Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு

nobel_literature_2024_han_kang_writers-p

1970ஆம் ஆண்டு தென் கொரிய நகரான Gwanjuவில் பிறந்த ஹான் காங்க்குக்கு இலக்கியத்துக்கான 2024 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தை ஹான் சியூங் வோனும் புகழ் பெற்ற நாவலாசிரியர். காங் தனது 23ஆம் வயதில் ‘இலக்கியமும் சமூகமும்’ என்ற பத்திரிக்கையில் கவிதைகள் எழுதி தனது இலக்கிய பயணத்தை துவக்கினார். அடுத்த இரண்டாண்டுகளில் அவரது சிறுகதை தொகுப்பு பதிப்பிக்கப்பட்டது. அதன் பின் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் ‘தி வெஜிடேரியன்‘ என்ற நாவல் வெளிவந்தபோது சர்வதேச அங்கீகாரமும் அவருக்கு கிடைத்தது. மூன்று பகுதிகளில் எழுதப்பட்ட நாவல் அது. புலால் உண்பதை நிறுத்துவது என்று முடிவெடுத்த பெண் ஒருத்தி எதிர்கொள்ளும் பேரழிவை விவரிக்கும் அச்சுறுத்தலான நாவல் அது. பின்னர், 2014ல் அவர் எழுதிய ‘மானுட செயல்கள்‘ என்ற நாவல் அவர் பிறந்து வளர்ந்த மண்ணை களமாய் கொண்டது. 1980ஆம் ஆண்டு தென் கொரிய ராணுவம் அப்பகுதியில் நிகழ்த்திய படுகொலைகளில் பலி கொள்ளப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்து தன் தேசத்தின் அரசு வன்முறை வரலாற்றை எதிர்கொண்டார் அவர். இதை கருத்தில் கொண்டே நோபல் பரிசு கமிட்டி தனது அறிவிப்பில், அவரது எழுத்தின் சிறப்பியல்பு, “வலியின் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துதல்,” என்று கூறியது, “கீழைச் சிந்தனையை நெருக்கமாய் ஒட்டி, உளச் சித்திரவதைக்கும் உடல் சித்திரவதைக்கும் உள்ள சமக்கூறுகளை வெளிப்படுத்தும் எழுத்து.” (அவரது கொரிய நாவல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த டெபோரா ஸ்மித், கொரியர்களின் ‘ஹோன்’ நம்பிக்கையைச் சுட்டுகிறார். “அகராதியில் அது ஆன்மா என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் நான், நிழல் அல்லது ஆன்ம-நிழல் என்று மொழியாக்கம் செய்தேன். ஆங்கிலத்தில் ஆன்மா என்று மொழியாக்கம் செய்யும்போது அதன் கிருத்தவ பின்னணி நினைவில் எழுவதை தவிர்க்க முடியாது,” என்கிறார். இதையே ஆமோதிக்கும் வகையில் காங்கும் “நீ இறந்தபின்னும் உயிரோடு இருக்கும் உன் பகுதி அது, அதற்கு சமய அர்த்தம் எதுவும் கிடையாது”, என்று சொல்கிறார். நம்மிடையேயும் சமயம் சார்ந்த ஆன்மா போக, ஆவி குறித்த நம்பிக்கையுண்டு.)

வலியின் இரட்டைத் தன்மையை விளக்கும் வகையில் அவரது ‘குணமாதல்‘ என்ற நாவலில் குணமடையாத கால் புண் ஒன்றும் கதையின் பிரதான பாத்திரம் தனது இறந்த சகோதரியுடன் கொண்டுள்ள வலி மிகுந்த உறவும் உள்ளதைச் சுட்டுகிறது நோபல் கமிட்டி.

 நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டபோதே அதற்கு நன்றி தெரிவித்த காங், “தற்போது  நான் எழுதிக் கொண்டிருக்கும் புதிய நாவலை எழுதுவதற்கான புதுப்பலம் கிடைத்தது போலிருக்கிறது இப்போது, இந்நாட்களில் எழுதுவதே கடினமாக இருக்கிறது,” என்று சொல்லியிருந்தார். இப்போது நோபல் பரிசு அளிக்கப்பட்டிருப்பது அவருக்கு கூடுதல் ஆற்றலை அளிப்பதாக இருக்கும்.

பதிப்புக் குழு

“உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள இணைப்புகள், வாழ்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையிலுள்ள பிணைப்புகள், குறித்த தனித்தன்மை கொண்ட ஓர்மை அவருக்கு உண்டு. அவரது கவித்துவமும் பரீட்சார்த்தமும் கலந்த நடை அவரை சமகால உரைநடையில் ஒரு முன்னோடியாய் நிறுவுகிறது.”

Han-Kang-Nobel-Prize-Awards-Lit-Books-Ve

தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024- ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  தென்கொரியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர் இவர். ஹான் காங் தன் நாட்டினரால் ஆற்றல் வாய்ந்த தொலை நோக்குப் பார்வையாளர் என்று கொண்டாடப்படுபவர். வரலாற்றுத் துயரை துணிவுடன் எதிர்கொள்ளும், மனித வாழ்வின் பலவீனங்களை வெளிப்படுத்தும், அவரது கவித்துவமிக்கதும் தீவிரமானதுமான உரைநடைக்காக ஹான் காங்குக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. நோபல் கமிட்டியின் தலைவரான ஆண்டர்ஸ் ஓல்சன், தன் அறிக்கையில், “ஹானின் எழுத்து உடலுக்கும், ஆன்மாவுக்கும், இறந்தவர்களுக்கும், உயிருள்ளவருக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்த தனித்துவமிக்க விழிப்புணர்வோடு எழுதப்படும் புதுமையுடையது,” என்று குறிப்பிடுகிறார்.

ஐம்பத்து மூன்று வயதான ஹானின் தந்தையும் ஒரு நாவலாசிரியரே. அவரது குடும்பம் பொருளாதார ரீதியான சிரமத்தின் காரணமாக அடிக்கடி இடம்பெயர வேண்டியிருந்தது. “இப்படி இடம் மாறிக்கொண்டே இருந்தது சிறுகுழந்தையான எனக்குக் கடினமாக இருந்தது. ஆனால் நான் எப்போதும் புத்தகங்களால் சூழப்பட்டிருந்தேன். அவை என்னைக் காப்பாற்றின,” என்று ஹான் தான் அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

Han-Kang-drawing-by-Siegfried-Woldhek.we

ஹானுக்கு 9 வயதாக இருந்தபோது, குவாங்ஜு எழுச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பம் சியோலுக்கு குடிபெயர்ந்தது, அப்போது அரசாங்கத் துருப்புக்கள் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றனர். இந்த நிகழ்வு மனித குலத்தின் வன்முறைத்திறன் குறித்த தன் பார்வையை வடிவமைத்ததாக ஹான் கூறுகிறார். அவரது எழுத்திலும் இதன் பாதிப்பு உண்டு. 2014-ல் வெளிவந்த “மனிதச் செயல்கள்” ( Human Acts ) என்ற நாவல் போராட்டக் குழு ஒன்றின் மீது காவல்துறை நிகழ்த்தும் சோதனையைக் கூர்மையாக அவதானிக்கிறது.

கொரியாவின் யோன்சேய் பல்கலைக் கழகத்தில் இலக்கியம் பயின்ற ஹான் வெளியிட்ட முதல் படைப்பு கவிதைகளே. 1998 ல் வெளிவந்த இவரது முதல் நாவல் “கருப்பு மான்” ( Black Deer ) தொலைந்து போன பெண்ணொருத்தியின் மர்மத்தை ஆராய்வது. இந்த காலகட்டத்தில்தான் இவருக்குத் தாவரமாக மாற ஆசைப்படும் பெண்ணொருத்தியின் கதையைச் சிறுகதையாக எழுதும் எண்ணம் தோன்றியிருக்கிறது. பின்னாளில் இக்கதை ஒரு நாவலாக உருக்கொண்டது.

2016-க்கான புக்கர் விருது வென்ற இவரது மீமெய்யியல் நாவலான  த வெஜிடேரியன், தமிழில் “மரக்கறி” என்ற பெயரில் கவிஞர் சமயவேல் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த நாவல் மன அழுத்தத்துக்கு ஆளான இல்லத்தரசி ஒருவரை மையமாகக் கொண்டது. அவள் தன் மன அழுத்தம் காரணமாக இறைச்சி உண்ணுவதை நிறுத்தி தன் இல்லத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறார். காலப்போக்கில் உண்ணுவதையே முற்றிலுமாக நிறுத்தி விடுகிறாள். சூரிய ஒளியை மட்டுமே உண்டு வாழக்கூடிய ஒரு மரமாக வாழ ஏங்குகிறாள்.

த வெஜிடேரியன் மனத்தெளிவுக்கும், மனப்பிறழ்வுக்கும் இடையேயான எல்லைகளை ஆராய்கிறது. ஆசைக்கும், வன்முறைக்கும் இடையேயான எல்லைகள்; செயலூக்கத்துக்கும், வெறிச்செயலுக்கும் இடையேயான எல்லைகள் ஆகியவற்றையும் ஆராய்கிறது. 2007-ல் கொரிய மொழியில் மூன்று தனித்தனி நாவல்களாக வெளியிடப்பட்ட இந்த நாவல் நேர்த்தியாகவும், சிலிர்ப்பூட்டும் வகையிலும் சொல்லப்பட்ட ஓர் இருண்ட நாவல். டெபோரா ஸ்மித் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த நாவலின் மையக்கதாபாத்திரம் யோங்-ஹை இறைச்சி உண்பதை நிறுத்தி விடுவது மட்டுமல்லாமல், உடலுறவிலும் நாட்டமிழந்து விடுகிறாள். அவள் பிரா அணிந்து கொள்வதை நிறுத்தியதை பெண்மைக்கு மாறான நடத்தை என்றும், அவளது அப்போதைய மாற்றத்தைச் சரிசெய்து கொள்வதற்கான தவறான செயல் என்றும் அவள் கணவன் எச்சரிக்கிறான். அவள் ஏதோ நோய்க்கு அடிமையானதைப் போல அவளது குடும்பமே அவளது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறது. அவளது தந்தை அவளுக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க முயற்சிக்கிறார், அவளை அறைந்து, பின்னர் சிறிது பன்றி இறைச்சியை அவள் உதடுகளில் திணிக்கிறார். அவள் வாயைத் திறக்காதபோது அவர் அவளை மீண்டும் அறைகிறார்.

நாவல் முழுக்கவே யோங்-ஹையின் செயல்கள் ஏதோ ஒரு ஆணின் பார்வையிலேயே காட்டப்படுகின்றன. நாவலின் முதல் பகுதி அவளது கணவனின் பார்வையில் உள்ளது. தன் மைத்துனியைப் பற்றி ஏக்கத்துடன் கற்பனை செய்பவன் அவள் கணவன். தொலைபேசியில் அவள் குரலைக் கேட்டதும் கிளர்ச்சியடைபவன். அவன் தன்னை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு உட்படுத்த முயலும்போது யோங்-ஹை தன்னை வழங்குவதில்லை. அவன் மீது வசைச் சொற்களைப் பொழிகிறாள். மீறி அவன் வன்புணர்வு செய்யும்போது கூரையை வெறித்தபடி படுத்துக் கிடக்கிறாள், ஒரு ஜப்பானிய வீரனுக்குப் போர்க்காலத்தில் இன்பமளிக்கும் விலைமாதுவைப் போல. அவளது நடத்தையாலேயே அவள் அவனைத் தன்னிடமிருந்து விலகிச் செல்ல வைத்து விடுகிறாள்.

நாவலின் இரண்டாவது பகுதி யோங்-ஹையின் மைத்துனரின் பார்வையில் சொல்லப்படுகிறது. தவறான பெண்ணை மணந்து கொண்டதாக வருந்தும் அவன் ஹையின் பேச்சு, ஆடையுடுத்தும் விதம், உணவுண்ணாமையால் துருத்தித் தெரியும் அவளது கன்னத்து எலும்புகள் ஆகியவற்றால் கவரப்படுகிறான். அவன் மனைவியுடன் ஒப்பிடுகையில் அவள் அழகற்றவள்தான். ஆனால் அவள் வனாந்தரத்தில் வளரும் ஒரு மரத்தைப் போல புத்துணர்வைப் பரப்பிக் கொண்டிருப்பதாக அவனுக்குப் படுகிறது. ஆனால் இத்தருணத்தில் ஹை இறைச்சியைத் துறந்து இரண்டு ஆண்டுகளாகியிருக்கிறது. அவளது திருமண வாழ்க்கை முறிந்து, மனநலக் காப்பகத்தில் பல மாதங்கள் கழிக்கிறாள். அவளது மைத்துனன் ஒருமுறை தன் மனைவி மூலம் ஹையின் பிருஷ்டத்தில் உள்ள மங்கோலியன் குறியைப் பற்றிக் கேள்விப்படுகிறான். அந்தப் பிம்பத்தால் உந்தப்பட்டு, நிர்வாணமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் கொண்ட, அவர்களின் உடல் முழுவதும் பூக்களால் வர்ணம் பூசப்பட்ட ஓவியங்களால் தன் நோட்டுப் புத்தகத்தை நிரப்புகிறான். பின் அவளது நிர்வாண உடலில் பூக்களை வர்ணம் தீட்டுவதற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறான். அந்தச் செயலின் மூலம் அவள் மீது தனக்குள்ள காம இச்சையிலிருந்து விடுதலையடைகிறான்.

“இது ஒரு அழகான இளம் பெண்ணின் உடலாக இருந்தது, வழக்கமான ஆசைப் பொருளாக இருந்தது, ஆனால் இப்போது அது அனைத்து ஆசைகளையும் நீக்கிய உடலாக இருக்கிறது. இப்போது அவள் அடைந்திருப்பது உடலாசையைப் போல அவ்வளவு மோசமானது அல்ல. அவள் துறந்திருப்பது அவளுடைய உடல் பிரதிநிதித்துவப்படுத்தும் வாழ்க்கையைத்தான்.”

என்கிறான்.

பெண்ணின் அந்தரங்க வாழ்க்கைக்குள்ளாக வெளிச்சம் பாய்ச்சியதில் இந்த நாவல் வழக்கத்துக்கு மாறான ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. பெண்ணின் வலி, இன்பம், ஆர்வம், வெறுப்பு, புரிந்து கொள்ள முடியாத தனிமை ஆகியவற்றை ஆராய்கிறது. இது பெண்ணிய நாவல் என்ற தோற்றத்தை முதலில் கொடுத்தாலும் இந்த நாவல் ஆராயும் விஷயங்கள் அதையும் மீறியவை. முதல் பகுதியில் திருமணம், சமூகம் என்ற இரு விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நாவல், இரண்டாம் பகுதியில் கலை, பாலுணர்வு, பெண்ணுடல் போன்றவற்றின் மீதான பொதுப்பார்வையையும் ஆராய்கிறது. இறுதிப்பகுதியில் இயற்கை மற்றும் மரணம் அதன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஹை மரக்கறி உணவுக்கு மாறியது, தன்னை ஒரு மிருகமாக உணர்ந்து வாழ்வதை நிராகரிக்கும் ஒரு முயற்சி. மைத்துனரால் அவள் உடலெங்கும் தீட்டப்பட்ட வண்ணப்பூக்கள் அவளுக்கு வரும் கெட்ட கனவுகளிலிருந்து அவளுக்கு விடுதலை அளிக்கின்றன. முதல் பகுதியில் மூன்று ஆண்டுகள் மனநல காப்பகத்தில் கழிக்கும் அவள் மூன்றாம் பகுதியிலும் அங்கேயே கழிக்கிறாள். அவளை அங்கு வந்து சந்திக்கிறாள் அவளது சகோதரி. அவளது பார்வையில்தான் இந்த இறுதிப் பகுதி சொல்லப்படுகிறது. தன் குழந்தைப் பருவத்தை ஹையுடன் மிருகத்தனமான தந்தையுடன் கழித்த அவளது சகோதரிக்கும் ஹையின் நடத்தைகள் குழப்பத்தை விளைவிப்பதாகவே உள்ளன.

“ஹை அவளுக்கு நினைவூட்டும் எதையும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளால் தன்னை ஒருபோதும் கடக்க முடியாத எல்லைக்கு மேல் தனியாக உயர்ந்ததற்காக ஹையை மன்னிக்க முடியவில்லை. ஹையின் அசாத்தியமான பொறுப்பற்ற தன்மையை அவளால் மன்னிக்கவே முடியவில்லை. ஹை தன்னை ஒரு கைதியைப் போல் தனியாக விட்டு விட்டு வேறெங்கோ வசித்துக் கொண்டிருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறைக்கம்பிகளைப் போலிருந்த சமூகம், திருமணம், உடல், பாலுறவு, கலை போன்றவற்றின் மாயையை ஹை  உடைத்திருக்கிறாள். அவற்றை உடைக்கு முன்பு, அவை அங்கு இருந்ததையே அவளது சகோதரி அறிந்திருக்கவில்லை.”

ஹான் இதுவரை எட்டு நாவல்கள், பல குறு நாவல்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “த ஒயிட் புக்” என்ற நாவலும் சர்வதேச புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதுதான். அவரது இன்னொரு நாவலான “கிரீக் லெசன்ஸ்” பேசும் திறனை இழந்த பெண் ஒருத்தி பழைமையான கிரேக்க மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம் அதை மீட்டெடுக்க முயலவதைப் பற்றியது. “ஒரு மொழியைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள விவரிக்க முடியாத நம்பிக்கையின் கொண்டாட்டம் இந்த நாவல்” என்று டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிடுகிறது.

இருபது ஆண்டுகளாக இவரது படைப்புகளை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் கற்பித்து வரும் இலக்கியப் பேராசிரியர் அங்கி முகர்ஜி, “ அவரது எழுத்து உடலுக்கும், பால் பிரிவினைக்கும், அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்துக்குமான அரசியலைத் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அது இலக்கியத்துக்கு உரிய கற்பனையையும், அழகியலையும் விட்டு விடுவதில்லை. அவரது எழுத்து எப்போதும் உபதேசம் செய்வதில்லை. மாறாக அது விளையாட்டுத்தனமாகவும், வேடிக்கையாகவும், அதிமெய்யியல் தன்மையோடுமே இருக்கின்றது,” என்று குறிப்பிடுகிறார்.

Han-Kang-Nobel-Prize-Awards-Lit-Books-Ve

மேலும்:

https://solvanam.com/2024/10/10/ஹான்-காங்-இலக்கியத்திற்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.