Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்வேட்பாளருக்கு வாக்களிப்போம் - யாழ்பல்கலைக்கழக சமூகம் அறிக்கை

Published By: DIGITAL DESK 3   14 SEP, 2024 | 02:46 PM

image

(எம்.நியூட்டன்)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம் என அறைகூவல் விடுத்த யாழ். பல்கலைக்கழக சமூகம், மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அறிக்கை  வெளியீட்டுள்ளது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேரன்புமிக்க தமிழ் மக்களிற்கு வணக்கம்,

நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம்.

தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும்

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள - பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன. 

தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் (Genocide) குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம்.

எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்!

சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக?

தமிழர் தேசமாய்த் திரள்வோம்!

தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது.

தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர் !

தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர்.

இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம்.

நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு,  அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் - என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/193674

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.