கிய புத்தகங்களை அவன் கண் மேய்ந்துகொண்டு இருந்தபொழுது, தற்செயலாக அவன் கண்ணில் பட்டவள் தான், இன்று அவனின் பிரியமான தோழியான, அன்பு மனைவியான இலக்கியா.
 
இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருக்கும் அழகான மற்றும் புத்திசாலி இளம் பெண் அவள். இருவர் கண்களும் அங்கு தங்களை அறியாமலே ஒருவரை ஒருவர் மேய்ந்தன. 'ஹாய்' என்று மகிழன் முதலில் கதையைத் தொடங்கினான். இருவரின் ஆர்வமும் இலக்கியத்தில் படர்ந்து இருந்ததால், அந்தக்கணத்திலேயே ஒரு ஈர்ப்பு இருவருக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதிலும் இலக்கியாவின் 'மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற, காது வரை நீண்ட கூந்தலும், பார்த்தவர் நெஞ்சைச் சூறையாடும் கெண்டை விழியும், முருக்கம்பூ அரும்பு போன்றிருக்கும் சிவந்த இதழும், வளைந்த வில்லைப் போலவும், பிறையைப் போலவும் இருக்கும் நெற்றியும் அவனுக்கு ஏதேதோ சொல்லியது.
 
"இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை
ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள்
திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச்
சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"
 
ஒரு சில நாட்கள் கழித்து, ஜூன் மாத தொடக்கத்தில், மீண்டும் ஒரு நாள் யாழ் நகரில் உள்ள புத்தகக் கடையில் சந்தித்தனர், என்ன ஆச்சரியம் இருவரும் ஒரே புத்தகத்தை எடுத்தனர். தங்களை அறியாமலே ஒரு கணம் அவர்களின் கண்கள் மூடப்பட்டன, விதி தலையிட்டதைப் போல அவர்கள் புன்னகையை பரிமாறிக் கொண்டனர். அவர்கள் இம்முறை கொஞ்சம் விபரமாகத் பேசத் தொடங்கியபோது, அவர்கள் பல பகிரப்பட்ட ஆர்வங்கள் மற்றும் அவர்களின் ஆன்மாக்களுக்கு இடையே மறுக்க முடியாத தொடர்பைக் கண்டுபிடித்தனர். மகிழன் மற்றும் இலக்கியா விரைவில் பிரிக்க முடியாத நண்பர்களாக மாறினர்.
 
அதன் பின் அவர்கள் எண்ணற்ற மணிநேரங்களை பூங்காக்களில், கடற்கரைகளில் உலாவியும், தங்களுக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றி விவாதித்தும், மற்றும் தங்கள் கனவுகளையும் அபிலாஷைகளையும் பகிர்ந்தும் கொண்டனர். அவர்கள் இந்த அழகிய கோடை காலத்தில், அதிக அதிக நேரம் ஒன்றாக செலவழிக்க, அவர்களுக்கிடையில் ஒரு அன்பு நட்பு வலுவாக வளர்ந்தது. ஆனால் அது வெறும் நட்பா அல்லது காதலா என்பது இன்னும் வெளிப்படையாக தெரியவில்லை.
 
ஆனால் மகிழன் இலக்கியாவைக் கண்டு, அவள் கண்களின் அழகை வியந்து, அவள் பேசும் இனிய மொழிகளைக் கேட்டு இன்புற்று, அவளுடைய பெரிய, மென்மையான தோளைத் தெரிந்தும் தெரியாமலும் தழுவி தனக்குள் மகிழ்ந்தான். அவளைப் பற்றிய நினைவாகவே எந்தநேரமும் இருந்தான். அதனால் அவனுடைய உடல்நிலையிலும் மனநிலையிலும் பெரிய மாற்றத்தைக் கண்ட அவனின் வேலைத்தள நண்பன் ஒருவன் “ உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் இவ்வாறு வருத்தமாக உள்ளாய்?” என்று கேட்டான். அதற்கு மகிழன் “இலக்கியாவின் அழகும் அவள் பேசிய இனிய் சொற்களும் என்னை மிகவும் கவர்ந்தன. அவளுடைய கண்கள் பூக்களைப் போல் அழகாக இருந்தாலும் அவை என்னைத் தாக்கி, எனக்குத் தாங்க முடியாத காதல் நோயைத் தருகின்றன.” என்று கூறினான்.
 
"பூவொத் தலமருந் தகைய ஏவொத்து
எல்லாரும் அறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரீஇ வித்திய ஏனற்
குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே."
 
எனினும் மகிழனுக்கு இது ஒரு தலை காதலா, இல்லை இலக்கியாவும் காதலிக்கிறாளா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. அது மட்டும் அல்ல, இலக்கியா தொடர்ந்து சந்திப்பதற்கும் தன்னுடன் பழகுவதற்கும் தயங்குவதும் தெரிந்தது. இது அவளுடைய பெற்றோர்களின் கட்டுப்பாடாகவோ அல்லது அவளின் களவொழுக்கம் பிறருக்குத் தெரியவந்தால் அதனால் அலர் (ஊர்மக்களின் பழிச்சொல்) எழும் என்ற அச்சமாகவோ இருக்கலாம் என்று மகிழன் தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டான். அதற்கு சாட்சியாக அவன் முன்னர் வாசித்த ஒரு சங்க இலக்கிய பாடலை வாயில் முணுமுணுத்தான்.
 
அந்த பாடலில் தலைவியின் தோழி “நீ அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாய். நீ அவனை விரும்புகிறாய். அவனும் உன் ஞாபமாகவே இருந்து உடல் மெலிந்து காணப்படுகிறான். இந்த நிலையில், நீ அவனைச் சந்தித்துப் பழகுவதுதான் சரியானதாக எனக்குத் தோன்றுகிறது. நீ அவனைச் சந்திக்கத் தயங்கினால், அவனுக்கு உன் விருப்பம் எப்படித் தெரியும்? நீ அவனை விரும்புவது அவனுக்குத் தெரியாவிட்டால், அவன் உனக்காக வெகுநாட்கள் காத்திருக்காமல், வேறொரு பெண்னைக் காதலிக்கத் தொடங்கி விடுவான். ஆகவே, அவன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று. உன் அன்பையும் விருப்பத்தையும் அவனிடம் நீ பகிர்ந்துகொள்.” என்று கூறினாள், அது போல இலக்கியாவுக்கும் யாராவது அவளின் ஒரு நண்பி அறிவுரை ஒன்றை கூறமாட்டார்களா என்று ஏங்கினான்.
 
"விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோலச்
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே."
 
அவர்கள் இருவரும் பல இலக்கியம் சம்பந்தமான விடயங்களை அலசி இருந்தாலும், மகிழன் அவ்வப்போது தன் காதல் விருப்பத்தை இலைமறை காய்போல் கூறி இருந்தாலும், இலக்கியா அதை, அவனின் விருப்பத்தை அறிந்ததாகவோ , இல்லை தனக்கும் ஒரு காதல் உணர்வு அவன் மேல் உண்டு என்றோ இதுவரை வெளிப்டையாகக் காட்டிக் கொள்ளவில்லை.
 
ஒருவேளை பெண்களில் இயற்கையாக ஏற்படும் வெட்கமாக இருக்கலாம் என அவனின் மனம் அவனுக்கு ஆறுதல் கொடுத்தாலும் அந்த ஏக்கம், அவளின் மேல் கொண்ட ஆசை அவனை, ஒரு மாலை நேரத்தில், சூரியன் மறைந்து வானத்தை இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறங்களால் வரைந்தபோது, அவன் தனது இதயத்தையும் ஆன்மாவையும் சில பக்கங்களில் இலக்கிய நடையில் ஊற்றி, அவளின் அன்பின் சாரத்தையும் உணர்ச்சிகளின் ஆழத்தையும் அறிய, தனது உணர்வுகளை இலக்கியாவிடம் ஒரு இதயப்பூர்வமான கடிதத்தின் வடிவத்தில் வெளிப்படுத்த முடிவு செய்து இரவு இரவாக எழுதினான்.
 
அடுத்த நாள், "பிரியமான தோழிக்கு" என ஆரம்பித்த அந்த காதல் மடலை கைகள் நடுங்க, இதயம் துடிக்க, மகிழன் இலக்கியாவிடம் நீட்டினான். ஒவ்வொரு பக்கமும் அவள் இதயத்துக்குள் நேராக புகுந்து நடனமாடியது. அவனது வார்த்தைகளைப் படிக்கும்போது அவள் மகிழ்வில், அதன் எதிர்பார்ப்பில் முழுதாக நனைந்தாள். அவன் தன் மீதுள்ள அன்பின் ஆழத்தை அறிந்த பொழுது, அதை உணர்ந்த பொழுது அவள் கண்களில், அவளை அறியாமலே கண்ணீர் பெருகியது.
 
அந்தக் கடிதத்தில், மகிழன் இலக்கியாவை "பிரியமான தோழிக்கு" என்று அழைத்து, அவளது சிரிப்பு தனது நாட்களை சூரிய ஒளி போல் நிரப்பிய விதம், அவளுடைய புன்னகை எப்படி இருண்ட அவனது இதய அறையையும் ஒளிரச் செய்தது, எப்படி அவளுடைய இருப்பு தன்னை உலகின் அதிர்ஷ்டசாலியாக உணரவைத்தது இப்படி சிலவற்றை கூறி, இலக்கியத்தை அவன் முழுதாக சுவைக்க, அவளது அசைக்க முடியாத ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு அவன் தனது நன்றியையும் தெரிவித்தான்.
 
மகிழன் மேலும் இலக்கியாவின் பக்கவாட்டில் என்றும் எந்த நிலையிலும் தான் உறுதியாக நிற்பேன் என்றும், அவளுக்கு ஆதரவு தேவைப்படும்போது அவளுக்கு ஒரு பாறையாக உறுதியாக இருப்பேன் என்றும், அவளுடைய மகிழ்ச்சி மற்றும் துக்கங்களில் பங்கு கொள்வதாகவும் உறுதியளித்தான் . உலகத்தை ஒன்றாக ஆராய்வது, கைகோர்ப்பது மற்றும் வாழ்நாள் முழுவதும் அழகான நினைவுகளை உருவாக்குவது போன்ற கனவுகளைப் பற்றி அவன் எழுதியிருந்தான்.
 
அந்தக் கடிதத்தைப் படித்து முடித்த இலக்கியாவின் இதயம் அன்பாலும் மகிழ்ச்சியாலும் பொங்கியது. மகிழன் தனது உண்மையான அன்பு, ஆத்ம தோழன் என்பதை அவள் ஆன்மாவின் ஆழத்தில் அறிந்தாள். அவள் முகத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிய, மகிழனின் கைகளுக்குள் விரைந்தாள், அவளுடைய உணர்ச்சிகளை அவளால் அடக்க முடியவில்லை.
 
அந்த தருணத்திலிருந்து, அவர்கள் காதல் ஒவ்வொரு நாளும் வலுவடைந்தது. மகிழன் அவளுடன் சேர்ந்து இலக்கியத்தில் எண்ணற்ற சாகசங்களை மேற்கொண்டான். வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகளை உருவாக்கினான். அவர்கள் ஒருவருக்கொருவர் தமது காதல் வெற்றிகளையும் கொண்டாடினர். அது மட்டும் அல்ல, சவாலான காலங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்று, தங்கள் அன்பின் சுடரைத் தொடர்ந்து எரிய வைத்தனர்.
 
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் ஒன்றாக அமர்ந்து, தங்கள் பயணத்தை நினைவு கூர்ந்தபோது, மகிழன் ஒரு கிழிந்த பெட்டியை வெளியே எடுத்தான். இத்தனை வருடங்களுக்கு முன்பு இலக்கியாவுக்கு அவன் எழுதிய, "பிரியமான தோழிக்கு" என்ற நேசத்துக்குரிய கடிதம் உள்ளே இருந்தது. அவர்கள் அதை மீண்டும் ஒருமுறை படித்து, தங்கள் உணர்ச்சிகளின் தீவிரத்தையும், அவர்களை ஒன்றிணைத்த தூய அன்பையும் மீட்டெடுத்தனர்.
 
மகிழன் இலக்கியாவைப் பார்த்து, தனது அன்பான காதலி இன்று அன்பான மனைவியாக மாறினார் என கிசுகிசுத்தார், "என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருந்ததற்கு நன்றி. நான் இப்போதும் என்றென்றும் உன்னை நேசிக்கிறேன்." இலக்கியா சிரித்தாள், அவளுடைய கண்கள் அன்பால் பிரகாசித்தன, "நானும் உன்னை காதலிக்கிறேன், மை டியர் மகிழன். நாங்கள் ஒன்றாக ஒரு காதல் கதையை உருவாக்குவோம், அது என்றென்றும் நினைவில் இருக்கும்." என்றாள்.
 
எனவே, அவர்களின் காதல் கதை தொடர்ந்தது, இரண்டு ஆத்மாக்கள் பின்னிப்பிணைந்த ஒரு அழகான வாழ்வு, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு அன்பைப் பகிர்ந்து கொண்டது!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
357017001_10223453298103398_8013502745540050391_n.jpg?stp=dst-jpg_p370x247&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=dv2o4W7U53wQ7kNvgEFU2Tk&_nc_ht=scontent-lhr8-2.xx&gid=AwF4dKChgjOSsPs5JDwsAgs&oh=00_AYBjFvdlf4ndyxOyJCebU0C0GhPJVgeZvLWKSOCUnw7hkw&oe=66B1547A 357386199_10223453297303378_5922719443569198871_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=nCifkMzWdkAQ7kNvgENZBjQ&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=AwF4dKChgjOSsPs5JDwsAgs&oh=00_AYBhHQ36Q9VNPgUomW6GgCROTPnS_pX92nX54N2eOUn3sw&oe=66B14B44 
 
357053135_10223453297423381_7872039564821014526_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=-lbKnIFW-M0Q7kNvgH8hTBm&_nc_ht=scontent-lhr6-1.xx&gid=AwF4dKChgjOSsPs5JDwsAgs&oh=00_AYAC9XmqvkGkUQGswJb9r_PyYicLzx_46A5qKiAZdn-lbw&oe=66B14DCA
 
 


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.