Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தரும் செய்தி என்ன?(கேள்வி, பதில் வடிவில்) 

— வி. சிவலிங்கம் —

கேள்வி:

நடந்து முடிந்த 9வது ஜனாதிபதித் தேர்தல் என்பது பல வகைகளில் வித்தியாசமானது எனக் குறிப்பிடப்படுகிறது. அவை எவை?

பதில்:

சுதந்திரத்திற்குப் பின்னதான தேர்தல்களில் இத் தேர்தல் என்பது மிகவும் அமைதியாக நடைபெற்றதாக பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இத் தேர்தலை ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் அமைதியான தேர்தல்களோடு பலரும் ஒப்பிடுகின்றனர். இதற்கான பிரதான காரணம் நாடு பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் தேர்தல் செலவினம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதை சாமான்ய மக்களே புரிந்திருந்த நிலையில் அவை சாதகமாக இருந்தன.

அடுத்ததாக, தேர்தல் ஆணையம் மிகவும் இறுக்கமாக செயற்பட்டமை இம் மாற்றத்திற்கான பிரதான அம்சமாகும். பொதுவாகவே அதிகார தரப்பினர் அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்வது வழமையான சம்பிரதாயமாக இருந்துள்ளது. இம்முறை பாரிய அளவில் செயற்படுவதற்கான வாய்ப்புகள் கிட்டவில்லை. மக்களும் மிகவும் விழிப்பாகவே செயற்பட்டனர். சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள், தேவையற்ற உரைகள் போன்றன மிகவும் தவிர்க்கப்பட்டிருந்தன. இதனை அவதானிக்கும்போது தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் இறுக்கமான செயற்பாடுகளில் தங்கியிருப்பதை இத் தேர்தல் உணர்த்தியது.

தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையலாம்? என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே வெளிப்பட்டதால் பிரதான கட்சிகளைத் தவிர ஏனைய கட்சிகள் மிகவும் அடக்கியே செயற்பட்டன. குறிப்பாக, இன விரோத உரைகள், செயற்பாடுகளுக்கு மக்கள் ஆதரவை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

கேள்வி:

இத் தேர்தல் முடிவுகளை அவதானிக்கும்போது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை மக்கள் பெருமளவில் ஆதரித்த நிலையில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாவது நிலைக்குத் தள்ளியிருப்பது எவ்வாறான செய்தியை தருகிறது?

பதில்:

தேர்தல் முடிவுகளை ஆராயுமிடத்து, வாக்களிப்பில் நாடு சில பிரச்சனைகளில் ஒருமித்தும், மற்றும் சில பிரச்சனைகளில் வேறுபாடாகவும் செயற்பட்டிருக்கிறது. உதாரணமாக, தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதில் பொதுவான இலக்கைக் கொண்டிருப்பினும் அவ்வாறாக பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் எதற்கு முக்கியத்துவம் வழங்குவது என்பதில் வேறுபாடு காணப்படுகிறது. அநுரவிற்கு தேசத்தின் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினர் ஆதரித்துள்ளதையும், அதேவேளை  பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் நாட்டமுடைய மத்திய தர வர்க்கம் பொருளாதார உற்பத்தி வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருப்பதால் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஆதரித்துள்ளனர். இந்த இரு சாராரும் தமக்கே உரித்தான தேர்வை மேற்கொண்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக விகிதாசாரத்தில் உள்ளதால் அவர்களின் வாக்குப் பலம் அநுரவை ஜனாதிபதியாக அமர்த்தியுள்ளது.

கேள்வி:

இக் கருத்தை அவதானிக்கும்போது இந்த இரு பிரிவினரும் எதிர், எதிர் முகாம்களாக மாறுவார்களா? அல்லது தேசத்தின் முன்னேற்றம் கருதி இணைந்து செயற்பட வாய்ப்பு உண்டா?

பதில்:

இதற்கான பதிலை சற்று விரிவாக தர விரும்புகிறேன். இந்த இரு பிரிவினரதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த நிலையில் இரு சாராரும் ஒரு பலமான அரச கட்டுமானம் அவசியம் என்பதனையும், நாட்டின் பொருளாதாரம் தனியார், பொதுத்துறை இணைந்ததாக அமைதல் அவசியம் என்பதும் தெளிவாக இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியினரின் அரசியல் ஆரம்பம் என்பது இடதுசாரி மையக் கருத்துக்களை உள்ளடக்கியதாக இருந்தது. எனவே அவர்கள் நாட்டின் அரசியல் அடிப்படை மாற்றம் என்பது வர்க்க அடிப்படையில் அணுகப்பட்டது. முதலாளித்துவ கட்டுமானம் ஒன்றினால் தேசியப் பிரச்சனைகள் உக்கிரப்படுமே தவிர தீர வாய்ப்பில்லை என்பதே விளக்கமாக அமைந்தது.

ஆனால் கடந்த 40 ஆண்டுகால தாராளவாத திறந்த பொருளாதார கட்டமைப்பு பல விதங்களில் வர்க்கப் போராட்டத்திற்கான அடிப்படைகளை மாற்றி அமைத்தது. தொழிலாள வர்க்கம் கூறுகளாக்கப்பட்டு தொழிற்சங்க செயற்பாடுகள் முடக்கப்பட்டன. ஒரு புறத்தில் நாட்டின் ஜனநாயகக் கட்டுமானம் ஏகபோக அல்லது சர்வாதிகார அல்லது குடும்ப ஆட்சியை நோக்கி அதிகாரக் குவிப்பை மேற்கொண்ட நிலையில் முதலில் ஜனநாயக கட்டுமானத்தைப் பலப்படுத்துவதற்கு முன்னுரிமை தேவைப்பட்டது. இதன் காரணமாகவே இதுவரை வர்க்க அரசியலைப் பேசி வந்த ஜே வி பி இனர் பாராளுமன்ற ஆட்சிமுறையை வலியுறுத்தும் லிபரல் ஜனநாயக நெறிமுறைகளை நோக்கி தமது பாதையை மாற்றினர். இதனைச் சந்தர்ப்பவாதம் என்பதை விட தேசத்தின் நிலை அவ்வாறான மாற்றத்தை நோக்கித் தள்ளியது எனலாம். இதுவே இன்று ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்கிறது.

எனவே 2019ம் ஆண்டளவில் கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினர் முதலில் நவதாராளவாத பொருளாதாரத்தையும், அதன் அரசியல் கட்டுமானத்தையும் அதன் நன்மை தரும் பகுதிகளைப் பாதிக்காத வகையில் பொறிமுறை மாற்றம் ஒன்றை நோக்கி தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பினைத் தோற்றுவித்து மக்கள் மத்தியில் செயற்பட்டனர். அதன் காரணமாக மக்கள் மனதில் மாற்றங்களைக் கண்ட ஜே வி பி இனர் தேசிய மக்கள் சக்தியுடன் தம்மை இணைத்தனர்.

அதே போலவே நவதாராளவாத பொருளாதாரத்தையும், அதனை நிறைவேற்றும் வகையில் நிறைவேற்று  ஜனாதிபதி ஆட்முறையை அறிமுகப்படுத்திய ஐ தே கட்சியின் ஒரு பிரிவினர் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பாட்டிலிருக்கும் நவதாராளவாத பொருளாதாரக் கட்டுமானமும், அதிகாரக் குவிப்பைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையும் நாட்டில் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை என்ற முடிவுக்கு வந்தனர். குறிப்பாக நவதாராளவாத பொருளாதாரம் நாட்டினை ஒரு நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் தள்ளியதோடு, தேசியத்தின் உள்நாட்டு உற்பத்தியையும் இல்லாதொழித்தது. அதனால் இறக்குமதிக் கலாச்சாரத்திற்குள் நாடு முடங்கியது. அதே போலவே அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை தேசிய நல்லிணக்கத்தை நலிவடையச் செய்ததோடு, நாடு தொடர்ச்சியான போர் நிலைக்குள் தள்ளி நிலைபேறான ஆட்சிக் கட்டுமானத்தைத் தோற்றுவிக்க முடியாதிருந்தது.

இம் மாற்றங்களை அவதானித்த பிரதான கட்சிகளான ஜே வி பி – தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தமது அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து தம்மை மாற்றிக் கொண்டன. இதன் விளைவாகவே தேசிய மக்கள் சக்தியினர் ஒரு புறத்தில் நவதாராளவாத பொருளாதாரக் கட்டுமானத்தின் சிறந்த அம்சங்களை தொடருவதும், அதே வேளை அரசியல் கட்டுமானத்தை பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிக் கட்டுமானத்தை நோக்கித் திருப்பும் முடிவை எடுத்தனர். அதன் விளைவே மக்கள் அக் கட்சியினரை ஆட்சிக் கட்டுமானத்தில் உட்கார வைத்துள்ளனர்.

அதே போலவே ஊழல், விரயம், நல்லாட்சிக் கட்டுமானம், உள்ளுர் சிறிய, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களைப் பலப்படுத்தி தேசியவருமானத்தையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் விதத்தில் சமூக சந்தைப் பொருளாதாரக் கட்டுமானத்தை நோக்கி ஐக்கிய மக்கள் சக்தியினர் மாற்றமடைந்தனர். எனவே இரு சாராரும் எதிர், எதிர் அணிகள் அல்ல என்பதே எனது அவதானிப்பு ஆகும்.

 

கேள்வி:

அவ்வாறாயின் அடுத்து வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் எவ்வாறான அரசியலை எமக்குத் தரப் போகிறது?

பதில்:

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மையமாக வைத்துப் பார்க்கையில் பல புதிய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். உதாரணமாக, சிங்கள அரசியல் தேசிய பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்களில் செல்லலாம். அதாவது பொருளாதாரக் கட்டுமானம் என்பது பலமான சமூகப் பாதுகாப்பும், நியாயமான செல்வப் பங்கீடும் சந்தைப் பொருளாதாரம் காரணமாக பாதிக்கப்படும் நலிவடைந்த பிரிவினருக்கான பாதுகாப்பையும் மையமாகக் கொண்ட பிரிவினருக்கு தேசிய மக்கள் சக்தி தலைமை தாங்கவும், அதே வேளை நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் நியாயமான, சுயாதீன பங்களிப்பைக் கோரவும், வருமான ஏற்றத்தாழ்வினைத் தடுக்கும் வகையிலான அரசின் தலையீட்டை குறிப்பாக வேலைத் தலங்களில் உள்ள தொழிற் பாதுகாப்பை அதிகரித்தல், வேலையற்றோருக்கான வருமானப் பாதுகாப்பு என்பதைக் கோரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் தொழிற்படலாம்.

நாம் இப் பிரச்சனையை நாட்டில் இன்று நிலவும் நவதாராளவாத திறந்த பொருளாதாரத்தின் தாக்கங்களின் பின்னணியிலிருந்தே அணுக வேண்டும். சிலர் உணர்ச்சி தரும் உரைகளின் பின்னணியிலிருந்து நோக்கலாம். ஆனால் நாடு மிக மோசமான பொருளாதாரச் சிக்கலில் உள்ள நிலையில் இரு தரப்பினரதும் அணுகுமுறைகள் மிக அவசியமாக உள்ளன. அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள நவதாராளவாத பொருளாதாரம் பல நன்மைகளையும் தந்துள்ளதை நாம் மறுக்க முடியாது. அவற்றை நிராகரித்துச் செல்லவும் முடியாது.

நடைமுறையிலுள்ள திறந்த பொருளாதாரம் சுதந்திர வர்த்தகம், கட்டுப்பாடுகளை அகற்றுதல், தனியுடமையாக்கல், அரச தலையீட்டினைக் குறைத்தல் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கியது. இதன் விளைவாக, மக்கள் உற்பத்தியாளர் நிலையிலிருந்து நுகர்வோராக மாற்றப்பட்டார்கள். உள்ளுர் உற்பத்தி மிகவும் முடக்கப்பட்டது. பதிலாக நுகர்வுக் கலாச்சாரம் என்பது இறக்குமதியாளர்கள். பாரிய வியாபார நிலையங்கள், நிதி நிறுவனங்கள் என்பனவே இப் பயன்களை அனுபவித்தன. இதனால் சாமான்ய மக்கள் கடனாளிகளானார்கள்.

இதனை இந்த இரு தரப்பாரும் மிகவும் விமர்ச்சித்தார்கள். ஆனாலும் ஐக்கிய மக்கள் சக்தியினர் சிறிய மற்றும் மத்தியதர நிறுவனங்களே உள்ளுர் அடிப்படையில் வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் தருவதால் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் வழங்குமாறும், சில இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளுர் உற்பத்திகளுக்கான விலையைப் பெற உதவுமாறும், உட் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து குறிப்பாக போக்கு வரத்து, சந்தை வசதிகளை ஏற்படுத்துமாறும் கோருகின்றனர்.

கேள்வி:

அவ்வாறாயின் தேசிய மக்கள் சக்தியினரின் கவனம் எங்கு குவிக்கப்பட்டுள்ளது?

பதில்:

அநுர தலைமையிலான பிரிவினர் வருமான ஏற்றத்தாழ்வு குறித்து வற்புறுத்தினர். ஏனெனில் செயற்பாட்டிலுள்ள திறந்த பொருளாதாரம் பாரிய அளவில் அதாவது ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் சமூகம் அமைதியற்று இருந்தது. தொழிலாளர்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன. திறந்த பொருளாதாரம் பெருந்தொகையான மக்களை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளியது. இம் மக்களின் எதிர்காலம் குறித்தே தேசிய மக்கள் சக்தியின் கவனம் அதிகளவில் இருந்தது. எனவேதான் சமூக சமத்துவத்தைக் கோரினர். வருமானத்தை நியாயமான விதத்தில் பங்கீடு செய்யுமாறு வற்புறுத்தினர். அத்துடன் தேசத்தின் பொருளாதாரத்தை ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மாற்றும்படி கோரினர்.

வருமான சமத்துவமின்மை என்பது நவதாராளவாத பொருளாதாரத்தின் விளைபொருளே என்றார்கள். இதன் விளைவாக பணக்காரர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் தொழிலாள விவசாய மக்களை கீழே தள்ளியே மேலிடத்திற்குச் சென்றார்கள். தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடற்ற வர்த்தகம், தனியார் உடமையாக்குதல் போன்ற செயற்பாடுகள் செல்வத்தைச் சிலரின் கரங்களில் குவிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது.

மலிவான தொழிலாளர் கிடைக்கும் எனக் கூறி வெளிநாட்டு முதலீடுகளை உள்நாட்டிற்கு வரவழைத்தார்கள். இதன் காரணமாக தொழிலாளர் சட்டங்கள் பலவீனப்படுத்தப்பட்டன. அவர்களின் பாதுகாப்பு கைவிடப்பட்டது. அம் மக்களின் சுகாதாரம், கல்வி, வேலையற்றோருக்கான கொடுப்பனவுகள் போன்றன கைவிடப்பட்டன.

இத்தகைய கொடுமையான நிலமைகளே தேசிய மக்கள் சக்தியின் பிரதான ஆதரவுத் தளங்களாக அமைந்தன.

கேள்வி:

அவ்வாறாயின் இந்த இரு சாராரும் எவ் வழியில் தமது பயணத்தை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு?

பதில்:

தேசிய மக்கள் சக்தி, ஐக்;கிய மக்கள் சக்தி ஆகிய இரு சாராரையும் இரு வகைக்குள் பார்க்கலாம். அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் தேசிய செல்வத்தை நியாயமான விதத்தில் பங்கீடு செய்வதில் அதிக நாட்டம் கொண்டுள்ளவர்களாகவும், ஐக்கிய மக்கள் சக்தியினர் தேசிய உற்பத்தி வளர்ச்சியில் அதிக கவனம் கொண்டுள்ளவர்களாகவும் காண முடியும்.

இப் பிரச்சனையில் அரசின்  செயற்பாடு குறித்து இரு தரப்பாரும் வெவ்வேறு கோட்பாடுகளில் இயங்க வாய்ப்புண்டு. உதாரணமாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் உள்ளுரில் செயற்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி உற்பத்தியை அதிகரிக்கும்படி கோரலாம். அதன் மூலம் வேலை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கான ஊக்குவிப்பாக கோரலாம்.

ஆனால் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் செல்வத்தை நியாயமான விதத்தில் பகிர்ந்தளிக்கும் வகையில் வரி விதிப்பை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படலாம். இங்கு வரி விதிப்பு என்பது தொழில் நிறுவனங்களைப் பாதிக்குமாயின் உற்பத்தி தடைப்படலாம்.

எனவே இந்த இரு சாராரும் பொது அடிப்படையில் செயற்படுவதற்கு ஏராளமான இடமுண்டு. அதே வேளையில் முறுகல் நிலமைகளும் ஏற்படலாம். ஆனாலும் தேசத்தின் எதிர்காலம் கருதி செயற்படும் அவசியம் உண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டது போல இரு சாராரும் தற்போது நடைமுறையிலுள்ள திறந்த பொருளாதார கட்டமைப்பு என்பது பொருளாதார அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் இனிமேலும் பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனாலும் இப் பிரச்சனைகளுக்கான தீர்வை எட்டுவதில் பிரச்சனைகள் உள்ளன.

இருப்பினும் இந்த இரு சாராரும் சந்தை நடவடிக்கைகளில் அரசின் தலையீட்டைக் கோருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் இரு சாராரும் ஒரு கலப்புப் பொருளாதாரத்தை நோக்கியே பயணமாகின்றனர். இப் பயணம் என்பது நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் நிலவும் சமூக சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்பையே வலியுறுத்துகின்றன. அதாவது சமூக ஜனநாயக இலக்கை நோக்கிய பயணமாகவே இதனைக் கொள்ள முடியும்.

 

கேள்வி:

இத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்ற பெயரில் நிறுத்தப்பட்டவரை நிராகரித்துள்ளதோடு ஐக்கிய இலங்கை எனச் செயற்படும் கட்சிகளை நோக்கி பெருமளவில் வாக்களித்துள்ளார்கள். இதனை எவ்வாறு புரிந்து கொள்வது?

பதில்:

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், முஸ்லீம் பிரதேசங்கள் மற்றும் மலையகத்திலும் மக்கள் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகளவிலும் அநுர, ரணில் ஆகியோருக்கும் வாக்களித்த நிலமைகளை அவதானிக்கும் போது ஒட்டு மொத்தமான இதர சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையை அநுர பெறவில்லை என்பது வெளிப்படை. அதை அவர் புரிந்துள்ள நிலையில்தான் தாம் தமக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையைப் பெற உழைக்கப் போவதாக தெரிவித்துள்ளமை உணர்த்துகிறது.

இம் மக்கள் ஆழமான சந்தேகத்தில் இருப்பதை தேர்தலில் உணர்த்தியுள்ளார்கள். இந் நிலையில் நாட்டில் இறுக்கமான விதத்தில் ஜனநாயகக் கட்டுமானங்களைப் பலப்படுத்தி, சட்டம், ஒழுங்கு அடிப்படையில் நாடு முன்னேறிச் செல்லும்போது இச் சந்தேகங்கள் மறைய வாய்ப்புகள் உண்டு.

இங்கு வடக்கு, கிழக்கு மாகாண அரசியலை அவதானிக்கும் போது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான அடிப்படைகள் தெரிகின்றன. உதாரணமாக தமிழரசுக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகளை அவதானிக்கும்போது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரிவினையா? அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான தீர்வா? என்பதே கேள்வியாக இருந்தது. பிரிவினைவாத சக்திகள் 13வது திருத்தத்தினை முற்றாக நிராகரித்து சுயநிர்ணயம், சுயாட்சி, தன்னாட்சி எனக் கூறியதோடு தமிழ் மக்கள் இப் பிரச்சனையில் மிக ஒற்றுமையாக இருப்பதை உலகிற்கு எடுத்துக் காட்டப் போவதாகத் தெரிவித்தார்கள்.

ஆனால் தேர்தல் முடிவுகள் பொது வேட்பாளரை முற்றாக நிராகரித்துள்ளார்கள். இது ஒரு வகையில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வா? அல்லது பிரிவினையா? என்பதற்கான வாக்கெடுப்பாக அமைந்தது. மக்கள் தீர்மானகரமான விதத்தில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை எதிர்பார்ப்பதாகவே நாம் கொள்ள முடியும்.

தற்போது பொதுத் தேர்தல் அண்மித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நகர்வு என்பது எவ்வாறாக அமையலாம்? என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இத் தேர்தலின் போது தமிழரசுக் கட்சி சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதாக தெரிவித்தது. அதன் பிரகாரம் வடக்கு, கிழக்கில் பெரும்பாலானவர்களும், முஸ்லீம் மற்றும் மலையகப் பிரதேசங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் பெரும்பாலான மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.

ஏற்கெனவே சில கேள்விகளுக்கான பதில்களில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒருமித்துச் செயற்படுவதற்கான அம்சங்கள் நிறைய இருப்பதை அடையாளம் காட்டியிருந்தேன். அதே வேளை ஜனாதிபதி அநுர அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையில் சகல மக்களுக்கமான ஒரு ஜனாதிபதியாக செயற்படும் விதத்தில் தமக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையையும் பெற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே தமிழரசுக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியை தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக மிக விரைவாக செயற்பட்டு தேசிய அமைதியை ஏற்படுத்தி ஜனாதிபதி கூறுவது போல ‘சகலரும் இலங்கையர்’ என்ற அடையாளத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலமே பொருளாதார அபிவிருத்தியை எட்ட முடியும். கடந்த காலங்களில் இரு பெரும் கட்சிகள் இனவாதத்தைப் பயன்படுத்தி தேசிய இனப் பிரச்சனையை உக்கிரப்படுத்தி அதிகாரத்தைக் கைப்படுத்தி நாட்டைச் சுரண்டிய வரலாறுகளே இன்று மிஞ்சியுள்ளன. இதன் விளைவாகவே சாமான்ய மக்களின் பிரதிநிதியை மக்கள் அரியாசனத்தில் இருத்தி உள்ளனர். கடந்த கால இனவாத, பிரிவினைவாத அரசியலுக்கு எதிர் காலத்தில் இடமில்லை என்பதை உணர்த்தும் விதத்தில் மாற்றங்கள் ஆரம்பித்துள்ளன.  ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு தரப்பினரையும் தேச முன்னேற்றத்தின் படிக் கற்களாகவே பார்க்கின்றனர். கடந்த இருண்ட காலம் இனிமேல் வராது என்ற நம்பிக்கையை பெற்றுள்ளனர். தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி:

அவ்வாறாயின் எவ்வாறான நகர்வுகளைத் தமிழ் அரசியல் மேற்கொள்ள வேண்டும்?

பதில்:

முதலில் தமிழரசுக் கட்சிக்கு வெளியிலுள்ள ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகளை நேசிக்கும் உதிரிகளாக உள்ள  கட்சிகள், குழுக்களாக இயங்கும் சக்திகள் முதலில் இணைய வேண்டும். இவர்களின் இலக்குகள் என்பது ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான தீர்வை முன்வைக்கும் கட்சிகளோடு உடன்பாட்டிற்குச் செல்லுதல்,  தேசிய வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையிலும், நாட்டில் புதிய சகாப்தம் தோன்றியுள்ளதை உத்தரவாதம் செய்யும் வகையிலும், இனவாத அரசியலுக்கு எதிர் காலத்தில் இடமளிக்காத வகையிலும், சிறுபான்மைத் தேசிய இனங்கள் தேசிய உருவாக்கத்தில் பங்கு கொள்ளும் வகையில் அமைச்சரவையிலும் இணைந்து செயற்பட வேண்டும். அடுத்தது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலைச் சீரழித்து வந்த தமிழ்க் குறும் தேசியவாத சக்திகளை தமிழ் அரசியலிலிருந்து நீக்குதல் என்பனவாகும். ஏனெனில் இந்த அரசியல் தமிழ் சமூகத்தை முன்னேறிச் செல்ல இடமளிக்கவில்லை. பதிலாக தத்தமது சுக போகங்களுக்காக பணப் பெட்டிகளை நோக்கிச் சென்றார்கள். இந்த வரலாறு முடிவுக்கு செல்ல வேண்டும். தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக செயற்படும் ஜனநாயக உரிமை சகலருக்கும் உண்டு. ஆனால் மக்கள் பெருமளவில் தமது விருப்பத்தைத் தேர்தலில் வெளிப்படுத்திய நிலையில் அப் பாதையைத் தொடர இடமளிக்க வேண்டும். ஆனால் தொடர்ச்சியாகவே முன்னேறிச் செல்ல முடியாத வகையில் தடுப்புகளைத் தொடர்ச்சியாக கட்டுவது ஜனநாயக செயற்பாடு எனக் கருத முடியவில்லை.

தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிளவுகளுக்கு காரணமாகவுள்ள பிரிவினை சக்திகள் அகற்றப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை நேசிக்கும் சக்திகள் ஓர் ஜனநாயக கட்டுமானத்தை தோற்றுவிக்க வேண்டும். ஏனெனில் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாகவே ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை வலியுறுத்தியுள்ளன. தமிழரசுக் கட்சி புதிய யுகத்தை நோக்கிச் செல்லும் வகையில் சகல ஜனநாயக சக்திகளும் ஒரே குடையின் கீழ் செயற்படும் வகையில் அறைகூவல் விடுக்க வேண்டும். தமிழ் அரசியலில் சாத்தியமான அரசியல் பாதையை ஒழுங்கமைக்கும் நோக்கில் சகல சக்திகளையும் இணைப்பதற்கு அக் கட்சி தயாராக வேண்டும்.

தமிழரசுக் கட்சி இத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதாக எடுத்த முடிவை தமிழ் மக்கள் ஏகோபித்த விதத்தில் ஆதரித்துள்ளனர். இதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெறுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். தற்போது சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் உறங்கு நிலைக்குச் சென்றுள்ளன. இவர்கள் மீண்டும் தழைக்க முடியாதவாறு இன்றைய ஆட்சியாளர்களைப் பலப்படுத்த வேண்டும். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சகல முயற்சிகளுக்கும் தமிழ் மக்கள் பக்க பலமாக இருத்தல் அவசியம்.

எதிர்வரும் தேர்தலை எதிர் கொள்வதற்கு தமிழரசுக் கட்சி சகல ஜனநாயக சக்திகளுக்கும் அறைகூவல் விடுக்க வேண்டும். நாட்டின் இன்றைய அரசியல் நிலையில் காத்திரமான முடிவுகளை எடுக்கும் வகையில் கட்சிக்குள் பலமான விதத்தில் ஜனநாயக விழுமியங்கள் தோற்றம் பெற வேண்டும். கட்சிக் கட்டுப்பாடுகளை மீறுவோர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இன்று நாடு புதிய ஜனநாயக மாற்றங்களை நோக்கிப் புறப்பட்டுள்ள வேளையில் தமிழ் அரசியல் அதற்கு ஏற்ற வகையில் மாற வேண்டும்.

தமிழ் பிரதேசங்களில் பொருளாதார அடிப்படையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அரசியல் இணக்கம் காணப்பட வேண்டும். தமிழ் சமூகத்திலுள்ள அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர் என்போரை குறிப்பாக பணப்பெட்டியின் பின்னால் செல்பவர்களைத் தவிர்த்து காத்திரமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் என்பது பிற்போக்குத் தேசிய வாதத்திற்கு எதிராகவும், ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களுடன் ஐக்கியத்தைப் பேணும் விதத்திலான அரசியல் கூட்டணி அமைதல் அவசியம்.

முற்றும்.

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.