Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"மதமும் மரணமும்" [இஸ்லாம்]
 
 
இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப் படக்கூடிய நாளை, அல் குர்ஆன் "இறுதித் தீர்ப்பு நாள்" [a day of judgment] என்று, ஆபிரகாமிய சமயங்களான கிறிஸ்தவம் போலவே அறிமுகப் படுத்துகின்றது, அந்த நாளில் இறந்த உயர்கள் எல்லாவற்றிற்கும் மனிதனின் இவ்வுலக வாழ்க்கை தான் அவனுக்கு சுவர்க்கமா? நரகமா? என்பதைத் தீர்மானிக்கும் என்கிறது இஸ்லாம். அது மறுபிறப்பு என்பதை முற்றாக மறுக்கிறது.
 
குர்ஆன் அல்லது இஸ்லாத்தின் திருமறையின் முக்கியமான கோட்பாடு [மையமான கொள்கை] "இறுதித்தீர்ப்பு நாள்". அன்று உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, எல்லா மக்களும் எல்லா ஜின்களும் [jinn / genie: spiritual creatures mentioned in the Qur'an] இறப்பில் இருந்து உயிரோடெழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். ஜின்கள்: என்பது நாம் வாழும் பூமியில் நமது பார்வைக்கு புலப்படாத ஒரு உயிரினம். அது நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதாவது ஜின் என்பது இஸ்லாமிய வழக்கில் சிறு தெய்வ உரு அல்லது கூளி [பேய்; தீய ஆவி] ஆகும். ஜின் என்ற அரபு பதத்திற்கு – மறைவானது – என்று பொருள். ஜின் என்ற படைப்பு கண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிற்கு அந்தப் பெயர் வந்தது. மனிதன் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.
 
"சுட்ட மண் பாண்டங்களைப் போல (தட்டினால்) சப்தம் உண்டாகும், களி மண்ணில் இருந்து (அல்லாஹ்வாகிய) அவன் மனிதனைப் படைத்தான். அதற்கு முன்னரே (சூடான) நெருப்புக் கொழுந்தில் இருந்து ஜின்களைப் படைத்தான்." (அல்குர்ஆன் 55:14-15, 15:26,27)
என்கிறது இஸ்லாம். மேலும்
 
51:56   وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏ 
"இன்னும், ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
[அல் குர்ஆன் 51:56]
 
என்கிறது. இது இவ்விரு இனத்தையும் படைத்திருப்பதின் அடிப்படை நோக்கத்தை விளக்குகிறது. அதாவது, படைப்பின் முதல் நோக்கம் வணங்கி வழிபடுவதே, மற்ற பிற நோக்கங்கள் யாவும், அவ் வணக்கத்தையே தொடர்ந்து இவ் உலகில் செயல் ஆற்றப் பட வேண்டும் என்பதாகும்.
 
இறுதி தீர்ப்பு நாள் வரை, புதைகுழியில் இறந்த, காலஞ் சென்ற ஆன்மா அல்லது உயிர்கள் தமது உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கின்றன. எப்படியாயினும், அங்கு அவர்கள், காத்திருக்கும் காலத்திலேயே, தமக்கு அளிக்கப்படக் கூடிய தீர்ப்பை அல்லது தமது விதியை முன்கூட்டியே உணர்கிறார்கள்.
 
அதாவது நரகத்திற்கு போகிறவர்கள் அங்கு, புதைகுழியில் அவதிப்படுகிறார்கள். சொர்க்கத்திற்கு போகிறவர்கள் அங்கு அமைதியாய் இருக்கிறார்கள்.
 
சொர்க்கத்திற்கு நரகத்தின் மேலால் செல்லும் ஒரு ஒடுங்கிய பாலத்தினூடாக இறுதி தீர்ப்பு நாள் அன்று செல்வது போல நாம் விவரிக்கலாம். தமது தீய செயல்களின் சுமையினால், பாலத்தில் இருந்து விழுந்தவர்கள், அந்த நரகத்தில் எல்லாக் காலத்துக்கும் அங்கேயே இருப்பார்கள்.
 
என்றாலும் குர்ஆன் இரு விதிவிலக்குகளை கூறுகிறது. உதாரணமாக, போரில் மரிப்பவர்கள் உடனே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்ற பொதுவான இஸ்லாமிய நம்பிக்கையை கீழ்கண்ட குர்ஆன் வசனம் -3:169.
 
"அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நிச்சயமாக எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; (அவனால்) உணவளிக்கப்படுகின்றனர்."
 
என சாட்சி பகிர்கிறது. மேலும், 2:159.
 
"நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமை உடையவர்களும் சபிக்கிறார்கள்"
என்றும் கூறுகிறது.
 
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த மறுவுலக நம்பிக்கையைப் போதிக்கும் போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் அல்குர்ஆன் ஒரு வாதத்தை முன் வைத்தது விளக்கியது. உதாரணமாக,
 
"இல்லாமையிலிருந்து வெளிவந்து, இப்போது ஒரு பொருளாகக் காட்சியளிக்கின்றாயா? அப்படிப்பட்ட உன்னை மரணிக்கச் செய்து, மீண்டும் உனக்கு உயிர் கொடுத்து எழுப்புவது எனக்குச் சிரமமா?"
என்று அல்குர்ஆன் 76:1 யிலும்,
 
"பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்."
 
என்று அல்குர்ஆன் 41:39. யிலும் வாதிடுகிறது.
 
மறுவுலக நம்பிக்கை என்று இஸ்லாம் சொல்லுவது இப்ப நாம் வாழும் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு இன்னொரு உலகம் உருவாகும். அது தான் மறு உலகமாகும். அங்கு, இவ்வுலகில் தோன்றிய முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர் வரை அனைவரும் எழுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவர். அந்த விசாரணை இரு வகையில் அமைந்திருக்கும்.
 
முதலாவதாக, மனிதன் இறைவனுக்கு எதிராகச் செய்த பாவங்களையும், இரண்டாவதாக, மனிதன், தனது சக மனிதனுக்கு எதிராகவும் இதர பிராணிகளுக்கு எதிராகவும் செய்த பாவங்களையும் முன்னிறுத்தி இந்த விசாரணை நடைபெறும். மனிதன் இறைவன் இட்ட கட்டளைப்படி நடந்திருந்தால், சக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நன்மை செய்திருந்தால் கட்டாயம் அவனுக்குச் சுவனம் [சொர்க்கம் /Paradise] என்று உறுதிப்படுத்துகிறது.
 
அது மட்டும் அல்ல, அவன் இந்த உலகில் செய்த நல்ல செய்கைகளுக்கு பரிசாக அங்கு உணவு, உடை, அழகிய மனைவிகள் என அனைத்து வசதிகளையும் அந்தச் சுவனத்தில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான் என்று திடமாக அறிவிக்கிறது.
 
ஆனால், மாறாக இறைவனின் கட்டளையை மதிக்காமல் நடந்து இருந்தால், அவனுக்கு நரகம் தண்டனையாக அளிக்கப்படும். அதில் என்றென்றும் நிலைத் திருப்பான். அங்கு அவனுக்கு அழிவோ அல்லது மரணமோ கிடையாது. காலம் காலமாக அந்த நரகத் தீயில் வெந்து பொசுங்கிக் கொண்டிருப்பான் என்று பயமுறுத்துகிறது.
 
அத்துடன் மறுமையில் கிடைக்கும் தண்டனையைத் தான் மக்களிடத்தில் இஸ்லாம் மாறி மாறி எடுத்துக் கூறுகின்றது. இன்னின்ன பாவத்திற்கு, குற்றத்திற்கு இன்னின்ன தண்டனை என்று குற்ற அட்டவணையை வகைப்படுத்தி அதற்குரிய தண்டனையை பார்வைக்கு விட்டுள்ளது. ஆகவே அதில் ஏற்படும் பயம் குற்றங்கள் குறைவாக நடப்பதற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறது.
 
மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப் போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் என்று திட்டவட்டமாக சொன்னாலும், அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே அவ்வற்றை அறிந்து உறுதிப்படுத்த முடியும், ஆனால், இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் எள்ளளவும் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக் குறியாகவே மனிதனுக்கு இன்று வரை தக்க வைத்து விட்டது.
 
கூடு விட்டு கூடு பாய்தல் மற்றும் மறு பிறவி எடுத்து மீண்டும் இறந்த ஆன்மா இவ்வுலகத்திற்கு வருதல் போன்றவற்றை இந்து மதம் போதித்தாலும் அல்லது அதன் புராணங்களில் கூறி இருந்தாலும், அப்படி வந்த ஆன்மா உறுதியாக, சாட்சியாக, சந்தேகம் அற்று தன் அனுபவத்தை விபரித்ததாக நான் அறியேன்?
 
இதற்கு ஒரு ஆறுதலாக, மரணத்திற்கு பின் வாழக்கை என்பதை நிறுவிப்பது போல, மரண நிலையில் உள்ள நினைவுகள் அல்லது "அருகில் மரண அனுபவங்கள்" அல்லது "மரண விளிம்பு அனுபவம்" (NDE-Near Death Experience), எடுத்து இயம்புகின்றன.
 
இந்த நினைவுகள் பொதுவாக — இறந்தது போல ஒரு உணர்வு, ஒருவரின் "ஆன்மா" உடலை விட்டு வெளியேறியது போல ஒரு உணர்வு, ஒரு பிரகாசமான ஒளியை நோக்கிய ஒரு பயணம் போல ஒரு உணர்வு மற்றும் அன்பும் பேரின்பமும் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றொரு யதார்த்தத்திற்கு புறப்படுதல் போல ஒரு உணர்வுகளாக இருந்தன. அது மட்டும் அல்ல பலர் ஒரு நீண்ட நடைபாதையை பார்த்ததாகவும் அதன் முடிவில் பிரகாசமான ஒளி தெரிந்தது போல ஒரு உணர்வு கொண்டதாக கூறி உள்ளார்கள், [ such as — a sense of being dead, a feeling that one's "soul" has left the body, a voyage toward a bright light, and a departure to another reality where love and bliss are all-encompassing. Many people on their deathbeds report seeing a long corridor with a brilliant light at the end of it].
 
இது சொர்க்கமாக இருக்கலாமா ? கட்டாயம் இல்லை. இவர்கள் உண்மையில் தாம் நம்பிய சொர்க்கம், நரகத்தின் கொள்கையின் அடிப்படையில் தமது நினைவுகளை வர்ணிக்கிறார்கள்.
 
பிளேட்டோ, சாக்ரடீஸ் [Plato, Socrates] போன்ற பண்டைய கிரேக்க ஞானிகள் கூட மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவங்கள் பற்றி கூறிச் சென்றுள்ளார்கள். உதாரணமாக, தத்துவவாதி பிளேட்டோ தன் குடியரசு (Republic) என்ற நூலில், 'ஏர்; என்பவரின் ஒரு புராணக் கதை ஒன்றை பதிவிட்டுள்ளார் [he recorded the “Myth of Er” in the 4th century BC]
 
'ஏர்' என்ற போர்வீரன் போர்க்களத்தில் இறந்து பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது இறுதி சடங்கில் விழித்தார் என்றும், ஆன்மாவின் அழியாத தன்மையைப் பற்றியும் மற்றும் மரணத்திற்குப் பிறகு அதன் நிலையை பற்றியும் அனைவருக்கும் அவரால் சொல்ல முடிந்ததாக பதிந்துள்ளார். இந்த உலகில், நாம் வாழும் பொழுது நாம் கையாண்ட எங்கள் நடவடிக்கைகள் அல்லது தேர்வுகள் மற்றும் எம் தன்மை அல்லது இயல்புகள் [our choices and the character we develop while alive], கட்டாயம் மரணத்திற்குப் பிறகு அதன் விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தன் அனுபவத்தை அந்த போர்வீரன் கூறியதாக அதில் குறிப்பிட்டு உள்ளார்.
 
என்றாலும் இன்று இவை விஞ்ஞான ரீதியாக, உதாரணமாக, உயிரியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, நரம்பியல் மற்றும் வேதியியல் ரீதியாக [biologically, psychologically, neurologically and chemically [lack of oxygen, excess of carbon dioxide]] இன்று விளங்கப்படுத்தப் பட்டுள்ளன. அத்துடன் மரணம் தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம் - நரகம் என்பது கிடையாது என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் [Stephen Hawking] திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
 
மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது என்பது இவரின் வாதம்.
 
மூளையும ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் அது செயலிழந்து போகுமோ, அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை என்பது இவரின் முடிந்த முடிவாகும்.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
336996043_232436419263323_5057049069429573116_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=3uT4jtweJRQQ7kNvgFT-hH_&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AU_yQu7SXdxYsmDEs5JDJwY&oh=00_AYDFBRoJJp_BfNfZdV1E6hvgNjMoeCabubDRRjjmvPi8kQ&oe=671169A6 337393865_967326230929326_5655114789597174378_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Z1i7B4eq3a4Q7kNvgHyFeBL&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AU_yQu7SXdxYsmDEs5JDJwY&oh=00_AYAMQbnt67WyPMdMTz6QT87rDr3eu1RFBtQ8bcta9C1zww&oe=67115EBD

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.