Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
பட்டியலினத்தில் உள்ஒதுக்கீடு: திமுக அரசின் சட்டம், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,(சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆ.விஜயானந்த்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூக மக்களுக்கு, 3% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை அங்கீகரித்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டால் யாருக்கு பயன்?

பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக, வியாழன் (ஆகஸ்ட் 1) அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் 2009-ஆம் ஆண்டு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பட்டியலினப் பிரிவில், அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது, அம்மக்களின் நீண்டகால கோரிக்கை. இதை ஏற்று 2009-ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, மாநிலத்தில் பட்டியலினப் பிரிவினருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3% இடஒதுக்கீட்டை வழங்கியது.

இதை எதிர்த்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல், பஞ்சாபில் வால்மீகி, மசாபி ஆகிய பிரிவினருக்கு எஸ்.சி இடஒதுக்கட்டில் உள்ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு 2010-ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த வழக்குகளை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற, 2020-ஆம் ஆண்டில் ஐந்து நீதிபதிகள் அமர்வு பரிந்துரைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை முடிந்த பின், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1) அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில், ஆறு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பையும் பீலா திரிவேதி என்ற நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் பிறப்பித்தார்.

பட்டியலினத்தில் உள்ஒதுக்கீடு: திமுக அரசின் சட்டம், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது," என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு கூறுவது என்ன?

உச்ச நீதிமன்ற தீர்ப்பில், "உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. குறிப்பிட்ட சாதியினருக்கு இடஒதுக்கீட்டில் முறையாக பலன் கிடைக்கவில்லை என்பதற்கான முழு தரவுகள் அடிப்படையில் உள்இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதேநேரம், புள்ளிவிவரங்களின்படி, எஸ்.சி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்ல. அது பலதரப்பட்ட சாதிகள் அடங்கிய பிரிவு என்பது உறுதியாகிறது.

"அரசியல் சாசன சட்டத்தின் 15,16 ஆகிய பிரிவுகள், ஒரு சாதியை உட்பிரிவாக பிரிப்பதில் மாநிலங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஆனால், தங்களுக்கு வேண்டியபடி உட்பிரிவுகளை உருவாக்க முடியாது. எஸ்.சி., பிரிவில் உண்மையில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் சென்று சேர வேண்டும்," எனத் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நீதிபதி பீலா திரிவேதி, "அரசியல் சட்டத்தின் 341-வது பிரிவை திருத்த மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை. எஸ்.சி., பிரிவில் எந்தெந்த சாதிகள் இடம்பெற வேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவு செய்ய முடியும்," என, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பின் மூலம், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட 3% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுகுறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தகவலில், ‘உள்இடஒதுக்கீடு வழங்க, முறையாக குழு அமைத்து 3% ஒதுக்கீட்டை முதல்வராக இருந்த கருணாநிதி வழங்கினார். அதற்கான சட்ட முன்வடிவை நான் நிறைவேற்றினேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 
பட்டியலினத்தில் உள்ஒதுக்கீடு: திமுக அரசின் சட்டம், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது ஏன்?
படக்குறிப்பு,"நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து அவர்களை முன்னேற்றும் அளவுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை" - அதியமான்

உள் இடஒதுக்கீடு ஏன்?

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், “பட்டியலின மக்களுக்கு தமிழ்நாட்டில் 18% இடஒதுக்கீடு உள்ளது. அதில், 76 சாதிகள் உள்ளன. அதில், அருந்ததியர்களும் அடக்கம். அருந்ததியர்களும் 7 பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து அவர்களை முன்னேற்றும் அளவுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை,” என்கிறார்.

"அவர்கள், தூய்மைப்பணிகளிலும் செருப்பு தைக்கும் தொழிலிலும் விவசாய கூலிகளாகவும் உள்ளனர். தனி ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராடினோம். இதைப் புரிந்து கொண்ட அன்றைய முதல்வர் கருணாநிதி, 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார்,” என்கிறார் அதியமான்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற எம்.பி-யுமான ரவிக்குமார், “ஒரே ஒரு கேள்வியை தீர்மானிப்பதற்காகத் தான் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. அதாவது, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் எஸ்.சி பட்டியலில் எந்த மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் நாடாளுமன்றத்தின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவர் மட்டுமே செய்ய முடியும். அப்படியானால், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்பது தான். அதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்கிறார்.

 
கருணாநிதி

பட மூலாதாரம்,FACEBOOK/PG/KALAIGNAR89

படக்குறிப்பு,"உள்ஒதுக்கீடு சட்டத்தை கருணாநிதி அரசு நிறைவேற்றிய பிறகு அது மத்திய அரசிடம் கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது."

'கிரீமி லேயர்' குறித்த கருத்து

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய ரவிக்குமார், சில விஷயங்களைப் பட்டியலிட்டார்.

“அரசியல் சாசன அமர்வில், பல்வேறு வழக்குகளுடன் சேர்த்து தமிழக அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழக்கும் இருந்தது. முன்னதாக, 2005-ஆம் ஆண்டு இ.வி.சின்னய்யா எதிர் ஆந்திரா வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், ‘எஸ்.சி., பட்டியலை பிரிக்க முடியாது. அது ஒருங்கிணைந்தது (Homogeneous). மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை’ என்றது.

"இப்போது அதிகாரம் உள்ளதாக அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்தது என்பது பாதிக்கப்படவில்லை. உள்பிரிவில் பலனை அனுபவிக்காதவர்களுக்கு கொடுக்கவே உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால், எஸ்.சி., பட்டியலை அது பாதிக்கவில்லை என்கின்றனர்" என்றனர்.

சமூகம், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உரிய தரவுகளுடன் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும், அதற்காக, மாநில அரசு அமைத்த ஜனார்த்தனன் கமிட்டி பரிந்துரையின்படி, சரியான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர் என ரவிக்குமார் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக கூறும் ரவிக்குமார், அதேநேரம், "‘கிரீமிலேயரை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று 7 பேரில் 3 நீதிபதிகள் கூறியுள்ளனர். அது கருத்து மட்டுமே. இதை ஏற்க முடியாது. எஸ்.சி மக்களின் இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் கருத்தாக இதைப் பார்க்கிறோம். ஓ.பி.சி பிரிவினருக்கே கிரீமிலேயர் பொருந்தாது எனும்போது எஸ்.சி., பிரிவினருக்கு மட்டும் எப்படி பொருந்தும்?" என்றார்.

பதவிகளை நிரப்புவது, பதவி உயர்வு ஆகியவற்றில் பாகுபாடு காட்டப்படும் சூழலில், ஏதோ பட்டியலின மக்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இந்தக் கருத்தை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும் எனவும் ரவிக்குமார் வலியுறுத்தினார்.

 
பட்டியலினத்தில் உள்ஒதுக்கீடு: திமுக அரசின் சட்டம், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது ஏன்?
படக்குறிப்பு,உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மாறுபட்ட கருத்தை வழங்கினார் வழக்கறிஞர் விஜயன்.

உள்ஒதுக்கீடு பாகுபாடானதா?

அதேநேரம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மாறுபட்ட கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்தார், மூத்த வழக்கறிஞர் விஜயன். “எஸ்.சி, எஸ்.டி பிரிவு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் 340 மற்றும் 341 பிரிவின்கீழ் அறிவிக்கப்பட்ட சமூகங்கள். அதில் மாறுபாடு கூடாது என சட்டம் சொல்கிறது. நேற்று வெளியான தீர்ப்பு, ‘புதிதாக சேர்க்கவில்லை, நீக்கவில்லை என்பதால் தவறு இல்லை’ என்கிறது. ஆனால், புதிதாக சேர்க்கவோ, நீக்கவோ வேண்டும் என்றால் அது நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து," என்றார்.

உள் ஒதுக்கீட்டின்படி, அருந்ததியர் இருக்கும்போது பிற சமூகத்துக்கு அதில் முக்கியத்துவம் கிடையாது எனும்போது, இதை யார் செய்ய வேண்டும் என்பது தான் கேள்வி என்றார் அவர். "இவ்வாறு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரமே கிடையாது. நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்,” என்கிறார் விஜயன்.

தொடர்ந்து, கிரீமி லேயர் குறித்துப் பேசிய விஜயன், “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் இருந்தபோது, ‘எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கிரீமி லேயர் கிடையாது’ என்றார். கிரீமி லேயர் என்பது இடஒதுக்கீட்டை ஒருமுறை அனுபவித்தவர்கள் மீண்டும் அனுபவிக்க முடியாது.

"ஒரு தலைமுறை படித்துவிட்டால் அடுத்த தலைமுறைக்கும் ஒதுக்கீட்டைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் என்ன சமூகம் என்பதை கண்டறிய முடியாது. இடஒதுக்கீடு அவசியம் தான். ஆனால், அது யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் முக்கியம்," எனக் கூறினார்.

மாநில அரசு கொடுத்தது சரி என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என தெரிவித்த விஜயன், "இதை நாடாளுமன்றம் முடிவு செய்திருந்தால் வரவேற்கலாம். ஒரு பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவதும் பாகுபாடு தான். அரசியல் கட்சிகள், மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு சாதி முக்கியக் கருவியாக உள்ளது” என்கிறார்.

 
பட்டியலினத்தில் உள்ஒதுக்கீடு: திமுக அரசின் சட்டம், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது ஏன்?
படக்குறிப்பு,"‘கிரீமிலேயரை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று 7 பேரில் 3 நீதிபதிகள் கூறியுள்ளனர். அது கருத்து மட்டுமே. இதை ஏற்க முடியாது,” என்கிறார் ரவிக்குமார்

அருந்ததியர் உள் ஒதுக்கீடு - பின்னணி

“எஸ்.சி பட்டியலில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்துக்குத் தான் அதிகாரம் உள்ளது என்கிறார்களே?” என, ரவிக்குமார் எம்.பி.,யிடம் கேட்டபோது, “உள்ஒதுக்கீடு சட்டத்தை கருணாநிதி அரசு நிறைவேற்றிய பிறகு அது மத்திய அரசிடம் கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அது தவறான சட்டமாக இருந்திருந்தால் அப்போதே மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் தவிர்த்திருக்கலாம். இதில், பட்டியலில் புதிதாக சேர்ப்பது, நீக்குவதற்கான அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது.

"ஆனால், ஓ.பி.சி பிரிவில் பட்டியலைச் சேர்ப்பது, நீக்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் தகுதியில்லாத முன்னேறிய பிரிவினரை அரசியல் லாபத்துக்காக ஓ.பி.சி பிரிவில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. மாநில அரசின் கைகளில் இப்படியொரு அதிகாரத்தைக் கொடுப்பது ஆபத்தானது. அது, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்புக்குள் இருப்பது தான் சரி என தோன்றுகிறது,” என்கிறார்.

இதன் பின்னணியில் நடந்த விஷயங்களை பிபிசி தமிழிடம் பட்டியலிட்ட அதியமான், “அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டை கருணாநிதி உடனே கொடுக்கவில்லை. அமைச்சரவை கூட்டத்தையும் அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டினார். ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் குழு அமைத்து, 6 மாதம் அவகாசம் நிர்ணயித்தார். அந்தக் குழு முழுமையாக ஆய்வு செய்து, 400 பக்க அறிக்கையை வழங்கியது," எனச் சுட்டிக்காட்டினார்.

 
மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" - மு.க. ஸ்டாலின்

கல்வி, வேலைவாய்ப்பில் முக்கியத்துவம்

நீதிபதி ஜனார்த்தனன் குழு அறிக்கையில், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அருந்ததியர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்பது பட்டியலிடப்பட்டிருந்ததாக கூறும் அதியமான், "அதைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அரசாணையாக இல்லாமல் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அது சிலருக்கு பிடிக்கவில்லை," என்றார்.

"குறிப்பாக, சகோதர சாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரடியாக எதிர்த்தார். மாநில அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்," என்கிறார் அதியமான்.

அப்போது, கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். "எதிர்ப்பே இல்லாமல் சட்டம் நிறைவேறியது," என கூறுகிறார் அதியமான்.

"அதை நடைமுறைப்படுத்த ரோஸ்டர் முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி, 2 பதவி இடங்கள் காலி என அறிவிக்கப்பட்டால், அதில் ஓர் இடம் அருந்ததியருக்கு வந்து சேரும். 3 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலும் என்றாலும் அதில் ஒன்று அவர்களுக்கு வந்து சேரும். இந்த சட்டத்தால் அருந்ததிய மக்களுக்கு ஒவ்வொன்றாக கிடைக்கத் தொடங்கியது," என அவர் விளக்குகிறார்.

இதன்மூலம், ஆசிரியர், காவலர், வி.ஏ.ஓ என மக்கள் மத்தியில் மதிப்புள்ளதாக பார்க்கப்படும் பணிகள் கிடைத்ததாகவும் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர்கள் என, கல்வியிலும் முக்கியவத்துவம் கிடைத்தாகவும் கூறுகிறார் அவர்.

 
பட்டியலினத்தில் உள்ஒதுக்கீடு: திமுக அரசின் சட்டம், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,BBC SPORT

படக்குறிப்பு,"இன்றளவும் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், சிண்டிகேட் குழு ஆகியவற்றில் ஓர் அருந்ததியர் கூட இல்லை" - அதியமான்

அரசியல் நோக்கமா?

"சட்டம் கொண்டு வரப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. சட்டம் வருவதற்கு முன்பு ஆண்டுக்கு 10 அருந்ததியர்கள், மருத்துவர்கள் ஆனார்கள். இப்போது ஆண்டுக்கு 100 பேர் மருத்துவர்களாக வெளியில் வருகின்றனர். இவ்வளவு காலமும் இது எங்களுக்குக் கிடைக்காமல் இருந்துள்ளது.

"இன்றளவும் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், சிண்டிகேட் குழு ஆகியவற்றில் ஓர் அருந்ததியர் கூட இல்லை. பட்டியலின சாதியில் உள்ள மற்றவர்கள், தங்கள் சாதியை சேர்ந்தவர்களை உயர் பதவிகளுக்கு கொண்டு வருகின்றனர்" என்றார் அதியமான்.

கிறிஸ்துவத்தின் அரவணைப்பு பட்டியலின சமூகத்தில் உள்ள சில பிரிவினருக்கு கிடைத்ததால் அவர்கள் முன்னேறினர், அவர்கள், கிறிஸ்துவத்தில் இருந்தாலும் இந்து ஆதிதிராவிடர் என சான்றிதழ் பெற்று அதிகாரத்தைப் பிடித்ததாகவும் ஆனால், அருந்ததியருக்கு அப்படி எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்கிறார் அவர்.

எனவே, "3% உள்ஒதுக்கீடு என்பதை 6% -ஆக உயர்த்த வேண்டும்’ என முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கூறியபோது, ‘இப்போது தான் உங்களுக்கு பட்டா கொடுத்திருக்கிறேன். உடனே வீட்டை கட்ட முடியாது. படிப்படியாக கட்டிக் கொள்ளலாம்’ என்றார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்ற சாசன அமர்வு அங்கீகாரம் அளித்துள்ளது,” என்றார்.

“மேற்கு மாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்க கூடிய சமூகமாக அருந்ததியர்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவு பெரும்பாலும் அ.தி.மு.க.வுக்கே இருந்தது. அதை மடைமாற்றவே உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக சொல்கின்றனரே?” என்ற கேள்வியை முன்வைத்தோம்.

“அருந்ததியர் சமூக மக்கள், அ.தி.மு.க., அனுதாபிகளாக இருந்தது உண்மை தான். அவர்கள் தி.மு.க-வை நோக்கி திரும்பியதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அதில், உள்ஒதுக்கீடும் முக்கியமான காரணம்,” என்கிறார்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.