Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

medicine-1.webp?resize=750,375

பரசிட்டமோல் உள்ளிட்ட 53 மருந்துகள் தரமற்றவை –  தரநிலை சோதனையில் வெளியான உண்மை.

சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. தலைவலி வந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் வாங்கி உட்கொள்ளும் பழக்கமும் நம்மிடையே நிலவுகிறது.

இப்படி நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் சர்க்கரை, உயர் இரத்த அழுத்த மாத்திரைகள் உட்பட 53-க்கும் அதிகமான மருந்துகள் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரின் தர சோதனையில் தோல்வியடைந்துள்ளன. இந்த மருந்துகளின் பட்டியலில் தினசரி எடுக்கும் பல மருந்துகளும் அடங்கியுள்ளன.

அதன்படி,

* வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள் ஷெல்கால்(shelcal)

* வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி ( softgels)

* ஆன்டிஆசிட் பேன்-டி (antacid pan d)

* Paracetamol IP 500mg

* நீரிழிவு எதிர்ப்பு மருந்து (glimepiride)

* உயர் இரத்த அழுத்த மருந்து Telmisartan மற்றும் பல அடங்கும்.

பாராசிட்டமால் மாத்திரைகளும் தரமற்றவையாக இந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டு, மக்கள் இவற்றை எடுக்கக்கூடாதென மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

https://athavannews.com/2024/1401164

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா: 48 மருந்துகள் தரமற்றவை என வெளியான அறிக்கை - நீங்கள் அச்சப்பட வேண்டுமா?

இந்தியாவில் 48 மருந்துகள் தரமற்றவை - நீங்கள் அச்சப்பட வேண்டுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பாராசிடாமல், பேன் டி, க்லைசிமெட் உள்ளிட்ட 48 மருந்துகள் உரிய தரத்தில் இல்லை என்று தனது மாதாந்திர பட்டியலில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உரிய தரத்தில் இல்லாத மருந்துகளின் பட்டியலை வெளியிடும். ஆகஸ்ட் மாதத்துக்கான பட்டியலில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாராசிடாமல், பேன் டி உள்ளிட்ட 48 மருந்துகள் இடம்பெற்றுள்ளன.

கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் ஃபார்மசிடிக்கல்ஸ் தயாரிக்கும் பாராசிடாமல் ஐபி 500 மிகி, அல்கெம் ஹெல்த் சையின்ஸ் தயாரிக்கும் பேன் டி, ப்யூர் அண்ட் க்யூர் தயாரிக்கும் மாண்ட்யர் எல்.சி.கிட், ஸ்காட்-எடில் ஃபார்மாசியா தயாரிக்கும் க்லைசிமெட் உள்ளிட்ட 48 மருந்துகள் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் உரிய தரத்தில் இல்லை (NSQ – Not of Standard Quality) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சன் ஃபார்மா, டோரன்ட் உள்ளிட்ட முன்னணி மருந்து நிறுவனங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மருந்துகளை “கள்ளப் பொருட்கள்” என்றும், அவற்றைத் தாங்கள் தயாரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளன.

 

‘உரிய தரத்தில் இல்லை’ என்றால் என்ன?

NSQ என்று வகைப்படுத்தப்படும் மருந்துகளைத் தயாரிப்பவர்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் (சட்டத்திருத்தம்) 2008இன் (Drugs and Cosmetics Act Amendment 2008) கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் வாழ்நாள் சிறைத் தண்டனை வரை வழங்கப்படலாம். அதேபோன்று, குறைந்தது பத்து லட்சம் அல்லது, கைப்பற்றப்பட்ட மருந்துகளின் மதிப்பைவிட மூன்று மடங்கு பணம் - இவற்றில் எது அதிகமான தொகையோ அதை அபராதமாக வசூலிக்கலாம்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில், அமாக்சிலின் மற்றும் பொடாசியம் க்லாவுலனேட் மாத்திரைகள் ஐபி (க்லாவம் 625), அமாக்சிலின் மற்றும் பொடாசியம் க்லாவுலனேட் மாத்திரைகள் (மெக்ஸ்க்லாவ் 625), பாண்டப்ரசோல் -டோம்பெரிடோன் காப்ஸ்யூல் ஐபி (பேன் டி) ஆகியவற்றின் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி மருந்துகள் எனப்படுபவை ஒரு தயாரிப்பின் உண்மையான அடையாளத்தை மறைத்து, மற்றொரு மருந்து போல விற்கப்படுபவையாகும்.

இந்தப் பட்டியலில் உள்ள பிற மருந்துகள் அதன் உள்ளடக்கங்கள், dissolution-அதாவது அந்த மருந்து உடலில் எவ்வாறு கரைந்து உட்கொள்ளப்படுகிறது மற்றும் அதன் தோற்றத்தில் விரிசல் போன்ற புகார்களுக்காக உரிய தரத்தில் இல்லை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பாராசிடாமல், பேன் டி, க்லைசிமெட் உள்ளிட்ட 48 மருந்துகள் உரிய தரத்தில் இல்லை என்று தனது மாதாந்திர பட்டியலில் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படபடம்

இந்த மருந்துகளைப் பரிசோதித்தபோது, அவை எந்தத் தொகுப்பில் தயாரிக்கப்பட்டனவோ அந்தக் குறிப்பிட்ட தொகுப்பிலிருந்து விற்கப்படும் மருந்துகள் அனைத்தும் சந்தைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.

அடிக்கடி பயன்படுத்தப்படும் மருந்துகள் உரிய தரத்தில் இல்லை என்ற செய்தி பொதுமக்கள் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் 10 வருடங்களாக சர்க்கரை நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடுகிறேன். உரிய தரத்தில் இல்லை என்றால், நான் எப்படி தினமும் உட்கொள்வது என்று தெரியவில்லை” என்கிறார் சென்னை கொளத்தூரில் வசிக்கும் சங்கரன்.

பாராசிடாமல் மாத்திரையைப் பல நேரங்களில் மருத்துவர் பரிந்துரை இல்லாமலே எடுத்துக் கொள்கிறோம். அப்படிச் செய்வது தவறு என மருத்துவர் கூறியுள்ளார். ஆனால் மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மாத்திரையே பாதுகாப்பானதாக இல்லையென்றால் என்ன செய்வது?” என்று கேட்கிறார் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த உஷாராணி.

பதற்றம் வேண்டாம், எச்சரிக்கை தேவை

ஆனால் மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககமும் மருந்து வணிகர்களும் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற பரிசோதனைகள் வழக்கமான ஒன்று எனக் கூறும் அவர்கள், இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விளைவுகள் ஏதும் இல்லை என்கின்றனர்.

இந்தியாவில் 48 மருந்துகள் தரமற்றவை - நீங்கள் அச்சப்பட வேண்டுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் ஸ்ரீதர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்தப் பட்டியல் குறித்த தகவல் கிடைத்தவுடன், தமிழ்நாட்டில் சில்லைறை, மொத்த மருந்து வியாபாரிகளிடம், மருத்துவமனை மருந்தகங்கள் எனப் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், இந்த மருந்துகள் தமிழ்நாட்டு சந்தைகளில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம்” என்றார்.

மருந்து தயாரிப்பில் ஏற்படும் சிற்சில தவறுகள் காரணமாக அவை உரிய தரத்தில் இல்லை என்று வகைப்படுத்தப்படுவதாகவும், இது போன்ற கெடுபிடிகள் இந்தியாவின் மருந்துகளை மேலும் தரமானதாக மாற்ற உதவும் என்றும் கூறுகிறார் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் எஸ் ஏ ரமேஷ்.

ஐந்து விநாடிகளில் வாயில் கரையும் என்று கூறப்பட்ட மருந்து ஆறு விநாடிகள் எடுத்துக் கொண்டால் அது தரத்தில் குறைபாடாகக் கருதப்படும்” என்கிறார்.

ஆனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறார் சென்னையில் தனியார் மருத்துவமனையில் பொது மருத்துவராக இருக்கும் அஷ்வின்.

சில மருந்துக் கடைகள் 80% வரை விலையைக் குறைத்துத் தருகின்றன. ஒரு பொருளின் விலை ரூ.100 என்றால் எப்படி ஒருவரால் ரூ.20க்கு தர முடியும். நிறைய இடங்களில் காலாவதியாவதற்கு மூன்று மாதங்கள் இருக்கும்போது மருந்தைக் குறைந்த விலைக்கு மொத்தமாக வாங்கி, விற்கிறார்கள்.

மருந்துகளை முறையாக பேக்கிங் செய்யாவிட்டால், முறையாக சேமித்து வைக்காவிட்டால், காலாவதி காலத்தை நெருங்கும்போது அதன் செயலாற்றும் திறன் குறைந்துவிடும். சில நேரம் ஐவி மருந்துகளில் பாக்டீரியாக்கள் தங்கிவிடும்,” என்று தெரிவித்தார்.

 
தமிழ்நாட்டில் 346 மருந்து உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப்படம்

இன்சுலினை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும்போது 6 டிகிரி செல்சியஸ்-இல் வைக்க வேண்டும் எனவும், பலரும் அப்படிச் செய்வதில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறார் அஷ்வின். எனவே தனது நோயாளிகளை இன்சுலின் மருந்தை ஆன்லைனில் வாங்க வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 346 மருந்து உற்பத்தியாளர்கள் உள்ளனர். இங்கு 38,128 சில்லறை மருந்துக் கடைகள் உள்ளன. மொத்த வியாபாரிகள் 12,158 பேரும், சில்லறையுடன் சேர்த்து மொத்த வியாபாரம் செய்பவர்கள் 4927 பேரும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் எடுக்கப்படும் மாதிரிகளைப் பரிசோதிப்பதில் 20 முதல் 25 மருந்துகள் உரிய தரத்தில் இல்லை எனத் தெரிய வருவதாக தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாடு இணை இயக்குநர் ஸ்ரீதர் கூறுகிறார்.

ஒரு மருந்து உரிய தரத்தில் இல்லையென்று தெரிந்தவுடன், அது எங்கிருந்து வந்தது என்று விசாரணை செய்து மருந்தின் மொத்த வியாபாரி மற்றும் உற்பத்தியாளரைக் கண்டறிவோம். அதற்கும் முன்பாக அந்த மருந்துகளைக் கடைகளில் இருந்து அகற்றிட உத்தரவிடப்படும். அனைத்து, மருந்தகங்களில் இருந்தும் அந்த மருந்து நீக்கப்படும்.

 
இந்தியாவில் 48 மருந்துகள் தரமற்றவை - நீங்கள் அச்சப்பட வேண்டுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம்

உற்பத்தியாளரைக் கண்டறிந்த பின் தவறு தயாரிப்பின் எந்தக் கட்டத்தில் நடைபெற்றது என்பதைக் கண்டறிவோம். பிறகு தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அதற்கான விளக்கம் கேட்கப்படும். ஒரு நிறுவனம் மீண்டும் மீண்டும் தவறு செய்தால், அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும். தரமில்லாத மருந்து கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ள அதிகாரிகள் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் பிரிவு 18-இன் கீழ் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால் தரமற்ற மருந்துகள் சந்தையில் அதிகரிப்பதாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் நட்ராஜ் கூறுகிறார்.

ஆன்லைன் மூலம் விற்கும்போது காஷ்மீரில் இருக்கும் ஒருவர் தமிழ்நாட்டில் மருந்துகளை விற்க முடியும். அவை உரிய தயாரிப்பாளரிடம் இருந்து பெறப்பட்டதா என்பதை யாரும் உறுதிப்படுத்துவதில்லை” என்கிறார் அவர்.

தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு

தற்போது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் தெரிவிக்கிறது. மாதந்தோறும் எடுக்கப்படும் மருந்து மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

“மாநிலத்தில் 146 மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் மாதத்துக்கு 8 மாதிரிகளை எடுத்து வந்தனர். சில்லறைக் கடைகளில், மொத்த வியாபாரிகளிடம், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் எனப் பல்வேறு இடங்களில் இருந்து இந்த மாதிரிகள் எடுக்கப்படும். தற்போது மாதத்துக்கு பத்து மாதிரிகள் எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இணை இயக்குநர் ஸ்ரீதர்.

 

தரமான மருந்துகளை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம்?

இந்தியாவில் 48 மருந்துகள் தரமற்றவை - நீங்கள் அச்சப்பட வேண்டுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உரிய தரத்தில் இல்லையென்று வகைப்படுத்தப்படும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுதல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர் சந்திரசேகர் தரமான மருந்துகளைத் தெரிந்துகொள்ளச் சில வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கூறுகிறார். அவை,

  • உரிய உட்பொருட்கள் இல்லாத பாராசிடாமல் எடுத்துக்கொண்டால் அது காய்ச்சலை, உடல் வலியைப் போக்காது.
  • தரமில்லாத மருந்துகளை நீண்டகாலத்துக்கு உட்கொண்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.
  • சர்க்கரை , ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு நாள்தோறும் மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் உங்கள் மருத்துவரை ஒருமுறை அணுகிக் கொள்வது நல்லது.
  • கடைகளில் மருந்து வாங்கும்போது அதில் ISO (International Organisation for Standardization) அல்லது WHO-GMP (World Health Organisation Good Manufacturing Practices) என்ற அடையாளம் இருந்தால் அது தரத்துக்கான அறிகுறியாகும்.
  • காலாவதியாவதற்குச் சில நாட்களே மீதமிருக்கும் நிலையில் மருந்துகளை வாங்க வேண்டாம்.
  • ஊசிகள், இன்சுலின் போன்றவற்றை வாங்கும் கடைகளில் உரிய குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கின்றனவா என்று பார்க்கலாம்.
 

மருந்து நிறுவனங்கள் கூறுவது என்ன?

இந்தியாவில் 48 மருந்துகள் தரமற்றவை - நீங்கள் அச்சப்பட வேண்டுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம்

சன் ஃபார்மா, டோரன்ட் உள்ளிட்ட முன்னணி மருந்து நிறுவனங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மருந்துகளை “கள்ளப் பொருட்கள்” என்றும், அவற்றைத் தாங்கள் தயாரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளன.

சன் ஃபார்மாவின் செய்தித் தொடர்பாளர், “தங்கள் நிறுவனம் இந்த விஷயத்தை விசாரித்து, புல்மோசில் (சில்டெனாபில் ஊசி), தொகுதி எண் KFA0300; பான்டாசிட் 300 (உர்சோடியோசைகோலிக் அமில மாத்திரைகள் ஐபி), தொகுதி எண் GTE1350A ஆகியவை போலியானவை,” என்று கூறியுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மேலும், தங்கள் நிறுவனம் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், “தங்களுடைய சில முன்னணி மருந்து பிராண்டுகள், இப்போது லேபிளில் க்யூ.ஆர் கோட் குறியீடுகள் அச்சிடப்பட்டுள்ளன, நோயாளிகள் அவற்றை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களின் நம்பகத்தன்மையை எளிதாகச் சரிபார்க்க முடியும்,” எனவும் சன் ஃபார்மா தெர்வித்துள்ளது.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் சேகரிக்கப்பட்ட மாதிரியின் உண்மையான தன்மையைச் சரிபார்க்க, ஷெல்கால் 500இன் அதே தொகுப்பை மதிப்பீடு செய்ததாகவும், டோரன்ட் ஃபார்மா நிறுவனம் கூறியிருப்பதாகவும், அவை உண்மையல்லாத போலி மருந்துகள் எனத் தெரிய வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், கள்ள மருந்துகளுக்கு எதிரான நடவடிக்கையாக, தங்கள் நிறுவனம் ஷெல்காலில் க்யூ.ஆர் குறியீடுகளைச் செயல்படுத்தியுள்ளதாகவும், அதன்மூலம் மருந்திதின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்துக்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ள டோரன்ட் ஃபார்மா, அந்தக் குறியீடுகள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் கைப்பற்றப்பட்ட மாதிரியில் இல்லாதது கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஒரு மதிப்பீட்டு அறிக்கையுடன் முறையான பதிலைச் சமர்ப்பித்துள்ளதாகவும் டோரன்ட் ஃபார்மா நிறுவனம் கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.