Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"மழைக்காலம்"
 
 
ஒரு காலத்தில், பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு அழகிய சிறிய நகரத்தில், ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் எப்பொழுதும் இயற்கையின் அழகில் தன்னை இழந்து, அதில் இன்பம் காண்பவள். அதிலும் அவளுக்கு பிடித்தமான காலம் மழைக்காலம். ஆவணி புரட்டாசி மாதம் என்றால் அவளின் மகிழ்வை சொல்லவே முடியாது. மழைத்துளிகள் மலையில் நடனமாடி ஓடும் விதம், தன் பாதையில் உள்ள அனைத்தையும் புரட்டிக்கொண்டு நெளிந்து வளைந்து துள்ளி செடிகள் மரங்களுக்கிடையே, பெரிய பாம்புபோல ஊர்ந்து போவது, அவள் இதயத்தை நிரப்பி ஒரு மகிழ்ச்சி உணர்வை, ஒரு மயக்கத்தை தானாகவே ஏற்படுத்தும். அதை பார்த்து ரசிக்கத்தான் அவள் கார்காலத்தை விரும்பினாள். ஏன் பெயர்கூட ஈரநிலா, ஆமாம் மழையில் நனைந்த நிலா அவள்!
 
ஈரநிலா நகரின் ஓரளவு வசதியான பொது நூலகத்தில் உதவிப் நூலகராகப் பணிபுரிந்தாள். எனவே ஓய்வு வரும்பொழுது எல்லாம், தன் நேரத்தை புத்தகங்களால் நிரப்பப்பட்ட அலமாரிகளில், காதல் மற்றும் சாகசக் கதைகளில், தன்னை இழந்தாள். அதில் காணப்படும் கதாநாயகியாகவே பலவேளையில் ஆழமாக மாறிவிடுவாள், அது அவளுக்கு தனது சொந்த காதல் வாழ்வை எப்படி எப்படி அமைக்கவேண்டும் என்று ஒரு கற்பனை வடிவத்தை கொடுத்து, அப்படி அனுபவிக்க கனவில் ஏங்கினாள்.
 
ஒரு நாள் ஒரு மழைக்கால பிற்பகலில், ஈரநிலா ஒரு காதல் நாவலில் மூழ்கியிருந்தபோது, இசைநிலவன் என்ற இளைஞன் தன் இலக்கிய தேடுதலுக்காக, பணிமனையில் இருந்து கொட்டும் மழையியில் கொஞ்சம் நனைந்தவாறு, கலைந்த தலைமுடியுடன் நூலகத்திற்குள் தஞ்சம் புகுந்தான். அவன் கையில் கட்டப்பட்டு இருந்த நீல நிற மணிக்கூடு ஐந்துமணி என்று காட்டியது. இன்னும் ஐந்து மணித்தியாலம் நூலகம் திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவன், மற்றவர்களை குழப்பாதவாறு மெல்ல மெல்ல அடியெடுத்து மெதுவாக, அதே சமயம் கண்கள் மேலோட்டமாக மேய்ந்தவாறு உள்ளே, இலக்கிய பகுதியை நோக்கி நடந்தான். அது ஈரநிலாவின் கவனத்தையும் எனோ ஈர்த்தது.
 
அதிகமாக குழம்பிய தலை முடியும், கம்பீரமான தோற்றமும், நேர் கொண்ட கூரிய விழிகளும், புன்னகைக்க மறுக்கும் இறுகிய உதடுகளும், பரந்த மார்பும் கூட காரணமாக இருக்கலாம்? இப்ப அவள் படித்துக்கொண்டு இருந்த காதல் நாவலில், இலக்கியத்தில் வர்ணித்த தலைவன் இவனோ என்று அவள் ஆச்சரியத்தில் பார்த்தது போல இருந்தது.
 
இசைநிலவன் பல்வேறு புத்தகங்களை ஆர்வத்துடன் பிரட்டி பிரட்டி பார்த்தபடி நூலகத்திற்குள் அலைந்தான். ஈரநிலாவின் கண்கள் இன்னும் அவனையே எந்த வெட்கமும் இன்றி பார்த்துக்கொண்டே இருந்தது. அவளது இதயமும் ஒவ்வொரு கணமும் கொஞ்சம் வேகமாகத் துடித்துக்கொண்டு இருந்தது. அவன் தன்னை திருடுவது போல அவள் உணர்ந்தாள். இறுதியாக, அந்த ஈர்ப்பின் தாக்குப்பிடிக்க முடியாமல், ஈரநிலா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இசைநிலவனை அணுகினாள்.
 
வான்முகந்த நீர் மழை பொழியவும், மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும், மாரி பெய்யும் பருவம் போல் அவள், மழைபொழிந்த நதியாய் வளைந்து நெளிந்து சிறிய புன்னகையுடன் கடலான அவனை அணுகினாள்.
 
"ஹலோ," என்று ஈரநிலா அவனிடம் சொன்னாள், அவள் குரலில் வெட்கம் நிறைந்திருந்தது. "புத்தகத்தைக் கண்டுபிடிக்க ஏதாவது உதவி வேண்டுமா?"
இசைநிலவன் சட்டென திரும்பினான். மழைநீர் கழுவிய இலை முகம் போல, மணம் விரிந்து நிறம் பொழியும் பல பூக்கள் போல, மழை நனைந்து கிளையமர்ந்து தலை துவட்டும் பறவைகள் போல, கார் நிலையாலே நீர் நிலை நிரம்பி ஊர்விழி கவரும் ஆம்பல்கள் போல, அவளின் அழகும் புன்னகையும் அவனை ஒருதரம் அப்படியே அசைத்துவிட்டது. அவன் ஒருவாறு தன்னை சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் ஒரு சூடான குறும் புன்னகை பரவியது. அது, புன்னகை வீசிடும் கார்முகில் போல மின்னியது. "நிச்சயமாக, நான் அதை பாராட்டுகிறேன்," என்று அவன் பதிலளித்தான், கோடை மழை போல அவனது குரல் இனிமையாக இருந்தது.
 
பழைய தரமான [கிளாசிக் / classic] கதைகள் நிறைந்த பகுதிக்கு ஈரநிலா இசைநிலவனை வழிநடத்தினாள், அங்கு அவர்கள் புத்தகங்கள் தேடிக்கொண்டு, தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றிய தங்கள் தனிப்பட்ட எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டனர். அவர்கள் இருவரும் இலக்கியத்தின் மீதான தங்களது ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டபோது, அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கிடையேயான தொடர்பை இன்னும் இன்னும் நெருக்கமாக வலுப்படுத்தியது.
 
வெளியில் இன்னும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால், ஈரநிலாவுக்கு இசைநிலவன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு விரைவாக போக உதவினார். அந்த மழைக்கூடான பயணம் இருவர் இதயத்திலும் காதல் மழையையும், அதேநேரம் வீதியின் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இரங்கி எற, அவர்களின் ஈர உடல்கள் முட்டி மோத, ஈரநிலா, தான் விழாமல் இருக்க அவனை இறுக்கி பிடிக்க, யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி அறிதும், செம்புலப் பெயல்நீர் போல, அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே! என்பது போல இருவரும் ஒருவராகி, அந்த மழைக்கு நன்றி செலுத்தினர்.
 
அதன் பின் நூலகத்தில் அவர்கள் சந்திப்பது வழக்கமான விடயமாக மாறியது, இது மழைக்காலம் என்பதால், அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே என்பது போல, அவர்களின் காதலும் அழகாக மழையாக பொழிந்து அவர்களை நெருக்கமாக்கியது. அவர்கள் புத்தகங்களைப் பற்றி விவாதிக்கவும், பரிந்துரைகளைப் பரிமாறவும், அவர்கள் படித்த பக்கங்களுக்குள் புதிய உலகங்களைக் கண்டறியவும் அவர்களின் உறுதியான நட்பு உதவியது.
 
ஒவ்வொரு நாளும், இசைநிலவனுடனான தனது தொடர்பு புத்தகங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதை ஈரநிலா உணர்ந்தாள். அவனுடைய அன்பும், புத்திசாலித்தனமும், புரிதலும் ஒரு மென்மையான மழையைப்போல் அவளது ஆன்மாவில் பெய்தது. இசைநிலவனும் ஈரநிலாவின் முன்னிலையில் ஆறுதல் அடைந்து, தன்னை உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஒரு துணை கிடைத்ததைப் போல உணர்ந்தான்.
 
காதல் கண்ணை மறைக்கும் என்பது எல்லாம் பொய் என்பது போல, ஈரநிலா மிக கவனமாக மெல்ல மெல்ல பழகி பழகி, அவன் பெயர் கேட்டு, அவன் நிலை கேட்டு, ஊர் கேட்டு, அவை அறிந்த பின்பே தான், அவன் மேல் நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள்.
 
"முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"
 
ஒருநாள் அவர்கள் இருவரும், நகரத்தின் வழியாக உலாவ முடிவு செய்தனர். அவர்கள் கைகோர்த்து நடக்கையில், கார்மேகமும் உணர்ச்சி பட்டதோ என்னவோ, மழைத்துளிகள் அவர்களைச் சுற்றிப் பாய்ந்தன, ஈரநிலாவால் தன் இதயத்தின் உணர்ச்சிகளின் எழுச்சியை உணராமல் இருக்க முடியவில்லை. அவனும் 'ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே' என்று கேட்பதுபோல அவளின் நனைந்த உடலை பார்த்தான். அவன் அவளை பக்கத்தில் தெரிந்த ஆலமரத்தின் அடியில் கொஞ்சம் மழைக்கு ஒதுங்க அழைத்தான். அவள் முகம் அவனை பார்த்து சொல்லாத பாசத்தால் பிரகாசித்து, "இசைநிலவன்" என அவள் கிசுகிசுத்தாள், அவள் குரல் பலவீனத்தால் நடுங்கியது, "நான் உன்னை காதலிக்கிறேன்" என்றது.
 
அதே ஏக்கமும் மென்மையும் நிறைந்த இசைநிலவனின் கண்கள் அவளைச் சந்தித்தன. "ஈரநிலா, நாங்கள் சந்தித்த முதல் நாளிலிருந்து என் இதயம் உனக்காக ஏங்குகிறது," என்று அவனும் ஒப்புக்கொண்டு, "நான் உன்னை ஆழமாக காதலிக்கிறேன்." என்றான். அந்த நேரத்தில், மழைத்துளிகள் ஆலமர இலைகளின், கிளைகளின் இடைவெளியினூடாக சொட்டு சொட்டாக விழுந்ததால், அவர்கள் தங்களை அறியாமல் ஒரு உணர்ச்சிமிக்க முத்தத்தை பரிமாறினர். அது தான் அவர்களின் முதல் முத்தம். ஒரு காலத்தில் ஈரநிலாவின் நேசத்துக்குரிய தோழனாக இருந்த மழை, அவர்களின் அன்பின் நித்திய அடையாளமாக மாறி, அவர்களை ஒன்றிணைத்த அழகான மழைகாலமாக மாறியது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
367412184_10223741420186270_886985943495758133_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=BBuf1d3UBT8Q7kNvgHNiIqO&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=ACo6T6s3blO5UYWrVm8BdgT&oh=00_AYDJLbUQdTB9w8RwsIPw7LL_Nl6o_eReEq-ewbcKsGC7rA&oe=67093E1E 367396681_10223741420266272_5321066074797443707_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=iZAYxitLUcUQ7kNvgHA7pGE&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=ACo6T6s3blO5UYWrVm8BdgT&oh=00_AYDTIHgq8E1_4cOQQRgHiv51sfgdS-zLjePnJflkF3vFDg&oe=67093D16 367429705_10223741420306273_430205470884562377_n.jpg?stp=dst-jpg_p235x165&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=cWgstRFSMncQ7kNvgFX_WEA&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=ACo6T6s3blO5UYWrVm8BdgT&oh=00_AYCzkjpEKTKyb-oWx5NgYQMRpRl7AldWTUezGxNKi61dDg&oe=670958A7
 
 


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.