Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிருஷ்ணகிரியில் என்.சி.சி., முகாம் என்ற பெயரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கிருஷ்ணகிரியில் என்.சி.சி., முகாம் என்ற பெயரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 21 ஆகஸ்ட் 2024
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான போலி என்.சி.சி ஆசிரியர் சிவராமனும் அவரது தந்தையும் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர்.

இந்த வழக்கில் யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுவதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவேரிபட்டினத்தைச் சேர்ந்த போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன், தனியார் பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சேலம் சரக டி.ஐ.ஜி உமா, கிருஷ்ணகிரி, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிவராமன், பள்ளி தாளாளர் வெஸ்லி, முதல்வர் சதீஷ், ஆசிரியை ஜெனிபர், போலி என்.சி.சி பயிற்சியாளர் சக்திவேல் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி புகார் ஒன்று பதிவானது. அந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆகஸ்ட் 5ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் பள்ளியில் என்.சி.சி முகாம் ஒன்று நடந்தது. இந்த முகாமில் பாதிக்கப்பட்ட மாணவியுடன் சேர்த்து 17 மாணவிகள் பங்கேற்றனர். ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிகாலையில் என்.சி.சி அலுவலர் எனக் கூறப்படும் சிவராமன் என்பவர், எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கு நேர்ந்த கொடூரத்தை சக மாணவிகளிடமும் ஆசிரியைகளிடமும் மாணவி தெரியப்படுத்தியுள்ளார். சீனியர் மாணவிகளுடன் இணைந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் மாணவி முறையிட்டுள்ளார். அவரோ, 'இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம். உங்கள் பெற்றோருக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள்' எனக் கூறி மாணவியை திருப்பி அனுப்பியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாணவியின் பெற்றோர் விசாரித்தபோது தான், நடந்த கொடூரம் வெளியில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிவராமன், பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியை உள்பட 11 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

என்.சி.சி தலைமை அலுவலகத்தின் மறுப்பு

தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தலைமை அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிருஷ்ணகிரியில் நடந்தது போலியான என்.சி.சி முகாம் என்றும் முகாம் நடத்தியவர்களுக்கும் என்.சி.சி அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

என்.சி.சி முகாமுக்காக பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இந்தப் பள்ளி இல்லை. கிருஷ்ணகிரியில் என்.சி.சி சார்பில் முகாம்களும் நடத்தப்படவில்லை,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிவராமன் மற்றும் அவரது தந்தையின் மரணம்

கிருஷ்ணகிரி: என்.சி.சி என்ற பெயரில் மாணவிக்கு பாலியல் கொடுமை: போலி என்.சி.சி முகாம்களை கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கைது செய்யப்பட்ட சிவராமன், வலது காலில் கட்டுப்போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் வெளியானது. அவர் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றதாகவும் இதனால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கில் கைதான சிவராமன், நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். வழக்கு தொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், அக்கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை மரணம் அடைந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முதல் நாள் இரவு சிவராமனின் தந்தை அசோக்குமார், காவேரிபட்டினம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறிக் கீழே விழுந்து உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

சிவராமன் மரணம் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 19ஆம் தேதி எலும்பு முறிவு காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிவராமன் அனுமதிக்கப்படுவதற்கு, இரண்டு நாள்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டுள்ளது.

அவரது உயிரைக் காப்பாற்ற கிருஷ்ணகிரி மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் 21ஆம் தேதி அனுமதிக்கப்ப்டட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை காலை இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை

கிருஷ்ணகிரி: என்.சி.சி என்ற பெயரில் மாணவிக்கு பாலியல் கொடுமை: போலி என்.சி.சி முகாம்களை கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம்,FACEBOOK/K.ANNAMALAI

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை துரிதமாக நடந்து கொண்டிருந்த நிலையில், தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கு இடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை சிவராமன் வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது" எனத் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்தக் கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளில் போலி முகாம்கள்?

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், என்.சி.சி என்ற பெயரில் வெளியில் உள்ள ஆட்களை அழைத்து வந்து முகாம் நடத்தியதாக குறிப்பிடுகிறார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு.

செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சரயு, "முகாமில் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல் எதுவும் பின்பற்றப்படவில்லை. முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டு வருகிறது. வேறு பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம்கள் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது," என்றார்.

பொதுவாக, பள்ளிகளில் தேசிய மாணவர் படை, சாரணர் படை என பல்வேறு அமைப்புகளில் மாணவர்கள் ஆர்வமுடன் இணைகின்றனர்.

 
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு

பட மூலாதாரம்,KMSARAYU

படக்குறிப்பு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு

என்.சி.சி முகாம்கள் எப்படி இயங்கும்?

என்.சி.சி.,யில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் என்னென்ன, பெற்றோர் எந்தளவுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த தேசிய மாணவர் படை அலுவலர் ஆனந்தராஜிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறிய தகவல்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தேசிய மாணவர் படையில் இணையும் அனைவருக்கும் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம் என்பது பொதுவானது. இதில், பள்ளிக்கு 2 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் பயிற்சி முகாமுக்கு அனுப்பப்படுவர்.
  • பயிற்சி முகாம் நடப்பதாக இருந்தால் என்.சி.சியில் பதிவு செய்துள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். அதில், முகாமில் எவ்வளவு பேர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். தனியார் பள்ளி மாணவர்கள், உணவு மற்றும் பயண செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பயிற்சி முகாமில் மாணவர்கள் பங்கேற்பதற்கு தலைமை ஆசிரியர் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். அதன்பின், மாணவர் தொடர்பான மருத்துவ சான்று, பெற்றோர் விருப்ப சான்று, அபாய சான்று (Risk) ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் என்.சி.சி அங்கீகரிக்கும்.
  • முகாமுக்கு மாணவர்களை ஏ.என்.ஓ (Associate NCC Officer) எனப்படும் பள்ளியின் என்.சி.சி ஆசிரியர் அழைத்துச் செல்வார். கூடவே, அவரது கையெழுத்துடன் கூடிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தால்தான் முகாமுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.
  • இந்த சான்றுகளில் ஒன்று இல்லாவிட்டாலும் அனுமதி மறுக்கப்படும். எப்போது முகாம் நடக்கும், எப்போது முடியும், மாணவர்கள் எப்போது புறப்படுவார்கள் என்பதெல்லாம் ராணுவ ஒழுங்குடன் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
  • ஒவ்வொரு முகாமுக்கும் 6 முதல் 10 என்.சி.சி ஆசிரியர்கள் இருப்பார்கள். இவர்கள் வகுப்பெடுப்பார்கள். மற்றபடி, பரேடு, பயிற்சி ஆகியவற்றை ராணுவத்தினர் முன்னெடுப்பார்கள்.
  • ஒவ்வொரு மண்டலத்துக்கும் 500 மாணவர்கள் முகாமில் பங்கேற்பது வழக்கம். ஒரே முகாமில் மாணவர்களும் மாணவிகளும் இருப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கும் விடுதி தனித்தனியாக இருக்கும்.
  • பெண் என்.சி.சி ஆசிரியர் (ANO) கட்டுப்பாட்டில் மாணவிகள் இருப்பார்கள். ராணுவத்தில் ஜிஏசி (Girls Cadet incharge) என்ற பணியிடம் உள்ளது. ஒவ்வொரு முகாமிலும் ஒரு ஜிஏசி கட்டாயம் இருப்பார். இவர்கள் தங்கியுள்ள பகுதிக்குச் செல்வதற்கு கமாண்டிங் அதிகாரிக்கு அனுமதியில்லை.
  • மாணவ, மாணவிகள் இருவருக்கும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கொடுப்பார்கள். 10 நாள்கள் நடக்கும் முகாமில் பரேடு பயிற்சி, ஆயுதப் பயிற்சி ஆகியவை வழங்கப்படும்.
  • மாணவ, மாணவிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் முதலுதவி வழங்கப்படும். அதன்பிறகும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் முகாமில் இருந்து அனுப்பப்படுவார்கள்.
  • ஒருவருக்கு பயிற்சி பிடிக்காவிட்டாலும் அவ்வளவு எளிதில் அனுப்ப மாட்டார்கள். பயிற்சியை மாணவரின் உடல் ஏற்கும் வரையில் என்.சி.சி ஆசிரியர் பயிற்சி வழங்குவார்.
  • எட்டாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையில் இரண்டாண்டுகள் என்.சி.சி பயிற்சி வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு சென்றவுடன் முகாமுக்கு செல்லும் மாணவர்கள் என்.சி.சி தேர்வை எழுதுவார்கள். கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடக்கும். அரசின் சீருடை பணிகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  • என்.சி.சி முகாமில் கமாண்டிங் அலுவலராக (Commanding office) வருகிறவர், லெப்டினென்ட் கமாண்டன்ட் ஆகவோ மேஜர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியாகவோ இருப்பது நடைமுறை.
 
தேசிய மாணவர் படை அலுவலர் ஆனந்தராஜ்

பட மூலாதாரம்,ANANDRAJ

படக்குறிப்பு,தேசிய மாணவர் படை அலுவலர் ஆனந்தராஜ்

என்.சி.சி ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

  • பள்ளி நிர்வாகம் தரப்பில் என்.சி.சி-க்கு விண்ணப்பித்து அனுமதி வாங்கியிருந்தால் அதற்கான ஆசிரியர் நேர்காணல் தலைமைச் செயலகத்தில் நடக்கும்.
  • அந்த நேர்காணலில் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை அதிகாரிகள் இருப்பார்கள். இதில் ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே பயிற்சிக்காக நாக்பூர் அனுப்புவார்கள். அதுவும் ஓராண்டுக்குப் பிறகுதான் பயிற்சிக்கு வரவழைக்கப்படுவார்கள்.
  • முன்பு 90 நாள்களாக இருந்த பயிற்சி 60 நாள்களாக குறைத்துவிட்டார்கள்.பயிற்சி முடியும் போது, சம்பந்தப்ப்டட ஆசிரியர் கெஜட்டட் அலுவலராக வெளியில் வருவார்.

தமிழக அரசின் 2 சிறப்பு குழுக்கள்

இந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் காவல்துறை தலைவர் பவானீஸ்வரி ஐ.பி.எஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து உரிய பரிந்துரைகள் அளித்திட, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ் தலைமையில் பல்நோக்கு குழு ஒன்றும் அமைக்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் தொடர்பாக ஆராய்ந்து, இனி இதுபோல நடைபெறாமல் தடுப்பது குறித்தும் இந்த பல்நோக்கு குழு பரிந்துரைகள் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி விவகாரத்தில் விசாரணையை 15 நாட்களுக்குள் முடித்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கேடுகெட்ட மனிதர்கள். எல்லாமே அரசியல் இவர்களுக்கு, எங்கேயும் ஆதாயம் தேடுவது தான் இவர்களின் பிழைப்பு. பக்கம் பக்கமாக அறிக்கைகள் விடுவதையும், பாதயாத்திரைகள் போவதையும் விடுத்து, ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையாவது எடுத்திருப்பார்களா.......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.