Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும் – ஐ.வி.மகாசேனன்

October 15, 2024

நவம்பர்-14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி இடப்பட்டு உள்ளது. அதேவேளை அக்டோபர் 04-11ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை போன்றே, பாராளுமன்ற தேர்தலிலும் அதிகளவு கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கியுள்ளன.

முழு இலங்கைத்தீவிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 குழுக்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு-கிழக்கும் பொதுத்தேர்தலை மையப்படுத்தி பெரும் குழப்பகரமான சூழலை எதிர்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை அதுசார்ந்திரட்சியை ஒருங்கிணைக் கும் களத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத்தேர்தலில் உருவாக்கி இருக்கவில்லை. கடந்த இரு தசாப்த கால ஈழத்தமிழர்களின் அரசியல் அடையாளமாக காணப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனும் பதிவு செய்யப்படாத கட்டமைப்பு முழுமையாக சிதறடிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழ் அரசியலில் 75 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்ட தமிழரசு கட்சிக்குள்ளும் அதிக குழப்பங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது. இக்குழப்பகரமான நிலையில், தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் எனும் விம்பத்தின் பிரதிபலனை தேசிய மக்கள் சக்தி வடக்கு-கிழக்கிலும் பெற்றுக்கொள்ளுமா எனும் வாதங்களும் பொதுவெளியில் காணப்படுகின்றது. இக்கட்டுரை பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கில் யாழ்-கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம் பாறை ஆகிய ஐந்து தேர்தல் மாவட்டங்களி லும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்கலாக 250இற்கு மேற்பட்ட அணிகள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளன. வடக்கு-கிழக்கின் தேர்தல் மாவட்டங்களிற்கு முறையே யாழ்-கிளிநொச்சி 6 ஆசனங்கள், வன்னி 6 ஆசனங்கள், திருகோணமலை 4 ஆசனங்கள், மட்டக்களப்பு 5 ஆனங்கள், அம்பாறை 7 ஆனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 28 ஆசனங்களுக்கு ஏறத்தாழ 2500 வேட்பாளர்கள், 250இற்கு மேற் பட்ட அணிகள் போட்டியிடுகின்றன. இதில் ஒரு சில அணிகளில் ஒரே குடும்ப பிரதிநிதிகள்,  ஒரே தெருக்களில் வசிப்போர் களமிறங்கியுள்ளனர். ஒரு சில அணி அரசியல் அதிகாரத்துக்கு போட்டியிடுவதுடன், பலரும் பிரபல்யம், வெளி நாட்டு விசா என இதர பல காரணங்களுக்காக களமிறங்கியுள்ளனர். இது வாக்குகளை சிதறடிக் கும் செயலாகவே அமைகிறது.

யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் மாத்திரமே முழுமையாக தமிழ் பிரதிநித்துவம் பகிரப்படுகிறது. ஏனைய தேர்தல் மாவட்டங்களில் முஸ்லீம் மற்றும் சிங்கள பிரதிநிதித்துவமும் கணிசமாக காணப்படுகின்றது. 2020 பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முழுமையாக தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதுடன், திருகோணமலையில் நான்காவது ஆசனத்தை மயிரிழையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழ்-கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சி ஆகிய பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் தமது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். தமிழரசு கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.10.2024) யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளர் விவரங்களை அறிவித்திருந்தன. அவ்முடிவில் அதிருப்தி அடைந்த தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், கொழும்பு மாவட்ட கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் மகளீர் அணி, இளைஞர் அணி செயற்பாட்டாளர்கள் கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சையாக களமிறங்கி உள்ளனர். யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தென்னிலங்கை கட்சிகள், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழு உட்பட ஆகக்குறைந்தது பத்து அணி தாக்கம் செலுத்தக்கூடியதாக அமைகின்றது. எனினும் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்துக்கு சனத்தொகை விகிதாசார அடிப்படையில் ஆறு ஆசனங்களே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பிரதிபலிப்புகளே வடக்கில் வன்னித் தேர்தல் தொகுதியிலும் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை தேர்தல் தொகுதிகளிலும் காணப்படுகின்றது. வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக முல்லைத்தீவை சார்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் களம் இறங்குவதாக முன்னர் அறிவிக் கப்பட்டது. எனினும் தமிழரசு கட்சியின் தமிழ்த் தேசிய நிலைப்பாடு சார்ந்த சந்தேகத்தினை வெளிப்படுத்தி, இளம் சட்டத்தரணி தான் தேர்தலில் இருந்து  ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். இது வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்ந்து எதிரான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. திருகோணமலை மற்றும் அம்பாறை தேர்தல் தொகுதியில் தமிழ் பிரதிநிதித்துவம் சார்ந்து எழுந்துள்ள அச்சத்தால் அரசியல் கட்சிகளிடையே கூட்டு முயற்சியை ஏற்படுத்த சிவில் சமூகங்கள் முயற்சியினை மேற்கொண்டிருந்தது. குறிப் பாக திருகோணமலை ஆயர் அவர்களும் இம்முயற்சியில் இறங்கியிருந்தார். எனினும் கட்சிகளின் தேசியப்பட்டியல் ஆசையால், கட்சிகளி டையே பொதுச்சின்னம் என்பதில் உடன்பாடு எட்ட முடியவில்லை. திருகோணமலையில் தமிழரசு கட்சியின் சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து போட்டி யிட இணங்கியது. மாறாக அம்பாறை தேர்தல் தொகுதியில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்ட ணியின் சின்னத்தில் தமிழரசு கட்சி இணைந்து செயல்பட மறுத்த நிலையில், அம்பாறையில் கட்சிகள் தனித்தனியாகவே போட்டியிடுகின்றன.

பொதுத்தேர்தல் சார்ந்து வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைகள் தென்இலங்கை கட்சிகளுக்கு வாய்ப்பாகுமா எனும் சந்தேகங்கள் பொதுவெளியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்இலங்கையில் விவாதிக்கப்படும் ஜே.வி.பி-யின் பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் சார்ந்த அரசியல் அலை, வடக்கு-கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற வாதம் சமகாலத்தில் மேல் எழுந்துள்ளது. இது அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே எழுந்துள்ள பிளவுகளும், அதனால் தமிழ் மக்களிடையே உருவாகியுள்ள அவநம்பிக்கை காரணமாக நோக்கப்படுகின்றது. வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு பொதுத் தேர்தல் சார்ந்து உள்ள தெரிவுகளை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய தரப்புகளை சரியாக இணங்காணுதல் அவசியமாகிறது. தென்னிலங்கையில் ஏற்பட் டுள்ள மாயமான மாற்றம் எனும் வாதத்தை வடக்கு-கிழக்கிலும் ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி அணியினர் முயற்சி செய்து வருகின்றனர். எனினும் தென்இலங்கை உரையாடும் மாற்றம் உறுதியானதா? மற்றும் இம்மாற்றத்தால் ஈழத் தமிழர்கள் நன்மையடைய கூடியதாக உள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. இப்பத்தியில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ளது அமைப்பு மாற்றமா? ஆட்சி மாற்றமா?’ எனும் தலைப்பில், ஜே.வி.பி ஏற்படுத்தி உள்ள மாற்றம் என்பது வெறுமணமே ஆட்சி மாற்றம் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே கடந்த மூன்று வார கால ஆட்சியின் நடத்தைகளும் அமைந்துள்ளது.

தேர்தல் பிரச்சார காலத்தில், தற்போதைய இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, தன்னுடைய பெயர் பிறப்புச் சான்றிதழில் மாத்திரம் இருப்பதே தனக்கு போதும் எனவும், முன்னைய ஆட்சியாளர்கள் வீதிகள் அரச கட்டிடங்களில் தமது பெயர் பொறித்துள்ளமையை விமர்சித்திருந்தார். எனினும் தபால் திணைக்களம் தனது 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு காபந்து அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் வெளிவிவாகர அமைச்சரின் புகைப்படங்களை தாங்கிய தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணத்தாளில் தனதுபடத்தை வெளியிட்டமை மற்றும் அரச கட்டிடங்களுக்கு தமது பெயரை சூடியமையையும் ஜே.வி.பி விமர்சித்திருந்தது. ஜே.வி.பி-யின் காபந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தமது படங்களை தபால் முத்திரையில் பதிப்பு செய்வது மாற்றம் சார்ந்த உரையாடலை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைகின்றது. இது ஜே.வி.பி சார்ந்த அதன் மாற்றம் சார்ந்த அரசியல் உரையாடலின் பொது விம்பப் பிறழ்வை வெளிப்படுத்துகிறது. அதேவேளை ஈழத்தமிழ் அரசியலுக்கு ஜே.வி.பி பொருத்தமானவர்களா என்பதையும் ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் ஜே.வி.பி-யின் இனவிரோத செயற்பாடுகள் தொடர்பில் இப்பத்தியில், ‘ஜே.வி.பி.யின் இனவாத செயற்பாடுகளுக்கு அனுரகுமார திசாநாயக்கா பொறுப்புக்கூறுவாரா?’ மற்றும் :தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது!’’ எனும் தலைப்புகளில் நீண்ட விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அது கடந்த காலமாக விமர்சிப்போருக்கு, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜே.வி.பி காபந்து அரசாங்கத்தின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில், குறைந்தபட்சம் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர் குற்றங் களுக்கு பொறுப்பு கூறல் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஜே.வி.பி அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது. அதேவேளை இனப்படுகொலை குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு ஜே.வி.பி அரசாங்கமும் உயர் பதவிகளை வழங்கி வருகின்றது. திருகோணமலை வதைமுகாமில் மாண வர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கடற்படை அதிகாரிகளுக்கு உதவிய முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க துறைமுக அதிகார சபையின் தலைவராக ஜேவிபி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான பின்னணியில், தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதுடன், அதேவேளை குறைந்த பட்ச தீர்வுகளையும் ஏற்றுக் கொள்ளாத ஜே.வி.பி அரசாங்கத்தை நிராகரிப்பது ஈழத் தமிழர்களின் தார்மீக பொறுப்பாகும்.

இரண்டாவது, தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியலுக்குள்ளும் சிலரை அடையா ளம் கண்டு நிராகரிக்க வேண்டிய பொறுப்பு தமிழரிடம் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகளிடையே தேசியம் என்பது அரசியல் மூலமாகவே காணப்படுகின்றது. அதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தென்இலங்கையுடன் உறவுகளை பேணிக் கொண்டு தமிழ் மக்களை தோற் கடிக்கும் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி  வருகின்றனர். தேர்தல் காலங்களில் மாத்திரம் போலியான தமிழ்த்தேசிய விம்பத்தையும் பாரம்பரிய அரசியல் விம்பத்தையும் வைத்துக்கொண்டு தமது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த முயல்கின்றார்கள். அதேவேளை தேர்தலுக்குப் முன்னரும் பின்னரு மான செயற்பாடுகளில் தமிழ் மக்களின் தேசிய திரட்சியை சீர்குலைப் பதில் முதன்மையான சக்தி யாகவும் காணப் படுகின்றார்கள்.

2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம், தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதன் ஊடாக, அரசியல் ரீதியான திரட்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இடம்பெற்றது. எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் தேசிய நீக்கத்திற்காக திரட்சியை சீர்குலைத்தார். அவரால் 2009க்கு பின்னர் ஈழத் தமிழ் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமது குருவின் வழியே தமிழ் தேசிய திரட்சியை சீர்குலைப்பதை முனைப்பு டன் செயல்படுத்தி இருந்தார்கள். அந்தப் பின்னணியிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மெல்ல மெல்ல உடைக்கப்பட்டது. அதன் உச்சமாக 2022ஆம் ஆண்டு நடைபெறாத உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தமிழரசு கட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே தனியாக கொண்டு செல்வதாக தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்ட மைப்பு முழுமையாக சிதைக்கப்பட்டது. தற்போது பொதுத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தெரிவில் தமிழரசுக்கட்சிக்குள் ம.ஆ.சுமந்திர னின் தன்னிச்சையான செயற்பாடுகள் அதிகரித்துள் ளதாக கூறி, தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் வெளியேறியுள்ளார்கள். இது தமிழரசுக் கட்சியையும் பிளவுபடுத்தியுள்ளது. இவ்வாறான பின்னணியில் தமிழ் தேசியத்தின் திரட்சியை சிதைக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய முலாம் பூசி, தமிழ் தேசிய பாரம்பரிய அரசியல் கட்சி என்ற விம்பத்துக்குள் சில அரசியல்வாதிகள் காணப்படுகின்றார்கள். இவ்வாறான போலிகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு, நிராகரிக்க வேண்டியது தமிழ் தேசிய அரசியலின் எதிர் காலத்திற்கு அவசியமானதாகும்.

மூன்றாவது, தமிழ் அரசியல் கட்சிகளில் சிறந்தவர்கள் என்ற தெரிவினை இனங்காட்டு வதும் கடினமானதாகும். தமிழ் அரசியல் பரப்பில் காணப்படும் அரசியல் கட்சிகள் குறைந்தபட்சம் தமிழ் மக்களின் தேசியத்தின் அடிப் படையில் ஒருங்கிணைந்து செயற்பட கூட முன் வராதவர்களாகவே காணப்படுகின்றார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை அது சார்ந்த திரட்சியை உருவாக்குவதற்கே தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டு இருந்தார். எனினும் தமிழ்ப் பொது வேட்பாளர் சார்ந்து, தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒரு இணக்கமான நிலைப்பாடு காணப்படவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் புறக்கணிப்பு சார்ந்து செயற்பட்டிருந்தார்கள். தமிழரசு கட்சி தமிழ் பொது வேட்பாளரை நிராகரித்து, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வை பரிந்துரைத்த தென்இலங்கை கட்சியினை ஆதரித்திருந்தது. அதேவேளை தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் பங்காளர்களாக செயற்பட்டவர்களிலும் புளொட் மற்றும் ரெலோ கட்சியினர் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக மனப்பூர்வமாக செயல்பட்டு இருக்க வில்லை . அதுமட்டுமன்றி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக தமிழ் மக்களின் தேசிய எழுச்சிக்கான பொதுச்சின்னத்தை ஒரு கட்சிக்குள் முடக்கியுள்ளனர். இது தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை மலினப்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் மதுபானசாலை அனுமதிக்கான சிபார்சு வழங்கியமை சர்ச்சைக்குரியதாக அமைகின்றது. இந்த பின்னணியில் தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழ்த் தேசிய கருத்தாடல் என்பது வெறும் அரசியல் முலாமாகவே அமைகின்றது. இவர்களில் ஒரு அணியை கைநீட்டக்கூடிய நிலை மைகள் இல்லை. கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல்களில் பயன்படுத்திய ‘தீயதில் குறைந்த தீயதை’ தெரிவு செய்யும் அணுகுமுறையையே, இம்முறை தமிழ் மக்கள் பொதுத் தேர்தலில் கையாள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. ஒவ் வொரு அணிகளிலும் இளையோர், முன்னாள் போராளிகளை பிரதான வேட்பாளர்கள் கறிவேப்பிலைக்காக உட்புகுத்தியுள்ளார்கள். இக்கறிவேப் பிலைகளுக்கு தமிழ் மக்கள் அதிகம் முக்கியத்துவம் அளிப்பதால், பழையவர்களையும் தவிர்க்க வேண்டியவர்களையும் நிராகரிப்பதே உசிதமான முடிவாகும்.

எனவே, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தமிழ் மக்களுக்கு கடினமான பாதையையே வெளிப்படுத்தி உள்ளது. இங்கு தமிழ் மக்கள் எதனை தெரிவு செய்கின்றார்கள் என்பதற்கு அப்பால், எதனை நிராகரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. தமிழ் தேசிய அரசியலின் இருப்பிற்கு ஆபத்தான சக்திகளை, தமிழ்த்தேசியத்தை அழிப்பதை நிகழ்ச்சி நிரலாக கொண்டு செயற்படுவோரை நிராகரிப்பதன் மூலம் தமிழ் தேசிய அரசியலுக்கு வரக்கூடிய ஆபத்துக்களை குறைக்கக்கூடிய சூழல் காணப்படுகிறது. அதேவேளை குறை வான ஆபத்து சூழலில் எதிர்காலத்தையும் சரியாக கட்டமைக்கக்கூடிய இடைவெளியை பெறக்கூடிய தாக அமையும். தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய தரப்புகளை சரியாக அடையாளம் காண்பதும் காண்பிப்பதும் தமிழ்த் தேசிய ஆர்வலர்களின் பொறுப்பாகவும் கடமையாகவும் அமைகின்றது.

 

https://www.ilakku.org/பாராளுமன்றத்-தேர்தலும்-த/

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.