Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹேமா கமிட்டி எதிரொலி: 'தமிழ் சினிமாவின் மோசமான பக்கம்' - அனுபவங்களை பகிரும் பெண் கலைஞர்கள்

ஹேமா கமிட்டி அறிக்கை: தமிழ் சினிமாவில் பெண் கலைஞர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை
  • 23 ஆகஸ்ட் 2024, 08:08 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரபலமான இயக்குநர் ஒருவர் இயக்கிய படம் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியிருந்தேன். ஆனால், படப்பிடிப்புத் தளங்களில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவரையும் மரியாதை இன்றி, ஒருமையில் அழைக்கும் போக்கு இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது,” என்கிறார் நடிகை அனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

கேரள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு குறித்து வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை பல்வேறு தளத்திலும் விவாதத்தை எழுப்பியிருக்கும் நிலையில், தமிழ்த் திரையுலகிலும் அதிர்ச்சியளிக்கும் மற்றொரு பக்கம் இருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பெண்கள் பலர் கூறினர்.

இருப்பினும் இந்தப் பிரச்னைகளைக் களைய உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதே நேரத்தில், "பெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழலின் தேவை குறித்து உணர்ந்துள்ளதாக" தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

பிரபல நடிகர்களின் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அனு உள்ளிட்ட பலர் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற நடிகர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறிய அனு, அதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது, "அதை அவர்கள் சாதாரண நிகழ்வாகக் கடந்து சென்றனர்" என்று தனது மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஹேமா கமிட்டியின் அறிக்கை

ஹேமா கமிட்டி அறிக்கை எதிரொலி: பெண் கலைஞர்களின் பாதுகாப்பு தமிழகத்தில் உறுதி செய்யப்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேரள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை பெண்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள் மட்டுமின்றி, திரையுலகம் பெண்களின் அடிப்படை உரிமைகளைக்கூட கண்டும் காணாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஹேமா கமிட்டியின் பரிந்துரையில் கூறப்பட்டிருப்பது போல, பெண்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தீர்ப்பாயம் ஒன்றைத் தமிழ்த் திரையுலகமும் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையைப் பெண் கலைஞர்கள் முன்வைத்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, எத்தகைய தீர்வுகளை அவர்கள் எதிர்பார்க்கின்றனர், திரையுலகில் பெண்களுக்கான இடம் மற்றும் அங்கீகாரம் போன்றவை கிடைக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ், நடிகைகள், பாடகிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பேசியது.

குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் ரீதியான அழைப்பு

"சில நேரங்களில் இந்தத் துறையை விட்டே சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால் யாருடைய உதவியுமின்றி, எனக்கான இடத்தைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கிறேன். இனி அனைத்தையும் முதலில் இருந்து துவங்குவது சவாலானதாக இருக்கும்,” என்கிறார் அனு.

ஹேமா கமிட்டி எதிரொலி: 'தமிழ் சினிமாவின் மோசமான பக்கம்' - அனுபவங்களை பகிரும் பெண் கலைஞர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரபல நடிகர் குறித்துப் புகார் தெரிவித்த விவகாரத்திற்குப் பிறகு அந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தனக்கு எந்த விதமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாலியல் ரீதியான 'ஒத்துழைப்பு' போன்ற விவகாரங்கள் குறித்துப் பேசும்போது அவர், “முன்பு போல் நேரடியாக யாரும் எதையும் கேட்பதில்லை. மாறாக, ‘டேட்டிங்’ செல்லலாமா?, இன்று இரவு நாம் இங்கே நடக்கும் ‘பார்ட்டிக்கு’ செல்லலாமா என்று குறுஞ்செய்திகள் வாயிலாக அணுகுவதாக" கூறுகிறார்.

அதற்கு "முடியாது என்று மறுக்கும் பட்சத்தில் எங்களுக்கு இங்கே வாய்ப்புகள் இல்லை. முடியாது என்று கூறிய காரணத்திற்காகவே கடந்த 6 ஆண்டுகளில் என்னால் மூன்றே மூன்று படங்களில் மட்டும்தான் நடிக்க முடிந்தது,” என்று கூறினார்.

இதுபோன்ற செய்திகளைப் பெரும்பாலும் அனுப்பும் நபர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர்கள் தான், என்றார் அனு.

 

ஒத்துழைக்காவிட்டால் சம்பளம் கிடைக்காது

ஹேமா கமிட்டி எதிரொலி: 'தமிழ் சினிமாவின் மோசமான பக்கம்' - அனுபவங்களை பகிரும் பெண் கலைஞர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடிகை நயன்தாரா, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பெரிய திரை நட்சத்திரங்களுடன் பணியாற்றிய நடிகை உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசி தமிழிடம் பேசியபோது, வாய்ப்புகள் வேண்டுமென்றால் "சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்ற போக்கு தமிழ்த் திரையுலகில் எழுதப்படாத விதியாகவே" உள்ளதாகக் கூறுகிறார்.

"பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கதாநாயகி, அவர்களின் தோழிகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் எதிர்கொள்கின்றனர். இந்தத் திரைத்துறை எப்படிச் செயல்படுகிறது என்று தெரியாமல் பெரிய கனவுகளுடன் வரும் இளம் பெண்கள் இதில் சிக்கிக்கொள்ளும் அவலமும் நிகழ்வதாக," உஷா கவலையுடன் கூறினார்.

"முடியாது என்று முழுமையாக நிராகரித்துவிட்டு, அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தாலும்கூட எங்களுக்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை," என்கிறார் உஷா.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இத்தகைய சூழலை எதிர்கொண்ட அவர், இயக்குநரின் போக்கு சரியில்லாத காரணத்தால் படத்தில் இருந்து வெளியேறினார். அவர் நடித்துக் கொடுத்த நாட்களுக்குத் தற்போது வரை சம்பளம் வழங்கவில்லை என்றும் கூறினார்.

வெளியூர் படப்பிடிப்புகளில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?

இவை மட்டுமின்றி, படப்பிடிப்புத் தளங்களில் ஆடை மாற்றுவதுகூட சிக்கலாக இருப்பதாகவும், போதிய கழிவறை வசதிகள் செய்து தரப்படுவதில்லை எனவும் உஷா குற்றம் சாட்டுகிறார்.

"வெளியூர்களில் நடக்கும் படப்பிடிப்புகளின்போது இது மிகவும் சவாலாக இருக்கிறது. மறைவான இடங்களுக்குச் சென்றுதான் ஆடைகள் மாற்றும் சூழல் ஏற்படுகிறது. அதோடு தங்கும் இடங்களும் பாதுகாப்பாக இருப்பதில்லை. படத்தில் பணியாற்றும் ஆண்கள், குடித்துவிட்டு வந்து கதவைத் தட்டும் செயல்பாடுகளும் அரங்கேறிய வண்ணம்தான் இருக்கின்றன,” என்றார் அவர்.

ஹேமா கமிட்டி அறிக்கை: தமிழ் சினிமாவில் பெண் கலைஞர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடிகைகள் மட்டுமல்ல, தொழில்நுட்பக் கலைஞர்களும் இத்தகைய பிரச்னையை எதிர்கொள்வதாகக் கூறுகிறார் ஶ்ரீமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்தான் பெரும்பாலான நேரங்களில் எங்களைப் பாதுகாக்கின்றனர். எங்கள் இன்னல்களைப் புரிந்துகொண்டு எங்களுக்கு உதவ முன்வருகின்றனர்,” என்று கூறினார் ஶ்ரீமதி.

இதுவரை நான்கு திரைப்படங்களுக்கு துணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள ஶ்ரீமதி, “ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, தெலுங்கு திரையுலகத்தினர் சிறப்பாகச் செயல்படுவதாகவும், ஒவ்வொரு துறையிலும் பெண்கள் இருப்பதால், அவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் கோருவதற்கான இடம் அங்கு உள்ளதாகவும்" தெரிவித்தார்.

ஹேமா கமிட்டி எதிரொலி: 'தமிழ் சினிமாவின் மோசமான பக்கம்' - அனுபவங்களை பகிரும் பெண் கலைஞர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், "தமிழ், மலையாள திரையுலகில் அப்படி இல்லை. 70 நாட்கள், ஒரு மலையாளப் படத்தில் பணியாற்றினேன். என்னைத் தவிர அந்தப் படத்தில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்களே இல்லை. பெண்கள் குறைவாக இருக்கும்போது, அவர்களுக்கான தேவை எளிதில் நிராகரிக்கப்படுகிறது. இதுபோன்ற அவல நிலையைப் பார்க்கும்போது, புதிதாக இந்தத் துறைக்கு வரும் பெண்கள், சில மாதங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர்,” என்றார் ஸ்ரீமதி.

சமீபத்தில் தமிழில் வெளியான தங்கலான் திரைப்படத்தின் துணை இயக்குநர்களில் ஒருவரான ஸ்ருதி, பிபிசியிடம் பேசும்போது, இயக்குநர்கள் நினைத்தால் இதில் மாற்றங்களைக் கொண்டு வர இயலும் என்று கூறுகிறார்.

"தங்கலான் படப்பிடிப்புக்காக சில நாட்கள் நாங்கள் கடப்பாவில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண் கலைஞர்களுக்காகவே தனியாக கேரவன்கள் வழங்கப்பட்டன. நடமாடும் கழிவறைகள் எப்போதும் படப்பிடிப்புத் தளத்தில் வைக்கப்பட்டிருந்தன. தேவையெனில், இயக்குநரின் கேரவன்களை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது," என்று தெரிவித்தார்.

 

பெண் கலைஞர்கள் சந்திக்கும் இதர பிரச்னைகள்

தமிழ் திரையுலகில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் மிகவும் குறைவான அளவே உள்ளனர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழ் திரையுலகில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் மிகவும் குறைவான அளவே உள்ளனர்

ஆணாதிக்கப் போக்கு மற்ற அனைத்து துறைகளைக் காட்டிலும் இங்கே அதிகம் என்று கூறுகிறார் மற்றொரு துணை இயக்குநரான அபி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).

நான் கடந்த ஓராண்டாக ஒரு படத்தில் பணியாற்றி வருகிறேன். இங்கே நடிக்கும் நடிகர்களிடம் திருத்தங்களைக் கூறுவதே பெரிய சிக்கலாக உள்ளது. ஒரு பெண் கூறி, அதை நான் கேட்க வேண்டுமா என்ற மனப்பான்மையுடன் தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் திரைத்துறையில் உள்ள அனைவரிடமும் பொதுவாக உள்ளதாகக் கூறுகிறார் ஒளிப்பதிவாளர் ஶ்ரீமதி.

இவர்கள் பெண்கள் குறித்து ஏற்படுத்தியிருக்கும் பிம்பம், இங்கே எங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வழி செய்கிறதே தவிர, எங்களுக்கான அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் உறுதி செய்வதில்லை,” என்றார் அவர்.

அதேபோல், ஓய்வின்றி 24 மணிநேரமும் வேலை பார்க்கும் நிலைகூட இருப்பதாகவும் சரியாக ஊதியமும் வழங்கப்படுவதில்லை எனவும் ஸ்ரீமதி கூறினார். குறிப்பாக மலையாள திரையுலகில் இது அங்கீகரிக்கப்பட்ட உழைப்புச் சுரண்டலாகவே இருப்பதாகத் தெரிவித்தார் அவர்.

 

குஷ்பு கூறுவது என்ன?

ஹேமா கமிட்டி அறிக்கை: தமிழ் சினிமாவில் பெண் கலைஞர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நடனம், சண்டை, கிராஃபிக்ஸ் வடிவமைப்பு, சவுண்ட் இஞ்சினியர், ஒளிப்பதிவு போன்ற பிரிவுகளில் பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாற்றுகின்றனர்.

கேரளாவில் பெண் திரைத்துறை கலைஞர்களுக்கான கூட்டமைப்பு (WCC – Women in Cinema Collective) தான் இந்த ஹேமா கமிட்டி அறிக்கையின் தொடக்கப்புள்ளி. இதுபோன்ற கூட்டமைப்பு தமிழ்நாட்டில் சாத்தியமா என்ற கேள்வியை பிபிசி தமிழ் முன்வைத்தது.

அதற்கு பிரபலமான பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்த குஷ்பு, "தமிழ்த் திரையுலகம் மிகவும் சிறப்பானது" என்று தெரிவித்தார்.

"என்னுடைய திரை அனுபவத்தில் இதுபோன்ற சவாலான சூழலை நான் சந்திக்கவில்லை. ஆனால் பெண்களுக்கு எதிரான போக்கு திரைத்துறையில் இருக்கும் என்றால் நிச்சயமாக நான் குரல் கொடுப்பேன். உண்மையாகவே ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது நீதிப் போராட்டத்திற்குத் துணை நிற்பேன்," என்று தெரிவித்தார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகப் பதவி வகித்த அவர், தமிழகத்தில் இதுபோன்ற ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்றால் அதற்கு "முதல் ஆதரவு தரும் நபராக நான் இருப்பேன்" என்றும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்த பாஜக தலைவர் குஷ்பு

பட மூலாதாரம்,KUSHBOO SUNDAR/INSTAGRAM

படக்குறிப்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்த பாஜக தலைவர் குஷ்பு

புறக்கணிக்கப்பட்டதாகக் கூறும் சின்மயி

ஆனால், தமிழில் பெண் கலைஞர்களுக்கான கூட்டமைப்பு சாத்தியமில்லை என்று கூறினார் பின்னணிப் பாடகி சின்மயி. பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பொதுவெளியில் தெரிவித்தார் சின்மயி.

எனக்கு எந்த ஆதரவும் இந்தத் திரைத்துறையில் கிடைக்கவில்லை. மாறாக நான் தனிமைப்படுத்தப்பட்டேன். என்னுடைய ஆறு ஆண்டுக்கால வருமானம் பாதிக்கப்பட்டது. அனைவருக்கும் தான் நான் குரல் கொடுக்கிறேன்."

ஆனால் "என்னுடைய பிரச்னையின் போது எனக்கு உதவ இந்த திரையுலகில் இருந்து எந்த ஒரு முன்னணி பெண் கலைஞர்களும் குரல் கொடுக்கவில்லை. உண்மையை பேசினால் ஓரங்கட்டப்படுவீர்கள், ஒதுக்கப்படுவீர்கள் என்பதை தமிழ் திரையுலகம் என்னுடைய விவகாரத்தில் தெளிவாக்கியது,” என்று கூறினார் அவர்.

பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பாகவும் கணவரின் முழு ஆதரவுடனும் இருப்பதாலேயே தன்னால் போராட முடிவதாகக் கூறிய சின்மயி, இது பாதிக்கப்படும் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

"மாற்றங்களை எதிர்பார்க்கும் பெண்களிடம் அதிகாரம் இல்லை. அதிகாரம் உள்ள பெண்கள் இதுபோன்ற விவகாரங்களில் உதவ முன்வருவதில்லை,” என்றும் சின்மயி தெரிவித்தார்.

இதுபோன்ற காரணங்களால் தான் இங்கு இத்தகைய கூட்டமைப்புக்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறும் அவர், அப்படியே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அது பெயரளவில் தான் செயல்படுமே தவிர, அது ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளாது என்றும் கூறினார்.

எனக்குத் தெரிந்தவரை, தெலுங்கு சினிமாவில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோ மற்றும் தமிழில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோ பாதுகாப்பானவை,” என்றார் சின்மயி.

ரஹ்மானின் மகள் கத்தீஜாதான் பெண்கள் பாதுகாப்பு குறித்து தீவிரமாகச் செயல்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
திரைப்பட பின்னணி பாடகி சின்மயி

பட மூலாதாரம்,RAHUL RAVINDRAN/ INSTAGRAM

படக்குறிப்பு, திரைப்பட பின்னணி பாடகி சின்மயி

'பெண்களுக்காக பெண்கள்தான் குரல் கொடுக்கின்றனர்'

பிபிசி தமிழிடம் பேசிய பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள், திரைப்படத்தில் பெரிய நடிகைகள் நடிக்கின்றனர் என்றால், பெண்களுக்கான பிரச்னை ஓரளவுக்குச் சமாளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறினார்கள்.

"நயன்தாராவுடன் நடிக்கும்போது, அவருடைய கேரவனில் உடை மாற்றிக் கொண்டேன். அவருடன் பணியாற்றும் பெண்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் உறுதி செய்தார்," என்றார் உஷா.

தங்கலான் படத்தில் நடிகை பார்வதி நடித்திருந்தார். எங்களுக்குத் தேவையான அனைத்தும் ஏற்கெனவே படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறது. இருப்பினும், பார்வதி எங்களிடம் ஏதாவது குறைகள் இருக்கிறதா, ஏதாவது தேவை இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார்,” என்றார் ஸ்ருதி.

நிறைய பெண்கள் இந்தத் துறையில் பணியாற்ற வரும்போது, இந்தச் சூழல் நிச்சயமாக மாறும். ஒவ்வொரு துறையிலும் இவ்வளவு பெண்கள் இடம்பெற வேண்டும் என்று இட ஒதுக்கீட்டு முறையைப் பின் தொடரும்போது, அவர்களுக்கான பாதுகாப்பான பணி இடங்களையும் உருவாக்குவது தயாரிப்பு நிறுவனத்தின் கடமையாகிவிடும்,” என்கிறார் ஶ்ரீமதி.

உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரு பெண்தான் மற்ற பெண்ணைத் தனிப்பட்ட ரீதியாகவோ, குழுவாகவோ பாதுகாத்துக் கொள்கிறோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 
ரஹ்மானின் ஏ.எம்.ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் கத்தீஜா ரஹ்மான்

பட மூலாதாரம்,KHATIJA RAHMAN / INSTAGRAM

படக்குறிப்பு, ரஹ்மானின் ஏ.எம்.ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் கத்தீஜா ரஹ்மான் (வலது)

தயாரிப்பாளர்கள் கூறுவது என்ன?

BOFTA திரைப்பட மையத்தின் நிறுவனரும், தயாரிப்பாளருமான ஜி. தனஞ்செயன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் குறித்த புகார்கள் வரும்போது நிச்சயமாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று தெரிவித்தார். அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியாகும் படங்களில் பணியாற்றும் பெண் கலைஞர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

விசாரணைக் குழு (IC) ஏதேனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியபோது, தயாரிப்பாளராக இதுபோன்ற விவகாரங்களில் நேரடியாக அவர் தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காண்பதால் இதுவரை குழு ஏதும் அமைக்கவில்லை என்று கூறினார்.

"ஏதேனும் பிரச்னைகளை எங்கள் பெண் குழுவினர்கள் சந்திக்கிறார்கள் என்றால் அவர்கள் நேரடியாக என்னை அணுகும் வகையில்தான் இங்கே தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. நேரடியாகப் பிரச்னை என் பார்வைக்குக் கொண்டு வரப்படும் என்பதால் அதன் தீவிரம் என்ன என்பதைப் படக்குழுவினர் அறிவார்கள். அதனால் இதுபோன்ற அத்துமீறல்களில் அவர்கள் ஈடுபடுவது தடுக்கப்படுகிறது," என்று தெரிவித்தார் தனஞ்செயன்.

இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பிபிசியிடம் பேசும்போது, "பாதுகாப்பான பணிச்சூழலின் தேவை மற்றும் சமத்துவம் குறித்து நன்றாக உணர்ந்துள்ளோம். பெண் கலைஞர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதாகப் புகார்களை முன்வைக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்று தெரிவித்தார்.

விசாரணைக் குழுக்கள் (IC) அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தயாராகி வருவதாகத் தெரிவித்த அவர், இனி அனைத்து தயாரிப்பு நிறுவனங்களிலும் இதைக் கட்டாயமாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

"ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும் மனிதவள மேம்பாட்டு அலுவலர் (HR) ஒருவரை நியமித்து, படப்பிடிப்புத் தளங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அடிப்படை விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்," என்றும் முரளி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.