Jump to content

வட்டி வீதங்களை முன்னைய மட்டங்களிலேயே பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானம் - ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி உயர்வான மட்டத்தில் பதிவாகும் எனவும் எதிர்வுகூறல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2   27 SEP, 2024 | 06:23 PM

image

நா.தனுஜா

நாட்டின் சமகால பொருளாதார நிலைவரங்களை கருத்திற்கொண்டு வட்டிவீதங்களை முன்னைய மட்டத்திலேயே பேணுவதற்குத் தீர்மானித்திருக்கும் மத்திய வங்கி, இவ்வாண்டின் முடிவில் பொருளாதார வளர்ச்சி எதிர்வுகூறப்பட்டதை விடவும் உயர்வான மட்டத்தில் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது.

நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான 5ஆவது மீளாய்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அச்சந்திப்பிலேயே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் மேற்கூறப்பட்ட பொருளாதார எதிர்வுகூறல்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதன்படி, நாணயச் சபையானது கொள்கை வட்டிவீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம் ஆகிய தற்போதைய மட்டங்களிலும், நியதி ஒதுக்கு வீதத்தை 2 சதவீதமாகவும் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

அதேபோன்று எதிர்வரும் சில காலாண்டுகளில் பணவீக்கம் 5 சதவீதத்துக்குக் கீழான மட்டத்தில் பேணப்பட்டு, நிர்ணயிக்கப்படும் விலைகள் மற்றும் நிரம்பல் நிலைமைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் எதிர்காலத்தில் பணச்சுருக்கம் பதிவாகும் என மத்திய வங்கியினால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இருப்பினும் அண்மையில் மின்சாரத் தீர்வைகள், எரிபொருள் மற்றும் பெற்றோலிய எரிவாயு போன்றவற்றின் விலைகளில் மேற்கொள்ளப்பட்ட கீழ்நோக்கிய திருத்தங்களாலும்,  உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட ஒட்டுமொத்த வீழ்ச்சியினாலும் முதன்மைப்பணவீக்கம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

அதேவேளை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் பிரகாரம், நாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தின் முதலாம் காலாண்டில் 5.3 சதவீத விரிவாகத்தினையும், இரண்டாம் காலாண்டில் 4.7 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்திருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், 2024இன் முதலாம் அரையாண்டில் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சிப்போக்கு, ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியிலும் தொடரும் எனவும், அது தொடக்கத்தில் எதிர்வுகூறப்பட்டதை விட உயர்ந்த வளர்ச்சியாக அமையும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது சமகால பொருளாதார நிலைவரங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகவும், குறுங்காலத்தில் அடைய எதிர்பார்க்கும் அடைவுகள் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதாகவும் நேற்றைய தினம் தெரிவித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அச்சந்திப்பின்போது விரிவாக எதுவும் கலந்துரையாடப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டத்தின் கீழான நிபந்தனைகளுக்கு அமைவாகத் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதா அல்லது அவை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதா என்ற தீர்மானம் நிதியமைச்சினாலேயே மேற்கொள்ளப்படும் எனவும், இருப்பினும் நாணய நிதியத்துடனான ஒத்துழைப்புக்கள் தொடரும் என ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையில் உத்தரவாதம் அளித்திருக்கிறார் எனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/194940

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.